Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

2014 - ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

| Jan 1, 2014
அன்புள்ள வாசக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புகழ்பெற்ற ஜோதிடர் - ஐயா சிவல்புரி சிங்காரம் அவர்கள் கணித்து அளித்த வருட ராசி பலன்களை , இங்கு பகிர்ந்துள்ளேன். இறையருள் நம் அனைவருக்கும்  துணை நின்று,  வாழ்வில் மகிழ்ச்சியும் , மன நிம்மதியும் மேலோங்க, பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்...!

மேஷ ராசி :

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

ஏப்ரல் மாதத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!

மகத்தான சாதனை புரிந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு பிறக்கப் போகிறது. கேதுவின் ஆதிக்கத்தில் பிறக் கும் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு கீர்த்தியையும், செல்வத்தையும் அள்ளி வழங்கும் விதத்தில் கிரக நிலைகளைக் கொண்டிருக்கிறது. ஞான    காரகன் கேது உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன சப்தமாதிபதி சுக்ரனும் வக்ரம் பெற்றிருக்கிறார். 9,12–க்கு அதிபதியான குருவும் வக்ரம் பெற்றிருக்கிறார். உச்ச சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது.

இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு எண்ணற்ற மாற்றங்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறது.
திசாபுத்தியும், கிரகங்களும் பலம்பெற்றிருந்தால் உங்களுக்குப் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உதவி செய்வார்கள். இணைந்து வரும் எதிர்ப்புகள் எல்லையை விட்டு ஓடும். மணந்து கொண்ட வாழ்க்கைத் துணையால் மறுமலர்ச்சி உண்டாகும். துணிந்து நீங்கள் செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளலாம். இல்லையேல் பணிந்து வணங்கி பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.
2014–ம் ஆண்டு கேதுவிற்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் அமைவதால், உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பலம் மற்றும் ராசிநாதன் செவ்வாய், தனாதிபதி சுக்ரனின் பலம் ஆகியவற்றை எடைபோட்டுப் பார்த்து சுயஜாதகத்தில் பாக்கியாதிபதி நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேக நலம் சிறப்பாக இருக்கும். செல்வ வளமும் அதிகரிக்கும்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே ஞானகாரகன் கேது சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் ராகு சனியுடன் கூடிச் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் செவ்வாய் 6–ல் சஞ்சரித்து விபரீத ராஜயோகத்தை உண்டாக்குகிறார். தனாதிபதி சுக்ரனும், விரயாதிபதி குருவும் வக்ரம் பெற்றிருக்கிறார்கள்.
எனவே, இக்காலத்தில் பணம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பக்கபலமாக இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினர்களின் குறைகளை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு அகலும். ஜென்ம கேதுவின் ஆதிக்கத்தால் பயணங்கள் அதிகரிக்கும், அலைச்சல் கூடும். வேலைப்பளு அதிகரிக்கும்.
ஆரோக்கியம் சீராகவும், ஆதாயம் அதிகரிக்கவும் சனிக்கிழமை தோறும் சனீஸ்வர வழிபாட்டையும், வெள்ளிக் கிழமை தோறும் விநாயகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். ஜென்ம கேதுவின் ஆதிக்கம் இருப்பதால் பிறரை நம்பி காரியங்களை செய்ய இயலாது. எனவே சர்ப்ப சாந்தி பரிகாரத்தை அனுகூலம் வரும் நாளில் யோகத்தை வரவழைத்துத் தரும் ஸ்தலங்களில் செய்து வழிபட்டு வருவது நல்லது.

சந்தோஷம் தருமா? சனிப்பெயர்ச்சி!
இதுவரை ஏழாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உச்சம் பெற்று விளங்கினார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிந்ததால் காரியத்தடைகளும், கவலைகளும் உங்களுக்கு அதிகரித்திருக்கலாம். அந்த நிலை இனி மாறப்போகிறது. இந்த ஆண்டு வருடக் கடைசியில் 15 நாட்களுக்கு முன்னதாகவே சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 7–ம் இடத்தில் சஞ்சரித்த சனியைக் காட்டிலும் 8–ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சமேனும் அவர் நன்மை செய்வார்.
ஆயினும் இட மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம், வாகன மாற்றம் என ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி அதன் மூலம் நற்பலன்களை உங்களுக்கு வழங்கலாம். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது.
தொடர்ந்து சனிக்கிழமைதோறும் சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது. உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் தொழில் மாற்றங்களைக் கொடுப்பார். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்பட வைப்பார். கூட்டாளிகளால் ஏமாற்றங்களைச் சந்திக்காமலிருக்க அப்போதைக்கப்போது வரும் லாபத்தைப் பிரித்து எடுத்துக் கொள்வது நல்லது.

குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
குருவின் வக்ர காலத்தில் பாகப் பிரிவினை சுமூகமாக முடியும். பங்காளிப்பகை மாறும். சனியின் வக்ர காலத்தில் தொழிலில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். அயல்நாடு சென்றவர்கள் தாய் நாடு திரும்புவர். புத்திர ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

மேஷ ராசி பெண்களுக்கு!
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத் தொடக்கத்தில் தெய்வ பலம் கூடுதலாக இருக்கும். திடீர் தனலாபங்கள் வந்து சேரும். சனியின் பார்வை ராசியில் பதிவதால் இனிய பலன்கள் உங்களுக்கு ஏற்படுவதில் சில இடையூறுகளை சிலர் விளைவிக்கலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
கணவன்–மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சனி–செவ்வாய் சேர்க்கைக் காலத்தில் அனுமன் மற்றும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வருடக்கடைசியில் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வருவதால் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் அதற்குரிய முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, செவ்வாய்க்கிழமை தோறும் விரத            மிருப்பது நல்லது. பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில், யோகபலம் பெற்ற நட்சத்திரமும் கூடும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக வைத்தீஸ்வரன் கோவில் சென்று பஞ்சார்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.

யோகம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
மேஷத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும், துலாத்தில் சஞ்சரித்து வந்த ராகுவும் தன் வான்வழிப் பயணத்தில் பின்னோக்கிச் சென்று கன்னியில் ராகுவும், மீனத்தில் கேதுவுமாக இருக்கப் போகிறார்கள். இது புத்தாண்டில் ஜூன் 21–ம் தேதி நிகழவிருக்கிறது. 6–ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் என்பார்கள். அந்த அடிப்படையில் 8 லட்சுமிகளும் உங்கள் இல்லத்தில் வந்து குடியேறி, கொட்டும் பண மழையில் நீங்கள் நனைய இந்த ராகு–கேது பெயர்ச்சி வழிவகுக்கும்.
ராகுவின் பார்வை 4, 8, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. இந்த ராகு–கேது பெயர்ச்சியின் பலனால் உங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதில் இருந்த தாமதம் மாறும்.
12–ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு புதிய வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடவேண்டுமென்ற உங்கள் நோக்கம் நிறைவேறலாம். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்களின் மனஸ்தாபங்கள் மாறும்.

குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
ஆண்டின் தொடக்கத்தில் மிதுனத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் ஜூன் மாதம் 13–ம் தேதி கடக ராசியில் உச்சம் பெறுகிறார். அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் அமைதிக்குறைவு ஏற்படுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். 9, 12 ஆகிய இடங்களுக்கு குரு அதிபதியாவதால் தந்தை வழியில் தகுந்த நற்பலன்கள் கிடைக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும்.
‘மன்னவன் 4–ல் நின்றால் மலைபோல் துயர்வந்தாலும், கண் எதிரில் பனியாய் மாறும், கச்சிதமாய் நோய்கள் தீரும்’ என்பார்கள். எனவே, உடல்நல குறைபாடுகள் அகன்று உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
குருவின் பரிபூரண பார்வை 8, 10, 12 ஆகிய இடங்   களில் பதிகிறது.  அதன் பலனால் சிக்கல்கள் விலகும். சிரமங்கள் தீரும். அந்த அடிப்படையில் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
சென்ற குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் இப்பொழுது ஈடுகட்டும் வாய்ப்பு உருவாகலாம். உத்தியோகத்தில்  நீங்கள் நினைத்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை அரங்கேற்றம் செய்வீர்கள்.
குருவின் பரிபூரண பார்வை 12–ம் இடத்தில் பதிவதால் பயணங்களால் பலன் கிடைக்கும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். வருமானத்தை அசையாத சொத்துக்களாக மாற்றி   அமைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.
வாகன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில், எண்கணித அடிப்படையில் வண்ணங்களும், எண்களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் அந்த வாகனத்தை எடுத்துச் செல்லும் இடங்களில் எல்லாம் காரிய வெற்றி ஏற்படும். குரு வழிபாடு குதூகலம் தரும்.
======================================================================
ரிஷப ராசி

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்?1,? 2 பாதங்கள்? வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
ராகு–கேது மாற்றத்தால் நல்ல மாற்றம் வந்து சேரும்!

தான் மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களும் ஆனந்தமாக வாழ விரும்பும் ரிஷப ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறக்கப் போகிறது. பொன்னான காலம் வரப் போகிறது. ஞானகாரகன் கேதுவின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. வானளாவிய புகழை வழங்கும் சனி உச்சம் பெற்றிருக்கிறார். வக்ர கதியில் வியாழனும், சுக்ரனும் சஞ்சரிக்கிறார்கள்.
தக்க விதத்தில் பலன் கூறும் தனாதிபதி புதனோ வலிமையிழந்து அஷ்டமத்தில் மறைந்திருக்கிறார். ராகு–கேதுக்கள் 6–லும், 12–லும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை உங்களுக்கு வழங்கப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாகவே நீங்கள் மற்றவர்களை உற்சாகமூட்டப் பிறந்தவர்கள். ராசிநாதன் சுக்ரனாக இருப்பதால் வசீகர சக்தி உங்களுக்கு உண்டு. உங்களிடம் ஒரு செயலை ஒப்படைத்தால் எப்பாடுபட்டாவது முடித்து விடுவீர்கள். உங்கள் பேச்சில் நகைச்சுவையும் நிறைந்திருக்கும். இடையிடையே பகைச் சுவையும் கலந்திருக்கும். வீரத்தைக் காட்டிலும் விவேகம் கூடுதலாகவே உங்களிடம் குடியிருக்கும்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுயஜாதகத்தில் உள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
2014–ம்  ஆண்டு  கேதுவிற்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் வருவதால் உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பாதசார பலம் மற்றும் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதன் ஆகியவற்றின் பலமறிந்து பாக்யாதிபதி அம்சத்தி லிருக்கும் நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து  யோக பலம்பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேகநலம் சிறப்பாக இருக்கும். உங்கள் பெயர் எண் ஆதிக்கமும், தொழில் நிலையத்தின் பெயரும் அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் நீங்கள் அமைத்துக் கொண்டால் வெற்றி தேவதை வீடுதேடி வந்து வரம் தரும்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ‘வக்ரம்’ பெற்று சஞ்சரிக்கிறார். சுக்ரன் 6–ம் இடத்திற்கு அதிபதியாவதால் வாங்கல்–கொடுக்கல்களில் பற்றாக்குறை ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் உங்களுக்கு விரிவடைந்திருப்பதால் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
தனாதிபதி புதனும், அஷ்டம லாபாதிபதியான குருவும் பரிவர்த்தனை பெற்று வருடம் தொடங்குவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி      வரும். மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிலருக்கு கூடுதல் பணம் தேவைப்படலாம்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரிப்பு திருப்திகரமாகயிருக்கும். புத–ஆதித்ய யோகம் செயல்படுவதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். ராகு பலத்தால் அரசு வேலைக்காக விண்ணப்பித்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அது கிடைக்கலாம்.
விரய ஸ்தானத்தில் கேது வீற்றிருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, வாங்கல்–கொடுக்கல்களில் ஒழுங்கு செய்து கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். நேர்மையான வழியில் செல்லும் உங்களுக்கு நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாவதில் தாமதம் ஏற்பட்டாலும், நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடைசி நேரத்தில் காரியங்கள் கூடி  விடும்.

