Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அன்புள்ள டைரி ................ (A must read Article)

| Dec 22, 2012
ஐஸ் கட்டி , ஐஸ் ஆகுறதுக்கு முன்னாலே தண்ணியாத் தான் இருக்கு. அதுக்கு அப்புறமும் தண்ணியாத் தான் ஆகப் போகுது. நம்ம வாழ்க்கையும் ஐஸ் கட்டி மாதிரி தான். இதுக்கு முன்னால அவன் கிட்டத் தான் இருந்தோம். இதுக்கு அப்புறமும் அவன் கிட்ட தான் போகப்போறோம்.இடையில அவன் டைரக்ட் பண்ற நாடகத்துல ஒரு ரோல் தான் நாம எல்லோருமே. நம்மை உணர்ந்தால் அதுவே போதும். இப்போதைக்கு  ஐஸ் கட்டி மாதிரி உறைஞ்சு  போய் கிடக்கிறோம். ஒன்னு , ஐயோ, இப்படி ஆகிடுச்சேன்னு கடந்த காலத்தைப் பற்றி , நடந்ததை நினைத்து புலம்பிக்கிட்டே -நிகழ் காலத்தை வீணடிக்கிறோம். இல்லையா - வருங்கால கனவு கோட்டையிலேயே , கையில் கிடைக்கும் வாய்ப்புக்களை தவற விடுகிறோம்.கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு பொக்கிஷம்... அடுத்த நிமிஷம் நாம இருக்கப் போறது அவன் கையிலேதான். உபயோகப்படுத்திக் கொள்வோம்.

வாழ்க்கை விளையாட்டில் மறைத்து வைத்து இருக்கும் விதி ரொம்ப சிம்பிள். செய்ற வேலையை கரெக்டா செய். நிம்மதியா இரு. உன்னோட குடும்பத்தை , சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்துக் கொள். இவ்வளவுதான். ஆனால், இதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, இதைத் தவிர எல்லாமே நாம் செய்து வருகிறோம். ஓடி ஓடி உழைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே , குடும்பத்தை கவனிக்க கூட நேரம் இல்லாமல் , சந்தோசங்களை தொலைக்கிறோம். எதுவுமே நம் கையில் இருக்கும் வரை அதன் மதிப்பு தெரிவதில்லை. அதுவே, முற்றிலும் தொலைத்த பிறகு - அது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக தெரியும்.

குறிப்பாக உறவுகள் விஷயத்தில் இது மிகவும் பொருந்தும்.

கீழே ஒரு சம்பவம் கொடுத்துள்ளேன். நிச்சயம் உங்கள் மனதில் சில எண்ணங்கள் ஓடும். நீங்க எப்படி இருக்கிறீங்க? இனிமேல் என்ன பண்ணப் போறீங்கன்னு , ஒரு நாலு வார்த்தை எழுதினா, நம்ம வாசகர்கள் எல்லோருக்குமே சந்தோசமா இருக்கும்... எழுதுறதுக்கு முன்னாலே, நீங்க உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், ஒரு ரெண்டு நிமிஷம் , உங்க அப்பா அம்மாவுக்காகவே ஒதுக்கினா, அவங்க கூட போன் ல பேசினா கூட, உங்கள் சகோதரனா நான் சந்தோசப்படுவேன்..!

*************************************************************
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பகல் பதினோரு மணி. வீட்டுல அந்த இளைஞர் அப்போதான் தூங்கி எழுந்து டிபன் சாப்பிட ஆரம்பிக்கிறார். நைட் எல்லாம் நண்பர்கள் கூட ஆட்டம் போட்டு லேசா ஹேங் ஓவர். சாப்பாடுல உப்பு கம்மி. காரம் அதிகம் ன்னு அம்மாக் கிட்ட ஒரு உறுமல் வேற.  "நாளைக்கு உன் பொண்டாட்டி கிட்ட வக்கனையா வடிச்சுப் போடா சொல்றா"ன்னு அவங்க 'கம்'முன்னு உள்ளே வேலை பார்க்கப் போய்ட்டாங்க. 'ஹால்'ல ஈசி சேர்ல சோர்வா அந்த இளைஞரோட அப்பா. வாழ்க்கையில ஓடி, ஆடி , அடங்கி கடைசி கட்டத்துல இருக்கிறவர். என்னத்தை வாழுறாங்க இந்த காலத்துப் பசங்கன்னு அவர் முகத்திலேயே அந்த சலிப்பு தெரியுது. 

