Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஒரு குட்டிக் கதை

| May 31, 2012
எந்த ஒரு கணமும் , இறைவன் பார்வை நம் மேல் இருக்கும். சரி, இப்போது பயன் படுத்திக்கொள், இது உனக்கான நேரம் என்று - அவன் ஒரு சில சமயம் கதவைத் திறப்பதுண்டு. ஆனால், அது நமக்கு தெரியாமல், அசிரத்தையுடன் நாம் வேறு பாதையில் , சலிப்போடு பயணம் செய்வோம்.  அக்கறையுடன் எந்த வேலையும் செய்பவர்களுக்கு வாழ்க்கை அலுப்புத் தட்டுவதேயில்லை. அது ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றும் வேலையாக இருந்தாலும் சரி, வீடு துடைக்கும் வேலையாக இருந்தாலும் சரி, நண்பர்களோடு பேசுவதாக இருந்தாலும் சரி, சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி.

அக்கறையும், நேசமும் அப்பப்போ இருந்தால் போதாது. தொடர்ந்து இருக்க வேண்டும்.அதனால் எப்போதுமே, பலன்கள் அதிகமாக இருக்கும்.


இதை விளக்கும் ஒரு அருமையான கதையை, நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பி இருந்தார். படித்து முடித்த பிறகு, கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... நாமே , நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும்... வாழ்த்துக்கள்..!

===================================================================
பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன்.

அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு.

மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.

நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள்.

இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.

Thanks தினமலர் for the story

பொக்கிஷம்! A tabloid to succeed in real life Endeavours!

| May 30, 2012
நண்பர்களுக்கு வணக்கம். என்னோட சின்ன வயசுல ஏழு அல்லது எட்டு வயசு இருக்கிறப்போ எங்கள் ஸ்கூல் ஆண்டுவிழாவுக்கு கொடியேற்ற மாவட்ட கலெக்டரை சிறப்பு விருந்தினராக வரவழைத்து இருந்தனர். மிக நேர்த்தியான சபாரி டிரஸ். கூலிங் கிளாஸ் என்று பார்த்ததுமே மனதில் பதிந்த உருவம். அவர் பெயர் தங்கராஜ்.

அன்னைக்கே மனதில் ஒரு எண்ணம் பதிந்தது - நாமளும் ஒருநாள் பெரிய ஆளாகி, நம்ம ஸ்கூலுக்கு வந்து பசங்க முன்னாடி கொடியேத்தனும், சமூகத்தில பெரிய பொறுப்புல வரணும் என்று.  

உடனே அப்படி வந்தாச்சான்னு கேட்காதீங்க... கூடிய சீக்கிரம் வந்திடுவோம்னு நம்பிக்கை இருக்கு. எதுக்கு சொல்ல வர்றேன்னா, குழந்தைகள் மனதில் - ஒரு நல்ல எண்ணம் விதைக்கப் படுவது ரொம்ப முக்கியம் . நம் வாசகர்களில் யாரேனும் ஆசிரியப் பணியில் இருந்தால், அவசியம் இந்த கட்டுரையின் சாராம்சத்தை - உங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

நீங்கள் பொறுப்புள்ள பெற்றோராக உங்கள் குழந்தைக்கு - ஒரு நம்பிக்கை உற்சாக டானிக் கொடுக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் இந்த கட்டுரை மிக உதவியாக இருக்கும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசை இல்லாதவர்கள் யாருமே இல்லை. ஆனால் நிஜத்தில் ?
வெற்றி பெற நினைத்து, முட்டி , மோதி , உழன்றுகொண்டு - நல்லதுக்கு காலமே இல்லைப்பா என்று ஒதுங்கி விட்டீர்களா? மனதை தளர விடாதீர்கள்..! அவசியம் இந்த கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்..!

 இணையம் பயன்படுத்துபவர்களில் பாதிக்கும் மேல் நேரத்தை வெட்டியாக கழிப்பதில் தான் ஈடுபடுவர். ஆனால், ஒரு சில வாசகர்கள் தேடித் தேடி நல்ல பதிவுகளை படிக்கின்றனர், பல ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு இணையத்தை பயன்படுத்துகின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு குப்பை அதிகமோ, அதே அளவுக்கு மாணிக்கமும் நிறைந்த ஒரு அதிசயம் இணைய தளம். தேடும் நமக்குத் தான் - தெளிவான இலக்கும், சிந்தனையும் வேண்டும்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அப்படித்தானே . இலக்கு தெளிவில்லை என்றால், எங்கெங்கோ அலைவது தான் நடக்கும்.

அப்படித் தேடி எடுத்த மாணிக்கம் போன்ற ஒரு அபூர்வ கட்டுரையை, நம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்...! கீழே அந்த கட்டுரைகளின் லிங்கைக் கொடுத்துள்ளேன். நம் வாசகர்கள் ஒவ்வொருவரும், அவசியம் படிக்க வேண்டிய பதிவு...

சென்ற வாரத்தில் நமது தளத்தில் வெளியான - சுவாமி ஐயப்பன் கருணை கிடைத்த தொழிலதிபர் திரு. சந்திரசேகரன் அவர்கள் பற்றிய கட்டுரையை படித்து இருப்பீர்கள்... அவரது பேட்டியை முழுவதும் படிப்பதற்கு ஆவலாகவும் இருந்து இருப்பீர்கள்.

கிட்டத்தட்ட விரக்தியின் விளிம்பில் - இனி வாழ்க்கையே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்ட , ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த சம்பவத்தை - அவர் கடந்து வந்த பாதையை, அவரது வாழ்வியல் கோட்பாடுகளை, வெற்றி ரகசியத்தை - அவரே பகிர்ந்து கொண்டு இருக்கிறார். எத்தனையோ கம்பெனிகளை நிர்வகித்துக் கொண்டு, நேரத்திற்கு சாப்பிட, தூங்க கூட முடியாமல் இருக்கும் இந்த மாமனிதர்,  இதற்கென நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

இவரைப் போன்ற வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எல்லாம், அவர்களது கடந்து வந்த பாதையை, வெளிச்சம் போட்டு காட்டுவது அபூர்வம். எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களை, அறிஞர்களின் உரைகளை  புத்தகங்களில்  படித்தாலும், கண் முன்னே வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை நாம் உணர்வதற்கு ஈடாகாது.

மிக நேர்த்தியாக , அவரது கருத்துக்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து , படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் நம்பிக்கை சுடரை தூண்டி விட்டிருக்கும் நண்பர் சுந்தருக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய பேட்டியை நேர்த்தியாக வடிப்பதற்கு அவர் உழைத்து இருக்கும் உழைப்புக்கு இன்னொரு ராயல் சல்யூட்.

அரை குறையாக நம்பியும், நம்பாமலும் கடவுளை வணங்கும் அனைவருக்கும், இவர் மேல் இறைவன் காட்டிக் கொண்டிருக்கும் கருணையை உணர்ந்த பிறகு, இறை நம்பிக்கை பல மடங்கு அதிகமாகும்.பொறுமையாக, ஓய்வு நேரத்தில் படியுங்கள்... உங்களின் பலப்பல கேள்விகளுக்கு, வாழ்க்கை புதிர்களுக்கு -  விடைகள், இந்த கட்டுரைகளில் ஒளிந்து இருக்க கூடும். 

படித்தோம், மறந்தோம் என்று இல்லாமல், எதை எல்லாம் வாழ்வில் நடைமுறைப் படுத்த இயலுமோ, அதை உடனடியாக நடைமுறைப் படுத்துங்கள்.. நிச்சயம் உங்கள் வாழ்வில் பல மடங்கு முன்னேறுவீர்கள்!

To read the interview of the legend - Mr. Chandra sekaran, please click on the following links :
You will proudly feel that you are gifted by God to read these articles.

சாம்பிளுக்கு :
======================================================================
திரு.ஆர்.சந்திரசேகரன் : எந்தக் கடவுள் கிட்டயும், நாம் வேண்டுவது ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். 1) அமைதியான வாழ்க்கையை கொடு 2) நிம்மதியான வாழ்க்கை கொடு 3) பிறருக்கு உதவும்படியான வாழ்க்கையை கொடு. இது மட்டும் தான் நாம் இறைவனிடம் வேண்டக்கூடியது. இது மூன்றையும் வேண்டினாலே எல்லாம் வந்துடும்.

அமைதியான வாழ்க்கை எப்படி வரும்? குடும்பத்துல எந்த சண்டை சச்சரவும் இல்லாம எல்லாரும் சந்தோஷமா இருந்தா அமைதி தானா வரும். நிம்மதி எப்போ வரும்? நாம் செய்யும் காரியத்துல ஒரு தன்னிறைவு நமக்கு ஏற்பட்டா நிம்மதி தானே வந்துவிடும். பிறருக்கு உதவக்கூடிய வாழ்க்கை எப்போ வரும்? பொருளாதார ரீதியாக நாம தன்னிறைவு பெற்று நம்மகிட்டே எக்ஸசா பணம் இருக்கும்போது தான் பிறருக்கு உதவமுடியும்.

So, மேலே சொன்ன மூன்றும் வேண்டிப் பாருங்க…. வாழ்க்கையில உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். நிறைவான வாழ்க்கை என்பது தான்.
“கேளுங்கள் கொடுக்கப்படும்…. தட்டுங்கள் திறக்கப்படும்….” அப்படின்னு சொன்னது உண்மை. கடவுளுக்கு இப்போல்லாம் நேரம் இல்லே. பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாயிடிச்சு. So, நம்ம ப்ரேயர் எப்பவுமே ஷார்ட் & ஸ்வீட்டா இருக்கணும்.
======================================================================
படித்து முடித்த பிறகு, யாரேனும் ஒருவருக்காவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற துடிப்பும், நம்பிக்கையும் அதிகமானால் - அதுவே இந்த கட்டுரை ஆசிரியருக்கு கிடைத்த வெற்றி!

இவ்வளவு நேர்த்தியான கட்டுரையை படைத்த திரு.சுந்தர் அவர்களை, நேரில் தொடர்பு கொண்டு பேசினேன். எப்படி இவரைப் பற்றி வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது? படிக்கும் எங்களுக்கே இப்படி இருக்கிறதே! நேரில் நீங்கள் இருந்த போது எப்படி உணர்ந்தீர்கள்? முதலில் உங்களுக்கு இவரைப் போன்ற மனிதர்களை சந்திக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது? என்று கேட்டேன்.

அவர் சொன்ன சிம்பிளான பதில். "ரிஷி, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு வெறியாக உள்ளே பதிந்து விட்டது.  அந்த எண்ணமே, இதைப் போன்ற சாதாரண நிலைமையில் இருந்து சாதித்துக் காட்டிய ஒவ்வொருவராக எனக்கு அடையாளம் காட்டுகிறது. முதலில் அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு, என்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வருகிறேன். இவற்றில், மிகச் சிறந்த கட்டுரைகளை , எனது இணைய தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்...

திரு.சந்திரசேகரை சந்தித்தது, என் வாழ்வின் பெரிய திருப்புமுனை ... ஐயப்பனின் செல்லக் குழந்தையாக இருக்கும் இந்த மகா மனிதரை, அவரது நெருங்கிய வட்டம் தாண்டி - வெளியுலகத்துக்கு தெரிய வைக்க உரிய நேரத்தில் , அந்த ஹரிஹர சுதனே என்னைக் கருவியாக பயன்படுத்தி இருக்கிறான். அந்த வகையில் நான் பாக்கியசாலி. என்னையும், என் இணைய தளத்தையும், ஐயனின் கையில் ஒப்படைத்துவிட்டேன். கீழே உள்ள ஐயப்பன் படத்தைப் பாருங்கள். அருள்பாலிக்கும் கரத்தின் கீழே, தளத்தின் லோகோ இருக்கும்." என்று பரவசத்துடன் கூறுகிறார்.

என்னை மாதிரி லட்சக்கணக்கில் வாசகர்கள் , நேரத்தை முறையாக பயன்படுத்தாதவர்கள், பயன் படுத்த தெரியாதவர்கள் - என்று நிறைய பேர் இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்காவது இது மனதில் பதிந்து , நம்பிக்கையை பலப்படுத்தும், பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகமாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நாங்களும் சாதிப்போம் ஒரு நாள் , இதே மாதிரி நாங்களும் ஒரு நாள் சாதனையாளர்களாக அறியப்படுவோம் " என்று நம்பிக்கையுடன் கூறினார்.  இந்த பெரிய மனதுக்கு , அவரும் அவரது நண்பர்களும் எடுக்கும் முயற்சிகள் வரலாறு படைத்திட, இறைஅருள் என்றும் துணை புரியட்டும்!

உங்களால் முடிந்தவரை , உங்கள் நட்பு வட்டாரத்தில் இந்த கட்டுரைகள் சென்றடைய உதவுங்கள்.. வாழ்க்கையின் வெற்றி சூட்சுமத்தை உணரும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

Part - ONE

அன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!


Part  - TWO

மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்து தான் வாழ்வை மாத்துவான் — கிரானைட் & ஹோட்டல் அதிபர் ஆர்.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு! — PART II

Part  - THREE

“ரஜினியைப் போல உண்மையான உழைப்பு & நேர்மையான பக்தி இரண்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!” – கிரானைட் அதிபர் திரு.சந்திரசேகரனுடன் ஒரு சந்திப்பு – FINAL PART!!


 வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

குளிர்ந்த நாயகியின் மனம் குளிர்ந்தால் எதுவும் நடக்கும்!

| May 28, 2012
நமது வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, இங்கே ஒரு அன்பர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதிசயம்! அற்புதம் ! இதைப் போன்ற பிரச்னை, பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. மருத்துவம் ரொம்ப சிம்பிளாக உணவில் ரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் தான் என்று சொல்லிவிடுகிறது. இங்கே அம்மனின் கருணையை பாருங்கள்.. அருமையான அனுபவம். நேரில் உணர்ந்தவர் எந்த அளவுக்கு மெய் சிலிர்த்து இருப்பார் என்பதை உணரமுடிகிறது! இந்த கோவிலுக்கு செல்ல  - சென்னை பூந்தமல்லி, திருவள்ளூர், திருநின்றவூர் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது..!

இந்த சம்பவம் நடந்தது - ஒரு வாரத்திற்கு முன் தான். அதனால் , இந்த பிரச்னை என்று இல்லை, உங்களுக்கு என்ன நியாயமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அம்மனிடம் கேளுங்கள்! இப்போதும் உயிர்த்துடிப்புடன் அம்மன் இருப்பதற்கு ஒரு சாட்சி, இந்த சம்பவம்..! படித்துப் பாருங்கள்!  
இந்த அருமையான கட்டுரையை அனுப்பி வைத்த ஸ்ரீவத்சன் சாருக்கு, வாசகர்களின் சார்பில் என் மனமார்ந்த நன்றி!

======================================================================
அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். மிக சமீப கால அளவையில் என் சகோதரியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த நிகழ்வை பகிர்கிறேன்.

என் மூத்த சகோதரிக்கு சில மாதங்களாக பெண்களுக்கான பிரச்சனை கூடுதாலாக (hypermenorrhea) இருந்தது. போக்கு நிற்காமல் சற்று ஏறக்குறைய  3 மாதங்களாக தொடர்ந்தது. அவர் ஏற்கனவே சர்க்கரை நோயாளி வேறு இந்த பிரச்சனை அவரை பலஹீன சூழலை நோக்கி இட்டுச் சென்றது. அதிக மன உளைச்சலும் விரக்தியும் தொடர்ந்தது.

அவர் பார்க்காத மருத்துவம் இல்லை, செல்லாத மருத்துவர் இல்லை. அத்திப்பட்டை, அசோகாரிஷ்டம் முதல், harmone ஊசி வரை எல்லா வழிகளையும் பார்த்தாகி விட்டார். ஒரு scan report-இல் node என்றும் இன்னொரு report-இல் adenomyosis என்றும் சொல்லப்பட்டது (18-05-2012). ஒரு மருத்துவர் எதோ புது விதமான மருத்துவத்தில் 60% குணமாக வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கு 1.5 லட்சம் செலவாகும் என்றும் சொன்னார். இன்னொரு இடத்தில் இதற்கு ஒரே வழி கருப்பையை அகற்றி விடுவது என்று சொன்னார்கள்.

