Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு!

| Sep 17, 2012

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நம் வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும், ஒரு காரணம் இருக்கும். கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அது. சமீபத்தில் ஜப்பானில் சுனாமியின் கோர தாண்டவத்திற்க்குப் பிறகு, அங்கு நடந்த ஒரு விஷயம் , ஜப்பான் இந்த உலகத்திற்கே கொடுத்த ஒரு பாடம். டிசிப்ளின். நிவாரண உதவியாக உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று வாங்குகின்றனர். கூச்சல், குழப்பம், தள்ளு முள்ளு எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு கிடைக்காமல் உணவுப் பொருட்கள் காலியான போது, ஒரு சிலர் - தனக்கு ஒன்று போதும். மிகுதியாக உள்ளதை இவருக்கு கொடுங்கள், என்று திருப்பிக் கொடுத்தனர். மேலும் இன்னொரு அதிசயம். நம் ஊரில் ஒவ்வொரு முறையும் நடக்குமே, நெஞ்சில் அறைந்து கொண்டு , கண்ணீர் பிளிற, ஒப்பாரி வைப்பார்களே - "கடவுளே உனக்கு கண் இல்லையா"? என்று பார்ப்பவர் நெஞ்சம் பதற - அந்த மாதிரி ஒரே ஒருவர் கூட புலம்பவில்லை. மவுனமாக, அந்த வலியை ஜீரணித்து, அதன் பிறகு அதில் இருந்து மீண்டு வந்து , சரித்திரம் படைக்கிறார்கள்.


WHATEVER HAPPENS LIFE MUST MOVE ON

சென்ற வாரம் ஒருநாள், நண்பர் சுந்தர் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் ஒரு விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் குடும்பத்தினர் பழனிக்கு யாத்திரை சென்று திரும்பும்போது ட்ரெயினில் , அவர்களது லக்கேஜ் பேக் ஒன்று திருட்டு போயிருக்கிறது. அதேநாளில் இங்கே சென்னையில் இவரது பாக்கெட்டில் இருந்த ஒரு பொருளும் தவறி தொலைந்து போயிருக்கிறது. ஒரே நாளில், அடுத்தடுத்த இழப்புக்கள், கொஞ்சம் அவரை ஆடிப் போக வைத்து இருக்கின்றன. இருந்தாலும், நடந்த நிகழ்வுக்கு நிச்சயம் எதோ ஒரு காரணம் இருக்கும், என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு இருக்கிறார்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி, ஒரு பெரிய இழப்புக்குப் பதிலாக இதோடு முடிந்தது - கடவுள் கருணை மிக்கவன் என்று நினைத்தாராம். என்னே ஒரு மனப் பக்குவம்!

இதே கருத்தை வலியுறுத்தும், ஒரு அருமையான கதையை , அவர் தனது தளத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார். நமது வாசகர்களும் தெரிந்து கொள்ளும்விதமாக நமது தளத்திலும், இங்கே பகிர்ந்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள். 

=================================================
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில்   இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான். முதலில்,  ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில்  நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார்.  என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை  தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.

இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.
————————————————-
நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

Source : Onlysuperstar.com

அன்னதாதா ...... சுகிபவ..!

| Sep 14, 2012
வாழ்க்கை ஒரு விளையாட்டு. என்ன கொஞ்சம் வித்தியாசமான விளையாட்டு. என்ன ரூல்ஸ்ன்னு பல சமயம் புரிவதில்லை. யார் எதிரின்னு எப்போவுமே புரியிறதில்லை. சுத்தி இருக்கிற அத்தனை பேரும், ஆளு எப்போடா அசருவான், கவுத்திடலாம்னு தான் நினைச்சு தொலையறாங்க. வெறுமனே புத்தி பலம் மட்டும் போதும்ன்னு விளையாண்டு ஜெயிச்சிடலாம்ன்னு நினைச்சா, அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லைன்னு 'நங்'ன்னு குட்டு படும்போது தான் தெரியிது. 

கடவுள் கருணையில்லாதவன்னு எப்போவுமே ஒரு எண்ணம் இருக்கு. ஆளு எப்படி அடிச்சாலும் தாங்குறான், பாவம் போதும்ன்னு நினைக்கிறதே இல்லை. ஆனால், அந்த கருணைக் கடலின் கருணையில் தான் வண்டி எதோ இந்த மட்டிலுமாவது ஓடுதுன்னு , ரொம்ப லேட்டாத்தான் தெரிய வருது.

