வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம். நமது வாசகர்கள் அனைவரிடமும், ஒரு உதவியை எதிர் பார்க்கிறேன். எந்த ஒரு முயற்சியும், தனிப்பட்ட
முறையில் செய்வதை விட, ஒரு கூட்டு முயற்சியாக செய்தால், அது எளிதாக
நிறைவேறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
சென்ற பதிவில், நான் குறிப்பிட்ட படி - சித்தர்கள் நமக்கு அருளிய அபூர்வ
ஆன்மீக குறிப்புக்களை பற்றிய கட்டுரைகள் நாம் தொடங்கும் முன்பு, இந்த பதிவு
அவசியம் என எண்ணியதன் விளைவே இந்த கட்டுரை. நமது வாசகர்களில் சும்மா ஒரு
வாசிப்பு சுவாரஸ்யத்துக்கு வருபவர்கள் எத்தனை பேர், நிஜமாகவே ஆர்வத்துடன்
வருபவர்கள் எத்தனை பேர், நான் மட்டும் நல்லா இருந்தாப் போதும் என்று
நினைக்காது, பொது நல நோக்குடன் இருப்பவர்கள் எவ்வளவு பேர் என்று அறிய ஒரு
சின்ன முன்னோட்டமாக இந்த முயற்சி.
என்னடா, ஓவர் பில்ட் அப் ஆக இருக்கிறதே, ஏதாவது அறக்கட்டளை, மடம், கோவில்
பணி என்று பைசா சம்பந்தப்பட்ட விஷயமோ என்று ஜெர்க் ஆகிடாதீங்க... இது
அப்படிப்பட்ட விஷயமே அல்ல...! அது நமது நோக்கமும் அல்ல. கிட்டத்தட்ட
அறுநூறு பாலோவர்ஸ், இரண்டாயிரத்து ஐநூறு இ-மெயில் சப்ஸ்க்ரைபர்ஸ் என்று
ஒரு பெரிய நெட்வொர்க் ஆக நமது தளம் இப்போது இயங்கிக்கொண்டு இருக்கிறது.
இவங்க எல்லோரையும் இந்த பதிவு மூலம் ஒரு சின்ன ஒருங்கிணைப்பு பண்ணனும்னு
ஒரு ஆசை.. அதிக பட்சம் உங்கள் மேலான நேரத்தை, ஒரு அஞ்சு நிமிஷம்
ஒதுக்கினாப் போதும். ஒன்னும் இல்லை, இந்த பதிவு படிச்சதும், நீங்க ஒரு E-mail /
பின்னூட்டம் இடணும். படிக்க வரும் வாசகர்களுக்கு ஒரு உபயோகமான தகவலா
இருக்கணும். அவ்வளவுதான் விஷயம். In future, நாம எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி , ஒரு குழுவா அல்லது ஒரு forum போன்று
நமது விவாதங்கள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசை.
விஷயம் இதுதான் : நமது பாரத பூமியில் எவ்வளவோ ஆலயங்கள் இருக்கின்றன.
ஆனால், ஒரு சில கோவில்களுக்கு சென்று வணங்கி வரும்போது, சில கோரிக்கைகள்
உடனடியாக நிறைவேறுகிறது. அதற்க்கு என்ன காரணம், என்ன சூட்சுமம் எல்லாம்
நமக்குத் தெரியாது. ஆனால், உங்கள் மனது அதை உணரும். முதல் தடவை எதோ
எதேச்சையாக நடந்தது போல தோன்றினாலும், அடுத்தடுத்து அந்த குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று வரும்போது, ஆச்சரியப் படத்தக்க
விஷயங்கள் நடக்கும். மனது அந்த இறைவனை 'சிக்' கென பற்றிவிடும். இந்த
அனுபவம், உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருந்து வந்து இருக்கும்.
அல்லது உங்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு நீங்கள் சொல்லி இருக்கக்
கூடும். இந்த ரகசியத்தை, நீங்கள் நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டால்,
நமது வாசகர்கள் குழுவில் உள்ள அனைவரும் பயன் பெற உதவியாக இருக்கும்.
இறைவனின் அருள் கடாட்சம் பரிபூரணமாக நிலவும் ஆலயம் பற்றி நீங்கள் உணர்ந்த
அனுபவம், அந்த ஆலயம் எங்கே இருக்கிறது, என்ன பலன்கள் உடனடியாக கிடைக்கும்
என்பது பற்றிய தகவல்கள், துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கும் எதோ ஒரு
நல்ல ஆத்மாவுக்கு, உடனடி தீர்வாக அமையும்.
