Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கடைக்கண் பார்வை போதாது ..இறைவா! (பலன் மிகு பரிகாரங்கள்) !

| Mar 26, 2013
நம் வாழ்வில் பிரச்னைகளுக்கா பஞ்சம்? கீழே நீங்கள் படிக்கவிருக்கும் பதிவு, ஏதோ ஒரு விதத்தில், படிக்கும் ஒவ்வொருவருக்கும் பலன் அளிக்கவிருக்கிறது. தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளியான இந்த கட்டுரை, நம் வாசகர்கள் அனைவருக்கும் பயன் அளிக்கும் விதமாக தோன்றியதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பயன்பெறுங்கள்.குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து முடித்து , நம்பிக்கையுடன் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.


காசேதான் கடவுளடா…

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்:

கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது.  
அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு.  அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள். 

கல்யாணம்தான் சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுதாம்!

நம் பிள்ளைகளுக்கு சமமான வயதுடையவர்கள் எல்லோருக்கும் கல்யாணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்கிறார்கள். ஆனால் நம் பிள்ளைக்கோ ஒரு நல்ல வரன் அமைய மாட்டேங்குது. நிறைய வரன் பார்த்துட்டோம். அதில் எந்த வரனும் அமையவில்லை. எந்த வரன் வந்தாலும்  தடைபட்டுக் கொண்டே செல்கிறது என்று வருத்தப்படுபவர்கள்; ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். தங்கம், வெள்ளியால் தாலி செய்து அல்லது மஞ்சள் கிழங்கை குலதெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்துங்கள். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து உங்களுக்கு இஷ்டப்பட்ட அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மன் பெயரில் அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

திருமணம் நிச்சயம் ஆனவுடன் அந்த அம்மனுக்கு நன்றிகூறும் வகையில் சிறப்பு அர்ச்சனை செய்து விட்டு, ஏழை எளியவர் குறைந்தது ஏழு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். அத்துடன் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கல்யேஸ்வரர் கோயிலில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வழிபாடு செய்து, திருமணம் நிச்சயம் ஆனவுடன் முதல் பத்திரிக்கை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டால், உங்கள் வீட்டு கல்யாணம் சிறப்பாக நடக்கும்.  

படித்தால் மட்டும் போதுமா?

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் அது மனதில் நிற்காமல்  மறந்து  விடுகிறது. அப்படியே ஞாபகம் இருந்தாலும், அதை சரியாக தேர்வில்  எழுத முடியவில்லை. பெற்றோரும், ஆசிரியர்களும் படித்தால் மட்டும் போதாது. நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என திட்டுகிறார்கள். படிக்க வசதியில்லாமல் படிப்பு பாதியிலேயே நின்று போய்விடுகிறது என்றெல்லாம் கவலைப்படுபவர்கள்; முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூருக்குச் செல்லுங்கள். அங்குள்ள நாழிக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு செந்திலாண்டவனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நான்முகனான பிரம்மனுக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான் என்பதன் அடிப்படையில் 40 லட்டுக்கும் குறையாமல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். 

திருச்செந்தூருக்கு சென்று வழிபட இயலாதவர்கள் முருகனின் உருவப்படத்தை வீட்டில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மேலும் கல்விக்கு அதிபதிகளான குருபகவான், சரஸ்வதி, ஹயக்ரீவர் போன்றோரின் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்.  அத்துடன் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணல்மேடு குற்றம் பொறுத்த நாதருக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யுங்கள், அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். உங்களது கல்விக்கான தடைகள் அனைத்தும் நீங்கி, அதிக மதிப்பெண் பெற்று சிறப்பான வாழ்வு பெறுவீர்கள்.

வேலை கிடைச்சாச்சு

நான் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுவர்கள்; திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்துக்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள். உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள். வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை நோயாளிகளின் மருத்துவத்திற்கு செலவு செய்யுங்கள். அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் தகுதிக்கேற்றபடி வேலை கிடைச்சாச்சு என்பதில் சந்தேகமில்லை. 

நூறாண்டு காலம் வாழ்க 

உடலில் சளி, இருமல் போன்ற ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுபவர்கள்; முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான பழநி ஆண்டவனை தரிசனம் செய்யுங்கள். சித்தர்களும், யோகிகளும் இவரை வழிபட்டுப் பயனடைந்துள்ளனர். பிரசாதத்தினை ஏழை எளியோருக்கு தானம் செய்யுங்கள். முருகனின் ராஜஅலங்காரப் படத்தினை வீட்டில் வைத்து தினமும் வணங்குங்கள். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 5 அகல் தீபங்களை ஏற்றி முருகனின் துதிகளைப் பாடி பக்தியடையுங்கள். நவகிரகசன்னதியில் முதலாவதான சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுங்கள். அத்துடன் 4448 நோய்களை குணப்படுத்தும் தலைமை இடமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று, வைத்தியநாதரையும், அங்குள்ள தன்வந்திரியையும் வழிபடுங்கள்.  நோய் நொடிகளின்றி நூறாண்டு காலம் வளமோடு வாழ நல்லருள் கிடைக்கும்.