இப்படி என்ன செய்வது என்று தெரியாமல் உடல் உபாதையில் தவித்து கொண்டிருந்த நிலையில், "நான் ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டேன்" என்று புலம்பும் நிலைக்கு  வந்து விட்டார். இதற்கு இன்னொரு காரணம் இப்படியே போக்கு தொடர்ந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு cancer வந்துவிடும் என்று பல மருத்துவர்கள் மிரட்டியது! 21-05-2012 அன்று மற்றுமொரு பரிசோதனைக்காக என் சகோதரியை வர சொல்லி இருந்தார்கள்.

இடையில் நான் 19-05-2012 அன்று திருமழிசை உறை குளிர்ந்த நாயகியிடம் மனதளவில்  ஒரு பிரார்த்தனை வைத்தேன். "உன் மனமும் வயிறும் குளிரட்டும், நீ இந்த பிரச்னையை நிறுத்து, உன்னிடம் நான் உடனடி magic எதுவும் எதிர்பார்க்கவில்லை. உனக்கு 2 நாள் அவகாசம் தருகிறேன் 21-05-2012 அன்று இந்த போக்கை  நிறுத்த ஏற்பாடு செய்" என்றேன். கடவுளிடம் வியாபாரம் செய்யும் போக்கு எனக்கு பிடிக்காது என்றாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேறு வழி தெரியாமல் உனக்கு பாலாபிஷேகம் செய்கிறேன் என்று பேரம் பேசினேன். இந்த வேண்டுதல் எனக்கே வேடிக்கையாகவும் முட்டாள்தனமாகவும் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை.
திங்கள்கிழமை (21-05-2012) அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வரும்போது என் சகோதரிக்கு எப்படி இருக்கிறாய் என்று ஒரு sms அனுப்பினேன். "இன்று பரவாயில்லை" என்று பதில் வந்தது. அப்படிஎன்றால் என்ன என்று மீண்டும் கேள்வி எழுப்பினேன் "இன்று போக்கு இல்லை" என்று பதில் வந்தது. அதிகமாக இல்லையா இல்லை முற்றிலும் இல்லையா என்று  மீண்டும் கேட்டேன். "இன்று சுத்தமாக இல்லை" என்று பதில் வந்தது. எனக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. உடனே அவருக்கு இது குளிர்ந்த நாயகியின் அருளில் நிகழ்த்த விஷயம் என்றேன். இருந்தாலும் கொஞ்சம் அவநம்பிக்கை, ஒரு நாள் நிகழ்வை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வருவதா என்று. ஆனால் குளிர்ந்த நாயகியின் அருளில் இன்று வரை (27-05-2012) பிரச்னை இல்லை.

என் சகோதரி என்று கோவிலுக்கு வர முடியும் என்பது தெரியாததால் 26-05-2012 சனிக்கிழமை நான் போய் பாலபிஷேகம் செய்து வந்தேன். இன்று 27-05-2012 என் சகோதரி வந்தார். மீண்டும் ஒரு முறை பாலபிஷேகம் செய்து வந்தோம். குருக்கள் என்ன விஷயம் என்று கேட்டார், ஒரு வேண்டுதல் நிறைவடைந்தது அதன் பொருட்டே பாலபிஷேகம் என்றேன்.
 
அவர் நான் இந்த கோவில் குருக்கள் என்பதால் சொல்லவில்லை இங்கு மனப்பூர்வமாக எதாவது வேண்டிக்கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும். இந்த சுவாமியின் பேரே சீதளாம்பாள் (சமஸ்க்ரிதத்தில் குளிர்ந்த நாயகி) சமேத மனோ அனுகூல சுவாமி (நினைத்ததை நடத்துபவர்) என்றார்.

இந்த ஒத்தாண்டீஸ்வரர் கோவிலை குறித்த முழு விபரங்களையும் படங்களையும் http://drlsravi.blogspot.in/2011/01/sri-seethalambikai-sametha.html என்ற பதிவில் பார்க்கலாம். இந்த பதிவை மிக அருமையாக செய்துள்ள  Dr. ரவிசங்கர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

நம்புங்கள் குளிர்ந்த நாயகியின் மனம் குளிர்ந்தால் நடக்காதது என்பது எதுவும் இருக்காது.

Srivathsan Margan


Nothing exists except atoms and empty space; everything else is opinion.
 - Democritus of Abdera (470 BC - 360 BC)

ரங்கா...! என் ரங்கா!

| May 25, 2012
மீண்டும் ஒரு அசத்தலான அனுபவம்! வாசகர்கள் பார்வையில் எங்கே தப்பிவிடப் போகிறதோ என்று எண்ணி..தனிப்பதிவாக....!
 ============================================================
THEIVAM said...


திரு சிட்டி ஸார், ரிஷி ஸார், வணக்கம், என் அன்னையாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் என்னுள் இருந்து என்னை வழி நடத்தும் என் குருவின் மகிமைகளை சொல்ல வார்த்தை ஏது? நம் கண்முன்னே எத்துனை ரஜினி ஸார், ராகவா லாரன்ஸ் இப்படி எத்தனையோ பேர். சரி என் வாழ்வில் திருவரங்கன் நடத்திய ஒரு விளையாட்டை சொல்கிறேன். எப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் வருவதை தடுக்க முடியாது. எங்கள் பரம்பரையில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை திருவரங்கனுக்குத்தான் அவர்தான் எங்கள் பரம்பரை குடிபாட்டு தெய்வமாம் (என் தந்தை என்னிடம் கூறியது) ரிஷி ஸார் குடிபாட்டு தெய்வம் என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கவும்).

 2001 ம் வருடம் எனக்கு அப்பொ மாத சம்பளம் ரூ.950/- மட்டுமே.நான் என் வறுமையின் பிடியில் சிறுக சேர்த்து ரூ.400/- வைத்து இருந்தேன், வருடம் ஒரு முறையாவது அரங்கனை தரிசித்து விடுவது வழக்கமான குடும்ப நடைமுறை, நான், என் மனைவி, என் 1 1/2 வயது பெண் குழந்தையுடன் கரூரில் இருந்து பஸ்ஸில் அதிகாலை 3.30க்கு கிளம்பினோம் என் சட்டையில் பாக்கெட் இல்லாததால் (கோவிலுக்கு செல்லும் போது வேஸ்டி அணிவது என் வழக்கம்) என் மனைவி ரூ.400/- வைத்து இருந்தார் அதை தவிர எந்த ஒரு பைசாவும் என்னிடம் இல்லை. வழக்கம் போல 80% பெண்களை போல பணத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருந்தார் 6 மணியளவில் அம்மா மண்டபத்தை அடைந்து காவேரில் குளிக்க தயார் ஆனோம்.

 என் மனைவி பணம் நாங்கள் குளிக்க தயாரான இடத்தில் விழுந்து விட்டது, எங்கள் உடமைகளையும் அங்கேயே வைத்து விட்டு என் மனைவியை உடமைகளை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, நான் குளித்து விட்டு வந்து என் மனைவியை குளிக்க போக சொன்னேன். இதற்கிடையில் ஒரு பணக்கார குடும்பம் (கழுத்து ஃபுல்லா நகை, 10 விரலும் மோதிரம், உயர் ரக ஆடைகள் , சொகுஸு கார் இதெல்லாம் இருந்தா பணக்கார குடும்பம் தானே) நான் நிற்கும் இடத்திற்கு அருகில் தங்கள் உடைமைகளை வைத்தனர் அவர்களில் ஒருவர் தன் சட்டயை கழற்றி என் காலடியில் போட்டார், அவர் மனைவி "என்னங்க ஈரத்துல சட்டய போடுறிங்க என்றார்".

 அதற்கு அவர் கொஞ்சம் சும்மா இருடி என்று அதட்டியாவாறு கிழே குனிந்து சட்டயை எடுத்து சுருட்டி மடித்தார். இதற்குள் என் மனைவி குளித்து விட்டு வந்து பணத்தை காணவில்லை என்றார். என் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது வேறு பணம் இல்லை,கோவிலுக்கு போக வேண்டும் தேங்காய் பழதட்டு வாங்க வேண்டும், துளசி தாமரை வாங்க வேணும், முக்கியமாக கரூர் திரும்ப வேணும், 80 கிலோ மீட்டர் கையில் குழந்தை வேறு என்ன செய்வேன்.

 "என் அரங்கா, பச்சை மாமலைபோல் மேணியனே என் குழந்தைக்கு பசிக்குமே அதற்கு பால் வாங்க கூட என்னிடம் பணம் இல்லையே ஆயர் பாடி கோபாலா, என்று என் உள்ளம் கதறியது, என் மனைவி ரங்கா ரங்கா என்று கதறினாள் என் குழந்தை மட்டும் சிரித்தது அப்போதுதான் கவனித்தேன் எங்களிடம் இருந்த ஒரே நகை என் குழந்தையின் கால் கொலுசு என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் ஆறுதல் சொன்னேன் இந்த கொலுசை எங்காவது விற்று விட்டு அரங்கனை தரிசிப்போம் என்றேன். என் மனைவி சொன்னார் "அப்பாடா அப்போ சாமிய பார்த்துடலாம்" அவரை பொருத்தவரை சாமிய வெரும் கையுடன் பார்க்க முடியாதே என்ற கவலை மட்டுமே.

வாழ்க்கை முழுவதும் உணவளிப்பவருக்கு ஒரு தேங்காய் கூட உடைக்க முடியாதே என்ற கவலை மட்டுமே, இதற்கிடையில் என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் குளிக்க சென்று இருந்தார், அரங்கனின் ஆணைப்படி காவேரி அன்னை அவரின் 2 விரல்களில் இருந்த 2 பவுன் மோதிரங்களை தன்னுடன் எடுத்து கொண்டாள், நாங்கள் ஆடை மாற்றி கிளம்பிய போது, என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் மனைவி ஓடி வந்து இதுவரை நீங்கள் அழுததை பார்த்தேன் இந்தாங்க உங்க பணம் என் கணவர்தான் சட்டய போட்டு எடுத்தார் இதற்கு பதிலாக 2 பவுன் மோதிரம் தண்ணில போச்சு என்றார் உங்க பணத்தை எடுத்ததுக்கு நீங்க சாமிகிட்ட சொல்லி மண்ணிக்க சொல்லிடுங்க 2 பவுனோட போகட்டும் பெரிசா எதுவும் ஆகிட போகுது என்றார்.நாங்கள் அரங்கனை தரிசித்து அவருக்காக மன்னிப்பு வேண்டி ஊருக்கு நல்ல முறையில் வந்து சேர்ந்தோம். "நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்"


===================================================
மெய் சிலிர்க்கிறது...! இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு வாசகர்கள் சார்பில் - மனமார்ந்த நன்றி!

" நம்பி ! பொறு "

|
இன்னைக்கு காலையில் காலண்டர் பார்த்தால்... நம்பியாண்டார் நம்பி திரு நட்சத்திரம். பிள்ளையாரிடம் அவர் சாப்பிட வரவில்லையே என்கிற காரணத்தால் தன் தலையை அவர் மடியில் முட்டி, முட்டி - உயிரை விட எத்தனிக்கும் அந்த குழந்தை ஞாபகம் தான் உடனே வந்தது. தெய்வத்துக்கே தாங்க முடியாமல், " நம்பி ! பொறு " என்று அவரைத் தடுத்தார் விக்னேஸ்வரன்..! நல்ல விரிவான கட்டுரை நம்பியாண்டார் நம்பி பற்றி விரைவில் எழுதுகிறேன்.ஆயிரம் வருஷத்துக்கு முன்னாலே, இந்த நாளில் பிள்ளையார் ஒரு குழந்தைக்கு காட்சி கொடுத்து இருக்கிறார். ராஜ ராஜ சோழன் காலம் அது! கரூர் தேவரும் வாழ்ந்த காலம் அது. அப்போ எல்லாம் , காட்சி கொடுத்த பரம்பொருள், இப்போ மட்டும் இல்லவே இல்லைன்னு , ஏன் நாம நினைக்கணும்... ! நம்புங்கள்.. அவன் அருள் கிடைப்பது நிச்சயம்! 

நம்பி , பொறு என்பது - எனக்கென்னவோ , காலையில் இருந்து " நம்பிப் பொறு " என்று தான் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது! இங்கே வந்து பார்த்தால் , நமது வாசகர் ஒருவரும், எவ்வளவு நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்கிறார் என்பதை , ஒரு பின்னூட்டம் மூலம் மிக அழகாக எழுதி இருக்கிறார்....!

நமது சென்ற கட்டுரைக்கு வந்த ஒரு அருமையான பின்னூட்டம். சகோ. யவனிகை அவர்களிடமிருந்து. அவர்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இட முயற்சித்தால், நீ ரொம்ப பேசுற, பதிவு ரொம்ப பெரிசு, அதனால முடியாது ன்னு கூகுள் ஐயா சொல்லிட்டாரு. அதுவும் நல்லதுக்குத் தான். கமெண்ட்ஸ் ல போட்டா, எல்லோரும் பார்ப்பாங்களோ இல்லையோ? அதனாலே, தனி பதிவாவே போட்டுடலாம்னு - அவங்க பின்னூட்டமும், எனது ஒரு சுவாரஸ்யமான அனுபவமும்... கீழே கொடுத்துள்ளேன்...!
 ===============================================================
Blogger யவனிகை said...
பொதுவாக பெண்கள் சிவனை அதிகம் கும்பிடக்கூடாது, சின்ன தப்புனாலும் ரொம்ப கஷ்டபடுதிருவாரு அப்டினெல்லாம் சொல்வாங்க, ஆனா என்ன ஆட்கொண்டது எங்க அப்பாதாங்க, சின்ன சின்னதா எனக்கும் என் மூலமா என் நண்பர்களுக்கும் நடத்துன நடத்துற அதிசயத்த என்னன்னு சொல்ல, ஒண்ணுமில்ல வழக்கமா அபிஷேகத்துக்கு வாங்குற பொருட்களுக்கு பதிலா இந்த தடவ பிரதோஷத்துக்கு மாலை வாங்கிட்டு போவோம்ன்னு தோணும், போய் பாத்தா இருக்குற வெறும் பூவ மட்டும் வச்சு அலங்காரம் பண்ணிருப்பாங்க, நம்ம மாலை மட்டும்தான் அங்க பெரிய மாலையா அப்பாக்கு போடுவாங்க, இதெல்லாம் சத்தியமா கோஇன்சிடன்ஸ் இல்லன்னு உணர்ந்தவங்களுக்கு புரியும்,

நா குருவா நினைக்கிறது என் மகாவதார் பாபாஜி, என்னோட கோவில்னு சொன்னா திருவண்ணாமலைதான், அதோட சிறப்புபத்தி ரிஷி சாரே எவ்வளவோ சொல்லி இருக்காரு, 2 வருஷமா மனைவிகூட சேர முடியாம எல்லா கோவிலுக்கும் போய் எல்லா பரிகாரமும் பண்ண என் நண்பர ஒரு தடவ என்மூலமா கிரிவலம் கூட்டிட்டு வர வச்சாரு, எண்ணி 2 நாள், அந்த பொண்ணு போன்கால் அட்டென்ட் பண்ணி கோபமாவாவது பேசுச்சு, அவருக்கு அதுவே பெரிய விஷயம், 2 மாசம், இப்போ ஒன்னு சேர்ந்து சந்தோஷமா இருக்காங்க, என் விஷயத்தையே எடுத்துகிட்டாலும் 3 வருஷமா போராடுறேன் விடிஞ்சிரும் விடிஞ்சிரும்ன்னு, எல்லா கோவிலும் போறேன், எல்லா பரிகாரமும் பண்றேன், நா சில சமயம் வெறுத்து நேரம் நல்லா இருந்தாதான் சாமிகூட உதவும், நேரம் நல்லா இல்லைனா சாமிகூட கை விரிச்சிரும்னு அழுது புலம்பி இருக்கேன்,

ஆனா அப்பவும் நா விட்டாலும் அவர் என்ன விடாம புடிச்சு இழுத்துகிட்டு வருவாரு, நா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா சரணடைங்க, சந்தேகமில்லாத முழுமையான சரணாகதினால மட்டும்தான் அவர அடைய முடியும், நல்லவங்கள நெறைய சோதிப்பார் சாவோட விளிம்புக்குகூட கூட்டிட்டு போவார் ஆனா கைவிட மாட்டார்.அவர் ரஜினி மாதிரி கரெக்டா வரவேண்டிய நேரத்துக்கு கண்டிப்பா வருவார், சிவன கும்பிடுங்க செல்வாக்கு உயரும்,

அப்புறம் ஒன்னு பிரிஞ்சவங்க ஒன்னு சேரணும்னா ஸ்ரீ சரபேஸ்வரர் பிரத்யங்கரா தேவி அம்மாக்கு விளக்கு போட்டு அமாவாசை யாகத்ல கலந்துக்கோங்க, இதவிட இதுக்கு சரியான பரிகாரம் இருக்க முடியாது, ரிஷி சார் சரிதானே,

நீங்க கும்புடுற கோயில் உடனே எனக்கு பலிக்காது, நா கும்புடுற கோவிலும் உடனே உங்களுக்கு பலன் குடுக்காது, ஆனா அவரே உங்களுக்கு உணர்த்துவார் யார் மூலமாவது எது மூலமாவது, ஆண்டவன கேளுங்க, அவர் உங்க குருவ காட்டுவர், அவர் மூலமா உங்க நியாயமான கோரிக்கை நிறைவேறும், ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்னைக்காவது நானும் என் கோரிக்கைய நிறைவேத்துன அதிசயத்த எழுதுவேன் அப்டிங்கற தைரியத்ல - ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்
May 24, 2012

====================================================================
சகோதரி யவனிகை அற்புதமாக தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.  அண்ணாமலையாரின் பக்தை நீங்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும், நமது வாசகர்களுக்கும் நான் இன்னொரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

கிரிவலம் செல்லும்போது, வழக்கமான பாதையில் தான் பெரும்பாலோர் சென்று இருப்பார்கள். அஷ்ட லிங்க தரிசனம் செய்தபடி, தார் ரோட்டில் நடந்து செல்லும் பாதை. அதற்கே சிலருக்கு நடப்பது கடினம். ஆனால் சதுரகிரி, பர்வதமலை மாதிரி நடந்து பழக்கப் பட்டவர்களுக்கு - " என்னடா, இது , தார் ரோட்டில் நடந்து செல்கிறோம், மலை உள்ளே தூரத்தில் இருக்கிறதே" என்று யோசித்து இருக்கலாம். இன்னொரு கிரிவலப் பாதை இருக்கிறது. மலையை ஒட்டி உள்ளே சுற்றவேண்டி இருக்கும்.