இன்னும் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியலையேங்கிற  கவலை. பொறுப்பு இன்னும் பத்தலையே . பிள்ளையை சரியா வளர்த்தோமா? வளர்க்கணும்னு நினைச்சாலும் இந்த சமூகம் வளர்க்க விடுதா? டிவி, இன்டர்நெட் , அரசாங்கமே ஊக்குவிக்கிற டாஸ்மாக் கடைகள் . சொன்னாலும் காது கொடுத்து கேட்குதுங்களா பசங்க...... யப்பா... முடியலைடா.
டிவி ல ஏதோ 20-20 கிரிக்கெட் மேட்ச். ஆஸ்திரேலியாவும்  ஏதோ இன்னொரு டீமும். நம்ம ஆளு சுவாரஸ்யமா பார்க்குறார். ஹோ..ஜஸ்ட் மிஸ்..! அட அடா ..செம சான்ஸ் ....மிஸ் பண்ணிட்டான்...
"டே தம்பி.. ! உன்கூட கொஞ்சம் பேசணுமே..!"
"என்னப்பா வேணும்? மேட்ச் பாக்கறப்போ எதுக்கு டிஸ்டர்ப் பண்றே ?"
"இந்தியா தான் விளையாடலைலே... என் கூட கொஞ்சம் பேசிக்கிட்டு இரேன்..?"
"என்ன?" - கூடவே சலிப்பு , முறைப்பு.
"வா, கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம். "
"முடியாது...." (கத்துறான்.)
"தெரு வரைக்கும் தான்டா! ஒரு ரெண்டு நிமிஷம் தான்...."


வர வர வீட்டுல கூட மனுஷன் நிம்மதியா இருக்க முடியலை. அவர்க்கு கேட்கட்டும்னே கொஞ்சம் சத்தமா வார்த்தை.


"சரி வாங்க...!"
வெளியில வரும்போது ... வீட்டு கேட்டுல ஒரு காக்கா உட்கார்ந்து இருக்குது.
"இது என்ன?" ன்னு பெரியவர் கேட்குறார்.
"ஏன்? உங்களுக்கு தெரியாதோ? "
"நீ சும்மா சொல்லேன்..."
"காக்கா."
திரும்பவும், "இது என்ன? "
"ஏன்ப்பா ? பயங்கர கோபம்.....வருது. உனக்கு வேலை வெட்டி இல்லைனா கம்முன்னு உள்ளே போய் தூங்கு. இல்லை ஏதாவது ராமாயணம் திருவிளையாடல்னு படம் பாரு. இல்லை புஸ்தகம் படி. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நான் வர்றேன்."
மொபைல் எடுத்து இன்னொரு ப்ரெண்ட்க்கு போன் பண்ணி " மச்சான் படத்துக்கு போகலாமா? இதோ நான் வந்துக்கிட்டே இருக்கேன். நீயும் வந்திடு...."
"நீ உள்ளே போப்பா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..."
"டேய் ...தம்பி.... நில்லுடா.. ஒரு ரெண்டு நிமிஷம்.....டே....டே....!"
 டர்ருன்னு பைக் ஸ்டார்ட் பண்ணி , நம்ம ஆளு மேட்னி ஷோ பார்க்க கெளம்பிட்டாரு.

வயசு ஆயிட்டாலே இந்த பெருசுங்க தொல்லை தாங்க முடியலை. ...... சலிச்சுக்கிட்டே தியேட்டர் போயிட்டு , தன்னோட அபிமான நடிகர் படம் பார்க்க ஆரம்பிச்சுட்டான்...!