அடுத்த வாரிசு

தங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை என்று வருத்தப்படுகிறவர்கள்; தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள துர்கை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 9 உதிரி எலுமிச்சம் பழத்தை அம்மன் காலடியில் வைக்க சொல்லி வழிபடுங்கள். வழிபட்டு விட்டு அந்த பழங்களை திருப்பி வாங்கக் கூடாது. அர்ச்சனை செய்த குங்குமத்தை வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு தினமும் பூசிவிடுங்கள். கதிராமங்கலம் வனதுர்கை ஆலயத்துக்குச் சென்று அம்மனுக்கு அரக்கு அல்லது சிவப்புப் புடவை சாற்றி, அபிஷேக ஆராதனை செய்து அம்மனை வழிபடுங்கள். உங்கள் வாரிசுகள் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள கோயில் நரசிம்மரை வழிபட்டு கல்கண்டு பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுங்கள். துர்கை, நரசிம்மர் காயத்ரி மந்திரங்களை தினமும் உச்சரியுங்கள். திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியிடம் சென்று உங்கள் அடுத்த வாரிசுக்கு ஆயுஷ் ஹோம் செய்யுங்கள்.உங்கள் வாரிசுகளின் உடல் நலம் சீராக அமையும்.

ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே

வியாபாரத்தில் லாபம், நஷ்டம் இருப்பது சகஜம். தொழிலில் எப்பொழுதுமே நஷ்டமாக உள்ளது என வருத்தப்படுகிறவர்கள்: 
குபேரனுக்கே செல்வ வளம் கொடுத்தவர் சிவபெருமான், எனவே ஸ்ரீசைலம் சென்று அபிஷேக ஆராதனை செய்து சிவபெருமானை வழிபடுங்கள். அங்குள்ள விபூதி பிரசாதத்தை வாங்கி வந்து வீட்டிலும், வியாபாரம் நடக்கும் இடத்திலும் வைத்தால் நஷ்டம் குறைந்து லாபம் பெருகும். வியாபாரம் தொடங்கிய நாட்களில், திங்கட்கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குப் போய் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். அங்கு நடைபெறும் அன்னதானத்திற்கு இயன்ற உதவி செய்யுங்கள். தினமும் சிவன் காயத்ரி மந்திரந்தை உச்சரியுங்கள். பிரதோஷ நாட்களில் பிராணிகளுக்கு உணவு கொடுங்கள். 

திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கு சென்று உங்கள் வயதுக்கேற்றபடி நெய்தீபம் ஏற்ற வழிபாடு செய்யுங்கள். (இக்கோயில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 32 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகனூரிலிருந்து மேற்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. ) உங்கள் வாழ்க்கையில் நஷ்டமும், துன்பமும் விலகி லாபமும், மகிழ்ச்சியும் பெருகி, இனி எப்போதும் ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே...

கண்ணன் வருவான்

திருமணமாகி நீண்ட நாட்களாகியும் தனக்கு ஒரு வாரிசு இல்லை என வருத்தப்படுபவர்கள் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலுக்குச் சென்று முல்லைவனநாதரையும், கர்ப்பரட்சாம்பிகை அம்மைனையும் வழிபடுங்கள். அம்மனின் பாதத்தில் வைத்து அபிஷேகம் செய்த நெய்யை கணவன், மனைவி இருவரும் 48 நாட்கள் சாப்பிட்டுவர குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயிலில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணரை மடியில் வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிறந்த கிழமைகளில் வீட்டிலுள்ள இஷ்டதெய்வத்தின் முன் நெய் தீபம் ஏற்றி அபிராமி அந்தாதியில் தாமம் கடம்பு எனத் தொடங்கும் 73வது பாடலை தினமும் மனதார படியுங்கள். அரசமரத்தடி நாகர் மற்றும் விநாயகரை திங்கட்கிழமைகளில் வழிபடுங்கள். படிக்க வசதியில்லாத ஏழைச் சிறுவர்களின் படிப்புக்கு உதவுங்கள். விரைவிலேயே உங்கள் வீட்டில் சின்னக் கண்ணன் துள்ளி விளையாட வருவான்.

எதிரி தொந்தரவு நீங்க

உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படுபவர்கள், உங்களை விரோதியாக நினைப்பவர்கள் போன்றவர்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா; கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கிரா ஆலயத்தில் நடைபெறும் நிகும்பலா யாக பூஜையில் கலந்து கொண்டு அம்மனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வாரை மனதாரப் பிரார்த்தியுங்கள். அங்கு நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். சனிக்கிழமைகளில் உங்களுக்கு இஷ்டமான அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். இயலாதவர்களுக்கு பிரசாதத்தை தானம் செய்யுங்கள். உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள், விரோதிகள் என யாராலும் எந்த பாதிப்புமின்றி இரும்பு கோட்டை போல் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழலாம்.