பாதை நடந்து செல்ல ஏதுவாக இருந்தாலும், கொஞ்சம் கடினமானது. சுற்றிலும் புதர்கள், முட்காடுகள், காட்டு விருட்சங்கள் என்று - அது ஒரு அலாதியான அனுபவம். வெளியில் இருந்து நடப்பவர்களுக்கு - முழுக்க முழுக்க சிவ நாமம் ஜெபித்தபடி செல்வது எளிது. ஆனால், உள்ளே சுற்றினால், நீங்கள் மலையை கண்குளிர தரிசித்தாலும், பாதையில் கவனம் வைத்தே தீர வேண்டும். காலில் செருப்போ, ஷூவோ இல்லாமல் செல்ல முடியாது. ஆனால், மிக பிரமாதமான, மனதுக்கு திருப்தி அளிக்கும் கிரிவல அனுபவம் கிடைக்கும். பகலில் மட்டுமே செல்ல முடியும்.

ஒரு குழுவாக கண்டிப்பாக செல்ல வேண்டி இருக்கும். இடையில் , காட்டு சிவா குளம் என்று ஒரு குளம் இருக்கிறது. ஸ்படிக சுத்தமான தண்ணீர். களைப்பு தீர குளித்து செல்லலாம். ஆங்காங்கே இன்றும் சில முனிவர்கள் தவம் இயற்றும் குகைகள் இருக்கின்றன. இன்னும் ஆச்சர்யமாக சில அயல் நாட்டுப் பக்தர்கள் தீவிர தியானத்தில் இருப்பதையும் காணலாம். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த மாதிரி தியானத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது, நமக்கே கொஞ்சம் குற்ற உணர்ச்சி வரும். இவர்களே இப்படி இருக்கும்போது, பிறந்தது முதல் நம் பழக்க வழக்கங்களில் ஊறிய நாம் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த வில்லையே என்று தோன்றும்... 

வெயிலில் நடந்து வந்த களைப்பு தீர , குளத்தில் ஒரு ஜில் குளியல் குளித்துவிட்டு , அருகில் ஒரு சித்தர் குகை ஒன்று சிறிய லிங்கத்துடன் இருக்கும், அவரை வணங்கிவிட்டு மேலே பயணத்தை தொடரலாம். இந்த சித்தரைப் படம் பிடித்து விஜய் டி.வி.யில் கூட சில மாதங்கள் முன்பு ஒளி பரப்பினார்கள். ஒளி ரூபத்தில் அவர் உள்ளே நுழைந்ததையும், வெளியேறியதையும். மொத்த கிரிவலமும் ஐந்து மணிநேரத்தில் முடியும். நடக்கும் தூரம் என்று பார்த்தால் , வெளியே நடப்பதைவிட கம்மிதான்.

நான் சென்றமுறை சென்றபோது - காலில் செருப்பு இல்லாமல் சென்று, கொதிக்கும் வெயிலிலும் , முள்ளிலும் மாட்டிக்கொண்டு, சிரமப்பட்டேன். என்னடா, அவரது செல்லப்பிள்ளை என்று நினைத்துக் கொண்டு இருந்தோமே, இவ்வளவு கஷ்டப்படுத்துகிறாரே என்று கூட நினைத்தேன். இலை, தழை எல்லாம் கூட கட்டிப் பார்த்தேன்.. ஓடி, ஓடி நடக்க வேண்டி இருந்தது.. கூட வந்த நண்பர்கள் கொஞ்ச தூரம் செருப்பை மாற்றி, மாற்றி கொடுத்து உதவினார்கள். ஆனால், அவர்கள் படும் கஷ்டம் பார்த்து எனக்கு மனது ஒப்பவில்லை. அதனால், நம் பாவத்தை நாமே சுமப்போம் என்று தொடர்ந்தேன்...

இடையில் காட்டு சிவா குளம் வந்ததும், அந்த குளிர்ந்த நீரின் சில்லிப்பும், மீன்கள் காலை செல்லமாக கடிக்கும்போது கொடுத்த இன்பமும், "வாவ்... இதற்கே காலில் செருப்பு இல்லாமல் வந்து இருக்கலாமோ" என்று தோன்றியது... சொர்க்கம். அடித்த வெயிலுக்கு ஒரு அரை மணி நேரம் குளித்த அனுபவத்தில், மீதி பாதி தூரத்தை ஓட்டி விடலாம் என்று தோன்றியது. ஆனாலும், உள்ளுக்குள் ஒரு கிலி. என்னதான் வெயில் தாழ ஆரம்பித்தாலும், பாதை ஒரு எரியும் அடுப்பைப் போலத் தான் கனன்று
கொண்டு  இருந்தது. ஏற்கனவே கந்தக பூமி, சொல்ல வேண்டுமா? நீங்க வேணும்னா முன்னே போங்க. நான் மெதுவா பின்னால் வருகிறேன் என்று நண்பர்களுக்குச் சொன்னாலும், அவர்களுக்கும் என்னைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லை.

ஆனால், அதன் பிறகு நடந்ததுதான் அதிசயம்.... நடந்து செல்லும்போது ஒரு சிறிய பாதை உள்ளே பிரிந்து சென்றது..  ஒரு கோவில் உள்ளே இருப்பது மாதிரி தெரிந்தது. அந்த பாதையில் சென்றோம். உள்ளே கண்ணப்ப நாயனாருக்காக அருமையான ஒரு சிறிய கோவில். அவனை அடைய எதற்கு சாஸ்திரம்? சம்பிரதாயம்.. உண்மையான அன்பு இருந்தால் போதாதா என்று உலகத்துக்கே தெரிய வைத்தவர் அல்லவா..? அவரையும் கும்பிட்டு , வெளியே வந்தால், ஒரு மரத்துக்கு கீழே ஒரு ஜோடி செருப்பு. எப்போதோ, யாரோ விட்டுச் சென்றிருக்க வேண்டும். மழையில் நனைந்து மண் திப்பிகளுடன், யாரும் பார்த்தாலும் எடுத்துச் செல்ல தோன்றாது. ஆனால், நமக்கு..? எடுத்து மண்ணைத் துடைத்து, ஜம்மென்று - பீடு நடை நடந்து கிரிவலம் முடித்தேன்..... உண்மையிலே நான் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை... எதோ நம்ம செஞ்ச பாவம் எல்லாம் மன்னிக்கப் பட்டு, நல்லா இரு என்று அண்ணாமலையாரே வரம் அளித்தது போல் இருந்தது. செல்லப் பிள்ளைக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு இப்போதான் தோணிருந்திருக்கு அவர்க்கு..!

வாசகர்கள் யாராவது, இந்த பாதையில் போவதாக இருந்தால், செருப்பு அணிந்தே செல்லுங்கள்..! ரிஸ்க் வேண்டாம். No formalities please!

உள்ளே கிரிவலம் செல்லும்போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் சில நண்பர்கள் இணைத்துள்ளார்கள்... நம் வாசகர்களின் பார்வைக்கு அவற்றின் லிங்குகளை கீழே கொடுத்துள்ளேன்.. என்ஜாய்!


மற்றபடி சகோதரிக்கு : உங்கள் நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். சோதனை நீண்ட நாள் தொடராது. மிக அருமையான ஒரு நிலைக்கு, உங்களை அவர் வைக்கப் போவது உறுதி! மன நிறைவான வாழ்க்கை உங்களுக்கு தொடர்ந்து நிலைக்க, அண்ணாமலையாரிடம் நானும் பிரார்த்திக்கிறேன்..!

வாசகர்களுக்கு :  சென்ற பதிவின் இறுதியில் Comments / பின்னூட்டங்கள் உள்ளன. அவற்றையும் பாருங்கள், பல சுவாரஸ்யமான ஆலய தகவல்களை நம் நண்பர்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்..!

http://richardarunachala.wordpress.com/2011/06/18/best-of-arunachala-part-one/

http://richardarunachala.wordpress.com/2011/06/24/best-of-arunachala-part-two/

http://richardarunachala.wordpress.com/2011/06/27/best-of-arunachala-part-three/http://sadhanandaswamigal.blogspot.in/2011/10/inner-girivalam.html

http://richardarunachala.wordpress.com/2011/10/25/arunachala-guide/

அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள் : (பகுதி - 01)

| May 23, 2012
வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம். நமது வாசகர்கள் அனைவரிடமும், ஒரு உதவியை எதிர் பார்க்கிறேன். எந்த ஒரு முயற்சியும், தனிப்பட்ட முறையில் செய்வதை விட, ஒரு கூட்டு முயற்சியாக செய்தால், அது எளிதாக நிறைவேறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சென்ற பதிவில், நான் குறிப்பிட்ட படி - சித்தர்கள் நமக்கு அருளிய அபூர்வ ஆன்மீக குறிப்புக்களை பற்றிய கட்டுரைகள் நாம் தொடங்கும் முன்பு, இந்த பதிவு அவசியம் என எண்ணியதன் விளைவே இந்த கட்டுரை. நமது வாசகர்களில் சும்மா ஒரு வாசிப்பு சுவாரஸ்யத்துக்கு வருபவர்கள் எத்தனை பேர், நிஜமாகவே ஆர்வத்துடன் வருபவர்கள் எத்தனை பேர், நான் மட்டும் நல்லா இருந்தாப் போதும் என்று நினைக்காது, பொது நல நோக்குடன் இருப்பவர்கள் எவ்வளவு பேர்  என்று அறிய ஒரு சின்ன முன்னோட்டமாக இந்த முயற்சி.

என்னடா, ஓவர் பில்ட் அப் ஆக இருக்கிறதே, ஏதாவது அறக்கட்டளை, மடம், கோவில் பணி என்று பைசா சம்பந்தப்பட்ட விஷயமோ என்று ஜெர்க் ஆகிடாதீங்க... இது அப்படிப்பட்ட விஷயமே அல்ல...! அது நமது நோக்கமும் அல்ல. கிட்டத்தட்ட அறுநூறு பாலோவர்ஸ்,   இரண்டாயிரத்து ஐநூறு இ-மெயில் சப்ஸ்க்ரைபர்ஸ் என்று ஒரு பெரிய நெட்வொர்க் ஆக நமது தளம் இப்போது இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க எல்லோரையும் இந்த பதிவு மூலம் ஒரு சின்ன ஒருங்கிணைப்பு பண்ணனும்னு ஒரு ஆசை.. அதிக பட்சம் உங்கள் மேலான நேரத்தை, ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கினாப் போதும். ஒன்னும் இல்லை, இந்த பதிவு படிச்சதும், நீங்க ஒரு E-mail / பின்னூட்டம் இடணும். படிக்க வரும் வாசகர்களுக்கு ஒரு உபயோகமான தகவலா இருக்கணும். அவ்வளவுதான் விஷயம். In future, நாம எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி , ஒரு குழுவா அல்லது ஒரு forum போன்று நமது விவாதங்கள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று  ஒரு ஆசை.

விஷயம் இதுதான் : நமது பாரத பூமியில் எவ்வளவோ ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு சில கோவில்களுக்கு சென்று வணங்கி வரும்போது, சில கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகிறது. அதற்க்கு என்ன காரணம், என்ன சூட்சுமம் எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், உங்கள் மனது அதை உணரும். முதல் தடவை எதோ எதேச்சையாக நடந்தது போல தோன்றினாலும், அடுத்தடுத்து அந்த குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று வரும்போது, ஆச்சரியப் படத்தக்க விஷயங்கள் நடக்கும். மனது அந்த இறைவனை 'சிக்' கென பற்றிவிடும். இந்த அனுபவம், உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருந்து வந்து இருக்கும். அல்லது உங்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு நீங்கள் சொல்லி இருக்கக் கூடும். இந்த ரகசியத்தை, நீங்கள் நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டால், நமது வாசகர்கள் குழுவில் உள்ள அனைவரும் பயன் பெற உதவியாக இருக்கும்.

இறைவனின் அருள் கடாட்சம் பரிபூரணமாக நிலவும் ஆலயம் பற்றி நீங்கள் உணர்ந்த அனுபவம், அந்த ஆலயம் எங்கே இருக்கிறது, என்ன பலன்கள் உடனடியாக கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள், துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கும் எதோ ஒரு நல்ல ஆத்மாவுக்கு, உடனடி தீர்வாக அமையும்.

நமது வாசகர்கள் அனைவரும் ஏனோ தானோவென்று இருப்பவர்கள் இல்லை. அவர்கள் மிக மிக நல்ல மனிதர்கள் என்பதை , நம் வாசகர்களும், புதிதாக நம் தளத்துக்கு வரும் வாசகர்களும் உணர வேண்டும். ஏற்கனவே நாம், பல ஆலயங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் பல கட்டுரைகளில் அலசி இருந்தாலும், இந்த பதிவும், இதை சார்ந்து நீங்கள் இடும் பின்னூட்டங்களும், இணைய தள வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைய வேண்டும் என்பது என் ஆசை.

பிள்ளையார் சுழியாக, நான் ஆரம்பித்து வைக்கிறேன். ஒரு சின்ன கோடு போட்டா, நீங்கள் ரோடே போட்டு விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
====================================================================
இந்த ஆலயம் ஒரு பழம்பெரும் சிவ ஆலயம். கட்டி முடித்து ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். காலம் காலமாக பல சிவன் அடியார்களின் திருவடி பட்ட இடம். சத்தமே இல்லாமல், பல ஆச்சர்யங்களை அற்புதங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார், இங்கு உள்ள சிவன்.அந்த சித்தர் வந்து வழிபட்டு இருக்கிறார், இந்த நாயன்மார் வந்து தொழுது இருக்கிறார். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒவ்வொரு ஆலயத்திற்கும் , எவ்வளவோ பெருமைகள் இருக்கும்.

 இந்த ஆலயத்திற்கும் இருக்கிறது. ஆனால், எது எப்படி இருந்தாலும், நம் மனது அறிய சில அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய, நாம் நம்புவதேயில்லை, இந்த மாதிரி நிறைய கோவில்களை பார்த்திருக்கேன் சாமி, ஆனா, நான் போய் கும்பிட்டா, அந்த சாமி கண்டுக்கிறதே இல்லை.. மேலே சொல்லு..! என்று தான் தோன்றும் இல்லையா? பர்ட்டிக்குலரா நான் ரொம்ப மோசம்... அவ்வளவு சீக்கிரம் என் மனசு எந்த விஷயத்தையும் சீர் தூக்கிப் பார்க்காமல் ஒப்புக்கொள்வது இல்லை.