பெரியவர் மனசு நொந்தபடியே வீட்டுக்குள்ள திரும்பிட்டார்.
"என்னங்க...? இவனை எங்கே காணும்? "
"எங்கேயோ சினிமா பார்க்க கிளம்பிட்டான். நம்ம கிட்ட பேச எங்க நேரம் இருக்கு?"
"நீங்க எதையாவது சொல்லி இருப்பீங்க? சரி நீங்க சாப்பிடுங்க..!"
"இல்லைமா..! நான் கொஞ்சம் தூங்குறேன்... உடம்பு ஏதோ பண்ணுது.... நீ எழுப்பாதே..! "
"சரி...!"
"பத்திரமா இரு... ஜானகி..!"
"என்ன திடீர்னு...?"
"சும்மா தான் சொன்னேன்... நான் தூங்கப் போறேன்...! "
"ம்ம்..."

உள்ளே பொய், தன்னோட பழைய டைரி ஒன்னை எடுத்துப் பார்க்கிறார். ஒரு இருபது , இருபத்தஞ்சு வருஷம் முன்னாலே இருக்கும்.....அதுலே குத்து மதிப்பா... எதோ ஒரு பக்கம்..
படிச்சவர் கண்ணுலே இருந்து இரண்டு சொட்டு கண்ணீர்....
"ராமா....!"
 மனசு முழுக்க ராமா ... ராமா ன்னு ஒரே பிதற்றல்.. அப்படியே பாயை விரிச்சு படுத்திட்டார்...
================================
நம்ம ஆளு வெளியில போயிட்டு வந்த களைப்புல உள்ள வர்றார்... "அம்மா..! நான் வெளியில சாப்பிட்டு வந்திட்டேன். கொஞ்ச நேரம் தூங்குறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே"ன்னு உள்ளே போக...
"டேய் , அப்பா சாப்பிடாம படுத்திட்டார்... அவரை எழுப்பி விட்டுட்டு நீ தூங்கு."
"உனக்கு வேற வேலை இல்லை..சரி......!"

"அப்பா ......."
என்ன இது, பழைய டைரி எடுத்திக்கிட்டு , கீழே  பாய்ல படுத்து இருக்கார். தலையணை கூட வைக்கலை.
விரிந்து இருந்த அந்த டைரி பக்கம் கண்ணுல படுது... மணி மணியான எழுத்துக்கள்.

22.12.1987


                                        ===  உ   ===   

                                         ஸ்ரீராமஜெயம் 

- இன்று என் வாழ்வின் மிக முக்கியமான சந்தோசமான நாள். என் மகன் நடக்கும் சூட்சுமத்தை கற்றுக் கொண்டு விட்டான். சந்தோசமாக வீட்டு கேட் வரை 'தத்தக்கா , பித்தக்கா' என்று நடந்து வந்தான். அவனுக்கு அது ரொம்ப பிடித்து இருந்தது. அவன் நடப்பதை பார்க்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது. கீழே விழப் போனவனை வாரி அணைத்துக் கொண்டேன். கால் வலிக்குமே என்று லேசாக பிடித்து விட்டேன். அந்த சுகம் லேசாக அவன் கண் கிறங்குவதில் இருந்து எனக்குப் புரிந்தது. அப்போது வீட்டு கேட்டில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. எங்கள் சந்தோசத்தில் பங்கு கொள்ளவே வந்தது போல இருந்தது.
"ன்ன்னா ?"
இது அவனுக்கே உரிய மழலை பாஷை. எங்கள் இருவருக்கும் இந்த பாஷை தெரியும்.
இது என்ன என்று கேட்கிறான். நான் "காக்கா" என்றேன்.
ஹா.. ஹா... கிக் கிக் .... அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அவன் காக்கா என்று சொல்ல முயற்சி செய்தான் முடியவில்லை. என்  கன்னத்தில் ஒரு முத்தமிட்டான்.....
மறுபடியும், அந்த காகத்தின் பக்கம் கை நீட்டி.... "ன்ன்னா ?"
நானும் காக்கா என்றேன்... திரும்ப கிக் கிக்... முத்தம்....
இப்படியே... இருபத்தேழு தடவை நடந்தது. இருபத்தேழு முறையும் முத்தமிட்டான்.....
நான் இதுவரை பிறந்ததில் இருந்து இவ்வளவு சந்தோசமாக இருந்ததில்லை....!
எனக்கு என் பையன் போதும். ..... அவன் மட்டுமே இனி வாழ்க்கை, மூச்சு , எல்லாமே.!
எனக்கு சக்தி இருந்தால் அந்த காக்காவுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றிலிருந்து தினமும் காகத்திற்கு சாதம் வைத்த பின்பே , நான் சாப்பிடவேண்டும் என்று உறுதி மொழி எடுக்கிறேன்........
============================

