Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

என் பெயர் செந்தாமரைக் கண்ணன்!

| Oct 30, 2012
இதோ, இன்னொரு சாமான்யன் சரித்திரம் படைத்த கதை! இன்னொரு அபூர்வ முத்து. தினமலர் வாரமலர் இதழில் " உழைப்பால் உயர்ந்தவர்" என்ற தலைப்பில் ஒரு தொடர் வந்து கொண்டு இருக்கிறது. இன்றைய படிக்கும் இளைய தலைமுறைக்கும், வாழ்வில் எதிர் நீச்சல் போடும் அனைவருக்கும் , மிகுந்த உத்வேகம் அளிக்கும் இந்த கட்டுரையை நம் வாசகர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இதில் ஒரு ஆச்சர்யம் என்ன வென்றால், இதைப் போன்ற எல்லா தன்னம்பிக்கை கட்டுரைகளையும் படிக்கும்போது, அங்கங்கே மனம் கனத்து , கண்களில் நீர் வருவதுண்டு. ஜெயித்த ஒவ்வொருவரும், நாம் பட்ட எல்லாக் கஷ்டங்களையும் பட்டு இருக்கிறார்கள். சில சம்பவங்கள் அப்படியே நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை ரீவைண்ட் செய்து பார்ப்பது போல இருப்பதும் உண்டு. ஆனால், விடா முயற்சியால் நம்பிக்கையுடன் அவர்கள் போராடி , உயரம் தொட்டு விடுகின்றனர். நாம் மட்டும் கொஞ்சம் சோர்ந்து போய் விடுகிறோம். இன்னும் ஒரே ஒரு எட்டு, Jump,
நீளம் தாண்டுறவங்க, ஓடி வந்து அந்த கடைசி தப்படி மட்டும் கிடைக்காமல் , திரும்பி விடுபவர்கள் எத்தனயோ பேர்.

அப்படி சோர்வடையாமல், புத்துணர்வு கிடைக்க இதைப் போன்ற சரித்திர நாயகர்களின் கதை, நம் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்க வேண்டும். ஒருவேளை நம்மால் முடியவே இல்லை எனினும், நம் குழந்தைகள் அந்த நிலையை அடைய நாம் உறுதுணையாக நிற்கவேண்டும். ஒரு வளமான சமுதாயம் படைக்க , நம் பங்களிப்பு நிச்சயம் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதையை , தெரிந்து கொள்ளுங்கள்.

இதைபோன்று லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அந்த லட்சத்தில் ஒருவருக்கும், மீதி இருக்கும் லட்சம் பேருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று , நாம் உணர முற்படுவோம்..!

=====================================================

என் வாழ்க்கை நிம்மதியாக உள்ளது. நான் திருப்தியாக இருக்கிறேன். கடவுள் எனக்கு நிறையவே கருணை காட்டுகிறார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்று, பேட்டியை ஆரம்பிக்கிறார், வருமான வரித்துறையில், தமிழகத்தின் வருமானவரி முதன்மை ஆணையர், எஸ்.செந்தாமரைக் கண்ணன்.

தன்னம்பிக்கை, விடா முயற்சி, நேர்மை, புத்திசாலித்தனம், கடின உழைப்பு இவை மட்டும் தான், வாழ்க்கையில் வெற்றி பெற இவரிடமிருந்த ஆயுதங்கள்.
பணபலம், அரசியல் செல்வாக்கு, சிபாரிசு இவை ஏதுமின்றி, சொந்தக் காலில் நின்று, வெற்றி பெற்ற, "அக்மார்க்' சாதனையாளர். "இந்து' ஆங்கில நாளிதழை, தன் இருபதாவது வயதில் தான், முதன் முதலில் பார்த்தவர்.
பணக்கார குடும்பத்தில் பிறந்த வர்கள், நிறைய செல் வாக்கு உள்ளவர்கள் தான், ஐ.ஏ.எஸ்., போன்ற அரசு நிர்வாக அதிகாரிகளாக முடியும் என, பலரும் நினைக்கின்றனர். ஆனால், மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தாலும், அரசு பள்ளியில் படித்தாலும், சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் செந்தாமரைக் கண்ணன். இவரது அனுபவங்கள், இளைஞர்களுக்கு உற்சாக, "டானிக்'காக இருக்கும்.


