Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நிஜமாகவே வாழ்க்கை என்றால் என்ன..?

| Jul 23, 2012
நமது வாசகர்களைப் பற்றி, எனக்கு எப்போதுமே உயர்வான எண்ணம் உண்டு. இணையம் என்னும் கடலில், கெட்டுப் போக கோடிக்கணக்கில் விஷயங்கள் இருந்தாலும், முத்துக்குளிப்பதற்கு சமமாக நமது தளம் போல  நல்ல நல்ல தளங்களை மட்டுமே பார்வையிடும் உயரிய கொள்கை உள்ளவர்கள். உங்களிடம் கேட்டால், ஒரு கேள்விக்கு விடை கிடைக்கும் என நினைக்கிறேன்...  ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல் , உங்கள் கருத்துக்களாக பின்னூட்டங்களில் வெளிப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன்.

கேள்வி இதுதான்..!

நிஜமாகவே வாழ்க்கை என்பது என்ன?

உயிர் உடலுக்குள் தங்கி இருக்கும் இந்த ஜென்ம வாழ்க்கையில் - எத்தனையோ எண்ணங்கள் - வாழ்க்கையைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. வாழ்க்கை ஓட்டத்தில் - வெறும் நினைவுகள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் எஞ்சி இருக்கிறது. அவை, நல்லதோ - கெட்டதோ..... வெறுமனே எண்ணங்கள். நினைவுகள் மட்டுமே. 

நல்லதையே நினை. நல்லதையே செய் என்று ரொம்ப சிம்பிளாக வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். ஆனால் என்ன செய்கிறோம்..? ஆடி , அடங்கி, கடைசியில், விழிகள் நிலை குத்தி , நம் சொந்த பந்தம் சுற்றி இருக்க, விடை பெறுகிறோம்... இடையில், நம்மால் முடிந்த அளவு , நம் வாழ்க்கை சிறக்க போராடுகிறோம், நம் குழந்தை, குடும்பம் அவர்களின் நல்லது கெட்டது, கூட வாழும் சொந்த பந்தம், சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது - இப்படித் தான் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே அடங்கி இருக்கிறது என நினைக்கிறோம்... நிஜமாகவே இதுதான் வாழ்க்கையா..? இல்லை இதைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்க, அதை அறியாமலேயே நம் கூடு அடங்கிவிடுகிறதா...?

என்ன ஏது என்று தெரியாமலேயே,  வாழ்ந்து முடித்து விடும் அளவுக்கு - வாழ்க்கை ஒரு அற்ப விஷயமா? ஒரு ஜென்ம வாய்ப்பு அல்லவா? அதை நாம் உணருகிறோமா..?  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் , நாம் இப்போது வாழும் வாழ்வில் - எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்...? அந்த விஷயங்கள் எல்லாம் நிஜமாகவே அந்த அளவுக்கு தகுதி வாய்ந்தவையா..? பக்குவம் என்ற பெயரில், இன்று அதி முக்கியமாக இருக்கும் விஷயமே, சில வருடம் கழித்து - ஒன்றும் இல்லாத விஷயமாக தோன்றுகிறதே...? எது நமக்கு நிரந்தரம்..?

எண்ணங்கள் - எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணர முடிகிறதா? சின்ன சின்ன விஷயங்களில் நம் ஆற்றல் வீணடிக்கிறோமே..! எத்தனை கோபம், வெறுப்பு, காழ்ப்புணர்வு , அதை ஒட்டிய நம் நேர விரயம், சக்தி விரயம்..! அவசரம், பதட்டம்..! 

 (எங்க வீட்டு காலண்டர் கூட தெரிஞ்சு வைச்சிருக்கிற விஷயத்தைப் பாருங்க..: அவசரப்படுவது ஈக்களை அடிக்க மட்டுமே உதவும்..!)

மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களுக்காக நம் முயற்சி, நம் அன்றாட வாழ்வில் மிக மிக குறைவே...! ஏன் இப்படி? இப்படியே தான் இருக்கப் போகிறோமா..?

உங்கள் கருத்து என்ன கொஞ்சம் சொல்லுங்க நண்பர்களே...! 

