Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அம்மனின் திருமண விருந்து..! ஹெல்ப் பண்ண முடியுமா?

| Apr 25, 2012
வாசக அன்பர்களுக்கு வணக்கம். மதிப்பிற்குரிய நண்பர் திரு. ஹரி மணிகண்டன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மதுரையில் நடக்க விருக்கும் நம்ம வீட்டு  மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்க்கு - மாப்பிள்ளை வீட்டு சார்பாகவோ, பொண்ணு வீட்டு சார்பாகவோ , உங்களால் முடிந்தவரை உதவி செய்யும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். மதுரைக்கு சுத்துப்பட்டுல இருக்கிறவங்க  - நேரடியாக உங்கள் சேவையை இந்த ஒரு நாள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும். வெளியூரில் இருப்பவர்கள் - பொருள் உதவி முடிந்தவரை செய்யலாம். சிறு துளி பெரு வெள்ளம்..!  
நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பின் மூலமும், அம்மை அப்பனின் அணுக்கத்தை நிச்சயம் நீங்கள் உணரமுடியும்..!


மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து

சோலைமலை முருகன் கோயிலில் 36 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. எனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா" என்று கேட்டபோது,

திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து
அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. கடந்தா இரண்டாண்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு , காவல்துறை தடைவிதித்தனர்.

இந்தாணடு திருக்கல்யாணம் 02-05-2012 அன்று நடக்கிறது40 ஆயிரம் பேருக்கு வழங்கபடுகிறது.இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம் , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட்  வழங்கப்படும் தட்டில் இடம்பெறுகிறது.

01-05-20121 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது. மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும்.

விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.

திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை"
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001  Cell: 9442408009 , Shop:0452 2345601.


இந்நிகழ்ச்சி பற்றிய தினமலர் செய்தி குறிப்பு : 


வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

You are the Champion.... You can win !

| Apr 24, 2012
வெற்றி பெறுபவர்கள் - வித்தியாசமான வேலைகளை செய்வதில்லை. செய்யும் வேலைகளை வித்தியாசமாக செய்கிறார்கள். செய்யும் வேலைகளை உண்மையிலேயே நல்ல முறையில் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வேலை சந்தோசம் அளிப்பதாக இருக்க வேண்டும். மனது மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய நீச்சல் வீரனாக இருந்தாலும், நீச்சல் அடிக்கும் குளத்தில் முழங்காலுக்கும் கீழ் தண்ணீர் இருந்தால் எப்படி நீந்துவது? அந்த தண்ணீர் போலத்தான் மனதும். நாம என்னதான் திறமையுடன் இருந்தாலும், மனதுக்கு உவகை அளிக்கக் கூடிய வகையில் ஒருவர் வேலை பார்க்கும் சூழல் இல்லையெனில், அவருக்குத் திறமை இருந்தும் என்ன பயன் இருக்க கூடும்?

ஒரு சிலர் நிலைமை படு மோசம்..... சாவி கொடுத்த பொம்மை கதை தான்.

ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு முறை நோயாளி ஒருவருக்கு  டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார். நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.

“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”

“ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”

“போதும் நிறுத்திடலாம். அந்த ஆள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”

 படிச்சதும் படக்குன்னு சிரிப்பு வருதா? கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா நாமளே கூட, ஒரு கால கட்டத்துக்கு அப்புறம் இப்படித்தான் வேலை பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று நாம் கூறுபவர்கள் நாம் செய்யும் ஒரு சில வேலையை பார்க்கும்போது, இந்த நர்சைப் போலத் தான் நம்மை பார்க்கின்றனர்.

ஏன், எதுக்குன்னே தெரியாம , நாள் ஆக ஆக, அப்படியே மனசு ஒரு வேலைக்கு பழக்கமாகி , அங்கேயே செட் ஆகிடும். பழகும்போது ரொம்ப ஆர்வமா இருக்கும் ஒரு விஷயம், பழகப் பழக - அதில் எக்ஸ்பெர்ட் ஆகி, அதன் பிறகு இறங்கு முகம் ஆரம்பிக்கும். என்ன தான் நாம் ஆர்வமாக, பொறுப்பாக ஒரு வேலையைப் பார்த்தாலும், இதுதான் அந்த வேலையின் உச்சம் என்று யாரோ ஒருவர் கூறி விட்டாலோ, அல்லது நமது மனது ஒப்புக்கொண்டு விட்டாலோ, அதைத் தாண்டி யோசிக்க மாட்டோம்....

அதே வேலையை திரும்ப திரும்ப பார்க்கும் சூழ்நிலை , உள்ளுக்குள்ளே ஒரு சலிப்பு ஏற்படுத்திவிடும். ஒரே மாதிரி வேலை, ஒரே கம்பெனியில் பல வருடங்களாக வேலை பார்ப்பது எல்லாம் - ஒருகட்டத்தில் ஆளே இல்லையானாலும், டீ ஆத்தும் லெவலுக்குக் கொண்டுபோய் விட்டு விடும். 

வாழ்க்கையில் சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று - லட்சக்கணக்கில் புத்தகங்கள் வந்து குவிந்து விட்டன. ஏன், நமக்கே எத்தனையோ பேர் சொல்லி இருப்பாங்க. மெயில் வந்து இருக்கும். சினிமால பார்த்து இருப்போம். அதை எல்லாம் படிச்ச கொஞ்ச நேரத்துக்கு ஜிவ்வுன்னு இருக்கும். அதுக்கு அப்புறம் அப்படியே மறந்து போகும்... ஓடு , ஓடுன்னு ஓடிஓடியே - வழக்கமான வேலைகளைப் பார்த்து பார்த்து - அப்படியே ஒரு லெவல்ல நின்று விடுகிறோம்.

"ஷிவ்கேரா" ன்னு ஒருத்தர் -  " YOU CAN WIN  " அப்படின்னு ஒரு புத்தகம் எழுதி  இருக்கிறார். உலகப் புகழ் பெற்ற புத்தகம்.  அவரது தன்னம்பிக்கை வகுப்புகள், உரைகள் -  ஏராளமாக " You  Tube "  - பில் கிடைக்கும். ஒரு முறை பாருங்கள்... நிச்சயம் உங்களுக்கு Pop  Eye இன் Spinach  குடித்த தெம்பு கிடைக்கும்.இணையத்தில் இந்த புத்தகம் free  யாக கிடைக்கிறது. கூகுளில் தேடினால், நீங்களே டவுன்லோட் செய்து படிக்க முடியும்.

எதற்க்காக சொல்கிறேன் என்றால், உடல் ஒரு எந்திரம் போன்றது. அதற்கே ஓய்வு தேவைப்படும்போது - மனது ஒரு புதிரான ஒரு வஸ்து. அதற்க்கு புத்துணர்ச்சி தருவது மிக முக்கியம். மனத்தை சோர்வடையாமல் வைத்து இருப்பவர்கள் மட்டுமே, வாழ்வில் சிறப்பான நிலைமை அடைய இயலும்.

I am the champion. I can Win - இதை மட்டுமே திரும்ப திரும்ப நினையுங்கள். இந்த இரு வாக்கியங்கள், மனதுக்கு புது பலம் கொடுக்கும். சோர்வடையும் நிலைமையில் , இந்த வாக்கியங்கள் கொடுக்கும் சக்தி அளவிட முடியாதது.

சரி - வாழ்க்கையில் ஜெயித்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு சாதனையாளனுக்கும் - அவன் மனதுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

எத்தனையோ  முறை  தோல்வி அடைந்தாலும் , இதோ வெற்றியை நெருங்கி விட்டோம் என்கிற மன வலிமை - நிச்சயம் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே இருக்கிறது. மனதுக்கும் , இறைவனுக்கும் சம்பந்தம் இருக்க முடியுமோ ஒருவேளை?

மகான் ஒருவர் கேட்கிறார்  : உங்கள் வீட்டுப் பூஜை அறையிலும், கோவில்களில் இருக்கும் சிலைகளிலும் பகவான் இருக்க முடியும் என்று நம்பி வணங்குகிறீர்களே அப்படி, எங்கும் வியாபித்து இருக்கும் அந்த பரப் பிரம்மம் - உங்கள் உள்ளும் உறைந்து இருக்கும் என்பதை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?   உங்களுக்குள் இருக்கும் இறைவன், எப்படி தோற்க முடியும்? அவமானப் பட முடியும்? இன்னொருவரை அவமதிக்க முடியும்?

மேஜை , நாற்காலி என்று இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒருவர் படைத்தது தான் என்னும்போது, இந்த பிரபஞ்சத்தையும் ஒருவர் உருவாக்கி இருக்க வேண்டும் அல்லவா? அதைப் படைத்து , அதை இயக்கும் சக்தியின் ஒரு துளி , நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது சாத்தியம் தானே.... 

மரபணு, ஜீன்ஸ் என்று சொல்கிறோமே, அப்படிப் பார்த்தால் - அந்த இறைவனின் பரம்பரை தானே நாம் எல்லோரும்? 

உள் நின்று ஒளிரும் இறையை  நாம் உணர வேண்டும்..! எங்கும் உள்ள இறைவன் நம்முள் இருப்பதை உணர்ந்த பிறகு, இறைநிலையை விழிப்படையச் செய்த பிறகு, நிம்மதியும், சந்தோசமும், ஞானமும் சித்திக்கும்.

ஒருவர் மேல் விழும் மலர் மாலைகள் , அவருக்குள் இருக்கும் இறைவனுக்கே என்பதை உணர்ந்தவர்கள் , பெருமையும், செருக்கும் அடைவதில்லை.  ஞானிகள் அப்படித்தான் நினைக்கின்றனர். சில அரைவேக்காடுகள் தான் மாலை விழுந்த மமதையில் ஆட்டம் போட்டு, அடங்கிப் போகின்றனர்.

தன்னால் முடியும் நிலைமையில் முயற்சி செய்யாமல் , கடவுளை மட்டும் நம்புபவர்களை , கடவுள் கண்டுகொள்வதே இல்லையாம். தன் முழு சக்தியையும் உபயோகப்படுத்தி, ஒருவேளை முயற்சி கைகூடாதபொழுது , இறைவனை சரணாகதி அடைபவர்களை அவர் நிச்சயம் கை தூக்கி விடுவார். இது பகவான் ராமகிருஷ்ணர்  கூறிய வேத வாக்கு.....

கடவுள் நம்பிக்கை ஒரு மனிதனுக்கு அவசியமா என்பதற்கு விவேகானந்தர் என்ன சொல்கிறார் தெரியுமா?  சுட்டெரிக்கும் வெயிலில் ஒருவர் நடந்து போக வேண்டிய நிலை. தாங்கும் வலிமை உடையவர்கள் வெறும் காலுடன் நடக்கலாம். அதையே, இறை நம்பிக்கை உடையவர்கள் காலில் செருப்பும், கையில் ஒரு குடையும் கொண்டும் நடக்கிறார்கள் என்கிறார்.