இவரது வெற்றிக்கதையை அவரே கூறுகிறார்:


வேலூர் மாவட்டத்தில், கல்லூர் ராஜ பாளையம் என்ற, மிகவும் பின் தங்கிய கிராமம் தான் எங்கள் ஊர். விவசாயம் தான் தொழில். எங்கள் கிராமத்தில், மளிகைக் கடை கூட கிடையாது. தீப்பெட்டி வாங்குவதென்றால் கூட, 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். கோவிலிலேயே, அரசு தெருப் பள்ளிக்கூடம் நடைபெறும். ஸ்லேட், நோட், புத்தகம் எல்லாம் கிடையாது. மணலிலே எழுதுவோம். ஒன்று, இரண்டு, மூன்று வகுப்புகள்; ஆனால், ஒரே வாத்தியார். அவர் வந்தால் ஸ்கூல்; வராவிட்டால், "லீவு!'
வாத்தியார், நாட்டு மருந்து எல்லாம் செய்வார். அவர் மருந்து தயாரிக்க, மாணவர்கள் எல்லாரும், ஆளுக்கு ஒரு கூடை சாணி, வறட்டி எல்லாம் கொண்டு வந்து தர வேண்டும். இருப்பது ஒரே கூடம். வாத்தியாரே, எங்களை மூன்று வகுப்பாக பிரித்து உட்கார வைப்பார். பள்ளிக்கு, கட்டணம் எதுவும் இல்லை. இலவசம்!


நான்காம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, தேவி செட்டிக் குப்பம் என்ற இடத்தில் இருந்த, மற்றொரு அரசு பள்ளியில் படித்தேன். அந்த பள்ளிக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து, ஒரு சின்ன கட்டடமே கட்டினோம். இப்போது சொன்னால், நம்புவது கூட கஷ்டம்.
செங்கல் சூளை ஏற்படுத்தி, ஆசிரியர்கள் செங்கலை தயாரிப்பர். மாணவர்கள், பக்கத்தில் இருந்த மரங்களை வெட்டி, செங்கல் சூளை எரிய, விறகு கொண்டு வந்து கொடுப்போம். நான்கு பக்கம் சுவர், மேலே ஓலை கூரை என நான்கு அறைகள். ஆசிரியர்கள், முண்டாசு கட்டி, வேலை செய்தனர். வித்தியாசமான அனுபவம்.


நாங்கள் படிக்கும் கட்டடத்தை, நாங்களே உருவாக்கினோம். உழைப்பின் உயர்வை நாங்கள் கத்துக்கிட்டோம். பாடத்தில் இல்லை என்றாலும், தமிழ் வாத்தியார் திருப்புகழ் சொல்லிக் கொடுத்தார்.
அகரம் என்ற இடத்திலே உள்ள அரசு பள்ளியில், எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளை படித்தேன். ஒடுகத்தூர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில், 10, 11 இரு வகுப்புகளும் படித்தேன். வீட்டிலிருந்து, 6 கி.மீ., தூரத்தில் பள்ளி. முதல் நான்கு மாதங்களுக்கு, நடந்தே சென்றேன். பிறகு, அப்பா, 100 ரூபாய்க்கு வாங்கி தந்த பழைய சைக்கிளில், பள்ளிக்கு சென்றேன்.
எங்க அப்பாவுக்கு எட்டு பிள்ளைகள். என்னையும் சேர்த்து ஆறு பையன்கள்; இரண்டு பெண்கள். கஷ்டமான ஜீவனம் தான். அப்பா கே.சீத்தாராமபிள்ளை, எங்கள் கிராமத்தில், கர்ணமாக இருந்தார். பொதுமக்கள் கேட்கும் எல்லா உதவிகளையும், மகிழ்ச்சியாக செய்து கொடுப்பார். யாரிடமும், எதற்கும் ஒரு பைசா வாங்கியதில்லை. ஊரில், நேர்மைக்கு அவரை உதாரணமாக சொல்வர். அது, எங்களுக்கு பெருமையாக இருக்கும்.