நமது வாசகர்கள் அனைவரும் ஏனோ தானோவென்று இருப்பவர்கள் இல்லை. அவர்கள் மிக
மிக நல்ல மனிதர்கள் என்பதை , நம் வாசகர்களும், புதிதாக நம் தளத்துக்கு
வரும் வாசகர்களும் உணர வேண்டும். ஏற்கனவே நாம், பல ஆலயங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் பல
கட்டுரைகளில் அலசி இருந்தாலும், இந்த பதிவும், இதை சார்ந்து நீங்கள் இடும் பின்னூட்டங்களும், இணைய தள
வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைய வேண்டும் என்பது என் ஆசை.
பிள்ளையார் சுழியாக, நான் ஆரம்பித்து வைக்கிறேன். ஒரு சின்ன கோடு போட்டா, நீங்கள் ரோடே போட்டு விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
====================================================================
இந்த ஆலயம் ஒரு பழம்பெரும் சிவ ஆலயம். கட்டி முடித்து ஆயிரம் வருடங்களுக்கு
மேல் இருக்கும். காலம் காலமாக பல சிவன் அடியார்களின் திருவடி பட்ட இடம்.
சத்தமே இல்லாமல், பல ஆச்சர்யங்களை அற்புதங்களை நடத்திக் கொண்டு
இருக்கிறார், இங்கு உள்ள சிவன்.அந்த சித்தர் வந்து வழிபட்டு இருக்கிறார், இந்த நாயன்மார் வந்து தொழுது
இருக்கிறார். தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒவ்வொரு ஆலயத்திற்கும் ,
எவ்வளவோ பெருமைகள் இருக்கும்.
இந்த ஆலயத்திற்கும் இருக்கிறது. ஆனால், எது
எப்படி இருந்தாலும், நம் மனது அறிய சில அதிசயங்கள் நிகழ்ந்தால் ஒழிய, நாம்
நம்புவதேயில்லை, இந்த மாதிரி நிறைய கோவில்களை பார்த்திருக்கேன் சாமி, ஆனா, நான் போய்
கும்பிட்டா, அந்த சாமி கண்டுக்கிறதே இல்லை.. மேலே சொல்லு..! என்று தான்
தோன்றும் இல்லையா? பர்ட்டிக்குலரா நான் ரொம்ப மோசம்... அவ்வளவு சீக்கிரம் என்
மனசு எந்த விஷயத்தையும் சீர் தூக்கிப் பார்க்காமல் ஒப்புக்கொள்வது இல்லை.
அப்படிப்பட்ட என்னையும் மாற்றியவர் இங்கு அருள் பாலிக்கும் அய்யன். கிட்டத்
தட்ட பத்து வருடங்களாக , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு
வழிபட்டுக் கொண்டு இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு பல அற்புதங்களை
இவர் நடத்தி இருந்த போதிலும், என் நண்பர் இருவரின் வாழ்க்கையில் இவர்
நடத்தி இருக்கும் அற்புதங்கள், சத்தியமாக எதேச்சையாக நடந்த விஷயம் அல்ல.
விசேஷ தினங்களில், பிரதோஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். சாதாரண நாட்களில் ,
இவரைக் காண சென்றால் நீங்களும், இறைவனும், கோவில் குருக்களும் மட்டுமே
இருப்பீர்கள். சமயத்தில் குருக்கள் கூட வெளியில் நந்தி மண்டபத்தில் ஓய்வு
எடுத்துக் கொண்டு இருப்பார். நீங்களும், பரம்பொருளும் மட்டுமே. நீங்கள்
உரையாடுவதை அவர் காது கொடுத்து கேட்கும் உணர்வு , உங்களுக்கு ஏற்படும். இதை
எழுதும்போதே , சில சம்பவங்கள் நினைத்து மயிர் கூச்செடுக்கிறது.
"ஐயனே,
என்னாலே முடியலை, என்னோட சக்திக்கு உட்பட்டு என்னாலே சமாளிக்க முடியும்னு
தெரியலை, தயவு செய்து அருள் புரியுங்கள்" - என்று உங்கள் மனதுக்குள்
ஒலிக்கும் ஓலக்குரலை, ஒரு தாயின் கருணையுடன் - செவி மடுத்து , பிரச்னைகளை
உடனுக்குடன் ஊதித் தள்ளி, பரவசத்தில் ஆழ்த்துபவர், இந்த ஆலயநாதர்.
