Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

இவ்வளவு நாளா இதை யோசிக்கலையே..! (இனியொரு விதி செய்வோம் - 002)

| Nov 3, 2015

காய்ந்து போன வயிறு, ஒட்டிப்போன பர்ஸ் , விலகிப் போன உறவுகள் இந்த மூன்றும் கற்றுத் தரும் பாடத்தை வாழ்க்கையில் எவனும் கற்றுத் தர முடியாது....(ட்விட்டரில் நண்பர் ஒருவர் ) 

Loneliness and feeling of being unwanted is the most terrible poverty - இது அன்னை தெரஸா


படிக்கும் ஒவ்வொருத்தரையும் கொஞ்சம் அசைக்க வைக்கும் வார்த்தைகள் ..... எங்கே...? நீங்க இதை படிச்சதும் ஒரு செகண்ட் ஜெர்க் ஆகாம இங்க வந்தீங்களா சொல்லுங்க..! அது எப்பேர்ப்பட்ட சூரப்புலியா இருந்தாலும், இந்த அனுபவங்கள் தாண்டி, பக்குவப்பட்டுத்தான் வந்து இருக்கணும்......! விலகிப்போன உறவுகள் பற்றி நான் இன்று பேச வரவில்லை. ஒரு உறவு பிரிந்து செல்ல பல காரணங்கள் இருந்து இருக்கலாம்.... பணம் மட்டுமே ஒரு உறவின் பிரிவுக்கு காரணமெனில், அது ரணம் அல்ல, வரம் என்பது என் கருத்து. இறைவன் உங்களுக்கு நலம் புரியவே, அந்த உறவை விலக்கி இருக்கிறான் என நினைத்து கொள்ளுங்கள்...! சரி, அடுத்து அந்த காய்ந்து போன வயிறை கொஞ்சம் பார்ப்போம்...!

காசு இல்லாம பட்டினியா இருக்கிறதும், வீட்டுல இருக்கிற சில்லறையை எல்லாம் சேர்த்து , பழைய பேப்பர் - புக்ஸ் எல்லாம் வித்து, அன்னைக்கு பொழுதை கடத்துறதும்...

நல்ல வேளை , இப்போ எல்லாம் ATM கார்டு வந்துடுச்சு. முன்னே எல்லாம் பேங்க்ல அந்த டெல்லெர் கிட்ட போய், வித்ட்ரா ஸ்லிப் கொடுத்து , கேவலமா பார்க்கிற லுக்கை ஜீரணிச்சுக்கிட்டு - "அக்கௌண்ட்ல டபுள் டிஜிட் லாம் எப்படியா வருது? செக் கொடுத்து பாஸ் ஆகி இருக்கு , உனக்கு எல்லாம் செக் புக் யாரு கொடுக்கிறது? " பக்கத்துல ஏதாவது லேடி இருந்தா போச்சு , மானத்தை வாங்காம விடறதில்லை...!

ஏன்யா , என்னோட  காசை நான் எடுக்கிறதுக்குமா இந்த கூத்து.... எங்களை மாதிரி ஆளுங்க அடிச்ச மணி அந்த ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ... ஆனா அந்த பேங்க் காரனுக்கு கேட்டு அடிச்சான் பாருயா கார்டு.....  ATM கார்டு.... எத்தனை பிரைவேட் பேங்க் .... (அக்கௌண்ட் ஓப்பன் பண்றதுக்கு வீட்டுக்கே வர்றாங்கய்யா இப்போ எல்லாம். எங்களை கொஞ்ச பாடா படுத்தி இருக்கிறீங்க, இதுக்கு முன்னே....!)

எங்க கிட்ட இப்போ ATM  கார்டு இருக்கே? டபுள் டிஜிட் எப்படி தாண்ட விடுவோம்.... கடைசி நூறு ரூபாய் வரைக்கும் எடுப்போம்ல... இப்போ என்ன செய்வீங்க? மினிமம் பாலன்சே இல்லைன்னு பைசா பிடிக்கணுமா ? பிடிச்சுக்கோ..... அதை அப்புறம் பார்த்துக்கலாம்.....சேலரி அக்கௌண்ட் ஆச்சே... ஜீரோ பாலென்ஸ் இருக்கலாமே...! அதை கூட எங்க விடுறீங்க....! அந்த லோன், இந்த லோன்னு சொல்லிச் சொல்லி - சேலரி வர்ற முன்னாடியே நெகடிவ்ல கொண்டு வந்து ..... நீங்க பலே கில்லாடி சார்...! அதனால தான் நாங்களும் சம்பளம் வந்த முதல் நாளே மொத்த பணத்தையும் எடுத்து உங்களை பழி வாங்குறோம்....!

அதுக்கு அப்புறமும், பணமே இல்லைன்னு தெரிஞ்சும் - மாசக் கடைசியிலே, ATM ல போயி , ஒரு ரெண்டு , மூணு தடவையாவது பணம் வருதானு செக் பண்ணி பார்ப்போம்...! யாராவது, தவறுதலா நம்ம அக்கௌன்ட்ல போட்டிருந்தா...? யார் யாருக்கோ வருதுன்னு சொல்லிக்கிறாங்களே, நமக்கு வராதா? கடவுளே உனக்கு இரக்கம் என்பதே கிடையாதா? ரொம்ப வேண்டாம், ஒரு ஆயிரம் .... அட, ஒரு ஐநூறு....? அப்புறமா டிடெக்ட் பண்ணிக்கோங்கப்பா....! 
" ஏன் சார், ATM வொர்க் ஆகலையா...? பணம் வரலை....!"
" இல்லை சார், இப்போ கூட ஒருத்தர் எடுத்திட்டுப் போனாரே....!"
"வேற , பக்கத்திலே எங்கே ATM இருக்கு...?
 (மண்ணே இல்லை.  ஹி .... ஹி .. இங்கே....மீசையே இல்லை..)
=========================================================
"நண்பா, கையில காசு இருக்கு ? அர்ஜெண்டா ஒரு மூணாயிரம் ரூபாய் வேண்டி இருக்கு... ஊருக்கு அனுப்பணும் , தம்பிக்கு ஸ்கூல்ல பீஸ் கட்டணும், அப்பா போன் பண்ணினார்  - நம்ம பிழைப்பு தான் இப்படி இருக்கு, அவனாவது நல்லா இருக்கணும் .... வைச்சு இருக்கே...?"

கழுகுக்கு மூக்கு வேர்க்கும்னு சொல்லுவாங்களே....... அது எல்லாம் உண்மை தான் போல ...! அது எப்படி இந்த பய புள்ளைகளுக்கு கரெக்டா நாம காசு கேட்கத் தான் வந்து இருக்கோம்னு தெரியுது.... ச்சே....!நமக்கும் முந்தி, அவன் கேட்டுர்றானே.....
ஹ்ம்ம்... இருந்தாலும், விடுவோமா ...!
"மாப்ளே நிஜமாவே நானே  உன்கிட்ட காசு கேட்கத் தான் நினைச்சேன்டா ... ஒரு ஐநூறு ரூபாய் இருந்தா தாயேன்... பழைய பாக்கி இருநூறும் சேர்த்து சம்பளம் வாங்கி தந்துடுறேன்....!"

"இல்லை மாமூ ..... நானும் யார் கிட்டயாவது தான் கேட்கணும்... நீ ஒன்னு பண்ணு, வாங்குறது தான் வாங்குறே.... நீ மூவாயிரத்து ஐநூறா வாங்கு....! மூவாயிரம் எனக்கு கொடு... சம்பளம் வந்ததும் நான் உனக்கு கொடுத்துடுறேன்..... என்ன?"

பேக்கு மாதிரி , அவன் சொன்னதையும் நம்பி , அலையோ அலைன்னு அலைஞ்சு - அவனுக்கும் சேர்த்து வாங்கி , கொடுத்தா.... கரெக்டா அதே நோட்டை - பத்து நாள் கழிச்சு, ஐநூறு ரூபாய் மைனஸ் பண்ணி - திருப்பி கொடுத்த நண்பன் (!). "முன்னூறு ரூபாய் அடுத்த மாசம் தர்றேண்டா....! டைட் ... நீ எனக்கு இரு நூறு தரணும்ல? ம்ம்... சரியா ...!உன்கிட்ட தான் இருக்குமே ... நீ சேர்த்து கொடுத்திடேன்...!"