ரொம்ப எளிமையான வாழ்க்கை தான். அமாவாசை, தீபாவளி பண்டிகை வந்தால் தான், எங்க அம்மா சரோஜாம்மாள், தோசை சுட்டு தருவார். மற்ற எல்லா நாட்களிலும் பழைய சாதம் தான்!
பள்ளியில் படிக்கும் போதே, தமிழ் மேல் அதிக ஆர்வம் இருந்தது. பாரதியார், பாரதிதாசன், மு.வரதரா
னார், காண்டேகர் போன்ற மேதை களின் படைப்புகளை, பள்ளி நூலகத்திலேயே படித்து, நல்ல விஷயங்களை குறிப்புகள் எடுத்து வைப்பேன்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தேன். அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனாலும், எட்டு பிள்ளைகள் இருக்கும் வீட்டில், அவரால் என்னை கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை. அவருக்கு நான் உதவியாக வேலை செய்யலாம் என்ற எண்ணம். அவரை தப்பு சொல்ல முடியாது; அவர் நிலைமை அப்படி!


எங்க கிராமத்திலிருந்து, 20 கி.மீ., தூரத்தில் குடியாத்தம். அங்கே, எங்க மாமா இருந்தார். "மாமா வீட்டில் தங்கி, ஒரு வருடம் பி.யு.சி., படிக்கிறேன் அப்பா...' என்று கேட்டேன். என் ஆர்வத்தை பார்த்து அவருக்கு, மறுக்க இஷ்டமில்லை.


"ஏம்பா... என் பிள்ளை உங்களோட தங்கி, ஒரு வருடம் காலேஜில் படிக்கணும்ன்னு ஆசைப்படறான். ஒரு வருடம் அவனுக்கு சாப்பாடு போட்டு, கூட வைச்சுப்பயா?' என, மாமாவிடம் கேட்டார்.
"சந்தோஷமாக செய்கிறேன்... அவன் இங்கே தங்கி படிக்கட்டும்...' என்று சொன்னார் மாமா. அப்பா அரிசி மூட்டை அனுப்பினார்.
அந்த ஊரில் இருந்த ஒரே கல்லூரியான, திருமகள் மில்ஸ் கல்லூரியில், பி.யு.சி., சேர்ந்தேன். அங்கு படித்து, முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற்ற, ஒரே மாணவன் என்ற பெருமை எனக்கு கிடைத்தது; எங்கள் பேராசிரியருக்கு ரொம்ப மகிழ்ச்சி.


பி.யு.சி.,யை தொடர்ந்து, பட்டப்படிப்பு படிக்க, வேலூருக்குத் தான் செல்ல வேண்டும். அங்கு பிரபலமான, ஊரிஸ் கல்லூரியில், பி.எஸ்சி., கணிதம் வகுப்பில் சேர விண்ணப்பித்தேன். எனக்கு கணக்கு நன்றாக வரும் என்ற காரணத்தால் மட்டுமல்ல; அதைப் படித்தால், ரசாயனம், பவுதீகம் மாதிரி, "லேபரட்டரி கிளாஸ்' எல்லாம் இருக்காது. லேபிற்கு அவசியமில்லை. "லேபரட்டரி' வகுப்புகளுக்கு என்று, தனியாக கட்டணமும் இருக்காது. மூன்று மாதம் ஒரு முறை, கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணமும், குறைவாக இருக்கும் என்பது தான் முக்கிய காரணம்.


வேலூரில் உறவு, தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. எனவே, என் நண்பர் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து, ஒரு அறையை வாடகைக்கு எடுத்தேன். காலையிலும், இரவிலும் சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். புளியந்தளிர், வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு எல்லாம் சேர்த்து அரைத்து, ஒரு பொடி போல செய்வோம். சப்பாத்திக்கு, அது தான், "சைடு-டிஷ்!'
கல்லூரிக்கு பக்கத்திலேயே, "லட்சுமி கபே' என்ற ஓட்டல் ஒன்று இருந்தது. அளவு சாப்பாடு, மாதத்திற்கு, 30 டிக்கெட் வாங்கினால், விலையில் சலுகை உண்டு. ராமகிருஷ்ணனும், நானும் ஆளுக்கு, 30 டிக்கெட் வாங்குவோம். அளவு சாப்பாடு என்பதால், அரிசி சாதம் அளவாகத் தான் கொடுப்பர். வயிறு நிரம்ப, கறி, பொறியல் மட்டும், மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிடுவோம். மாணவர்கள் என்பதால், பரிமாறுபவர்களும், அன்பாக கவனிப்பர்.


ஓரளவுக்கு வசதி வந்தும் கூட, என் சாப்பாட்டில் சாதம் குறைவாகவும், காய்கறி அதிகமாகவும் இருக்கும். அப்படி பழக்கமாகி விட்டது. நம்முடைய சக்திக்குள்ளே வாழ வேண்டும் என்ற கட்டாயத்தை, எனக்கு நானே ஏற்படுத்தி வாழ்ந்தேன்.