நல்லதொரு குடும்பம்

உங்கள் குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள் :

பிள்ளையார்பட்டிக்கு சென்று அங்குள்ள கற்பக விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து மனதார வழிபடுங்கள். அங்கு தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சிறுதுணியில் கட்டி வீட்டு வாசல்படி முன் வைத்துவிடுங்கள். மேலும் குடும்பத் தலைவன், தலைவி என அவரவர் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சாற்றி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள். வசதி படைத்தவர்கள் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தலாம். அல்லது வெள்ளிக்கிழமைகளில் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளித்து, சாம்பிராணி புகை போட்டு இஷ்ட தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குடும்பங்களில் அவ்வப்போது நிகழும் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி சந்தோஷமாக ஒற்றுமையுடன் நல்லதொரு குடும்பம் அமையும்.

வழக்குப் பிரச்சனைகள் தீர

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோர்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிவடையாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு அமைய விரும்புபவர்கள்; விழுப்புரம் பஞ்சவடிக்கு சென்று ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வெற்றிலைமாலை, வடைமாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றியும் வழிபடுங்கள். மேலும் அஷ்டமி தினத்தில் பைரவருக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும்.

எங்கும் பயம்...எதிலும் பயம் நீங்க

பயம்.. பயம்.. பயம் என எதைப்பார்த்தாலும் பயமாக, நடுக்கமாக உள்ளது. என்னால் எந்த வேலையையும் நிம்மதியாக செய்து முடிக்க முடியவில்லை என வருத்தப்படுகிறவர்கள் :

சிவகங்கை வைரவன்பட்டி பைரவரை வழிபடுங்கள். அவருக்கு உகந்த பிரசாதத்தை குறைந்தது 9 பேருக்காவது தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயில் நரசிம்மரை வழிபட்டு பானகம் நிவேதனம் செய்து வணங்குங்கள். அவருடைய தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு பயமெல்லாம் போனதும் அவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். நரசிம்மர் வழிபாட்டினால் உங்களுடைய பயம் அனைத்தும் விலகி வெற்றியே உங்களுக்கு கிடைக்கும். 

இருமலர்கள்

கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக மலரும் மணமும் போல் வாழ ஆசைப்படுபவர்கள்; சிவனும், சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் தலம் நாமக்கல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள மூலவருக்கு மாலை வாங்கி சாற்றி அபிஷேகம் செய்து மனதார வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானின் சாபத்தால் பூமிக்கு வந்த பார்வதி, மீண்டும் ஈசனை அடைய பஞ்சாக்னியில் நின்று தவம் செய்த தலம் காஞ்சி மாங்காடு வெள்ளீஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். காஞ்சி காமாட்சியம்மன் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். கணவன் மனைவி இருவருக்கிடையேயும் எந்தவித பிரச்சனையுமின்றி இரு மலர்களாக மணம்வீசி மனம் போல வாழ்வு சிறக்கும்.

கனவோ...நிஜமோ...

இரவில் தூங்கும் போது கெட்ட கனவுகள் வந்து தொல்லை செய்கின்றன. எங்கே கனவில் கண்டது நிஜத்தில் பலித்து விடுமோ என்று பயமாக உள்ளது என வருத்தப்படுபவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்று 9 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொடுத்து குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அதில் 3 எலுமிச்சம் பழத்தை மட்டும் திருப்பி வாங்கிட்டு வந்து ஒன்றை உங்கள் படுக்கை அறை அலமாரியில் வைத்து விடுங்கள். மீதி இரண்டை பூஜையறையில் வைத்தால் கெட்ட கனவுகள் வராது. மேலும் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தேவிபட்டணத்திற்கு சென்று அங்குள்ள நவகிரகங்களை மனதார வழிபாடு செய்யுங்கள். நல்ல செயல்களை நினைத்துக் கொண்டு நல்ல சிந்தனையோடு உறங்கச் செல்லுங்கள். தீய கனவுத்தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்குங்கள்.

ஞாபம் வருதே... ஞாபகம் வருதே...

மறதி பிரச்சனை இயல்பாகவே எல்லோருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒருசிலர் தாங்கள் அன்றாடம் செய்யும் பணிகளை மறந்து விடுவார்கள், கேட்டால் எனக்கு ஞாபக மறதி என்று சொல்வார்கள். மறதிவிலகி ஞாபக சக்தி அதிகரிக்க ஆசைப்படுபவர்கள்; உங்களுக்கு இஷ்டமான அம்மன் ஆலயத்துக்குச் சென்று 5 அகல் தீபம் ஏற்றி அம்பிகையை மனதார வழிபடுங்கள். ஏழைப் பெண்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி,

யாதேவி சர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எல்லா உயிர்களிடமும் ஞாபக சக்தியாக விளங்கும் தேவியைத் துதிக்கிறேன் என்பதே இதன் பொருள். இந்த ஸ்லோகத்தையும், பொருளையும் தினமும் 11 முறை கூறுங்கள். ஞாபக மறதியிலிருந்து விடுபட்டு எந்த காரியத்தையும் மனதில் ஞாபகம் வைத்துக் கொண்டு செயலாற்றும் சக்தி கிடைக்கும்.