என்னதான் பகீரதப் பிரயத்தனம் எடுத்து நாம் முயற்சிகள் மேற்கொண்டாலும் ,
சில விஷயங்களில் இறைவனின் கருணை கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. சிலருக்கு
அது அலுவலக சம்பந்தமாக இருக்கலாம், கடன், சொத்துப் பிரச்னை, திருமணம் என்று
பிரச்னைகளுக்கா பஞ்சம். இதோ முடியப்போகிறது என்று நினைத்து இருக்கும்
நிலையில், எங்கிட்டிருந்தோ ஒரு புது குறுக்கீடு வந்து, மறுபடியும் முதல்ல இருந்தா..
"த்ஸ்..அப்பா, இப்போவே கண்ணைக் கட்டுதே..." , என்று நொந்து நூடுல்ஸ்
ஆகிவிடுவோம்.
ரொம்ப கூலா சில பேர் சொல்லிடுறாங்க, மனுஷனா பொறந்தா, கஷ்ட நஷ்டங்கள்
இருக்கத்தான் செய்யும். எல்லாத்தையும் சமாளிக்கனும்னு. கரெக்ட்ங்கண்ணா ..
வெறும் கஷ்டமும், நஷ்டமும் மட்டும் தான் இருக்கு... என்னைக்கு கரை ஏறப்போறோம்னு தெரிய மாட்டேங்குதே... அதைத் தானே யோசிக்கிறீங்க... மேலே
படிங்க.. ! என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுகிறேன்.
"ஐய்யா, இந்த ஜாதகத்தைப் பாருங்கள், எனக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா ,
இல்லையா ? எதாவது நல்ல வார்த்தை கூறுங்கள்" என்றுதான் அவர் அறிமுகம் சென்ற வருடத்தில் நடந்தது. கணவன், மனைவி இருவர் ஜாதகமும் இருந்தது. ஏற்கனவே தாமத திருமணம். ஜாதக ரீதியாக அவர் மனைவிக்கு மிக
உஷ்ணமான உடம்பு. கரு தங்கினாலும், மருத்துவ ரீதியாக கரு நிலைப்பதற்கு உடம்பு ஒத்துழைக்காது. ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு
இல்லை என்றே நிலை. ஆனால், ஒரு நல்ல ஜோதிடன் அனுகூலமான பலன்கள் நடக்க வாய்ப்பு
இல்லையெனினும், அதை வாய் விட்டு கூற இயலாது, அதை ஒரு கொள்கையாகவே வைத்து
இருப்பவன் நான்.
அவருக்கு நான் கூறிய பரிகாரம் இதுதான். சிவ ராத்திரி
நெருங்கிக்கொண்டு இருந்த வேளை அது. நீங்களும் , உங்கள் மனைவியும் சிவ
ராத்திரி முழுவதும், இந்த ஆலயம் சென்று - உங்களால் எவ்வளவு நேரம் ஆலயத்தில்
இருக்க முடியுமோ, அவ்வளவு நேரம் இருந்து - மனம் உருக இறைவனிடம்
வேண்டுங்கள். நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. விரைவில்
நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள் என்று, நானும் அவருக்காக வேண்டினேன். வீட்டில் இருந்த கல்கண்டு கொஞ்சம் எடுத்து, அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் சார் என்று இனிக்க இனிக்க வாழ்த்தி அனுப்பினேன்.
அவரும்
சும்மா இல்லை, சிக்கென அவன் திருவடிகளைப் பற்றி சரணடைந்தார். கிட்டத்தட்ட
மருத்துவ உலகமே, கைவிரித்து விட்ட சூழலில் அந்த தம்பதிகள் இருந்தனர்.
நம்பிக்கையின் ஒளி கீற்று மொத்தமாக மங்கிய நிலை.... ஆனால், இன்று ! ஆம்,
அந்த பேரதியசம் நடந்தே விட்டது... மிகச் சரியாக பதினைந்து மாதத்திற்குள்
அவர் இன்று ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தந்தை.
சிவராத்திரி அன்று, இரவில் இந்த ஆலயத்திற்கு வந்த அவருக்கு, ஒரு வயதான பெரியவர் பேச்சுத் துணைக்கு
கிடைத்து இருக்கிறார். பொதுவாக பேசத்தொடங்கிய அவர்கள் உரையாடல், ஒரு மணி
நேரத்துக்கும் மேல் நடந்ததாம். சிவ ராத்திரியின் மகிமைகள், சிவனின்
திருவிளையாடல்கள் என்று பேச்சு மிக அருமையாக நடந்து இருந்து இருக்கிறது.