பி.எஸ்சி., வெற்றிகரமாக முதல் வகுப்பில் முடித்துவிட்டு, ஒரு நண்பனின் ஆலோசனையில், சென்னை பச்சையப்பா கல்லூரியில், எம்.எஸ்சி., கணிதம் சேருவதற்கு விண்ணப்பித்தேன்.
என், 20வது வயதில் தான், சென்னை நகருக்கு முதல் முறையாக வந்தேன். எல்லாமே பிரமிப்பாக இருந்தது. பச்சையப்பா கல்லூரியில் பெரிய விடுதி இருந்தாலும், சாப்பாடு, அறை வாடகை எல்லாவற்றையும் நான் எப்படி சமாளிக்க முடியும்?


எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு அருகே, ஒரு விடுதி இருப்பதும், எஸ்.சி., - எஸ்.டி., அல்லாத ஒரு சில ஏழை மாணவர்களுக்கு அங்கு தங்க அனுமதி கொடுக்கின்றனர் என்றும், நண்பர் மூலம் அறிந்து, அதற்கு விண்ணப் பித்தேன்; இடம் கிடைத்தது. எம்.எஸ்சி., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு, சாப்பாடு, தங்க அறை இரண்டும், இலவசம் என்று ஆனது; எனக்கு பெரிய நிம்மதி.
மற்றொரு சலுகையும், எதிர்பாராமல் கிடைத் தது. புரசைவாக்கம் விடுதியிலிருந்து பச்சையப்பா கல்லூரிக்கு சென்று வர ஆகும், பஸ் கட்டணத்தை, கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது. மூன்று மாதத்திற்கு, 180 ரூபாய் கிடைக்கும். அந்த, 180 ரூபாயை மிச்சம் பிடிக்க, காலையிலும், மாலையிலும் கல்லூரிக்கு நடந்தே செல்வேன். 30 நிமிடம் நடக்க வேண்டும். அப்போது அது சிரமமாக இல்லை. 

கல்லூரி தரும், 180 ரூபாய் பஸ் கட்டணத்தை மிச்சம் பிடிக்க, கல்லூரிக்கு நடந்தே சென்று வந்தேன். அந்த பணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணம், 120 ரூபாய் போக, மீதி, 60 ரூபாயில், அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்வேன்.

தினமும் விடுதிக்கு, "இந்து' ஆங்கில பத்திரிகை வரும். அப்போது தான், என் வாழ்க்கையில், "தி இந்து' பத்திரிகையை முதன் முதலில் பார்த்தேன். அதுவரை, ஆங்கில பத்திரிகையை கண்ணால் கூட பார்த்ததில்லை.
விடுதியில் தங்கிய போது, அங்கு தங்கியிருந்த ராஜேந்திரன் என்ற நண்பரின் அறிமுகம் கிடைத்தது. எம்.ஏ., முடித்து சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர், ஐ.பி.எஸ்.,க்கு தேர்வு ஆகி, முசவுரிக்கு பயிற்சிக்காக செல்ல வேண்டும்.
அவரிடமிருந்து தான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுவது பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். அவர், பின்னாளில், டி.ஜி.பி.,யாக சிறப்பாக பணி செய்து, தமிழகத்தில் பணி நிறைவு பெற்றார்.
பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ரொம்ப செல்வாக்கு உள்ளவர்கள் தான், ஐ.ஏ.எஸ்., மாதிரி தேர்வுகளை எழுத முடியும் என்று, பல கிராமத்து இளைஞர்கள் நினைப்பது போல நானும், அப்போது வரை தவறாக நினைத்தேன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, எளிமையாக பழகும், ராஜேந்திரனை பார்த்து, பேசி, பழகிய பின் தான், ஐ.ஏ.எஸ்., கனவு சாத்தியமில்லாத விஷயம் இல்லை என்று உணர்ந்தேன்.


