Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

என் பெயர் செந்தாமரைக் கண்ணன்!

| Oct 30, 2012
இதோ, இன்னொரு சாமான்யன் சரித்திரம் படைத்த கதை! இன்னொரு அபூர்வ முத்து. தினமலர் வாரமலர் இதழில் " உழைப்பால் உயர்ந்தவர்" என்ற தலைப்பில் ஒரு தொடர் வந்து கொண்டு இருக்கிறது. இன்றைய படிக்கும் இளைய தலைமுறைக்கும், வாழ்வில் எதிர் நீச்சல் போடும் அனைவருக்கும் , மிகுந்த உத்வேகம் அளிக்கும் இந்த கட்டுரையை நம் வாசகர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இதில் ஒரு ஆச்சர்யம் என்ன வென்றால், இதைப் போன்ற எல்லா தன்னம்பிக்கை கட்டுரைகளையும் படிக்கும்போது, அங்கங்கே மனம் கனத்து , கண்களில் நீர் வருவதுண்டு. ஜெயித்த ஒவ்வொருவரும், நாம் பட்ட எல்லாக் கஷ்டங்களையும் பட்டு இருக்கிறார்கள். சில சம்பவங்கள் அப்படியே நம் வாழ்வில் நடந்த சம்பவங்களை ரீவைண்ட் செய்து பார்ப்பது போல இருப்பதும் உண்டு. ஆனால், விடா முயற்சியால் நம்பிக்கையுடன் அவர்கள் போராடி , உயரம் தொட்டு விடுகின்றனர். நாம் மட்டும் கொஞ்சம் சோர்ந்து போய் விடுகிறோம். இன்னும் ஒரே ஒரு எட்டு, Jump,
நீளம் தாண்டுறவங்க, ஓடி வந்து அந்த கடைசி தப்படி மட்டும் கிடைக்காமல் , திரும்பி விடுபவர்கள் எத்தனயோ பேர்.

அப்படி சோர்வடையாமல், புத்துணர்வு கிடைக்க இதைப் போன்ற சரித்திர நாயகர்களின் கதை, நம் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்க வேண்டும். ஒருவேளை நம்மால் முடியவே இல்லை எனினும், நம் குழந்தைகள் அந்த நிலையை அடைய நாம் உறுதுணையாக நிற்கவேண்டும். ஒரு வளமான சமுதாயம் படைக்க , நம் பங்களிப்பு நிச்சயம் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதையை , தெரிந்து கொள்ளுங்கள்.

இதைபோன்று லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அந்த லட்சத்தில் ஒருவருக்கும், மீதி இருக்கும் லட்சம் பேருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று , நாம் உணர முற்படுவோம்..!

=====================================================

என் வாழ்க்கை நிம்மதியாக உள்ளது. நான் திருப்தியாக இருக்கிறேன். கடவுள் எனக்கு நிறையவே கருணை காட்டுகிறார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்று, பேட்டியை ஆரம்பிக்கிறார், வருமான வரித்துறையில், தமிழகத்தின் வருமானவரி முதன்மை ஆணையர், எஸ்.செந்தாமரைக் கண்ணன்.

தன்னம்பிக்கை, விடா முயற்சி, நேர்மை, புத்திசாலித்தனம், கடின உழைப்பு இவை மட்டும் தான், வாழ்க்கையில் வெற்றி பெற இவரிடமிருந்த ஆயுதங்கள்.
பணபலம், அரசியல் செல்வாக்கு, சிபாரிசு இவை ஏதுமின்றி, சொந்தக் காலில் நின்று, வெற்றி பெற்ற, "அக்மார்க்' சாதனையாளர். "இந்து' ஆங்கில நாளிதழை, தன் இருபதாவது வயதில் தான், முதன் முதலில் பார்த்தவர்.
பணக்கார குடும்பத்தில் பிறந்த வர்கள், நிறைய செல் வாக்கு உள்ளவர்கள் தான், ஐ.ஏ.எஸ்., போன்ற அரசு நிர்வாக அதிகாரிகளாக முடியும் என, பலரும் நினைக்கின்றனர். ஆனால், மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தாலும், அரசு பள்ளியில் படித்தாலும், சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் செந்தாமரைக் கண்ணன். இவரது அனுபவங்கள், இளைஞர்களுக்கு உற்சாக, "டானிக்'காக இருக்கும்.


இவரது வெற்றிக்கதையை அவரே கூறுகிறார்:


வேலூர் மாவட்டத்தில், கல்லூர் ராஜ பாளையம் என்ற, மிகவும் பின் தங்கிய கிராமம் தான் எங்கள் ஊர். விவசாயம் தான் தொழில். எங்கள் கிராமத்தில், மளிகைக் கடை கூட கிடையாது. தீப்பெட்டி வாங்குவதென்றால் கூட, 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். கோவிலிலேயே, அரசு தெருப் பள்ளிக்கூடம் நடைபெறும். ஸ்லேட், நோட், புத்தகம் எல்லாம் கிடையாது. மணலிலே எழுதுவோம். ஒன்று, இரண்டு, மூன்று வகுப்புகள்; ஆனால், ஒரே வாத்தியார். அவர் வந்தால் ஸ்கூல்; வராவிட்டால், "லீவு!'
வாத்தியார், நாட்டு மருந்து எல்லாம் செய்வார். அவர் மருந்து தயாரிக்க, மாணவர்கள் எல்லாரும், ஆளுக்கு ஒரு கூடை சாணி, வறட்டி எல்லாம் கொண்டு வந்து தர வேண்டும். இருப்பது ஒரே கூடம். வாத்தியாரே, எங்களை மூன்று வகுப்பாக பிரித்து உட்கார வைப்பார். பள்ளிக்கு, கட்டணம் எதுவும் இல்லை. இலவசம்!


நான்காம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, தேவி செட்டிக் குப்பம் என்ற இடத்தில் இருந்த, மற்றொரு அரசு பள்ளியில் படித்தேன். அந்த பள்ளிக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து, ஒரு சின்ன கட்டடமே கட்டினோம். இப்போது சொன்னால், நம்புவது கூட கஷ்டம்.
செங்கல் சூளை ஏற்படுத்தி, ஆசிரியர்கள் செங்கலை தயாரிப்பர். மாணவர்கள், பக்கத்தில் இருந்த மரங்களை வெட்டி, செங்கல் சூளை எரிய, விறகு கொண்டு வந்து கொடுப்போம். நான்கு பக்கம் சுவர், மேலே ஓலை கூரை என நான்கு அறைகள். ஆசிரியர்கள், முண்டாசு கட்டி, வேலை செய்தனர். வித்தியாசமான அனுபவம்.