எப்படி இருக்கும் சனிப்பெயர்ச்சி?
இதுவரை உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உச்சம் பெற்று விளங்கினார். இந்த ஆண்டு கடைசியில் சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 7–ம் இடத்தில் சஞ்சரித்து கண்டக சனி என்ற பெயரோடு உங்கள் ராசியில் பார்வை பதிக்கப் போகிறது.
உங்கள் ராசியைப் பொறுத்த வரை சனி நற்பலன்களைக் கொடுப்பவர். எனவே  பயப்படத் தேவையில்லை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீட்டுப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம். நாட்டுப் பற்று மிக்க அரசியல்    வாதிகளுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். கூட்டு முயற்சியில் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்தவர் விலகலாம். குடியிருக்கும் வீட்டாலும், உடன் இருப்பவராலும் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
குருவின் வக்ர காலம் உங்களுக்கு கொடுக்கல்–வாங்கல்களில் திருப்தியைக் கொடுக்கும். நண்பர்கள் நல்ல காரியம் செய்ய உறுதுணை புரிவர். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். மக்கட் செல்வங்களால் உதிரி வருமானங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் சனியின் வக்ர காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. குடும்பச் சுமை கூடும். பொறுமை அவசியம்.

ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பூமியோகம் முதல் புனித யாத்திரைகளை அமைத்துக் கொடுக்கும் யோகம் வரை நல்ல வாய்ப்புகளை வழங்கப்போகிறது. வருடத் தொடக்கத்திலேயே வரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அகலும்.
குருப் பெயர்ச்சிக்குப் பின்னால் குழந்தைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். சிலருக்கு வேலையும் கிடைக்கும், விரும்பியபடியே மணமாலை சூடிக்கொள்ளும் வாய்ப்பும்  உருவாகும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் தொழில் தொடங்கும் முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டுவர். ஆபரண சேர்க்கைக்கு உண்டு. சனிப்       பெயர்ச்சிக்குப் பின்னால் கவனம் தேவை. சர்ப்ப சாந்தியும், அனுமன் வழிபாடும் சஞ்சலம் தீர்க்கும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சுக்ரன் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் உள்ளூர் கோவில்களுக்குச் சென்று அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாடும், யோகபலம் பெற்ற நாளில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்     பட்டியிலுள்ள நெய் நந்தீஸ்வரரை வழிபாடும் செய்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

நலம்  தரும்  ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை துலாம் ராசியில் ராகுவும், விரய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்த புத்தாண்டில் ஜூன் 21–ம் தேதி பின்னோக்கிச்சென்று கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவுமாக சஞ்சரிக்கப் போகிறார்கள். பஞ்சம ஸ்தான ராகு உங்கள் பணத்தேவைகளை பூர்த்தியாக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள், சகோதரர்கள் வழி கருத்துவேறுபாடுகள் தீரும். இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலத்தால் ஆடம்பர சாதனங்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு மற்றும் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். உங்களோடு பணிபுரிந்து கொண்டே உங்களுக்கு கெடுதல் செய்தவர்கள் விலகிச்செல்வர். மங்கலகரமான புத்தாண்டில் இந்த ராகு–கேதுப் பெயர்ச்சி மனக்கசப்புகளை மாற்றும். பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும்.
இருப்பினும் ராகு–கேதுக்கள் முறையான நற்பலன்களை முன்னேற்றம் தரும் விதத்தில் வழங்க சர்ப்ப சாந்தி பரிகாரங்களை நீங்கள் செய்து கொள்வது நல்லது. சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று பரிகாரம் செய்வதே நல்லது.

சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு!
புத்தாண்டில் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. குருவின் ஆதிக்கம் உங்கள் ராசிநாதனுக்குப் பகைவனாக இருப்பதால் அது பார்க்குமிடத்தைப் பலன்தரும் இடமாக மாற்றிக்காட்டி விடும். அந்த அடிப்    படையில் ஜூன் 13–ந் தேதி நிகழவிருக்கும் பெயர்ச்சியால் 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகின்றது. எனவே திருமண வாய்ப்புகள் கைகூடவில்லை என்று ஏங்கியவர்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் விதத்தில் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். திருமணம் முடிந்து ஒற்றுமையில்லாமல் பிரிந்து இருந்த தம்பதியர்கள் மீண்டும் இணைந்து மகிழ்ச்சிக் கடலில் மிதப்பீர்கள்.
அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலம் தரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கண்ணியமிக்க மனிதர்கள் உங்கள் காரிய வெற்றிக்கும், கவலை தீருவதற்கும் உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர் வழிப் பிரச்சினைகள் பெரிதாகி விட்டதே என்று கவலைப்பட்டவர்கள் உற்றார், உறவினர்களும், உடன் பங்காளிகளும் உறுதுணையில்லாமல் போய்விட்டார்களே என்று நினைத்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சி காணும் விதம் நல்ல மாற்றங்கள் வந்து சேரப் போகிறது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும்.
பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்தி மகிழ்வீர்கள். குற்றாலம், கொடைக்கானல் என்று உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகும். ஒரு காலத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகாமல் தடுமாறிய நீங்கள் இப்பொழுது பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா? என்று யோசிக்கப் போகிறீர்கள். வாகனங்கள் வாங்கும்போது அதிர்ஷ்ட எண்களின் ஆதிக்கத்தில் வாங்கினால் அதை ஓட்டிச் செல்லும் இடங்களில் உன்னத பலன் கிடைக்கும். முறையான குரு வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.
=========================================================================

மிதுன ராசி :

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

குருப் பெயர்ச்சிக்குப் பிறகு  குதூகலம்  அதிகரிக்கும்!

ஆற்றல் மிக்கவர்களை பின்னணியாகக் கொண்டு காரியங்களை செய்து முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஆண்டு தொடங்கும் பொழுதே, குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 5, 12–க்கு அதிபதியான சுக்ரனும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்.
இதற்கிடையில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்து சூரிய சந்திர சேர்க்கையோடு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு முத்தான பலன்களை குருப்பெயர்ச்சிக்குப் பின்னரே வழங்கும்.
முப்பெரும் கிரகங்களான குரு, ராகு–கேது, சனி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சர்ப்ப சாந்தி பரிகாரத்தை ராகு–கேதுக்களுக்கும், ஒப்பற்ற குருவிற்கு அறுபத்துமூவர் வழிபாட்டையும், வரப்போகும் அர்த்தாஷ்டமச் சனிக்கு அனுமன் வழிபாட்டையும் நீங்கள் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்லலாம்.
பொதுவாக நீங்கள் எல்லோரிடமும் இனிமையாக பழகுவீர்கள். இயல்பாகவே சாதுர்யமும், உங்கள் பேச்சில் கலந்திருக்கும். பிறரைப் புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்து விடுவீர்கள். வசிய சக்தி மிகுந்த எண் ஆதிக்கமான ‘5’–க்கு உரிய புதன் உங்கள் ராசிநாதனாக இருப்பதால் பஞ்சாயத்துக்களில் மட்டுமல்ல, பழகும் நண்பர்களும் உங்கள் சொல்லிற்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
உடல் உழைப்பைக் காட்டிலும் சிந்திக்கும் மூளை உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள். பொல்லாதவர்களையும் நல்லவர்களாக மாற்றும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
2014–ம் ஆண்டு கேதுவுக்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் வருவதால் உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பாதசார பலம் மற்றும் ராசிநாதன் புதன் தனாதிபதி ஆகியவற்றின் பலமறிந்து, பாக்யாதிபதியின் நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். அந்த சமயத்தில் அர்த்தாஷ்டம ராகுவிற்கு பரிகாரமாக நாக சாந்தியும் செய்வது நல்லது. அப்        பொழுது தான் தடைகளும் அகலும். தனவரவும் பெருகும்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்து குரு வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். எனவே, குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளை சிறப்பாக முடித்துக்கொடுப்பர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பூமி விற்பனையால் கிடைக்கும் தொகையைக்கொண்டு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன்கருதியும், கல்யாண வாய்ப்பு, கடல் தாண்டும் முயற்சி கருதியும் தொகை ஒன்றைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
கேதுவின் முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிற பொழுதே நல்ல மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று வருட தொடக்கத்தில் வழிபட்டு வருவது நல்லது.

6–ம் இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி!
இதுவரை உங்கள் ராசிக்கு 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இவ்வருடக் கடைசியில் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 8–க்கு அதிபதி 6–ல் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத விதத்தில் சில நல்ல பலன்களும் உங்களுக்கு வந்து சேரப் போகிறது. திடீரென காரியங்கள் கைகூடி திக்குமுக்காட வைக்கும்.
உத்தியோகம், தொழிலில் உன்னத நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளுக்கு உறவினர்கள் கைகொடுத்து உதவுவர். அரசு பணி எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். கலைத்துறையில் உள்ளவர்கள் கவுரவிக்கப்படுவர். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். 

குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
இந்த வக்ர காலமே உங்களுக்கு  பொற்காலமாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வருங்கால நலன் கருதி தீட்டும் திட்டங்களுக்கு முக்கியப் புள்ளிகள் முன் வந்து உதவுவர்.  குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடி வரும். சனியின் வக்ர காலத்தில் ஆரோக்கியம் சீராகும்.  9–ம் இடத்திற்கும் சனி அதிபதி என்பதால் பொன், பொருட்களும் விரயமாகும். உங்களின் அனுசரிப்பே ஆதாயத்தைக் கொடுக்கும்.

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் ஆண்டாக அமையப் போகிறது. வருடத் தொடக்கத்தில் உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். உச்ச குருவின் ஆதிக்கம் வந்த பின்னால் ஜூன் மாதத்திற்கு மேல் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உறவைப் பகையாக்கியவர்கள் உங்களை விட்டு விலகுவர். கறவை மாடுகள், காடு, கழனி என்றெல்லாம் வாங்கும் வாய்ப்பு உண்டு. அடிமைத் தொழில் மாறி சுய தொழில் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் பெற்றோர்களையும், தாய்வழி உறவினர்   களையும் அனுசரித்துச்செல்வது நல்லது. அர்த்தாஷ்டமச் சனி ராகுவிற்கு பரிகாரமாக துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சர்ப்ப சாந்தி பரிகாரத்தை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை தோறும் விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தாமரைப் பூமாலை சூட்டி சங்கு சக்கரதாரியை வழிபட்டால் சேமிப்பு உயரும். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு மதுரை மேலூர் அருகிலுள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சகல யோகங்    களையும் வரவழைத்துக் கொள்ள இயலும்.

அர்த்தாஷ்டம ராகுவும், பத்தாமிடத்து கேதுவும்!
பாம்பு கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் ராகுவும், கேதுவும் இந்தப் புத்தாண்டில் பெயர்ச்சியாகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை ராகு பகவான் அர்த்தாஷ்டம ராகுவாகவும், கேது பகவான் தொழில் ஸ்தான கேதுவாகவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினைகள் உருவாகலாம். கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
இந்த நிகழ்வு ஜூன் 21–ம் தேதி ஏற்படும் ராகு–கேது பெயர்ச்சியின் விளைவால் உருவாகப் போகிறது. இருந்தாலும் ராகுவின் பரிபூரண பார்வை தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானம், எதிரிகளின் ஸ்தானத்திலும் பதிவதால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க வழிபிறக்கும். வருமானப் பெருக்கத்திற்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். தொழிலில் லாபம் வந்து கொண்டேயிருக்கும். கேதுவின் பலத்தால் தலைமைப் பொறுப்புகள் தானாக வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.  கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்பட வழிபிறக்கும். வாட்டங்கள் அகலவும், வளர்ச்சி கூடவும் சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் சார பலமறிந்து சர்ப்பசாந்திகளை முறைப்படி செய்தால் சந்தோஷங்கள் வந்து சேரும்.

உச்ச  குருவின்  சஞ்சாரம்!
புத்தாண்டில் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. எல்லா குருப்பெயர்ச்சியையும் விட இந்த ஆண்டு பெயர்ச்சியாகும் குரு முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் 12 ஆண்டுக்கு ஒருமுறை கடகத்தில் உச்சம் பெறும் குரு இப்பொழுது கடகத்தில் நுழைகிறார். எனவே, ஆன்மிகமும், அறிவியலும் தழைத்தோங்கப் போகும் இந்த நேரத்தில் உங்கள் ராசியைப் பொறுத்தவரை 7, 10–க்கு அதிபதியான குரு, தன ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.
எனவே, பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தினம் ஒரு நல்ல தகவல் வந்து கொண்டேயிருக்கும். மனம்போனபடி எல்லாம் சென்ற உங்கள் குழந்தைகள் இனி உங்கள் சொல்லிற்கு மதிப்புக்    கொடுப்பர். தனவரவு  தாராளமாக வந்து சேரும். தக்க விதத்தில் தொழில் வளம் கைகூடும். மண முறிவு ஏற்பட்டு பிரிய நினைத்த தம்பதியர் கூட மறுபடியும் சேர்ந்து வாழ முன்வருவர்.
கடன் சுமை தீரும். கவலைகள் ஓயும். உடல் நலம் சீராகும். மனதில் உறுதி ஏற்படும். மண், பூமி சேர்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மாடு, கன்று வாங்குவதில் கூட ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் பணிபுரிவர். நோயில் இருப்பவர்கள் நோய் நீங்கி குணம் பெறுவர்.
உறவினர் பகை மாறும். தொழிலில் எதிர்பார்த்த     படியே லாபம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அற்புத பதவி வந்து சேரும். இக்காலத்தில் குரு தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். திசைமாறிய தென்முகக் கடவுள் எங்கெல்லாம் இருக்கிறதோ அவற்றை கண்டறிந்து வாய்ப்பிருக்கும் பொழுது வழிபட்டு வருவது நல்லது.
========================================================================

கடக ராசி :
 
புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

உச்ச குரு  உன்னத  வாழ்விற்கு  வழிகாட்டும்!