அந்த பெரியவர் யார், என்ன என்று விவரம் தெரியவில்லை. மனது முழுவதும்
லேசாகி, ஒரு அபரிமிதமான பரவச அனுபவத்தில், அந்த தம்பதிகள் திளைத்து
இருந்தனராம். அவர் எதோ ஒரு சித்தராக இருக்கலாம் என்று அந்த நண்பர்
மனப்பூர்வமாக நம்புகிறார்.
"சார், இன்னைக்கு என் பையன் என் கன்னத்தைப் பிடித்து, முத்தம் கொடுத்தான் ,
பாருங்க! நான் அவுட் சார், வாழ்க்கையில இம்புட்டு சந்தோசமா நான் இருந்ததே இல்லை"ன்னு இன்று அவர் கூறியபோது , அவர் முகத்தில் தெரிந்த அந்த
மகிழ்ச்சி, நிம்மதி... அடேங்கப்பா...! ஈடு இணையே இல்லை. எத்தனை கோடி சொத்து
இருந்தாலும், கொஞ்ச ஒரு மழலை இல்லையென்றால், அது தரும் வேதனை அதை
அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்...
முக்கியமாக சிவ ராத்திரி தினத்தில் அத்தனை மகிமை பொருந்திய ஆலயத்தில்
இருந்ததே, ஜாதக ரீதியாக அத்தனை குளறுபடிகளையும் தூக்கி கடாசி
இருக்கிறது,... நாளென்ன செய்யும் ? கோள் என்ன செய்யும்- அவன் கருணை
இருக்கும் இடத்தில். இந்த நண்பர் வாழ்க்கையில், அவன் அதை
நிரூபித்துவிட்டான். இது நூறு சதவீதம் உண்மையாக நடந்த நிஜம்.
இன்னொரு நண்பருக்கு, நடந்த சம்பவம்.... கந்து வட்டியால் கதறி கதறி
துடித்துக் கொண்டு இருந்தவர். நல்ல சம்பளம் வாங்கியும், ஒரு பிரயோஜனமும் இல்லை, வாழ்க்கை முழுவதுமே வட்டி
கட்டியே ஓடிவிடுமோ என்கிற நிலை. சொந்தம், பந்தம் நட்பு என்று அத்தனை
பேரிடமும் ஏற்கனவே உதவி வாங்கி, அதை திருப்பிக்கட்ட தலை குப்புற
குட்டிக்கரணம் அடித்து, வேறு எங்கும் உதவி கேட்க முடியாத சூழ்நிலை.
கிரெடிட் கார்ட் கடன் நிரம்பி வழிகிறது.. மாத மாதம் , பேங்க் காரர்கள்
வீட்டுக்கு வந்து சட்டையை பிடிக்கின்றனர். ஏற்கனவே ஒரு பாங்க்கில் லோன்
எடுத்து திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை. இப்போதெல்லாம், ஒரு டெலி போன்
பில் ஒழுங்காக கட்டவில்லைஎன்றாலே, உடனே CIBIL ரிப்போர்ட்டில்
பதிவாகிவிடும். எந்த பேங்க்கிலும் லோன் கிடைக்காது. ஆரும் பேச மாட்டாங்க.
ஆரும் தண்ணி கொடுக்க மாட்டாங்க.. நாட்டாமை தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து.
இந்த நிலைமையில் வீட்டிலும் அனுசரணையாக யாரும் இல்லை. ஒரே சண்டை, களேபரம்.
இப்படி இருந்தா, யார் மதிப்பா...? எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லே...!
மனுஷன் கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்துக்கே வந்து விட்டார்...! செத்துப்
போறதுதான், இருக்கிற ஒரே வழி. ஆனா, குடும்பம் , குட்டி என்ன செய்யும்...?
பெருமைக்கு , பந்தாவுக்குன்னு நிறைய செலவு பண்ணி, சொத்து வாங்குறேன், ஷேர் வாங்குறேன்னு இறங்கி, இன்னைக்கு அத்தனையும்
விற்றும், கடன் தீர்ந்த பாடு இல்லை. யாரைப் பார்த்தாலும், முகத்துல
சிடுசிடுப்பு. வாழ்க்கையில தோத்துக்கிட்டு இருக்கிறவங்க ஒவ்வொருத்தருக்கும்
இருக்கிற அதே உணர்வு.கடைசியில் நடுத்தெரு
நாராயணன் நிலைமை. இவரு நல்ல நேரம், ஆரம்பமாகிற நேரம் அது. எதேச்சையா, என்னை
சந்தித்தார்.