ஐயோ... நம்ம அப்பாவுக்கு என் மேல , இவ்வளவு பாசமா? காலைல கேட்டுல காக்கா வந்ததைப் பார்த்திட்டு ரெண்டாம் தடவை கேட்டதுக்கே அவர் மேல எம்புட்டு கோபம் வந்துச்சு...! ச்சே ... நான்லாம் ஒரு மனுஷனா? அவர் கூட மனசு விட்டுப் பேசி.. எவ்வளவு நாளாச்சு.....?
"அப்பா.... எழுந்திருப்பா... சாப்பிட்டு தூங்கு...."
 

தியேட்டர்ல விசில் அடிச்சு, கத்தி கத்தி தொண்டை மக்கர் பண்ணியது. அவன் குரலே அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தது.

"அப்பா...!"

"அப்பா...!"
" அப்பா.........ஆஆஆஆஆஆஆ...."
 

அப்பாவின் உயிர் எப்போதோ பிரிந்து இருந்தது.........

*************************************************************
நாமளும் ஒரு ஜென்மத்து வாய்ப்பை வீணடிக்கனுமா ?அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்துவோமே......!

15 comments:

கோடியில் ஒருவன் said...

ரிஷி சார் என்ன சொல்றது...

உண்மையில படிச்சு முடிக்கும்போது என் கண்ணுல தண்ணி வந்திடுச்சு.

அப்பா அம்மாவை நான் மதிக்கிறவன் தான். ஆனா இந்த கதையில் சொல்ற மாதிரி அவங்க கிட்டே அன்பா நாலு வார்த்தை நான் பேசுறதில்லேன்னு மட்டும் தெரியுது.

ஏன்னா.... நாங்கல்லாம்.... சரி விடுங்க...

சரியான நேரத்துல மண்டையில அடிச்சி சொல்லியிருக்கீங்க. வேற என்ன சொல்றது...?

சார்... எனக்கு இந்த உலகத்துல எதுவும் வேண்டாம்... எங்க அப்பா அம்மா சந்தோஷம் மட்டுமே போதும்.

அவங்களை இழந்துட்டு நான் எதை சாதிச்சு என்ன கிழிக்கப்போறேன்....?

- கோடியில் ஒருவன்

chandirasekaran anjur said...

நல்ல கதைதான் ரிசி சார்,ஆனா இப்ப உல்ல பயங்க கடைசி நெரத்துல கூட திருந்தமாட்டாங்க ஆனா நான் அப்படி அல்ல,

RAMESH V said...

Nice story sir, But Most of us doing this mistake.

BK KANNAN said...

படித்து முடித்தவுடன் கண்ணின் வழிந்தோடிய நீர் ...........

Gnanam Sekar said...

nice story, watering in eyes

P.S.Karthikeyan Sagadevan said...

நான் அம்மா, அப்பாவை ரொம்பவும் மதிக்கிறேன். அயல்நாட்டில் இருக்கிறேன் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது போன் செய்து பேசுகிறேன்....

நாம் மனம் பல விசயங்களில் கவனம் செலுத்தலாம் but நம் பெற்றோருக்கு நாம் மட்டும்தான் உலகம்...

muruganp said...

Nice story.But one thing is sure.Who ever is fond of parents,will come up and have satisfaction in life.Also feel /remember parents much than before,when they are prosperous.

Venky said...

Dear Sir,
Its a nice story...... no it is not a story...... everywhere and each and every house it is happening. It is true.... As a son or daughter we do not know the value of our father and the same thing will repeated by our kids when we become parents. So. whatever the seeds we put it in the same we will get according to that only we will harvest....