கடவுளை நம்பி, தன் முயற்சிகளை முனைப்புடன் செய்பவர்கள் - ஒரு சுகமான பயணத்துக்குத் தயாராகிறார்கள். கரடு முரடான, முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்திற்கு - இறை நம்பிக்கை அவசியமான ஒன்று......

தன் மேல் நம்பிக்கை இருக்கும் ஒவ்வொருவரும் ஆன்மீகவாதி தான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். உங்கள் உள்ளிருக்கும் இறைவனை நம்புங்கள் என்பதற்காகத் தான் கூறி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
ஞானிகள் எந்த விஷயத்தையும் உடைத்து, வெளிப்படையாகப் பேசுவதில்லை. நம்மை சிந்திக்க வைத்து, நம்மை செயல்பட வைக்கின்றன அவர்களது போதனைகள்.


எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும், எவ்வளவோ ஞானிகளின் போதனைகளைக் கேட்டாலும் , அவரவர் மனது சொல்லும் காரியங்களைத் தான் ஒருவர் செய்ய முடியும். மனத்தை அறிந்து, அதைக் கட்டுப்படுத்தி, அதை எழுச்சி பெற செய்வது தான் - வெற்றி மந்திரம்.

சமீபத்தில் படித்த ஒரு விஷயத்தை கீழே கொடுத்துள்ளேன். இதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைப் பாருங்கள்...

ஞானி ஒருவரிடம் ஒரு சீடன் புகார் செய்தான். “நீங்கள் கதைகள் சொல்லுகிறீர்கள். ஆனால் அவற்றின் பொருளை சொல்வதில்லை!”
அதற்க்கு அவர் கூறியது : "உனக்கு ஒருவர் பழம் கொடுக்கிறார். உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே அவர் அந்த பழத்தை கடித்து மென்று உன்னிடம் கொடுத்தால் எப்படி இருக்கும்?”

சீடர்கள் கடவுளைப்பற்றி நிறைய கேள்விகள் கேட்டனர்.
குரு சொன்னார். கடவுளை யாரும் முழுமையாக அறிய முடியாது. அவரைப் பற்றி யார் எதை சொன்னாலும் அது நிறைவற்றே இருக்கும்.

சீடர்களுக்கு அதிர்ச்சி!
"பின்னே ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்?”
குரு கேட்டார் “குயில் ஏன் பாடுகிறது?”

அறிஞர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவேண்டும். ஞானிகள் சொல்வதை சும்மா கேட்க வேண்டும்: மரங்களிடை சுழன்று வரும் காற்று போல; ஓடையின் சலசலப்பு போல; அருவியின் ஆர்ப்பரிப்பு போல, பறவையின் பாடல் போல. அது உனக்குள் புகுந்து சொல்ல முடியாத ஏதோ ஒன்றை விழிக்கச் செய்யும்.

இதைத் தான், நாங்களும் இந்த இணைய தளம் மூலம் செய்ய முயற்சி செய்கிறோம்...... ஏதோ ஒரு வகையில், நம் ஒவ்வொரு கட்டுரையும், வாசிப்பவர்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். வீணையின் நாதம் போல மனதுக்குள் புகுந்து , சொல்ல முடியாத ஒன்றை தட்டிஎழுப்ப வேண்டும்..... உங்கள் அன்பும் , ஆதரவும் இருக்கும் வரை, அது சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது....

நமக்கு என்ன அருகதை என்பதை நம் வினைகள் தீர்மானிக்கின்றன. வெளியில் இறைவனைத் தேட வில்லையெனில், தன் நம்பிக்கை என்னும் உள்ளுக்குள் இருக்கும் அந்த சக்தியை முழுவதும் நம்புங்கள்....

வெற்றி சர்வ நிச்சயம்...!

மீண்டும் சந்திப்போம்..! 

தைரியமாகச் சொல் , நீ..... மனிதன்தானா?

| Apr 14, 2012
சின்ன வயசுல , எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்ல இருக்கிற லைப்ரரிக்கு நடந்தே போவேன். நாலு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இடையில ஒரு பெரிய கண்மாய். கருவேலங்காடு. சுட்டு எரிக்கிற வெயில்ல , கருவேல நிழல்ல கொஞ்ச நேரம் இருந்திட்டு , மேலே நடப்பேன். அப்படி ஒரு நாள் போகும்போது, ஒரு மரத்துக்கு கீழே , ஒரு நாலு ரூபாய் கிடந்துச்சு. ரெண்டு இரண்டு ரூபாய் நோட்டு. அக்கம் பக்கத்துல யாருமே இல்லை. அப்படியே எடுத்திட்டு , பாக்கெட்டுல வைச்சுக்கிட்டேன். ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம், ஒரு அண்ணா சைக்கிள்ல வந்துக்கிட்டு இருந்தாரு. எதையோ தேடிக்கிட்டு வந்தமாதிரி இருந்துச்சு. என் கிட்டேயும் கேட்டாரு. தம்பி, கீழே எதையாவது பார்த்தியான்னு..? ரொம்ப அப்பாவியா முகத்தை வைச்சுக்கிட்டு - இல்லையேன்னு சொல்லிட்டேன்... அப்போவந்து , நாலு ரூபாய் எல்லாம் கொஞ்சம் பெரிய அமௌன்ட் தான்... அனேகமா அவரோட, ஒரு நாள் கூலியா கூட இருந்து இருக்கலாம்...ஆனா, அதையெல்லாம் யோசிக்க முடியலை அப்போ...  எனக்கும் சின்ன வயசு தானே. 11 வயசு இருக்கும்னு நினைக்கிறேன்... அவர் வேறு எதையோ கூட தேடி வந்து இருக்கலாம்னு , நானா மனசை சமாதானப் படுத்திக்கிட்டேன்.. ...

ஆனா, எவ்வளவு அல்ப்பத்தனமான புத்தின்னு , அதை நினைச்சு - மனசுக்குள்ளேயே புழுங்கி தவிச்சு , தூக்கம் வராம புரண்டு தவிச்ச நாட்கள் எத்தனை எத்தனையோ... ச்சே, அன்னைக்கு அவர் கிட்ட கொடுத்து இருந்து இருந்தா... நல்லா இருந்து இருக்குமே... இப்போ நிம்மதியா இருந்து இருக்குமேன்னு , நொந்து போயிருக்கிறேன் பலமுறை...

அதன் பிறகு , எவ்வளவோ நான் எனக்குள் பெருமைப் படும் காரியங்கள் பண்ணி இருந்த போதிலும் - மனசு அறிஞ்சு நான் செஞ்ச தப்பு - இன்னைக்கும் முள்ளு மாதிரி குத்திக்கிட்டுத் தான் இருக்கு. அதன் பிறகு, என் சக்திக்கு உட்பட்டு நான் பல நல்ல காரியங்கள் செய்த போதிலும், ... அன்னைக்கு நான் நிர்தாட்சண்யமாக மறுத்த - அந்த நாலு ரூபாய்க்கு ஈடாகாது என்று என் மனதுக்கு நன்றாகத் தெரியும்...

அதுக்குப் பிறகு ஒரு நாள் ரோட்டில நடந்து போனப்போ - ஒரு அம்பது ரூபாய் தாள் ஒன்னு உருண்டு வந்துக்கிட்டு இருந்துச்சு... சோதனையா, என் கையில காசு இல்லாத நேரம் அது.. சொந்தமா வீடு கட்டி, அங்கே இங்கேன்னு கடன் வாங்கி இருந்த நேரம்... முழி பிதுங்கிக் கிட்டு இருந்த வேளை. அட, ஆண்டவன் இந்த அம்பது ரூபாய் நமக்கு கொடுத்து இருக்கார் பாரு, மாசத்துல மீதி இருக்கிற இந்த அஞ்சாறு நாளை ஓட்டிடலாம்னு, ஒரு நிமிஷம் யோசிச்சேன்....  ஒரு நிமிஷம் மனசு தடுக்குன்னு ஆச்சு... ஆகா... ஆண்டவன் இரண்டாவது பரீட்சை வைச்சு இருக்காருப்பா....ன்னு தோணிச்சு...

முன்னாலே பார்த்தேன்.. பல வருஷங்களுக்கு முன்னாலே நடந்த சம்பவம்  மாதிரியே , ஒரு ஆளு - ... சைக்கிள்ளே போய்க்கிட்டு இருந்தாரு...நாப்பது வயசு இருக்கும் அவருக்கு. அண்ணாச்சின்னு கை தட்டி கூப்பிட்டேன்.... காது கேட்கலை... அந்த அம்பது ரூபாயை எடுத்துக்கிட்டு அப்படியே ஓடிப்போய் அவர் முன்னாலே நின்னேன்.. என் கண்ணுக்கு அந்த கருவேலங்காட்டுல பார்த்த அண்ணன் மாதிரித் தான் தெரிஞ்சது "அண்ணே. இந்த ரூபாய் உங்க இதா பாருங்க"ன்னு கேட்டேன்.. அவர் ஹேண்டில் பார் பிடிச்சு இருந்த கையில இன்னொரு அம்பது ரூபாய் இருந்துச்சு.. ரெண்டு அம்பது ரூபாய் வைச்சுக்கிட்டு சைக்கிள் ஓட்டிக்கிட்டு போய் இருப்பார் போல.. ஒன்னு காத்துல பறந்து போனதை அவர் கவனிக்கலை... "தம்பி, ரொம்ப நல்லா இருப்பே நீ "ன்னு , அவர் என் கையைப் பிடிச்சுக்கிட்டு கும்பிட்டாரு... அவர் குழந்தைக்கு மருந்து வாங்கப் போய்க்கிட்டு இருந்தாராம்.. அவர் முகத்துல தெரிஞ்ச அந்த நிம்மதி , இன்னைக்கும் மறக்க முடியாது....

அவரை விட எனக்கு கிடைச்ச நிம்மதி, வார்த்தைகளில் சொல்ல முடியாது... அந்த வேளையில், சாப்பிட கையில காசு இல்லாம இருந்தப்போ கூட , அவர் கிட்ட திருப்பிக் கொடுத்த அந்த நேரம் - பல வருஷங்களுக்கு முன்னே நான் ஒளிச்சு வைச்ச அந்த நாலு ரூபாயை திருப்பிக் கொடுத்த அந்த உணர்வை எனக்குக் கொடுத்தது... இறைவன் என்னை கண்டிப்பா மன்னிச்சு இருப்பார்னு  அந்த நிமிஷம் நினைச்சேன். ... உடனே அதுக்குப் பலன் கிடைச்சது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

... அடுத்த பத்து நிமிஷத்துல, எனக்குஒரு போன் கால் .... , " டே, மாப்ளே --- நீ காசு கேட்டு இருந்தே இல்லை... வீட்ல தானே இருக்கிறே... நான் அங்கே வர்றேன்" னு என் பிரெண்ட் அம்பது ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தான்... இந்தாடா, அப்பா இப்போ தான் ஊர்ல இருந்து வந்தாரு. ... சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ளே திருப்பி கொடுத்திடு"ன்னு... சொன்னான்.