"டேய் , யார் கிட்டயும் கடன் வாங்காதே...! அவன் உனக்கு காசு தர விரும்பலை. இங்கே பார் , நான் உனக்கு கொடுத்த நோட்டு நம்பர்... இப்போ அதையே - பத்து நாள் வைச்சு இருந்து திருப்பி கொடுத்து இருக்கான்... புரியுதா ... இன்னைக்கு நான் தர்றேன்.... நாளைக்கு நானே எரிஞ்சு விழலாம், புரியுதா?"

டொய்ங் ன்னு B G M சத்தம் எல்லாம் கேட்கலை ..... !  "விடுங்க அண்ணாச்சி, அவன் இப்படி விவரமா இருக்கிறதும் நல்லது தானே... விடுங்க ..! நாளைக்கு நம்ம கிட்டேயும் காசு வரும்.... !"

இது மாதிரி நிறைய அனுபவம் ...! ஆனா, என்ன தான் உதாசீனம் இருந்தாலும், கடன் வாங்காம இருக்க முடிஞ்சதா ? கொடுக்கவே மாட்டான்னு தெரிஞ்சும், கேட்டு பார்த்து இருக்கலாமோன்னு , நம்ம மனசு நம்மளை கேட்டுடக் கூடாது பாருங்க!

என்ன, இப்போ - கொஞ்சம் மாறிக்கிட்டோம் ... பர்சனல் லோன், ஹோம் லோன், கிரெடிட் கார்ட்... பின்னே, அவசரத்துக்கு யார் கொடுக்கிறா ? கார்ட்ல வாங்கினோமா...? காசு வர்றப்போ திருப்பி கட்டிட வேண்டியதுதான்.  ( காசு எப்பங்கண்ணா வரும்?)
ஆனா, ஒன்று மட்டும் உண்மை. என்னதான், கிரெடிட் கார்ட் சட்டைப் பையில் இருக்கும் சனீஸ்வரன்னு சொன்னாலும், அவசரத்துல கை கொடுக்காத உறவுகளுக்கு , இது எவ்வளவோ தேவலை...!

நான், இந்த காலத்து பசங்களை சொல்ல வரலை... கவனமாக கலைத்து விடப்பட்ட தலை...(சுஜாதா), எடுத்ததுமே முப்பதாயிரம் ... நாப்பதாயிரம் சம்பளம்..! யம்மாடி...!  அவங்களுக்கு எப்படி கட்டு படியாகாம போகும்...? நல்லா சாப்பிடலாம், ஷாப்பிங் போகலாம், ஒரு சட்டை ஆறாயிரம் கொடுத்து வாங்கலாம்....! (கம்மியா, அதை விடஅதிகமா அப்போ ..?  யே ....இதெல்லாம் ரொம்ப ஓவருங்கப்பா ...)

ஆனா, அவங்க கதை இதை விட பாவமா இருக்கு? தினம் வகை வகையா சாப்பாடு - கூடவே சரக்கு, நிறைய கிரெடிட் கார்டு... எல்லாத்திலையும் ஓவர் லிமிட் ..... என்ன, எப்போ பார்த்தாலும் மொபைலும், கையுமாவே இருக்கிறாங்க.... இன்டர்நெட்க்கு மட்டுமே ஆயிரம் ரூபாய்க்கு டாப்-அப் ..... ஆபீஸ்லயும் நெட்ல தானே இருக்கிறீங்க...! அப்புறம் போனுக்கு எதுக்கு இவ்ளோ .... நீங்க வேற பாஸ்... யூசெஜ் ....! வீடியோ ஷேர் எவ்ளோ வருது...
ஆமாமா ....! Facebook , WhatsApp ! Candy Crush - 800 லெவலுக்கு மேல், UFO எல்லாம் வந்து டிஸ்டர்ப் பண்ணுது.....! (வருஷ கணக்கா விளையாடுறீங்களாப்பா....?)

ஆனா, ஒரு வேலைன்னு வந்துட்டா - தீயா இருக்கிறாங்க ... நேரம், காலம் ம்ஹூம்... அதுலேயே ஒன்றிரண்டு பேர் , வெளிநாடு எல்லாம் போக கூடிய வாய்ப்பு வந்து / இல்லை இன்னும் நல்ல கம்பெனி வேலை கிடைச்சு - தப்பிச்சுட்றாங்க.....! மீதி இருக்கிறவங்க அவங்களை பார்த்து, அதே மாதிரி வாய்ப்பு கிடைக்காதான்னு வேற கம்பெனி சேர்ந்து... அப்புறம் இன்னொரு கம்பெனி மாறி.... அப்புறம் சொந்தமா ஏதாவது செய்யலாமான்னு யோசிச்சு - இதுக்குள்ளே கல்யாணம், குழந்தை , குட்டி ஆகி - எல்லார் கிட்டயும் வெளியில் மட்டும் சிரிச்சு பேசி - உள்ளுக்குள்ளே எப்போவும் குமைந்து கொண்டே - நடுத்தர வயசு தாண்டி - அட போங்கப்பா...!  சரி, நம்ம பசங்களை நல்ல படியா வளர்ப்போம்...! இது ஒன்னும் புதுசு இல்லையே ...... !

நம்ம பசங்க எப்படியாவது நல்லவிதமா முன்னுக்கு வரணும்? சுய நலமாயிருந்தாலும் பரவா இல்லை... ஆனா அடுத்தவனை ஏமாத்தாம முன்னுக்கு வரணும்..!  - சுயமரியாதையோட (?) வளர்க்கணும்....  ஆமா, அது முக்கியம். சில பேருக்கு சைக்கோ மாதிரி - சீனியர் பாஸ் - இருப்பாங்க என்ன பண்றது?  வேலையைவும் விட முடியாது .... உள்ளே இருக்கிற சிங்கம் சீறுனாலும், அக்கம் பக்கம் , சொந்த பந்தம் நாளைக்கு வேலை இல்லாம கஷ்டப்படும்போது நமுட்டு சிரிப்பு சிரிக்கிறதுக்கு இதுவே பரவா இல்லை... ( Yes sir... Yes Sir....I am sorry sir..... You are right sir.....  At once Sir...)
===================================================================

சரி, என்னதான் சார் பண்ணலாம்....! அதான் நீங்களே சொல்லிட்டீங்களே எல்லாத்தையும்... சொல்லுங்க.. என்ன பண்ணலாம்...?

சொல்றேன்... அதுக்கு முன்னே என்னோட வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பார்ப்போம்... அதுக்கு அப்புறம் , திரும்ப யோசிப்போம்....!

எங்க ஊரு பக்கம் ( சரி, சரி - எங்க வீடு இருக்கிற ஊரு பக்கம் ) 'செல்வம் மட்டை ஊறுகாய்னு திருத்தங்கல் - சிவகாசி பக்கத்துல இருந்து வரும்....  நான் ஒன்னாப்பு ( ஒன்றாம் வகுப்பு) படிக்கிறப்போ - அஞ்சு காசுக்கு கிடைக்கும். ஸ்கூல்ல சத்துணவு சாப்பிடுறப்போ , அந்த அஞ்சு காசு ஊறுகாய் தொட்டு சாப்பிடுறது ஒரு தனி ருசி. கீத்து மாங்காய் ஊறுகாய் ..... நினைச்சாலே வாயில் இப்போ கூட ஊறும் .... வீட்டுல பாக்கெட் மணி - அப்போ ஒரு வேளைக்கு அஞ்சு பைசா ..... காலை , மதியம் , ஸ்கூல் விட்டு வந்த உடனே அஞ்சு பைசா... கூட படிச்ச நெறைய பேருக்கு ஒரு நாளைக்கே அஞ்சு பைசா தான் கிடைக்கும்...! அப்புறம் அதுவே நாலைஞ்சு வருஷத்துல ஒரு நாளைக்கு அம்பது பைசா வரைக்கும் எங்க அப்பா கொடுக்க ஆரம்பிச்சாரு....!
( பிரமாண்டமா எதையாவது பார்த்து அப்ப்பாஆ ன்னு ப்ரமிப்பது மாதிரி தான் - 'அப்பா'க்கு அப்பா ன்னு பேர் வைச்சாங்களோ.....? அப்போ 'அப்பா' ங்கிறது காரணப் பெயரா ....? )

இப்போ அந்த அஞ்சு பைசா ஊறுகாய் - ரெண்டு ரூபாய்....!  சரி, அதுக்கு இப்போ என்னன்னு கேட்குறீங்களா...? இந்த மாதிரிஎல்லாம் கடுப்பாக கூடாது....!மேலே படிங்க.