நாங்கள் படிக்கும் கட்டடத்தை, நாங்களே உருவாக்கினோம். உழைப்பின் உயர்வை நாங்கள் கத்துக்கிட்டோம். பாடத்தில் இல்லை என்றாலும், தமிழ் வாத்தியார் திருப்புகழ் சொல்லிக் கொடுத்தார்.
அகரம் என்ற இடத்திலே உள்ள அரசு பள்ளியில், எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளை படித்தேன். ஒடுகத்தூர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில், 10, 11 இரு வகுப்புகளும் படித்தேன். வீட்டிலிருந்து, 6 கி.மீ., தூரத்தில் பள்ளி. முதல் நான்கு மாதங்களுக்கு, நடந்தே சென்றேன். பிறகு, அப்பா, 100 ரூபாய்க்கு வாங்கி தந்த பழைய சைக்கிளில், பள்ளிக்கு சென்றேன்.
எங்க அப்பாவுக்கு எட்டு பிள்ளைகள். என்னையும் சேர்த்து ஆறு பையன்கள்; இரண்டு பெண்கள். கஷ்டமான ஜீவனம் தான். அப்பா கே.சீத்தாராமபிள்ளை, எங்கள் கிராமத்தில், கர்ணமாக இருந்தார். பொதுமக்கள் கேட்கும் எல்லா உதவிகளையும், மகிழ்ச்சியாக செய்து கொடுப்பார். யாரிடமும், எதற்கும் ஒரு பைசா வாங்கியதில்லை. ஊரில், நேர்மைக்கு அவரை உதாரணமாக சொல்வர். அது, எங்களுக்கு பெருமையாக இருக்கும்.


ரொம்ப எளிமையான வாழ்க்கை தான். அமாவாசை, தீபாவளி பண்டிகை வந்தால் தான், எங்க அம்மா சரோஜாம்மாள், தோசை சுட்டு தருவார். மற்ற எல்லா நாட்களிலும் பழைய சாதம் தான்!
பள்ளியில் படிக்கும் போதே, தமிழ் மேல் அதிக ஆர்வம் இருந்தது. பாரதியார், பாரதிதாசன், மு.வரதரா
னார், காண்டேகர் போன்ற மேதை களின் படைப்புகளை, பள்ளி நூலகத்திலேயே படித்து, நல்ல விஷயங்களை குறிப்புகள் எடுத்து வைப்பேன்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தேன். அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனாலும், எட்டு பிள்ளைகள் இருக்கும் வீட்டில், அவரால் என்னை கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை. அவருக்கு நான் உதவியாக வேலை செய்யலாம் என்ற எண்ணம். அவரை தப்பு சொல்ல முடியாது; அவர் நிலைமை அப்படி!


எங்க கிராமத்திலிருந்து, 20 கி.மீ., தூரத்தில் குடியாத்தம். அங்கே, எங்க மாமா இருந்தார். "மாமா வீட்டில் தங்கி, ஒரு வருடம் பி.யு.சி., படிக்கிறேன் அப்பா...' என்று கேட்டேன். என் ஆர்வத்தை பார்த்து அவருக்கு, மறுக்க இஷ்டமில்லை.


"ஏம்பா... என் பிள்ளை உங்களோட தங்கி, ஒரு வருடம் காலேஜில் படிக்கணும்ன்னு ஆசைப்படறான். ஒரு வருடம் அவனுக்கு சாப்பாடு போட்டு, கூட வைச்சுப்பயா?' என, மாமாவிடம் கேட்டார்.
"சந்தோஷமாக செய்கிறேன்... அவன் இங்கே தங்கி படிக்கட்டும்...' என்று சொன்னார் மாமா. அப்பா அரிசி மூட்டை அனுப்பினார்.
அந்த ஊரில் இருந்த ஒரே கல்லூரியான, திருமகள் மில்ஸ் கல்லூரியில், பி.யு.சி., சேர்ந்தேன். அங்கு படித்து, முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற்ற, ஒரே மாணவன் என்ற பெருமை எனக்கு கிடைத்தது; எங்கள் பேராசிரியருக்கு ரொம்ப மகிழ்ச்சி.


பி.யு.சி.,யை தொடர்ந்து, பட்டப்படிப்பு படிக்க, வேலூருக்குத் தான் செல்ல வேண்டும். அங்கு பிரபலமான, ஊரிஸ் கல்லூரியில், பி.எஸ்சி., கணிதம் வகுப்பில் சேர விண்ணப்பித்தேன். எனக்கு கணக்கு நன்றாக வரும் என்ற காரணத்தால் மட்டுமல்ல; அதைப் படித்தால், ரசாயனம், பவுதீகம் மாதிரி, "லேபரட்டரி கிளாஸ்' எல்லாம் இருக்காது. லேபிற்கு அவசியமில்லை. "லேபரட்டரி' வகுப்புகளுக்கு என்று, தனியாக கட்டணமும் இருக்காது. மூன்று மாதம் ஒரு முறை, கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணமும், குறைவாக இருக்கும் என்பது தான் முக்கிய காரணம்.


வேலூரில் உறவு, தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. எனவே, என் நண்பர் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து, ஒரு அறையை வாடகைக்கு எடுத்தேன். காலையிலும், இரவிலும் சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். புளியந்தளிர், வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு எல்லாம் சேர்த்து அரைத்து, ஒரு பொடி போல செய்வோம். சப்பாத்திக்கு, அது தான், "சைடு-டிஷ்!'
கல்லூரிக்கு பக்கத்திலேயே, "லட்சுமி கபே' என்ற ஓட்டல் ஒன்று இருந்தது. அளவு சாப்பாடு, மாதத்திற்கு, 30 டிக்கெட் வாங்கினால், விலையில் சலுகை உண்டு. ராமகிருஷ்ணனும், நானும் ஆளுக்கு, 30 டிக்கெட் வாங்குவோம். அளவு சாப்பாடு என்பதால், அரிசி சாதம் அளவாகத் தான் கொடுப்பர். வயிறு நிரம்ப, கறி, பொறியல் மட்டும், மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிடுவோம். மாணவர்கள் என்பதால், பரிமாறுபவர்களும், அன்பாக கவனிப்பர்.


ஓரளவுக்கு வசதி வந்தும் கூட, என் சாப்பாட்டில் சாதம் குறைவாகவும், காய்கறி அதிகமாகவும் இருக்கும். அப்படி பழக்கமாகி விட்டது. நம்முடைய சக்திக்குள்ளே வாழ வேண்டும் என்ற கட்டாயத்தை, எனக்கு நானே ஏற்படுத்தி வாழ்ந்தேன்.