இறைவா... அம்பது ரூபாய் திருப்பிக் கொடுத்ததுக்கு - வட்டி இல்லாத கடனா, அம்பது ஆயிரமா...? தேங்க் யூ... தேங்க் யூ ன்னு நினைச்சுக்கிட்டேன். தெரிஞ்சவங்க எல்லார் கிட்டேயும் கேட்டு - முழுக்க வழிகள் அடை பட்டு இருந்த நேரம்... அம்பது ஆயிரம் இன்னைக்கு வேணும்னா ஒரு சின்ன அமௌன்ட் மாதிரி தோணலாம்... பத்து வருஷம் முன்னாலே , எனக்கு ரொம்ப பெரிய அமௌன்ட்...

இதை எல்லாம் எதுக்குச் சொல்ல வர்றேன்னா... அந்த நாலு ரூபாய் சம்பவம் இத்தனை வருடம் ஆன பிறகும், என் மனசுக்குள்ளே ஒரு வடு ஏற்படுத்த வேண்டும் என்று , இறை நினைத்து இருக்கலாம் என நினைக்கிறேன்.. அன்னைக்கு அந்த சின்ன வயசுல, அந்த நாலு ரூபாய் திருப்பிக் கொடுத்து இருந்தால் கூட - சில தினங்களில் நான் மறந்து போய் இருக்கக் கூடிய ஒரு சாதாரண சம்பவமாக மாறி இருந்து இருக்கும். (அப்படின்னு நானா, இன்னைக்கும் மனசை தேத்திக்கிட்டு இருக்கேன்... ஆனா, மனசு இன்னும் ஒப்பலை..)

இப்போவும் வாழ்க்கையில் சின்ன சின்ன சறுக்கல் ஏற்படும்போது - மனசு அறிந்து , யாருக்கும் தீங்கு இழைக்கவே கூடாது என்கிற மன உறுதியை எனக்கு அந்த சம்பவம் வழங்கியது...

மனிதனுக்கு எது முக்கியம்..? நல்லதொரு மனிதன் என்கிற வேஷம் போட்டு வாழ்வது தானா... இல்லை... கோவில் , குளம் என்று - நெத்தியில் குங்குமம் , விபூதி வைச்சுக்கிட்டு , கோவில் காரியங்கள் என்றால் - லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்து விட்டு , கண் முன்னாலேயே சிலர் கஷ்டங்களை துடைக்கும் நிலைமை இருந்தும் பாரா முகமாக , நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி இருந்தால் மட்டும் போதுமா..? நிச்சயமாக இல்லை....

தன் உடமை என்று இல்லையானால் - அதை ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு நேர்மை வேண்டும்.. அடுத்தவன் பார்க்கவில்லையே என்று எண்ணிக்கொண்டு - தப்பு , தண்டா செய்யாத , சபலம் இல்லாத புத்தி வேண்டும்... சுயநலம் மட்டுமே எண்ணிக்கொண்டு , அடுத்தவர் காலை வாரி விடாத , நன்னடத்தை வேண்டும்... அடுத்தவர் வயிற்றில் அடித்து, அடுத்தவர் தலையில் ஏறி - நாம் மேலே செல்லாத , நேர்வழியில் செல்லக்கூடிய நெஞ்சுரம் வேண்டும்... தப்பே ஒருவர் செய்தாலும் , பலர் முன்னிலையில் அவமானப் படுத்தாமல், நாசுக்காக அதை அவர் உணரும் முறையில் வெளிப் படுத்த வேண்டும்...

வாழ்க்கையில் நாம் நினைத்த இடைத்திற்க்கு வருவதற்கு - ஆயிரம் குறுக்கு வழிகள் இருக்கலாம்... தொடர்ந்து நாம் அந்த இடத்தில் நிலைக்கவேண்டும் எனில், கடின உழைப்பும், நேர்மையும் , ஆண்டவன் ஆசியும்  இருந்தால் மட்டும்தான் முடியும். ...

இதையெல்லாம் கடை பிடித்தல் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல... படிக்கும் உங்களை விடுங்கள், எழுதும் எனக்கும் சேர்த்துதான்...   ஆனால் , முயன்றவரை முயற்சி செய்வோமே...!

இப்போதெல்லாம் என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்டு வருபவர்களிடம் - நான் ஒரு விஷயம் சொல்லத் தொடங்கி இருக்கிறேன்... இந்த பூஜை, இந்த கோவில், இந்த பரிகாரம் என்று நீங்கள் செய்யத் தொடங்கும் முன்பு - இதுவரை யாராவது ஒருவர் , மிகவும் மனம் கோணும்படி நீங்கள் நடந்து இருக்கிறீர்களா? நாம் தான் கெட்டிக்காரர்கள் என்று , ஏதாவது அப்பாவியை ஏமாற்றி இருக்கிறீர்களா..? ஆசை காட்டி , மோசம் செய்து ஏதாவது பெண்ணின் / ஆணின் கண்ணீருக்கு நீங்கள் காரணமாகி இருக்கிறீர்களா? முதலில் அந்த தவறை சரி செய்ய முயலுங்கள். அவர் மனம் குளிரச் செய்யுங்கள்.. அவரிடம் இருந்து வாயார வாழ்த்து வாங்குங்கள்....

மனிதனாகப் பிறந்தால் தவறு செய்தல் சகஜம். ஆனால், அதன் பலா பலன்களை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்.  செய்த தவறை, உணர்ந்து திருந்தி வாழ்க்கையில் திரும்பவும் அந்த தப்பை செய்யாமல் இருப்பது - நீங்கள் ஆயிரம் கோவிலுக்குச் சென்ற பலனைத் தரும்.

யாருக்குத் தெரியப் போகிறது எந்த மெத்தனம் எப்போதும் வேண்டாம்.   ஆண்டவனின் நீதி மன்றத்தில் - சாட்சிகள் பார்த்து, அலசி ஆராய்ந்து தீர்ப்பு கிடைப்பது இல்லை. முழு முதல் சாட்சியாக அவன் இருக்கிறான்.

அவன் வழங்கும் தீர்ப்பும் உங்கள் மூலம் தான். தவறுக்கு உரிய தண்டனை, உங்கள் மனது அறியவே , உங்கள் கண் முன்னேயே நடக்கும். உங்கள் மனதை விட சிறந்த நீதிபதி , உலகத்தில் இல்லை.....

செய்த தவறுகளை உணர்ந்து, திருந்தி - அதன் பிறகு ஆண்டவனைச் சரணடையுங்கள்.... நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில், உடனே தூக்கி வைக்கப் படுவீர்கள்.... இது சர்வ நிச்சயம்... சத்தியம்....

போகிற போக்கில் - இன்னும் ஒரே ஒரு சம்பவம். உலகம் ஏன் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது, என்கிற உண்மை புரியும்... 

இது , சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம். ஒருவர் லாட்டரி கடையில் சீட்டு வாங்குறாரு. கையில காசு இல்லை, நாளைக்குத் தாரேன்னு சொல்றாரு. சரின்னு கடைக்காரர் அந்த சீட்டுக்களை தனியே எடுத்து வைக்கிறாரு... கடவுளின் திருவிளையாடலைப் பாருங்கள். அந்த எடுத்து வைக்கப்பட்ட சீட்டுக்களில் ஒரு சீட்டுக்கு கோடி ரூபாய் பரிசு. .....
(நான் கடைக்காரரா இருந்தா என்ன பண்ணி இருப்பேன்..? அம்பது ரூபாய் சமாச்சாரமா என்ன? கூப்பிட்டு திருப்பிக் கொடுக்க..? கோடி யாச்சே... ஆளு அப்பீட்டு... இல்லை நீதான் காசு கொடுக்கலைலே, கம்ம்னு போயிடுன்னு கூச்சல் போட்டு இருப்பேன்.. இல்லையா, ஆளை விட்டு மிரட்டு.. இப்போ தான் கோடீஸ்வரனாகப் போறோமே..! ஹா... ! நான் அடிச்ச மணி அவனுக்கு கேட்டுருச்சு.. அடிச்சான் பேரு.. ஆர்டரு ... ஹே.. வேணு... வேணு சாஸ்திரி ..னு வடிவேல் மாதிரி அலம்பல் பண்ணி இருக்க மாட்டேன்.! ஹா ! ... )

ஆனா, இங்கே ..? அந்த கூறு கேட்ட மனுஷன் அந்த சீட்டுக் கேட்ட ஆளைத் தேடிப் போய் - இந்தா ஐயா , நீ வாங்குன சீட்டு , முதல் பரிசு விழுந்து இருக்கு , எனக்கு கொடுக்க வேண்டிய ரூபாயை மட்டும் எனக்குக் கொடுன்னு சொல்றாரு.....
(எப்பேர்பட்ட மனுஷனா இருக்கணும்? யோசிச்சுப் பாருங்க...!
நீங்க எல்லாம் பக்கத்துல , எங்க கூடத் தான் இருக்கிறீங்களாயா.. எங்க கண்ணுல மட்டும் ஏன் அடுத்தவன் குடி கெடுக்கிற ஆளுகளா இருக்கிறாங்களோத் தெரியலையே... . )

இத்தனைக்கும், ரெண்டு பேருமே கஷ்டப்படுற குடும்பம்...

இவரைப் பார்த்திட்டு அந்த மனுஷன்... ஐய்யயோ... அது மகா தப்புங்க.. நான் காசு கொடுத்து இருந்தாலாவது பரவா இல்லை.... இது சரி இல்லங்க.. இது உங்க உடமை, எனக்கு வேண்டாம்னு அவர் கெஞ்ச ..... ( யோசிச்சுப் பாருங்க பாஸூ... கோடி ரூபாய் சமாச்சாரம்...) , இவர் கேட்கவே இல்லை... கஷ்டப்படுற உன் குடும்பத்தை பாருய்யா, கல்யாண வயசு தாண்டி ரெண்டு பொம்பளை  புள்ளைங்களை வைச்சுக்கிட்டு" ன்னு - அவர் கிட்டேயே வலுக்கட்டாயமா கொடுத்திட்டு வந்து இருக்காரு...!

அதன் பிறகு என்ன நடந்ததுன்னு கீழே உள்ள கட்டுரையை படிச்சுப் பாருங்க....

புராணமா காலமா இருந்தா, 'சொய்ய்ங்.'. னு சொர்க்கத்துல இருந்து விமானம் வந்து ரெண்டு பேரையும்  குடும்பத்தோட - கடவுள் கூப்பிட்டுப் போயிருந்து இருப்பாரு.... "நிம் நேர்மையைக் கண்டு மெச்சினோம்... எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று..."

ஏன் , இப்போ வரலை? ...

இது கலிகாலமாம்ல ! ...  இந்த பணத்தை வைச்சு அவங்க நிறைய பேருக்கு நல்லது பண்ணனுமாம்..... நம்மளை மாதிரி ஆளுங்க எல்லாம், அவங்களைப் பார்த்திட்டு திருந்தனுமாம்....  இப்படியே நிறைய சொல்லிக்கிட்டே போறாரு.. கடவுள்.....