ஊருல சில தாத்தாங்க - எங்க காலத்துல, ஒரு பைசாக்கு , ஒரு கிலோ அரிசி  தெரியுமா....? தினம் நெல்லுச்சோறு சாப்பிடுவோம்னு அளந்து விடுவாரு...! இப்போ  பாரு  - ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்.....!விலை வாசி ஏறுது பாரு , யே .. யப்பா ...! கேட்குறதுக்கே செம கடுப்பா இருக்கும்...! அப்போ எல்லாம், சோளம் , கம்பு - கேப்பைக்கூழ் தான். சோறு நிறைய வீட்டுல - வாரத்துக்கு / மாசத்துக்கு ஒரு தடவை தான் இருக்கும்.... அந்த தாத்தா, தினம் எதாவது கதை சொல்வாரு. - வாண்டுங்க எல்லாம் ஒரு பத்து , பதினஞ்சு பேர் ஜாலியா கேட்டு , சிரிச்சு, சிரிச்சு......  அரிசியையும், கதை மாதிரியே அளந்து விடுறாரு போலன்னுதான் நினைக்கத் தோணும்....

==============
என்ன பாஸு , நீங்களும் பெரிய பருப்பு மாதிரி - துவரம் பருப்பு - மேட்டர் பேசப்போறீங்களான்னு பயப்படாதீங்க......! நான் சொல்ல வர்ற விஷயம் உள்ள பதியணும்னா , இந்த முன்னோட்டம் தேவை......! கொஞ்சம் கவனமா மேலே படிங்க.........!

1997-98 ஆம் வருஷம் - வேலைக்கு சேர்ந்து ரெண்டரை வருஷம் இருக்கும். அப்போ எனக்கு சம்பளம் - பிடித்தம் எல்லாம் போக ஐயாயிரத்துக்கு கொஞ்சம் மேலேன்னு ஞாபகம்....!  அப்போ தான் நம்ம ஊரு பக்கம் கிரெடிட் கார்ட் பெரிய சிட்டிகளுக்கு மட்டும் வர ஆரம்பிச்ச நேரம்.  வருஷ சம்பளம் மினிமம் அறுபது ஆயிரத்துக்கு மேல இருந்தா, கொடுப்பாங்க....! CITIBANK தான் முதல்ல வந்ததுன்னு நினைக்கிறேன்... எப்போ எலிஜிபிள் லிமிட் வந்ததோ - கார்ட் உடனே  வாங்கியாச்சு ... கிரெடிட் லிமிட் 16000 ரூபாய்..... ! பெரிய பெரிய கடைகள் மட்டும் தான் கார்ட் அக்செப்ட் பண்ணுவாங்க....!


அந்த நேரத்துல - நல்ல கலர் டிவி - BPL , ஓனிடா , vidieocon - சின்ன  டிவி - 6000 ரூபாய்க்கு மேல.... ! 20 இஞ்ச் + எல்லாம் பன்னிரண்டு ஆயிரத்துக்கு மேல .... ! நமக்குத் தான் கையிலே கார்டு இருக்கே.......!  சூப்பரா, கலர் டிவி ல - வேர்ல்ட் கப் புட்பால் மேட்ச் பார்க்கலாம் ..! வீட்லயே சன் டிவி பார்க்கலாம்....! தமிழ் சேனல் மகாராஷ்டிரால பார்க்கணும்னா, சும்மாவா? வேணும்னா, லீவு நாள்ல தமிழ் கேசட் வாங்கி VCR ல படம் பார்க்கலாம்....! அதுனால வாங்குறதுதான் வாங்குறோம்... நல்ல டிவி யா வாங்கிடலாம்....! Ofcourse,  ஆரம்பத்தில இருந்தே - Go for the best! - கான்செப்ட் தான்...! அதுக்கு மட்டும் எப்பவுமே குறைச்சல் இல்லை.....!

அதனால, அன்னைக்கு தேதிக்கு - 15,000 ரூபாய்க்கு சூப்பரா - ஒரு கலர் டிவி வாங்கி ஜம்முன்னு , வீட்டுக்கு எடுத்து வந்தாச்சு.....! டிவி ஒரு லக்ஸூரி அப்போ..அதுலயும் கலர் டிவி கொஞ்சம் ஓவர்...! ( பத்து வருஷத்துக்கு முன்னே கலைஞர் டிவி கொடுக்கிறேன்னு சொல்லியே ஜெயிச்சாரே... இது அதுக்கும் ஏழு வருஷத்துக்கு முந்தின கதை...)

இப்போ இருக்கிற சூழலுக்கு சொல்லனும்னா , ஒரு Hi - Fi LED ப்ரொஜெக்டர் வாங்கி , கிட்டத்தட்ட சினிமா தியேட்டர் மாதிரி ஸ்க்ரீன்ல , ஹோம் தியேட்டர் சிஸ்டம் செட் பண்ணி பார்க்கிற போது கிடைக்கிற சந்தோஷம் மாதிரி வைச்சுக்கோங்களேன்....! நல்ல பிராண்டட் போனால், அதுக்கு ஒரு நாலு - அஞ்சு லட்ச ரூபாய் ஆகும்.... கரெக்டா...? பட், அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜிக்கு, அது ஓகே...!

டிவியை சும்மா சொல்லக் கூடாது...! கிட்டத்தட்ட 15 / 16 வருஷம் சூப்பரா வேலை பார்த்தது....! சரி, அதை விடுங்க....! அதுக்கு அப்புறம், தமிழ் நாட்டுப் பக்கம் ஒரு  வேலை கிடைக்க  - இதே அளவு சம்பளம் - நம்ம ஊரு பக்கமா , புடி, உடாதேன்னு ... இந்த பக்கம் வந்தாச்சு...!  1998 ல இங்கே வந்தப்போ - சம்பளம் ஏழு ஆயிரம் சொச்சம்...!  நம்ம ஊரு சாப்பாடு - நல்ல கம்பெனி, ஆனந்த விகடன் ஈசியா கிடைக்கும்.......! (புனேல அப்போ அவ்வளவு ஈசியா கிடைக்காது, நாலைஞ்சு இடம் இருக்கு. அதுவும் அந்த நாளில் சீக்கிரம் போகலைன்னா காலி ஆகிடும்... !  அலையோ அலைன்னு அலைவோம் ..... வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்தவங்களுக்கு அது புரியும்...!)

சரி, மேலே பார்ப்போம்...! 99ஆம் வருஷம் தைப் பொங்கல் நேரத்துல, எங்க ஊர்ல - அக்கா வீடு கட்ட ஆரம்பிச்சாங்க....! தம்பி தான் வேலைக்கு சேர்ந்து நாலு வருஷம் ஆச்சே...! ஏதாவது ஹெல்ப் கேட்டுப் பார்ப்போம்னு அவங்க நினைக்க - நாமதான் , பந்தாவா டிவி வாங்கி - கிரெடிட் கார்டுக்கு ட்யூ கட்டவே பைசா இல்லாம இருந்தோமே...! என்கிட்டே இல்லைன்னு நான் கையை விரிச்சுட்டேன். எங்க அப்பா வேற, "கொஞ்சம் முயற்சி பண்ணுப்பா, அப்புறமா திருப்பி வாங்கிக்கலாம்"னு ஆரம்பிச்சிட்டாரு.... அப்பா, அவ்வளவு சீக்கிரம் எதுவும் கேட்க மாட்டாரு. அவரு சொன்ன பிறகு, எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்லை......சரின்னு - என்னோட சீனியர் ஒருவர் கிட்ட, கடன் வாங்கி, எட்டாயிரம்  ரூபாய் கொடுத்தேன். மாதா மாதம் ரெண்டாயிரம் திருப்பி கொடுக்கிற மாதிரி ஐடியா..!