அப்படிப்பட்ட என்னையும் மாற்றியவர் இங்கு அருள் பாலிக்கும் அய்யன். கிட்டத் தட்ட பத்து வருடங்களாக , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு வழிபட்டுக் கொண்டு இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு பல அற்புதங்களை இவர் நடத்தி இருந்த போதிலும், என் நண்பர் இருவரின் வாழ்க்கையில் இவர் நடத்தி இருக்கும் அற்புதங்கள், சத்தியமாக எதேச்சையாக நடந்த விஷயம் அல்ல.

விசேஷ தினங்களில், பிரதோஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். சாதாரண நாட்களில் , இவரைக் காண சென்றால் நீங்களும், இறைவனும், கோவில் குருக்களும் மட்டுமே இருப்பீர்கள். சமயத்தில் குருக்கள் கூட வெளியில் நந்தி மண்டபத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பார். நீங்களும், பரம்பொருளும் மட்டுமே. நீங்கள் உரையாடுவதை அவர் காது கொடுத்து கேட்கும் உணர்வு , உங்களுக்கு ஏற்படும். இதை எழுதும்போதே , சில சம்பவங்கள் நினைத்து மயிர் கூச்செடுக்கிறது.

"ஐயனே, என்னாலே முடியலை, என்னோட சக்திக்கு உட்பட்டு என்னாலே சமாளிக்க முடியும்னு தெரியலை, தயவு செய்து அருள் புரியுங்கள்" - என்று உங்கள் மனதுக்குள்  ஒலிக்கும் ஓலக்குரலை, ஒரு தாயின் கருணையுடன் - செவி மடுத்து , பிரச்னைகளை உடனுக்குடன் ஊதித் தள்ளி, பரவசத்தில் ஆழ்த்துபவர், இந்த ஆலயநாதர்.

என்னதான் பகீரதப் பிரயத்தனம் எடுத்து நாம் முயற்சிகள் மேற்கொண்டாலும் , சில விஷயங்களில் இறைவனின் கருணை கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. சிலருக்கு அது அலுவலக சம்பந்தமாக இருக்கலாம், கடன், சொத்துப் பிரச்னை, திருமணம் என்று பிரச்னைகளுக்கா பஞ்சம். இதோ முடியப்போகிறது என்று நினைத்து இருக்கும் நிலையில், எங்கிட்டிருந்தோ ஒரு புது குறுக்கீடு வந்து, மறுபடியும் முதல்ல இருந்தா.. "த்ஸ்..அப்பா, இப்போவே கண்ணைக் கட்டுதே..." , என்று நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவோம்.

ரொம்ப கூலா சில பேர் சொல்லிடுறாங்க, மனுஷனா பொறந்தா, கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லாத்தையும் சமாளிக்கனும்னு. கரெக்ட்ங்கண்ணா  .. வெறும் கஷ்டமும், நஷ்டமும் மட்டும் தான் இருக்கு... என்னைக்கு கரை ஏறப்போறோம்னு தெரிய மாட்டேங்குதே... அதைத் தானே யோசிக்கிறீங்க... மேலே படிங்க.. ! என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுகிறேன்.

"ஐய்யா, இந்த ஜாதகத்தைப் பாருங்கள், எனக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா , இல்லையா ? எதாவது நல்ல வார்த்தை கூறுங்கள்" என்றுதான் அவர் அறிமுகம் சென்ற வருடத்தில் நடந்தது. கணவன், மனைவி இருவர் ஜாதகமும் இருந்தது. ஏற்கனவே தாமத திருமணம். ஜாதக ரீதியாக அவர் மனைவிக்கு மிக உஷ்ணமான உடம்பு. கரு தங்கினாலும், மருத்துவ ரீதியாக கரு நிலைப்பதற்கு உடம்பு ஒத்துழைக்காது. ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை என்றே நிலை. ஆனால், ஒரு நல்ல ஜோதிடன் அனுகூலமான பலன்கள் நடக்க வாய்ப்பு இல்லையெனினும், அதை வாய் விட்டு கூற இயலாது, அதை ஒரு கொள்கையாகவே வைத்து இருப்பவன் நான்.

அவருக்கு நான் கூறிய பரிகாரம் இதுதான். சிவ ராத்திரி நெருங்கிக்கொண்டு இருந்த வேளை அது. நீங்களும் , உங்கள் மனைவியும் சிவ ராத்திரி முழுவதும், இந்த ஆலயம் சென்று - உங்களால் எவ்வளவு நேரம் ஆலயத்தில் இருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் இருந்து - மனம் உருக இறைவனிடம் வேண்டுங்கள். நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. விரைவில் நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள் என்று, நானும் அவருக்காக வேண்டினேன். வீட்டில் இருந்த கல்கண்டு கொஞ்சம் எடுத்து, அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார் என்று இனிக்க இனிக்க வாழ்த்தி அனுப்பினேன்.

அவரும் சும்மா இல்லை, சிக்கென அவன் திருவடிகளைப் பற்றி சரணடைந்தார். கிட்டத்தட்ட மருத்துவ உலகமே, கைவிரித்து விட்ட சூழலில் அந்த தம்பதிகள் இருந்தனர். நம்பிக்கையின் ஒளி கீற்று மொத்தமாக மங்கிய நிலை.... ஆனால், இன்று ! ஆம், அந்த பேரதியசம் நடந்தே விட்டது... மிகச் சரியாக பதினைந்து மாதத்திற்குள் அவர் இன்று ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தந்தை.

சிவராத்திரி அன்று, இரவில் இந்த ஆலயத்திற்கு வந்த அவருக்கு, ஒரு வயதான பெரியவர் பேச்சுத் துணைக்கு கிடைத்து இருக்கிறார். பொதுவாக பேசத்தொடங்கிய அவர்கள் உரையாடல், ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததாம். சிவ ராத்திரியின் மகிமைகள், சிவனின் திருவிளையாடல்கள் என்று பேச்சு மிக அருமையாக நடந்து இருந்து இருக்கிறது. அந்த பெரியவர் யார், என்ன என்று விவரம் தெரியவில்லை. மனது முழுவதும் லேசாகி, ஒரு அபரிமிதமான பரவச அனுபவத்தில், அந்த தம்பதிகள் திளைத்து இருந்தனராம். அவர் எதோ ஒரு சித்தராக இருக்கலாம் என்று அந்த நண்பர் மனப்பூர்வமாக நம்புகிறார்.

"சார், இன்னைக்கு என் பையன்  என் கன்னத்தைப் பிடித்து, முத்தம் கொடுத்தான் , பாருங்க! நான் அவுட் சார், வாழ்க்கையில இம்புட்டு சந்தோசமா நான் இருந்ததே இல்லை"ன்னு இன்று அவர் கூறியபோது , அவர் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி, நிம்மதி... அடேங்கப்பா...! ஈடு இணையே இல்லை. எத்தனை கோடி சொத்து இருந்தாலும், கொஞ்ச ஒரு மழலை இல்லையென்றால், அது தரும் வேதனை அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்...

முக்கியமாக சிவ ராத்திரி தினத்தில் அத்தனை மகிமை பொருந்திய ஆலயத்தில் இருந்ததே, ஜாதக ரீதியாக அத்தனை குளறுபடிகளையும் தூக்கி கடாசி இருக்கிறது,... நாளென்ன செய்யும் ? கோள் என்ன செய்யும்- அவன் கருணை இருக்கும் இடத்தில். இந்த நண்பர் வாழ்க்கையில், அவன் அதை நிரூபித்துவிட்டான். இது நூறு சதவீதம் உண்மையாக நடந்த நிஜம்.

இன்னொரு நண்பருக்கு, நடந்த சம்பவம்.... கந்து வட்டியால் கதறி கதறி துடித்துக் கொண்டு இருந்தவர். நல்ல சம்பளம் வாங்கியும், ஒரு பிரயோஜனமும் இல்லை, வாழ்க்கை முழுவதுமே வட்டி கட்டியே ஓடிவிடுமோ என்கிற நிலை. சொந்தம், பந்தம் நட்பு என்று அத்தனை பேரிடமும் ஏற்கனவே உதவி வாங்கி, அதை திருப்பிக்கட்ட தலை குப்புற குட்டிக்கரணம் அடித்து, வேறு எங்கும் உதவி கேட்க முடியாத சூழ்நிலை.

கிரெடிட் கார்ட் கடன் நிரம்பி வழிகிறது.. மாத மாதம் , பேங்க் காரர்கள் வீட்டுக்கு வந்து சட்டையை பிடிக்கின்றனர். ஏற்கனவே ஒரு பாங்க்கில் லோன் எடுத்து திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை. இப்போதெல்லாம், ஒரு டெலி போன் பில் ஒழுங்காக கட்டவில்லைஎன்றாலே, உடனே CIBIL ரிப்போர்ட்டில் பதிவாகிவிடும். எந்த பேங்க்கிலும் லோன் கிடைக்காது. ஆரும் பேச மாட்டாங்க. ஆரும் தண்ணி கொடுக்க மாட்டாங்க.. நாட்டாமை தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து. இந்த நிலைமையில் வீட்டிலும் அனுசரணையாக யாரும் இல்லை. ஒரே சண்டை, களேபரம். இப்படி இருந்தா, யார் மதிப்பா...? எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லே...!

மனுஷன் கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்துக்கே வந்து விட்டார்...! செத்துப் போறதுதான், இருக்கிற ஒரே வழி. ஆனா, குடும்பம் , குட்டி என்ன செய்யும்...? பெருமைக்கு , பந்தாவுக்குன்னு நிறைய செலவு பண்ணி, சொத்து வாங்குறேன், ஷேர் வாங்குறேன்னு இறங்கி, இன்னைக்கு அத்தனையும் விற்றும், கடன் தீர்ந்த பாடு இல்லை. யாரைப் பார்த்தாலும், முகத்துல சிடுசிடுப்பு. வாழ்க்கையில தோத்துக்கிட்டு இருக்கிறவங்க ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற அதே உணர்வு.கடைசியில் நடுத்தெரு நாராயணன் நிலைமை. இவரு நல்ல நேரம், ஆரம்பமாகிற நேரம் அது. எதேச்சையா, என்னை சந்தித்தார்.

"சார், சாமி, கடவுள் , ஜாதகம் எதிலேயும் எனக்கு நம்பிக்கை ரொம்பவே இருந்துச்சு, ஆனா இப்போ இல்லை. எத்தனையோ கோவில் - எத்தனையோ பரிகாரங்கள், எல்லாம் வேஸ்ட் சார்.. ஒவ்வொருத்தரும் முடிஞ்ச அளவுக்கு இன்னொருத்தனை ஏமாத்தி காசு சம்பாதிக்கிறாங்க. அறிவு தான் ஒரு மனுஷனை வழி நடத்துது. அதுதான் நான் உணர்ந்த ஞானம். எனக்கு இருக்கிற அறிவு பத்தலைன்னு நான் நினைச்சுக்கிறேன். ஆனா, இப்படியே வாழ்க்கை போச்சுன்னா, நான் வாழுறதிலேயும் அர்த்தம் இல்லை"ன்னு தான் ஆரம்பிச்சார்....

 நான் அவர் கட்டத்தை வாங்கிப் பார்த்திட்டு, முதல்ல அவர் கையை பிடிச்சு குலுக்கினேன். முதல்ல கையை கொடுங்க சார்.. நீங்க எவ்வளவு கஷ்டப் பட்டு இருப்பீங்கன்னு கட்டத்தைப் பார்த்தாலே தெரியுது... ஆனா, போன மாசத்தோட எல்லா நிலைமையும் முடிஞ்சது. இவ்வளவு தூரம் நீங்க கடந்து வந்ததிலேயே, நீங்க எவ்வளவு பெரிய திறமைசாலின்னு தெரியுது... கவலையே படாதீங்க...! எண்ணி ரெண்டு மாசத்துக்குள்ளே, உங்க கஷ்டம் எல்லாம் பறந்து போகும்... நீங்க பெரிய ஆளா ஆகப் போறீங்க... ! நம்பிக்கையோட இருங்க....! இனி தொட்டது எல்லாம் வெற்றிதான்னு சொன்னேன்.

இப்படி ஒரு வார்த்தையை அவர் எதிர் பார்க்கவே இல்லை....வெயில்ல கிறங்கி, தண்ணி தண்ணின்னு வர்றவனுக்கு - சும்மா கும்முன்னு மோர் கிடைச்சா எப்படி இருக்கும்? " ரொம்ப சந்தோசம் சார்... என்ன பரிகாரம் செய்யனும், எல்லாமே ஏற்கனவே செஞ்சுட்டேன்.. இனியும் எதுவும் செய்யணும்னாலும் செய்றேன்"னு சொன்னார்...

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் சார்.. நீங்க ஒரு கோவிலுக்கு மட்டும் போயிட்டு வாங்க"ன்னு நான் கைகாட்டினது இந்த கோவில் தான்... "எப்படி கும்பிடனும், ஏதாவது வழிமுறைகள் இருக்குதா?"....ன்னு கேட்டார். அவர் நிலைமை எனக்கு நல்லாவே தெரியும். ஒரு பார்மாலிட்டியும் கிடையாது. உங்க தாய், தகப்பனை பார்க்கிறதுக்கு எதுக்கு சம்பிரதாயம், சாஸ்திரம் எல்லாம்..? உங்க சொந்த வீட்டுக்கு போற மாதிரி போய்ட்டு வாங்க.  "சார்... உங்களால முடிஞ்சா, ஒரு மல்லிப் பூ மாலையும், தேங்காயும் உடைச்சிட்டு வாங்க, மீதி எல்லாம் அவன் பாத்துப்பா"ன்னு தைரியமா அவனை நம்பி, இவரை அங்கே அனுப்பினான். "கடையில் பேரம் பேசாமல், கேரி பாக் இல்லாமல், உங்கள் கைகள் பட, இறைவனுக்கு சமர்ப்பியுங்கள்...அது போதும். அப்படி முடியலைனாலும் பரவா இல்லை"ன்னு அனுப்பினேன்.

பஸ்சுக்கு கூட காசு இல்லாமல், கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் நடந்தே, அவர் அந்த கோவிலுக்குச் சென்றார். மாலையும்  இல்லை, தேங்காயும் இல்லை. கோவிலில் வேறு யாரும் இல்லை. குருக்கள் கூட அந்த சமயம் இல்லை. கதறி, கதறி, கண்ணில் நீர் கொப்பளிக்க அவர் இறைவனை சந்திக்கும்போது, அங்கு மௌனமாக அவரை பார்த்துக் கொண்டு இருந்தது, வெறும் கல் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கும் அந்த லிங்கம் மட்டுமே...! ஒரு அரை மணி நேரம் ஆலயத்தில் இருந்துவிட்டு, வெளியில் வந்து , நடந்தே வீடு திரும்பி இருக்கிறார்...!

அதற்க்கு ஒரு மாதம் முன்பு SBI பாங்க்கில் லோனுக்கு அப்ளை பண்ணி இருந்தாராம். கிட்டத்தட்ட இருபது, முப்பது முறை பாலோ பண்ணியிருந்து இருக்கிறார். செஞ்சு தர்றேன், தர்றேன்னு 'தா' காட்டி, காட்டி அலைக்கழித்து இருக்கின்றனர். இவருக்கு நம்பிக்கையே இல்லை. சரி, CIBIL ரிப்போர்ட்டில் தகராறு.. இருந்ததும் போயி, நாலு வருடம் முன்பு இதே SBI யில், இன்னொரு ப்ரான்ச்சில் அந்த செலுத்தாத லோனுக்கு , சேர்த்து பிரஷ்ஷர் எந்த நேரத்திலும் வரவிருக்கிறது... லோனுக்கு அப்ளை பண்ணாமலே இருந்து இருக்கலாம் போல, சரி வருவது வரட்டும். சேர்த்து அனுபவிக்க வேண்டியதுதான் என்று நினைத்து இருந்தாராம்.

மத்த பேங்க் ஐ விட, SBI யில் லோன் கிடைப்பது என்பது, குதிரை கொம்பு என்பது அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். "லோன் எனக்கு இல்லை, சொக்கா ! அவனை கூப்பிடக் கூடாது, கூப்பிடக்கூடாது , ஏன் எதுக்கு கூப்பிடனும்" என்று தருமி ரேஞ்சில் இருந்த நிலையில் தான், அவர் என்னை சந்தித்து - இந்த கோவிலுக்கு சென்று வந்தது...