தேசமெங்கும் செல்வாக்குப் பெற்று வாசமலராய் வாழும் கடக ராசி நேயர்களே!

ஆசையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு இப்பொழுது அடியெடுத்து வைக்கிறது. உங்கள் யோசனைகள் வெற்றிபெறும் விதத்தில் உங்களது ராசியிலேயே குருவும் உச்சம் பெறுகிறது. மங்கல மேளம் இல்லத்தில்      முழங்கும்.  மாபெரும் சபைகள் உங்களை அழைக்கும். தங்கமும், வெள்ளியும் தடையின்றி வந்து சேரும்.
வங்கக் கடல்போல வாய்த்த மனம் பெற்ற உங்களுக்கு ஞானகாரகன் கேதுவிற்குரிய எண் ஆதிக்கத்தில் பிறக்கும் புத்தாண்டில் வருடத் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் குரு வீற்றிருக்கிறார். அதுவும் வக்ர இயக்கத்தில் வளமான பார்வையை வழங்குகிறார். அதே நேரத்தில் 6–ம் இடத்தில் ஆதித்தனும், அம்புலியும், புதனும் சஞ்சரிக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டில் உச்ச குருவின் ஆதிக்கத்தால் உன்னத வாழ்வு அமையப் போகிறது.
பொதுவாக நீங்கள் சிந்தித்து செயல்படுவீர்கள். கலா ரசனை மிக்கவர்கள்.  உங்கள் பேச்சு மற்றவர்களை மயக்கும். இருந்தாலும் உங்கள் மீதும், உங்கள் திறமையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்காது. எனவே யாராவது ஒருவரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டுதான் பிரகாசமான எதிர்       காலத்தை அமைத்துக் கொள்ள         முடியுமென்று நினைப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்கள் முழுமனதோடு செய்ய நினைத்தால் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இல்லையென்றால் அரைகுறையாக செய்து விட்டு அப்படியே வந்துவிடுவீர்கள்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டத்தையும், ஒப்பிட்டுப் பார்த்து பலன்களைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், தனாதிபதி சூரியனுடன் இணைந்து 6–ல் சஞ்சரிக்கிறார். அதோடு விரயாதிபதி புதனுமல்லவா சேர்ந்திருக்கிறார். எனவே, பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவு நடைகள் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.
அந்நிய தேசத்திற்கு வேலை வாய்ப்பை தேடிச் சென்றவர்கள் அங்கு வேலை கிடைக்காமல் தாய் நாடு திரும்பலாம். 6–க்கு அதிபதி குரு வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா என்பது சந்தேகம்தான்.
செவ்வாய் ஆதிக்கத்தால் உடன்       பிறப்புகளின் வழியே ஒரு நல்ல வாய்ப்பு தேடி வரும். அரசு வழிச் சலுகைகளில் தாமதம் ஏற்படலாம். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். சுக்ரன் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் பெண் வழிப்     பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பெற்றோர் வழியில் இருந்த மனஸ்தாபங்கள் மாறும். என்ன இருந்தாலும் குருப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வருடத் தொடக்கத்தில் விநாயகப் பெருமான் வழிபாடும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடும்,  பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவதும் நல்லது.

விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வாசம் செய்த சனிபகவான் இந்த வருடம் கடைசியில் 5–ம் இடமான விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி புத்திர விருத்தியை ஒருசிலருக்கு உருவாக்குவார்.  பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் வெளிநாட்டு முயற்சிகளில் ஒரு சிலருக்கு வெற்றி கிடைக்கும். வீடுமாற்றம், வாகன மாற்றம், செய்ய தகுந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
குரு உங்கள் ராசிக்கு 6,9–க்கு அதிபதியாகிறார். சனி உங்கள் ராசிக்கு 7, 8–க்கு அதிபதியாகிறார். எனவே, இந்த வக்ர காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இரண்டு கிரகத்திற்கும் ஓரிடத்தின் ஆதிபத்யம் நல்ல இடத்தின் ஆதிபத்யமாக இருக்கிறது. எனவே குடும்பத்தில் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். கட்டிடங்கள் கட்டி வைத்தும் குடியேற முடியவில்லையே என்ற கவலை ஏற்படும்.

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுக்கப் போகிறது. உச்சம் பெறும் குருவால் உன்னத வாழ்க்கை அமையும். ஜூன் மாதம் வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கூட கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், மேலதிகாரிகளின் அனு      கூலமும் கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். ஒற்றுமை பலப்படும். ஆன்மிக நாட்டம்அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சி காலத்தில் கூடுதலாக கவனம் தேவை. சர்ப்ப கிரக வழிபாடு சந்தோஷத்தை நிலையாக வைத்துக் கொள்ள வழிகாட்டும். ராகு–கேது பெயர்ச்சி காலத்தில் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தாய்வழி ஆதரவு கிட்டும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சந்திரன் என்பதால் திங்கள் தோறும் சாந்த ரூப அம்பிகையை வழிபட்டு வாருங்கள். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு யோக பலம்பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் இரணியூரிலுள்ள ஆட்கொண்ட நாதர், சிவபுரம் தேவியை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

நலம்  தரும்  ராகு–கேது  பெயர்ச்சி!
இதுவரை அர்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்தவர் இந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். முன்னேற்றம் தரும் இடமான மூன்றில் ஜூன் 21 முதல் தனது பின்னோக்கிச் செல்லும் பயணத்தை மேற்கொள்ளப் போகிறார். அதே நேரத்தில் 9–ம் இடத்தில் மீன ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றங்கள் கூடும். தொழில் வளர்ச்சிக்கு தொகை வந்து கொண்டேயிருக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.
இல்லத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடப்பதில் தாமதம் ஏற்படுகிறதே என்று கவலைப்பட்டவர்கள் இனிக் கவலைப்பட தேவையில்லை. கை கொடுத்துதவும் நண்பர்கள் உங்கள் கவலை தீர வழிவகுப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் உருவாகலாம். கேது பலத்தால் தந்தை வழி உறவில் சிறிது விரிசல்கள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்து விட்டுப் புதிய சொத்துக்களை வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடுதல் லாபம் தொழிலில் வந்து சேரும். எனவே, ஆடம்பரச் செலவுகளை அதிகம் செய்வீர்கள். ஆபரண சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.
ராகு–கேதுக்கள் முறையாக நற்பலன்களை வழங்க முறையாக நீங்கள் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
புத்தாண்டில் உங்கள் ராசியில் குரு உச்சம் பெறப்போகிறார். இந்த ஆதிக்கம் ஜூன் 13–ம் தேதி முதல் நிகழவிருக்கிறது. ஜென்ம குருவின் ஆதிக்கமாக இருந்தாலும் கூட 9–ம் இடத்திற்கு அதிபதியான குரு உச்சம் பெறும் பொழுது, பொன், பொருட்கள் வந்து சேரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அண்ணன் தம்பி பகை மாறும். எப்பொழுதோ கொடுத்த கடன்கள் இப்பொழுது வசூலாகும்.
பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். மதி நுட்பத்தால் மகத்தான காரியங்கள் பலவற்றையும் செய்து சாதனையாளர்களின் விருதுகளைப் பெருமளவு பெறப் போகிறீர்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதோடு, அனுகூலம் தரும் நாளில் திசைமாறிய தென்முகக் கடவுளையும் வழிபட்டு வந்தால் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கைப் பாதை அமையும்.
குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களிலும் பதிவதால் அந்த இடங்களெல்லாம் புனிதமடையப் போகின்றது. குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் இனி, கோடி நன்மைகள் கிடைக்கும். வாடிய மனம் இனி மகிழ்ச்சி காணும். தேடிய நற்பலன்களெல்   லாம் இல்லம் தேடி வரும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.
கல்யாண வாய்ப்புகள் கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிரிந்த தம்பதியர் வந்திணைவர். பிரச்சினைகள் அனைத்தும் நல்ல முடிவிற்கு வரும். வழக்குப் போட்டவர்கள் வாபஸ் பெறுவர். வாரிசுகளுக்கு கூட வெளிநாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். சுறுசுறுப்போடும், விறுவிறுப்போடும் செயல்பட்டு சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாகனம் புதிதாக வாங்கும் வாய்ப்பு கிட்டும். அங்ஙனம் வாங்கும் சூழ்நிலை அமைந்தவர்கள் அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் வாங்கினால் அதை எடுத்துச் செல்லும் இடங்களெல்லாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலும்.
 ======================================================================

 சிம்ம ராசி

மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

கன்னி–ராகு  எண்ணியதை  முடித்து  வைக்கும்!

கரும்பின் சுவை போன்ற பேச்சும், எறும்பின் சுறுசுறுப்பும் கொண்டு இயங்கும் சிம்ம ராசி நேயர்களே!

புதிய வருடம் பிறக்கப் போகிறது. பொன்னான வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரப் போகிறது. புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும் விதத்தில் கிரக நிலைகள் உலா வருகின்றன. புகழேணியின் உச்சிக்கு செல்ல இருக்கிறீர்கள்.
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 5–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி புதனும், விரயாதிபதி சந்திரனும் இணைந்திருக்கிறார்கள். அந்த ஸ்தானத்தைக் குரு பார்க்கிறார். எனவே வருடத் தொடக்கத்திலேயே வருமானம் அதிகரிக்கும். என்றாலும் வந்த மறுநிமிடமே செலவாகிவிடலாம்.
யோகம் தரும் செவ்வாய் 2–ல் சஞ்சரிப்பதால் இடம், பூமியால் லாபம் கிடைக்கும். மறைமுகப்பகை மாறி மகிழ்ச்சியை விளைவிக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்          களுக்கு அதிகப் பொறுப்புகள் வந்து ஆட்கொள்ளும்.
நினைத்தால் நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய வேண்டுமென்று சொல்வீர்கள். முன்கோபம், உங்களுக்கு முன்னேற்றத்தையும் கொடுக்கும். முட்டுக் கட்டையாகவும் இருக்கும்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தனாதிபதி புதனுடன் இணைந்து 5–ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே, பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டு. தொல்லை தரும் எதிரிகள் விலகுவர். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் பெருகும்.
விரயாதிபதியாக விளங்கும் சந்திரன் வருடத் தொடக்க நாளில் 5–ம் இடத்தில் சஞ்சரித்து குருவால் பார்க் கப்படுகிறார். எனவே, நீண்ட நாட்களாக முடிவடையாத சுபகாரியப் பேச்சுக்கள் இப்பொழுது திடீரென முடிவாகும்.
தொழில் ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். இதுவரை ஏமாற்றத்தையே அறிந்திராத நீங்கள் இப்பொழுது ஏமாற்றம் காண நேரிடும். பெண் வழிப்பிரச்சினைகள் தலை தூக்கும்.
உடன்பிறப்புகள் ஏறுக்கு மாறாகப் பேசி இதயத்தை வாட வைக்கலாம்.  தொழில் கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதியவர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.
வருடத் தொடக்கத்திலேயே சகாய ஸ்தானத்தில் ராகுவும், பிதுரார்ஜித ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் இருக்கும்.
உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாக உயர்நிலையில் இருக்க அனுகூலம் தரும் அரவு கிரக கோவில்களைத் தேர்ந்தெடுத்து, எண்ணங்களை நிறைவேற வைக்கும் இனிய நாட்களில், பரிகாரங்களைச் செய்து வந்தால் பலன்கிடைக்கும்.

விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்தப் புத்தாண்டில் அர்த்தாஷ்டம சனியாக அடியெடுத்து வைக்கிறார். 6–க்கு அதிபதி மற்றும் 7–க்கு அதிபதியாக விளங்கும் சனி நான்கில் சஞ்சரிக்கும்பொழுது, கொஞ்சம் கூடுதலாக கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக தொல்லைகள் உருவாகும். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
தொழிலில் நண்பர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். குடும்ப பிரச்சினைகள் அதிகரித்து மனநிம்மதியின்மை ஏற்படுகிறதே என்று நினைத்து கவலைப்படுவீர்கள்.  பொருளாதாரத்தில் சரளமான நிலை இருந்த போதும், வாங்கிப் போட்ட சொத்துக்களை எல்லாம் இப்பொழுது விற்பனை செய்ய முன்வருவீர்கள். வரவைக் காட்டிலும், செலவு கூடும் இந்த நேரத்தில் வாகனங்களையும் மாற்றிக் கொள்வது நல்லது. வாகனப் பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் நிலையங்களை வேறு இடத்திற்கு மாற்ற முன்வருவீர்கள்.

குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குருவும் வக்ரமாகிறார், சனியும் வக்ரமாகிறார். இந்த வக்ர இயக்கத்தால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இரண்டு கிரகங்களும் இரண்டு இடத்து ஆதிபத்யங்களையும் கொண்டிருப்பதால் ஒன்றின் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். மற்றொரு ஆதிபத்யம் சிறப்பாக இயங்க வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக குடும்ப ஒற்றுமை குறையலாம். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் உருவாகலாம். பிள்ளைகள் உங்கள் சொல்லை மீறி எதுவும் செய்யலாம். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்வீர்கள்.

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா வகையிலும் வளர்ச்சியைக் கொடுக்கும். நல்ல வாய்ப்புகள் நாளும் வந்து சேரும். குழந்தைச் செல்வங்   களால் பெருமை ஏற்படும். கொடுக் கல்–வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். உச்ச குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4–ம் இடமான சுக ஸ்தானத்தில் பதிவதால் ஜூன் 13 முதல் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். தடைகள் அகலும். உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் மரியாதை கிடைக்கும். தலைமைப் பதவிகள் முதல் தக்க விதத்தில் பொது நலவாழ்வில் புகழ் கூடும்.
ஆண்டின் கடைசியில் சனிப் பெயர்ச்சிக்குப் பின்னால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாக அமைகிறது. எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் எதிரிகளின் குறுக்கீட்டால் தடைகள் உருவாகும். வருடத் தொடக்கத்தில் குடும்ப ஒற்றுமை பலப்பட்டாலும்,      வருடக்கடைசியில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கணவன்–மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமலிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. வைரவர் வழிபாடு, முறையான சர்ப்ப சாந்தியும் செய்தால் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சூரியன் என்பதால் ஞாயிறு தோறும் உமாமகேஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வருவதும் நன்மை தரும். பிறந்த தேதி அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு, சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியிலுள்ள மார்த்தாண்ட வைரவரையும் வளரொளிநாதர், வடிவுடையம்மனையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

நலம்  தரும்  ராகு–கேது  பெயர்ச்சி!
இதுவரை 3–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இந்த புத்தாண்டில் தன ஸ்தானம் எனப்படும் 2–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே ஜூன் 21–ம் தேதிக்கு மேல் சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். சுற்றத்தார் போற்றுமளவு முன்னேற்றம் வந்து சேரும். செல்வந்தர்களின் வரிசையில் இடம்பிடிப்பீர்கள். செல்வாக்கும் அதிகரிக்கும்.
கடன்களை எல்லாம் கொடுத்து விட்டு கண்ணியமாக வாழ வேண்டுமென்று விரும்புவீர்கள்.  நாளும், பொழுதும் நல்ல தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு திட்டமிட்டபடியே வேலை கிடைக்கும்.
கேதுவின் பலத்தால் அலைச்சல் அதிகரிக்கலாம். அஷ்டமத்து கேது என்பதால் ஆதாயம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். மனதில் இனம் புரியாத கவலை மேலோங்கும். தெய்வத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். கடல் தாண்டும் முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் தொல்லையால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். முன்னேற்றத்தை முறையாக வரவழைத்துக் கொள்ள ராகு–கேதுக்களுக்கு பிரீதி செய்வது நல்லது.

குருப் பெயர்ச்சிப் பலன்கள்!
புத்தாண்டில் குரு உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
பஞ்சம, அஷ்டமாதிபதியான குரு உச்சம் பெறும் பொழுது பிள்ளைகளுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. எனவே, அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாடு சென்று படிப்பைத் தொடர விரும்பும் பிள்ளைகளுக்கு பெரும் தொகையொன்று செலவிட வேண்டிய சூழ்நிலை சிலருக்கு ஏற்படும். திருமண வயதடைந்த பெண் குழந்தைகளுக்கான கல்யாணப் பேச்சுக்கள் கைகூடும்.
குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். மக்கட் செல்வங்களால் உதிரி வருமானங்கள் பெருகும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். இடம், பூமி வாங்கியதில் இருந்த பத்திரப் பதிவில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
கடைதிறப்பு விழாக்களும், கட்டிடத் திறப்பு விழாக்  களும் செய்து மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் முறையாக வந்து சேரும். மேலதிகாரிகளின் கோபம் மாறும். சென்ற சில மாதங்களாக செயல்பாடுகளில் கிடைக்காத வெற்றி இப்பொழுது கிடைக்கத் தொடங்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு ஒவ்வொரு நாளும்  பயணங்களை மேற்கொள்வீர்கள்.
=====================================================================

 கன்னி ராசி :

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

புத்தாண்டில்  புதுவீடு  வாங்கும்  யோகம்!

வந்து உறவாடும் மாந்தர்களை வாய்ப்பேச்சாலே வசமாக்கும் கன்னி ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பதால் இந்த ஆண்டு எப்படியிருக்குமோ என்ற கவலை இருக்கும்?. கவலை வேண்டாம், பணப்புழக்கம் அதிகரிக்கும் விதத்தில் கிரக நிலைகள் சஞ்சரிக்கின்றன.
வருடக் கடைசியில் சனி விலகுகிறது. என்றாலும், கொஞ்சம் முன்னதாகவே நல்ல பலன்களைக் கொடுக்கத் தொடங்கி விடும். நண்பர்களால் பலவித நல்ல செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கின்றார். அடுத்து குரு பகவான் 10–ல் வக்ரம் பெற்று விளங்குகிறார்.
ராசிநாதனும் பலமிழந்து விரயாதி    பதியுடனும், லாபாதிபதியுடனும் இணைந்து வருடத் தொடக்கம் உருவாகிறது. இப்படி பிறக்கும் புத்தாண்டில் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய குருப்பெயர்ச்சியும், ராகு–கேது பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியும் வழிகாட்டுகிறது.
உங்களைப் பொறுத்தவரை சிந்தனை ஆற்றல், சொல் வளம், செயல்பாடுகளில் ஈடுபாடு ஆகிய மூன்றும் இணைந்திருப்பதால்தான் வெற்றி உங்கள் வீடு தேடி வருகிறது. சில பெரிய மனிதர்கள் கூட செய்யமுடியாத சில காரியங்களை நீங்கள் செய்து பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கலை, இலக்கியம் உங்களுக்குப் பிடிக்கும். கலகலப்பை எப்பொழுதும் கூடவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்திருக்கிறார். அவரோடு லாபாதிபதியும், விரயாதிபதியும் இணைந்திருக்கிறார்கள். எனவே, வரவு திருப்திகரமாக வந்தாலும் செலவு நடைகள் கூடுதலாகவே இருக்கும். வழக்கமாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் இப்பொழுது செலவு அதிகமாக வருகிறதே என்று கவலைப்படுவீர்கள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலகலாம்.
3, 8–க்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. உடன் பிறப்புகளையும், உடன்இருப்பவர்களையும் நம்பி செயல்பட்டு சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். ஆயினும் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். காரணம் குருவின் வக்ர இயக்கம் தான். குரு 4, 7–க்கு அதிபதியாகி 10–ல் வக்ரம் பெறும்பொழுது ஓரளவு நன்மைகளை வழங்கும்.
தக்க விதத்தில் அஞ்சல் வழித் தகவல் வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பணப்புழக்கத்தை பொறுத்த வரை 2–க்கு அதிபதி சுக்ரன் வக்ரம் பெற்றிருப்பதால் கொடுத்த கடன்கள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை விற்கவும் நேரிடும்.
வலிமை இழந்திருக்கும் புதனை திருப்திப்படுத்த புதன்கிழமை தோறும் விரதமிருந்து விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நலம் தரும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பிறகு தடைகளும், தாமதங்களும் அகலும். கடைதிறப்பு விழாக்களும், கட்டிடப்பணியும் தொடரும் வாய்ப்புகளை ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் உருவாக்கும். இந்த ஆண்டில் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு சந்தோஷம் கிடைக்க வேண்டுமானால் ஒப்பற்ற ராகு–கேதுக் களுக்கு நீங்கள் பலன் தரும் பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.

விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்தப் புத்தாண்டில் 3–ம் இடத்தில் சஞ்சரித்து முன்னேற்றத்தை வழங்கப் போகிறார். ஏழரைச் சனி விலகப் போகிறது. இனி ஏராளமான நல்ல செய்திகள் உங்களை நாடிவரப் போகின்றது.
சனி விலகும் சமயத்தில் சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வன்னி      மரத்தடியில் வீற்றிருந்து அருள்வழங்கும் சனீஸ்வர பகவான் இருக்கும் பெரிச்சிக் கோவில் போன்ற ஸ்தலங்களுக்கெல்லாம் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வரலாம்.
குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும்!
புத்தாண்டில் குருவும் வக்ரமாகிறார், சனியும் வக்ரமாகிறார். 4, 7–க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மையையே வழங்கும். வீடுகட்டிக் குடியேறும் வாய்ப்பும், வியக்கும் விதத்தில் வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பும் கிட்டும். தொழில் வளர்ச்சியைக் கூட்டும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழப்போகிறீர்கள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய திருப்பங்களை உருவாக்குவார்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். சனியின் வக்ரம் நன்மையும், தீமையும் கலந்ததாகவே இருக்கும். எதிரிகள் சரணடைவர். பிள்ளைகள் வழியில் பிரச்சினையும், உறவினர்களால் விரயங்களும் ஏற்படலாம்.

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு!
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பெருமை சேர்க்கும் ஆண்டாக அமையப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு வக்ரம் பெறுவதால் தாய்வழி ஆதரவு பெருகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் இடமாற்றம், வீடு மாற்றங்களை ஒருசிலர் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்யாணக்     கனவுகள் நனவாகும். கணவன்–மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் விலகும்.
ஏழரைச் சனி விலகும் இந்த ஆண்டு ஒரு இனிய ஆண்டுதான். மாபெரும் கிரகங்கள் விலகுவதற்கு முன்னதாகவே சில நல்ல பலன்களை கொடுத்து விடும். அந்த அடிப்படையில் உத்தியோகம், தொழிலில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடிவரும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் சில திடீர் மாற்றங்கள் உருவாகலாம். அவை நல்ல மாற்றங்களாக அமைய முன்னதாகவே சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வது நல்லது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை தோறும் விஷ்ணு ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. பிறந்த தேதி அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள தென்திருப்பதி என்று சொல்லப்படுகின்ற அரியக்குடியிலிருந்து அருள்வழங்கும் விஷ்ணுவையும், இலக்குமியையும் வழிபட்டு விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

நன்மை தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இந்தப் புத்தாண்டு 2014 ஜூன் 21 முதல் சொல்லைச் செயலாக்கும் விதத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது சர்ப்பதோஷம் உருவாகிறது. எனவே, குடும்பத்தில் குழப்பங்களும், உடன் இருப்பவர்களால் மனக்கசப்பும் வரும். காரியத்தடை அகலவும், காசு பணப்புழக்கம் அதிகரிக்கவும், முறையாக சர்ப்பசாந்தியை செய்வதே நல்லது.
பொதுவாக ஜென்ம ராகு வளர்ச்சியையும், தளர்ச்சியையும் மாறி, மாறிக்கொடுப்பார். பக்குவமில்லாதவர்களின் பழக்கம் சிக்கல்களை உருவாக்கும். இருந்தாலும் அஷ்டமத்து கேதுவின் மாற்றமே உங்களுக்கு அதிகபட்சமான நன்மையை வழங்கும். சிந்தித்து செயல்பட்டால் சிறப்புகள் வந்து சேரும். கூட்டாளிகள் பக்கபலமாக இருந்தாலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. வீட்டில் உள்ளவர்களையும் கொஞ்சம் அனுசரித்துச் சென்றால் அமைதிகாண இயலும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வர். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். இதுபோன்ற காலங்களில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு பலன் தரும்.

