Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சிவராத்திரியன்று- வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்ட பாட்டி!

| Feb 27, 2012நமது பதிவுகளை ஆரம்ப காலத்தில் இருந்து படித்தவர்களுக்கு, நான் பல கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிடும் அன்னை பத்திரகாளி அம்மனைப் பற்றி தெரிந்து இருக்கும். 


மிகச் சிறிய கோவில் என்றாலும், தன்னை நாடி வரும் , ஏன் நினைத்த மாத்திரத்திலேயே அவர்களின் குறை தீர்க்கும் - அற்புதம் நிகழ்த்துபவள் அன்னை.

நம் வாசகர்கள் , யாரேனும் அற்புதம் நிகழ்ந்தால் ஒழிய - இந்த பிரச்னைகள் தீராது , என்று அனுதினம் போராடிக்கொண்டு இருப்பவர்கள்- அவசியம் ஒருமுறை இந்த அம்மனை தரிசித்து வாருங்கள்..!

என்னுடைய சொந்த அனுபவத்தில் - நான் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு சில இன்னல்களை சுமுகமாக தீர்த்து வைத்தது அன்னையின் பெருங்கருணை.....! இங்கு அம்மன் பாதத்தில் வைத்து தரப்படும் - மஞ்சள் காப்பை தினமும் என் நெற்றியில் வைத்துவிட்டு தான் வீட்டில் இருந்து வெளியே கிளம்புவது என் வழக்கம்....!

அம்மன் நிகழ்த்தும் அற்புதங்களை நான் எனக்கு வேண்டியவர்களிடம் சொல்லி - அவர்களும் இன்று தத்தம் குலதெய்வத்துக்கு இணையாக வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்..!

அங்கு வருடா வருடம் - சிவராத்திரியன்று நிகழ்த்தப் படும் இந்த நிகழ்ச்சி - பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும்..!

நாங்களும் போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை என்று - ஆனால் - இன்னும் இறையருளை நம்பி - வாழ்க்கை நடத்துபவர்கள் - அவசியம் இங்கு ஒருமுறை வந்து செல்லவும்....!

கிராமம் தோறும் இருக்கும் ஏதோ ஒரு சாதாரண கோவில் இல்லை இது. உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் அன்னை சக்தி - இங்கு மகிழ்ச்சியுடன் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டு இருப்பதை , நீங்களே உணர முடியும்.

இந்த வருட சிவ ராத்திரி நிகழ்வை பற்றி , தினமலர்  நாளிதழில் வந்த செய்திக் குறிப்பு  - நம் வாசகர்களுக்காக.. :
================================================================
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில், கொதிக்கும் நெய்யில், மூதாட்டி கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரி அன்று ஸ்ரீவி., முதலியார் பட்டி தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதன் முக்கிய நிகழ்ச்சியான நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது.

இதற்காக ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த, 78 வயதான முத்தம்மாள், 90 நாள்கள் விரதமிருந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்தப்படி,கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அதை கொதிக்கிற நெய்யில் போட்டார். பின் கரண்டி பயன்படுத்தாமலேயே கையால், அப்பத்தை புரட்டி போட்டு வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் கையினால் வெளியில் எடுத்தார்.இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
 
கையால் கொதிக்கிற நெய்யில் அப்பம் சுட்டு எடுத்தது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதை காண சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


ஆதாரம்  : தினமலர் 


நமது சென்ற வருட பதிவை மீண்டும் படிக்க  இங்கே க்ளிக் செய்யவும்.

ஸ்ரீ சக்கரத்தம்மாள்.... ! ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .... !

| Feb 24, 2012
A Spiritual experience with Sri Lalitha sahasranaama sthothram !


 

உங்களிடமே நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஒரு காலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான் விஷயம். உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற ஆற்றல் குடிகொண்டிருக்கிறது. அதனை பயன்படுத்துங்கள்.
இதைச் சொல்லியவர் - சுவாமி விவேகானந்தர். 

