Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அன்னதாதா ...... சுகிபவ..!

| Sep 14, 2012
வாழ்க்கை ஒரு விளையாட்டு. என்ன கொஞ்சம் வித்தியாசமான விளையாட்டு. என்ன ரூல்ஸ்ன்னு பல சமயம் புரிவதில்லை. யார் எதிரின்னு எப்போவுமே புரியிறதில்லை. சுத்தி இருக்கிற அத்தனை பேரும், ஆளு எப்போடா அசருவான், கவுத்திடலாம்னு தான் நினைச்சு தொலையறாங்க. வெறுமனே புத்தி பலம் மட்டும் போதும்ன்னு விளையாண்டு ஜெயிச்சிடலாம்ன்னு நினைச்சா, அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லைன்னு 'நங்'ன்னு குட்டு படும்போது தான் தெரியிது. 

கடவுள் கருணையில்லாதவன்னு எப்போவுமே ஒரு எண்ணம் இருக்கு. ஆளு எப்படி அடிச்சாலும் தாங்குறான், பாவம் போதும்ன்னு நினைக்கிறதே இல்லை. ஆனால், அந்த கருணைக் கடலின் கருணையில் தான் வண்டி எதோ இந்த மட்டிலுமாவது ஓடுதுன்னு , ரொம்ப லேட்டாத்தான் தெரிய வருது.

கேட்டா, இப்போத் தான் பக்குவம் வருதுன்னு சொல்றாங்க. யோவ், இந்த அடிக்கு மேலேயும் பக்குவம் வரலைன்னா, அப்புறம் என்னய்யா மனுஷன்!
கீழே விழுந்திட்டாலும், மீசைலே மண்ணு ஒட்டலைலே, போங்கப்பான்னு தான் போய்ட்டிருக்கோம். 

சரி, எதுக்கு நமக்கு மட்டும்
எதைத் தொட்டாலும் ஒன்னும் விளங்க மாட்டேங்குது....? ஒருக்க, ரெண்டு தடவை சரி.. ஏன்யா..எதை எடுத்தாலும் உருப்படாதுன்னா..? அப்படி என்னப்பா நாம தப்பு செஞ்சுட்டோம்..?

கிளி ஜோசியமா? நம்ம பேரு ராசிக்கு கிளி என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் பாத்து சொல்லுய்யா.. மறுபடியும் துபாய்க்கே போகலாமா? இல்லை அப்படியே இங்கிட்டு ஓரம் சாரமா வண்டியை ஓட்டிக்கிட்டு பொழுதை கழிச்சிடலாமா? என்னய்யா இது, கிளி ஜோசியம்னா ஒரு முருகர், பிள்ளையார் வருவாங்க.. இங்கே இப்படிப் படம் வந்து இருக்கு.. ! 
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcRlll5wlB8SAFUkAcClWDGH_l2xsvpYvvTcbw-nEFAufeIBf8Uj

சரி, காமெடியெல்லாம் போதும் -  நிஜமாகவே நிலைமை நாளுக்கு நாள் மோசமாகத் தான் போகுது பாஸ்...! ஏன் இப்படி? என்ன பண்ணினா இது நல்லாகும்?  

சில பேருக்கு வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட முயற்சிகள் எடுத்தாலும் அது கை கூடுவதில்லை. அத்தி பூத்தாற்போல எதோ ஒரு காரியம் நல்ல விதமாக முடியும் நிலை வரும். ஆனால் எங்கிருந்தோ ஒரு குறுக்கீடு வரும், திரும்ப முதல்ல இருந்த நிலைமைக்கும் ஒரு படி கீழே கொண்டுபோய் விடும்...! அது உத்தியோகமாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும் சரி. 

இந்த மாதிரி அமைப்பு - ஏதோ ஒரு சிலருக்கு அல்ல! பெரும்பாலோருக்கு. ஏன்? கலி காலமாச்சே. சுயநலம் மட்டுமே முக்கியம் என்று - பண்ணும் சில காரியங்கள், ஒட்டு மொத்தமாக ஒரு நாள் திருப்பி அடிக்கும் அல்லவா? அந்த மாதிரி அமைப்பு அந்த குறிப்பிட்ட நபர் அவர் செய்த பாவச் செயல்கள் மட்டும் இல்லாது , அந்த பரம்பரையிலும் யாராவது அவர்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது.

ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், சொத்து பிரிப்பது என்று வைத்துக் கொள்வோம். தன் கை ஓங்கி இருக்கிறது என்று உடன் பிறந்தவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவற்றை ஒருவர் அபகரித்து ஏமாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இது வட்டியும், முதலுமாக அவர் காலத்திலேயே, அவர்கள் சந்ததிக்குள் பிரளயம் ஏற்படுத்தும். அல்லது காலம் கடந்து நடந்தாலும், அவர் சந்ததியினரை குப்புற புரட்டி எடுக்கும்.தன் உடன் வளர்ந்த சகோதர சகோதரியையே ஒருவர் நயவஞ்சகமாக ஏமாற்ற முடியும் என்றால், மற்றவர்களை அவர் எவ்வளவு ஏமாற்ற முனைவர்?