பயணப் பாதையில் ஆபத்து வராமல் இருக்க

நீங்கள் அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவராக இருக்கலாம். அலுவலகப் பணி அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது விபத்து மற்றும் ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க :

ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே

என்ற இந்த மந்திரத்தை வீட்டை விட்டுக் கிளம்பும் முன் உங்கள் வீட்டுப்பூஜையறையில் நின்று மனதார ஒருமுறை கூறிவிட்டு புறப்படுங்கள். அல்லது சுலபமாக,

சம்போ மகாதேவ தேவா - சிவ சம்போ மகாதேவ
தேவாதி தேவா நமோ மார்க்க பந்தோ

என்ற இந்தத் துதியை உங்க பயணம் ஆரம்பிக்கும் முன் குறைந்தது 11 முறை சொல்லுங்கள். நீங்கள் எந்தத் தடையுமின்றி பத்திரமாக உங்கள் பயணத்தை முடித்து விடுவீர்கள்.

வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்; வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும் முன்னே பலவிதமான தடைகள் ஏற்படும். இதில் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பது என்றால் அப்பப்பா சொல்லி முடிக்க இயலாது. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும், ஞான பிரசுன்னாம்பிகையையும் மனதார வழிபட்டு வாருங்கள். உங்களால் இயன்ற அளவு பச்சரிசியை கோயிலுக்கு தானமாகக் கொடுங்கள். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். கோயிலில் தரும் விபூதியை தண்ணீரில் கலந்து பூமி பூஜை ஆரம்பிக்கும் முன்  பூஜை செய்யும் இடத்தில் ஊற்றுங்கள். வீடு கட்டத் தொடங்கிய பின்பு புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று புற்றுக்கு பால் வாங்கி ஊற்றிவிட்டு அம்மனை மனதார வழிபட்டு வாருங்கள். அங்கு தரும் குங்குமத்தை சிறிதளவு தண்ணீரில் கலந்து வீடு கட்டும் இடத்தில் தெளியுங்கள். தடைகளைத் தாண்டி சொந்த வீட்டில் நீங்கள் சந்தோஷமாக வசிக்கலாம். 

திருட்டுப் பயம் போக...

உங்கள் வீட்டிலோ அல்லது வெளியூர் செல்லும் போதோ ஏதாவது பொருள், நகை, பணம் திருடு போகிவிட்டதா, இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததை திருடி விட்டார்களே என வருத்தப்படுகிறவர்கள்; காரைக்குடி வைரவன்பட்டி பைரவர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து பைரவரை மனதார வேண்டுங்கள். தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுங்கள். பைரவரின் வாகனமான நாய்களுக்கு இயன்ற உணவு வாங்கிக் கொடுங்கள். கோயிலில் தரும் விபூதியை வீட்டு பூஜை அறையில் வையுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுங்கள். தினமும் பைரவர் காயத்ரி மந்திரத்தைக் கூறுங்கள்.

கடன்கள் அடைந்திட...

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்படுகிறீர்களா; தஞ்சாவூர் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் உள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை வழிபடுங்கள். 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வாரம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் உங்களது கடன் சுமை குறையும். மேலும் சுவர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுமாட்டுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். அபிராமி அந்தாதியை தவறாமல் தினமும் கூறுங்கள். உங்களது கடன் பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து செல்வ வளம் பெருகும்.

பயணத் தடைப் பிரச்சனை விலக

வெகுநாட்களாக சுற்றுலா, தூர தேசப்பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டு அது நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே செல்கிறதா, எங்கே நாம் ஆசைப்பட்ட இடத்திற்கு போகமுடியாமல் கனவாக இருந்து விடுமோ என நினைப்பவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் கருடனுக்கும், சிவன் கோயில் நந்திக்கும் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கருடன், நந்திக்கு செய்ய வேண்டிய சரியான வழிபாட்டை செய்யுங்கள். வெளிநாடு செல்ல வேண்டிய பயணத்தடை விலக காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடுங்கள். 8 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தர்ப்பாரண்யேஸ்வரரை மனதார வழிபாடு செய்யுங்கள். ஏதாவது ஒரு விநாயகர் கோயிலில் 3 சிதறுதேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்புங்கள். நீங்கள் விரும்பியபடியே உங்களது பயணம் எவ்விதத் தடையுமின்றி சிறப்பாக அமையும்.

அரசுப்பணி தடைகள் அதிரடிப்படையுடன் விரட்ட...

அரசுப்பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகள் விலகவும், அரசின் மூலம் கிடைக்க இருக்கும் அனுமதிக்கு காலதாமதம் ஏற்படுவதால் வருத்தப்படுபவர்கள்: அருகிலுள்ள ராகவேந்தர் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. முடிந்தால் மந்திராலயம் சென்று, தீபமேற்ற பசு நெய் வாங்கிகொடுத்து வழிபட்டு வருவது சிறந்த பலனைத்தரும். அத்துடன் அங்கு கிடைக்கும் இனிப்பான கோயில் பிரசாதத்தை குறைந்தது நாற்பது பேருக்கு கொடுக்கவும். மேலும்  தங்கள் காரியம்  விரைவில் நிறைவேற தினமும்  ராகவேந்திரர் படத்திற்கு பூபோட்டு வணங்கி வருவதால் காரியசித்தி விரைவில் கூடும். அடிக்கடி உங்கள் வீட்டின் அருகேஉள்ள ஏதேனும் ஒரு மகானின் பிருந்தாவனத்திற்கு, நீங்கள் பிறந்த கிழமையில் அவசியம் சென்று நெய்தீபமேற்றி மனதார வணங்குங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவான் சன்னதி முன்பு 9 நல்லெண்ணை தீபமேற்றி 9 சுற்றுக்கள் வந்து வணங்கினால் கிரக தோஷம் நீங்கும். இப்படியெல்லாம் செய்து வந்தால் அரசுப்பணி தடைகள், பகவானின் அருள் எனும் அதிரடிப்படை துணை கொண்டு விரட்டலாம். 