இதை நாம் எவ்வளவு தூரம் உணர்கிறோமோ , இல்லையோ - மகான்கள் , ரிஷிகள் எல்லாம் சொல்வது, நீ முதலில் உன்னை உணர்....!

 நமக்கு அது என்ன தான், எவ்வளவு தான் சொன்னாலும், மண்டையில் ஏறுவது இல்லை...

சில மாதங்களுக்கு முன், அண்ணாமலை சென்றபோது ஒரு சம்பவம். சாதாரண நாட்களில் செல்பவர்கள் - முடிந்தவரை முதல் நாள் இரவிலேயே அங்கு சென்று , அருகில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் தங்கிவிட்டு - அதிகாலை , நடை திறக்கும்போது - அருணாச்சலேஸ்வரரை தரிசித்து - பின் கிரிவலம் செல்வது - மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். 

அப்பாவையும், அம்மாவையும்,  சந்தித்துவிட்டு - கதிரவன் மெல்ல உதயாமாகும் அந்த வெளிச்சத்தில்  - மகிழ மரத்தடியில் நீங்கள் உட்கார , உங்கள் மனதில் அந்த தருணம் ஏற்படும் ஒரு நிம்மதி - பரிபூரணமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்..!

நான் சென்றபோது - உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள பலகை மேடையில் - ஒரு இளைஞர் - 25  வயசு இருக்கலாம் என  நினைக்கிறேன்.  கணீரென்ற குரலில் - லலிதா சஹஸ்ரநாமம் துதித்துக் கொண்டு இருந்தார். மிக சக்தி வாய்ந்த அம்மன் சந்நிதி முன்பு , அந்த அதிகாலை வேளையில் - மிக சக்தி வாய்ந்த அந்த ஸ்தோத்திரம் சொல்வது - கேட்பதற்கே பரவசமாக இருந்தது.

சொல்லியவருக்கு எப்படி இருந்து இருக்கும்....? அவ்வளவு பெரிய ஸ்லோகத்தை - மனனம் செய்து சொல்வதற்கு , எவ்வளவு கான்சன்ட்ரேட்   பண்ண வேண்டி இருக்கும்..?  அந்த இளைஞர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று , எளிதில் யூகிக்க முடியும். ஆனால் - எந்த ஒரு சமூகத்தை சேர்ந்தவரும், மனத்தை குவித்தால் - எந்த மந்திர ஸ்தோத்திரங்களையும், கற்றுக்கொள்ள முடியும். ... நாம் தான் முயற்சி செய்வதில்லை. அல்லது அதன் அருமை பெருமைகள் பற்றி நமக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை.

முதல் பத்தியில் விவேகானந்தர் கூறியதை திரும்ப படித்துப் பாருங்கள்...!

என் அனுபவத்தில் - ஒரு விஷயத்தை நான் உணர்ந்து இருக்கிறேன்... நாம் ஏதாவது ஒரு விஷயத்தை , பார்த்துப் படிக்கும்போது - கண்ணும், வாயும் சரியாக அந்த வேலையை செய்தாலும்,  மனது சமயத்தில் - அலைபாயும். காத்து எந்த வேற சப்தத்தையும் வாங்க தயாரா இருக்கும். தேவை இல்லாமல் , ஏதேதோ பிம்பங்கள் மனதுக்குள் வரும். 

வீட்டில சாதாரணமா பேப்பர் படிக்கிறப்போ, தெருவிலே கீரை விக்கிறவங்க குரல் கூட காதுல விழும் இல்லையா...  இதுவே நம்ம மனசுக்குள்ளே வாங்கி, பார்க்காம சொன்னா..? வேற பக்கம் கவனம் சிதற வாய்ப்பே இல்லை... கரெக்டா..?