பி.எஸ்சி., வெற்றிகரமாக முதல் வகுப்பில் முடித்துவிட்டு, ஒரு நண்பனின் ஆலோசனையில், சென்னை பச்சையப்பா கல்லூரியில், எம்.எஸ்சி., கணிதம் சேருவதற்கு விண்ணப்பித்தேன்.
என், 20வது வயதில் தான், சென்னை நகருக்கு முதல் முறையாக வந்தேன். எல்லாமே பிரமிப்பாக இருந்தது. பச்சையப்பா கல்லூரியில் பெரிய விடுதி இருந்தாலும், சாப்பாடு, அறை வாடகை எல்லாவற்றையும் நான் எப்படி சமாளிக்க முடியும்?


எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு அருகே, ஒரு விடுதி இருப்பதும், எஸ்.சி., - எஸ்.டி., அல்லாத ஒரு சில ஏழை மாணவர்களுக்கு அங்கு தங்க அனுமதி கொடுக்கின்றனர் என்றும், நண்பர் மூலம் அறிந்து, அதற்கு விண்ணப் பித்தேன்; இடம் கிடைத்தது. எம்.எஸ்சி., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு, சாப்பாடு, தங்க அறை இரண்டும், இலவசம் என்று ஆனது; எனக்கு பெரிய நிம்மதி.
மற்றொரு சலுகையும், எதிர்பாராமல் கிடைத் தது. புரசைவாக்கம் விடுதியிலிருந்து பச்சையப்பா கல்லூரிக்கு சென்று வர ஆகும், பஸ் கட்டணத்தை, கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது. மூன்று மாதத்திற்கு, 180 ரூபாய் கிடைக்கும். அந்த, 180 ரூபாயை மிச்சம் பிடிக்க, காலையிலும், மாலையிலும் கல்லூரிக்கு நடந்தே செல்வேன். 30 நிமிடம் நடக்க வேண்டும். அப்போது அது சிரமமாக இல்லை. 

கல்லூரி தரும், 180 ரூபாய் பஸ் கட்டணத்தை மிச்சம் பிடிக்க, கல்லூரிக்கு நடந்தே சென்று வந்தேன். அந்த பணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணம், 120 ரூபாய் போக, மீதி, 60 ரூபாயில், அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்வேன்.

தினமும் விடுதிக்கு, "இந்து' ஆங்கில பத்திரிகை வரும். அப்போது தான், என் வாழ்க்கையில், "தி இந்து' பத்திரிகையை முதன் முதலில் பார்த்தேன். அதுவரை, ஆங்கில பத்திரிகையை கண்ணால் கூட பார்த்ததில்லை.
விடுதியில் தங்கிய போது, அங்கு தங்கியிருந்த ராஜேந்திரன் என்ற நண்பரின் அறிமுகம் கிடைத்தது. எம்.ஏ., முடித்து சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர், ஐ.பி.எஸ்.,க்கு தேர்வு ஆகி, முசவுரிக்கு பயிற்சிக்காக செல்ல வேண்டும்.
அவரிடமிருந்து தான் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுவது பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். அவர், பின்னாளில், டி.ஜி.பி.,யாக சிறப்பாக பணி செய்து, தமிழகத்தில் பணி நிறைவு பெற்றார்.
பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ரொம்ப செல்வாக்கு உள்ளவர்கள் தான், ஐ.ஏ.எஸ்., மாதிரி தேர்வுகளை எழுத முடியும் என்று, பல கிராமத்து இளைஞர்கள் நினைப்பது போல நானும், அப்போது வரை தவறாக நினைத்தேன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, எளிமையாக பழகும், ராஜேந்திரனை பார்த்து, பேசி, பழகிய பின் தான், ஐ.ஏ.எஸ்., கனவு சாத்தியமில்லாத விஷயம் இல்லை என்று உணர்ந்தேன்.


எம்.எஸ்சி., முடித்த பின், (பத்து மார்க்கில், முதல் வகுப்பை தவற விட்டேன்) தொடர்ந்து, அந்த விடுதியிலேயே தங்கினால், நானும் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராக முடியும் என்பது புரிந்தது. என் கிராமத்திற்கு திரும்பி சென்றுவிட்டால், அங்கு உட்கார்ந்து படிக்க முடியாது. சட்டக் கல்லூரியில் சேர்ந்தால், மூன்று ஆண்டுகள் படித்து பட்டமும் பெறலாம், இடையில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் போட்டி தேர்வில், ஐ.ஏ.எஸ்., தேர்வும் எழுத லாம். விடுதியில் இடம் கிடைத்தது. ஆனால், சட்டக் கல்லூரி அனுமதிக் கான, எலெக்ஷன் எல்லாம் காலதாமதமானதால், தொடர்ந்து விடுதியில் இருக்க முடியவில்லை.


வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு, அப்போது ஒரு வேலைவாய்ப்பு திட்டம் அமலில் இருந்தது. கிராமத்தில் பணி, மாத சம்பளம், 45 ரூபாய். அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி. சென்னையில் இருக்க முடியாததால், விரிஞ்சிபுரம் என்ற இடத்தில் பணியை ஆரம்பித்தேன். எங்கள் கிராமத்திலிருந்து, 15 கி.மீ., என்பதால், சைக்கிளில் சென்று வந்தேன்.
பிறகு, 1975 - 1976 ஆகிய இரு ஆண்டுகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வு - ஐ.ஏ.எஸ்., தேர்வுகள் எழுதினேன்; தேர்வு பெறவில்லை. 1975ம் ஆண்டு, அரசு பணியில் உதவியாளர்கள் பணிக்கான தேர்வு எழுதினேன்; தேர்வானேன். டில்லியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சரகத்தில், உதவியாளர் பணி கிடைத்தது; டில்லிக்கு போய் வேலையில் சேர்ந்தேன்.
டில்லிக்கு சென்றதால், சில நல்ல விஷயங்கள் நடந்தன. முதலாவதாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்து நல்ல தெளிவு கிடைத்தது.


ஐ.ஏ.எஸ்., எழுதி தேர்வு பெற்றவர்கள், ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் பெற்ற மதிப்பெண் களையும் தொகுத்து, சிறு புத்தகமாக வெளி யிடுகின்றனர். 60 மார்க், மொத்தத்தில் போதுமானது என்று புரிந்தது.
மேலும், ஐ.ஏ.எஸ்., பரீட்சையில் தேர்வு பெற்று, நேர்முகத் தேர்வுக்கு சென்று, வெளியே வருபவர்களை சந்தித்து, "இன்டர்வியூ எப்படி இருந்தது; என்ன கேள்வி எல்லாம் கேட்டனர்?' என்று கேட்டு, நேரடித் தகவல்களை அறிந்தேன்.