மகிழ்ச்சி  தரும்  குருப்பெயர்ச்சி!
புத்தாண்டில் குரு உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கப் போகிறார். லாப ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவது நன்மைதான். அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சகோதர வழி ஒற்றுமையைக் கூட்டும். இதுவரை முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருந்த சகோதரர்கள் இப்பொழுது உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
தூரதேசத்திலிருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். தொழிலில் எதிர்பார்த்த படியே லாபம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சகோதர வர்க்கத்தினர் பாகப் பிரிவினைகளைச் செய்து கொள்ளும் பொழுது, கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். குழந்தைகளின் முன்னேற்றத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள்.
 ஒரு சில குழந்தைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை தெரிவிப்பர். அதைச்செயலாக்குவதில் மும்மரமாக இருப்பீர்கள்.
குடும்ப ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற வாழ்க்கைத் துணை பிரியமில்லாமல் இருக்கிறாரே என்று நினைத்தவர்கள் குருவின் பரிபூரண பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் அன்யோன்ய உறவுக்கு ஆளாகி அழகிய வாரிசும் பெற்றெடுப்பர். வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த தடை அகலும். விரும்பும் விதத்தில் உங்களுக்கு உத்தியோக மாற்றங்களும், ஊதிய உயர்வும் தானாகவே வந்து சேரும். இட விற்பனை உங்கள் கடன் சுமை குறைய வழிகாட்டும்.
இதுபோன்ற காலங்களில் வியாழன் தோறும் விரதமிருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தென்முகக் கடவுளுக்குரிய சிறப்பு ஸ்தலங்களில் திசைமாறிய தென்முகக் கடவுளை தேர்ந்தெடுத்து வழிபட்டு வருவது நல்லது. குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும்.
=====================================================================

துலாம் ராசி :
 
சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)
விலகப் போகிறது  ஜென்மச் சனி!

ஒப்பனை செய்து கொள்வதிலேயே எப்பொழுதும் விருப்பம் கொள்ளும் துலாம் ராசி நேயர்களே!

இப்பொழுது வரப்போகிற புத்தாண்டு உங்களுக்கு ஏராளமான நற்பலன்களை வழங்கப் போகின்றன. காரணம் சனியின் ஆதிக்கம் வருடக் கடைசியில் விலகுகிறது. ஜென்ம ராகுவும் 12–ம் இடத்தை நோக்கிச் செல்கிறது. சப்தம கேது 6–ல் சஞ்சரிக்கப் போகிறார். இதற்கிடையில் 10–ல் குரு பெயர்ச்சியானாலும் கூட அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கப் போகிறது. எனவே இந்தப் புத்தாண்டு பொன்    கொழிக்கும் ஆண்டாக அமையப் போகிறது.
ஜென்மச் சனியின் ஆதிக்கமும் விரய ஸ்தானத்தில் செவ்வாயின் பலமும் கூடுதலாக உள்ளது. தனாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெற்றிருக்கிறார். ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.
பொதுவாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் உடலை அலங்கரித்துக்கொள்வதிலும், உன்னதமாகப் பேசி மற்றவர்கள் மனதைக் கவர்வதிலும் கெட்டிக்காரராக விளங்குவீர்கள். நல்ல சந்தர்ப்பங்களை விடக்கூடாது என்று நினைப்பீர்கள்.
எதையும் மேலோட்டமாக பார்க்காமல், ஆழ்ந்து பார்ப்பது உங்கள் அதிசய குணம். அடிமைத் தொழில் உங்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் உங்களை அடக்கி வைக்க நினைத்தால் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்து விடுவீர்கள்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படிப்பட்ட பலன் தரும் என்பதை பார்க்கலாம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். எனவே, ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். உழைப்புக் கேற்ற பலன் கிடைக்க வேண்டுமானால் ராசிநாதன் பலம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் குரு வக்ரம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பது ஒரு வழிக்கு நன்மைதான்.
வழக்குகளில் வெற்றி கிட்டும். வளர்ச்சிக்கு வித்திட உறவினர்களும், உடன்பிறப்புகளும் ஒத்துழைப்புச் செய்வர். வீடுமாற்றம், இடமாற்றங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கம் உங்கள் ராசியிலும், 7–ம் இடத்திலும் இருப்பதால் எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாது. எனவே, வருடத் தொடக்கத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
மற்றவர்களின் பேச்சை நம்பி செயல்பட்டு வீண் விரயங்களையும் ஒரு சிலர் சந்திக்க நேரிடும்.

விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்த ஆண்டு கடைசியில் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு மிகுந்த நன்மையை வழங்கும். பொதுவாக ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறும் பொழுது, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடை      பெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். வளமான தொழில் அமைய நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர் பகை அகல எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். இடம், பூமி வாங்கி வீடு கட்டும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. இல்லத்தில் நீண்ட நாட்களாக நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்வுகள் படிப்படியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
ஆரோக்கியத்திற்காக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.

குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
புத்தாண்டில் குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது. பொதுவாகவே ஒரு சில கிரகங்கள் வக்ரம் பெறும்பொழுது நன்மையே செய்யும். ஒரு சில கிரகங்கள் வக்ர இயக்கத்தின் போது செயல்பாடுகளில் கொஞ்சம் தாமதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் ராசியைப் பொறுத்த வரை குருவின் வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் விதத்திலேயே இருக்கும்.
அதே நேரத்தில் சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் குடிகொள்ளும். விரயம் கூடுதலாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகள் வழியிலும் ஏற்பாடு செய்த முயற்சிக்கு இடையூறுகள் வந்து அகலும்.

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு!
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுக்கப் போகிறது. ஜென்மச் சனி விலகப் போகிற நேரம் என்பதால், நன்மையை அதிகம் எதிர்பார்க்கலாம். 10–ல் சஞ்சரிக்கும் குரு பலம் பெறுவதால், முத்தாய்ப்பாக தொடங்கும் தொழிலுக்கு மூலதனம் கிடைக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகம், தொழிலில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம், இலாகா மாற்றம் உருவாகலாம். வெற்றிக்குரிய செய்திகள் வருடக் கடைசியில் வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று கனிவு கூடும். குடும்ப உறவில் குழப்பத்தை உருவாக்கியவர்கள் விலகிச் செல்வர். ராகு–கேது பெயர்ச்சியின் விளைவாக ஒரு சிலருக்கு தூர தேசங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய திருமால், திருமகள், ஆஞ்சநேயர் வழிபாட்டோடு ராகு–கேது பிரீதியும் செய்வது நல்லது.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் பி.அழகாபுரியில் வீற்றிருந்து அருள்வழங்கும் மகிஷாசுர மர்த்தினியின் அவதாரமான பொன்னழகியம்மனை வழிபட்டு பொருள் வளம் பெருகும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசியில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ராகு–கேது பெயர்ச்சி ஜூன் 21–ம் தேதி நிகழவிருக்கிறது. 12–ல் ராகுவும், 6–ல் கேதுவும் மாறப் போகிறார்கள். இதன் விளைவாக வருடத்தொடக்கத்திலேயே நற்பலன்கள் வந்து சேர, யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தியை செய்வது நல்லது.
மறைந்த கேதுவால் நிறைந்த தன லாபம் கிடைக்கும் என்றாலும், விரயங்களும் கூடுதலாகவே இருக்கும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். ஒருசிலருக்கு அந்நிய நாடு, அந்நிய மாநிலங்களுக்கு உத்தியோக ரீதியாக செல்லும் வாய்ப்பு கிட்டும். எதிரிகளின் பலம் குறையும். தொழில் கூட்டாளிகளை மாற்ற முன்வருவீர்கள். புதிய தொழில்தொடங்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தோடு குதூகலப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அருமைப் புதல்வர்களால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். குழந்தைகளின் திருமணத்தை முன்னிட்டு ஆபரணங்களை வாங்க முன்வருவீர்கள். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.

குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெறப் போகிறார். இதுவரை 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இப்பொழுது 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழவிருக்கிறது. 10–ல் குரு வந்தால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகும் என்பது ஒரு நியதி. அவரவர் சுய ஜாதகத்தைப் பொறுத்தும், திசாபுத்தி அடிப்படையிலும் அது நிகழலாம்.
3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கடன்களை வாங்க வைப்பவரும் குரு தான். அதே நேரத்தில் கடன்களை நிவர்த்தி செய்ய வைப்பவரும் குரு தான். எதிர்ப்புகளை உருவாக்குவதும் குரு தான். அந்த எதிரிகளை சம்ஹாரம் செய்ய வைப்பவரும் குரு தான். 10–ல் வந்த குருவை வரவேற்றுக் கொண்டாடி, பதிகம் பாடி வழிபட்டால் முத்தான வாழ்க்கைக்கு முன்னேற்றத்தை வழங்குவார்.
பொதுவாக குரு இருக்குமிடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகமல்லவா? எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, குருவின் பார்வை பதியுமிடங்களான 2, 4, 6 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் தீரும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். சேமிப்பின் மூலம் தங்கம், வெள்ளி ஆபரணங்களையோ, இடம், பூமிகளையோ வாங்க முன்வருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும்.
தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். நடந்து வரும் தொழிலில் ஈடுபாடு குறையலாம். நாகரீக தொழில்களில் மோகம் அதிகரிக்கும். கடந்து வந்த பாதைகளிலிருந்த  குறுக்கீடுகள் அகலும். காலம், காலமாக பகைமை உணர்வோடு விலகியிருந்த உறவினர்கள் இப்            பொழுது உங்களை தேடி வந்து ஆச்சரியப்பட வைப்பர். ரேஸ் குதிரையைப் போல உங்கள் மனவேகம் அதிகரிக்கும். செயல்வேகம் கூடும். திறமை பளிச்சிடும். திசைமாறிய தென்முகக் கடவுளை முறையாக  வழிபடுவது முன்னேற்றத்திற்கு வித்திடும்.
 ======================================================================

 விருச்சிக ராசி :

விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

ஆண்டின்  தொடக்கம் முதல்  அத்தனையும்  யோகம் தான்!

சாதனை படைத்து சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்குப் பெருமைகளைக் குவிக்கும் விதம் அமையப் போகிறது. பார்க்கப் போகும் குருவால் பணவரவு கூடும். பாராட்டும் புகழும் சேரும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி குரு வக்ரம் பெற்று தன ஸ்தானத்தையே பார்க்கிறார். புதனும், குருவும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக விரயாதி       பதியாக விளங்கும் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் ஒன்பதுக்கு அதிபதி சந்திரனுடன் இணைந்து தொடங்கும் இந்த 2014 உங்களுக்கு திரண்ட செல்வத்தையும், திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்கப் போகிறது.
பொதுவாக உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் மனவலிமை அதிகம் படைத்தவர்களாக விளங்குவீர்கள். மகத்தான பலன்தரும் குருபகவான் வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குவதால் வாக்கு பலிதமும், கனவு பலிதமும் உங்களுக்கு உண்    டாகும்.
மூலபலமாக உங்கள் மூளை பலத்தை உபயோகிப்பதால் தான் விரைவில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து வி.ஐ.பி.க்களின் பட்டியலிலும் இடம்பெற முடிகிறது.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படிப்பட்ட பலன் தரும், என்பதைப்பற்றிப் பார்ப்போம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு 2014–ன் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி குரு தன ஸ்தானத்தை பார்க்கிறார். அதுமட்டுமல்ல புதனும், குருவும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே, வருடத் தொடக்கமே வசந்தமாக  இருக்கிறது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக் கும். தொழிலுக்காக அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 
உச்ச சனியின் ஆதிக்கம் உங்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் விதத்திலும், மெச்சும் புகழையும் உயர்த்தும் விதத்திலும் சஞ்சரிக்கிறது. பொங்கு சனியின் ஆதிக்கம் நடப்பவர்களுக்கெல்லாம் மங்கல தகவல் வந்து கொண்டேயிருக்கும். உங்களைப் பொறுத்த வரை சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குகிறார். எனவே சனிக்கிழமை விரதமிருந்து விநாயகப் பெருமானையும், சனி பகவானையும், அனுமனையும் தொடர்ந்து வழிபட்டு வருவது நல்லது.

விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை விரயச் சனியின் ஆதிக்கத்தில் உங்கள் ராசி இருந்தது. எனவே, விரயங்கள் இருக்கிறதே என்று கவலைப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு கடைசியில் ஒரு வழியாக விரயச் சனியின் ஆதிக்கம் நிறைவு பெற்று ஜென்மச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி சகாய ஸ்தானாதிபதி ஆவார். உங்களுக்கு வேண்டிய சகல பாக்கி யங்களையும் சனிபகவான் தான் கொடுப்பவராக விளங்குகிறார். அப்படிப்பட்ட சனிபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அளவற்ற திரவியங்களை அள்ளிக் கொடுப்பார். நிலம், பூமி வாங்கும் யோகமுண்டு.
வீடுமாற்றம், நாடுமாற்றம், இலாகாமாற்றம், வாகன மாற்றம் என்று வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமையும்.
சுக ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.  வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வந்து உதவிக்கரம் நீட்டுவர். வெளியுலகத் தொடர்பு விருத்திக்கும். தாய்வழி ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
இந்தப் புத்தாண்டில் குருவின் வக்ரமும் நிகழ்கிறது. சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது. குரு வக்ர காலத்தில் வாங்கல்–கொடுக்கல்கள் ஒழுங் காக விழிப்புணர்ச்சி தேவை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகள் வழியிலும் மேற்பார்வை செலுத்துவது நல்லது. சனியின் வக்ர காலத்தில் உடன் பிறப்புகளையும், உறவினர்களையும் அனுசரித்துச் செல்லுங்கள். பயணங்கள் அதிகரிக்கும்.இடம், பூமி வாங்குவதிலும் மற்றும் பத்திரப் பதிவுகளிலும் கவனம் தேவை.

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு!
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப்புத்தாண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமையப் போகிறது. முத்தான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடும் விதத்தில் கிரகங்கள் உலா வருகின்றன. குறிப்பாக குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் பொருளாதார நிலை மேலோங்கும். பணமழையில் நனையப் போகிறீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வர். மக்கள் செல்வங்களால் உதிரி வருமானம் கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்    படும். தொழில் முயற்சியில் ஈடுபடுவோருக்கு தேர்ந்தெடுத்த தொழில் எதுவாக இருந்தாலும் அதில் லாபம் கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காற்று வீசும் இந்த நேரத்தில் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிக நன்மை ஏற்படும். வெற்றிப் பாதையில் வீர நடை போடுவீர்கள். தங்கம், வெள்ளி, மற்றும் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தாராளமாக வாங்கி சேர்க்கும் வாய்ப்பு கிட்டும்.
ராகு–கேது பெயர்ச்சியை முன்னிட்டு யோக பலம்பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி பரிகாரத்தை செய்து கொண்டால் தேக நலனும் சீராகும். செல்வ வளமும் பெருகும். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசியில் சந்திரன் நீச்சம் பெறுவதால் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதன் மூலம் பலன் அதிகம் பெறலாம். வார வழிபாடாக ஆனைமுகப் பெருமான், ஆறுமுகப் பெருமான், அனுமன், நந்தீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். பிறந்த தேதிக்குரிய எண் ஆதிக்க நாளும், யோக பலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நேரத்தில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் வீற்றிருந்து அருள் வழங்கும் கற்பக விநாயகரை வழிபட்டு காரிய வெற்றியை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

லாப ஸ்தான ராகு, பஞ்சம ஸ்தான கேது!
இதுவரை உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் ராகுவும், 6–ம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். எனவே, பரபரப்பான வாழ்க்கை உங்களுக்கு அமைந்திருக்கும். இனிமேல் உங்கள் பணத்தேவைகள் பூர்த்தி செய்யும் விதத்தில் ராகு–கேதுக்களின் பெயர்ச்சி அமைகிறது. கன்னி ராகு எண்ணியதை முடித்து வைக்கும். புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று மகிழ்ச்சி காண்பீர்கள். கண்ணியமிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து காரிய வெற்றி காண்பீர்கள்.
லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். நாட்டுப் பற்று மிக்கவர்கள் உங்களோடு இணைந்து செயலாற்றுவர். வீட்டு மனை வாங்கியதில், வீடு கட்டிக் குடியேற வேண்டுமென்ற விருப்பம் நிறைவேறும்.
பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபமுண்டு. புதிய வாய்ப்புகள் அதிகரிக்கவும், பொருளாதார நிலை மேலும் உயரவும் முறையாக யோக ஸ்தலத்தில் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.

குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசி அடிப்படையில் தன பஞ்சமாதிபதியான குருபகவான் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கும் நேரம் ஒரு பொன்னான நேரமாகும். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழ  விருக்கிறது. எனவே இந்தப் புத்தாண்டில் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும், இன்னும் பெருகும். இயல்பாக வளம் கிடைக்கும். மன்னவரும், மந்திரியும், சான்றோர்களும் அன்யோன்ய உறவாகி அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வழிவகுத்துக்கொடுப்பர்.
பலம்பெற்ற குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவது மிகுந்த யோகம் ஆகும். குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்துதவுவர். பட்டி தொட்டிகளில் எல்லாம் உங்கள் புகழ் பரவும். பாராட்டுக்   களையும், விருதுகளையும் குவிப்பீர்கள். உற்றார்,    உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரி யப்படுவர்.
கல்யாணக் கனவுகள் நனவாகும். கார், வண்டி வாகன சேர்க்கைகள் அதிகரிக்கும். ஊரில் ஒரு வீடு கட்டலாம் என்று நினைத்தவர்கள் கூட இரண்டு வீடுகளைக்   கட்டும் வாய்ப்பு உருவாகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழிலுக்கு நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு மூலதனம் தருவர். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்தும் அனுகூலத் தகவல் வந்து சேரும். இக்காலம் ஒரு பொற்காலமாக அமைய திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாரிசு இல்லாத தம்பதியருக்கு வாரிசு உருவாகி மகிழ்ச்சியை வழங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மகத்தான உடல் வாகைப்பெற்று உற்சாகத்தோடு பணிபுரியப் போகிறீர்கள். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும்.
 ==================================================================

 தனுசு ராசி :

மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

வழிபாட்டின் மூலம்  வளர்ச்சி  கூடும் ஆண்டு!

அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் அசகாய சூரர்கள் என்று பெயர் பெற்ற தனுசு ராசி நேயர்களே!

புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகிறது. புத்தாண்டு பிறக்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று உங்கள் ராசியையே பார்க்கிறார். சப்தமாதிபதி புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து பரிவர்த்தனை அடைகிறார்.
புத–ஆதித்ய யோகத்தோடு இந்த புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமான சுக்ரன் வக்ரம் பெறுகிறார். இது நன்மைதான். மறைமுக எதிர்ப்புகள் மாறும். குறை கூறியவர்கள் விலகுவர். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.
10–ல் செவ்வாய் பலம் பெறுகிறார். தனாதிபதி சனி உச்சம் பெற்று, ராகுவோடு இணைந்திருக்கிறார். அதுவும் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது யோகம் தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5–ம் இடத்தில் கேது அமர்ந்து புதிய ஆண்டு பிறக்கிறது. பொதுவாக உங்கள் ராசிநாதன் குரு என்பதால் நேர்மை, நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யும் நல்ல குணம் உங்களுக்கு உண்டு. பாசத்தோடு பழகும் நீங்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நேர்வழியில் செல்ல வேண்டுமென்று எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு 2014–ம் ஆண்டு தொடக் கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுகிறார். எனவே, தேக நலனில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள அதிக செலவு செய்யும் சூழ்நிலை உருவாகும்.  கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருந்தாலும் மன நிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். குரு, புதன் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிப்பதால் மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
சுக்ரனின் வக்ர இயக்கத்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிகள் கைகூடும். மாற்றினத் தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். 10–ல் செவ்வாய் சஞ்சரிப்பது யோகம்தான். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு தலைமைப் பதவியும், புதிய பொறுப்புகளும் வந்து சேரும்.
என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது விற்பனையாகி கணிசமான தொகை கைக்கு வந்து சேரும். ராகு–கேதுக்களின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. வெளிநாட்டுப் பயணங்களை தள்ளி வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உருவாகும்.

ஏழரைச் சனியின் தொடக்க காலம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் சஞ்சரித்து வந்தார் சனி பகவான். புத்தாண்டு கடைசியில் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் தொடங்குகிறது. எனவே இனிய மாற்றங்கள் ஏராளமாக இனி வரப்போகின்றன. புனிதப் பயணங்களும், பொருளாதார நிலை உயர்வும் வரும். மங்கல நிகழ்ச்சிகளில் தங்கு தடைகள் அகலும். தொழில்   மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் உருவாகும் நேரமிது.
ஏழரைச் சனி முதல் சுற்றும், மூன்றாவது சுற்றும் நடப்பவர்கள் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். ஏற்ற பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். பொங்கு சனியின் ஆதிக்கம் நடப்பவர்கள் பொருள் குவிப்பர், புகழ் குவிப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சனி விருத்தியம்சத்தையே உங்களுக்கு கொடுக்கும். தனாதிபதியாகவும் சனி இருப்பதால் இக்காலத்தில் தன வரவு தடையின்றி வந்து சேர சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். சனி கவசம் பாடுவது நல்லது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிச்சிக் கோவில் வன்னிமரத்தடி சனீஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.

குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது.  சில கிரகங்கள் வக்ர காலத்தில் தான் நன்மையைச் செய்யும். பலம் பெற்றிருக்கும் நேரத்தில் பலன் கொடுக்காது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவின் வக்ரம் உங்களுக்கு நன்மை தரும். கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். நண்பர்   களின் ஆதரவு கூடும். தொழிலை   விரிவுபடுத்தப் பார்ப்பீர்கள்.
அதே நேரத்தில் சனியின் வக்ரம் சஞ்சலத்தைக் கொடுக்கும். சகோதர ஒற்றுமையை குறைக்கும். தன வரவு வந்தாலும் மறுநிமிடமே செலவாகும். வழிபாடு இக்காலத்தில் வளர்ச்சியைக் கூட்டும்.

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு!
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு புதிய திருப்பங்கள் பலவற்றையும் கொடுக் கும் விதத்தில் அமையப் போகிறது. மதிப்பும், மரியாதையும் உயரும். மக்கட் செல்வங்களுக்கு மண மாலை சூட்டிப் பார்க்கப் போகிறீர்கள். பழைய கடன் கள் தீரும். புதிய தொழிலில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தைப் பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது.
குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் இடமாற்றங்கள் வீடு மாற்றங்கள் அமையும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். தாய் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.
ராகுப்பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகலாம். சேமிப்பு அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் ஏற்படலாம். ராகு– கேது பிரீதியும், அனுமன் வழிபாடும் ஆனந்த வாழ்க்கையை வழங்கும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் வியாழன் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு தெட்சிணா மூர்த்தி வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். பிறந்ததேதி மற்றும் கூட்டுத் தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோக பலம்பெற்ற நட்சத்திரம் சேரும் பொழுது சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள கீர்த்தி வழங்கும் கிழக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் ராகுவும், 5–ம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ஜூன் மாதம் 21–ம் தேதி கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் பின்னோக்கிச் செல்கிறார்கள். இதனால் பெரிய மாற்றங்கள் வந்து சேரப் போகிறது. 10–ல் ராகு சஞ்சரிப்பதால் செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களுக்கான முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.
ராகுவின் பார்வை பலத்தால் இட மாற்றம், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலாகா மாற்றங்கள் உருவாகலாம். அஷ்டம ஸ்தானத்தை ராகு பார்ப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு வந்து கொண்டே இருக்கலாம். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகலாம். மாற்றினத்தைச் சார்ந்த புதிய பங்குதாரர்களை இணைத்து செயல்படுவீர்கள்.
கேதுவின் பலத்தால் வீடு, நிலம் வாங்குவதிலிருந்த பிரச்சினைகள் அகலும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர், திடீரென மனக்கசப்புகள் உருவாகி மறையும்.

குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறுவது யோகம் தான் என்றாலும், அஷ்டமத்தில் அல்லவா உச்சம் பெறுகிறார். எனவே, எதிர்பாராத மாற்றங்கள்  வந்து சேரும். இல்லம் கட்டி குடியேற வேண்டும் அல்லது இல்லம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இப்பொழுது நிறைவேறப் போகிறது.
ஜூன் 13–ம் தேதி பெயர்ச்சியாகும் குரு அதன் பார்வை பலத்தால் 2, 4, 12 ஆகிய இடங்களைப் புனிதப்படுத்துகிறார். எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். வாகனம் வாங்கும் வாய்ப்பு கிட்டும். நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். சேமிப்பு சீட்டுகளில் சேர்ந்து பணம் கட்டி வருபவர்களுக்கு திடீரென பரிசு கிடைத்து பணவரவு வந்து சேரப்போகிறது.
சண்டை, சச்சரவில் சிக்கித் தவித்த குடும்ப உறவினர்கள் இப்பொழுது சமரசமாகி தங்கள் கடமைகளை உணர்ந்து பணிபுரிவர். தொழில் முன்னேற்றம் காணும் நேரமிது. அடிமைத் தொழிலிருந்து விலகி  ஏதேனும் ஒரு புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை உருவாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகலாம். அரசியல் மற்றும் பொதுநல ஈடுபாடு கொண்டவர்களுக்கு செல்வாக்கு மேலோங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் அதிகரிக்கும். மதி நுட்பத்தால் மக்கள் செல்வங்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வித்திடுவீர்கள். அயல்நாட்டில் கல்வி கற்று அதிகப் புகழ் சேர்க்க வேண்டுமென்று விரும்பும் உங்கள் குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். இடமாற்றம், நாடுமாற்றங்கள் ஒரு சிலருக்கு இனியதாக அமையும். இக்காலத்தில் திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டால் அசையாத சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
===================================================================

மகர ராசி :

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

பார்க்கும்  குருவை  பலப்படுத்தினால்  யோகம்!