அக்கா , அவங்க கிட்ட இருந்த பணம், என் கிட்ட வாங்கின பணம் எல்லாம் சேர்த்து - எட்டு செண்ட் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சாங்க....!
அவங்க வாங்கும்போது அந்த இடம் - எட்டு செண்ட் -  பத்திர செலவு எல்லாம் சேர்த்து ரூ.16,000 /- மொத்தம். செண்ட் - ரூ 2,000/- வந்தது..! ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறம், அக்கம் பக்கம் வீடு வர ஆரம்பிச்ச நேரம்..... ஆனால், ஸ்கூல் இருநூறு மீட்டர் தூரத்துல தான்....! அதனால ரொம்ப ஒதுக்குப்புறம் கிடையாது...! கொஞ்சம் தொலை நோக்கு பார்வை இருந்தால், ஒரு அஞ்சு / ஆறு வருஷத்துல அங்கே வீடுகள் நிறைய வர வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சு இருக்கலாம்...!

நம்ம டிவி வாங்கின நேரத்துல, ஊர்ல நிலம் வாங்கி இருந்தா....? எட்டு செண்ட் வாங்கி இருந்திருக்கலாம் போல.! நம்ம மாச சம்பளத்துக்கு , செலவு எல்லாம் போக - அந்த இடத்துல ஒவ்வொரு மாசமும் ரெண்டு செண்ட் கணக்குக்கு வாங்கி இருக்கலாம் ....!

வாங்கி இருந்தால்.....?

என்ன -  நாலு மாசத்துக்கு ஒரு தடவை , எட்டு , எட்டு செண்ட் வாங்கிப் போட்டு இருந்தால் - ஒரு ரெண்டு வருஷத்துல மொத்தம் - 48 செண்ட் வாங்கி இருக்கலாம்...! கிட்டத்தட்ட அரை ஏக்கர்.....!

அது தான் வாங்கலை இல்லே...? முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளம் அடிக்க வந்து என்ன பண்ண? - மேலே சொல்லு....!

கிட்டத்தட்ட பதினைந்து வருஷம் கழிச்சு - அதே எங்க அக்கா வீட்டுக்கு பக்கத்திலே, இன்னைக்கு நிலம் - விக்கிறதுக்கு யாரும் தயார் இல்லை... இப்போ செண்ட் விலை இரண்டு லட்சம்....!   இப்போ நான் வாங்குகிற சம்பளத்துக்கு - ஒரு நாலு செண்ட் வாங்கணும்னா, முழுசா, பத்து மாச சம்பளத்தை வைச்சாகணும் ....! அப்போ இருந்த மாதிரி, செலவு எல்லாம் போக, மீதம் இருக்கிற காசுலதான் வாங்கணும் என நினைத்தால் , அது அப்போ அடுத்த ஜென்மத்துலதான் நடக்கும் ...! என்னோட சீனியர் கிட்ட கடன் வாங்கி வாங்கலாம்னு நினைச்சா, அதுக்கு எட்டு லட்ச ரூபாய் கடன் கேட்கணும்....! கேட்டால், அவர் உடனே நான் மெண்டல் ஆயிட்டேன்னு முடிவே பண்ணிடுவார்.....! எட்டு லட்சம் கடன் வாங்கி, நான் மாசா மாசம் அவருக்கு திருப்பி கொடுக்கவா? ம்ஹூம் .... கடன் கிடைக்காது... மேலே..... கண்டினியூ பண்ணு...!

அப்போ, இருபது வருஷமா வேலை பார்த்து - நமக்கு வர்ற , இன்கிரிமெண்ட், புரமோஷன்... இதெல்லாம்....?  (ஏன்ப்பா , நான் சரியா பேசுறனா....?)

அதெப்படிங்க....? உங்களோட வாழ்க்கைத்தரம் எவ்வளவு உயர்ந்து இருக்குது...? அன்னைக்கு நீங்க ஒரு இன்ஜினியர்.... உங்களோட திறமை, உழைப்பு எல்லாம் சேர்ந்து - இன்னைக்கு நீங்க ஒரு சீனியர் மேனேஜர்....!  
அண்ணே....! இந்த வெட்டி வியாக்கியானம் எல்லாம் வேண்டாம்....! நான் இங்கே தியாக உள்ளத்தோட சேவை செய்ய வரலை...! காசு... காசு...அதைப்பத்தி மட்டும் பேசுங்க...! வாழ்க்கைத் தரம் என்ன உயர்ந்து இருக்கு..? ஆபீஸ்ல ஏசி இருக்கு. அப்போ கூலர் இருந்தது. வீட்டுல ஏசி இருக்கு. கார் இருக்கு. (லோனும் இருக்கு...) ஆனா, அப்போ மாதா மாதம், செலவு எல்லாம் போக மீதம் நாலாயிரம் காசு இருந்தது... அது எங்கே இப்போ...?

1999- 2000 ஆம் ஆண்டிலேயே என்னோட CTC ஒரு உதாரணத்துக்கு வருஷத்துக்கு ரூ. 1.20 லட்சம் வைச்சுக்கலாம்...!  நான் தமிழ் நாட்டுல இருக்கிறவங்களை சொல்றேன்... வெளி மாநிலம் / வெளிநாடு கணக்கு அதிகமா இருக்கலாம்.... (ஆனால், உலகம் முழுக்க Industrial பொலிடிக்ஸ் இருக்கத்தான் செய்யும்... நல்லவன்னாலும் பிரச்னை.... இல்லாம இருந்தாலும் பிரச்னை.... வேலையில் தாக்கு பிடிக்கிறதே பெரிய விஷயம்....! இப்போ தான் பொசுக்கு, பொசுக்குன்னு வேலை இல்லைன்னு கூசாம சொல்லிடுறாங்க...! அதுக்கு இங்கேயே பரவா இல்லை.... )

உலகமே தங்கம் , தங்கம்னு கொண்டாடுதே...! ஒரு பேச்சுக்கு சம்பளம் - அந்த கால ராஜா காலத்து சங்கதி மாதிரி - தோலா / தங்கம் மூலமா பட்டுவாடா செய்து இருந்தால்....? 
10 கிராம் தங்கத்தோட விலை - கடந்த பதினைந்து வருடங்களில்...எப்படி இருக்குன்னு பாருங்க...!

2000 to 2014 Gold Price Chart in India

2000 -Rs.4400

2001 -Rs.4300
2002 -Rs.5000
2003 -Rs.5700
2004 -Rs.5800
2005 -Rs.7000
2006 -Rs.9000
2007 -Rs.10800
2008 -Rs.12500
2009 -Rs.14500
2010 -Rs.18000
2011 -Rs.25000
2012 -Rs.32000
2013 -Rs.33000
2014 -Rs.30000
2015- Rs. 26800 ( இன்னைக்கு நியூஸ் , தங்கத்தோட இம்போர்ட்ஸ் டூட்டி குறைச்சு இருக்கிறாங்க , பார்க்கலாம்....! திரும்பவும் தங்க விலை இறங்கி, ஏறும்....)


So, என்னோட சம்பளத்துக்கு - PF , மற்ற பிடித்தம் எல்லாம் போக, நான் வாங்கின சம்பளத்தை தொடவே தொடாமல் கையில் வந்த பணத்துக்கு அப்படியே தங்கம் வாங்கிட்டேன்னு வைச்சுப்போம்... 2000 ஆம் வருஷத்துலே, 20 கிராம் வாங்கி இருக்கலாம்...! சரியா?
அதே இருபது கிராம் இப்போ வாங்க, ரூபாய் 54,000/- தேவைப்படும்....! நீங்க வேற வேலை மாறாமல், ஒரே கம்பெனியில் தொடர்ந்து இருந்திருந்தால் , சத்தியமா இந்த பதினைந்து வருடத்தில் இந்த சம்பளம் கூட வராது....!
சரி, கிட்டத்தட்ட இப்போ அந்த அளவுதான் சம்பளம் வருது...!  அதாவது - 15 வருஷத்துக்கு முன்னே வாங்கின சம்பளத்தை இப்போவும் வாங்குறோம்....!
அப்போ... 15 வருஷ எக்ஸ்பீரியன்ஸ், எங்க கம்பெனி கொடுத்த ப்ரோமோஷன், சம்பள உயர்வு இதெல்லாம்....?