"சார், சாமி, கடவுள் , ஜாதகம் எதிலேயும் எனக்கு நம்பிக்கை ரொம்பவே இருந்துச்சு, ஆனா இப்போ இல்லை. எத்தனையோ கோவில் - எத்தனையோ
பரிகாரங்கள், எல்லாம் வேஸ்ட் சார்.. ஒவ்வொருத்தரும் முடிஞ்ச அளவுக்கு
இன்னொருத்தனை ஏமாத்தி காசு சம்பாதிக்கிறாங்க. அறிவு தான்
ஒரு மனுஷனை வழி நடத்துது. அதுதான் நான் உணர்ந்த ஞானம். எனக்கு இருக்கிற அறிவு பத்தலைன்னு நான்
நினைச்சுக்கிறேன். ஆனா, இப்படியே வாழ்க்கை போச்சுன்னா, நான் வாழுறதிலேயும்
அர்த்தம் இல்லை"ன்னு தான் ஆரம்பிச்சார்....
நான் அவர் கட்டத்தை வாங்கிப்
பார்த்திட்டு, முதல்ல அவர் கையை பிடிச்சு குலுக்கினேன். முதல்ல கையை
கொடுங்க சார்.. நீங்க எவ்வளவு கஷ்டப் பட்டு இருப்பீங்கன்னு கட்டத்தைப்
பார்த்தாலே தெரியுது... ஆனா, போன மாசத்தோட எல்லா நிலைமையும் முடிஞ்சது.
இவ்வளவு தூரம் நீங்க கடந்து வந்ததிலேயே, நீங்க எவ்வளவு பெரிய திறமைசாலின்னு
தெரியுது... கவலையே படாதீங்க...! எண்ணி ரெண்டு மாசத்துக்குள்ளே, உங்க
கஷ்டம் எல்லாம் பறந்து போகும்... நீங்க பெரிய ஆளா ஆகப் போறீங்க... !
நம்பிக்கையோட இருங்க....! இனி தொட்டது எல்லாம் வெற்றிதான்னு சொன்னேன்.
இப்படி ஒரு வார்த்தையை அவர் எதிர் பார்க்கவே இல்லை....வெயில்ல கிறங்கி, தண்ணி தண்ணின்னு வர்றவனுக்கு - சும்மா கும்முன்னு மோர் கிடைச்சா எப்படி இருக்கும்? " ரொம்ப சந்தோசம்
சார்... என்ன பரிகாரம் செய்யனும், எல்லாமே ஏற்கனவே செஞ்சுட்டேன்.. இனியும்
எதுவும் செய்யணும்னாலும் செய்றேன்"னு சொன்னார்...
"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் சார்.. நீங்க ஒரு கோவிலுக்கு மட்டும்
போயிட்டு வாங்க"ன்னு நான் கைகாட்டினது இந்த கோவில் தான்... "எப்படி
கும்பிடனும், ஏதாவது வழிமுறைகள் இருக்குதா?"....ன்னு கேட்டார். அவர் நிலைமை
எனக்கு நல்லாவே தெரியும். ஒரு பார்மாலிட்டியும் கிடையாது. உங்க தாய், தகப்பனை பார்க்கிறதுக்கு எதுக்கு சம்பிரதாயம், சாஸ்திரம் எல்லாம்..? உங்க சொந்த வீட்டுக்கு போற மாதிரி போய்ட்டு வாங்க. "சார்... உங்களால
முடிஞ்சா, ஒரு மல்லிப் பூ மாலையும், தேங்காயும் உடைச்சிட்டு வாங்க, மீதி
எல்லாம் அவன் பாத்துப்பா"ன்னு தைரியமா அவனை நம்பி, இவரை அங்கே அனுப்பினான்.
"கடையில் பேரம் பேசாமல், கேரி பாக் இல்லாமல், உங்கள் கைகள் பட, இறைவனுக்கு
சமர்ப்பியுங்கள்...அது போதும். அப்படி முடியலைனாலும் பரவா இல்லை"ன்னு
அனுப்பினேன்.