கேட்டா, இப்போத் தான் பக்குவம் வருதுன்னு சொல்றாங்க. யோவ், இந்த அடிக்கு மேலேயும் பக்குவம் வரலைன்னா, அப்புறம் என்னய்யா மனுஷன்!
கீழே விழுந்திட்டாலும், மீசைலே மண்ணு ஒட்டலைலே, போங்கப்பான்னு தான் போய்ட்டிருக்கோம். 

சரி, எதுக்கு நமக்கு மட்டும்
எதைத் தொட்டாலும் ஒன்னும் விளங்க மாட்டேங்குது....? ஒருக்க, ரெண்டு தடவை சரி.. ஏன்யா..எதை எடுத்தாலும் உருப்படாதுன்னா..? அப்படி என்னப்பா நாம தப்பு செஞ்சுட்டோம்..?

கிளி ஜோசியமா? நம்ம பேரு ராசிக்கு கிளி என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் பாத்து சொல்லுய்யா.. மறுபடியும் துபாய்க்கே போகலாமா? இல்லை அப்படியே இங்கிட்டு ஓரம் சாரமா வண்டியை ஓட்டிக்கிட்டு பொழுதை கழிச்சிடலாமா? என்னய்யா இது, கிளி ஜோசியம்னா ஒரு முருகர், பிள்ளையார் வருவாங்க.. இங்கே இப்படிப் படம் வந்து இருக்கு.. ! 
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcRlll5wlB8SAFUkAcClWDGH_l2xsvpYvvTcbw-nEFAufeIBf8Uj

சரி, காமெடியெல்லாம் போதும் -  நிஜமாகவே நிலைமை நாளுக்கு நாள் மோசமாகத் தான் போகுது பாஸ்...! ஏன் இப்படி? என்ன பண்ணினா இது நல்லாகும்?  

சில பேருக்கு வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட முயற்சிகள் எடுத்தாலும் அது கை கூடுவதில்லை. அத்தி பூத்தாற்போல எதோ ஒரு காரியம் நல்ல விதமாக முடியும் நிலை வரும். ஆனால் எங்கிருந்தோ ஒரு குறுக்கீடு வரும், திரும்ப முதல்ல இருந்த நிலைமைக்கும் ஒரு படி கீழே கொண்டுபோய் விடும்...! அது உத்தியோகமாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும் சரி. 

இந்த மாதிரி அமைப்பு - ஏதோ ஒரு சிலருக்கு அல்ல! பெரும்பாலோருக்கு. ஏன்? கலி காலமாச்சே. சுயநலம் மட்டுமே முக்கியம் என்று - பண்ணும் சில காரியங்கள், ஒட்டு மொத்தமாக ஒரு நாள் திருப்பி அடிக்கும் அல்லவா? அந்த மாதிரி அமைப்பு அந்த குறிப்பிட்ட நபர் அவர் செய்த பாவச் செயல்கள் மட்டும் இல்லாது , அந்த பரம்பரையிலும் யாராவது அவர்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது.

ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், சொத்து பிரிப்பது என்று வைத்துக் கொள்வோம். தன் கை ஓங்கி இருக்கிறது என்று உடன் பிறந்தவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவற்றை ஒருவர் அபகரித்து ஏமாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இது வட்டியும், முதலுமாக அவர் காலத்திலேயே, அவர்கள் சந்ததிக்குள் பிரளயம் ஏற்படுத்தும். அல்லது காலம் கடந்து நடந்தாலும், அவர் சந்ததியினரை குப்புற புரட்டி எடுக்கும்.தன் உடன் வளர்ந்த சகோதர சகோதரியையே ஒருவர் நயவஞ்சகமாக ஏமாற்ற முடியும் என்றால், மற்றவர்களை அவர் எவ்வளவு ஏமாற்ற முனைவர்?