கம்பெனி , கம்பெனின்னு இத்தனை வருஷமா - குடும்பத்தைக் கூட கவனிக்காம, வேலை பார்த்துக்கிட்டு இருந்தேனே....! கம்பெனி கூட என்னை ஏமாத்திருச்சா....?

யோசிங்க.... அட்லீஸ்ட் இப்போவாவது யோசிக்க தோணுதே....!

===================================
பணம் மட்டுமே, வாழ்க்கையில் பிரதானம் இல்லை. ஆனால், திறமையை, கெட்டிகாரத்தனத்தை வைத்துக்கொண்டு - அதை உபயோகம் செய்யாமல் இருப்பது பாவம்....

சின்ன லெவெலில் கனவு காண்பது உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ளும் துரோகம்...! இது கலாம் அவர்கள் சொன்னது.   

உங்களுக்கு பொருளாதார நெளிவு , சொல்லிக் கொடுக்க நான் ஒன்னும் பொருளாதார புலி கிடையாது..... அது என் நோக்கமும் கிடையாது.....!

ச்சே..... அப்போவே என் விதி எனக்கு கொஞ்சம் ஒத்துழைச்சு இருக்க கூடாதா....? ரொம்ப வேண்டாம், ஒரு ரெண்டு வருஷம் - அது மாதிரி ஒரு 48 செண்ட் மட்டும் வாங்கிப் போட்டு இருந்தால்.....? ஒரு கோடியப்பூ , ஒரு கோடி....! அதுக்கு அப்புறம் , இதே மாதிரி தறுதலையா சுத்திக்கிட்டு இருந்தா கூட , பரவா இல்லையே....!

யாராவது ஒருத்தர்...... எனக்கு புத்தியில் உரைக்கிற மாதிரி சொல்லிக் கொடுத்து இருந்தால்...? யாராவது எடுத்து சொன்னால், கேட்காமலா இருந்து இருக்கப் போறோம்...? சொக்கா, நீயுமா.....! கூப்பிடக் கூடாது.... அவன் இல்லை, வர மாட்டான், நம்பாதே.

எது, தடுத்தது....? வாங்கி வந்த வரம் என்கிறோமே, அதுவா...? இல்லை சேர்க்கை இன்னும் செம்மையாக இருந்து இருக்கணுமா? எதை நொந்து , இப்போ என்ன பிரயோஜனம்...? ஏன், இப்போக் கூட நல்லா யோசிச்சு , இன்னும் பெட்டரா ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாமே....! அதுக்காக நிலம் வாங்கிப் போடுங்கன்னு சொல்ல வரலை.... சென்னையில் எனக்கு ரியல் எஸ்டேட் துறையில் நண்பர்கள் நிறைய இருக்கின்றனர்....

சரி, இந்த மாதிரி - புலம்பாம, ஒரு நல்ல முடிவு எடுக்க என்ன செய்யணும் ? சரியான நேரத்தில் , மிகச் சரியாக ஒரு வழி நடத்தல் கிடைக்க என்ன செய்யணும் ...?

வேற என்ன, ஆண்டவன் தான் மனசு வைக்கணும்...!

சீரியஸா, பேசும்போது - காமெடி பண்ணாதீங்க பாஸ்...!

நானும் ரொம்ப சீரியஸாத் தான் சொல்றேன்....! கடவுள் தான் மனசு வைக்கணும்....!

எப்போவுமே , ஒரு விஷயம் ஒருத்தன் சொல்லும்போது - அவன் தோற்றவனா இருந்தால், அது வெறும் புலம்பல்னு தோணும்... யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க....! அதுவே அவன் ஜெயித்தவனா இருந்தால்....?    நமக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டங்களான்னு தோணும் இல்லையா...?

நாம் என்னதான் முயற்சி செய்தாலும், அவன் மனது வைக்கணும்...! அட, இந்த குழந்தை என்ன தான் அடி வாங்கினாலும், அதை ஒரு பாடமா எடுத்துக்கிட்டு , தப்பை திருத்திக்கிட்டு திரும்ப வர்றானே, பரவா இல்லையேன்னு - அந்த ஈசனுக்கே தோணனும்....!
அதுக்குத் தானே, அத்தனை சோதனைகள் கொடுக்கிறதே ....!

வாழ்க்கையில் - பெரும் புயலே வீசினாலும், தாங்கும் சக்தி கிடைப்பது ஒரு வகை..... புயலையே திசை திருப்பி , குளிர் தென்றலாய் மாறச் செய்வதும் ஒரு வகை....!

இந்த ரெண்டிலே எது கொடுத்தாலும் சரி,  இப்போதைக்கு சரிந்த மரமாத்தான் இருக்கிறோம்... திரும்ப வேர் பிடிச்சு - நிமிர்ந்து நிற்கணும்.... அதுக்கு என்ன வழி......? அந்த இறைவன் கருணை எனக்கு கிடைக்கணும்.....! பணமும் வேணும். மனசு முழுக்க நிம்மதியும் வேணும்.....! அதுக்கு ஏதாவது வழிகள் இருந்தா சொல்லுங்க....!

நோ ஷார்ட் கட்ஸ்.... ! முழு சரணாகதி மட்டுமே, நமக்கு இப்போ இருக்கும் வழி.....அவன் தாள் பற்றுவோம்....! வரவிற்கும் பதிவுகளில் இன்னும் விரிவாக அலசுவோம்....!
வாள் எடுத்து வீசினால் மட்டும் போதுமா...? உடல் கவசம் வேண்டுமே...! அந்த கவசம் - இறைவனிடம் இருந்து நமக்கு கிடைக்க, என்ன வழி ...?

மேலே பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அனைவரும் - அந்த இறைவனை உள்ளே தங்க வைக்கும் பவித்திரமான கர்ப்பகிருகம் போல மனசை பாவித்துக் கொள்ளுங்கள்..... ! வெறுப்பு, பொறாமை, கோபம், முறையற்ற எண்ணங்கள் எதுவும் வேண்டாம்....! இதுவரை அனுபவித்த துன்பம் போதும்.... நாமும் கடைத்தேற வேண்டும்....!


கீழே ஒரு வீடியோ கொடுத்து லிங்க் கொடுத்து இருக்கேன்.....! இதைப் பாருங்க...! அதைப் பற்றி அப்புறம் உங்க கிட்ட பேசுறேன்....! முக்கியமான பல விஷயங்கள் இருக்கு....!
========================================================================
எப்படி இருக்குது வீடியோ....? என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க....?

 மொத்தத்தில் இந்த இனியொரு விதி செய்வோம் தொடர் பற்றிய உங்கள் எண்ணங்களை - தயக்கம் இன்றி வெளிப்படுத்துங்கள்....! இது ஒரு கூட்டு முயற்சி.... உங்கள் கருத்துக்கள், பலருக்கும் உபயோகமாக இருக்கலாம்...! பலரின் தலைஎழுத்தும் மாறலாம்....! தயக்கமே வேண்டாம்....! சூப்பர், நன்று , தொடருங்கள்.... இந்த மாதிரி எல்லாம் இல்லாமல், ஒரு நல்ல கலந்துரையாடல் மாதிரி உங்கள் கருத்துக்கள் இருக்கட்டும் ....முக்கியமாக படிக்க வருபவர்கள், கமெண்ட்ஸ் என்ன வந்து இருக்குதுன்னு , ஆர்வமா படிப்பாங்க.... உங்களோட எழுத்து திறமையை வெளியே கொண்டு வாங்க ..! என்ன சொல்றீங்க?

விரைவில் மீண்டும் சந்திப்போம்.....!
வாழ்க அறமுடன்...! வளர்க அருளுடன்....!