இப்படிப் பட்ட ஆளுங்களை  சத்தம் போடாம , இருட்டடிப்பு செய்யாம - கௌரவித்த பொது மக்கள், மீடியா, அரசாங்கம், பொதுவா நம்ம ஊர் மக்களுக்கு வெளிச்சம் காட்டிய - ஆனந்த விகடன், யார் யாருக்கோ பாராட்டு வைத்து கவுரவிக்கும் தொண்டர் அடிப்பொடிகள் மத்தியில் பெரிய்ய்ய மனது வைத்து கெளரவம் செய்த - இயக்குனர் பார்த்திபனின் மனித நேயம் அமைப்பு என்று எல்லோருக்கும், ஒரு ராயல் சல்யூட்.

சுனாமி எல்லாம் வராம , திரும்பி ஓடுறது - இந்த மாதிரி ஒரு நேர்மைக்கு தலை வணங்கித் தான் என்று எண்ணத் தோன்றுகிறது....

நாமளும் திருந்த முயற்சி செய்வோம் நண்பர்களே...  ஜெயிச்சு உச்சாணிக் கொம்புல ஏறி நிற்கிறது மட்டுமா வாழ்க்கை..? சாப்பிட்டு படுத்தா , உறுத்தாத மனசோட , நிம்மதியா தூங்கணும் பாஸ்...!

( பின் குறிப்பு : இந்த பேப்பர் கட்டிங்கை எனக்கு அனுப்பி , நம் வாசகர்களிடம் தெரியப் படுத்த விழைந்த - அன்பு நண்பர் கோடியில் ஒருவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி... கட்டுரையை  படித்ததோடு நில்லாமல், சிரமம் பார்க்காது தத்தம் வலைப்பூவிலும் , நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும்  தெரியப்படுத்த விருக்கிற  - மனிதம் வளர்க்கப் பாடுபடும் - என் அன்பு சகாக்கள் அனைவருக்கும் , நன்றி .. நன்றி....)

கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து - மவுசில் ரைட் க்ளிக் செய்து , வியூ இமேஜ் செய்யுங்கள். ஒரு லென்ஸ் மாதிரி வரும்.  படத்தின் மேல் மீண்டும் 'கிளிக்'க - பெரிதாக தெரியும்... படித்துப் பாருங்கள்...படித்த பிறகு, என் மனதில் ஏற்பட்டதைப் போல - உங்களிலும் ஒரு அதிர்வு ஏற்பட்டு, பல நிமிடங்கள் நிசப்தமாகி , பல ப்ளாஷ் பேக்குகள் மனதில் ஓடி, மனது இன்னும் கொஞ்சம் பண்படும், பக்குவப்படும் என்று நம்புகிறேன் 
 -----------  ஆமாவா..?

 மீண்டும் சந்திப்போம்..!

ஸ்ரீ நந்தன புத்தாண்டு ஸ்பெஷல் பதிவு : சதிகளை முறியடிக்க ஒரு ஆன்மீக ஆலோசனை .....!

| Apr 12, 2012
வாசக நண்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீ நந்தன ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த கட்டுரை - உங்கள் அனைவருக்கும் ஒரு புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்....    

கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்கிற கேள்வியை ஒதுக்கிவிட்டு - இறையை முழுவதும் நம்பிய ஒருவருக்கு - அவர் தரிசனம் கிடைத்த அனுபவம் ஒன்றை பார்க்க விருக்கிறோம்.
 
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.உடனே உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்த விஷயம். கொஞ்சம் தாமதமாக வந்து இருக்கிறது....


அது சரி, எது எது எப்போ , யாரை சென்றடையணும் என்பது அவன் கையில் அல்லவா இருக்கிறது.. சரி, ரொம்ப ஓவர் பில்ட் அப் கொடுக்காம மேட்டருக்கு வர்றேன்.

சில வாரங்களுக்கு முன்பு, அதிமுகவில் இருந்து தனது உற்ற தோழியாக இருந்த சசிகலாவை , முதல் அமைச்சர் ஜெயலலிதா நீக்கினார். அவர்கள் இருவருக்கும் இருந்த நட்பு  உலகம் அறிந்த விஷயம். என்ன நடந்ததோ, திடீரென்று நீக்கினார். அதன் பிறகு, சென்ற வாரம் இருவரும் மீண்டும் சந்தித்து இணைந்து கொண்டனர் என்பது புது நியூஸ். சரி, இந்த இடைப் பட்ட காலத்தில் - என்ன நடந்து இருக்கும்? சசிகலா எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டு இருக்கலாம். சில தவறுகளை திருத்தி இருக்கலாம். இதை எல்லாம் தவிர - இன்னொரு விஷயம் நான் கேள்விப் பட்டு இருந்தேன்.

ஒரு சாம்ராஜ்ய அதிபதியிடம் நட்பு கொள்வது என்பது - எவ்வளவு நல்லது, எவ்வளவு கெட்டது என்பது, அவரவர் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் தெரியும். குடும்ப நலன், சுய நலன்கள் எல்லாம் மறந்து - அரசன் ஒருவனையே நினைத்து , ராஜ விசுவாசம் காட்டியாக வேண்டும். இல்லையென்றால், அவனை வாரி விட , ஆயிரம் பேர் நேரம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

ஒரு பெரிய கம்பெனியில் உத்தியோகம் பார்க்கும் நிலையும் அப்படித்தான். கடை, இடைநிலையில் இருக்கும் வரை கவலை இல்லை. தலைமைப் பொறுப்பு என்று வந்து விட்டால் - அதற்க்கு கொடுக்கும் விலை ரொம்ப அதிகம். குடும்பத்தில் இருப்பவர்கள் அதை அனுசரித்துப் போகாவிட்டால் - வீட்டில் தினமும் யுத்தம், பின்பு உறவில் விரிசல் என்று எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடும். வீட்டில் உள்ள கோபம் - கம்பெனியில் தன் கீழே உள்ள ஊழியர்களிடம் வெளிப்பட , அங்கேயும் மனத்தாங்கல் ஏற்பட்டு விட - அங்கேயும் ஒரு சுமூகம் நிலவாது.

இது எல்லாத்தையும் விட - தெரிஞ்சே மோதுற ஆளுங்க மட்டும் இல்லாம சிரிச்சுக் கிட்டே , கழுத்தை அறுக்கிற கூட்டத்தையும் சமாளிக்கணும்..  எவ்வளவு வேகமாக உச்ச நிலைக்கு வந்தார்களோ , அங்கு வந்த பிறகு - ஏண்டா வந்தோம் என்கிற நிலைமைக்கு வந்து விடுவார்கள். இது மாறுவதுக்கு வழி இருக்கிறதா?

இதே நிலைமைதான், உத்தியோக நிமித்தம் - குடும்பம் , குட்டி என்று எல்லாவற்றையும் பிரிந்து , தொலை தூரம் வசிப்பவர்கள் நிலைமையும்.

எதோ ஒரு காரணத்தால் , அந்த சூழ் நிலைக்கேற்ப  முடிவு எடுக்கப்பட்டு  இருந்தாலும்,  கொஞ்ச காலத்தில் எவ்வளவு சம்பாதித்து என்ன புண்ணியம்.. என்கிற மனப் புழுக்கம் ஏற்பட்டு விடும். உடனே ஊர்ப் பக்கம் போனால் போனால், இந்த அளவு சம்பாதிக்கவும் முடியாது. குடும்பத்தை உடன் கூட்டி வரவும் முடியாது... அட என்னைய்யா வாழ்க்கை, எதைக் கிழிக்கப் போறோம்? இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போறோம்..? ஏதாவது வழி கிடைக்காதா?  அப்படிங்கிற எண்ணம் தவிர்க்க இயலாது.. சரி, நிஜமாகவே இதற்க்கு வழி இருக்கா? இருக்குது பாஸ்... இருக்குது... மேலே படிங்க..!

இப்போ சசிகலா மேடம் விஷயத்துக்கு வருவோம்...
எந்த ஒரு இக்கட்டான நிலைமையிலும், தன்னாலான முயற்சிகளை செய்து விட்டு - அவன் வசம் பொறுப்பை விட்டு விட்டு - அவன் முடிவுக்கு தலை வணங்கி விடுவது, உத்தமம்.

மேடம் நல்லவங்களா , கெட்டவங்களா என்று எல்லாம் ஆராய்ச்சி செய்வது , நம்மளை மாதிரி சாமான்யர்களுக்கு தேவையே இல்லாத விஷயம். ஆனா, இந்த பிரிஞ்சு இருந்த கால கட்டத்துல, அவங்க ஒரு சாமி கும்பிட்டு வந்ததா - செய்தி படித்தேன். பொதுவில் பார்த்தால் - அது ஒரு சாதாரணமான செய்தி. ஆனால், எனக்கு படித்தவுடன் பயங்கர ஆச்சர்யம். அட, சரியான இடத்துக்குத் தான் வந்து இருக்கிறாங்க... யாரோ, நம்மளை மாதிரி ஒரு நல்ல மனுஷன் ஆலோசனை சொல்லி இருப்பார் போலன்னு நினைச்சேன்....

சரி, பார்ப்போம்.. அவங்க நினைத்தது  நடந்தா - கண்டிப்பா நம்ம இணைய தளத்திலும்  இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அப்போதே எண்ணினேன்.
இதோ இருவரும் இணைந்து விட்டார்கள் என்று செய்தி வந்து விட்டது.  
அப்படி என்ன அந்த கோவில்? அவர்கள் போய் வணங்கிய இடம் ஒரு ஜீவ சமாதி. திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில். ஜீவ சமாதிகளில் இருந்து  வெளிப்படும் அபரிமித சக்தி பற்றியும், பாம்பன் சுவாமிகள் பற்றியும், நாம் ஏற்கனவே நமது பழைய கட்டுரைகளில் சொல்லி இருக்கிறோம். நேரம் கிடைக்கும்போது, படித்துப் பாருங்கள்.

இதைப் பற்றிய செய்தி குறிப்பு படிக்க கீழே க்ளிக் செய்யவும்.
Source  : http://thinamalar.net/News_Detail.asp?Id=408394


வி.ஐ.பி.க்கள் பலர் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.அவங்க வாழ்க்கையிலே எவ்வளவோ, நல்லது , கெட்டது  இருந்தாலும், அவங்களுக்கே - கேட்டதும் உடனே பலன் கிடைக்குதுன்னா,  நம்மளை மாதிரி ஓரளவுக்காவது நல்லவங்களுக்கு உடனுக்குடன் பலன் கிடைப்பது உறுதி.

அடுத்த முறை சென்னை வருவதாக இருந்தால் - அவசியம் திருவான்மியூர் சென்று - மருந்தீஸ்வர தரிசனமும், பாம்பன் சுவாமிகள் ஆசியும் பெற்று வாருங்கள்...