எம்.எஸ்சி., முடித்த பின், (பத்து மார்க்கில், முதல் வகுப்பை தவற விட்டேன்) தொடர்ந்து, அந்த விடுதியிலேயே தங்கினால், நானும் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராக முடியும் என்பது புரிந்தது. என் கிராமத்திற்கு திரும்பி சென்றுவிட்டால், அங்கு உட்கார்ந்து படிக்க முடியாது. சட்டக் கல்லூரியில் சேர்ந்தால், மூன்று ஆண்டுகள் படித்து பட்டமும் பெறலாம், இடையில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் போட்டி தேர்வில், ஐ.ஏ.எஸ்., தேர்வும் எழுத லாம். விடுதியில் இடம் கிடைத்தது. ஆனால், சட்டக் கல்லூரி அனுமதிக் கான, எலெக்ஷன் எல்லாம் காலதாமதமானதால், தொடர்ந்து விடுதியில் இருக்க முடியவில்லை.


வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு, அப்போது ஒரு வேலைவாய்ப்பு திட்டம் அமலில் இருந்தது. கிராமத்தில் பணி, மாத சம்பளம், 45 ரூபாய். அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி. சென்னையில் இருக்க முடியாததால், விரிஞ்சிபுரம் என்ற இடத்தில் பணியை ஆரம்பித்தேன். எங்கள் கிராமத்திலிருந்து, 15 கி.மீ., என்பதால், சைக்கிளில் சென்று வந்தேன்.
பிறகு, 1975 - 1976 ஆகிய இரு ஆண்டுகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வு - ஐ.ஏ.எஸ்., தேர்வுகள் எழுதினேன்; தேர்வு பெறவில்லை. 1975ம் ஆண்டு, அரசு பணியில் உதவியாளர்கள் பணிக்கான தேர்வு எழுதினேன்; தேர்வானேன். டில்லியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சரகத்தில், உதவியாளர் பணி கிடைத்தது; டில்லிக்கு போய் வேலையில் சேர்ந்தேன்.
டில்லிக்கு சென்றதால், சில நல்ல விஷயங்கள் நடந்தன. முதலாவதாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்து நல்ல தெளிவு கிடைத்தது.


ஐ.ஏ.எஸ்., எழுதி தேர்வு பெற்றவர்கள், ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் பெற்ற மதிப்பெண் களையும் தொகுத்து, சிறு புத்தகமாக வெளி யிடுகின்றனர். 60 மார்க், மொத்தத்தில் போதுமானது என்று புரிந்தது.
மேலும், ஐ.ஏ.எஸ்., பரீட்சையில் தேர்வு பெற்று, நேர்முகத் தேர்வுக்கு சென்று, வெளியே வருபவர்களை சந்தித்து, "இன்டர்வியூ எப்படி இருந்தது; என்ன கேள்வி எல்லாம் கேட்டனர்?' என்று கேட்டு, நேரடித் தகவல்களை அறிந்தேன்.


இவையெல்லாம் எனக்கு நிறைய தன்னம் பிக்கையை கொடுத்தன. டில்லியில், அலுவலக நேரம் போக, மீதி நேரம் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, என்னை தயார் செய்வதி லேயே செலவழித்தேன்.
தமிழ் இலக்கியம், கணிதம், இந்திய வரலாறு, ஆங்கிலம், பொது அறிவு ஆகிய ஐந்து சப்ஜெக்ட்களிலும், 1977ல், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சிப் பெற்றேன்.


தேர்வில், பாசானவர்களில் தேவையான நபர்களை, நேர்முக தேர்வுக்கு அழைக்கின்றனர். எழுத்துத் தேர்வின் மார்க்குகள் மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மார்க்குகள் இரண்டையும் கூட்டி, மிகவும் அதிகமாக மார்க் வாங்கியவரிலிருந்து ஆரம்பித்து, லிஸ்ட் போடுகின்றனர்.
சுமார், 800 பேர்களில் எனக்கு, 234வது ராங்க் கிடைத்தது. சிறந்த மார்க் வாங்கியவரிடமிருந்து, ஆரம்பித்து, அவரவர் எந்த பணியில் சேர விரும்புகின்றனர் என்று கேட்கப்படுகிறது. பொதுவாக முதல் சாய்ஸ், ஐ.ஏ.எஸ்., அடுத்தது, ஐ.எப்.எஸ்., அடுத்து, ஐ.பி.எஸ்., அடுத்து, ஐ.ஆர்.எஸ்., மற்றும் பல சர்வீஸ்கள்.