யோசித்து , உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்..! ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்... என்னுடன், நம் சக வாசக நண்பர்களும்! 
  ==============================================================

நான் சென்ற பதிவில் குறிப்பிட்டபடி, எழுதிக் கொண்டு இருக்கும் கட்டுரை இன்னும்  முழுமையாக நிறைவடையவில்லை. அனேகமாக நாளை முடிந்துவிடும் என நினைக்கிறேன். அதே நேரத்தில், தினமும் நமது தளத்தை பார்வையிடும் நமது வழக்கமான வாசகர்களுக்காக இந்த கட்டுரை. தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளியானது, நம் வாசகர்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். புதன்கிழமை, நமது  ஸ்பெஷல் கட்டுரை வரும் வரை, இந்த பதிவை பார்வையிட்டு உங்கள் எண்ண ஓட்டத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்...

அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்...

தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார்.

இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நிஜமாகவே ஆன்மீகம் என்றால் என்ன..? 

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,   இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிர வேறு யாரும் தெரியாது, உன்னை தவிர வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு
நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.  நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும்.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

ALL IS NOT GOD, BUT GOD IS ALL 

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
========================================================
 விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்...!

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா....

| Jul 18, 2012
அன்பு வாசகர்களுக்கு என் பணிவான வணக்கம். பதிவுகளில் ஒரு பெரிய இடைவெளி விழுந்ததற்கு மன்னிக்கவும். சில முக்கிய அலுவல்களில் முழு ஈடுபாட்டுடன், கவனச் சிதறல் இல்லாமல் ஈடுபட வேண்டி இருந்ததால், இணையதளம் பக்கமே வர முடியவில்லை. அன்போடு விசாரித்து மெயில் அனுப்பி இருந்த நண்பர்கள் அனைவருக்கும், மனமார்ந்த நன்றி. இனி, வழக்கம் போல் - வாரத்துக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று பதிவுகள் கண்டிப்பாக பதிவிட முயற்சி செய்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.....

இப்போது ஜோதிட நிலைமையில் பார்க்கும்போது - கிரகங்களில் கோச்சார ரீதியாக நடக்கும் சூழல், அவ்வளவு சுமுகமாக இல்லை. மிகப் பெரிய எதிரி கிரகங்கள் என்று கருதப்படும், செவ்வாயும் - சனியும் இணைந்து - கன்னி ராசியில் இருக்கின்றனர். பொதுவாக , பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமே இது கொஞ்சம் பொல்லாத நேரம் என்று தான் கூற வேண்டும். துலாம், விருச்சிக ராசி - இலக்கின காரர்களுக்கு ஓரளவுக்கு நேரம் பரவா இல்லை. மற்ற அனைவரும் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. கடந்த மூன்று / நான்கு வாரங்களாக நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமேயானால் , உங்களால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும். நல்லத்தானேயா வண்டி போய்க்கிட்டு இருந்துச்சு.. திடீர்னு மக்கர் பண்ணுதேன்னு தோன்றி இருக்கும்.   என்னய்யா இது..... இப்படியேத் தான் இருக்குமா வாழ்க்கை என்கிற விரக்திக்கு வந்துவிட வேண்டாம்... நிலைமை நிச்சயம் மாறும். முடிந்த அளவுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு கொஞ்சம் பொறுமையாக இருந்து விட்டால் போதும்.

இந்த இடைப்பட்ட நேரத்தில். உங்கள் முழு பலத்தையும் பயன் படுத்துகிறேன் பேர்வழி என்று தாம் தூம் என்று குதிக்காமல் , கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். புலி பதுங்குவதில் தப்பில்லை. இரையில் மட்டும் கண் இருக்கட்டும்... அகற்றாமல் கொஞ்சம் பொறுமை காத்து இருங்கள்... இப்போது கிடைக்கும் விருப்பமில்லா சூழ்நிலையையும், உங்களை இன்னும் மெருகேற்ற , பக்குவப்படுத்த என்று நினைத்துக் கொள்ளுங்கள்...

இஷ்ட தெய்வ வழிபாடு இந்த கால கட்டத்தில் மிக மிக அவசியம். உங்கள் மன பலம் பெருகி, இன்னல்களை தைரியமாக உடைத்து வெளி வர உங்களுக்கு சக்தி அளிக்கும். அவனைப் பற்றிக்கொள்ளுங்கள்... அவன் கருணையை ,  மகத்துவத்தை நீங்களே உணர முடியும் ......