செய்த உதவியை கடைசிவரை மனதில் வைத்துக் கொண்டு நன்றி காட்டும் மகர ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு பெருமைகளை குவிக்கும் விதத்தில் உங்கள் ராசிநாதன் சனியின் உச்சத்தோடு பிறக்கிறது. எனவே, தொழில் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கப் போகிறீர்கள். உழைப்பின் பயனால் உயர்ந்த நிலையை அடையும் விதம், குருப்பெயர்ச்சியும் இந்த ஆண்டில் நிகழவிருக்கிறது.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து அதன் நேர் பார்வையை உங்கள் ராசியின் மீது குரு பதிக்கும் பொழுது கொற்றவரும், மற்றவரும் பாராட்டுவர். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆண்டின் தொடக்கத்தில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். 12–க்கு அதிபதியான குரு வக்ரம் பெறும் பொழுது விபரீத ராஜயோக அடிப்படையில் பலன் கொடுப்பார்.
செவ்வாய் 9–ல் சஞ்சரிக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன் ஆகிய மூன்றும் சஞ்சரித்து, ராசியிலேயே சுக்ரன் வக்ரம் பெறும் நேரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. சுக்ரன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குழந்தைகள் வழியில் வருடத் தொடக்கத்தில் செலவு கூடுதலாக இருக்கும். குடும்பச் சுமை கூடும்.
கிரகங்களில் அதிக வலிமையானவர் சனி பகவான். ‘ஆயுள்காரகன்’ என்று போற்றப்படுபவர். அவரை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள் சிறந்த உழைப்பாளிகளாக இருப்பீர்கள். நிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு மத்தியில் நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக          விளங்குவீர்கள்.
உதவி செய்தவர்களுக்கு நன்றிகாட்டத் தயங்க மாட்டீர்கள். குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்களின் பட்டியலில் இடம் பெறுவீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி உச்சம் பெறுகிறார். அவரோடு ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் மேன்மையுண்டு. வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். வக்ர வியாழனின் ஆதிக்கத்தால் திட்டமிடாமல் செய்த காரியங்கள் வெற்றி பெறும். தேக நலனும் சீராகும்.
செவ்வாய் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி 9–ல் சஞ்சரிக்கும் பொழுது வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கிப்போட்ட இடம் விற்பனையாகி மகிழ்ச்சியை வழங்கும். சகோதரர்கள் சகாயமாக நடந்து கொள்வார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.
சந்திர பலம் குறைவாக இருப்பதால் தாய் வழி உறவினர்களின் பகையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை ஏற்பட்டு வைத்தியச் செலவை உருவாக்கலாம். இடமாற்றம் செய்வதாக முடிவெடுத்து பிறகு பின்வாங்கி விடுவீர்கள். ராகு–கேதுக்களின் ஆதிக்கம் மாறுவதற்குள் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொண்டால் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படாது. ஆதாயமும் அதிகரிக்கும்.

சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!
இதுவரை சனி உங்கள் ராசிக்கு 10–ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து வந்தார். இந்தப் புத்தாண்டின் கடைசியில் அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் விதத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். இளைய சகோதரத்தோடு ஏற்பட்ட பகை மாறும்.
அந்தச் சனியின் பார்வை உங்கள் ராசியிலேயே பதியப் போவதால் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல் ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியப் பாதிப்பிலிருந்து அகல வழி பிறக்கும்.
ஐந்தாமிடத்தில் சனியின் பார்வை பதிவதால் பிள்ளைகள் வழியில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரிய நிகழ்வுகள் இப்பொழுது நடைபெறத் துவங்கும். கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினையும் நல்ல முடிவிற்கு வரும்.  இக்காலத்தில் சனியின் வழிபாடு சஞ்சலம் தீர்க்கும்.

குருவக்ரமும், சனி வக்ரமும்!
குருவின் வக்ரமும், சனி வக்ரமும் வரும் புத்தாண்டில் நிகழவிருக்கிறது. குருவின் வக்ரம் உங்களுக்கு நன்மை தரும் விதத்தில் அமையும். காரணம் குரு உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சனியோ உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குகிறார். எனவே, இதன் வக்ரம் உங்களுக்குப் பல இடையூறுகளை வழங்கலாம். இக்காலத்தில் அமைதியைக் கடைப்பிடித்து வந்தால் தான் ஆனந்தத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு!
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் ஆண்டாக அமையப் போகிறது. சுப விரயங்கள் அதிகரிக்கும். சுகங்களும், சந்தோஷங்களும் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் வந்து சேரும்.
ஜூன் மாதம் 13–ம் தேதிக்கு மேல் உங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புகழ்கூடும்.  கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல பெயர் எடுத்துக்கொள்வர். குறைகள் தீர அப்போதைக்கப்போது ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வருடக் கடைசியில் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க பொறுப்புகள் வந்து சேரும். ராகு–கேதுக்களுக்கு பிரீதியும், குரு வழிபாடும் செய்வது உங்களுக்கு நன்மையை வழங்கும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இந்தப் புத்தாண்டு பொன் கொழிக்கும் ஆண்டாக மாற சனிக் கிழமை தோறும் சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரம் சேரும் நாளில் சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டியிலுள்ள வைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மனை வழிபட்டு வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ளுங்கள்.

யோகம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை மேஷத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும், துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ஜூன் 21–ம் தேதி பெயர்ச்சியாகி பின்னோக்கிச் செல்கிறார்கள். உங்கள் ராசிக்கு 3–ல் கேதுவும், 9–ல் ராகுவுமாக சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். அரசு வழி அனுகூலம் கிடைக்கும். பங்காளிப் பகை மாறும்.
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். தந்தை வழி உறவில் விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதிலிருந்த மனஸ்தாபம் மாறும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் வரும்.
கேதுவின் ஆதிக்கத்தால் கூட்டு முயற்சியில் மாற்றம் செய்வீர்கள். உதாசீனப்படுத்திய உடன்பிறப்புகள் உங்களிடம் வந்து உதவி கேட்பர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறிநிலை இருக்கும். உடன்பிறப்புகளில் ஒரு கோஷ்டியினர் விலகிச் செல்லலாம். மற்றொரு கோஷ்டியினர் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். துர்க்கை வழிபாடு துணிவும், தன்னம்பிக்கையும் வழங்கும்.

குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
இதுவரை 6–ம் இடத்தில் சஞ்சரித்து ஆதாயத்தை அளவோடு கொடுத்து வந்த குரு பகவான் இந்த புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சப்தம  ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நிச்சயித்த கல்யாணங்கள் நிச்சயித்தபடியே நடைபெறும்.
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கிணங்க அதன் அருட்பார்வை பதியும் ராசிகளில் உங்கள் ராசியும் ஒன்றாக இருப்பதால் கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.   காவல் துறையில் ஏற்பட்ட கலக்கம் அகலும்.  கோவில் திருப்பணிக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். குடும்பச் சுமை குறையவும் வழிவகுப்பீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகப் பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் வந்து சேரும். இலாகா மாற்றங்கள் உங்களுக்கு இனிமை தரும்.
உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கடன் சுமை படிப்படியாகக் குறையும். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மின்சாதனப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றம் கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
இதுபோன்ற காலங்களில் திசைமாறிய தென்முகக் கடவுளை சேவித்து வழிபட்டு வருவது நல்லது.  அதுமட்டுமல்லாமல் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து உள்ளூரில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மல்லிகைப்பூ அல்லது முல்லைப் பூ மாலை சூட்டி, மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, சுண்டல் நைவேத்தியமிட்டு, 16 முறை பிரகாரம் சுற்றி வந்தால் வெற்றி வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.
========================================================================

கும்ப ராசி :
 
அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)

அனுசரித்துச் செல்வதன்  மூலமே  ஆதாயம்  கிடைக்கும்!

எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருங்காலத்தை வளப்படுத்தும் கும்ப ராசி நேயர்களே!

வந்து விட்டது புத்தாண்டு. குருவின் வக்ர இயக்கம் முடிந்த பின்னால் நாம் அக்கறை செலுத்துகின்ற காரியங்களில் எல்லாம் ஆதாயம் கிடைக்குமா? முப்பெரும் கிரகங்களின் பெயர்ச்சி எப்படியிருக்கப் போகிறது. ஒப்பற்ற தனாதிபதி குரு 6–ல் சஞ்சரிக்கும் பொழுது இடமாற்றம் வந்திடுமா?, இல்லை ஊர் மாற்றம் வந்திடுமா?, உத்தியோக மாற்றம் வந்திடுமா? என்ற சிந்தனை இருக்கும்.
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று இருக்கிறார். அதே நேரத்தில் தன லாபாதிபதியான குருவோ வக்ரம் பெற்று இருக்கிறார். 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வலிமை இழந்தாலும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பது ஒன்று தான் யோசிக்கக் கூடியதாக இருக்கிறது. 3–ல் கேதுவும், 9–ல் ராகுவும் இருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது, என்றாலும் நிம்மதி குறைவாகவே இருக்கும்.
மற்றவர்கள் அறிமுகம் செய்யாமலேயே நெருங்கிப்பழகும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இடம் பெற்றிருக்கும். யாரேனும் உங்களை ஏமாற்ற நினைத்தால் அவர்கள் மீது கடுமையாக கோபம் கொள்வீர்கள். மற்ற நேரங்களில் எல்லாம் இரக்க சுபாவம்கொண்டவர்களாகவே காட்சி அளிப்பீர்கள். தங்களது பிரச்சினைகளை பிறரிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்வது உங்கள் வாடிக்கையாகும். இந்த 2014 புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே, ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
சுக்ரனின் வக்ர இயக்கத்தால் பெற்றோர் வழியில் பிரியம் கொஞ்சம் குறையலாம். இடம், பூமி வாங்கியதில் எதிர்பாராத பிரச்சினைகள் ஒருசிலருக்கு உருவாகலாம். தந்தைவழி பங்காளி   களால் விரயம் உண்டு. அஷ்டமத்து செவ்வாய் ஆதிக்கம் இருக்கும் வரை ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.  வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. அஷ்டமாதிபதி புதன் சப்தமாதியுடன் இணைந்து புத–ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும். முன்னோர் சொத்துக்        களில் முறையான பஞ்சாயத்துக்கள் நடந்து முடிவடைவதில் தாமதம் ஏற்படும். மூன்றாம் இடத்து கேதுவின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்வது நல்லது.

10–ம் இடத்திற்கு வரும் முத்தான சனி!
இதுவரை உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் புத்தாண்டின் கடைசியில் 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பழைய தொழிலை மாற்றிவிட்டு, புதிய தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும்.
அதற்கு ஒத்துழைப்பு செய்யும் விதத்தில் மாற்று இனத்தவரும் உங்களுடன் இணைந்து செயல்பட முன்வருவர். அதே நேரத்தில் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 12–ம் இடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. எனவே, அன்றாடம் தொழிலைக் கண்காணித்து வராவிட்டால் ஏமாற்றங்களை சந்திக்க இயலும். நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. நாடுமாற்றச் சிந்தனை நடைபெறுமா? என்பது சந்தேகம் தான். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
திருநள்ளாறு, பெருச்சிக்கோவில், திருக்கொள்ளிக்காடு போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று, உங்களுக்கு நடக்கும் சனிச்சுற்றின் அடிப்படையில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனி கவசம் பாடி எள் தீபமும் ஏற்றி வழிபட்டால் காரியங்கள் நாளும் வெற்றி பெறும்.