தேடும்....உன் பார்வை....

ஞாபகமறதி உள்ள நபர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவர்.  சில சமயம் அவை கிடைத்துவிடும். சில சமயம் கிடைக்காமல் போனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில் அது சாதாரணப்பொருளாக இருக்கும். எப்போதும் உஷாராக இருப்பவர்கள் கூட,  சில நேரங்களில்,  ஏதேனும் ஒரு பொருளை தொலைத்து விடுவார்கள். மிகவும் விலை உயர்ந்த, அல்லது மதிப்பு மிக்க அந்தப்பொருளை தேடித்தேடி அலுத்துவிடுவார்கள். அத்துடன் எப்போதும் அவர்களது பார்வை அந்தப்பொருளை தேடிக்கொண்டிருக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  புதுக்கோட்டையிலுள்ள அரைக்காசு அம்மனை இருந்த இடத்திலிருந்து, தொலைந்த பொருள் விரைவில் கிடைத்தவுடன் நேரில் வந்து அர்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டால் உடனடி பலன் கிடைக்கும். இது தவிர திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும், சென்னை வண்டலூர் அருகிலுள்ள லட்சுமி குபேரர் கோயிலில் உள்ள அரைக்காசு அம்மனுக்கு சர்க்கரை வாங்கி வைத்து வேண்டிக்கொள்வதும் சிறந்த பலனைத்தரும். 

கவலைப்படாதே சகோதரா...

தான் ஆடாவிட்டாலும்...தன் சதை ஆடும் என்பார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால். நமக்கு ஒரு பிரச்சனை என்றால், அதுபற்றி நாம் கவலைப்படாவிட்டாலும், நம் உடன் பிறந்தவர்கள் கவலைப்பட்டு, உண்மையான ஆறுதல் கூறி, பிரச்னை தீர வழி தேடுவார்கள் என்பதாகும். என்னதான் நண்பர்கள், பிற உறவினர்கள் இருந்தாலும், உடன்பிறந்தவர்கள் என்பதே தனி சுகம் தான். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் சகோதர, சகோதரிகளுக்குள் இடைவெளி உண்டாகி பெரும் வருத்தம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மன வருத்தங்களால் பிரியாமல் இருக்கவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் நினைப்பவர்கள்:  அருகிலுள்ள ராமர்கோயிலுக்கு சென்று ராம, லட்சுமண சகோதரர்களுக்கு பானகம் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. ஏனென்றால் இவர்கள் தான் சகோதர உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள். 

அத்துடன் பூஜையின் போதெல்லாம் ஸ்ரீராம ராம ராமேதி,ரமே ராமே மனோரமே, சகஸ்ரநாம தஸ்த்துல்யம், ராமநாம வராணனேஎன்ற ராம மந்திரத்தை மூன்று முறை ஜபித்து வணங்குங்கள். அத்துடன் ராமதூதனான அனுமனை வழிபட்டாலும் உடன்பிறந்தவர்களின் உறவுக்கு கை கொடுக்கும். உங்களது பிரார்த்தனையின் போதெல்லாம், ராமர் காயத்ரி, அனுமன் காயத்ரி மந்திரத்தை கூறி வணங்கவும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ராமருக்கு திருமஞ்சனம் செய்தும், அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றியும் நன்றி சொல்லுங்க.

அபிராமி... அபிராமி...

எந்த ஒரு பயத்திற்கும் எளிதில் நிவாரணம் கிடைத்து விடும்.  ஆனால் மரணபயத்திற்கு நிவாரணம் இறைவனை சரணடைவதை தவிர வேறில்லை. மரணபயம் வந்துவிட்டால் ...அந்த பயமே ஆளை கொன்றுவிடும். அதற்கு முன் இறைவனை சரணடைந்து விடுவோம். சரி ....எந்த கடவுளை சரணடைவது..... இதற்கெல்லாம் ஒருத்தர் தான் இருக்கிறார். அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள காலசம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவரை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. அங்கு போய் அவருக்கும், அபிராமி அம்மனுக்கும்  அர்ச்சனை செய்து விட்டு, அங்கு தரும் விபூதியை நாள் தோறும் பூசி வந்தால் மரண பயம் விலகும். முடிந்தால் அங்கேயே  மிருத்யுஞ்ஜெய ஹோமம் செய்வது சிறப்பு. ஏழை எளியவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும்  உதவுவது சிறந்த பலன் தரும்.  சிவனைத்தவிர எவருமில்லை என்பதால், பிரதோஷத்தன்று சிவ அர்ச்சனை செய்யுங்கள். தினமும் மகா மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை 11 தடவை ஜபியுங்கள்.இதனால் உங்களுக்கு மரண பயம் நீங்கி, மன அமைதி கிடைக்கும

என்னதான் நடக்கும்...நடக்கட்டுமே...