பிரியமுடன்,

ரிஷி 

இனியொரு விதி செய்வோம்....! உங்கள் தலை எழுத்தை மாற்றப்போகும் தொடர் - Part 01....!

| Oct 26, 2015
"பொறுமையா, நிதானமா போ .... எந்த ஒரு விஷயத்துக்கும் நேரம், காலம் கூடி வரணும்"ன்னு பெரியவங்க அடிக்கடி சொல்வாங்க ....... ஆனா, அதை நின்னு கேட்கிறதுக்கு கூட பொறுமை நமக்கு இல்லாம, "பெருசு சும்மாவே இருக்காது, எதை சொன்னாலும் அதுக்கு ஒரு ஒப்பீனியன், ஒரு சஜஷன் ...... எல்லாம் எங்களுக்கு தெரியும்னு மனசுக்குள்ளேயே நெனைச்சுக்கிட்டு , நாம பாட்டுக்கு நம்ம நினைச்சதை செஞ்சுக்கிட்டு இருந்து இருப்போம்........! 

"நீங்க நினைக்கிறபடி மட்டுமே நாங்க நடக்கணும்னா , அதுக்கு நான் நீயாவே பொறந்து இருக்கலாம்ல! இல்லைல.... அப்புறமும் ஏன்? என் வாழ்க்கையை என்னை வாழ விடுங்க பெருசு....!" - ஒரு அட்வைஸ் கொடுத்தாலே , அரை மணி நேரத்துக்கு மனசு அவங்களை தொவைச்சு , தொங்கப் போட்டுட்டுத்தான் மத்த வேலையைவே பார்க்க ஆரம்பிக்கும்...!

ஆனால், நாம நினை(பற)க்கிறோம்ங்கிறதுக்காக காலம் நமக்கு எல்லா அனுகூலமும் செய்யுமா? இல்லை... நிச்சயமாக இல்லை....! எடுக்கிற எல்லா முயற்சிகளுமே வெற்றி அடைவதில்லை....!  பத்துக்கு மூணு போச்சா? பரவா இல்லை.... ! அவன் வெற்றி அடைந்தவன்...! பத்துக்கு எட்டு அடி வாங்கியாச்சு ...! இது சுமார்...! பத்துக்கு பத்துமே  அடி...! பாவம்தான்...!

ஆனா, அதுலேயும் ஒரு கணக்கு இருக்கு...! முதல் ஏழு வெற்றி... அடுத்த மூணுலேயும் அடி..! இதுவும் பாவம் தான்...!

ஒரு உதாரணத்துக்கு பார்ப்போம் - உங்க கூட படிச்ச / அல்லது வேலை பார்த்த நான்கு நண்பர்கள்....! கிட்டத்தட்ட ஒரே சூழ்நிலை, கல்வி, திறமை, எல்லாம் இருக்குதுன்னு வைச்சுப்போம்...! ஒரு பத்து , பதினஞ்சு வருஷம் கழிச்சு அவங்க நாலு பேரும் எப்படி இருக்கிறாங்கன்னு பாருங்க...? எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறாங்களா? இல்லையே...?
ஒருத்தர் ஓஹோ ! இரண்டு பேர் பரவா இல்லை...! இன்னும் ஒருத்தர் மட்டும் - ரொம்ப பாவமா இருப்பார்..! கரெக்டா....? அது ஏன்?

அது மட்டும் இல்லை... அந்த ஒரே ஒரு பாவமா இருக்கிறவர் மாதிரி தான் , பெரும்பாலும் எல்லோருக்குமே நிலைமை....! இப்போ , இந்த நொடி இந்த கட்டுரையை படிக்கிற நண்பர்களில், பத்துக்கு ஒன்பது பேர் - இந்த ரகம் தான்...! அவங்களுக்குத் தான் இந்த கட்டுரையே.... மீதி ஒருத்தருக்கு, இது செம மொக்கை பாஸ்...னு தோணும்... ! நீங்க கை கொடுங்க பாஸ்....! நிச்சயமா இது உங்களுக்கு இல்லை... நீங்க பாட்டுக்கு  whatsapp , facebook, அனிருத்தோட 'தங்கமே உன்னை தான் தேடி வந்தேனே' ன்னு ஹம் பண்ணிக்கிட்டு ஜாலியா இருங்க...! கம்பீருக்கும் - மனோஜ் திவாரிக்கும் கிரவுண்ட்ல சண்டையாமே...!

இவங்க எல்லாம் எப்போவாவது கூகுள் செர்ச்ல எசகு பிசகா, தவறிப்போய் உள்ளே வந்து , அப்புறம் துண்டைக் காணோம்னு ஓடுற இளசுங்க....! 

ஆனா, உண்மையிலேயே எனக்கு தனிப்பட்ட முறையிலே பெருமையான விஷயம், இந்த தளத்தோட நீண்ட நாள் வாசகர்களில் பாதி பேருக்கு மேலே, முப்பது வயசுக்கு குறைவான இளைஞர்கள்...! எப்படியாவது வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னுக்கு வரத் துடிக்கும் முனைப்பு உள்ளவர்கள்...! சரி, மீதி பாதி பேர்... வயசு ஆனாலும் , மனசுக்கு நிம்மதி , ஒரு புத்துணர்வு , நம்பிக்கை கெடைக்கும்னு வர்றவங்க...! சார், உங்களுக்கு என்னை தெரியாது, என்னை உங்களுக்கு தெரியாது - ஆனா, நான் வாழ்க்கையிலே இப்போ ஒரு மெச்சூர்ட் மன நிலைமைக்கு வர உங்க எழுத்து ஒரு முக்கிய காரணம்னு நிறைய வாசகர்கள் - குறிப்பா போன கட்டுரைக்கு அப்புறம், நிறைய மின்னஞ்சல்கள், விசாரிப்புகள்...!
ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி...! நானே இந்த அளவு எதிர் பார்க்கலை....! ஒரு பிரேக் விடுவோம்... ! ரொம்ப தீவிரமா இருக்கிறவங்க, அட்லீஸ்ட் ஒரு மாசத்துக்குள்ளே பதிவைப் பார்ப்பாங்க , பார்க்கலாம்னுதான் நினைச்சிருந்தேன்...!
உடனே, இதுக்கு மேலே தொடர்ந்து , அடிக்கடி எழுதுறேன்னு உங்களை மெர்சலாக்க விரும்பலை ..... (நல்ல வேளை....!) முடியும்போது கண்டிப்பா எழுதுறேன்......
 சரி, விஷயத்துக்கு வருவோம்... எங்க விட்டேன்...! ஹாங் அந்த பாவப்பட்ட ஒருத்தர்...  அட,நம்மளை மாதிரி ஒருத்தர்....! ஹ்ம்ம்... ஓகே...!

எல்லாம் தலைவிதி சார்...! விதிப்படி தான் நடக்கும்.... ! நாலஞ்சு தடவை பரவா இல்லை சார்...! கை வைக்கிறது எல்லாமே சொதப்புனா? இல்லை....?

சரி, விதி .... விதின்னு ஒன்னு நிஜமாவே இருக்கா...! 

விதி தான் ஒருவனின் கர்ம வினைகள்னு நம்ம சாஸ்திரம் - இந்து மதம் சொல்லுது....!

கொஞ்சம் சீரியசாவே யோசிப்போம்...!


உங்கள் எண்ணங்களே நிஜங்களாகின்றன. உங்களுடைய தற்போதைய நிலை (நிஜம்) என்பது இது வரை தங்கள் மனத்தில் எழுந்த எண்ணங்களும் , அவற்றை ஒட்டி நடந்த செயல்களும் கலந்த மொத்த கலவையே இன்றி வேறில்லை. வாழ்க்கை என்பது வெறும் திட்டமிடா விஷயமல்ல. எனவே, நம் எண்ணங்களை சரிவர செதுக்குவதே நமக்கு முக்கியமான தீர்வு...

நம் ஞானிகள் சொல்றபடி விதிக்கப்பட்டதே எல்லோருக்கும் நடக்கும்...! நாம செஞ்ச பாவ / புண்ணியம் நமக்கு திரும்ப கிடைக்கும் ..... அதுலே கொஞ்சம் கூட மாற்றமில்லை......
நல்லபடி நம்மளை நினைக்க வைக்கிறதுக்கே , நம்ம கர்ம பலன் தான் / விதி தான் கை கொடுக்கணும்...! நாம என்ன தான் நினைச்சாலும், செஞ்சாலும் - முடிவு , பலா பலன் , ஆண்டவன் கையிலே.... அந்த சக்தியை நீங்க கடவுள், விதி , இல்லை தன்  வினை / கர்ம பலன் எப்படி வேணும்னாலும்....    
(அண்ணே! இதை பூவுன்னு சொல்லலாம், புயிப்பம்னு சொல்லலாம், இல்லை நீங்க சொல்ற மாதிரியும்............)