தனியே நாம மட்டும் இருந்தா, பரவா இல்லை.... சபையிலே சொல்லணும்னு வந்துட்டா, இன்னும் மனக் குவிப்பு துல்லியமா இருக்கும். 
அந்த முழு கவனம் வைத்து இருக்கும் நிலையில் -  கண் எதிரே அம்மன் அமர்ந்து இருக்க - அவளை துதித்து வணங்கப்படும் சக்தி வாய்ந்த - இந்த லலிதா சஹஸ்ரநாமம் -  அவளை உங்கள் நேரில் கூட வரவழைத்து விடும். 
உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற , உங்களை தகுதி படைத்தவராக ஆக்கும். அதை நோக்கி நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி பெரும்... மனத்தை ஒருமுகப் படுத்துவதன் மகத்தான பலன் அது...!
  ஸ்ரீ ருத்ரமோ, விஷ்ணு சஹஸ்ரநாமமோ, அல்லது லலிதா சஹஸ்ரநாமமோ - இனிமேல் முழுவதும் கற்று , மனதுக்குள் ஜெபிக்க தொடங்குவோம்.... இறைவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே , மனதுக்குள் இதை ஜெபிக்க ஆரம்பித்தால் - அட அடா..! நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கிறது..!

 என்னுடைய  மின்னஞ்சலில் இருந்த, ஒரு பழைய சுவாரஸ்யமான கட்டுரையை - இன்று நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விருக்கிறேன்.... படித்துப் பாருங்கள்....!  லலிதா சஹாஸ்ரனாமத்துக்கும், ஸ்ரீ சக்கரத்துக்கும் தொடர்புடைய ஒரு விஷயம்... !
==================================================
எண்ணற்ற மகான்களால் புனிதமடைந்த பாரத பூமியில், ’ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதம் என்பது கிடையாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இறைவனை அடைவதற்கு அது ஒருதடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ சக்கரத்தம்மாள். தியாகமும், யோகமும் இணைந்த ஒன்றாக அவரது வரலாறு விளங்குகிறது.

ஸ்ரீ சக்கரத்தம்மாளின் இயற்பெயர் அனந்தாம்பாள். பொது சகாப்தம் 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர். தாயாரோ அனுதினமும் சிவனைத் தவறாது பூஜித்து வந்தவர். இவர்களது குழந்தை என்பதால் சிறுவயதிலேயே அதற்கு இறை அனுபூதி வாய்த்திருந்தது. குழந்தை ஞானச் செறிவுடன் வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது. 

லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சக குழந்தைகளுடன் விளையாடுவதை விட, தந்தையுடன் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபடுவதே அவளுக்குப் பிடித்திருந்தது. 

திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் திருமணம் நடந்தது. அப்போது அனந்தாம்பாளுக்கு வயது எட்டு. சாம்பசிவனுக்கோ இருபத்துமூன்று. அவருக்கு அது இரண்டாவது திருமணமும் கூட. பால்ய விவாகம் சகஜமாக இருந்ததால் அக்காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.

மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நாளடைவில் தன் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டாள். ஆனால் கணவன் சாம்பசிவனோ, மனைவி ஒரு சிறுமி என்பதால் மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்க்கை நடத்தினார். அவர் தீய நடத்தை உடையவராகவும் இருந்தார். அனந்தாம்பாளுக்குத் திருமண வாழ்க்கை ஒரு கொடிய நரக வாழ்க்கையாக அமைந்தது. 

அனந்தாம்பாள் வளர்ந்தார். குமரியானார். ஆனால் அப்போதும் சாம்பசிவன் தனது தீய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அனந்தாம்பாளை உளரீதியாகப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கினார். மிகக் கொடிய துன்பத்தை அவர் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் தனது இல்லறக் கடமைகளைக் கைவிடவில்லை. 

அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார். 

நாளடைவில் தீயசெயல்களின் விளைவால் படுத்த படுக்கையானார் சாம்பசிவன். அப்போதும் அவருக்கான கடமைகளைச் செய்து வந்ததுடன், தினம்தோறும் ஆலயம் சென்று கணவருக்காகப் பிரார்த்தித்து வரலானார் அனந்தாம்பாள்.

ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20. 

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், தன் முப்பதாவது வயது வரையில், அவரது அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் அந்த ஒளிக்கெல்லாம் ஒளியான பேரொளியைக் கண்டார் அம்மா.