அதிலும் ஒரு சிலர் நிலைமை ரொம்பவே பாவமாக இருக்கும். மனசு அறிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணலையே சார். எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னே தெரியாமல் கையை பிசைந்து கொண்டு மருகுவார்கள். பார்க்கவே பாவமாகத் தான் இருக்கும். ஓஹோ என்று இருந்த குடும்பம் இன்று ஒன்றுக்கும் இல்லாத நிலைக்கு வந்து விட்டது என்று கூறுவோமே..! அது எல்லாம் இந்த கதைதான். சொந்தத்தில் அத்தை, மாமா பெண் திருமண வயதில் இருக்க, பெரியோர்களால் திருமணம் நடத்த ஏற்கனவே உறுதி அளித்து இருந்து , அவர்களும் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல் பழக ஆரம்பித்து - ஆனால் உரிய திருமண காலத்தில் அந்தஸ்தை காரணம் காட்டி பையனோ /  பெண்ணோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாலும் இதே அளவு பாவமாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சு கொதிப்பதால் வரும் வேதனை, அந்த இன்னொருவர் தலைமுறையை பாதித்து விடுகிறது.

இதைப்போன்ற சில தகாத செயல்கள் செய்தவர்களின் ஜாதக அமைப்பைப் பார்க்கும்போது - அவர்களின் ஜாதக கட்டங்களில் , கொடிய பாவ கிரகங்கள் என கருதப்படும் - செவ்வாயும், சனியும் இணைந்தோ - அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ அமைந்து இருக்கும். செவ்வாய்க்கு - 4 , 7 , 8 ஆம் பார்வையும் - சனிக்கு - 3 - 7 - 10 ஆம் பார்வையும் உண்டு. 


இந்த மாதிரி சனியும், செவ்வாயும் இணைந்து இருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லாத ஒரு சூழல் எப்போதுமே நிலவும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்க்கு பரிகாரம் என்று பார்த்தால் - முறையான இறைவழிபாடு, முடிந்த அளவுக்கு திருவண்ணாமலை கிரிவலம்,
சதுரகிரி செல்வது போல பவித்திரமான இறை தரிசனம் செய்வது. மேலும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அன்ன தானம் செய்வது. மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் எவ்வளவு பெரிய விஷயம், ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை படித்துப் பாருங்கள். 
 https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQXQA2LWt6I35iAVie6ovdjYvmVu-tkI-JtHU9pLoxdus6ufNDyvA

* அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

* அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

* பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

* பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

* பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

* பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

* கடவுள் ஒருவரே! உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில்ஜீவஇம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடேஉயர்ந்தவழிபாடாகும்.

* மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

* எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும்.மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.  


நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் - கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே.  ================================= 

நம் வாசகர்கள் அனைவரிடம் பகிர்ந்து கொள்வதற்காக , நண்பர் கோடியில் ஒருவன் அவர்கள் இந்த கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்பி இருந்தார். அன்னதானத்தின் , பகிர்ந்துண்ணலின் மகத்துவம் பற்றி அற்புதமாக திருமதி பாரதி பாஸ்கர் தினகரனுக்காக எழுதியுள்ள கட்டுரை. அவசியம் படித்துப் பாருங்கள்.முழுவதும் பொறுமையாகப் படித்து உள்வாங்குங்கள். பல சுவாரஸ்யமான தகவல்கள் பொதிந்து இருக்கின்றன.  

கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து அதன் பிறகு மவுசில் ரைட் க்ளிக் செய்து வியூ இமேஜ் க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு படத்தை க்ளிக் செய்ய , கட்டுரை நீங்கள் படிக்கும் அளவுக்கு பெரிதாகத் தெரியும்.

மிக அருமையான இந்த கட்டுரையை நமக்காக அனுப்பிய நண்பர். கோடியில் ஒருவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..!
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!பயணங்கள் முடிவதில்லை..!

| Sep 11, 2012
சக்கரம் - மனிதனின் கண்டுபிடிப்பில் மிக மகத்தான ஒன்று. சக்கரம் கண்டுபிடித்த பிறகு பயணங்கள் எளிதாகின. நாகரீகம் வளர்ந்தது. இன்று விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் நிலையில், துரித பயணம் நமக்கு பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பு எல்லாம் கிராமங்களில் மாட்டு வண்டியில் தான் எல்லா பயணமுமே. அது ஆஸ்பத்திரியாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி. ஆனால் இப்போது நூறு கிலோ மீட்டர் தூரம் கூட ஒரு மணி நேரத்தில் செல்ல முடிகிறது. வாகனம் அப்படி. சாலை வசதிகள் அப்படி... ! விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதன் இன்னொரு பக்கம்.....  விபத்துக்கள் - அநியாயமாக தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...!