நாம் நீண்ட இடைவெளி விட்டதினால், "உங்கள் தள வாசகர்களுக்கு இப்போதைக்கு இதை பதியுங்கள். உங்களுக்கு நேரம் கிடைத்த பின்பு வழக்கம்போல் கலக்குங்கள்" என்று கூறி நண்பர் Simple Sundar, OnlySuperstar.com கீழ்காணும் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். உண்மையில் நாம் படித்து தெளிவு பெறவேண்டிய பதிவு. அவருக்கு நன்றி.

அடுத்த பதிவு, உங்கள் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் அளவுக்கு, ஒரு ஸ்பெஷல் பதிவாக இருக்கப் போகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக பதிவிட முயற்சி செய்கிறேன்....


மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா....

இந்தப் பூவுலகில் நாம் படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு வகையில் நாமே காரணம். முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் பலன்களை இந்த பிறவியில் அனுபவிக்கிறோம். அப்படி என்றால் "நாம் செய்த பாவங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்றால்... "உண்டு!!".

செய்த தவறுகளுக்கு கண்ணீர் மல்க இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இனி பாவமென்ற ஒன்றை செய்யமாட்டேன் என்று அவனிடம் உறுதியளித்தால் அவரவர் செய்த பாபங்களின் தன்மைக்கேற்ப அவர்களது கர்மாவின் கடுமை குறைக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒரு பெரிய மரத்தை கட்டி இழுத்துச் செல்வது தான் உங்களுக்கு தண்டனை என்று வைத்துக்கொள்வோம்....  நீங்கள் அதை அனுபவித்தே தீரவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், அந்த தண்டனையின் கடுமை சற்று குறைக்கப்படுகிறது. எப்படி? அதே மரத்தை தண்ணீரில் இழுத்து செல்லவேண்டும் என்று தண்டனை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது அது சுலபமல்லவா? மரத்தை தண்ணீரில் இழுத்துச் செல்வதற்கும் தரையில் இழுத்துச் செல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

பாபம் செய்ததால் தான் நாம் இந்த மானிடப் பிறவி எடுத்திருக்கிறோம். சென்ற ஜன்மத்திலோ ஏன் இந்த ஜென்மத்திலோ கீழ்கண்ட பாவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ தெரிந்து தெரியாமலோ செய்திருப்போம்.

முதலில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்....

எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேன்?
என் இறைவா!

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்கு கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லி குடும்பம் கலைத்தேனோ?
நம்பியோரை நட்டாற்றில் நழுவ விட்டேனோ?
கலங்கி ஒளிந்தோரை காட்டி கொடுத்தேனோ?
கற்பிழந்தவளை கலந்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியரை அழித்தேனோ?
கணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ?
கருப்பம் அழித்து களித்திருந்தேனோ?
குருவை வணங்க கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ?
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?
பட்சியை கூண்டில் பதைக்க அடித்தேனோ?

கன்றுக்கு பாலூட்டாது காட்டி வைத்தேனோ?
ஊண் சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?
கல்லும், நெல்லும் கலந்து விற்றேனோ?
அன்புடையோர்க்கு துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?
வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்ததேனோ?
பகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ?
பொது மண்டபத்தை போய் இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?
சிவனடியாரை சீற வைத்தேனோ?
தவம் செய்தோரை தாழ்வு சொன்னேனோ?
சுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ?
தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ? இன்னது என்று அறியேன்.
என் இறைவா...
உய்யும் வழியும் உண்டோ - உணர்த்திடுவாய்
உலகெலாம் காத்திடும் உமையொரு பாகா!
தாயும், தந்தையும் நீ ஆவாய்
தனயன் என்னை மன்னித்தருள் செய்வாய்...

"ஆம்" என்று உங்கள் உள் மனம் கூறினால், இனியாவது அவற்றை தவிர்த்திடலாமே! எஞ்சிய நாட்களில் உத்தமனாக வாழ்ந்து, கருணைக்கடலாம் இறைவனின் மன்னிப்பை பெற்று நல் வாழ்வை அடைந்திடலாமே!!

(Source : ஏம்.எம் ராஜகோபாலன் அவர்கள் எழுதிய "வாழ்க்கை நெறிமுறை நூல்" Thanks : Simple Sundar, OnlySuperstar.com)

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com