குரு மற்றும் சனி வக்ர காலம்!
இந்தப் புத்தாண்டில் குருவும், சனியும் வக்ரம் பெறுகிறார்கள். இந்த இரண்டு வக்ர இயக்க காலமும், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலமாகும். கூடுமானவரை சேமிப்பில் இருந்த தொகைகள் திடீரென செலவாகும்.
தன லாபாதிபதியின் வக்ரம் அவ்வளவு நல்லதல்ல. பண நெருக்கடி ஏற்படும். ஒரு தொகை செலவான பிறகு அடுத்த தொகை வந்து சேரும். சனி ராசிநாதனாக இருப்பதால் உடல்நலத் தொல்லைகள், பணியாளர் பிரச்சினை, பயணங்களில் தடை உருவாகலாம். வீடு மாற்றமும், வேலை மாற்றமும் திருப்தியளிக்கும் விதத்தில் இருக்கும்.

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு!
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு குழப்பங்கள் அகலும். குணத்தோடு பழகியவர்களின் நட்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். குரு பார்வை பலத்தால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருட வருமானம் பெருகும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். விட்டுக்கொடுத்துச் செல்லாத வாழ்க்கைத் துணை கூட குணம் மாறி அன்பும், ஆதரவும் அதிகமாக காட்டத் தொடங்குவார்.
ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் பக்கத்து வீட்டாரின் பகை உருவாகலாம். தாய்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். பிறருக்குப் பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை போராடி வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.  குறிப்பாக குழந்தைகளின் திருமணத்தை முன்னிட்டு தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். சர்ப்ப சாந்திப் பரிகாரமும், தொடர்ந்து வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும் எடுத்த செயலில் வெற்றி பெற வைக்கும்.

செல்வ வளம் தரும்  சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் சனி என்பதால் சனிக்கிழமை தோறும் பெருமாள், இலக்குமி, அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு பிறந்த தேதி மற்றும் கூட்டுத் தொகைக்குரிய எண்களின் ஆதிக்கத்தில் யோகபலம் பெற்ற நாளில், யோகமான நட்சத்திரம் சேரும் பொழுது சிறப்பு வழிபாடாக வன்னி     மரத்தடியில் வீற்றிருந்து அருள் வழங்கும் சனி பகவானை பெருச்சிக் கோவில் சென்று வழிபாடு செய்யுங்கள். இத்திருத்தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்தில் கேதுவும், 9–ம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ஜூன் மாதம் 21–ம் தேதி கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பின்னோக்கிச் செல்லும் இந்தக் கிரகங்களின் ஆதிக்கத்தால் நீங்கள் முன்னேற்றம் காண வழிகிடைக்கப் போகிறது. 2–ல் சஞ்சரிக்கும் கேதுவால் செயல்பாடுகளில் நிதானம் காட்டுவது நல்லது. மனக்குழப்பங்கள் உருவாகலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான். கொடுக்கல்–வாங்கல்களிலும் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. அஷ்டமத்து ராகுவால் பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாகும். மறைந்த ராகு நிறைந்த தனலாபத்தைக் கொடுக்கும் என்பார்கள். எனவே இக்காலத்தில் தொழிலால் வரும் லாபத்தை சேமிப்பாக வைத்துக் கொள்ளாமல், செலவுகளில் சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது.

குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். தன லாபாதிபதி உச்சம் பெற்று சஞ்சரிப்பது ஒருவழிக்கு யோகம்தான் என்றாலும், அவர் 6–ம் இடத்தில் அல்லவா சஞ்சரிக்கிறார். எனவே இதன் விளைவாக ஜூன் 13–ம் தேதி முதல் மாற்றங்களும், ஏற்றங்களும் உங்களுக்கு வந்து சேரப் போகின்றன. குருவின் பரிபூரண பார்வை 2, 10, 12 ஆகிய இடங்   களைப் புனிதப்படுத்துகின்றார்.
அப்படிப்பட்ட குரு 6–ல் சஞ்சரிக்கும் பொழுது உத்தியோகம், தொழிலில் உதிரி வருமானங்கள் பெருகும். உற்சாகத்தோடு பணி புரிவீர்கள். ஊதிய உயர்வு, இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி ஒரு சிலருக்கு வந்து சேரும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் வந்திணையும்.
அதன் பார்வை பலத்தால் தன ஸ்தானம் புனித      மடைவதால் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், எதிர்பார்ப்பதைவிட லாபம் ஒரு மடங்கு கூடுதலாகவே கிடைக்கும். சொந்தம், சுற்றம் அனைத்தும் பாராட்டும் அளவிற்கு உங்கள் முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் மீண்டும் வந்து நிம்மதி தரும்.
கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் இதுவரை கூட்டாளிகளால் திருப்தி ஏற்படவில்லையே என்று நினைத்திருக்கலாம். இந்த குரு மாற்றத்தின் விளைவால் தனித்து இயங்க முற்படுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவீர்கள்.
அயன சயன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் ஒரு சிலருக்கு அயல்நாட்டு யோகம் வந்து சேரலாம். வாகனமாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வேற்று மனிதர்களின் ஒற்றுமையோடு வியக்கும் அளவு முன்னேற்றம் காண இந்தக் குருப்பெயர்ச்சி வழிவகுக்கும். திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டால் தெய்வ அனுகூலமும் கைகொடுக்கும்.
=====================================================================

மீன ராசி :

பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
ஒன்பதாம்  பார்வை  நம்பிக்கையூட்டும்!

நல்லவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்ளும் தன்மை பெற்ற மீன ராசி நேயர்களே!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த புத்தாண்டு வந்து விட்டது. ஆரம்பத்தில் குரு வக்ரமாக இருந்தாலும் அதன் பின்னர் கடகத்தில் சஞ்சரித்து உச்சம் பெறும் பொழுது அதன் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதியப் போவதால், எல்லா நாட்களும் இனிமையான நாட்களாக அமைய வாய்ப்புக் கிட்டும்.
இருந்தாலும் வருடத் தொடக்கத்தில் குரு வக்ரமாக அல்லவா இருக்கிறார். எனவே, தக்க விதத்தில் பலன் கொடுப்பதில் சில தடைகளும் உருவாகலாம். சிக்கனத்தைக் கையாளும், சூழ்நிலையும், திடீர் மாற்றங்களும், குழந்தைகளால் விரயங்களும், குடும்பச் சுமை கூடுதலும் ஏற்படும் விதத்திலேயே இருக்கிறது.
புத்தாண்டின் தொடக்கத்தில் 2–ல் கேது, 8–ல் ராகு அல்லவா சஞ்சரிக்  கிறார்கள். எனவே, சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ஜாதகம் இருக்கிறது. எனவே, ஆண்டின் தொடக்கத்திலேயே சர்ப்ப சாந்தியைச்செய்து கொள்வது நல்லது. அது மட்டுமல்லாமல் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அனுமன் வழிபாட்டையும், மேற்கொள்வது நல்லது.
ஆண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று புதன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் அடைகின்றார். தனாதிபதி செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனுக்குப் பகைக் கிரகமான சுக்ரன் வக்ரம் பெற்றிருப்பது யோகம்.
நீங்கள் உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். ஓசைப்படாமலேயே சில நல்ல காரியங்களைச் செய்வீர்கள். எதிரிகளை இருந்த இடத்திலேயே இருந்து வெல்லும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
தன்னம்பிக்கை குறைகிற பொழுதெல்லாம் தக்க விதத்தில் நம்பிக்கைக்கு உரியவரிடம் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். நேர்மை, நியாயத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், பலரும் உங்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள்.
உங்களுக்கு இந்த 2014–ம் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுகிறார். எனவே, தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் தொல்லைகள் அதிகரிக்கும்.  தனாதிபதி செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்தபடி உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். ஒரு தொகை செலவானாலும் மற்றொரு தொகை வந்து கொண்டேயிருக்கும்.
பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமா? இல்லை புதிய இடத்தில் வீடு கட்டலாமா? இல்லை வீடாக வாங்கினால் யார் பெயரில் வாங்குவது உத்தமம், குடும்ப உறுப்பினர்களில் யார் பெயரில் வாங்கினால் அது நிலைத்திருக்கும் என்று மனக்குழப்பத்தோடு இருந்த உங்களுக்கு இப்பொழுது தெளிவு பிறந்து தீர்க்கமான முடிவெடுத்து செயல்படப் போகிறீர்கள்.
சுக்ரன் வக்ரம் பெறுவது யோகம் தான். ஒற்றுமையின்றி பிரிந்து சென்ற உடன்பிறப்புகள் இனி உங்களைத் தேடி வருவர். ஆபரணங்களை வாங்கிச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். புத–ஆதித்ய யோகத்தின் அடிப்படையில் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் சுபவிரயம் அதிகரிக்கும் நேரமிது.

சனி விலகும் நேரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 8–ல் சஞ்சரித்து அஷ்டமத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சனி பகவான் இந்த புத்தாண்டு கடைசியில் 9–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இது ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கும். போற்றுகிற அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.
இழப்புகளை எல்லாம் ஈடுசெய்யப் போகிறீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றியும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் சூழ்நிலையும் உருவாகும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். சிந்தையை செலுத்தி செய்ய வேண்டிய காரியங்களில் எல்லாம் சிறப்புகள் கிடைக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏற்பட்ட வாட்டங்கள் மாறும். வருத்தங்கள் தீரும். வைத்தியச் செலவுகள் குறையும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். போற்றுகிற அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் 9–ல் உலா வரும்பொழுது திருநள்ளாறு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குரு வக்ரமும், சனி வக்ரமும் நிகழவிருக்கிறது. இந்த இரண்டு வக்ர காலமுமே நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலம் தான். ராசிநாதனாக குரு விளங்குவதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். மருத்    துவச்செலவுகள் கூடும். வாங்கிப் போட்ட இடங்களை விற்பனை செய்யும் அமைப்பு உருவாகும். சனியின் வக்ர காலத்தில் பணவரவில் இருந்த தடைகள் அகலும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு
மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல மாற்றங்களை அள்ளி வழங்க போகிறது. திருமண வாய்ப்புகள் வரவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அதுவந்து சேரும். குழந்தைப் பேறு கிட்டும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். தாய்   வழித் தனலாபம் கிடைக்கும். ராகு– கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளையும், பின்னணியாக இருந்து பார்த்துக்கொள்வது நல்லது. குருவழிபாடும், சர்ப்ப சாந்தியும் குதூகலத்தை வரவழைத்துக்கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும் இந்த ஆண்டு தங்கம், வெள்ளி ஆகியவை சேர்க்கையும், தகுந்த பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் வியாழன் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரம் சேரும்பொழுது சிறப்பு   வழிபாடாக திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது முன்னேற்றத்திற்கு வித்திடும்.

நலம் தரும் ராகு–கேதுப் பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 2–ல் கேதுவும், 8–ல் ராகுவும் சஞ்சரித்து வந்தார்கள். புத்தாண்டில் ராகு–கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருப்பதால் ராகு–கேது பிரீதி செய்வது நல்லது.
ஜென்ம கேதுவால் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்றுச் சிந்தனை மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கட்டிடப் பணி மட்டும் பாதியிலேயே நிற்கலாம். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வழியமைக்கும்.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் குடும்பச் சுமை கூடும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து முடித்துக்கொடுப்பர்.  சேமிப்பில் சிறிது கரையலாம். திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழவிருக்கிறது. அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். எதைச்செய்ய நினைத்தீர்களோ, அதைச்செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
சேமிப்புகள் உயரும்இந்த நேரத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மாறும். உற்சாகத்தோடு பணிபுரிந்து உள்ளம் மகிழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.
குரு உங்கள் ராசியை 9–ம் பார்வையாக பார்க்கிறார். எனவே 5, 9 ஆகிய இடங்கள் மிஞ்சும் பலன் தரும் என்பார்கள். அதன்படி மிஞ்சும் அளவிற்கு பொருளாதாரம் அமையப் போகிறது. கடை திறப்பு விழாக்கள் நடத்திப் பார்ப்பீர்கள். கூட்டு முயற்சியை விட்டுவிட்டு தனி முயற்சியில் நாட்டம் கொள்வீர்கள். கொள்கைப் பிடிப்பு கூடுதலாக இருக்கும்.
குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி சேமிப்பில் வைப்புநிதி ஒதுக்குவீர்கள். நகை, தோட்டம், என்று வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வெளிநாட்டு அனுகூலம் உண்டு. மூடிக்கிடந்த தொழிலை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓடிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் வந்து இணைவர். ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைத்து அதன்மூலம் நன்மைகள் ஏற்படும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படும் இந்த நேரத்தில் திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வருவது நல்லது,
முல்லைப்பூ மாலை அணிவித்து, மஞ்சள் வண்ண ஆடை சாற்றினால் எல்லையில்லாத நற்பலன்கள் உங்களுக்கு வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
======================================================================

வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்...!


ரிஷி

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com