பஸ்சுக்கு கூட காசு இல்லாமல், கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் நடந்தே, அவர்
அந்த கோவிலுக்குச் சென்றார். மாலையும் இல்லை, தேங்காயும் இல்லை. கோவிலில்
வேறு யாரும் இல்லை. குருக்கள் கூட அந்த சமயம் இல்லை. கதறி, கதறி, கண்ணில்
நீர் கொப்பளிக்க அவர் இறைவனை சந்திக்கும்போது, அங்கு மௌனமாக அவரை பார்த்துக்
கொண்டு இருந்தது, வெறும் கல் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கும் அந்த லிங்கம் மட்டுமே...! ஒரு அரை மணி நேரம் ஆலயத்தில்
இருந்துவிட்டு, வெளியில் வந்து , நடந்தே வீடு திரும்பி இருக்கிறார்...!
அதற்க்கு ஒரு மாதம் முன்பு SBI பாங்க்கில் லோனுக்கு அப்ளை பண்ணி
இருந்தாராம். கிட்டத்தட்ட இருபது, முப்பது முறை பாலோ பண்ணியிருந்து
இருக்கிறார். செஞ்சு தர்றேன், தர்றேன்னு 'தா' காட்டி, காட்டி அலைக்கழித்து
இருக்கின்றனர். இவருக்கு நம்பிக்கையே இல்லை. சரி, CIBIL
ரிப்போர்ட்டில் தகராறு.. இருந்ததும் போயி, நாலு வருடம் முன்பு இதே SBI யில், இன்னொரு ப்ரான்ச்சில் அந்த செலுத்தாத லோனுக்கு , சேர்த்து பிரஷ்ஷர் எந்த நேரத்திலும் வரவிருக்கிறது... லோனுக்கு அப்ளை பண்ணாமலே
இருந்து இருக்கலாம் போல, சரி வருவது வரட்டும். சேர்த்து அனுபவிக்க
வேண்டியதுதான் என்று நினைத்து இருந்தாராம்.
மத்த பேங்க் ஐ விட, SBI யில் லோன் கிடைப்பது என்பது, குதிரை கொம்பு என்பது அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். "லோன் எனக்கு இல்லை, சொக்கா ! அவனை கூப்பிடக் கூடாது, கூப்பிடக்கூடாது ,
ஏன் எதுக்கு கூப்பிடனும்" என்று தருமி ரேஞ்சில் இருந்த நிலையில் தான், அவர்
என்னை சந்தித்து - இந்த கோவிலுக்கு சென்று வந்தது...
இது நடந்த மூன்றாவது நாள், SBI பாங்க்கில் இருந்து அவருக்கு போன், " சார்,
நான் பீல்ட் ஆபீசர் பேசுறேன், கொஞ்சம் பேங்க் வரைக்கும் வந்து போக
முடியுமா?", சரிதான், அந்த பழைய லோன் மேட்டருதான் போல, இன்னைக்கு நம்மளை
சுழுக்கு எடுக்கப்போறானுங்கன்னு நினைச்சுக்கிட்டே போயிருக்கார். சரி,
கழுத்துலையா, கத்தி வைச்சுடப் போறாங்க... SBI கொஞ்சம் டீசன்ட் பார்ட்டி
தானே, கிரெடிட் கார்ட் மாதிரி, கந்து வட்டி மாதிரியா அசிங்கப் படுத்திடப்
போறாங்க? என்ன, கம்பனிக்கு லெட்டர் போடுவாங்க, பாத்திக்கிடலாம்" ன்னு -
பில்டிங் ஸ்ட்ராங், basement தான் கொஞ்சம்....ன்னு போயிப் பார்த்தா..... அட, நம்ப முடியாத அதிசயம் அங்கே அரங்கேறியது.அவர் லோன்
சாங்க்க்ஷன்.
"அஞ்சு லட்ச ரூபாய் உங்க அக்கௌன்ட்ல ட்ரான்ஸ்பர் பண்ணுறோம்
சார், அமௌன்ட் கொஞ்சம் அதிகம்ங்கிறதால லேட் ஆயிடுச்சி. சாரி சார்"ன்னு
சொல்றாங்க.
இவருக்கு சந்தோசம் தாங்க முடியலை. வெளியில வந்த உடனே எனக்கு போன்..." சார்,
நீங்க..... நீங்க ..." பேச வார்த்தையே இல்லை. ! "லோன் கிடைச்சிடுச்சி
சார்.. கம்பெனிக்கு அரை நாள் லீவ் சொல்லிட்டேன்.... நான் அந்த சாமியைப்
பார்க்க போயிட்டிருக்கேன்"னார்...