இது நடந்த மூன்றாவது நாள், SBI பாங்க்கில் இருந்து அவருக்கு போன், " சார், நான் பீல்ட் ஆபீசர் பேசுறேன், கொஞ்சம் பேங்க் வரைக்கும் வந்து போக முடியுமா?", சரிதான், அந்த பழைய லோன் மேட்டருதான் போல, இன்னைக்கு நம்மளை சுழுக்கு எடுக்கப்போறானுங்கன்னு நினைச்சுக்கிட்டே போயிருக்கார். சரி, கழுத்துலையா, கத்தி வைச்சுடப் போறாங்க...  SBI கொஞ்சம் டீசன்ட் பார்ட்டி தானே, கிரெடிட் கார்ட் மாதிரி, கந்து வட்டி மாதிரியா அசிங்கப் படுத்திடப் போறாங்க? என்ன, கம்பனிக்கு லெட்டர் போடுவாங்க, பாத்திக்கிடலாம்" ன்னு - பில்டிங் ஸ்ட்ராங், basement தான் கொஞ்சம்....ன்னு போயிப் பார்த்தா..... அட,  நம்ப முடியாத அதிசயம் அங்கே அரங்கேறியது.அவர் லோன் சாங்க்க்ஷன்.

 "அஞ்சு லட்ச ரூபாய் உங்க அக்கௌன்ட்ல ட்ரான்ஸ்பர் பண்ணுறோம் சார், அமௌன்ட் கொஞ்சம் அதிகம்ங்கிறதால லேட் ஆயிடுச்சி. சாரி சார்"ன்னு சொல்றாங்க.

இவருக்கு சந்தோசம் தாங்க முடியலை. வெளியில வந்த உடனே எனக்கு போன்..." சார், நீங்க..... நீங்க ..." பேச வார்த்தையே இல்லை. ! "லோன் கிடைச்சிடுச்சி சார்.. கம்பெனிக்கு அரை நாள் லீவ் சொல்லிட்டேன்.... நான் அந்த சாமியைப் பார்க்க போயிட்டிருக்கேன்"னார்...

மூணு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி, வட்டி மட்டுமே ஒன்பது லட்சம் கட்டிய ஆள் அவர். அசல் திருப்பித் தரவே முடியாதோங்கிற நிலைமைல, லோன் கிடைக்கவே வாய்ப்பே இல்லாத நிலைமைல, இந்த அஞ்சு லட்சம், அவருக்கு அஞ்சு கோடிக்கு சமம். இதில இன்னொரு ஆச்சர்யம், இவரு கூட அப்ளை பண்ணின, இவரை விட சம்பளம் அதிகம் வாங்கின ஆளுங்களுக்கு கூட, லோன் சாங்க்க்ஷன் ஆகாம இன்னும் 'பென்டிங்'லேயே கிடந்து இருக்குது.

இன்னைக்கு வர்ற சம்பளத்துல, நிம்மதியா லோன் அடைச்சுக்கிட்டு, கந்து கடன் எல்லாம் முடிச்சிட்டு , குடும்பத்தை சந்தோசமா வைச்சுக்கிட்டு இருக்கார்.

"இனி எனக்கு கவலை இல்லை சார், நான் நிமிர்ந்துடுவேன். எனக்கு இந்த போதாத கால கட்டத்துல கிடைச்ச அனுபவத்துக்கு விலை மதிப்பே இல்லை சார். திரும்ப தப்பு செய்யாம இருக்கணும். இதுக்கு மேலே, என்ன நடந்தாலும், உடனே சரி செய்ய என் சாமி இருக்கிறப்போ , எனக்கு என்ன கவலை"ன்னு, அவர் இந்த சிவனை சொல்லும்போது, நமக்கே ஜிவ்வென்று இருக்கிறது.
கடவுள் இல்லை என்று யாராவது சொன்னால், இவர்கள் பதிலுக்கு , "ஹா... ஹா..." வென்று பலத்த குரலில் சிரிக்கிறார்கள்.
அப்பேற்பட்ட மகத்துவம் பொருந்திய, இறைவன் யார் என்று அறிந்து கொள்ள ஆவல் உங்களுக்கும் இருக்கும் இல்லையா..?

சந்தேகமே இல்லாமல், இறைவன் இருக்கும் அற்புதத்தை நீங்கள் உணர , அவசியம் ஒருமுறை இந்த ஆலயம் வந்து பாருங்கள். இது இருக்கும் இடம் : திருவலம்  (Thiruvallam / Tiruvalam ) என்ற சிறிய ஒரு ஊர். பிள்ளையார் - திருவை (அம்மை , அப்பனை) வலம் வந்ததை ஒட்டிய காரணப் பெயர்.

வரலாறு கொஞ்சம் ஞாபகம் இருப்பவர்களுக்கு, வல்லவரையன் வந்தியத்தேவன் பிறந்து வளர்ந்து ஆண்ட பகுதி என்று சொன்னால் ஞாபகம் வரலாம். அதே வல்லவரையர் தான். அருண்மொழியின் உற்ற நண்பனாக, குந்தவையை கரம் பிடித்த வந்தியத்தேவன், பலமுறை தொழுது இருக்க கூடிய ஆலயம் தான் இங்கு இருப்பது.வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா என்று அருகில் இருக்கும் பெரிய ஊர்களில் இருந்து பஸ் வசதி இருக்கிறது. இந்த ஊர்களில் இருந்து அரை மணி நேர பயண நேரம் ஆகும். பத்து முதல் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

ஸ்தலப் பெருமைகள் நிறைய, அது எல்லாம் உண்மையோ, பொய்யோ - அது நமக்குத் தெரியாதுங்க.... ஆனா, இங்கு அருள் பாலிக்கும் இறைவன் - (நாமம் வில்வநாதர் - அம்மன் தனுமத்யம்பாள்) - இருவரும், ஹைலி , ஹைலி பவர்புல். இது இங்கு அருகில் இருக்கும் வட்டார மக்களுக்கே, ஏன் இந்த கோவிலில் இருப்பவர்களுக்கே கூட தெரியுமோ, தெரியாதோ....சந்தேகம் தான்.

ஆனால், கண் முன்னே , நிஜத்தை பார்த்தபிறகு, இவரிடம் நம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் நடந்த நிஜ சம்பவங்கள். படிக்கும் உங்களுக்கு , நீங்களும் இங்கு ஒருமுறை வந்து பார்க்கவேண்டும் என்கிற உணர்வைத் தூண்டவில்லையெனில், அது என்னுடைய எழுத்து வசீகரம் இன்மையே தவிர வேறில்லை.
 
ஒரே ஒருமுறை, உங்கள் நீண்ட நெடுநாள் பிரச்னை தீர, நேரில் நீங்கள் வந்து இவரிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு சீக்கிரம் அந்த பிரச்னை தீர்கிறது என்கிற அதிசயத்தை உணர்வீர்கள்... .... இது வெறும் கல்லால் ஆன லிங்கம் இல்லை, சத்தியமா சாமி, இது... என்ன ஆச்சர்யம், எப்படி இவ்வளவு நாளா வெளி உலகத்துக்கு தெரியலைன்னு ஆச்சர்யப்படுவீங்க...!

ஒரு தீபத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. உங்களால் முடிந்த அளவுக்கு அதைப் போன்ற ஆலயங்களை மெருகேற்ற, விளக்கு ஏற்ற உதவி செய்யுங்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஆலயங்களுக்கும் ஒரு நேரம், காலம் இருக்கிறது போல. சில கோவில் எல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னே, ஒண்ணுமே இல்லாம இருந்துச்சு. இப்போ பாரு, எவ்வளவு கூட்டம் என்று.

இந்த சிதிலமடைந்த கோவில்கள் எல்லாம், ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து இருக்க கூடும். இந்த ஆலயங்களை மெருகேற்ற, நாம் நமது பங்களிப்பை அளிக்க இறைவன் நமக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக நினைத்து, இங்கு குறைந்தபட்சம் விளக்கு ஏற்றவாவது உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். விளக்கு ஒளி ஏற ஏற, ஆலயமும் புத்துயிர் பெரும், நம் வாழ்விலும் ஒளி ஏறும்... இது நிச்சயம்...! சிதிலமடைந்த ஒரு ஆலயம் பற்றி ஒரு தகவல் உங்களுக்கு வருகிறது என்றால், உங்களுக்கும் அந்த ஆலயத்திற்கும் எதோ நெருங்கிய முன் ஜென்ம தொடர்பு இருந்து இருக்க கூடும்.

அதை நீங்கள் நேர் செய்யும்போது, நமது கர்மக் கணக்கு நேர்த்தியாகி, நாமும் நல்ல நிலை அடைய ஒரு அரிய வாய்ப்பாகவும் அமையும்...!
தவறு செய்யாத மனிதனே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் பாதம் சரணம் அடையும்போது, மனதை உறுத்தும் தவறுகளை திரும்ப செய்வதில்லை என்ற உறுதி மொழி எடுத்து, அதை இறுதி மூச்சு வரை கடைபிடியுங்கள்....! அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை. இதை நீங்களே உணர்வீர்கள் வெகு விரைவில்...!

ஓம் சிவ சிவ ஓம்..!

எந்த ரூபத்தில் , எந்த ஊரில் இருந்தாலும் இறைவன் இறைவனே. இதைப் போலவே, உங்கள் பகுதியில் உங்கள் அனுபவத்தில், நீங்கள் நிஜமாகவே  வியந்த ஆலய மகிமைகள் பற்றி, ஒரு நாலு வரி எழுதினீங்கன்னா, நாங்களும், நம்ம வாசர்களும் தெரிஞ்சுக்கிடுவோம்...சரிங்களா? கூச்சப்படாம, தமிழிலோ, ஆங்கிலத்திலோ - எழுதி மெயில் / கமெண்ட்ஸ் இல் பதிவு செய்யவும்...

கம் ஆன்..! உங்கள் கருத்துக்களும், விமரிசனங்களும் வரவேற்க்கப்படுகின்றன...!

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் ! 

Nearest Railway station : Katpadi ( From Katpadi local buses avaialble. approx 15 Kms)
From Ranipet, Vellore, Walajha, Arcot - Approx 15 kms distance.
From chennai direct buses available to Chittoor , which go via Tiruvalam (Approx : 130 Kms)
From Tiruvalam bus stand , Temple is just 50 metres walkable distance.
இந்த மாதிரி எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? (A must read article till the end)

| May 19, 2012
விஞ்ஞானிகள் எல்லோரும் கிட்டத்தட்ட சொல்ற ஒரு விஷயம் - நம்ம இந்த பூமிங்கிறது சூரியனில் இருந்து தெறித்த ஒரு நெருப்புத் துளி. மெல்ல மெல்ல அது குளிர்ந்து, நிலமாக, நீராக , காற்றாக மாறி - பின் உயிரினங்கள் தோன்றி இருக்கின்றன. இதற்க்கு பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகி இருந்து இருக்கும் என்கிறார்கள். (படிச்ச புள்ளைங்க எப்படிய்யா பொய் சொல்லும்? )

இப்படி இருக்கும்போது, கடவுள் / இறைவன் என்பது எங்கு , எப்போது இருந்தது வந்தது என்பது , அவர் ஒருவர் இருப்பதை ஒப்புக்கொள்வது என்பது - முழுவதும் நிரூபணம் ஆகாத ஒரு விஷயம். அவரவர் தனிப்பட்ட அனுபவங்கள் பொறுத்து அல்லது நம்பிக்கை பொறுத்து தான் இறைவன் இருக்கிறார். கடவுள் என்பவர் சர்வ வல்லமை பொருந்தியவர். அவர் நினைத்தால், ஒரே கணத்தில் நம் கஷ்டங்கள் பறந்து விடும். அவரிடம் சரணடைந்து விடு. அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி, சொல்லித் தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். குழந்தையாக இருக்கும்போது குழம்பாமல் ஏற்றுக்கொண்ட நாம் , கொஞ்சம் வளர்ந்த பிறகு - கடவுள் இல்லையென்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்குமே என்று தசாவதாரம் படத்தில் கடைசியில் கூறியதைத்தான் மனதளவில் பிரதிபலிக்கிறோம்.

ஆனால், நம் நாட்டிலோ சித்தர் பெருமக்கள் - அவன் அருளை உணர்ந்து அனுதினமும் பரவசப்படுகிறார்கள். நம்மைப் போன்ற சாமான்யர்களும் இறைவனின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என எதிர்பார்ப்புடன் ஏங்குகின்றனர். கார்த்திகை தீபத்திற்கும், தைப் பூசத்திற்கும், சித்ரா பௌர்ணமிக்கும், சூர சம்ஹாரத்திற்க்கும் - லட்சோப லட்சம் மக்கள் கூடுகின்றனர். எல்லோருக்குமே பிரச்னை தீர்ந்து விடுகிறதா? ஒரு சிலருக்கு கிடைக்கும் பாக்கியம் ஏன் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கும்பிடுபவர்களின் அப்பழுக்கற்ற நம்பிக்கை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகின்றனர் , விவரம் அறிந்தவர்கள்.

ஆனால் உயிர் என்பது என்ன? உடலில் எங்கே இருக்கிறது? இறந்த பிறகு அந்த உயிருக்கு என்ன நடக்கிறது ? பிறக்கும் ஒரு குழந்தை எப்படி குடிசையில் ஐந்து குழந்தையோடு ஆறாவதாகப் பிறந்து கஷ்டப்பட விருக்கிறது? இன்னொரு குழந்தை - குளு குளு AC அறையில் பிறக்கிறது? இதை யார் தீர்மானிப்பது - என்பதற்கு எல்லாம் - விடை இன்னும் கிடைத்த பாடில்லை. புதிர். அல்லது இதெல்லாம் ஒரு இயல்பான சம்பவம். இயற்கை. இதையெல்லாம் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது என்று தீர்மானிக்கிறார்கள்.

ஒரு பெரிய ஆட்டு மந்தையில் பிறக்கும் ஒரு ஆட்டுக்குட்டி, எத்தனையோ ஆடுகள் கூட இருக்கும்போதும், பிறந்ததும் தனது தாய் ஆட்டை சரியாக அடையாளம் கண்டு, சரியாக பால் மடியில் - வாயை வைத்து உறிஞ்சுவது - இதையெல்லாம் யார் அதற்க்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்கள்? வீல், வீல் என்று கத்தும் குழந்தையை அன்னை எடுத்து அணைத்ததும், அந்த கத கதப்பை உணர்ந்ததும் - படக்கென்று அழுகையை நிறுத்தி , புன்னகை செய்கிறதே..? எப்படி? என்ன நடக்குது இங்கே? எப்படி இதெல்லாம் !

சரி, உயிர்னா நிஜமாவே என்ன பாஸ்? நம் உடம்புக்குள் ஓடும் காற்றா? இருக்காதே..? செத்துப் போன பிறகும் , காற்று உள்ளே போய் வந்துக்கிட்டுத் தானே இருக்கும்? அப்படித் தானே சொல்றாங்க.. ஓகே.. காற்றைப் பார்க்க முடியலை. ஆனா உணர முடியுதே. காற்று வீசினால் , செடி கொடிகள் அசைகின்றன. நம்ம உடம்புக்குள்ளே காற்று போகுது. வெளியே வருது. ரத்தமா? தெரியலை. இப்படி இருக்குமோ...? சூடு - உஷ்ணம் ! அட, இருக்கலாம்பா. இந்த சூடு போயிடுச்சுனா, உசிர் போயிடுச்சுனா, உடம்பு சில்லுனு ஆகிடுதே. இதைத் தான் உயிர்னு சொல்றோமோ..! ஒரு குறிப்பிட்ட உஷ்ணம் , நம்ம உடம்புலே எப்படி மைண்டைன் ஆகுது..? கூடுச்சுனா, காய்ச்சல் அடிக்குதுங்கிறோம். குறைஞ்சதுனா, குளிர் ஜுரம். உடம்புக்கு முடியிறது இல்லே.., தெம்பு இல்லே..!

உயிர் எங்கே , எந்த புள்ளியிலே இருக்கு? சூரியன் - நெருப்பு. சூரியன்ல இருந்து வந்த பூமி ஒரு நெருப்புத் துளி. பூமியில் இருக்கிற நமக்குள்ளேயும் ஒரு சின்ன உஷ்ணம் இருக்குது இல்லே..? அதையே உயிர்னு சொல்றாங்களோ..!

எப்படி இந்த உயிர் உற்பத்தி ஆகி இருக்க கூடும் என்பதை விஞ்ஞானிகள் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். நாம கொஞ்சம் இப்போ யோசித்துப் பார்ப்போம்.