அப்போ, அந்த சுமாரா இருக்கிறவர் - ஒன்னும் செய்ய முடியாதா...? ஜெயிக்கவே முடியாதா...?
ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையா....?
வாழ்க்கையிலே எடுக்கிற முயற்சி எல்லாமே வீண்தானா...?
நானும், நாலு பேர் மதிக்கிற மாதிரி ஆக முடியாதா...?     
நான் கும்புடுற தெய்வம் எனக்கு உதவி செய்யாதா...?

அடுத்தவங்க மதிக்கிறதை விடுங்க....! காசு இருந்தா மதிப்பாங்க.... காசு இருக்கிற வரைக்கும் தான் மதிப்பாங்க....! காசு மட்டுமே முக்கியம் இல்லை....! அதனாலே அவங்களை நாங்களும் மதிக்கிறதில்லை...  ஆனா, ஒரு சுய மதிப்புன்னு இருக்குது இல்லை? எனக்கே என்னை புடிக்காம போயிடுமோன்னு பயம் வர ஆரம்பிக்குது....

ஒரு லெவல் வரைக்கும் ஏமாற்றம் தாங்கிக்கலாம்....! அதை தவிர்க்க போராடலாம்...! அதுவே கொஞ்சம் ஒரு லெவல் தாண்டின பிறகு......? ஏமாற்றம்  பழகிடும்...! சரி, விடு ஒதுங்கிடுவோம்னு சும்மாவும் இருக்க முடியாது...! 
வேற வழியே இல்லாம ஏமாற்றம் இப்போ நம்பிக்கை ஆகும்....! 
இல்லை, எப்படியும் நிலைமை மாறும்னு ஒரு நம்பிக்கை...! 

நம்புவது ஒன்றே உயிரைப் போக விடாமல் காக்கும் ஜீவ மந்திரம்...! 

ஒருத்தர் ஜாதகத்தைப் பார்த்து , ஜோசியர் ஒருத்தர் , அண்ணே ! அம்பது வயசு வரைக்கும் - கடுமையான போராட்டம் உங்களுக்கு, கஷ்டம்னா, கஷ்டம் .....  அப்படி ஒரு கஷ்டம்...! 
அதுக்கு அப்புறம் ..! நல்லா இருக்குமா தம்பி ...?
ஹ்ம்ம்... இல்லைண்ணே .... அதுவே பழகிடும்......!  

நிஜமாவே இந்த ஜோக் பார்க்கிறப்போ வாய் விட்டு சிரிச்சிருப்போம்... ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பார்த்து பதறி இருப்போம்... நமக்கும் இதே நிலைமை தானா?

 சரி,  ஏதாவது விதி விலக்கு .....! மொதல்லே விதியை பற்றி கொஞ்சம் யோசிப்போம்.... அப்புறம் விலக்கை விளக்குவோம்....! 

=================================================
அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து கண்ணதாசன் வரிகளை கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன்... .....

உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது. 
உனதுவாழ்க்கை எந்தச் சாலையில்போனாலும், அது இறைவன் விதித்ததே.
ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.

ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?

நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.

மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காத்தும் உன் விதிக்கோடுகளில் இருக்கிறது.

போன ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.

போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.

நீ எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதியின் விளைவே.

முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.


“அறியாமையே விதியின் கைப்பாவை. அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்து விட்டால், விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.”

“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”

“இருக்கின்றன!

இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.

உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம். இப்படித்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

இந்தப் பெண்தான் எனக்குத்தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

எபோது நீங்கள் நினைத்தது நடகவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.

அதற்கும் நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி ”

“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது; ஜன்னத்தில் தொடங்குகிறது.
தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்களை எத்தனைபேர்? வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது கோழைத் தனத்தால் கிடைத்து. ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ, அவை விதியால் நிர்ணயிக்கப்பட்டவை!   ( அட ! அப்போ, நாம எல்லாம் வீரன்னு விதிக்கு தெரிஞ்சு இருக்குதே...! )

ஒன்று நடைபெற்ற பின்னால், ‘கொஞ்சம் அப்படிச்செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!

மதி ஏன் தாமதமாகச்சிந்திக்கிறது?

விதி முந்திக்கொண்டு விட்டது!”

“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக் கூடியது ஒன்றுமே இல்லையா?”

“இருக்கிறது!

பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி. அதைப்பள்ளம் என்று தெரிய வைத்தது விதி.

ஜனனத்துக்கும்முன்பும் மரணத்திற்குப்பின்பும், நாம் எங்கிருந்தோம் - எங்கு போகிறோம் என்று தெரியும்வரை, நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.  இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது. நடக்கும் எதுவும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று.

================================================

‘ஆன்மீக அடிப்படையின்படி, செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு’ என்பது நியதி. நல்ல செயல்கள் புண்ணியத்தையும், தவறான செயல்கள் பாவத்தையும் கொடுக்கின்றன. நாம் ‘கர்மம்’என்று குறிப்பிடுவது, முந்தைய செயல்கள் தற்பொழுது விரும்பத்தகாத பலனை அளிக்கும் செயல்களே.

நம் வாழ்க்கை, செயல்களால் அமைந்தது. ஆனால் எல்லாச் செயல்கட்கும் உடனே பலன் கிடைப்பதில்லை. நமக்குப் பல வகைகளிலும் பலமும், திறமையும் அரண்களாக அமைகின்றன. காலப்போக்கில் அந்த அரண்கள் பலம் இழந்தும்போகின்றன. ஆரோக்கியம், செல்வம், குடிப்பிறப்பு, அந்தஸ்து, முற்பிறவிப் புண்ணியம், அறிவு, ஆற்றல், இனிமையான பழக்கவழக்கங்கள், உற்றார் தொடர்பு, ஊரார் நட்பு என மனிதனுக்குப் பல வகையான பலம் இருப்பதால் அவன் செய்யும் காரியங்களில் குறையோ, தவறோ நேரும்பொழுது அதற்குண்டான பலன், அவனுக்கு உடனே கிடைப்பதில்லை. ஆனால், காலக் கணக்கின்படி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்....

எது சம்பந்தப்பட்ட பலா பலன்கள் - நமக்கு கிடைக்கவில்லையோ, அது நமது கர்ம வினை சம்பந்தப்பட்டது என்பது உறுதியாக உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
அது - வாழ்க்கை(த்) துணை சம்பந்தப்பட்டதோ , இல்லை கடன், நோய் எதிரிகளின் தொந்தரவோ, அலுவல், வியாபார தொடர்பு மூலம் ஒரு நிம்மதி அற்ற சூழலோ அல்லது எதுவோ - அது உங்களுக்கே தெரிந்து இருக்க கூடும்...!

சரி, என்ன செய்யலாம்....? இன்னும் கொஞ்சம் யோசிப்போம்...........!

கடவுள் வழிபாடு - உண்மையா, ஆத்மார்த்தமா....கெஞ்சி, கதறி , உருண்டு பிரண்டு....  இப்படி தொடர்ந்து...... பரிகாரம் ஏதாவது...?

நீங்கள் செய்யும் இறை வழிபாடு - உங்களை நிச்சயம் ஒரு நல்ல தீர்வு / பரிகாரத்துக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வழி  காட்டும். முழு நம்பிக்கையோடு அந்த பரிகாரம் செய்வது , நிச்சயம் உங்கள் கர்ம பலன்களை குறைக்கும்....!

என்னதான் விதிப்படி நடக்கும் என்பது இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை வரை - சுய சங்கல்பத்துடனான செயல்பாடுகள் அனுமதிக்கப் பட்டு இருக்கின்றன...! அந்த செயல்களை தீர்மானிப்பதில் - இறை வழிபாடு உங்களை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும் என்பது என் தனிப்பட்ட கருத்து...! முயற்சி - முடிவு எல்லாமே சுபமாக மாற்ற , அந்த இறை கருணை செய்யும்.... இது என் அசைக்க முடியாத நம்பிக்கை....!