சரி, பாம்பன் சுவாமிகள் ஆசீர்வாதம் - குறிப்பாக என்னென்ன பலன்கள் பெற்றுத் தரும் தெரியுமா?

சதி, கோர்ட்டு வழக்கு , பொய் வழக்கு , சம்பந்தமே இல்லாமல் - திடீரென்று ஒருவர் மேல் அபாண்டமாக பழி விழுவது , திட்டமிட்டே பெரிய சதிக்கூட்டம் ஒருவரை ஒழித்துக் கட்ட முயல்வது ,  தகுதி இருந்தும் முன்னேற்றம் அடையாமல், கிடைக்க வேண்டிய பேர் , புகழ் கிடைக்காமல்  - சுற்றி இருப்பவர்களால் தொல்லை அடைவது,  போன்ற சந்தர்ப்பங்களில் - ஒருவர் அவசியம் சென்று வணங்க வேண்டியது - சுவாமிகளைத்தான். நம்பியோருக்கு , இன்றும் தனது சுய ரூபத்தில் பலமுறை காட்சி கொடுத்து அருள்கிறார் சுவாமிகள்...

வாழ்வில் செவ்வாய் தசை நடப்பவர்கள், அடிக்கடி வாகன விபத்துகளை சந்திப்பவர்கள் அவசியம் சென்று வரவும்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஷண்முக கவசம் - பாராயணம் செய்பவர்களுக்கு  பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி அகலும். உள்ளம் உறுதி பெறும். காரிய சித்தி உண்டாகும்.

இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே - "VIP " க்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவதன் ரகசியம்....!


 சரி, யார் இந்த பாம்பன் சுவாமிகள்..?

 தனது வாழ்வில் ஒரு முறை அல்ல இருமுறை அல்ல - பலமுறை முருகப் பெருமானை தரிசித்தவர். முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்த ஏதோ ஒரு ஆதி காலத்தில் அல்ல.. நம்ம அப்பா , தாத்தா - காலத்தில் தான்.

 டிசம்பர் 23  - 1927  ஆம் நாள் - ஒரு குதிரை வண்டியின் சக்கரம் ஏறி - அவர் கால் எலும்பு முறிந்து - சென்னையில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நேரத்தில் - முருகப் பெருமானே வந்து குணப் படுத்தி இருக்கிறார். இது ஆவணப்படுத்தப் பட்டும் இருக்கிறது. உடன் இருந்த ஆங்கில மருத்துவர் - இந்த அதிசயத்தை "Miracle " என்று எழுதி , அந்த குறிப்பை பாதுகாத்தும் வருகின்றனர். சுவாமிகள் தங்கி இருந்த அறையை - பூஜை அறை போன்று இன்றும் வைத்துள்ளனர்.

இதைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு : கீழே உள்ள "லிங்க்" கை பார்க்கவும்.

http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=3338.0

மதிப்பிற்குரிய பி.எஸ்.பி. ஐயா அவர்கள் எழுதியுள்ள சித்தர்கள் மகிமை புத்தகத்திலும் - சுவாமிகள் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை எழுதி இருக்கிறார்.
சுவாமிகள் இயற்றிய - கீழே உள்ள இந்த கவசத்தை - நம்பிக்கையுடன் பாடிவர, நிம்மதியான வாழ்வு நிச்சயம் அமையும்.

                           ஸ்ரீ ஷண்முக கவசம்

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்

தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி

எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன

திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. (1)


ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க

தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க

சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க

நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. (2)


இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை

முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க

துரிசுஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. (3)


ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க

தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க

ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்

ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. (4)


உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க

தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க

புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்

பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. (5)


ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்

தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய

நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ

ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. (6)


எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க

அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க

விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க

செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. (7)


ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க

சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க

நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க

சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. (8)


ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க

பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க

மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க

தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. (9)


ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்

பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்

கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்

வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. (10)


ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்

தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி

பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,

தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. (11)


ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்

தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்

தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்

கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. (12)


கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை

கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு

நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்

சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. (13)


ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்

சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி

நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி

உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. (14)


சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்

நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள

குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை

பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. (15)


ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க

சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,

திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்

எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. (16)


டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை

குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,

நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்

எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. (17)


இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்

முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்

சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த

பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. (18)


தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்

சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,

அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை

எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. (19)


நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்

அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்

இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி

இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. (20)


பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை

ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. (21)


மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்

தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்

விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை

நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. (22)


யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க

அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க

சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க

சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. (23)


ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்

செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி

விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்

எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. (24)


லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று

தகர மர்த்தனமே செய்த சங்கா¢ மருகன் கைவேல்,

நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்

இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர் காக்க. (25)


வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க

விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க

நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்

கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. (26)


இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,

வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்

பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்

செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. (27)


இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்

வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க

ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க

தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. (28)


இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க

திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க

நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க

மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. (29)


இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க

தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க

நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்

கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. (30)

அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...! பரம்பொருள் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க இறையை இறைஞ்சுகிறேன்..!

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்..!

அதிசயம் : ஆஞ்சநேய தரிசனம் !

| Apr 6, 2012
வாசக அன்பர்களுக்கு வணக்கம்... நம்பியவருக்கு இறை தரிசனம் உண்டு என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.. இந்த நிகழ்வு.

பெரியவர் ரமணி அண்ணா அவர்கள் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை. சக்தி விகடனில் வெளியானது என்று நினைக்கிறேன்.  எனது நண்பர் ஒருவர் - மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அதை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி அடைகிறேன்....


பெரியவங்க எல்லாம் - எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.. நாம் எந்த அளவு வேறுபடுகிறோம் என்பது  தோன்ற ஆரம்பிக்கலாம்.... இறைவனுக்கு நைவேத்தியம் ஏன் படைக்கிறோம் என்பதற்கு , மிக நல்ல விதத்தில் காரணம் விளங்கும்.  நம்பி ராம நாமம் சொல்ல , ஆஞ்சநேய தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு - இது ஒரு ஆணித்தரமான சான்று...!

இந்த எழுத்துநடை,  கொஞ்சம் ஐயர் ஆத்து பாஷை அங்கங்கே இருப்பது  சிரமமாக தெரிந்தாலும் , முழுவதும் படித்துப் பாருங்கள்....பிரமிப்பில் நீங்கள் அமிழப்போவது  உறுதி....... 

  

ஒரு வெள்ளிக்கிழமை, நண்பகல் வேளை. சிருங்கேரியில் ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைகளை முடித்துக் கொண்டு, பிட்சை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

சிருங்கேரியை குரு பீடமாகக் கொண்ட திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வேதபாடசாலைகளில் பயின்று வந்த மாணவர்கள் பலர் அப்போது, சாரதாம்பாளையும் ஜகத்குருவையும் தரிசிக்க அங்கு வந்திருந்தனர். அவர்களைச் சில நாட்கள் தங்கிப் போகும்படி, ஸ்வாமிகள் கட்டளை இட்டிருந்தார். அந்த மாணவர்களும் ஸ்வாமிகளது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.


அப்போது, பிரவசனம் (ஆன்மிக விளக்க உரை) பண்ணும் உபன்யாசகர்களைப் பற்றி பேச்சு வந்தது. மதுரை தல்லாகுளம் வேத பாட சாலையைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்ற மாணவன் எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்தான். பிறகு, ”இந்த பிரவசனம் பற்றி மனசுல உள்ள ஒரு விஷயத்தை, குருநாதர்கிட்ட விக்ஞாபனம் (வேண்டுகோள்) பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றான். அவனைச் சற்று ஏற இறங்கப் பார்த்த ஆச்சார்யாள், ”என்னது? சொல்லேன்!” எனப் பணித்தார்.

உடனே அவன் தாழ்ந்த குரலில், ”வேற ஒண்ணுமில்லே குருநாதா! இப்பல்லாம் கதா பிரவசனம் பண்ற சில உபன்யாசகர்கள், சாராம்சத்தை விட்டுட்டு, இதர விஷயங்களைத்தான் நிறைய பேசறா! இதனால… சாராம்சம் மறந்து போயிடறது. இதர விஷயங்கள் மட்டும் நன்னா ஞாபகத்தில் இருக்கு. ‘நல்ல பிரவசனம் கேட்டோம்’கிற திருப்தி ஏற்பட மாட்டேங்கறது! இது, பிரவசனம் பண்றவாளோட குறைபாடா அல்லது கேக்கறவாளோட குறைபாடா? மகா ஸ்வாமிகள்தான் தெளிவுபடுத்தி அனுக்கிரகிக்கணும்!” என்றான்.

இதைக் கேட்ட மற்றவர்களும், இந்த சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாகத் தெரிவித்தனர். ஜகத்குரு புன்னகைத்தார். கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தவர், ”மொதல்ல, நீங்கள்லாம் போஜனம் பண்ணியாச்சா?” என்று பரிவுடன் விசாரித்தார்.

அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி, ”பண்ணியாச்சு ஸ்வாமி” என்றனர்.
”சந்தோஷம்” என்று சிரித்த ஜகத்குரு தொடர்ந்தார்: ”எங்கே, எதைக் கேட்டாலும், அதுல இருக்கிற நல்ல சாராம்சத்தை மாத்திரம் நாம கிரகிச்சுண்டு, மத்ததை விட்டுடணும். இதுக்கு, நம்ம மனசை பரிபக்குவப்படுத் திக்கணும். அதுதான் ஒசத்தியான குணம். உபன்யாசம் பண்றவா, காலத்தையும் சபையையும் அனுசரிச்சுண்டு… அதே நேரம், ‘சப்ஜெக்ட்’டையும் விட்டுடாமத்தான் பூர்த்தி பண்றா! நாமதான் அன்னபட்சி மாதிரி அதுலேர்ந்து கிரகிச்சுக்கணும்… என்ன புரியறதா?” என்று கேட்டு விட்டு பலமாகச் சிரித்தார்.
அவரது பதில், சீடர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஜகத்குருவை பார்த்தபடி… அவர்கள், தங்களுக்குள் ஏதோ ரகசியமாக விவாதித்தனர்!

சூர்யநாராயணன் என்ற சிஷ்யன் எழுந்து, மஹா சந்நிதானத்தை நமஸ்கரித்தான். பிறகு, பய பக்தியுடன் கேட்டான்: ”ஜகத்குருவிடம் ஒரு பிரார்த்தனை! நாங்கள்லாம் மத் ராமாயணம் கேக்கணும்னு ஆசைப்படறோம். ஜகத்குருதான் கிருபை பண்ணி…” – அவன் முடிப்பதற்குள், ”அதுக்கென்ன… பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போறது. நன்னா வாசிச்ச பௌராணிகாளா (உபன்யாசகர்) மைசூர்லேர்ந்து வரவழைச்சு சொல்லச் சொல்றேன்” என்றார் ஸ்வாமிகள்.
இதைக் கேட்ட சிஷ்யர்கள், ஒருவரை யருவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டனர். யக்ஞநாராயணன் என்ற சிஷ்யன் தயங்கியபடியே எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்தான். பிறகு பணிவுடன், ”ஜகத்குருவின் அம்ருத வாக்கால மத் ராமாயணம் சிரவணம் (கேட்டல்) பண்ணணும்னு எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை. குருநாதர் அனுக்கிரகிக்கணும்!” என்று வேண்டினான்.