இவையெல்லாம் எனக்கு நிறைய தன்னம் பிக்கையை கொடுத்தன. டில்லியில், அலுவலக நேரம் போக, மீதி நேரம் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, என்னை தயார் செய்வதி லேயே செலவழித்தேன்.
தமிழ் இலக்கியம், கணிதம், இந்திய வரலாறு, ஆங்கிலம், பொது அறிவு ஆகிய ஐந்து சப்ஜெக்ட்களிலும், 1977ல், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சிப் பெற்றேன்.


தேர்வில், பாசானவர்களில் தேவையான நபர்களை, நேர்முக தேர்வுக்கு அழைக்கின்றனர். எழுத்துத் தேர்வின் மார்க்குகள் மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மார்க்குகள் இரண்டையும் கூட்டி, மிகவும் அதிகமாக மார்க் வாங்கியவரிலிருந்து ஆரம்பித்து, லிஸ்ட் போடுகின்றனர்.
சுமார், 800 பேர்களில் எனக்கு, 234வது ராங்க் கிடைத்தது. சிறந்த மார்க் வாங்கியவரிடமிருந்து, ஆரம்பித்து, அவரவர் எந்த பணியில் சேர விரும்புகின்றனர் என்று கேட்கப்படுகிறது. பொதுவாக முதல் சாய்ஸ், ஐ.ஏ.எஸ்., அடுத்தது, ஐ.எப்.எஸ்., அடுத்து, ஐ.பி.எஸ்., அடுத்து, ஐ.ஆர்.எஸ்., மற்றும் பல சர்வீஸ்கள்.


ஆனால், இதில் விதிவிலக்கும் உண்டு. பெஸ்ட் ராங்க் பெறுபவர்களில் சிலர், "எனக்கு போலீஸ்துறை வேண்டும்; ஐ.ஆர்.எஸ்., வேண்டும்' என்று கேட்பதும் உண்டு. நான் பெற்ற ராங்க்கிற்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளில் இருந்த காலி இடங்கள் எல்லாம் முடிந்து விட்டன. எனக்கு, ஐ.ஆர்.எஸ்., கிடைத்தது.


எனக்கு, நேர்முக தேர்வு, 30 நிமிடங்கள் நடந்தது. மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அதிகார தோரணை ஏதுமின்றி, அன்பாக பேசினர். கணிதம், தமிழ் இலக்கியம் பற்றி சில கேள்விகள் கேட்டனர்; சரியாக பதில் சொன்னேன்.
விரிஞ்சிபுரம் என்ற ஊரில், நான் ஆசிரியராக பணி ஆற்றியதை அறிந்த ஒரு பேராசிரியர், விரிஞ்சிபுரம் கோவிலின் மூலவரின் பெயர், அம்மனின் பெயர் என்ன என்று கேட்டார். மூலவர் பெயர் மார்க்கபந்து என்று சரியாக கூறினேன். ஆனால், அம்மனின் பெயர் ஞாபகம் வரவில்லை. "சாரி, தெரியவில்லை...' என்றேன். அவர் சரியான பெயரை கூறினார்.


நம் வாழ்க்கையின் போக்கையே நிர்ணயிக்க போகும் அந்த இன்டர்வியூவிற்கு, பலர் முழு சூட்- கோட்டில் வந்தனர். என்னிடம், சூட்-கோட் கிடையாது. நண்பர் ஒருவரிடமும் டை இரவல் வாங்கி கட்டிக் கொண்டு, பேன்ட், முழுக்கை சட்டை, ஷூவுடன் சென்றேன். பல மாதங்களாக, நிறைய படித்து, என்னை தயார் செய்து இருந்தேன்.
பின், ஏப்ரல் 14, 1978ல், தமிழ் வருடப்பிறப்பு அன்று, ஐ.ஏ.எஸ்., தேர்வின் இறுதி ரிசல்ட் வெளியானது.
ஐ.ஆர்.எஸ்.,க்கு நான் தேர்வானேன் என்பதை, நான் தகவல் ஒலிபரப்பு அமைச்சரகத்தில் பணிபுரிந்ததால், பழக்கமான ஒரு அதிகாரி மூலம், ஒரு நாள் முன்பாகவே அறிந்து கொண்டேன்.


"எஸ்.செந்தாமரைக் கண்ணன் ஐ.ஆர்.எஸ்.,' இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் லிஸ்டில் என் பெயரைக் பார்த்ததும், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன். உடனே, அங்கிருந்து இரண்டு தந்திகள் கொடுத்தேன் - முதலாவது என் தாயாருக்கு; இரண்டாவது, என் நெருங்கிய நண்பர் மூர்த்திக்கு.
ஐ.ஆர்.எஸ்., தேர்வு ஆனதும், பயிற்சிக்கு வரும்படி உத்தரவு வந்தது. மீண்டும், ஒரு முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத விரும்பினேன். ஆனால், முடியவில்லை. அந்த பேட்சில், இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் அதிகாரிகள், 120 பேர் இருந்தோம். நாக்பூரில் ஒரு ஆண்டு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டது.

(To be continued........)

இதன் தொடர்ச்சி வரும் வாரம் தினமலர் வாரமலர் இதழில் வரவிருக்கிறது. உங்களைப் போலவே, நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும், இளைய தலைமுறையினருக்கும் இந்த கட்டுரையை படிக்க பரிந்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்..! மீண்டும் சந்திப்போம்!

வெற்றி நமதே! 

ஆயிரம் அதிசயம் ! ஒரு சிலிர்ப்பூட்டும் அண்ணாமலை அனுபவம்!

| Oct 27, 2012
சென்ற ஞாயிற்றுக்கிழமை - நானும் என் நண்பர் ஒருவரும் அண்ணாமலை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது. மழை என்றால் அப்படி ஒரு மழை. கொட்டோ கொட்டோவென்று கொட்டிக் கொண்டு இருந்தது. எட்டு மணி சுமாருக்கு கோவிலுக்குள்ளே சென்றோம். தரிசனம் முடித்த பிறகு, இரவில் கிரிவலம் செல்வதாகத் திட்டம் இருந்தது. நவராத்திரி  சீசன் நடந்து கொண்டு இருந்தது அல்லவா? ஆலயம் முழுவதும் ஒரு அற்புதமான அதிர்வில் இருந்தது. கூட்டமும் அதிகம் இல்லை. வந்து இருந்த கொஞ்ச பேரையும் வருண பகவான் மிரட்டிக் கொண்டு இருந்தார். கூட்டத்தோடு வரிசையில் முதல் தரிசனம் முடித்த பிறகு, பிரஹாரத்தில் துர்க்கை சந்நிதிக்கு நேரே நின்றுகொண்டு, மனதிற்குள் மிருத்யுஞ்ஜெய மந்திரம் ஜெபிக்கத் தொடங்கினேன்.