If we put the seeds for Pagarkai.... we will get only Pagarkai..... if we put sugar cane .... we harvest the sweat sugarcane.... always we will have to remember this...
- thanks - ramani - bangalore -

Amuthan Sekar said...

Very Excellent...Thank you very much...

Muthukumar said...

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
அம்மா, அப்பா மேல் பாசம் வைத்துள்ள பிள்ளைகளில் நானும் ஒருவன். என்னிடம் பழகும் நண்பர்களிடம் பெற்றோரை மதிக்க நான் கூறும் அறிவுரை, ‘உனக்கு ஒரு குழந்தை பிறந்து அது வளரும் போது அந்த மழழையின் செயல்களில் நீ படும் சந்தோசம்தானே உன் அப்பாவும், அம்மாவும் அடைந்திருப்பார்கள், ஒரு நிமிடம் யோசித்து பார்...’. எதிலும் மாற்று கருத்து கூறும் நிறைய நண்பர்கள்கூட இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக நமது வாசகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் சிறு வேண்டுகோள், “ தயவு செய்து குழந்தைகளை 12-ம் வகுப்பு வரை விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிக்க வைக்க வேண்டாம். முடிந்தவரை உங்கள் அருகில் வைத்திருக்க முயலுங்கள். இன்று கலாச்சாரம் என்ற பெயரில் நமது உறவுமுறைகளே அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கல்வி என்பது இன்று மிக அவசியமான ஒன்று என்றாலும், சொந்தபந்தங்களின் உறவுமுறைகளும், பாசமும் வேண்டும். பெரும்பாலும் விடுதியில் தங்கி படிக்கும் மணவர்கள் விடுமுறைநாட்களில் வந்திருந்தாலும் தனிமையையே விரும்புகின்றனர் அல்லது அவர்களது நண்பர்களிடம் செல் பேசுவதையோ வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
எனது உறவினரின் நண்பர் வீட்டில், ஒருவர் புற்றுநோயால் அவதிப்பட்டு, மருத்துவர் ஒரு மாதம் இருப்பதே கடினம் என்று கூறியும் அவரது மகன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட, 10 நாளில் அவனது தந்தை இறந்துவிட்டார். அவரது ஈமக்கிரியை செய்ய மகனால் வர முடியாதது அங்கு வந்திருந்தவர்களிடையே மிகுந்த வருத்ததை அளித்தது. இந்த மாதிரியான நிகழ்வுகளால் உறவுமுறைகளில் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்”...
நன்றி...
அன்புடன்,
முத்துக்குமார். எஸ்

Rishi said...

கருத்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. முத்து சார்! அருமையான கருத்தை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...! வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமா? இங்கே இருக்கும் சென்னையில் வேலை பார்ப்பவர்கள் கூட தன் வீட்டில் இறப்பு நடந்த பிறகு , மதியம் வாக்கில் தான் வந்து சேருகின்றனர் கிராமங்களில். அடித்துப் பிடித்து !?. இல்லாவிட்டால் ஊர் அசிங்கப் படுத்தி விடுமாம். இந்த அளவுக்காவது பாசம் இருக்குதே என்று தலையில் அடிக்க வேண்டி வருகிறது. இத்தனைக்கும் திடீர் மரணம் இல்லை. அவர்கள் காத்து இருந்து, காத்து இருந்து நிகழவில்லையே என்று சலித்த பிறகும் , நடக்காத மரணம்....! தாயாவது , தகப்பனாவது.....! இவர்கள் எல்லாம் என்ன சாதிக்கப் போகிறார்களோ...?
அந்த உறவினரின் நண்பர் , எந்த தைரியத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறார்? ஒருவேளை தன் குழந்தைகளுக்கு ஒரு உதாரண தந்தையாக இருக்க நினைத்து சம்பாதிக்கிறாரோ ?