கசாப்பு கடையிலே ஆட்டை வெட்டி , கட்டித் தொங்க விட்டு இருப்பாங்க, பார்த்து இருப்பீங்க....! அதை வெட்டி, கூறு போட்டு கொடுக்கிறாங்க. அதை, அப்படியே ஒரு நாள் விட்டுட்டா, என்ன ஆகும்..? புழுவா நெளிய ஆரம்பிக்கும்? இந்த புழு எல்லாம் எங்கே இருந்து வந்தது..? அதுக்கு முன்னேயே அந்த ஆட்டு உடம்புலே இருந்து இருக்குமோ? இறந்த பிறகு தான் வரணுமா?

சூரியன்ல இருந்து, தெறிச்சு விழுந்த பூமி - ஆறிய பிறகு, உயிரினங்கள் இப்படித்தான் தோன்றி இருக்குமோ..? ஆனா, பூமி செத்துப் போயிடுச்சுன்னு கூட சொல்ல முடியாதே..! அதுவா தன்னை சுத்திக்குது. அப்படியே வருஷத்துக்கு ஒருமுறை சூரியனையும் சுத்துது... ! ஒரு குறிப்பிட்ட அச்சுல சாய்வா வேற இருக்கு...! எந்த விசை இதை தாங்கிப் பிடிக்குது? கடல், ஆறு, மழை, தண்ணி .... அப்புறம் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்று. குறிப்பிட்ட உயரம் வரை இருக்கிற ஈர்ப்பு சக்தி... ! அடேங்கப்பா..! அப்புறம் - நெருப்பு , வெளிச்சம், ஒளி. இப்படி நீர், நெருப்பு, காற்று என்கிற - மூன்று மாபெரும் விஷயங்கள்.

அதுக்கு அப்புறம், நிலம். ---- அட அடா! நிலத்தை சும்மா தோண்டிப்பார்த்தா , ஒண்ணுமே இல்லை - வெறுமே மண்ணுதான் வருது. அதுலேயே ஒரு விதையைப் போட்டு , தண்ணி ஊற்றி விட்டால் - கொஞ்ச நாள் கழிச்சு என்ன என்னமெல்லாம் வருது..! காய் கனி , பூக்கள் , மரம், செடி , கொடி , கிழங்கு , நெல் , கோதுமை , என்ன வேணும்..? எல்லாமே தர்றேன்..! எடுத்துக்கோ... ! விதை - இடம் - காலம் அவ்வளவுதான் , என்ன வேணும்னாலும் கிடைக்கும்... இப்படி ஒரு உயிர் துடிப்புள்ள நிலம் இருக்கும்போது , பூமி ஒரு உயிர் இல்லாத வஸ்து என்று எப்படிக் கூற முடியும்? நிலம் உயிருள்ளது, அபரிமித சக்தியை உள்ளடக்கியது என்கிற அடிப்படையில் தான் வாஸ்து சாஸ்திரத்தையே நம்மவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்

இந்த நான்கு விஷயங்கள் தவிர - ஐந்தாவது வானம்... அடேயப்பா... ! இருக்குதா இல்லை கற்பனையா அது..? ஆனா, எந்த ஒரு உயிரினமும், வானத்தில் இருந்துதான் எல்லா சக்தியையும் எடுத்துக் கொள்கிறதாம். பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பது - இந்த ஆகாயம் தான். மேகத்தில் தொடங்கி, பூமி , சூரியன், கோடானு கோடி சூரியன்கள் எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்து - மாபெரும் சக்திக் களஞ்சியமாக இருப்பது இந்த ஆகாயம் தான். அங்கு இருப்பது தானே சூரியன். சூரியனில் இருந்து பூமி, இப்படி தொட்டு தொட்டு எல்லா சங்கதிகளும் ஆரம்பித்தன.

ஒரு துளி விதையில் இருந்து, இல்லை விதையில் கூட ஒரு சிறு புள்ளியில் இருந்து , நிலத்தில் உள்ள சத்துக்களை உறிஞ்சியபடி வளரும் ஒரு செடி, ஆகாயத்தில் இருந்தே, முழு சக்தியையும் பெற்றுக்கொண்டு , ஒரு குறிப்பிட்ட கால கதியில் - ஒரு மாபெரும் விருட்சமாக வளர்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், சாதாரண வளர்ச்சி என்றுதான் தோன்றும். ஆனால், யோசித்துப் பாருங்கள்.. நிஜமாகவே அதிசயம். !

ஒரு சிறு குழந்தை எப்படித் தோன்ற ஆரம்பித்து , வளர்ந்து - மாபெரும் மனிதனாக வளர்கிறான்.... ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்....! இயற்கையில் இருந்து எவ்வளவு சக்தியை எடுத்துக் கொண்டுள்ளோம்..! பஞ்ச பூதங்களில் இருந்து தான் எல்லாமும் பெற்றுள்ளோம். அவற்றின் ஒரு அங்கமாக தான் நம் உடலும் இருக்கிறது. நம்முள்ளும் தசை, நீர், ரத்தம், காற்று, வயிற்றில் பசியாகிய நெருப்பு - அடேங்கப்பா..!

ஆகாயம் , எங்கேப்பா இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுதான் நம்ம மனசு. அப்படி ஒன்னு இருக்குதா, இல்லையான்னே தெரியாத, ஆனால் உணர மட்டுமே முடிந்த ஒரு விஷயம். இயற்கையைப் போலவே - இங்கும் மனத்தில் ஒரு எண்ணம் (விதை) விழுந்து, அந்த எண்ணம் நிறைவேற - நம் செயல்கள் (சத்துக்கள்) துணை நிற்க, அங்கே ஒரு குறிப்பிட்டகால இடைவெளியில் வளர்ச்சி தென்படும். எண்ணங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய செயல்கள் மட்டுமே மனிதனின் வாழ்வை தீர்மானிக்கின்றன.

ஒளியையும், ஒலியையும் விட வேகமான ஒரு விஷயம், நம் மனது தான். எப்படி, நினைத்த மாத்திரத்தில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே நடந்த ஒரு விஷயத்தை , மனக் கண்ணில் உங்களால் கொண்டு வர முடியுமோ, அதே போல - பத்து வருடம் கழித்து நடக்க விருப்பதையும், நீங்கள் பார்க்க முடியும். இந்த visualisation தான் , ஒரு சாதிக்க கூடிய உத்வேகத்தை உங்களுக்கு அளிக்கும். சில வருடங்கள் கழித்து, நமக்கு என்ன வேண்டும், எப்படி ஆக விருக்கிறோம் என்கிற எண்ணத்தை, விதையை - மிக தெளிவாக உங்கள் மனதில் பதித்து, அதற்கேற்ப செயல்களை ஒரு முகப்படுத்தி செய்ய செய்ய - அந்த விதை விருட்சமாக வளர்ந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும்... !

இந்த கால சூத்திரத்தை உணர்ந்து, அதை ஜெயித்தவர்களே சித்தர்கள். ஒருவரை பார்த்தவுடன், அவர்களது ஜென்மாந்திரத்தையே கணிக்க கூடியவர்கள்.இந்த கால சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே , ஜோதிட சாஸ்திரம் தோன்றியிருக்கிறது.

இந்த மனதை மட்டும் அவ்வப்போது கவனித்து வாருங்கள். நீங்கள் நல்லது செய்யும்போதும், கெட்டது செய்யும்போதும், ஏன் இந்த கட்டுரையை படிக்கும்போதும் - அது உங்களிடம் பேசும். அதை நீங்கள் உணர முடியும். மனதையும் கட்டுப் படுத்தும், கவனிக்கும் அந்த 'நான்' தான் - நீங்கள். ஆன்மா என்கிறார்கள் இதை.

நமக்கு மிக வேண்டியவர்கள் கண் முன்னே துடிக்கும்போது , வருத்தப்படுவது இந்த நான் தான். ஆத்மாவும், ஆத்மாவும் உணரக்கூடிய இடத்தில் அன்பு மேலோங்கும். ஆத்மார்த்தமான நட்பு என்கிறோமே..! நம் சொந்த உறவுகளிலும் கூட, இந்த ஆத்ம பரிச்சயம் அவசியம். வெறுமனே மேலோட்டமாக அப்பா, அம்மாவிடம் அண்ணன், தங்கையிடம், நபர்களிடம் பழகுவதை, பேசுவதை விட, ஆன்ம ஈடுபாட்டோடு - அவர்கள் சொல்வதை கவனித்துப் பேசிப் பாருங்கள். உங்கள் அந்த நான் அதை உணர்ந்து கவனிக்கட்டும். வாழ்க்கையில், உயரங்களைத் தொட்டவர்கள் அனைவரும், இன்றும் கடை பிடிக்கும் ஒரு அடிப்படை விஷயம் இது.

ஆகாயத்தில் இறைவன் இருக்கிறார் என்பது போல, நம் மனத்தின் உள்ளும் - இறைவன் இருக்கிறார். உள்ளத்தின் நின்று ஒளிரும் அந்த ஒளி, இந்த அண்ட, பிரமாண்டத்தைப் படைத்த அதே பேரொளி தான்.
கடவுள் இருக்கிறாரா, ஆலயங்களில் இருப்பது நிஜமா...? சந்தேகத்துக்கு இடமில்லாத சர்வ நிச்சயம் இது. நமக்குள்ளேயே இறை ஒளி இருக்கும்போது, ஆலயங்களில் அந்த ஒளி இன்னும் அதிகமாகவே இருக்கிறது. தீப ஒளி வழிபாடு , இதில் இருந்தே தொடங்கி இருக்கவேண்டும். ஆலயங்களுக்குள் செல்லும்போது, நம் மனது ஒடுங்கி, அமைதி பெறுகிறதே, இதில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டாமா..?
இத்தனை தெய்வங்கள் இருக்கிறார்களே ? ஆமாம் இருக்கிறார்கள். அவர்களை தரிசித்த சித்த பெருமக்களும் நம்முள் இருக்கிறார்கள். நமக்கு , நம் கஷ்டங்களில் இருந்து விடுபட சில அரிய வழிமுறைகளையும் ஓலைச் சுவடிகளில் எழுதி இருக்கிறார்கள். நாம் அவற்றை உணர்ந்து கொள்ள, நமது நேரம் அதற்க்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த காலத்தில் சுவடி. இந்த காலத்தில் பேப்பர், பேனா , கம்ப்யூட்டர் என்று வந்து விட்டது.
அந்த மாபெரும் பரம்பொருளின் கருணையால், அண்ணாமலையாரின் அனுக்ரஹத்தால், பொக்கிஷம் போன்ற சில குறிப்புகள், எளிய பரிகார முறைகள் - ஒவ்வொரு ராசி, நட்சத்திரத்திற்க்கும் பொருந்தக் கூடிய முத்துக்கள்,  பழைய ஓலைச் சுவடிகளில் இருந்து எடுத்த அபூர்வ குறிப்புகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு சமீபத்தில் கிட்டியது. அதில் உள்ள சில ஆலயங்கள் பற்றிய வியக்கத்தக்க தகவல்கள் , நிஜமாகவே என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதில் சில ஆலயங்கள் இப்போது சிதிலமடைந்து, அதே இடத்தில் இப்போது புதிய ஆலயங்களும் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றிலும், அதே அருள் இன்றும் நித்திய பரிபூரணமாக கிடைத்து வருகிறது. எதோ ஒரு காரணத்தால் , விண்ணில் இருந்து சில குறிப்பிட்ட கதிர் வீச்சுக்கள் அந்த ஆலயத்தில் கிரகிக்கப் படுகிறது என்பதை உணர முடிகிறது. . கூடிய விரைவில், கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருக்கிறேன்.
என்னோட நல்ல நேரம், நான் இந்த தளத்தோட கட்டுரைகளைப் படிக்க வாய்ப்பு கிடைச்சதுன்னு, இங்கு வரும் ஒவ்வொரு வாசக அன்பு உள்ளங்களும் நினைக்கணும். அவங்க வாழ்க்கைக்கு உபயோகமா ஒரு ஒரு சிறிய தகவலாவது, நமது இந்த கட்டுரைகளில் கிடைக்கணும். கஷ்டங்களில் இருந்து முழுவதும் விடுபட்டு, வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க விருக்கும் உங்கள் எண்ணங்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கைப் பொறி இங்கே இருந்து கிடைக்கணும்.

இது எல்லாமே, உங்களைப் போலவே கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கையில நானும் நல்லதொரு நிலைமைக்கு வந்துக்கிட்டே, கிடைக்கிற நல்ல அனுபவங்களை,எனக்கு நன்கு தெரிந்த,  மிக  உருப்படியான விஷயங்களை  உங்க கிட்டே இங்கே பகிர்ந்து கொள்ளனும். அவ்வளவுதான் பாஸ்... ! எனக்குள்ளே மட்டும் பொத்தி பொத்தி ரகசியமா வைச்சுக் கிட்டு , எதை சாதிக்கப் போறேன்..?

After  all , ஒரு மனுஷனுக்கு என்ன சார் வேணும்? ஒரு USEFUL BODY with PEACEFUL MIND. சொன்னது யார்னு நினைக்கிறீங்க..? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். யோசிச்சுப் பாருங்க... !இதுக்குள்ளேயே சகலத்தையும் அடக்கிட்டாரு.  நம்ம ஒட்டு மொத்த வாழ்க்கையுமே, அந்த பாதையில் தான் போய்க்கிட்டு இருக்கு. அப்படிப் போகலைனா, டக்குன்னு அந்த பாதைக்கு வாங்க..!மன நிம்மதி அவரவருக்கு வேறுபடலாம். நல்லா சம்பாதிப்பதாக இருக்கலாம். நிறைய சாதிப்பதாக இருக்கலாம். குடும்பத்தை நல்லபடியா வைத்துக் கொள்வதாக இருக்கலாம். மனசு சஞ்சலப்படாம, கவலைப்படாம, குதூகலமா, நிர்மலமா இருக்கணும். அதன் பிறகு, 'ஆட்டோமேட்டிக்'கா கடவுளைத் தேட ஆரம்பிக்கும்.

OK , பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. மீண்டும் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்...!
========================================================
இந்த தளம் ஆரம்பித்ததில் எவ்வளவு நன்மை பாருங்கள்... நமது வாசக நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலை கீழே கொடுத்துள்ளேன். கடவுளை நம்புபவர்களுக்கு , இது ஒரு புதையல் கிடைத்த மகிழ்ச்சி தரும். இது சம்பந்தமாக , நமது பழைய கட்டுரை ஒன்று உங்களுக்கு ஞாபகம் வரலாம்...! அது இரண்டாவது சம்பவம்.  படித்துப் பாருங்கள்... ! பரவசப்படுங்கள்...!


Hanuman seen in the Himalayas?


"TRUTH IS STRANGER THAN FICTION
The picture was purportedly taken of Hanuman in a cave at Manasarovar Lake (Kailash) in the Himalayas during 1998 summer.

A group of people went to Manasarovar for a piligrimage trip. It is said that person taking the picture saw a light inside a cave, photoed that light and died there on spot for reasons not known (this part every one is confirming who went along). Later the friends developed the roll from the camera and got this print!.

முடியவிருந்த வாழ்க்கை.... மீட்டுக்கொடுத்த இறைவன்!

| May 9, 2012

கடவுளை நம்பி, அவன் வசம் பொறுப்புகளை - ஒப்படைத்துவிட்டு முழு முயற்சியுடன் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டால் , சாதனை சிகரம் தொடுவது உறுதி என்பதற்கு ஒரு அருமையான உதாரணம்  இந்த கட்டுரை. நம் வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்து கொண்ட  அன்பு நண்பர் சுந்தருக்கு என் நெஞ்சார்ந்த  நன்றி ....!  படித்துப் பாருங்கள்...!  நம் தளத்தில்,  ஏன் இணைய தளத்திலேயே  வெளியாகும் மிகச் சிறந்த கட்டுரைகளுள் ஒன்று ! Thank you Very much Sundar Ji!
======================================================

    அன்பு நண்பர்களுக்கு வணக்கம்....!

என் பெயர் சுந்தர். ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறேன். தவிர ஒய்வு நேரத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்களை பற்றி பிரத்யேக செய்திகளை தாங்கி வரும் ONLYSUPERSTAR.COM என்ற தளத்தை  நடத்தி வருகிறேன். நமது LIVINGEXTRA.COM தளத்தின் கடைக்கோடி வாசகன் நான். எத்தனையோ சூழ்நிலைகளில் இந்த தளம் எனக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழி காட்டியுள்ளது.