இடையில் யாரோ ஒரு VIP அவர் குடும்பத்தோடு வந்து இருந்தார். கரைவேட்டி. ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வோ அல்லது மந்திரியாகவோ இருக்க கூடும் என்று நினைக்கிறேன். கோவில் ஊழியர் ஒருவர் அவரைப் பிரத்யேகமாக கூட்டிச் சென்று, சிறப்பு தரிசனம் செய்வித்து அம்மன் சந்நிதிக்கு கூட்டி சென்றார். அப்போதே, மனசுக்குள் ஒரு எண்ணம். "நாம எல்லாம் , இந்த மாதிரி பெரிய ஆள் ஆனால், நமக்கும் இப்படி ஸ்பெசல் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும் இல்லே..! "

" ஹோய் ! மனசே அடங்கு! ஜெபம் பண்ணும்போது என்ன அங்கே சத்தம்! இங்கே கவனி! யாரை எங்கே எப்படி வைக்கணும்னு அவனுக்குத் தெரியாதா? உனக்கு என்ன வேணும்? தரிசனமா..VIP அந்தஸ்தா? அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ நீ ஜெபம் பண்றே..அதை மட்டும் கவனி" ன்னு இன்னொரு மனசு மிரட்ட ( ரமணர் சொன்ன மாதிரி ரெண்டு மனசு இருக்குது பாஸ்..!) "... த்ரியம்பகம் யஜாமகே....... " திரும்ப ஜெபத்தில் இறங்கிவிட்டேன். ஒரு அன்பர் பால் பிரசாதம் கொடுத்து விட்டுச் சென்றார். குடித்ததும் ஒரு சந்தோசம் கிடைத்தது. (நாமளும் ஏதோ புண்ணியம் செஞ்சு இருக்கிறோம்பா...  அண்ணாமலையார் பிரசாதமாச்சே..!)

திடீரென்று ஒரு கும்பல் - நூறு பேருக்கு மேல் இருக்கும். பரதம் ஆடும் குழு ஒன்றும், வேறு ஏதோ கல்லூரியில் இருந்தும் வந்து இருந்தார்கள் போல. எல்லோரும் தரிசனம் முடித்து , ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபம் சென்று விட்டார்கள். இப்போது அண்ணாமலையார் சந்நிதியில் எண்ணிப் பார்த்தால், ஒரு பத்து, இருபது பேர் தான் இருந்து இருப்போம். அலுவலக ஊழியர்கள் தான் அதில் அதிகம். அப்போதுதான் மனதிற்குள் திரும்ப ஒரு எண்ணம். மீண்டும் ஒரு முறை ஐயனை பார்க்கலாமே என்று. வரிசையில் ஒரு ஆள் என்றால், ஒரு ஆள் இல்லை. நேரே சந்நிதிக்கு சென்றோம். ஆலயம் நடை சாத்தும் நேரம் அது. அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. இடையில் கொஞ்ச நேரம் தூறிக் கொண்டு இருந்த மழை, வலுத்து பட்டையைக் கிளப்ப - ஒருவர் கூட வெளியில் நடமாட முடியாத சூழல். நான் சந்நிதியில் அந்த உலகப் பரம் பொருளின் நேரே. சொன்னால் நம்ப மாட்டீர்கள்! சரியாக முப்பத்தைந்து நிமிடம் - நான், என் உடன் வந்த நண்பர், ஆலய அர்ச்சர்கள் இருவர் - அந்த அண்ணாமலையார்..! நாங்கள் மட்டும் தான்! அர்ச்சகர்கள் இருவரும், அவர்கள் பாட்டுக்கு ஒருவர் உள்ளிலும், ஒருவர் வெளியிலும் சுத்தம் செய்து கொண்டு இருக்க, எங்கள் இருவருக்கும் கிடைத்தது, ஒரு உலக மகா VIP தரிசனம். ஏகாந்தம் என்றால், அப்படி ஒரு ஏகாந்தம்..!

எத்தனையோ கோடி கோடி பக்தர்களும், தேவாதி தேவர்களும்  - அவரது ஒரு நொடி தரிசனம் கிடைத்துவிடாதா என்று ஏங்கித் தவிக்கும் நிலையில் , அருணாச்சலேஸ்வரர், இந்த அற்ப்பாதி அற்பனுக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்தது , என் பிறவிப் பயனே அடைந்தது போல் இருந்தது. சத்தியமாக அந்த நிமிடங்களில் எனக்குக் கிடைத்த பரவசம், வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. அருமையான அலங்காரம். அவருக்குப் பின்புறமாக, ஒரு மலை மாதிரி லேசாக புடைப்பு சிற்பம் மாதிரி இருக்கிறது. அண்ணாமலையைப் போன்றே இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு அந்த கயிலாயத்தில் அவர் முன்னே நின்று கொண்டு இருப்பது போலவே இருந்தது.

VIP தரிசனம் கேட்டே இல்லை! போதுமாப்பா.. குழந்தே? ன்னு அண்ணாமலையார் தலை தடவுவது போல, ஒரு கணம் சிலிர்ப்பாக இருந்தது!

எவ்வளவு பேச முடியுமோ, அவ்வளவு பேசி , வேண்டி, மந்திர ஜெபம் செய்து - கண் இமைக்க கூட மனமின்றி , அந்த ஈசனைப் பிரிய மனமில்லாமல் , வெளியே வந்தேன். செஞ்ச பாவம் எல்லாம் மன்னிக்கப்பட்டு, மீண்டும் ஒரு தேவ பிறவி கிடைத்தது போல இருந்தது.

வெளியில் வந்து ரொம்ப நேரத்திற்கு , நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. முகத்தில் இருந்த புன்முறுவல் குறையவே இல்லை. இப்படியே இதே சந்தோசத்தோட, காரை எடுத்திட்டு வீட்டுக்குப் போயிடலாமா, இன்னொரு நாள் கூட மலை சுத்திக்கிடலாமே என்றெல்லாம் தோண ஆரம்பித்து விட்டது.

கூட வந்த நண்பருக்கு இதுதான் முதல் முறை என்பதால், இறுதியில் கிரிவலம் சென்றே திரும்பலாம் என்று முடிவெடுத்து - பொறுமையாக மலை சுற்ற ஆரம்பித்தோம். நம்ம ஊரு இல்லே..! இந்திர லிங்கம் தாண்டினதும் வழக்கம்போல பவர்கட். மழையின் பின்னணி இசை, தரையெல்லாம் சொத சொத ஈரம். ஆனால், மனசுக்குள் இருந்த உற்சாக ஊற்று , எந்த சிரமத்தையும் பொருட் படுத்த விடவில்லை. பொறுமையாக தட்டுத் தடுமாறி அக்னி லிங்கம் ஆர்ச் திரும்ப, "வாங்க" என்பதுபோல் - கரெண்ட் வந்து விட்டது. கண்குளிர தரிசனம்.
(ராத்திரி கிரிவலம் அங்கே போறப்போ எல்லாம், ஒரு நாய் இருக்குது. படிமேல கம்முன்னு உட்கார்ந்து இருக்கும்...! நீங்க யாராவது நோட் பண்ணி இருக்கிறீங்க? )
எமலிங்கம் தாண்டினதும், இடையில் ஒரு இருபது நிமிடம் இடி மின்னலுடன் மழை பெய்தது. சாலையில் சென்று கொண்டு இருந்த வண்டிகள் எல்லாம் ஓரம் கட்டி நின்றுவிட்டன...!