பிரச்சனை...அலுவலகத்தில் பிரச்சனை...சொந்த பிசினஸில் பிரச்சனை...இதில் நாம் உண்டு என இருந்தாலும், பிரச்சனை நம்மை தேடி வந்து கதவை தட்டும். இதிலிருந்து தப்பிக்க. ஒரு சிலர் காக்காய் பிடிப்பார்கள். இதனால் பிரச்சனை நிரந்தரமாக தீர வாய்ப்பில்லை.  ஆனால் நீங்களோ பெருமாள் காலை பிடித்துக்கொள்ளுங்கள். அதிலும் பள்ளி கொண்ட பெருமாள் என்றால் இன்னும் விசேஷம். அவரிடம் சென்று நடந்தவற்றை கூறி காப்பாற்றும்படி கெஞ்சுங்கள். துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். அலுவலகத்திற்கு வந்தவுடன் ரங்கநாதரை மனதில் நினைத்து, அவரது காயத்திரி மந்திரத்தை கூறி விட்டு பணியை தொடங்கவும்.  முடிந்தால் ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ரங்கநாதரையும், நரசிம்மரையும் வணங்கி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 10 பேருக்கு மேல் பிரசாதம் வழங்குங்கள். அத்துடன் உங்களது பிறந்த கிழமையில் பக்கத்து பெருமாள் கோயிலுக்கு சென்று தாயாருக்கும், பெருமாளுக்கும் துளசி அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். இதனால் நீங்கள் என்னதான் நடக்கும். நடக்கட்டுமே.. பெருமாள் பார்த்து கொள்வார் என தைரியமாக பணியை செய்யலாம். 

தூள்...

என்னன்னு தெரியல்ல...எனக்கு மட்டும் எதை தொட்டாலும் தோல்வி... எதைசெய்தாலும் நஷ்டம்... என்ன செய்றதுன்னு தெரியல்ல... என புலம்புவர்கள், முழு முதற்கடவுளான விநாயகரிடம் சென்று அருகம்புல் மாலை சாற்றி அர்சசனை செய்து வணங்கி வாருங்கள். அடிக்கடி மிகப்பிரபலமான விநாயகர் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி குறைகளை சொல்லுங்கள். எதை செய்தாலும், விக்ன விநாயகனை வணங்கி விட்டு செய்யுங்கள். வினை தீர்க்கும் விநாயகர் உங்கள் வினைகளை எல்லாம் தூள் தூளாக்கி விடுவார். கடல் தீர்த்தம், மற்றும் புனித தீர்த்தங்களை வீட்டில் வைத்துக்கொண்டு அடிக்கடி வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். நடப்பது நன்மையாகவே முடியும்.

நன்றி : தினமலர் ஆன்மீகம்

மஹா சிவராத்திரி ! - The Ultimate day for all your successful Endeavours!

| Mar 9, 2013
வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் தவற விடக்கூடாத நாள் இந்த சிவராத்திரி. என்னதான் நாம் முயற்சி எடுத்தாலும் தெய்வ அனுகூலம் நமக்கில்லாத வரை, அந்த முயற்சிகள் கை கூடுவது அரிது. அந்த அனுகூலத்தை உங்களுக்கும் ஏன் , உங்கள் சந்ததி அனைவருக்கும் கிடைக்கச் செய்யவல்ல அற்புதமான நாள் - இந்த சிவராத்திரி. ஒரே ஒருமுறை சிவனை நினைத்து இந்த விரதம் இருந்து பாருங்கள். நீங்கள் இந்த நாளில் விடாமல் ஜெபிக்க விருக்கும் ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் - உங்கள் வாழ்க்கை முழுமைக்கும் வளம் சேர்க்க , அண்ணாமலையாரை வேண்டி மனப் பூர்வமாக வாழ்த்துகிறேன்.

நமது வாசக நண்பர் ஒருவர் நெட்டில் இருந்து நமது வாசகர்களுக்காக அனுப்பிய இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பாருங்கள். மேலும் நமது தளத்தில் சிவராத்திரி பற்றி பல தகவல்களை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன் இருந்தாலும் இந்த நாளில் நமது பழைய பூர்வ ஜென்மம் பற்றிய கட்டுரையை உங்களுக்கு நினைவு கூற பிரியப்படுகிறேன். படித்துப் பாருங்கள்.

உங்கள் சிந்தனைக்கு விருந்தாக அமையும். சிவனருள் பெறப் போகும் இந்த விரத தினத்தில் - சில வாசகர்களுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் தோன்ற விருக்கின்றன. இது நிச்சயம்.
அந்த காரணத்திற்காகவே , இந்த பழைய கட்டுரையை நினைவு படுத்துகிறேன்.அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...

நமது பூர்வஜென்மம் பற்றிய முந்தைய கட்டுரையைப் படிக்க க்ளிக் செய்யவும் :
 
http://www.livingextra.com/2012/02/poorva-jenmam.html

==============================================
நண்பர் அனுப்பியிருந்த கட்டுரை :  

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். 


பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.

மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.

நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம். 


அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.

===============================================

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

சுமை கனத்தவனால், சங்கீதத்தை ரசிக்க முடியாது...........!.

| Mar 2, 2013
ஒருவனது கடந்த காலம் எப்படி இருந்த போதிலும், அவன் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும், எவ்வளவு அஞ்ஞானத்தில் வாழ்ந்திருந்த போதிலும், அவனது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு உன்னதமான தூய்மை உள்ளது. அது அற்புதமான சித்தியாக மலர்ந்து வெளிப்பட முடியும். தன்னுடைய கஷ்டங்கள், இன்னல்கள், தடைகள், இடையூறுகள் இவைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இராமல், அந்த உள்ளத் தூய்மை மீது ஒருமுனைப்படுதல், அதைப் பற்றியே சிந்தித்தல் இதுவே அவன் செய்ய வேண்டியதெல்லாம்....
                                                        - ஸ்ரீ அரவிந்த அன்னை
=========================================================================

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல்ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ்கஷன் நடந்துக் கிட்டு இருக்குது. அங்கு இருந்த ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் கடவுள் ஒரு மீன் அனுப்புவாரு. ஒரு நாளைக்கு ஒரு மீன் தான். காலையில் மூணு மணியில் இருந்து நாலு மணிக்குள்ளே அந்த மீன் வந்திடும்.அந்த மீனைப் பிடிக்கிறவங்க, குடும்பத்துக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு அந்த மீன் போதும். மீன் கிடைக்காதவங்க, வெளியிலே கஷ்ட்டப்பட்டு வேலை செஞ்சு வந்தாத் தான் வீட்டிலே அடுப்பு எரியும். ஆனா, வெளியிலே வேலை கிடைக்குமா? கூலி, நேரத்துக்கு கிடைக்குமான்னு எந்த உத்திரவாதமும் இல்லை.

இப்போ, நீங்க அந்த ஊர்ல இருக்கிறதா நினைச்சிக் கோங்க ! வீட்டில குழந்தைங்க ரெண்டு நாளா பட்டினி. ரெண்டு நாளா மீன் பிடிக்கவே போகலை. காலை நேரம். தூக்கம். சோம்பேறித்தனம். வெளியில் வேலை கிடைக்கும்னு நம்பி, எங்கேயும் கிடைக்காம, காசும் கடனுக்கு கிடைக்காம, குழந்தைகளுக்கு சாப்பிட கூட வழி இல்லாத ஒரு நிலை...!

மூணாவது நாள் என்ன செய்வோம்?

கண்டிப்பா மீன் வரும்னு தெரியும். ஒரே ஒரு மீன்தான். வேற யாரும் வந்து பிடிக்கிறதுக்குள்ளே, இன்னைக்காவது பிடிக்கணும்னு தோணும் இல்லே..! பசியோட துடிக்கிற பிஞ்சுங்க முகம் ஞாபகம் வரும்போது - தூக்கமாவது ஒன்னாவது....!

மூணு மணிக்கு மேலே தான் வரும்னு தெரியும்.

நீங்க பன்னிரண்டு மணிக்கே போய் அங்கே  நிப்பீங்க தானே... அங்கே பார்த்தா.. உங்களுக்கு முன்னாலே இன்னும் அஞ்சாறு பேர் நிக்கிறாங்க....! இருந்தாலும் நம்பிக்கையோட குளத்திலே இறங்கி தேடுவீங்க தானே....? அந்த நேரத்தில, இது ஆச்சு , அது ஆச்சுன்னு சாக்கு, போக்கு சொல்ல மாட்டோம்ல...?

இதே ஒரு மீனுக்கு பதிலா... நூறு மீன் ஒரு நாளைக்கு வந்தால்.........?அங்கே தன்னைப்போல மெத்தனமும், சோம்பேறித்தனமும் வந்துவிடும்.

"அப்போ , நம்மளை மாதிரி நம்ம போட்டிக் கம்பெனிங்க - ஆயிரம் விக்கிற இடத்துல, நம்ம கம்பெனி ப்ராடக்ட் நூறு கூட தாண்ட மாட்டேங்குது. நாம எல்லாம் இங்க சாக்கு - போக்கு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஏன்? ஒரு மீன் தான் கிடைக்கும்னு நினைச்சு வேலையைப் பாருங்க. இல்லையா, இதே நிலைமைதான் கண்டினியூ ஆகும்னா, இதே அலட்சியம் தான் வாழ்க்கைனா , நாளைக்கு எல்லார் குடும்பமும் - பசியிலதான் வாட வேண்டி இருக்கும். இதுக்கு அப்புறம் உங்க சாமர்த்தியம்..!" னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார்.
=============================================================================

வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நாம எல்லோரும் இந்த நிலைமைல தான் இருக்கிறோம். எதாவது கொஞ்சம் நேரம் கிடைச்சாலும், மனசு நம்மளை அடிமைப் படுத்த ஆரம்பிச்சிடும். கூர்ந்து கவனிச்சோம்னா, வாழ்க்கையில எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம், எவ்வளவு அலட்சிய மனப்பான்மையோட இருக்கிறோம்னு நல்லாப் புரியும்.