ஆனால், இதில் விதிவிலக்கும் உண்டு. பெஸ்ட் ராங்க் பெறுபவர்களில் சிலர், "எனக்கு போலீஸ்துறை வேண்டும்; ஐ.ஆர்.எஸ்., வேண்டும்' என்று கேட்பதும் உண்டு. நான் பெற்ற ராங்க்கிற்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் இருந்த காலி இடங்கள் எல்லாம் முடிந்து விட்டன. எனக்கு, ஐ.ஆர்.எஸ்., கிடைத்தது.


எனக்கு, நேர்முக தேர்வு, 30 நிமிடங்கள் நடந்தது. மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அதிகார தோரணை ஏதுமின்றி, அன்பாக பேசினர். கணிதம், தமிழ் இலக்கியம் பற்றி சில கேள்விகள் கேட்டனர்; சரியாக பதில் சொன்னேன்.
விரிஞ்சிபுரம் என்ற ஊரில், நான் ஆசிரியராக பணி ஆற்றியதை அறிந்த ஒரு பேராசிரியர், விரிஞ்சிபுரம் கோவிலின் மூலவரின் பெயர், அம்மனின் பெயர் என்ன என்று கேட்டார். மூலவர் பெயர் மார்க்கபந்து என்று சரியாக கூறினேன். ஆனால், அம்மனின் பெயர் ஞாபகம் வரவில்லை. "சாரி, தெரியவில்லை...' என்றேன். அவர் சரியான பெயரை கூறினார்.


நம் வாழ்க்கையின் போக்கையே நிர்ணயிக்க போகும் அந்த இன்டர்வியூவிற்கு, பலர் முழு சூட்- கோட்டில் வந்தனர். என்னிடம், சூட்-கோட் கிடையாது. நண்பர் ஒருவரிடமும் டை இரவல் வாங்கி கட்டிக் கொண்டு, பேன்ட், முழுக்கை சட்டை, ஷூவுடன் சென்றேன். பல மாதங்களாக, நிறைய படித்து, என்னை தயார் செய்து இருந்தேன்.
பின், ஏப்ரல் 14, 1978ல், தமிழ் வருடப்பிறப்பு அன்று, ஐ.ஏ.எஸ்., தேர்வின் இறுதி ரிசல்ட் வெளியானது.
ஐ.ஆர்.எஸ்.,க்கு நான் தேர்வானேன் என்பதை, நான் தகவல் ஒலிபரப்பு அமைச்சரகத்தில் பணிபுரிந்ததால், பழக்கமான ஒரு அதிகாரி மூலம், ஒரு நாள் முன்பாகவே அறிந்து கொண்டேன்.


"எஸ்.செந்தாமரைக் கண்ணன் ஐ.ஆர்.எஸ்.,' இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் லிஸ்டில் என் பெயரைக் பார்த்ததும், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன். உடனே, அங்கிருந்து இரண்டு தந்திகள் கொடுத்தேன் - முதலாவது என் தாயாருக்கு; இரண்டாவது, என் நெருங்கிய நண்பர் மூர்த்திக்கு.
ஐ.ஆர்.எஸ்., தேர்வு ஆனதும், பயிற்சிக்கு வரும்படி உத்தரவு வந்தது. மீண்டும், ஒரு முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத விரும்பினேன். ஆனால், முடியவில்லை. அந்த பேட்சில், இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் அதிகாரிகள், 120 பேர் இருந்தோம். நாக்பூரில் ஒரு ஆண்டு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டது.

(To be continued........)

இதன் தொடர்ச்சி வரும் வாரம் தினமலர் வாரமலர் இதழில் வரவிருக்கிறது. உங்களைப் போலவே, நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும், இளைய தலைமுறையினருக்கும் இந்த கட்டுரையை படிக்க பரிந்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்..! மீண்டும் சந்திப்போம்!

வெற்றி நமதே! 

4 comments:

Muthukumar said...

”முயற்சி திருவினை ஆக்கும்” என்பதற்கு திரு. செந்தாமரைக்கண்ணன் அவர்களும் ஓர் உதாரணம்...

NAHARANI said...

Rishi sir thanks for more informations on IAS IPS exams..Th. Senthamarai sir, can we take as another light?

கோடியில் ஒருவன் said...

சாதனையாளரின் சரித்திரம் ஒன்றை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே!

"என் பேர் கோடியில் ஒருவன்".... அப்படின்னு சொல்ற காலம் வரும்.

அது வரை பொறு மனமே!

- கோடியில் ஒருவன்

Anonymous said...

I greatly appreciate all the info I've read here. I will spread the word about your blog to other people. Cheers.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com