நாங்களும் ஓரம் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் ஒதுங்கி நிற்க, அப்போதுதான் அணைந்து இருந்த அடுப்பு, கொஞ்சம் கத கதப்பாக இருந்தது. இதில் என்ன ஆச்சரியம்னு கேட்குறீங்களா..? அந்த கொட்டுற மழைலேயும் ஒருத்தர், மேலே சட்டை கூட போடாமல், வெறும் வேஷ்டியுடன் - மெதுவாக , சீரான வேகத்தில் நடந்து கொண்டு இருந்தார். கால்களில் லேசான தள்ளாட்டம் இருந்த மாதிரிதான் இருந்தது. பார்க்கவே கொஞ்சம் மிரட்சி. ஒருவேளை போதை தெளியாம , பக்கத்து கிராமத்து ஆள் யாரோ நடந்து போறார் போலன்னு தான் நெனைச்சேன்..!

அப்புறமா, அடி அண்ணாமலை தாண்டும்போது எங்களுக்கு முன்னே நடந்து போய்க்கொண்டு இருந்தார். அதே மெதுவான நடை, அங்கே கொட்டும் மழையில் பார்த்தபோது இருந்த அதே சீரான வேகம். இடையில் எங்கேயும் நின்னு கூட இருக்க மாட்டார் போல! அவரைக் கடந்து போகும்போது, "மலை சுத்துறீங்களா"ன்னு, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார். "ஆமாங்க"ன்னு மட்டும் சொல்லிட்டு தொடர்ந்தோம்..!

யப்பா..! இப்படியும் மலை சுத்த முடியுமா? நீ மனுஷனாய்யா ன்னு தான் தோணிச்சு..!
யாருக்குத் தெரியும்? 

முதல் தடவை வந்தப்போ, அங்க பிரதட்சணம் பண்ண ஆளையே பார்த்தேன்..! அதனால,  இந்த மாதிரி நிறைய அதிசயமான மனிதர்கள் (?) இங்கே நிறைய பேர் இருக்கிறாங்க! என்ன, இவங்க எல்லாம் போறப்போ, நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சதுன்னு நினைச்சு சந்தோசப்பட்டுக்கிட வேண்டியதுதான்..!

திரும்ப ஒரு இடத்துல வர்றப்போ.. பவர் கட்.  ஆனா இந்த தடவை , இருட்டு எல்லாம் இல்லை. பின்னே..? "நாங்க இருக்கிறோம்ல" ன்னு கூடி இருந்த மேக கூட்டத்தை எல்லாம் விலக்கிட்டு , 'பளிச்'சுன்னு சந்திரன் ஜாம் ஜாம் னு வந்தார். சுற்றி கருந்திரளாய் மஞ்சுப் பொதி...  'பளிச்'சுன்னு நிலா! சான்ஸே  இல்லை.. இப்படி ஒரு லைட்டிங் சென்ஸ்.... அந்த ஆண்டவனால் மட்டுமே சாத்தியம்! மலையை மட்டும் ஆவலா, உத்து உத்துப் பார்த்துக்கிட்டே வந்தோம்..!

அதிகாலை மூன்றரை மணிக்கு, கிரிவலம் முடிந்து  ராஜகோபுரம் முன்னாலே நின்னப்போ, மனசு சுத்தமா துடைச்சு விட்ட மாதிரி இருந்தது....! சாலை முழுவதும் அதையே பிரதிபலித்தது..! 


என்னடா, பைத்தியக்காரன் மாதிரி உளறிக் கொட்டிக்கிட்டு இருக்கிறானே, இதுலே இருந்து என்ன சொல்ல வர்றேன்னு கேட்குறீங்களா? நிஜமாவே அந்த மொமென்ட் லூசு மாதிரி தான் சார் இருந்தேன்..!

கடவுள் இருக்கிறார் சார்..! நம்ம குழந்தை கடையிலே ஏக்கமா எதையாவது பார்த்திச்சுன்னா , அதை வாங்கி கொடுப்போம் இல்லே? அந்த மாதிரி நாம ஏக்கமா வேண்டிக் கேட்டோம்னா, நியாயமான வேண்டுதல்னா, அதை நிறைவேற்றுகிறார்..! அந்த மாதிரி நிறைவேற்றுவதில், அருணாச்சலத்துக்கு நிகர் அவரே!


நாப்பது, அம்பது லட்சம் பேர் , தீபத்துக்கு வர்றாங்களே, அது சாதாரண விஷயமா என்ன?


அந்த கூட்டத்துலே போறதுக்கு , நமக்கு அசௌகர்யமாத் தான் இருக்கும். ஆனா, ஒரே ஒரு தடவையாவது போக முயற்சி செய்யுங்கள்..! எத்தனையோ தேவ புருஷர்களுக்கும், சித்தர்களுக்கும் எவ்வளவோ பிரயத்தனம் பண்ணினாலும் அவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைப்பதில்லையாம்  ..! அந்த மாதிரி கோடி கோடி புண்ணியம் பண்ணிய சித்தர் பெருமக்கள் காலடி படும் அந்த நாளில், அவர்களுடன் , அவர்கள் மூச்சுக் காற்று கலந்த அந்த சூழலில்  நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதைத் தவற விடுவானேன் ...?


எங்கே சார்? இருக்கிற கஷ்டத்துல முழி பிதுங்கி இருக்கிறோம்? இதுலே சாமி கும்பிடவான்னு தோணுதா? கை குடுங்க சார்..! உங்களை கஷ்டம் படுத்தி எடுக்குதுன்னா, ஆண்டவன் உங்களை பார்க்க ஆரம்பிச்சிட்டார்னு அர்த்தம். கை கொடுக்கப் போறார்னு அர்த்தம். யாருக்கு கஷ்டம் இல்லே? செஞ்ச கர்மாவை கழிக்கத்தானே, பிறப்பே எடுத்து இருக்கிறோம்? கழுதை , சீக்கிரம் கழியிதுன்னு நினைச்சு சந்தோசமா ஒரு தடவை வந்து போங்க..! உங்களை தூக்கிவிட ஒரு கரத்துடன் , ஆண்டவன் ஏற்கனவே ஒருவரை அனுப்பி இருப்பதை உணர்வீர்கள்..!  