அதிலும் ஒரு சிலர் நிலைமை ரொம்பவே பாவமாக இருக்கும். மனசு அறிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணலையே சார். எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னே தெரியாமல் கையை பிசைந்து கொண்டு மருகுவார்கள். பார்க்கவே பாவமாகத் தான் இருக்கும். ஓஹோ என்று இருந்த குடும்பம் இன்று ஒன்றுக்கும் இல்லாத நிலைக்கு வந்து விட்டது என்று கூறுவோமே..! அது எல்லாம் இந்த கதைதான். சொந்தத்தில் அத்தை, மாமா பெண் திருமண வயதில் இருக்க, பெரியோர்களால் திருமணம் நடத்த ஏற்கனவே உறுதி அளித்து இருந்து , அவர்களும் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல் பழக ஆரம்பித்து - ஆனால் உரிய திருமண காலத்தில் அந்தஸ்தை காரணம் காட்டி பையனோ /  பெண்ணோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும் இதே அளவு பாவமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சு கொதிப்பதால் வரும் வேதனை, அந்த இன்னொருவர் தலைமுறையை பாதித்து விடுகிறது.

இதைப்போன்ற சில தகாத செயல்கள் செய்தவர்களின் ஜாதக அமைப்பைப் பார்க்கும்போது - அவர்களின் ஜாதக கட்டங்களில் , கொடிய பாவ கிரகங்கள் என கருதப்படும் - செவ்வாயும், சனியும் இணைந்தோ - அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ அமைந்து இருக்கும். செவ்வாய்க்கு - 4 , 7 , 8 ஆம் பார்வையும் - சனிக்கு - 3 - 7 - 10 ஆம் பார்வையும் உண்டு. 


இந்த மாதிரி சனியும், செவ்வாயும் இணைந்து இருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லாத ஒரு சூழல் எப்போதுமே நிலவும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்க்கு பரிகாரம் என்று பார்த்தால் - முறையான இறைவழிபாடு, முடிந்த அளவுக்கு திருவண்ணாமலை கிரிவலம்,
சதுரகிரி செல்வது போல பவித்திரமான இறை தரிசனம் செய்வது. மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அன்ன தானம் செய்வது. மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் எவ்வளவு பெரிய விஷயம், ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை படித்துப் பாருங்கள். 
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQXQA2LWt6I35iAVie6ovdjYvmVu-tkI-JtHU9pLoxdus6ufNDyvA

* அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

* அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

* பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

* பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

* பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

* பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

* கடவுள் ஒருவரே! உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில்ஜீவஇம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடேஉயர்ந்தவழிபாடாகும்.

* மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

* எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும்.மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.  


நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் - கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே.  ================================= 

நம் வாசகர்கள் அனைவரிடம் பகிர்ந்து கொள்வதற்காக , நண்பர் கோடியில் ஒருவன் அவர்கள் இந்த கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்பி இருந்தார். அன்னதானத்தின் , பகிர்ந்துண்ணலின் மகத்துவம் பற்றி அற்புதமாக திருமதி பாரதி பாஸ்கர் தினகரனுக்காக எழுதியுள்ள கட்டுரை. அவசியம் படித்துப் பாருங்கள்.முழுவதும் பொறுமையாகப் படித்து உள்வாங்குங்கள். பல சுவாரஸ்யமான தகவல்கள் பொதிந்து இருக்கின்றன.  

கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து அதன் பிறகு மவுசில் ரைட் க்ளிக் செய்து வியூ இமேஜ் க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு படத்தை க்ளிக் செய்ய , கட்டுரை நீங்கள் படிக்கும் அளவுக்கு பெரிதாகத் தெரியும்.

மிக அருமையான இந்த கட்டுரையை நமக்காக அனுப்பிய நண்பர். கோடியில் ஒருவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..!
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!13 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

THEIVAM said...

Rishi sir marupadiyum singam kalam irankiduchu thool kilapunga sir, kuda nanga irukkom

THEIVAM said...

பாரதி பாஸ்கர் அவர்களின் கட்டுரையை படிக்கும்போது என் தந்தையின் நினைவு வந்து என் கண்கள் கலங்கின இதே வார்த்தைகளை நான் சிறுவனாக இருக்கும் போது நிறைய முறை சொல்லி இருக்கிறார். என் கண் முன்னே செய்தும் காண்பித்து இருக்கிறார், ஆனால் நான் அந்த அளவுக்கு இல்லைன்னு என் மனசுக்கு தெரிஞ்சு அழறது. என் கண்களை என் தந்தையின் வடிவில் இருந்து திறந்ததுக்கு நன்றி ரிஷி சார்

Rishi said...

கோபால் சார்! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. படக், படக்குன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிடுறீங்க. அது தான் பயமா இருக்கு. உங்களை மாதிரி நல்லவங்க கூட இருக்கிறப்போ, களத்துல இறங்கிடலாம். அதுக்கென்ன, தாராளமா!