ஒருபக்கம் ஆண்டவன் சோதனை. நல்ல முயற்சி நடந்துக்கிட்டு இருக்கும்போதே  நேரம் சரி இல்லைன்னு ஒன்னும் தர மாட்டாரு. இந்த லட்சணத்துல நமக்கே நம்ம மேலே , நம்ம முன்னேற்றம் மேலே அக்கறை இல்லைனா, ஆண்டவன் கூட ," அடப் போயா "ன்னு , 'அம்போ'ன்னு விட்டிடுவாரு.

பெரும்பாலானோருக்கு இருக்கிற ஒரே அலட்சியம் - இதுதான் . அட, குளம் நிறைய மீன் இருக்குதுயா, பிடிக்கிறவங்க எல்லோரும் பிடிச்சிட்டு போனதுக்கு அப்புறம், நாம மெதுவா போய், பிடிப்போம்..! 
அதுக்கு அப்புறம் இருக்கிற எல்லாத்தையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்கன்னு, அடுத்தவங்களைப் பார்த்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியது.....

ஒரே ஒரு மீன் தான்னு நினைச்சிக்கிட்டு ஒட்டு மொத்த முயற்சியும் மனதொருமித்து , எல்லா செயலையும் செய்வோம்....! அப்புறம் பாருங்க ! நிஜமாவே நாமளும் ஜெயிச்சவங்க லிஸ்ட் ல இருப்போம்..! முயற்சி மெய் வருத்த எனில், இறையும் அதற்குத் தகுந்த கூலி  நிச்சயம் தரும்!
=====================================================================

சரி இப்போ தலைப்புக்கு வர்றேன். இது எங்க அப்பா அடிக்கடி சொல்ற பொன்மொழி!

வாழ்க்கையில் ஒரு அளவுக்கு மேல் கஷ்டம், சுமை ஏறிய பிறகு, அவனுக்கு சுகமான சங்கீதத்தைக் கூட ரசிக்கும் மனோபாவம் கிடைக்காது. ஒரே வழி, சுமையை குறைக்க வேண்டியதுதான். ( மீன் பிடிச்சே ஆக வேண்டியதுதான்.)

சரி, எடுக்கிற எல்லா விஷயங்களும் சொதப்பலோ , சொதப்பல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. கடன் கிடைக்கலைன்னு ஒருத்தர் சொன்னா, கொடுத்த காசு வர மாட்டேங்குதுன்னு இன்னொருத்தர். வேலை கிடைக்கலைன்னு ஒருத்தர். வேலைல டார்ச்சர்ன்னு இன்னொருத்தர்.

வீடு கட்ட முடியலைன்னு  ஒருத்தர். வீட்டுல குடி வந்தவங்க அடாவடித்தனம்னு இன்னொருத்தர். உங்கள் பக்கம் நியாயம் இருந்து , எதிரிகளின் கை ஓங்கி - கோர்ட் , கேஸ் என்று நீங்கள் போக நினைக்காமல் , பிரச்னை அதே நேரம் சுமுகமாக முடியவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

"ஆமாம்யா, ஆன்மீக ரீதியில் இதற்க்கு ஒரு தீர்வு , பரிகாரம் இருக்கிறதா"?

இருக்குதுங்கண்ணா!

ஆனால், எல்லோருக்கும் கொஞ்சம் பிடிக்காத ஒரு விஷயம்.   நல்ல நாள் , விசேஷ தினம் , கூட்டம் அலை மோதுற கோவிலுக்கு, அந்த நாள் போகாம இருக்கிறது. Crazy guys...ன்னு தோணும் இல்லையா! இந்த பிரச்னைகளுக்கு தீர்வு இந்த விஷயத்தில் தான் அடங்கி இருக்கிறது.


ஊர் கூடி தேர் இழுக்கும் திருவிழா நடக்குமே, அந்த நாளில் - கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் வடம் பிடித்து, ஒரு இரண்டு அடியாவது நடக்க முடிந்தால் போதும். அதாவது, நீங்கள் இழுக்க , இறைவன் உங்களை நோக்கி வருகிறான்.


 ஒரு பெரிய ஜன சமுத்திரமே , இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு , வடம் பிடிக்கும்போது - மிகப்பெரிய அருள் அலைக்கு பாத்திரமாவீர்கள். அது எப்பேர்ப்பட்ட - இன்னல்களையும் தீய சக்திகளையும் தகர்க்கும்.  இறைவனே உங்களை நோக்கி வரும்போது, எல்லா நல்ல விஷயங்களும், மன நிம்மதியும், ஐஸ்வர்யமும் தொடர்ந்து கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கிற நட்பு பலப்படும். நல்லதொரு கூட்டு முயற்சி கிடைக்கும்.   உங்களுடன் மோதியது மலையே ஆனாலும், அது இருந்த இடம் தெரியாமல் பந்தாடப்படும்.அடுத்த முறை, கூட்டம் அலர்ஜி என்று எண்ணாமல், தேர் திருவிழாவில் வடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்....!

எத்தனை நாள் தான் , தாங்க முடியாத சுமையோடு அமிழ்ந்து கிடப்பது , வாருங்கள் நாமும் சங்கீதம் ரசிப்போம்.....!
 

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com