மூணு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி, வட்டி மட்டுமே ஒன்பது லட்சம் கட்டிய
ஆள் அவர். அசல் திருப்பித் தரவே முடியாதோங்கிற நிலைமைல, லோன்
கிடைக்கவே வாய்ப்பே இல்லாத நிலைமைல, இந்த அஞ்சு லட்சம், அவருக்கு அஞ்சு
கோடிக்கு சமம். இதில இன்னொரு ஆச்சர்யம், இவரு கூட அப்ளை பண்ணின, இவரை விட
சம்பளம் அதிகம் வாங்கின ஆளுங்களுக்கு கூட, லோன் சாங்க்க்ஷன் ஆகாம இன்னும்
'பென்டிங்'லேயே கிடந்து இருக்குது.
இன்னைக்கு வர்ற சம்பளத்துல, நிம்மதியா லோன் அடைச்சுக்கிட்டு, கந்து கடன்
எல்லாம் முடிச்சிட்டு , குடும்பத்தை சந்தோசமா வைச்சுக்கிட்டு இருக்கார்.
"இனி எனக்கு கவலை இல்லை சார், நான் நிமிர்ந்துடுவேன். எனக்கு இந்த போதாத கால
கட்டத்துல கிடைச்ச அனுபவத்துக்கு விலை மதிப்பே இல்லை சார். திரும்ப தப்பு
செய்யாம இருக்கணும். இதுக்கு மேலே, என்ன நடந்தாலும், உடனே சரி செய்ய என்
சாமி இருக்கிறப்போ , எனக்கு என்ன கவலை"ன்னு, அவர் இந்த சிவனை சொல்லும்போது,
நமக்கே ஜிவ்வென்று இருக்கிறது.
கடவுள் இல்லை என்று யாராவது சொன்னால், இவர்கள் பதிலுக்கு , "ஹா... ஹா..." வென்று பலத்த குரலில் சிரிக்கிறார்கள்.
அப்பேற்பட்ட மகத்துவம் பொருந்திய, இறைவன் யார் என்று அறிந்து கொள்ள ஆவல் உங்களுக்கும் இருக்கும் இல்லையா..?
சந்தேகமே இல்லாமல், இறைவன் இருக்கும் அற்புதத்தை நீங்கள் உணர , அவசியம்
ஒருமுறை இந்த ஆலயம் வந்து பாருங்கள். இது இருக்கும் இடம் :
திருவலம் (Thiruvallam / Tiruvalam ) என்ற
சிறிய ஒரு ஊர். பிள்ளையார் - திருவை (அம்மை , அப்பனை) வலம் வந்ததை ஒட்டிய காரணப் பெயர்.
வரலாறு கொஞ்சம் ஞாபகம் இருப்பவர்களுக்கு, வல்லவரையன் வந்தியத்தேவன் பிறந்து
வளர்ந்து ஆண்ட பகுதி என்று சொன்னால் ஞாபகம் வரலாம். அதே வல்லவரையர் தான்.
அருண்மொழியின் உற்ற நண்பனாக, குந்தவையை கரம் பிடித்த வந்தியத்தேவன், பலமுறை
தொழுது இருக்க கூடிய ஆலயம் தான் இங்கு இருப்பது.வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா என்று அருகில்
இருக்கும் பெரிய ஊர்களில் இருந்து பஸ் வசதி இருக்கிறது. இந்த ஊர்களில்
இருந்து அரை மணி நேர பயண நேரம் ஆகும். பத்து முதல் பதினைந்து கிலோ மீட்டர்
தூரம் இருக்கும்.
ஸ்தலப் பெருமைகள் நிறைய, அது எல்லாம் உண்மையோ, பொய்யோ - அது நமக்குத்
தெரியாதுங்க.... ஆனா,
இங்கு அருள் பாலிக்கும் இறைவன் - (நாமம் வில்வநாதர் -
அம்மன் தனுமத்யம்பாள்) - இருவரும், ஹைலி , ஹைலி பவர்புல். இது இங்கு
அருகில் இருக்கும் வட்டார மக்களுக்கே, ஏன் இந்த கோவிலில் இருப்பவர்களுக்கே
கூட தெரியுமோ, தெரியாதோ....சந்தேகம் தான்.
ஆனால், கண் முன்னே , நிஜத்தை
பார்த்தபிறகு, இவரிடம் நம் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை
நிறையவே இருக்கிறது.
மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் நடந்த நிஜ சம்பவங்கள். படிக்கும்
உங்களுக்கு , நீங்களும் இங்கு ஒருமுறை வந்து பார்க்கவேண்டும் என்கிற
உணர்வைத் தூண்டவில்லையெனில், அது என்னுடைய எழுத்து வசீகரம் இன்மையே தவிர
வேறில்லை.
ஒரே ஒருமுறை, உங்கள் நீண்ட நெடுநாள் பிரச்னை தீர, நேரில் நீங்கள் வந்து
இவரிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு சீக்கிரம் அந்த பிரச்னை தீர்கிறது
என்கிற அதிசயத்தை உணர்வீர்கள்... .... இது வெறும் கல்லால் ஆன லிங்கம்
இல்லை, சத்தியமா சாமி, இது... என்ன ஆச்சர்யம், எப்படி இவ்வளவு நாளா வெளி
உலகத்துக்கு தெரியலைன்னு ஆச்சர்யப்படுவீங்க...!
ஒரு தீபத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. உங்களால்
முடிந்த அளவுக்கு அதைப் போன்ற ஆலயங்களை மெருகேற்ற, விளக்கு ஏற்ற உதவி
செய்யுங்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஆலயங்களுக்கும் ஒரு
நேரம், காலம் இருக்கிறது போல. சில கோவில் எல்லாம் பத்து வருஷத்துக்கு
முன்னே, ஒண்ணுமே இல்லாம இருந்துச்சு. இப்போ பாரு, எவ்வளவு கூட்டம் என்று.
இந்த சிதிலமடைந்த கோவில்கள் எல்லாம், ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து
இருக்க கூடும். இந்த ஆலயங்களை மெருகேற்ற, நாம் நமது பங்களிப்பை அளிக்க
இறைவன் நமக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக நினைத்து, இங்கு குறைந்தபட்சம்
விளக்கு ஏற்றவாவது உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். விளக்கு ஒளி ஏற ஏற,
ஆலயமும் புத்துயிர் பெரும், நம் வாழ்விலும் ஒளி ஏறும்... இது நிச்சயம்...!
சிதிலமடைந்த ஒரு ஆலயம் பற்றி ஒரு தகவல் உங்களுக்கு வருகிறது என்றால்,
உங்களுக்கும் அந்த ஆலயத்திற்கும் எதோ நெருங்கிய முன் ஜென்ம தொடர்பு இருந்து இருக்க கூடும்.
அதை நீங்கள் நேர் செய்யும்போது,
நமது கர்மக் கணக்கு நேர்த்தியாகி, நாமும் நல்ல நிலை அடைய ஒரு அரிய
வாய்ப்பாகவும் அமையும்...!
தவறு செய்யாத மனிதனே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் பாதம் சரணம்
அடையும்போது, மனதை உறுத்தும் தவறுகளை திரும்ப செய்வதில்லை என்ற உறுதி மொழி
எடுத்து, அதை இறுதி மூச்சு வரை கடைபிடியுங்கள்....! அவனன்றி ஒரு அணுவும்
அசைவதில்லை. இதை நீங்களே உணர்வீர்கள் வெகு விரைவில்...!
ஓம் சிவ சிவ ஓம்..!
எந்த ரூபத்தில் , எந்த ஊரில் இருந்தாலும் இறைவன் இறைவனே. இதைப் போலவே,
உங்கள் பகுதியில் உங்கள் அனுபவத்தில், நீங்கள் நிஜமாகவே
வியந்த ஆலய மகிமைகள் பற்றி, ஒரு நாலு வரி எழுதினீங்கன்னா, நாங்களும், நம்ம வாசர்களும்
தெரிஞ்சுக்கிடுவோம்...சரிங்களா? கூச்சப்படாம, தமிழிலோ, ஆங்கிலத்திலோ - எழுதி மெயில் / கமெண்ட்ஸ் இல் பதிவு செய்யவும்...
கம் ஆன்..! உங்கள் கருத்துக்களும், விமரிசனங்களும் வரவேற்க்கப்படுகின்றன...!
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !
Nearest Railway station : Katpadi ( From Katpadi local buses avaialble. approx 15 Kms)
From Ranipet, Vellore, Walajha, Arcot - Approx 15 kms distance.
From chennai direct buses available to Chittoor , which go via Tiruvalam (Approx : 130 Kms)
From Tiruvalam bus stand , Temple is just 50 metres walkable distance.