எப்பவுமே, ஏதாவது ஒரு சோகத்தில தான் - விதியை நாம இழுப்போம்..! ஐயோ பாவம் அவன் தலை எழுத்து....!சந்தோசத்துக்கு...?அதிர்ஷ்டம்.  ஹே.... செம லக்கிடா ....! இப்படித்தான் பேச்சு வரும்.....! 
கர்ம பலன்களை குறைத்து, வெற்றி பாதையில் இறை அருளுடன் நாம் பயணிக்க - என்னோட சொந்த வாழ்க்கையில் - நான் கடை பிடித்த  / கடை பிடித்துக் கொண்டு இருக்கும் சில விஷயங்களை - (பகிர்ந்து கொள்ளக் கூடிய சில விஷயங்களை) - சொல்லலாம்னு நினைக்கிறேன்....!  பதிவு ரொம்ப நீஈஈஈளமாகிடுச்சு.... அதனாலே ....அடுத்த பதிவுக்கு வாங்க , அங்கே கண்டினியூ பண்ணலாம்.......!இதுவே மொக்கை.... இதுல இன்னொரு பதிவான்னு பதறாதீங்க ...! நிஜமாகவே சுவாரஸ்யமான பல விஷயங்கள் இருக்கு...! பார்ப்போம் , யார் யாருக்கு படிக்கிறதுக்கு விதி , இல்லை இல்லை அதிர்ஷ்டம் இருக்குதுன்னு......!"எல்லாம் உங்க தல விதி!", எப்படி மாட்டிக்கிட்டிங்க பாத்திங்களா?   விதி விளையாடும்போது அது எந்த விதிக்கும் கட்டுப்படாது பாஸ்.....!

இது எத்தனை கட்டுரைகளா வரும்னு எனக்கு தெரியாது....! நிஜமா எதுவும் திட்டம் இடலை... அருணாச்சலம் சில விஷயங்களை, சிலருக்கு தெரியப் படுத்தனும்னு நினைக்குது ...  என்னை ஒரு கருவியா தேர்ந்து எடுத்து இருக்குது ....அவ்வளவுதான் இந்த நொடியில் எனக்கு தோணுது.... பார்க்கலாம்.....! முழுக்க முழுக்க சிந்தனை சிதறல்கள் மட்டுமே....! தேவையானதை எடுத்துக்கோங்க...! தேவை இல்லைன்னு நினைக்கிறதை விட்டுடுங்க ....! சிம்பிள்...! இடையிடையே நீங்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் உற்சாகம் அளிக்கும்...! அதனால ஓரிரு வார்த்தைகளில் இல்லாமல், கொஞ்சம் தாராளமா உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்......! என்ன ரெடியா....?

பிரியமுடன் ,

ரிஷி  

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!

| Sep 29, 2015
இணையத்தில் படித்த சில நகைச்சுவை துணுக்குகள்.... நீங்களும் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்......நண்பர் ஒருவர் அனுப்பி பல மாதங்களாகுது .... (என்னது வருஷமா?)
===================================================================
பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”

அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…”
என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்..
நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ…
 ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க
நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா…
இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…”
என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ…
ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை
தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச்
சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… மடப்பயலே ... நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…
இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? முண்டம்....அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம்... மவன...
நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்.... பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு
புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது
போன் வந்துச்சா…!
============================================================
ஆண்களின் கவனத்திற்கு (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள்)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட்டில் 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் இளம்பெண் ஒருத்தி லிப்ட்டில் ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந் விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட்டில் இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கமாகி மெளனமாக இருந்தான். வீட்டிற்கு நடந்தார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன் : இல்லடி, நான் லிப்ட்டில...

மனைவி : அட, அதைதான் விடுங்கன்னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளினேன்.

கணவன் : கிர்ர்ர்...
==========================================================

சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.

==============================================================
வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...

அப்போ நாலாவது...? பழமொழி சொன்னா அனுபவிக்கனும்? ஆராயக் கூடாது....? ஓகே ?
=======================================================
நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்ததால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை.
வாங்கிக்கட்டுமா...?"

"வாங்கிக்க...!"

"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..."

"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"

“அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”

“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா”

"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார்... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"

"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்"

"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.

இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.

ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே கேட்டாரே ஒரு கேள்வி….

"யாரோட மொபைல்ங்க இது..?".....
=========================================================

வயதான மனிதரிடம் ஒரு இளைஞன் கேட்டான்: "உங்களுக்கு எழுபது வயதாகிறது. ஆனால் இன்றும் உங்கள் மனைவியை, டார்லிங், ஸ்வீட்டி, ஹனி  என்று அழைக்கிறீர்களே. இந்தக் காதல் ரகசியம் என்ன?"
பதில் சொன்னார் அந்தப் பெரியவர்: "ரகசியம் என்று ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அவள் பெயரை  மறந்து பல வருடங்களாகிவிட்டது. அவள்
பெயரை அவ்ளிடமே கேட்கவும் பயம், தப்பாகச் சொல்லவும் பயம்!

=========================================
 குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா  சொல்லுதுங்க..


===============================================


ஒருவரிடம்  தெருவில்  சென்ற  பிச்சைக்காரன்  சாப்பிட , இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,
''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என்
மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும்
இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட
 வேண்டும்.''
========================================================

 டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்.,
இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

=======================================================

 ==========================================================

 ஒரு முழுக்குடிகாரன் ரயில் பயணித்துக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் விஸ்கி மற்றும் இன்னபிற சாராய நெடிகள். உடைகள் அழுக்காக இருந்தன. அவன் குளித்து இரண்டு அமாவாசைகளாவது ஆகியிருக்கும் போல! அவன் ஆடைகளில் லிப்ஸ்டிக் கறைகள் இருந்தன (நோட் திஸ் பாயிண்ட்). சட்டைப் பையில் பாதி குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஜின் பாட்டில் ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் அவன் சலமின்றி, அன்றைய செய்தித்தாள் ஒன்றைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான்.

ரயிலில் கூட்டமில்லை.

எதிரில் சந்நியாசி ஒருவர் அமர்ந்து சக பயணியாக அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும், அவன் திடீரென்று சந்நியாசியை நோக்கிக் கேட்டான்.

"சுவாமி, மூட்டு வலி எதனால் வருகிறது?"

"எப்படிப்பட்ட மூட்டுவலி?" இது சாமியார்

"கை, கால்களை மடக்கி நீட்ட முடியாத - குறிப்பாக நடக்க முடியாத, ஏன் அடியெடுத்து வைக்க முடியாத அளவிளான மூட்டுவலி!"

அவர் உடனே, அவனுக்குப் பதில் சொன்னார்.

"மகனே, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைதான் அதற்குக் காரணம். அதிகமான குடி, அளவில்லாத பெண் சகவாசம், தினசரி, குளிக்கும் பழக்கமின்மை,
சுகாதாரமில்லாத உணவுகளை உண்ணுதல் போன்றவைகள்தான் அதற்குக் காரணம்"

"நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று சொன்னவன், மறுபடியும் செய்தித்தாளில் மூழ்கி விட்டான்.

இப்போது, சாமியாருக்குச் சற்று வருத்தமாகிவிட்டது. அதிகப் படியான வார்த்தைகளைச் சொல்லி அவனைப் பயமுறுத்தி விட்டோமோ என்ற
ஆதங்கம் ஏற்பட்டது.

உடனே அவனுடன் பேச ஆரம்பித்தார்.

"மூட்டுவலிக்கான காரணத்தை நான் கடுமையாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். கவலைப் படாதே! எத்தனை நாட்களாக உனக்கு மூட்டு
வலி?"

அந்தக் குடிகாரன் மெல்லிய குரலில் பதில் சொன்னான்:

"எனக்கு எந்த வலியும் இல்லை சாமி. நம்மூர் ஆசிரமத்தில் உள்ள பெரிய சாமியாருக்குக் கடுமையான மூட்டுவலி என்று பேப்பரில் போட்டிருக்கிறான்.
அதனால்தான் கேட்டேன்"

============================================================

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com