ஸ்வாமிகள் நெகிழ்ந்து போனார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கலகலவென சிரித்தவர், ”ஓஹோ… இதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?! பார்ப்போம்… பார்ப்போம்…” என்றபடி எழுந்து உள்ளே சென்று விட்டார். சிஷ்யர்களுக்கு ஏமாற்றம்!

நாட்கள் கடந்தன. அன்றும் வெள்ளிக்கிழமை; சந்தியாகால வேளை. சாரதாம்பாள் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திடீரென… அம்பாளைத் தரிசிக்க வந்தார் ஸ்வாமிகள். அவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது மணி எட்டு இருக்கும்! ஆலய வாசலில் தயாராகக் காத்திருந்த சிஷ்யர்கள், ஸ்வாமிகளைக் கண்டதும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தனர். ஆச்சார்யாள் அப்படியே நின்றார்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே, ”ஏதேது, விடமாட்டேள் போல இருக்கே. சரி… சரி… நீங்க ஆசைப்பட்டபடியே நடத்திடலாம்! ஒரு நல்ல நாள் பார்த்து ப்ராரம்பம் (ஆரம்பம்) பண்ணுவோம்” என்றபடி வேகமாகப் புறப்பட்டார்.
அந்த நல்ல நாளும் வந்தது. ஏழு நாட்கள் ஆச்சார்யாள் சுந்தரகாண்டம் சொல்வதென முடிவாயிற்று. ‘மஹா சந்நிதானமே பிரவசன அனுக்கிரகம் பண்ணப் போறார்’ என்ற செய்தி பரவ, ஏகக் கூட்டம். அன்று மழை வேறு தூறி ஓய்ந்திருந்தது!

ஆசனத்தில் வந்து கம்பீரமாக அமர்ந்த ஜகத்குருவை அன்று தரிசித்தவர்கள், சாட்சாத் வேத வியாஸ பகவானே வந்து அமர்ந்திருப்பது போல் உணர்ந்தனர். கணீரென்ற குரலில் பிரவசனம் ஆரம்பமானது. அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென பிரவசனத்தை நிறுத்திய ஸ்வாமிகள், மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தார். அவரிடம், ”ஆரம்பத்திலேயே சொல்லணும்னு இருந்தேன்… மறந்துட்டேன்! நீ என்ன பண்றே… என் பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு மனைப் பலகையைக் கொண்டு வந்து போடு. அதுமேல பட்டு வஸ்திரத்தை விரி. அப்புறம், ஒரு வெள்ளித் தட்டுல ரெண்டு பெரிய கொய்யாப் பழத்தை கொண்டு வந்து வை… சீக்கிரம்!” என்று கட்டளையிட்டார். உத்தரவு பூர்த்தி செய்யப்பட்டு, உபன்யாசம் தொடர்ந்தது.

ஐந்தாம் நாள் உபன்யாசமும் பூர்த்தி அடைந்தது. அந்த மாணவர்களுக்கும் நன்கு புரிகிற மாதிரி விவரித்த ஸ்வாமிகள், இடையிடையே தர்மசாஸ்திர நுணுக்கங்களையும் விளக்கினார்.

திருநெல்வேலி வேத பாடசாலையைச் சேர்ந்த வேங்கடேசன் என்ற மாணவன் மெள்ள வந்து ஜகத்குருவை நமஸ்கரித்து, ”எனக்கு ஒரு சந்தேகம் குருதேவா” என்றான் தயங்கியபடி.

”என்ன சந்தேகம், கேள்!” என்றார் ஸ்வாமிகள்.
அவன் திக்கித் திணறியபடி கேட்டான்: ”குருநாதா! உபன்யாசம் ஆரம்பிச்ச நாள்லேர்ந்து… உங்க பக்கத்துல ஒரு பலகையைப் போட்டு, அதுக்கு முன்னால ஒரு தட்டுல கொய்யாப் பழத்தையும் வைக்கச் சொல்றேள்! அது எதுக்குனு புரியலை…”

இதைக் கேட்டு கலகலவென சிரித்த ஆச்சார்யாள், ”சொல்றேன் கேளு… ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்… தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்’னு… எங்கெல்லாம் ராமனின் பெருமை பேசப்படறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமி வந்துடுவார்னு ஒரு நம்பிக்கை. இங்கே நாம மத் ராமாயணம்னா சொல்றோம். அதனால நிச்சயம் ஸ்வாமி வருவாரில்லையா? அவரை நாம நிக்க வைக்கலாமோ? அவர் ‘நவ வ்யாகரண’ பண்டிதராச்சே! அவர் உட்காரத்தான் ஆசனப் பலகை! அப்புறம்… நம்ம வீட்டுக்கு யாராவது ‘கெஸ்ட்’ வந்தா பழம்- பட்சணம், காபியெல்லாம் குடுத்து உபசாரம் பண்ற மாதிரிதான் இது! ஸ்வாமிக்கு கொய்யாப் பழம்னா ரொம்பவும் புடிக்கும். இப்ப புரிஞ்சுண்டியா?” என்று கேட்டார்.

தலையாட்டினான் வேங்கடேசன். அந்த இளம்பிஞ்சு இன்னும் தெளிவடைய வில்லை என்பது அந்த தெய்வத்துக்கு தெரியாதா என்ன!
ஆறாம் நாளன்றும் நல்ல கூட்டம். அன்றைய உபன்யாசத்தை உருக்கமாகக் கூறி முடித்தார் ஜகத்குரு.

அனைவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துச் சென்ற பின்னர், பாடசாலை மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக நமஸ்கரித்து நகர்ந்தனர். கடைசியாக, முதல் நாள் சந்தேகம் கேட்ட திருநெல்வேலி பாடசாலை மாணவன் வேங்கடேசன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, கைகூப்பி நின்றான். புன்முறுவலுடன் அவனை ஏறிட்ட ஸ்வாமிகள், ”ஒம் முழுப் பேரென்ன?” என்று வினவினார்.

”பிரசன்ன வேங்கடேசன் குருநாதா!”
”பூர்வீகம் எது?” என்று கேட்டார்.
”திருநெல்வேலி- கடையநல்லூர் பக்கம் ஒரு குக்கிராமம் குருநாதா”
”தகப்பனார் என்ன பண்றார்?”
”உபாத்தியாயம் (வைதீகத் தொழில்) குருநாதா!”
உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ்” என்று கூறிவிட்டு, அன்றைய தினம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கொய்யாப் பழங்களை தன் தங்கக் கைகளால் எடுத்து, அவனிடம் தந்தார். பிறகு, ”வேங்கடேசா! இவை ஆஞ்சநேயர் சாப்பிட்ட உச்சிஷ்ட (மீதி) பிரசாதம். நறுக்கி நீயும் வாயில போட்டுண்டு, எல்லாருக்கும் கொடு!” என்று விடைகொடுத்தார்.

ஆனால், பிரசன்ன வேங்கடேசன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆச்சார்யாள் அளித்த இரு கொய்யாப் பழங்களையும் கைகளால் உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்!

அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள் தனக்குள் சிரித்தபடி, ”என்ன பிரசன்ன வேங்கடேசா! பழங்களைக் கையில் வெச்சுண்டு அப்டி என்ன யோசனை? கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்!” என்றார். அவன் தயங்கினான்.

”சொல்லு”- தைரியப்படுத்தினார் ஜகத்குரு.
”வேற ஒண்ணுமில்லே குருநாதா! அந்த ஆசனத்துல ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்து மத் ராமாயணம் கேட்டுட்டு, அவருக்கு அர்ப்பணிச்ச கொய்யாப் பழங்களையும் சாப்டுட்டுப் போறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.

”இத நான் சொல்லலே! பரம்பரை பரம்பரையா நம்ம தேசத்துல மத் ராமாயண பிரவசனம் பண்ணிண்டு வர பெரியவாள்லாம் பூர்ண நம்பிக்கையோட கடைப் பிடிக்கிற வழக்கம். இது சத்தியமும் கூட! இதுல, உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஞானகுரு.

அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது பிரசன்ன வேங்கடேசனுக்கு. பேசத் தயங்கினான். அவனை அருகில் இன்னும் நெருங்கி வரச் சொன்ன ஆச்சார்யாள், ”எதுவா இருந்தாலும்… மனசுல பட்டதை தைரியமா சொல்லு!” என்று உற்சாகப்படுத்தினார்.

உடனே அவன், ”நானும் பிரவசனம் கேக்கறச்சே அந்தப் பலகையையே அடிக்கடி பார்த்துண்டிருந்தேன்… என் கண்ணுக்கு ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்ததா தெரியவே இல்லியே! பக்கத்துல இருந்த சகாக்களையும் கேட்டேன். அவாளும் ‘தெரியலே’னுட்டா. அதான்…” என மென்று விழுங்கினான் வேங்கடேசன்.
உடனே ஆச்சாரியாள், ”சரி… சரி. இது உன்னோட முதல் சந்தேகம்! ‘ரெண்டு கொய்யாப் பழமும் வெச்சது வெச்சபடி அப்படியே இருக்கே! ஆஞ்சநேய ஸ்வாமி சாப்பிட்டிருந்தா, குறைஞ்சிருக்கணுமே’ங்கறதுதானே ரெண்டாவது சந்தேகம்?” என்று கேட்டார்.

பிறகு, ”ஆத்மார்த்தமான பக்தியும், சிரத்தையும் இருந்தா ஆஞ்சநேய ஸ்வாமி பவ்யமா, பக்தியோடு அமர்ந்து மத் ராமாயண சிரவணம் பண்றத நாமும் தரிசிக்கலாம்! ஆஞ்சநேயர் விஸ்வரூபியா வந்து உட்கார்ந்துட்டார்னா அத பார்த்துட்டு, தாங்கிக்கிற சக்தி எல்லோருக்கும் இருக்குமா? அதனால அவர், சூட்சுமமா வந்து கேட்டுட்டுப் போவார்!” என்று விளக்கம் அளித்தார். அத்துடன், ”உனக்கு கிரந்த எழுத்து வாசிக்கத் தெரியுமா?” என்று வேங்கடேசனிடம் கேட்டார்.