Balasubramanian Pulicat said...

Wonderful article. The attachment from Dinakaran is also good. Balasubramanian pulicat, Riyadh.

Jaiganesh said...

நீங்கள் ஒன்று புரிய வைக்கவும்,சனி(மகரம்) வீட்டில் செவ்வாய் உச்சமகா உள்ளது,அப்போது நிகழ்வுகள்?
ராஜா

Bhavani said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி

Duraisamy said...

ஒரு மனிதன் ஆன்மீகத்தின் பக்கம் திரும்ப வேண்டுமென்றால், அவன் உடலும் மனதும் கட்டுப்பட வேண்டும். பசியும், காமமும் அடங்கினால்தான் , சிந்தனை ஆன்மீகத்தின் மீது நிலைக்கும். காமத்தை அடக்க வழிகள் உண்டு. (நன்றி - மனவளக்கலை மன்றம்), ஆனால் பசியை அடக்க வழி இல்லை. எனவே பசித்தவனுக்கு உணவிட்டு, அவனை ஆன்மீகத்தில் திருப்புவதன் மூலம், புண்ணியம் நிச்சயமாகக் கிடைக்கும். சில பேர் இதனை வீண் வேலை என்றும், சோம்பேறிகளை உருவாக்கும் செயல் என்று நினைக்கின்றனர். சில சோம்பேறிகள் பலனடையலாம்- மறுப்பதற்கில்லை, ஆனால் தானம் பெறுபவனின் தகுதியை அறிந்த பின்புதான் தானம் செய்ய வேண்டும் என நினைத்தால், நாம் தானமே செய்ய முடியாது. கற்பிக்கும் ஆசிரியர் எல்லோருக்கும் கற்பிக்கிறார், பல மாணவர்கள் பயனடைகிறார்கள், சிலர் பயன்டைவதில்லை. அதற்காக ஆசிரியர் கற்பிப்பதைக் கைவிட முடியாது.
ஏற்கனவே நிறையப் பேர் அன்னதானம் செய்யும் இடத்தில் நீங்களும் போய் அன்னதானம் செய்வதை விட ஆதரவற்ற அனாதை விடுதிகளில் சென்று விசாரித்து, மற்றவர்கள் யாரும் அன்னதானமிடாத நாளில் அன்னம் தானம் இடுவது நல்லது. இதன் மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.

perumal shivan said...

eappothum naan kalnenjakkaaran endru enakku naane ninaippathundu !
athai um ovvoru pathivum avvapothu poypathundu ! nanri sonnal pothathu vanaga thonrugirathu rishi avargale!

senthil senthil said...

miha arumayana pathivu

கோடியில் ஒருவன் said...

தாமதாமான பின்னூட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

கண்ணாடியில் முகம் பார்ப்பது போல இந்த தளத்தை தினசரி பார்க்கும் வழக்கம் நான் கொண்டிருந்தாலும் அடுத்தடுத்த பணிச் சுமைகளால் பின்னூட்டமிட முடியவில்லை.

தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்று சொல்வார்கள். காரணம், மனிதன் போதும் என்று சொல்வது இது ஒன்றைத் தான். அன்னதானத்தால் கொடும்பாவங்களில் இருந்து தப்பி கடைசி நேரத்தில் சொர்க்கம் புகுந்தவர்கள் பலர் உண்டு.

ஆசிரியர் கூறியதை போல நமது கர்மாவையே துடைத்தெறியும் சக்தி அன்ன தானத்திற்கு உண்டு.

நான் படித்து பயன் பெற்ற தினகரன் - ஆன்மீக மலரில் வந்த திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் கட்டுரையை நீங்கள அனைவரும் படித்து பயன் பெறவேண்டும் என்றே ஆசிரியருக்கு அதை அனுப்பினேன். அப்புறம் மறந்துவிட்டேன். ஆனால் அவர் சரியாக நினைவு வைத்திருந்து இங்கு அளித்திருக்கிறார்.

நமக்கோ நமது குடும்பத்தினருக்கோ வரவிருக்கும் வினைகளை சக்தியற்று போகச் செய்வதில் அன்னதானத்திற்கு பெரும் பங்குண்டு.

நண்பர் துரைசாமி கூறியிருக்கும் பின்னூட்டத்தில் கருத்துக்கள் அபாரம். ஆணித்தரம். நன்றி நண்பரே.

அப்புறம் ரிஷி சார்.... எங்கே உங்க பாசமலரை இன்னும் காணோம்?

- கோடியில் ஒருவன்

இராஜராஜேஸ்வரி said...

கருத்துக்கு விருந்தளித்த
அருமையான பகிர்வு ..

giridharan mahadevan said...

நமக்கோ நமது குடும்பத்தினருக்கோ வரவிருக்கும் வினைகளை சக்தியற்று போகச் செய்வதில் அன்னதானத்திற்கு பெரும் பங்குண்டு.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com