 அதுமுதல் சதா ஆனந்த நிலையில் இருப்பதே அவர் வழக்கமாயிற்று. ’யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்’ என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன், பரிபூரண ஆனந்த பிரம்ம நிலையிலேயே திளைத்திருந்தார். சதா ஆனந்த நிலையில் இருப்பதால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கமானது.

கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார். யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார். அவரைக் கண்ட பலரும் ஆரம்பத்தில் பைத்தியம் என்று கருதி விலகிச் சென்றனர். 

பின்னரே அவர் ’ஞான சொருபிணி’ என்பதும், ’பிரம்ம யோகினி’ என்பதும் தெரிய வந்தது. அம்மாவின் ஞான நிலையை உணர்ந்த சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கியவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

டாக்டர் நஞ்சுண்டராவ், சென்ற நூற்றாண்டின் பிரபலமான 
மருத்துவர்களுள் ஒருவர். கர்னல் ஆல்காட், கிருஷ்ணசுவாமி அய்யர், பி. ஆர். சுந்தரமையர், காட்டுப் புத்தூர் ஜமீன்தார் என பலருக்கும் அவர்தான் குடும்ப டாக்டர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். 

விவேகானந்தர், நஞ்சுண்டராவின் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்து விவேகானந்தர் நஞ்சுண்டராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. “எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. 

சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது” என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தில்தான் விவேகானந்தர் தெரிவித்திருந்தார். 

ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்த நஞ்சுண்டராவின் உள்ளம் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மாவை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே அவர் கருதினார். பின்னரே அவரது தவநிலையை உணர்ந்து கொண்டு அம்மாவின் சீடரானார். அம்மாவைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதியவர் அவருடன் காசி உட்பட பல இடங்களுக்கும் தல யாத்திரை சென்று வந்தார். 

பின் அம்மாவுடன் திருவண்ணாமலை சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவ், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்றார். (தேவராஜ முதலியாரின் ‘அனுதினமும் பகவானுடன்’ / 17-03-1946 நாட்குறிப்பு)  அம்மா அனுதினமும் சிவ பூஜையும் ஸ்ரீ சக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து ’அம்மா’ என்றும் சக்கரத்தம்மாள் என்றும் அன்புடன் அழைக்கப்படலானார்.

 தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். “பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர். 

பரிபூரண ஞானநிலை அடைந்த அம்மா, அவ்வப்பொழுது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அன்பர்கள் காரணம் கேட்டால், தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்ததாகவும் கூறுவார். அதுதவிரப் பல்வேறு சித்துக்களும் அம்மா கைவரப் பெற்றிருந்தார்.
அம்மாவின் சித்தாற்றல் பற்றி தனது ’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.

பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.

ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும், நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள். எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர். 

பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும். ’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.

இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். சீடர் நஞ்சுண்டராவால் சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே அம்மாவுக்கு ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது. 

ஒருமுறை தம்மைச் சந்தித்த நஞ்சுண்டராவிடம் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள், அம்மாவின் சமாதி ஆலயம் ஒரு மகத்தான் சக்தி பீடம் என்றும், தவறாமல் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

அதன்படி டாக்டர் நஞ்சுண்டராவ் அமைத்த டிரஸ்டின் மூலம் சிறப்பான முறையில் இங்கு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதத் திருவாதிரை தினத்தன்று அம்மாவின் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. என்றும் நினைந்து போற்றத்தக்கது.

நன்றி : திரு . பி. எஸ். ரமணன். 
==============================================================

திரு.வி.க பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும்  உலகில் , அமானுஷ்யமும் கலந்து இருக்கிறது. இதை உணர்ந்து கொள்ள நமக்குத் தான் நேரம் இல்லை...

இறைவன் இருப்பது சர்வ நிச்சயமான உண்மை. கேட்பதை தெளிவாக உறுதியுடன் கேளுங்கள்... விரைவில் கை கூடும்..! 

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

பூர்வ ஜென்மம்

| Feb 23, 2012

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com