 ஓம் சிவ சிவ ஓம்! 

இதைப் படிக்கும் அனைவருக்கும் அந்த அண்ணாமலையார் ஆசி, பரிபூரணமாக கிடைக்க மனமார வேண்டுகிறேன்..!
 

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்! 
மன இருளை அகற்றி ஆன்மீக ஒளியை பரவச் செய்வோம்!

| Oct 17, 2012
நம் தளத்தின் வாசகர் மற்றும் என் நண்பர் திரு.சுந்தர் அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். சில அருமையான கட்டுரைகள் பின்னூட்டங்கள் மூலமாக, நம் வாசர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தனியார் நிறுவனம் ஒன்றில் முதன்மை கிராபிக் டிசைனராக பணிபுரியும் அவர் ONLYSUPERSTAR.COM என்னும் ரஜினி அவர்களை பற்றிய ஒரு  தளத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஒரு பிளாக் ஸ்பாட்டாக ஆரம்பிக்கப்பட்ட அந்த தளம் இன்று மிகப் பெரிய ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. ரஜினி அவர்களை பற்றி மிகைப்படுத்தப்படாத செய்திகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையில் திரு.ரஜினி அவர்கள் வலியுறுத்தும் பல நல்ல விஷயங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி அவர்களை பற்றிய செய்திகளை தவிர, ஆன்மிகம், நீதிக்கதைகள், பல்துறை வெற்றியாளர்களின் பேட்டி என அதில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள் ஏராளம்.

நம் தளத்தில் நாம் வெளியிட்ட சாதனையாளர்கள் திரு. இளங்கோ, திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் ஆகியோரை பற்றிய கட்டுரைகளை படித்து, அதன்பால் ஈர்க்கப்பட்டு, அவர்களை நேரடியாகவே சென்று விரிவான பேட்டி எடுத்து அவர்களிடம் இருந்து பல நன்முத்துக்களை அவர் அள்ளிக்கொண்டு வந்ததும் அதை நமது தளத்தில் நான் பகிர்ந்ததும் கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த தளத்தில் நான் வெளியிடும் பதிவுகளை பற்றி அடிக்கடி என்னிடம் அவர் பேசுவதுண்டு. நானும் அவரது தளத்தில் வெளியாகும் பதிவுகளை பற்றி பேசுவேன். இருவருக்குள்ளும் பல விஷயங்களில் உணர்வு ரீதியிலான ஒற்றுமை , ஆன்மீக தேடல் மற்றும் வாழ்வில் உயர்வது குறித்த லட்சிய தாகம் இருந்தது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். என்னிடம் பேசும்போதெல்லாம் தான் ஒரு பிரபல தளத்தின் ஆசிரியர் என்ற உணர்வே இல்லாமல், நமது LIVINGEXTRA.COM ன் வாசகர் போன்று தான் பேசுவார். நம் தளத்தில் நான் கூறும் பல விஷயங்களை நடை முறை வாழ்க்கையில் பின்பற்ற முயற்சிகள் எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டு வருபவர் அவர். (அவரது சமீபத்திய பதிவுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்) அந்த வகையில் என்னை விட சந்தோஷப்படுபவர் வேறு யாராக இருக்கமுடியும்?

இத்தனை ஆண்டுகள் வலைத்தளம் நடத்தி அதன் மூலம் கைவரப் பெற்ற எழுத்தாற்றலை கொண்டு, இந்த சமூகமும், மக்களும், அவர் வாசகர்களும் பயன்பெற ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு அதன் விளைவாக RIGHTMANTRA.COM என்ற புதிய தளம் ஒன்றை துவக்கியிருக்கிறார்.

கடந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் பிள்ளையார் சுழி போடப்பட்ட அந்த தளத்தில் சுய முன்னேற்றம், ஆன்மிகம், ஆலய தரிசனம், உடல் நலம் உள்ளிட்ட வாழ்க்கைக்கு பயன் தரும் பல்வேறு நல்ல விஷயங்களை, பதிவிட்டு வருகிறார்.

அவருக்கு இருக்கும் எழுத்து, அனுபவம், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரையுலக தொடர்புகளை வைத்து அவர் புதிதாக ஒரு வணிக ரீதியிலான சினிமா தளத்தையே வெற்றிகரமாக நடத்தலாம். ஆனால் அவரோ ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். சில பிரபல பொழுதுபோக்கு இணையங்கள் ஒரு பெரும் ஊதியத்தை தருவதாக கூறி அவரை தங்கள் தளத்தை ஏற்று நடத்த கூப்பிட்டபோது அவர் மறுத்துவிட்டார். "வர்த்தக நிர்பந்தங்களுக்கு உட்பட்டு என்னால் எதையும் எழுத முடியாது. என் மனசாட்சிக்கு விரோதமாக தகுதியற்ற நட்சத்திரங்களை, நடிகர் நடிகைகளை எல்லாம் புகழ்ந்து எழுதுவது என்னால் முடியவே முடியாத ஒன்று. பேனைப் பெருமாளாக்கும் விஷயங்கள், மற்றும் நடிகர் நடிகைகளை பற்றிய கட்டுக்கதைகளை கிசுகிசுக்களை எழுதுவது என்பதெல்லாம் கனவில் கூட நான் விரும்பாத ஒன்று. 

அணுவளவும் அடுத்தவர் உள்ளத்தை ஊனப்படுத்தும் எழுத்தை நான் எழுதவே மாட்டேன். எத்தனையோ சோதனைகளுக்கு இடையே இறைவன் எனக்கு எழுத்தாற்றலை அளித்தது இந்த அற்ப விஷயங்களை எழுதி சம்பாதிக்கவா? நிச்சயம் இல்லை. ஆன்மீகத்தையும், தன்னம்பிக்கையையும் பரவச் செய்வதே இனி என் பணி. இதில் வெற்றி தோல்வியை பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை" என்று உறுதியுடன் கூறுகிறார். அவரது மனவுறுதிக்கு ஒரு சல்யூட்!

சமீபத்தில் ஒரு நாள் பேசும்போது ONLYSUPERSTAR.COM  தளத்தை விரைவில் நிறுத்தப்போவதாக கூறினார். "நன்கு வளர்ந்து நிற்கும் ஒரு சூழ்நிலையில் எதற்கு நிறுத்துகிறீர்கள்? நல்ல விஷயங்களைத் தானே அங்கும் சொல்லி வருகிறீர்கள். நேரம் கிடைக்கும்போது அங்கும் பதிவுகள் இடலாமே..." என்று கூறி அவரது முடிவுக்கு தற்காலிக அணை போட்டிருக்கிறேன். முடிவு அவர் கையில் தான்.