சமீபத்தில் ஒரு கோவை பக்கம் இருக்கிற builders - prospect ஒன்று பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கூடிய apartments . காலனி வசதி. புல் செக்யூரிட்டி. Most attractive feature என்ன தெரியுமா? இறந்த பிறகு, சகல மரியாதைகளுடன் Funeral சடங்கு செய்து வைக்கிறார்களாம்...... நம்ம ஊர்ல தான் இருக்கிறோம். வயதான , வசதியான ஆட்கள் நலனுக்காக. Advt கொடுத்த ரெண்டு நாளில் எல்லாம் புக் ஆகிடுச்சு. மாடர்ன் முதியோர் இல்லம் போல, இந்த கான்செப்ட். பாம்பே, பெங்களூர் எல்லாம் இது எப்போவோ வந்து இருக்கும் போல...!
நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம், CBSE English medium எல்லாம் ஓகே... நம்ம சக்திக்கு மீறி, நம்ம குழந்தைங்க நல்லா படிக்கணும்னு நினைச்சு படிக்க வைச்சு , கடைசியில அவன் அமேரிக்கா போறேன், ஐரோப்பா போறேன்னு கிளம்பிடுவான். கூட வாழ்க்கைத் துணை இருக்கிற வரை , பேச்சுக்காவது ஆளு இருக்கும்...அதுக்கு அப்புறம்? எத்தனை நாள் அமெரிக்காவில இருக்கிறது? ரெண்டு மாசம், மூணு மாசம் ஓகே.... அதுக்கு அப்புறம், சொர்க்கத்துக்கு போகும் வரைக்கும், நம்ம ஊர் தான் , என்னைக்கும் சொர்க்கம்....
அட போடா... வேலை , வெங்காயம்....! எனக்கு எங்க அப்பா ,அம்மா கிட்ட போகணும்னு லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை கூட உதறித் தள்ளி, பிளைக்கைத் தெரியாத மனுஷன் பட்டம் வாங்கும் ஆளும் இருக்கின்றனர்........
நீங்க சொன்ன மாதிரி, சின்ன வயசுலேயே பாசம், உறவுகள் மனசுல பதியலைனா, பின்னால இந்த கஷ்டம் எல்லாம் வரத்தானே செய்யும்...!
பெரியவர் பத்து நாள் கழிச்சு இல்லை, அந்த புள்ளை போன அன்னைக்கே செத்து இருந்திருப்பார்.... மனசு அளவுல...!

THEIVAM said...