திரைத்துறை பிரபலங்கள் பலரை இதற்கு முன்பு நான் பலமுறை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளேன். வெளியிட்டு வருகிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் சரித்திரம் படைத்த சாதனையாளர்களை சந்திக்கவேண்டும், அவர்களது வெற்றிக்கான ஃபார்முலாவை அனைவருக்கும் கூறி அவர்களையும் சாதனையாளர்களாக்க வேண்டும் என்கிற அந்த ஆவல் என்னுள் எழுந்தது நமது LIVINGEXTRA.COM தளத்தை நான் வாசிக்க ஆரம்பித்த பின்னர் தான். எனவே இந்த தளத்தை நன் படிக்க ஆரம்பித்தது என் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனை ஆகும்.

விதியை வென்று, சோதனைகளை சாதனைகளாக்கி இன்று நம் கண் முன் உதாரணங்களாக வாழ்ந்துவரும் சாதனையாளர்களின் அனுபவத்தை அவர்கள் வாழ்க்கையில் வெற்றி கண்ட அந்த வழிமுறைகளை, சக்சஸ் மந்திரத்தை அனைவரும் தெரிந்துகொண்டு அவர்களும் பயன்பெறவேண்டும் என்ற ஒரு லட்சியத்தின் அடிப்படையில் சாதனையாளர்களை தேடிப் பிடித்து பேட்டி கண்டு வருகிறேன். அதை எனது தளத்தில் வெளியிட்டும் வருகிறேன்.

இதற்க்கு முன்பு, திரு.இளங்கோ அவர்களைப் பற்றி நாம் வெளியிட்ட பேட்டியை நம் மதிப்பிற்குரிய ஆசிரியர் ரிஷி அவர்கள் இங்கு வெளியிட்டது நினைவிருக்கலாம். திரு.இளங்கோ அவர்களை தொடர்ந்து இதோ மற்றொரு சாதனையாளரின் சாதனைத் துளி. இளங்கோவை பற்றியாவது இதற்கு முன்பு பல பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. ஆனால், நாம் கீழே பார்க்கப்போகும் சாதனையாளர் பற்றி வெளியுலகிற்கு அதிகம் தெரியாது.

நம் எல்லோருக்கும் நம்பிக்கையையும் வாழ்வில் பிடிப்பையும் ஏற்படுத்தக்கூடிய இவரது சாதனை சரித்திரத்தை தெரிந்துகொள்ளும் முன், இவர் வாழ்க்கையில் இறைவன் நடத்திய ஒரு அதிசய சம்பவத்தை கூறுகிறேன். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் இவரது வாழ்க்கையில் நடைபெற்ற அந்த பேரதிசயம்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!

கணவன், மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என தென் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய குடும்பம் அது. அது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து, உறவுக்காரர்களின் சூழ்ச்சி மற்றும் தவறான குடும்ப நிர்வாகம் ஆகியவற்றால், ஒரு வேளை சோற்றுக்கே கஷடப்படும் அளவிற்கு பிற்காலத்தில் வந்துவிட்டனர். வசதியே இல்லாம வாழ்ந்துடலாம். ஆனா வசதி வந்துட்டு மறுபடியும் போனா அதை தாங்கிக்க யாராலையும் முடியாது.  மூன்று வேளை சாப்பாடு என்பது அவர்கள் வீட்டில் இல்லை. இரண்டு வேளை தான். அதுவும் பெரும்பாலும் பழைய சோறு மற்றும் கூழ் தான். குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வசதியில்லை. ஆங்காங்கு கிடைத்த நகராட்சி பள்ளிகளில் தான் படிக்க வைக்க முடிந்தது.


அந்த குடும்பத்தில் இரண்டாவது வாரிசு அவன்.... கான்வென்ட்டில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தும் கார்பரேஷன் பள்ளி ஒன்றில் தான் 6 வது சேர்க்க முடிந்தது. ஆசையோடு பள்ளிக்கு கிளம்பும் மகனுக்கு சீருடை கூட வாங்கி கொடுக்க வழியில்லாது.... கணவரின் நல்ல வேட்டி ஒன்றை எடுத்து கத்திரித்து, அதில் சட்டை தைத்து தருகிறாள் மனைவி. மகனும் ஆவலோடு பள்ளிக்கு செல்கிறான். இப்படியாக வறுமையின் போராட்டங்களுக்கு நடுவே பள்ளி படிப்பு ஒரு வழியாக முடிகிறது.


கல்வி மீதிருந்த ஆர்வத்தால் அதற்கு பிறகு ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டபடிப்பு சேர்கிறான். படிக்கும் காலத்தில் தங்களது உறவினர் வைத்திருந்த ஹோட்டல் ஒன்றில் மாலை வேளைகளில் பில்போடும் வேலை கிடைத்தது. காலை கல்லூரி. மாலை ஓட்டல் வேலை என்று நகர்ந்தது வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு... ஏக்கம்... ! ஆசைக்கு என்று இல்லாமல் தேவைக்கு மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.

கல்லூரி படித்து முடித்த பின்பு, லெதர் கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.850/- சம்பளத்தில் சூப்பர்வைசராக வேலை கிடைத்தது. அதுவும் சில ஆயிரங்கள் செலவழித்த பின்னர் தான்.


"ஏதாவது நிச்சயம் சாதிக்க வேண்டும்" என்ற லட்சியத்துக்கிடையே பலப் பல வண்ணக் கனவுகளுடன், வாழ்க்கை துவங்குகிறது அந்த இளைஞனுக்கு. அதற்கு பிறகு திருமணம். ஒரு சிறிய அறையில் ஒண்டுகுடித்தனத்தில் தான் இல்லறம் நடக்கிறது. வறுமையில் இருந்தாலும் அவன் மகிழ்ச்சியோடு இருந்த நாட்கள் இவை தான். கணவன் மனைவி அன்பின் விளைவாக குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆண்டுகள் சில உருண்டோடுகின்றது. மனைவி அடுத்த குழந்தைக்கான கருவை வயிற்றி சுமந்து வருகிறாள்.

இந்நிலையில் ஒரு நாள், காலையில் கண் விழித்தபோது வலது புறக் கண்ணில் பார்வை மிக மிக மங்கலாக தெரிகிறது. எதிரே இருப்பது எதுவும் சரியாக தெரியவில்லை. (ஏற்கனவே இவருக்கு MYOPIA - கிட்டப் பார்வை உண்டு. அதற்காக கண்ணாடி அணிந்திருந்தார்). கண்ணுக்குள் ஏதோ ஒரு வித வலி. அருகே உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு ஓடுகிறார். "பயப்படாதீங்க.... ஒன்னும் இல்லே. ட்ராப்ஸ் எழுதித் தர்ரேன். அதை போட்டுட்டு வாங்க... சரியாகிவிடும்." என்று கூறுகிறார். ஆனால், ஒரு சில நாட்கள் அதை போட்டும் எந்தப் பயனும் இல்லை. நாளாக நாளாக பார்வை போய்கொண்டே இருக்கிறது. இவரது தந்தைக்கு, மறைந்த பேச்சாளர் வலம்புரி ஜானை நன்கு தெரியும். அவரது பரிந்துரையின் பேரில், நகரிலேயே பெரிய கண் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்து செல்கிறார். அங்கு தலைமை மருத்துவர் கண்களை பரிசோதிக்கிறார். "உங்களுக்கு கண்களில் வந்திருப்பது RETINAL HAEMORRHAGE என்னும் ஒரு வித நோய். அதாவது உங்கள் கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை நிறுத்த முடியாது. தானாக நின்றால் தான் உண்டு. இது ஏன் வருகிறது எப்படி வருகிறது இதெல்லாம் தெரியாது." என்கிறார். (1989 இல் நடக்கும் விஷயம் இது. இப்போதுள்ளது போல அப்போது கண் மருத்துவத்தில் நவீன வசதிகள் எல்லாம் கிடையாது.).


இவர் கண்கள் கலங்க...."இதுக்கு என்ன தான் வழி சார்?" என்று கேட்க, அதற்க்கு மருத்துவர் "இப்போவே ஒரு ப்ளைண்ட் ஸ்கூலில் நீங்க சேருவது தான் நல்லது. ஏன்னா... இந்த பிரச்னை உங்களோட இடது கண்ல கூட ஸ்டார்ட் ஆயிடுச்சு. சீக்கிரம் உங்களோட இடது கண் பார்வையும் போய்விடும். இதுக்கு ஒரே வழி... பார்வை இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்ள பழகிக்கொள்வது தான். Rest is with God" என்று கூறுகிறார்.


இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழ்க்கையே ஒரு கணம் இருண்டுவிட்டது போல உணர்கிறார். வீட்டிற்கு வருகிறார். அக்கறையுடனும் கவலையுடனும் விசாரிக்கும் மனைவியிடம் கூட இவருக்கு உண்மையை சொல்ல தைரியம் இல்லை. என்ன சொல்வது? எதை சொல்வது? "கொஞ்ச நாள் மருந்து போட்டுட்டு வந்தா குணமாயிடும்னு சொல்லியிருக்கிறார்" என்று  சும்மா ஒப்புக்கு சொல்லிவைத்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு கண்லயும் பார்வை போய்விடும்னா எப்படி தூக்கம் வரும்? எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு ஒரு 70 வயதுக்கு மேல் இப்படி ஒரு பிரச்னை வந்தாக் கூட பரவாயில்லே. தாங்கிக்கலாம். ஆனா, வாழ்க்கையே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இந்த சூழ்நிலைல இப்படி ஒரு பிரச்னை வந்தா யாரால தாங்கிக்க முடியும்?


இரவு முழுதும் யோசிக்கிறார். "நமக்கு மட்டும் ஏன் இப்படி? அப்படி என்ன பாவம் செஞ்சோம்?" எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது.


திக்கற்றோருக்கு அந்த தெய்வம் தானே துணை? கடைசியில், இறைவனின் கால்களைப் பற்றுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வருகிறார். இவருக்கு சுவாமி ஐயப்பன் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இவரது இஷ்ட தெய்வம் என்றால் அது ஐயப்பன் தான். மனம்விட்டு அடிக்கடி ஐயப்பனிடம் பேசுவது இவரது வழக்கம். 


எனவே, தன் வீட்டில் உள்ள ஐயப்பன் படத்தின் முன்பு நின்று ஐயப்பனிடம் மனமுருகி பேசுகிறார். "நான் என்ன பாவம் செய்தேன் ஐயப்பா? எனக்கு ஏன் இப்படி ஒரு பெரிய தண்டனை? வாழ்க்கையே இனிமே தான் ஆரம்பிக்கப்போகிற ஒரு சூழ்நிலைல இப்படி ஒரு தண்டனை எனக்கு ஏன்? உன்னைத் தவிர எனக்கு வேறு யாரு இருக்கா? நீ தான் என்னை காப்பத்தனும்..." இப்படி பலவாறாக புலம்புகிறார்.


கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார். அப்போதெல்லாம் 'டிக் 20' என்ற ஒரு வகை பூச்சி மருந்து ரொம்ப பேமஸ். அதை வாங்கி வைத்துக்கொள்கிறார்.


நேரே ஐயப்பன் முன்பு போய், "பார்வையில்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உனக்கு ஒரு வாரம் டயம் தருகிறேன். அதற்குள் என்னுடைய இந்த பிரச்னை முடிவுக்கு வரவேண்டும். இல்லையெனில் இந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிர் துறப்பேன். நிச்சயமாக" என்று அந்த இறைவனுக்கு கெடு வைக்கிறார்.


சரி... பூச்சி மருந்தை சாப்பிட்டும் சாகலேன்னா என்ன செய்றது? (சில பேர் அந்த பூச்சி மருந்தை குடித்தும் பிழைத்திருக்கிறார்களாம்.) எனவே முன்னெச்சரிக்கையாக அரை பாட்டில் தூக்க மாத்திரைகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறார். தூக்க மாத்திரைகளை முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பூச்சி மருந்தை குடிக்கலாம் என்று பிளான்.


ஐயப்பனுக்கு ஒரு வாரம் கெடு வைத்தாயிற்று. இவர் கெடு விதித்த நாட்கள் துவங்குகிறது. அதாவது கவுண்டிங் வித் டெத் ஸ்டார்ட்ஸ். மருத்துவத்துக்கும் இறைவனுக்கும் இவர் வைத்துள்ள போட்டிக்கான விடை தெரிய இன்னும் ஒரு வாரமே உள்ளது.


இவரை பொறுத்தவரை எப்படியும் ஒரு வாரம் கழித்து சாகப் போகிறோம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார். ஏனெனில், நகரிலேயே தலை சிறந்த கண் மருத்துவர் கூறிய வார்த்தைகளையும் மீறி தனக்கு பார்வை வரும் என்கிற நம்பிக்கை இவருக்கு இல்லை. இருப்பினும். பாறையில் துளிர்விடும் வேரைப் போல ஒரு ஓரத்தில் சின்ன நம்பிக்கை இருக்கிறது. "அந்த ஹரிஹரசுதன் நம்மை கைவிட மாட்டான்" என்று.


இந்த இடைப்பட்ட ஒரு வாரம், இவர் மிகவும் விரும்பிய ஆடைகளை வாங்கி அணிந்துகொள்கிறார். ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிடுகிறார். குழந்தையை கொஞ்சுகிறார். மரணத்தை அடுத்த வாரம் சந்திக்கப்போகும் ஒருவனுடைய மனநிலையில் இருந்துகொண்டு அனைத்தையும் செய்கிறார். இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது மனைவிக்கோ அல்லது வேறு எவருக்குமே தெரியாது. இந்த ஒரு வாரமும் ஒவ்வொரு நாளும் தூங்கி விழித்த பின்பு, ஐயப்பன் படத்தை ஒரு சில வினாடிகள் பார்த்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பதை வழக்கமாக வெச்சிக்கிறார்.


7 வது நாள் -  ஞாயிற்றுக் கிழமை படுக்கச்செல்லும் முன் நினைத்துக்கொள்கிறார். "இது தான் நமது கடைசி தூக்கமோ... ஒருவேளை...ஹூம்... !" என்று.

மறுநாள் திங்கட்கிழமை காலை எழுந்திருக்கிறார். வழக்கம்போல ஐயப்பன் படத்தை பார்க்கிறார். ஆனால் இம்முறை பார்வையில் ஏதோ வித்தியாசம். வித்தியாசம் அல்ல. மிகப் பெரிய முன்னேற்றம். எந்த கண்ணில் பிரச்னை என்று தற்கொலை முடிவிற்கு போனாரோ அந்தக் கண்ணில் பார்வை முன்னை விட பிரகாசமாக தெரிகிறது. ஒரு கணம் இது கனவா நிஜமா? தன்னை கிள்ளி பார்த்துக்குறார். நிஜம் தான். "ஐயப்பாஆஆஆஆஆஆஆ............." கதறுகிறார் ஐயப்பன் முன்பு. வேறு வார்த்தைகள் வரவில்லை.


உடனே தான் மருத்துவமனைக்கு ஓடுகிறார். அதே மருத்துவர் இவரது கண்களை பரிசோதித்து ஒரு கணம் ஷாக் ஆயிடுறார். "இந்த கண்ணையா நான் இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணினேன்? எல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கே இப்போ. ஒன்னுமே புரியலியே எனக்கு?" என்று தனது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். இடது கண்ணை டெஸ்ட் செய்கிறார். அங்கு கூட அந்த ரத்தக் கசிவு இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.


"தம்பி உன் ரெண்டு கண்ணும் நல்லா பர்ஃபெக்டா  இருக்கு. இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணப்போ எங்கே தப்பு நடந்துச்சுன்னு தெரியலே..." மருத்துவர் நடந்தது என்னவென்று புரியாமல் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் கூறுகிறார்.


ஆனால் நடந்தது என்னவென்று அந்த ஐயப்பனுக்கு தானே தெரியும்!!!!!!!!!!!!!!!!!!!!!


இவரோட வாழ்க்கையில் எப்படி இந்த அதிசயம் சாத்தியமாச்சு? ஒரு பட விழாவுல சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.... "நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும்... அந்த தெய்வத்தின் மீது நாம் எந்தளவு நம்பிக்கை வைக்கிறோமோ அந்தளவு அந்த தெய்வத்துக்கு சக்தி இருக்கும்! So, கடவுள் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கவேண்டும்!" என்று.