அவரது RIGHTMANTRA.COM தளத்தை நமது தளம் போல நீங்கள் பாவித்து,  நல்லாதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது தளத்தில் பதிவிடப்படாத அன்று நீங்கள் எவரும் ஏமாற்றமடைய வேண்டியதில்லை. அவரது தளம் நிச்சயம் உங்களுக்கு விருந்து படைக்கும். அதே போல, அவரது தளத்தில் அவர் பதிவிடாத அன்று இங்கு நமது தளத்தில் உங்களுக்கு பதிவு இருக்கும். இரண்டு தளத்திலும் இருந்தால் இரட்டை விருந்து என நினைத்து சந்தோஷப்படுங்கள்.

இந்த பதிவை நான் துவக்கத்திலேயே அளிப்பதாக கூறியிருந்தேன். அவர் தான், "தளம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அது ஓரளவு தயாராகி நான் பதிவுகளை தினசரி போடத் துவங்கிய பின்னர் நீங்கள் பதிவை அளிக்கவும். அதுவும் கூட நீங்கள் விரும்பினால் தான்" என்று கூறியிருந்தார். தற்போது அவரது தளம் ஓரளவு தயாராகி பதிவுகளை போடத் துவங்கிவிட்டார். நீங்களும் படியுங்கள். அதில் கூறப்படும் நல்ல விஷயங்களை நான்கு பேரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பயன்பெறுங்கள்.

இணைக்கப்பட்ட படத்தில் கூறியுள்ளபடி, ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது. ஆனால், அந்த இடத்தில் ஒளி  இரண்டு மடங்காகிவிடும். அது போல அனைவரும் அவரவர் மனதில் உள்ள இருளை அகற்றி ஆன்மீக ஒளியை நம்மை சுற்றி பரவச் செய்வோம்.


நன்றி!

ஓம் சிவ சிவ ஓம் !

நம் வீட்டுக்கு வந்து இருக்கும் விருந்தாளிகள்!

| Oct 11, 2012

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTLI6NqKuAj97WT7Z4PX8o59o9vyW_LBlf5ukJAAgt5MI5GNCH8

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். முன்ன மாதிரி அடிக்கடி பதிவு போட முடியலைங்கிற வருத்தம், உங்களை விட எனக்கு அதிகமாகவே இருக்குது. விஜயதசமிக்குப் பிறகு, தினம் ஒரு குட்டிப் பதிவாவது வரும். அதனால அதுவரை கொஞ்சம் பொறுமை காக்கவும்.

இப்போது மகாளய பட்சம் நடந்து கொண்டு இருக்கிறது. ரொம்ப ரொம்ப விசேஷமான ஒரு நேரம் இது. சென்ற வருடம் இதைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவை , வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டி, அந்த பதிவின் 'லிங்க்'கை கீழே கொடுத்துள்ளேன்.

இதற்க்கு முன்பே, நீங்கள் படித்து இருந்தாலும் - திரும்பவும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.


வரும் திங்கள் கிழமை (15.10.2012 ) மகாளய அமாவாசை வருகிறது. இந்த தினத்தில் , நீங்கள் விரதமிருந்து இறைவனை வேண்டினால், அதன் பிறகு நடக்கும் அதிசயத்தை நீங்களே கண்கூடாக உணரமுடியும்...!


உங்கள் முன்னோர்களிடமிருந்து ஒரு அன்பு கடிதம்! விருட்சமாக வளர்ந்து நில்... ! An Extreme Special Article !


உங்கள் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...!
 =============================================
இன்று தினமலரில் ஒரு கட்டுரை படித்தேன். சில சமயங்களில் இறைவனும் அழுகிறாராம்.  அந்த பத்தியை கீழே கொடுத்துள்ளேன்... படித்துப் பாருங்கள்.
 

திருக்கோட்டியூர் நம்பி என்ற வைஷ்ணவ அடியார் எழுதிய வார்த்தா மாலை என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல் பெரும் உண்மைகளைக் கூறும். கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக? 

அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.

இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார்:
விருத்தி சோறோடே போகும்
சோறு உடம்போடே போகும்
உடம்பு மண்ணோடே போகும்
உயிர் கர்மத்தோடே போகும்
ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்.


உலகியலில் உழன்று லௌகீக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்பவர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!
=============================================
இந்த நேரத்திற்கு எவ்வளவு பொருத்தமான விஷயம் பார்த்தீர்களா?

எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நம் சந்ததியின் வித்து தொடங்கி - அது நீண்டு கொண்டு இருக்கிறது. நம் பரம்பரையே நல்லபடி இருக்க வேண்டும் என்பது - மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை. ஆனால், நிஜத்தில் நம் நிலைமை பரிதாபமாக இருந்தால், அந்த முன்னோர்களும் கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பார்களே..! நாம் அவர்களை முறைப்படி கூப்பிட்டால், அவர்களின் உதவி வேண்டும் என வேண்டினால், ஏங்கினால் -  ஓடி வந்து உதவ தயாராக இருப்பார்கள். அப்படிப்பட்ட விருந்தாளிகள் நம் வீடு தேடி வந்து இருக்கும் இந்த நேரத்தை , தவறாமல் பயன் படுத்துவோம்...!


மகாளய பட்சம் பற்றிய இன்னொரு பழைய கட்டுரையை படிக்க கீழே க்ளிக் செய்யவும்...!

கர்ம வினைகளை அழித்து - ஆரோக்கியம், மன நிம்மதி , செல்வ வளம் பெற - மகாளய பட்ச வழிபாட்டு முறைகள்


காலையில் நீங்கள் வீட்டை விட்டு வரும்போதே, ஒரு காக்கா உங்களை பார்த்து சத்தம் போட்டு கூப்பிடுதா பாருங்க..! சும்மா தற்செயலா கூப்பிடலை பாஸ்..! உங்களை பார்த்து தான் சத்தம் போடுது..! நம்மளையும் கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கோ குழந்தைங்கிற மாதிரி அதோட சத்தம் கேட்கும், கவனிச்சுப் பாருங்க!  

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை கவனியுங்கள்...! ஒரு வருடத்திற்குள் உங்கள் வாழ்க்கை மிக நல்ல நிலைக்கு முன்னேற்றம் அடையப் போவது உறுதி..!

உங்கள் நண்பர்களுக்கு , இந்த கட்டுரையை படிக்க சொல்லி எடுத்துக் கூறுங்கள்..! நல்ல விஷயம் நாலு பேருக்கு சென்றடைய உதவுவதும் ஒரு புண்ணிய காரியமே!


மீண்டும் விரைவில் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்..!

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com