”தெரியும் குருநாதா” என்றான் அவன்.
உடனே, உள்ளேயிருந்து உபநிஷத் சம்பந்தமான ஒரு கிரந்த புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார் ஆச்சார்யாள். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு சிறு பகுதியை சுட்டிக் காண்பித்து, ”இதை, ஐந்து நிமிஷத்தில் மனப்பாடம் செய்து அப்டியே என்னிடம் ஒப்புவிக்க வேண்டும். முடியுமா பார்” என்றார் சிரித்தபடி!
புத்தகத்துடன் சற்றுத் தள்ளிப் போனான் பிரசன்ன வேங்கடேசன். சரியாக ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆச்சார்யாளிடம் வந்தவன், அவர் குறிப்பிட்ட பகுதியை அட்சர பிசகின்றி ஒப்பித்தான்.

ஆச்சார்யாள் முகத்தில் பரம சந்தோஷம். புத்தகத்தைக் கையில் எடுத்தார். தான் உருப்போடச் சொன்ன அந்தப் பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, ”வேங்கடேசா, நான் சொன்னபடி அஞ்சே நிமிஷத்துல படிச்சு ஒப்பிச்சுட்டே! நீ அந்த புஸ்தகத்திலேர்ந்து குறிப்பிட்ட அட்சரங்களை கிரகிச்சுட்டதால… அவை, அந்த இடத்திலேருந்து மறைஞ்சு போயிடலையே! கிரந்த எழுத்துக்கள்லாம் இருந்த இடத்துல அப்படியே இருக்கோல்லியோ? அதுமாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம எதை அர்ப்பணிச்சாலும், அதுல இருக்கிற பக்தி சிரத்தையுடன் கூடின ருசியை மாத்திரம் ஸ்வீகரிச்சுண்டு, பதார்த்தங்களைப் பரம கருணையோடு நமக்கே விட்டுடுறார். வெச்ச கொய்யா ரெண்டும் வாடாம- வதங்காம, முழுசா அப்படியே இருக்கிற ரகசியம் இப்ப புரியறதா உனக்கு?” என்று கேட்டுவிட்டு, கலகலவென்று சிரித்தார்.

பிரசன்ன வேங்கடேசன் பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். அங்கு, சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.
பிரவசன பூர்த்தி நாள்! மதியம் மூன்று மணிக்கே மேடைக்கு ஆச்சார்யாள் வந்து விட்டார். உபன்யாசம், மிக உருக்கமாகப் போய்க் கொண்டிருந்தது. பூர்த்தி கட்டம். அனைவரும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

பெரிய வானரம் ஒன்று தாவித் தாவி அந்த உபன்யாச கூடத்துக்கு வந்தது. ஒருவரையும் லட்சியம் பண்ணாமல் மேடையில் பாய்ந்து ஏறி, ஆஞ்சநேய ஸ்வாமிக்காக போடப்பட்டிருந்த பலகையில், ஆச்சார்யாளைப் பார்த்தபடி- சாதுவாக அமர்ந்து கொண்டது! ஜகத்குரு சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த கொய்யாப் பழங்களை ‘அது’ ஏறெடுத்தும் பார்க்கவில்லை! கூட்டம் இதைப் பார்த்து வியந்தது!

மாலை ஐந்து மணி. அதுவரை, அந்த வானரம் அப்படி இப்படி அசையவே இல்லை! பழங்களையும் தொடவில்லை. ஆச்சார்யாள் உபன்யாசத்தைப் பூர்த்தி செய்து, ‘பலசுருதி’ (பலன்) சொல்லி முடித்தார். பிறகு வலப் புறம் திரும்பி வானரத்தைப் பார்த்து, ”ஆஞ்சநேய ஸ்வாமி! மத் ராமாயணம் கேக்கறதுக்காக நீங்க வந்து உக்காந்திருக்கறதுல ரொம்ப சந்தோஷம்! அந்த ரெண்டு கொய்யாப் பழங்களும் உங்களுக்குத்தான்… ஸ்வீகரிச்சுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்ட வானரம், பழங்களை எடுத்துக் கொண்டு, ஆச்சார்யாளையே வாஞ்சையுடன் சற்று நேரம் உற்றுப் பார்த்தது.

இதற்குள் கூட்டத்திலிருந்து உரத்த குரலொன்று, ”ஆஞ்சநேயா… ராமா… ராமா!” என்று முழங்கியது. அனைவரும் குரல் வந்த திசையை ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கே பிரசன்ன வேங்கடேசன், கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தான்! இந்த நேரத்தில், மெள்ள மேடையை விட்டுக் கீழிறங்கிய வானரம், ராஜநடை போட்டபடி நடந்து சென்று மறைந்தது.

கண்களில் நீர் முட்ட ஜகத்குருவிடம் வந்த பிரசன்ன வேங்கடேசன், ”குருதேவா! ஒங்க பக்கத்துல பலகையில வந்து ஒக்காந்துட்டுப் போனது, என் கண்ணுக்கு வானரமா தெரியலே. சாட்சாத் ஆஞ்சநேய ஸ்வாமி, ஆஜானுபாகுவான சரீரத்தோட கம்பீரமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்! ஆச்சார்யாளோடு ஸ்வாமி ஏதோ பேசியதையும் பார்த்தேன்! நீங்க சொன்ன தாத்பர்யம் இப்ப எனக்குப் புரிஞ்சுடுத்து குருநாதா!” என்று ஜகத்குருவின் பாதார விந்தங்களில் விழுந்தான். எத்தனையோ பேர் தேற்றியும் அவனது கண்ணீரை மட்டும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த பரப்பிரம்மம் கரம் உயர்த்தி வேங்கடேசனை ஆசீர்வதித்தது!

நன்றி : பால ஹனுமான் வலைப்பூ .

தைரியம் மனித லட்சணம்....!

| Apr 4, 2012
பதிவுகளில் ஒரு பெரிய இடைவெளி விழுந்ததற்கு வாசகர்கள் மன்னிக்கவும். வழக்கம்போல கொஞ்சம் வேலை அதிகம். மார்ச் க்ளோசிங். இனிமேல் இவ்வளவு பெரிய இடைவெளி விழாது என நம்புகிறேன்... முடிந்தவரை முயற்சிக்கிறேன். தொடர்ந்து மெயில் மூலம் அக்கறையுடன் விசாரித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி... தொடர்ந்து உங்கள் ஆதரவை, கருத்துக்களை பதிவு செய்யவும். 

சில நாட்களுக்கு முன்பு, நமது இணைய தளத்தில் வெளியான "  இதோ வானம் தொட்டு விடும் தூரம்தான்" கட்டுரையின் நாயகன் திரு. இளங்கோவை , நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அவரைப் பற்றி கேள்விப் பட்டவுடனே, அவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்து கொள்ள ஆவல் இருந்து இருக்கும். எனது நெருங்கிய நண்பர் ஒருவர் , இன்னும் ஒரு படி மேலே சென்று - அவரைப் பிரத்தியேகமாக பேட்டியே எடுத்து வந்து விட்டார். 

மதிப்பிற்குரிய என் நண்பர் திரு. சுந்தர் அவர்கள் - அந்த பேட்டியை - தனது இணைய தளத்தில் தொடர் பதிவுகளாக - கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கிறார். நமது வாசக அன்பர்கள் அவசியம் இந்த பதிவுகளை வாசித்துப் பாருங்கள்..... இந்த தளம் : திரு. ரஜினிகாந்த் அவர்கள் பற்றிய அபூர்வமான பதிவுகள் கொண்டு இருந்தாலும், எக்கச் சக்கமான ஆன்மீக கட்டுரைகளையும், தன்னம்பிக்கை கட்டுரைகளையும்  தன்னுள் வைத்து இருக்கும் சுரங்கம்...

எந்தவிதமான வர்த்தக நோக்கமும் இன்றி, சமுதாயத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்வதில் ஈடுபட -  அதற்காக நேரம் ஒதுக்கிட பெரிய மனது வேண்டும். அந்த வகையில் , பல அரிய மனிதர்களை பேட்டி கண்டு  கட்டுரைகளை வெளியிடும் அந்த நண்பருக்கு : நம் வாசகர்கள் சார்பாக ஒரு ராயல் சல்யூட். விரைவில் இன்னொரு VVIP யோட பேட்டி வர இருக்கிறது. VVIP என்பதைவிட, யாராலும் வெறுக்க முடியாத ஒரு அற்புத மனிதன், கலைஞனின் பேட்டி. அவரை விட நான் ஆவலாக இருக்கிறேன். அவரது முயற்சிகள் மென்மேலும் வெற்றி பெற, வாழ்வில் உயர்ந்த இலக்கை விரைவில் அடைய இறை அனுகூலம் தொடர்ந்து கிடைக்கட்டும். 

இதைப் போன்ற அருமையான இணைய தளங்களை வரவேற்போம்.. அவரது முயற்சிகளை ஊக்குவிப்போம்...!
ரேமாண்ட்   :  தி கம்ப்ளீட் மேன் - கணீர் குரலுக்கு சொந்தக்காரர் . திரு. இளங்கோ அவர்களின் அனுபவம், கடந்து வந்த பாதை, வெற்றி பெற சில டிப்ஸ் என்று அவரது பிரத்தியேகமான பேட்டியை படிக்க இங்கே சொடுக்கவும் :

 “வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு… வாழவே பிடிக்கலைன்னு சதா புலம்பிகிட்டே இருப்பவரா நீங்க?” ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

நெஞ்சே உன்னாசை என்ன… நீ நினைத்தால் ஆகாததென்ன…?” — சாதனைச் சிகரத்துடன் ஒரு சந்திப்பு! Part 2


 ============================================================

இன்றைக்கு பிரதோஷம்..... பங்குனி மாதம் - பூரம் நட்சத்திரத்தில் வருகிறது. பூரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். சுக்கிரன் நவக் கிரகங்களில் களத்திரகாரகன் எனப்படுபவர். களத்திரம்னா புரியலை...ங்கிறீங்களா..? கல்யாணம் , நல்ல நட்பு இதையெல்லாம் குறிப்பிடும் ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம் எனப்படுகிறது.
திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் அன்பர்கள் , கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள்- இந்த பிரதோஷ நேர வழிபாட்டை தவறாது பயன் படுத்திக்கொள்ளவும்......

நம்பிய நண்பர்களால் ( ஆணோ / பெண்ணோ )  ஏமாற்றப் பட்டவர்கள் -  கணவனால் / மனைவியால் வஞ்சிக்கப்பட்டவர்கள் - சுக்கிர பலம் குறைந்து இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் சுக்கிரனின் நட்சத்திரம் வரும் நாட்களில் - ( பரணி, பூரம் , பூராடம் ) - விரதமிருந்து - மகா லக்ஷ்மி சமேதராக இருக்கும் பெருமாளை வணங்கி வர, ஜாதக ரீதியாக உள்ள தோஷம் நீங்கப் பெறும்.

எவர் ஒருவருக்கு சுக்கிர தசை நடக்கிறதோ - அவர்கள் மேற்கூறிய நட்சத்திரம் வரும் நாட்களில் - ஸ்ரீரங்கம் சென்று - சுக்கிர ஹோரையில் , பரந்தாமனை தரிசித்திட - அவருக்கு சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிடைக்கும்... வாழ்க்கையில் பல மடங்கு முன்னேற்றம் கிடைக்கும். 

இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே..... மேற்கூறிய நாட்களை பயன்படுத்த முடியவில்லை எனினும், வருந்த வேண்டியதில்லை. அவன் தாள் பணிய, நாள் நேரம்  பார்க்க வேண்டியதில்லை. எந்நாளும் பொன்னாளே  ..! 
=====================================================================

மனிதன் என்று இல்லை, எந்த ஒரு உயிரினமும் மதிக்கப் படுவது, அதன் தைரியத்துக்குத்தான்.  நல்ல படிப்பு, திரண்ட செல்வம் இருந்தும் - ஒருவன் கோழையாக இருந்தால் , என்ன பிரயோஜனம்?  நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி, ஒதுங்கி - வீரம் என்பது - சினிமா படத்தில் வரும் ஒரு மிகைப் படுத்தப்பட்ட ஒரு குணம் என்கிற அளவில் மட்டுமே நமக்குத் தெரிந்து இருக்கிறது.

வெறுமனே வாயால் தோரணம் கட்டி - உதார் விடுவது மட்டும் வீரம் இல்லை. நெஞ்சு முழுக்க உரமிடப்பட்ட வீரம் இருக்க வேண்டும். அன்னையின் தாய்ப்பால் - அப்படிப்பட்ட உரம் என நினைத்து இடப்பட்ட அமுது தான். ஒரு கோழையை - பெற்ற தாய் கூட விரும்ப மாட்டாள். அநியாயம் நடந்தால் எனக்கென்ன என்று இருப்பவர்களை கடவுளும் கூட விரும்ப மாட்டார் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

நான் சின்ன வயதாக இருந்தபோது - என் தந்தை எனக்கு கூறிய சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது...... 

முப்பது வருடம் முன்பு  - பம்பாயில் ஒரு இளம் தம்பதி , இரவு சினிமா பார்த்து வந்து கொண்டு இருந்த போது , நான்கு பேர் கொண்ட ஒரு ரவுடி கும்பல் வழி மறித்து இருக்கிறது. ஒவ்வொருவரும் தடியர்கள். கையில் ஆயுதம் வேறு.
இருவரும் கதறி அழுத வண்ணம் கெஞ்ச, அவர்கள் மனது இளகவே இல்லை. 

அந்தப் பெண் கொஞ்சம் அழகாய் வேறு இருந்து தொலைய  , அதுவே வினையாய் முடிந்து இருக்கிறது.  

ஒரு சின்ன கீறல் கூட விழாது. காலையில் அனுப்பி வைக்கிறோம்.  உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிவிடு என்று மிரட்ட - கணவனுக்கு ஒன்றும் நேர்ந்து விடக்கூடாது என்று அந்த பெண்ணும் , தன் கணவனை அங்கு இருந்து செல்லும்படி கூறி இருக்கிறாள்....

அழுது, அழுது கெஞ்சிய கணவனை அவர்கள் விரட்டி அடித்து அனுப்பி விட்டார்கள். காலையில் கதவைத் தட்டிய மனைவி -  கணவன் முகத்தில் கூட விழிக்காமல் ,  நீங்கள் வேலைக்குச் செல்லுங்கள் . நான் தூங்கச் செல்கிறேன் என்று கூறி கதவைத் தாளிட்டவள் - தூக்கில் தொங்கி தன் கதையை முடித்துக் கொண்டாளாம்.  

இந்த காலத்தில் இதைப் படிக்கும்போது -  சிலருக்கு இது எதோ ஒரு சாதாரண விஷயமாகக் கூட தோன்றக்கூடும். இப்போது இருக்கும் IT கம்பெனி கலாச்சாரத்தில் - இது ஒரு விஷயமே இல்லை என்று கூட தோன்றலாம். 

நான் சொல்ல வரும் விஷயமே வேறு. இடைஞ்சல்கள், எதிர்ப்புகள் ஒரு மனிதனுக்கு எந்த சூழலிலும் வரலாம். தைரியம் ரொம்ப முக்கியம். அந்த மனிதன் போராடி உயிரை விட்டு இருந்தாலும் , இல்லை அவர்களை பந்தாடி வந்து இருந்தாலும் - அது சினிமாட்டிக்காக தோன்றலாம். ஆனால், நடைமுறையில் ? 

அந்த சூழ்நிலை எந்த மனிதனுக்கும் ஏற்படலாம். நாட்டில் ரவுடிகளுக்கா பஞ்சம். உயிர் பயம் இருப்பவர்கள் - கடைசியில் உயிர் தான் போகும் என்று நம்புபவர்கள் எதிர்ப்பு காட்டுவது போல் காட்டி, (அவர் மனைவி நம்பி விடுவாராம்) , அங்கு இருந்து ஓடி விடுவார்கள். அப்படி பிழைத்து எதை சாதிக்கப் போகிறான் என்று தெரியவில்லை.

ஒருவேளை அதன் பிறகு, புஜ பல பராக்கிரமனாகி - ஒவ்வொருவராக தேடி, கொடூரமான முறையில் - அவர்களை பழி வாங்குவானோ? இல்லை , காலப் போக்கில் - இதுவும் கடந்து போம் என்று - மெல்ல மெல்ல மறந்து , இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்வானோ? இல்லை காலையில் வந்த மனைவியை, மடியில் வைத்து - ஆறுதல் சொல்லி , கண்ணீர் விட்டு தன் இயலாமையை சொல்வானோ தெரியவில்லை...! 

இதைப் பற்றி பல முறை யோசித்து இருக்கிறேன்...! கிட்டத் தட்ட - ஒரு பெரிய நாவல் எழுதும் அளவுக்கு , ஒரு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு....

சாயந்திரம் ஆனால் - வாரக் கடைசி ஆனால் - கூட்டம் கூட்டமாக பார்களில் மொய்த்துக் கொண்டு - பர்கர் , பீஸா என்று சாப்பிட்டுக்கொண்டு , முப்பதுகளின் முடிவில் - நெஞ்சு வலி, சுகர் என்று அலையும் என் சக நண்பர்கள் , இதைப் போன்ற ஒரு சூழலை எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை.... எல்லாம் முடிந்ததும், ஒரு புல் பாட்டிலை உள்ளுக்குள் கவிழ்த்துவிட்டு , வேஷ்டி  /  ஷார்ட்ஸ் புழுதியில் கிடக்க , தன் வேதனையை வெளிப்படுத்துவாரோ..? இல்லை மறக்க முயல்வரோ..?

இந்த சூழலை எப்படி அணுகலாம்? 
ஹா ஹா.. கேள்வி வேறா? ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. முட்டி மோது... வீழ்த்து... அல்லது மோதி மோதியே .... செத்து மடி....

முட்டி மோதுவது மடத்தனமே எனினும் - ஜெயிக்க முடியாத அந்த திறமைக்காக - செத்து மடிவதே மேல். இத்தனை வருடம் கஷ்டப்பட்டு (?) வளர்ந்த அந்த வாழ்க்கை , அந்த ஒரு நொடியில் முடிந்து போவதாக இருந்தாலும் கவலை இல்லை.... செத்துப் போவது எவ்வளவோ நல்லது..

இல்லை - ஜெயிக்க ஆசைப் படுகிறீர்களா? உடலை அக்கறையுடன் கவனிக்கப் பழக வேண்டும். நல்ல உணவு, ஆரோக்கியம் , உடற் பயிற்சி - கராத்தே , சிலம்பம் என்று கற்பவர்கள் என்ன மடையர்களா? நாமும் கற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இதில் கற்றுத் தெளிவதால் ஒருவரது தன்னம்பிக்கை பன் மடங்கு அதிகரிக்கவும் செய்யும்.

இதையெல்லாம் கற்றுக் கொள்ளாது இருந்து - நாம் எதையோ சாதித்து - பூனைப் படை காவலுடனா இருக்கிறோம்? இல்லை அந்த காவல் வைத்து இருப்பவர்கள் தான் மனிதர்களா? அவர்கள் உயிர் மட்டும் போற்றிப் பாது காக்க வேண்டிய ஒன்றா? நம் உயிர் மதிப்பிலாத ஒன்றோ?

ஆம் ... தன் உடல் நலம் மேல் அக்கறை இல்லாதவன்,  தைரியம் இல்லாதவன் , வீரத்தை வளர்த்துக் கொள்ளாதவன் உயிரை - கடவுள் கூட உயிர் என்று மதிப்பதில்லை. சவரம் பண்ணுவது போல மழித்துவிட்டு , கவலைப் படாமல் சந்தோசமாக இருப்பார்.... என்று தான் எனக்குத் தோன்றுகிறது. 

அடி வாங்கி , புழு போல நெளிவதற்க்குப் பதிலாக - புழுவாகப் பிறந்து விடுவதே மேல் அல்லவா...?

நேரம் இல்லை பாஸ்.... ரொம்ப எழுதனும்னு நினைக்கிறேன்... அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்....!
இன்னொரு பழைய சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்...!
______________________________________________________

 நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தமிழ் நாடு வந்திருந்தபோது, யாரோ ஒரு அம்மாக் கிட்ட ஆசீர்வாதம் வாங்கினதா, அரசல்  புரசலா கேள்விப் பட்ட ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.... 

அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார்.

 பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு சாதாரண உறுப்பினராக சேர்ந்து, இன்று அதனுடைய முக்கிய செயலராக விளங்கி கொண்டிருக்கிறார்.

 "களஞ்சியம்" என்பது சிறுசேமிப்பை வலியுறுத்தும் ஒரு சேவை அமைப்பு. அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களிடையே சேமிப்பின் மேன்மையை வலியுறுத்தி "களஞ்சியத்தை" விரிவுபடுத்தியவர்.இதனால் பலனடைந்த குடும்பங்கள் பல.

 "The Hindu" பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் "ஆரம்பத்தில் பத்து பேரிடம் இருந்து தலா இருபது ரூபாய் பெறப்பட்டு, இப்பொழுது, இந்தியா முழுவதும் சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது களஞ்சியம். மொத்த சேமிப்பு தொகை நூறு கோடியை எட்டி இருக்கிறது" என்றார். 

இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு "ஸ்திரீ சக்தி" விருதும் தமிழக அரசு "பொற்கிழி விருதும்" வழங்கி கவுரவித்தது. பிரதமரிடம் (வாஜ்பாய்) விருது வாங்கும் பொழுது, இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெருமை சின்னப்பிள்ளை அம்மாள் அவர்களையே சாரும்.

=====================================================


ஒரு சாதாரண பாட்டியே - இவ்வளவு சாதிக்கிறப்போ ,  சமுதாயத்துக்கு நல்லது செய்ய முடியிறப்போ - நாம , எவ்வளவு பெரிய ஆளுங்க.. படிச்சவங்க, திறமை உள்ளவங்க.  சாதிக்க முடியாதா என்ன? 


சிந்தியுங்கள் பாஸ்...!   நிச்சயம் சாதிப்போம் ஒரு நாள்..!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com