ஆமாம் ஸார் எனக்கு தெரியும் ஸார் அப்பா எவ்வளவு பெரிய விசயம் என்று, என் வாழ்வில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு ஸார் அதை உங்ககிட்ட சொல்லனும் போல இருக்கு அப்படி சொன்னா ஒரு வேளை நான் வாழ்க்கையில் செஞ்ச தப்புக்கு பரிகாரம் கிடைக்குமான்னு தெரியல,
என்னோட அப்பா பத்தி சொல்லனுமுன்னா என்னொட ஹிரோ அவர்தான், பெற்றோர் அமைவதெல்லாம் நம் கையில் கிடையாது முன் ஜென்ம பலன் அப்படினு சொல்லுவாங்க, அப்படி பார்த்தா நான் முன் ஜென்மத்துல நான் ஒரு பாவம் கூட செய்யலனு அர்த்தம், தசரதர் தன்னோட 4 மகன்கள் மேலயும் எவ்வளவு பாசம் வச்சு இருந்தாரோ அதை எல்லாம் சேர்த்து அதை விட பல மடங்கு அதிகமா சேர்த்து என் மேல வச்சு இருந்தார் அவருக்கு நான் ஒரே பையன் பொண்ணு எல்லாம் நான்தான், என் திருமணத்தை பற்றி அடிக்கடி பேசுவார் எங்கள் உறவினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி உடை எடுத்து கொடுத்து திருமணத்தன்று உடுத்த சொல்ல வேண்டும், பெரிய அளவில் ஊரு மெச்ச செய்ய வேண்டும் இப்படி இன்னும் பல கனவுகள், என்னுடைய 19 வயதில் என் நண்பனின் சகோதரியிடம் மனதை பறி கொடுத்தேன், என் தந்தைக்கு தெரியாமல் வெளியூர் வந்து திருமணம் செய்து கொண்டேன்,திருமணம் ஆன அதே வாரம் என்னை தேடி வந்து என்னை ஒன்றும் சொல்லாமல் எப்போதும் போல பேசினார் (பிறகு ஒரு நாளில் என் தந்தை கூறியதாக என் தாய் கூறினார் "அவன் சின்ன பையன் அவன் காதலிக்கிறான்னு எனக்கு முன்னமே தெரியும், அவனுக்கு கல்யாண வயசு வந்த பிறகு அந்த பொண்ணு வீட்டுல பேசி முடிக்கலாமுன்னு இருந்தேன், என்னை அவனுக்கு புரிஞ்சுக்கிற வயசு இல்ல, அவன் கேட்டு இது வரை எதை முடியாதுன்னு சொல்லி இருக்கேன் அவசர பட்டுட்டான், இப்ப எதாவது சொன்னா அவன் வருத்த படுவான், அவனை எதுவும் சொல்லாமல் அவன் விருப்பப்படி வாழ விடுவோம், என் ஆசைகள் நிறைவேறலைனாலும் பரவாயில்லை, என்ன என் பையன் கல்யாணத்தை பார்க்க கூட முடியலை, எனக்கு அவன் பாத பூஜை செய்யறப்போ அவனோட விரல்கள் என் பாதத்தில் படும் அந்த உணர்வ அனுபவிக்க முடியல,என் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடம் விழுந்துருச்சுன்னு சொல்லி இருக்கார்) எங்களை ஒன்றும் சொல்லாமல் திரும்பி சென்றார், அப்போது கூட நான் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவில்லை, அதற்கு பிறகு எங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். மாசம் ஆனால் எங்களுக்கு மளிகை முதற்கொண்டு அனைத்தும் வாங்கி கொடுத்தார், ஒரு முறை என் திருமண போட்டோவை பார்த்து கண் கலங்கி விட்டார், அப்போது என்ன நினைத்தாரோ எனக்கு தெரியவில்லை, ஆனால் என் தந்தை கண்ணீர் விட்டதை அப்போதான் முதல் தடவையா பார்த்தேன், சரியாக திருமணம் முடிந்து 7 மாதங்கள், என் மனைவி 5 மாதங்கள் என் வாரிசை சுமந்து கொண்டிருந்த அந்த தருண்த்தில் என்னையே நினைத்து தன் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி கொண்டார் (ஹார்ட் அட்டாக்) அது ஒன்றும் நான் கொடுத்ததை விட அதிகம் வலித்து இருக்காது, என் மனைவி கர்ப்பமாக இருந்த காரணத்தால் உறவினர்கள் என்னை கொள்ளி போட விடவில்லை, என் பெரியம்மா மகன்தான் கொள்ளி போட்டார். நான் செய்த பாவத்திற்க்கு எனக்கு என் தந்தை தண்டனை தராவிட்டாலும் கடவுள் என்னை என் தந்தைக்கு நான் மட்டுமே செய்ய முடிந்த காரியத்தை செய்ய விடாமல் என்னை பாவியாக்கி விட்டார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் என்னையே நம்பிய என் தந்தைக்கு நான் செய்த துரோகம் என்னை முள்ளாகி குத்திக் கொண்டே இருக்கிறது. இனி நான் செய்த பாவத்திற்கு என்ன செய்தாலும் ஈடாகாது ஸார். அப்பாங்கிறது பெரிய விசயம் ஸார் அது அவர் இருக்கும் போது தெரியாது ஸார்

Dayaa Professional Services said...

Really nice sir. We can feel but no words to say.

regards,

hari dhayalan
bangalore-76

இராஜராஜேஸ்வரி said...

ஒரு ஜென்மத்து வாய்ப்பு !!

அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்துவோமே......!

படிப்பினை தரும் பகிர்வு ...

தேன்மொழி விஜயராஜ் said...

படித்து முடிக்கும்போது கண்களில் கண்ணீர். காதலித்து மணந்ததால் இந்த ஜென்மத்து வாய்ப்பை இழந்த பாவி ஆகிவிட்டேன். கடவுள் மன்னித்து என் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் மனம் மாற இறைவனை வேண்டுகிறேன்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com