(மேற்படி நண்பருக்கு அந்த சூழ்நிலையிலும் ஐயப்பன் மேல இருந்த அந்த பக்தி - அந்த சின்ன நம்பிக்கை - மிகப் பெரிய விஷயமுங்க. அதை நினைவுல வெச்சிகோங்க!)


என்ன நம்புறதுக்கு கஷ்டமா இருக்கா? அட... நம் கண் முன்னே வாழ்ந்துவரும் நேரடி சாட்சிங்க இவர். நம்பலேன்னா எப்படி?


அன்றைக்கு ஐயப்பனால் காப்பற்றப்பட்ட இவர் அதற்கு பிறகு வாழ்க்கையில் சோதனைகளை, அவமானங்களை சந்திக்காமல் இல்லை. ஆனால், கடவுள் நம்முடன் இருக்கிறார். அவரது பரிபூரண கருணை நமக்கு என்றும் இருக்கிறது என்ற நம்பிக்கையில், சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, அவமானங்களை எல்லாம் அவன் இட்ட உரங்களாக கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து, இன்று மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்.


MADURAI APPU GROUP OF RESTAURANTS, R C GOLDEN GRANITES, SHRI SABARI BHAVAN, BLITZ BAKERY & CONFECTIONARY, BARBEQUE BISTRO என்று சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் ஆர்.சந்திரசேகர்.


ரூ.850/- மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய இவர் இன்று பல கோடிகளை ஒவ்வொரு மாதமும் அனாயசமாக TURN-OVER செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.


விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் கூடவே கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் இருந்தால் எப்பேற்ப்பட்ட சாதனையும் சாத்தியமே என்று கூறும் இவரது வரலாறு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.


எப்படி இவற்றை இவர் சாதித்தார்? அதற்கு இவர் கண்ட வழிமுறைகள் என்ன? உழைத்த விதம் என்ன? பட்ட அவமானங்கள் என்ன? சந்தித்த துரோகங்கள் என்ன? அனைத்தையும் விரிவாக உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.

விரைவில் தனிபதிவாக... ONLYSUPERSTAR.COM தளத்தில்... 

நண்பர் சுந்தர் திரு.சந்திர சேகர் அவர்களுடன் :

To read more on 'Rendezvous with Mr. Chandrasekar' : Please click
=============================================================

என்ன நண்பர்களே...! நல்ல மனசுக்கு வரும் சோதனைகள் எல்லாம் , நிச்சயம் ஒருநாள் பனித்துளி போல மறைந்து விடும் என்பதை உணர  முடிகிறதா? கவலையே பட வேண்டாம். இதோ நெருங்கி விட்டோம்  வெற்றிப்  படிகளை. நாமும் நம் இஷ்ட தெய்வத்தை பற்றிக்கொள்வோம்..!

2012-2013 குருப் பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchchi palankal)

|

நமது வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பன்னிரண்டு ராசிகாரர்களுக்கும்  உரிய இந்த வருட குருப் பெயர்ச்சி பலன்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கீழே இரண்டு பிரபல ஜோதிடர்கள் கணித்த பலன்களின் 'லிங்க்'குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் படித்துப் பார்க்கவும்...

திரும்பவும் கவனப் படுத்துகிறேன். இவை ராசிகளுக்கு உரிய பொதுப் பலன்களே...  தங்கள் சுய ஜாதகப்படி, பலா பலன்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ அமையும். அதனால், ஜெனன கால ஜாதகத்தையும் பரிசீலித்து - கவனமுடன் இருந்து உரிய தெய்வ வழிபாட்டை செய்து வந்தால், எந்த தீமையும் நம்மை அசைக்க முடியாது.

இந்த வருடம் குரு - ரிஷப ராசியில், கேதுவுடன் இருந்து பலன் அளிக்க விருக்கிறார். ரிஷபம் - சுக்கிரன் வீடு. இவருக்கு பகை வீடு. ஒரு எதிரியின் வீட்டில் இருந்து கொண்டு - கூடவே ஒரு சர்ப்பமும் கூட இருந்து , அவர் பலமிழந்து தான் இருக்க கூடிய சூழல் நிலவுகிறது. அதனால், இந்த வருட குரு பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்காத ராசிகள் கூட , வருந்த தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்.....

இஷ்ட தெய்வ வழிபாட்டை, விடாமல் மேற்கொள்ளுங்கள். உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கிடைக்கும் பலன்கள் அனைத்தும் அவன் வரம் என்று நம்புங்கள்... நிச்சயம் வாழ்வில் வசந்தம் நிகழும்...!

வாழ்க அறமுடன் ..! வளர்க அருளுடன்..!

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்:


http://www.ziddu.com/download/19342493/27.5.2013-.pdf.html2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள் : 
 
http://www.ziddu.com/download/19342500/27.5.2013-.pdf.html

நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா?

| May 4, 2012
உலகமே ஒரு TV பெட்டிக்குள் , அல்லது கம்ப்யூட்டருக்குள் அடங்கிவிட்டது இப்போதெல்லாம். எவ்வளவோ நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. Discovery ,  NGC சானல்களில் எல்லாம் வரும் நிகழ்ச்சிகள் சில சமயம் கொஞ்சம் கூட போரடிப்பதில்லை. ஆனால், இதில் ஒரு ஆபத்தும் ஒளிந்து இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு, நான் NGC யில் நைல் நதி பற்றிய ஒரு டாக்குமெண்டரி பார்த்தபோது, எத்தியோப்பியாவில் ஒரு ரெஸ்டாரன்ட். காண்பித்தார்கள். ஆட்டம் , பாட்டம் - குடி , கூத்து... இப்படியே உற்சாகமாக இருந்தது. நான்-வெஜ் - ஸ்லைஸ் ஸ்லைஸ் ஆக ஒரு இடத்தில் அடுக்கி இருந்தது. அத்தனையும் வேக வைக்காத மாட்டு இறைச்சி. ஆடிக்கொண்டே , மது அருந்திக்கொண்டே - ஆலிவ் ஆயில் தடவிய அந்த இறைச்சியை , அப்படியே பச்சையாக மென்று கொண்டு இருந்தனர். பார்த்து , அப்படியே மிரண்டுவிட்டேன்.

ஆள் ஒவ்வொருத்தரும் , கர்லாக் கட்டை மாதிரி உடம்பு வைத்துக்கொண்டு நெடு நெடு என்று இருந்தனர். ஒருவேளை அவர்கள் உடம்புக்கு செரிக்குமோ என்று எண்ணம் தோன்றியது. மனதுக்குள் உடனேயே - எதியோப்பியாவில் இருப்பவர்கள் எல்லாம் பச்சையாவே கறி சாப்பிடுறாங்கப்பா.. ன்னு ஒரு எண்ணம் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.

ரொம்ப நாளைக்கு அப்புறம், ஆப்பிரிக்காவில் இருந்த நண்பர் ஒருவரை கேட்டபோது, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஏதாவது ஒன்னு, ரெண்டு பேர் அப்படி இருக்கலாம். நான் பார்க்க யாரும் அப்படி இல்லைன்னு சொன்னார். அப்பாடான்னு இருந்தது. அந்த நிம்மதி கூட கொஞ்ச நாளைக்குத்தான் இருந்தது - இன்னொரு விஷயம் கேள்விப்படும்வரை . எங்க ஊர்ல ஒரு பொண்ணு. பார்க்கிறதுக்கு நல்லா , அழகா அம்சமா இருக்கும். காலேஜ் படிச்ச பொண்ணு. அவங்க வீட்டுல மட்டன் சமைச்சா கிளீன் பண்றப்போ, ஒன்னு ரெண்டு கறித்துண்டு அப்படியே பச்சையா சாப்பிடுமாம். 'ஹா , என்ன கருமம்டா இது ' ன்னு ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணை பார்த்தாக்கூட - அந்த அழகைத் தாண்டி , கொஞ்சம் அருவருப்பு - மிரட்சி தான் இருந்தது. ஒரு நாள் , நேரடியாவே கேட்டுட்டேன். பச்சையா கறி சாப்பிடுவியா..? ஒரு மாதிரியா இல்லை.. நாம என்ன மனுஷனா.. இல்லை மிருகமான்னு..!

ரொம்ப கூலா சொல்லுச்சு. "ஏன் , வேகவைச்சு சாப்பிட்டா மட்டும் நாம மனுஷங்க ஆயிடுவோமா? "  - அதே வேதம் புதிது படத்துல வர்ற கை, படார் , படார்னு அடிச்சது. (தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? )
  
என்ன வார்த்தைடா சாமி..?  அதானே பச்சையா கறி சாப்பிடுற மிருகத்துக்கும், வேகவைச்சு , மசாலா போட்டு சமைச்சு சாப்பிடுற நமக்கும், ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லையே...? ஐயர் ஊட்டு ஆளுங்க எல்லாம் , கறி சாப்பிடுற ஆளுங்களை ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாங்கன்னு அப்போதான் தோண ஆரம்பித்தது.

அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அந்த பொண்ணு பக்கா வெஜிடேரியனாம். பாப்பா பார்க்கிறதுக்கு அழகா இருக்குதுன்னு, அது கூட இருந்த பொண்ணே - இந்த மாதிரி செய்தியை கெளப்பிவிட்டு இருக்கு.   ஆரும் பாக்கப்படாது, ஆரும் பேசப்படாது, ஆரும் தண்ணி கொடுக்கப்படாதுன்னு அதுவே நாட்டாமை மாதிரி முடிவு எடுத்திருக்கு. 

இது எதுக்கு சொல்ல வர்றேன்னா, எந்த ஒரு விஷயம் படிச்சாலும், கேட்டாலும், ஏன் டிவில பார்த்தாலும் படக் படக்குன்னு நம்பிடாதீங்க...

டிஸ்கவரி சானல்ல - பழைய இந்தியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி , ஹரித்வார் கும்பமேளா நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறப்போ - கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் , பரவச உற்சாகத்தில் - மேனியெல்லாம் விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு , காவி வேஷ்டி அணிந்த சாமியார்களை காட்டுவார்கள். பாம்பாட்டி, குரங்காட்டி என்று ஒரு ஸ்லாட்டாவது வரும்.

இதையெல்லாம் பார்க்கும் வெளி நாட்டுக்காரர்கள் மனதில்  - ஓ.. இந்தியாவில் இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மனோபாவம் வந்துவிடுகிறது. சமீபத்திய IT புரட்சி நடந்து, இந்தியர்கள் உலகம் முழுவதும் இன்னும் அதிகமாக வசிக்கத் தொடங்கியபின், கொஞ்சம் மனோபாவம் மாறி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். இப்போதும், வெளி நாட்டில் இருந்து இங்கு வரும் நண்பர்கள், யாராவது காவி வேட்டியைக் கண்டால்  கொஞ்சம் மிரளத் தான் செய்கிறார்கள். மந்திரம் போட்டு விடுவார்களாம். நமக்குத் தானே தெரியும், இங்கு காவி கட்டி  பிச்சை எடுக்கும் பெரும்பாலோர் பிழைக்க வழியில்லாமல் / வேலை செய்ய பிடிக்காத சோம்பேறிகள் என்று.

ஆனால், மேலை நாட்டு தத்துவம் படிப்பவர்கள் - நமது இந்தியாவை ஒரு ஞான பூமியாகத் தான் பார்க்கின்றனர். விஞ்ஞானம் விளங்க முடியாத பல விஷயங்கள் , இங்கு இருக்கும் சில துறவிகள் அனாயசமாக செய்வது, அவர்கள் வியக்கும் ஒன்று.

பால் பிரண்டன் என்பவர் - ஒரு அறுபது , எழுபது வருடத்துக்கு முன்பு இந்தியா வந்தவர். உலகம் முழுவதும் - எகிப்திய பிரமிடு, இஸ்லாம் , இந்தியா , மந்திரவாதிகள், சித்தர்கள் என்று ஒரு விஷயம் கூட விடவில்லை. பிரித்து மேய்ந்து இருக்கிறார். அவரது புத்தகங்களை படித்த வெளிநாட்டவர்கள் - கூட்டம் கூட்டமாக இந்தியா வரத் தொடங்கினார்கள். இந்தியாவில் உள்ள ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதை அவர் தன் அனுபவக் கட்டுரைகளாக விவரித்து இருந்த விதம் அருமை. 

உலகம் முழுவதும் தேடிக்கொண்டு இருந்த விஷயத்துக்கு , அவருக்கு விடை கிடைத்த இடம் எது தெரியுமா? எத்தனையோ மத குருமார்களுடன் ,  இந்தியாவிலும் மந்திரவாதிகள், சித்தர் புருஷர்கள் என அவருக்கு அனுபவம் இருந்தபோதிலும், கடைசியில் அவர் மனம் ஒடுங்கிய இடம், ரமண மகரிஷியிடம். அண்ணாமலையின் அடிவாரத்தில், அற்புதமான அருள் அலைகளுடன் - ஒரு மகான் அமர்ந்து இருப்பதை அவர் விவரித்து இருப்பதைப் படித்துப் பாருங்கள்.

எங்கிருந்தோ வருபவர்களுக்கு உள்ள தேடல், நாம் இன்னும் தொடங்கக் கூட இல்லாத ஒரு விஷயமாக இருப்பதை உணரமுடியும். சரி,  வாருங்கள் பால் பிரண்டன் நம்மிடம் எதையோ சொல்லக் காத்திருக்கிறார்...

"ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

 "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"


"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட    எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள்.

அட, ஒருவேளை இந்த மாதிரி வர்ற திருடர்கள் கூட ஏமாந்து போகக்கூடாதுன்னு நினைச்சித்தான் , இந்த கால (ஆ) சாமிகள் நிறைய பணத்தை சேர்த்து வைக்கிறாங்களோ..  (# டவுட்டு) 

 ரமண மகரிஷி  அந்த கொள்ளையர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."

எப்பேர்ப்பட்ட மகான் பிறந்த பூமியில் நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா? உடனே இப்போ இருக்கிற ஆளுங்களை நினைச்சு கோபப்படாதீங்க. சாதாரண வேங்கட ரமணன் என்னும் சிறுவன், ரமண மகரிஷியாக மாறும்போது, நம்மால் அந்த அளவு முடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் நாம் யார் என்பதாவது உணர முற்படுவோமே..!

நாம், நம்ம வீடு, நம்ம ஊர், நம்ம நாடு, பூமி, சூரிய மண்டலம், பால்  வெளி, அண்ட பேரண்டம் - பற்றியெல்லாம் பார்க்கிறப்போ - அட போய்யா... இதுல கடவுளாவது ஒன்னாவது ... ... இதுல கடவுள் எங்கே இருக்க முடியும்? அப்படி ஒருத்தர் இருந்தா, நம்மளை பார்க்கிறது தான் வேலையா அவருக்குன்னு ஒரு கேள்வி வரலாம்....

உங்களுக்கு வருதோ , இல்லையோ - எனக்கு வருது....
இதோ , நாளைக்கு சித்ரா பௌர்ணமி. சித்திர குப்தன் பிறந்த நாள்னு ஒரு சிலர் சொல்றாங்க. அதுக்கு ஒரு கதை வேற.நம்ம செய்ற பாவ புண்ணியம் எல்லாம், அவர் கணக்கு வைப்பாராம். பயங்கர காமெடியா இருக்கு ... என்று தான் தோன்றுகிறது இல்லையா..?

ஆனா, சத்தமே இல்லாம சில மந்திர ஜெபங்கள் ஜெபித்து , நினைத்ததும் அகத்தியர் போன்ற சித்தர்களை தரிசனம் செய்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்களே..! தீராத சில பிரச்சினைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வும் பெறுகிறார்களே.. சித்தர் இருப்பது உண்மையெனில், அந்த இறைவன் ஒருவர் இருப்பது நிஜம் தானோ..?  வள்ளலாருக்கும், ரமணருக்கும், ராமக்ருஷ்ணருக்கும் கடவுள் காட்சி கொடுத்தது உண்மையென்றால், நமக்கும் அந்த பாக்கியம் ஏன் கிடைக்காது , முழுமையாக நம்பி, அவன் இடத்தில் நம் தீர்வு தேடுவோம்... வெற்றி நிச்சயம். 

இறைவனுக்குக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல குரு ஒருவர் இருந்தால் நம் வேலையும் எளிது. தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை.. ஆனால் என்னதான் இருந்தாலும், ரமண மகரிஷி கூறியது போல அவரவர் தனிப்பட்ட அனுபவம் வேண்டும். அது கிடைக்க நாம் நம்முள்ளே தேடுவோம்...

.......................... தேடுவோமா?

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com