ஐயா, நாம நல்லாத் தான் காரோ, டூ வீலரோ ஓட்டுறோம்..! எதிர்ல வர்றவரும் அதே நிதானத்தில் வந்தா பரவா இல்லை. இல்லைனா? சிவ சிவான்னு நாம பாட்டுக்கு 'பைக்'ல போறோம்.. காத்து இருந்த மாதிரி நாய் உள்ளே புகுந்தா..? தலை எழுத்து , விழுந்து எந்திக்கனும்னு..! என்ன சார் பண்றதுன்னு சொல்றீங்களா? ஆனா, அதுக்கு நாம் கொடுக்கும் விலை, விலை மதிப்பே இல்லாததாச்சே ...! சும்மா விட முடியாது இல்லையா?

நண்பர் ஒருத்தர் சமீபத்தில் கேட்டு இருந்தார்... சார், அடிக்கடி இரவு பயணம் பண்ண வேண்டி இருக்குது. உத்தியோகம் அப்படி... ஆனா, ஒரு நாள் கூட நிம்மதியா போக முடியலை. ஒவ்வொரு தரம் ட்ரைவர் ப்ரேக் அடிக்கும்போதும் உயிர் போய் திரும்ப வருது... ஒவ்வொரு தடவையும் ஹார்ட் அட்டாக் வந்திடும்போல....! அதுக்கு ஏத்த மாதிரி , லாரியோ - காரோ அப்பளம் மாதிரி நொறுங்கிப் போய் ரோட்டில கிடக்குறதைப் பார்க்கிறப்போ... எனக்கு என் புள்ளை, குட்டி ஞாபகம் தான் உடனே வருது. .. "கடவுளே , எனக்கும் என் குடும்பத்துக்கும், எங்க பரம்பரைக்கும், ஏன் உலகத்துல இருக்கிற யாருக்கும்  எந்த காலத்திலயும், இப்படி ஒரு விபத்து நடந்துடவே கூடாதுன்னு வேண்டிக்கிடுவேன்.... இதுக்கு ஏதாவது ஆன்மீக ரீதியாக ஒரு நல்ல பூஜை , பரிகாரம் இருந்தா சொல்லுங்க சார்"னு கேட்டார்..!

அனேகமா நாம் எல்லோரும் இந்த வேண்டுதலை கடவுள் கிட்டே கண்டிப்பா ஒரு தடவையாவது வைத்து இருப்போம்...! "கடவுளே நல்லபடியா, பயணம் முடிச்சு வரணும்...!"

சரி, இதுக்கு ஒரு அருமையான எளிய வழிமுறை இருக்கு.
நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம், விபத்து, துர் மரணம் எந்த காலத்திலும் நிகழாது. சில வருடங்களுக்கு முன்பு சதுரகிரி சென்று இருந்தபோது, அங்கு ஒரு துறவியிடம் நான் இதை கேட்டபோது, அவர் எனக்கு சொல்லிய விஷயம் இது....! இதை நினைவு கூறும் இந்த நாளிலும், அந்த துறவியின் முகமும், சந்தன மகாலிங்கர் சந்நிதியில் மூலிகை மணம் கமழ, சாரல் மழையின் சட சட சப்தமும், கனன்று கொண்டிருந்த நெருப்பில் தூவப்பட்ட சாம்பிராணியின் நறுமணமும் - இன்றும் எனக்கு ஒரு கணம் சிலிர்க்கும் விஷயம்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதை, அந்த சிவன் எனக்கு அளித்த பாக்கியமாகவே கருதுகிறேன். ! இந்த பதிவினைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் ..!

ஒரு வெற்றிலையில் கொஞ்சம் பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறும், ஒரு எலுமிச்சம்பழமும் வைத்து அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்துக் கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும்.

தியானித்து அதன் பிறகு, திருநீறில் கொஞ்சம் வாயில் போட்டு, நெற்றியிலும் பூசிக்கொள்ளவும். பின்பு அருகில் இருந்த தண்ணீரை கொஞ்சம் அருந்திக்கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம்பழத்தை உங்களுடன் பயணத்தின்போது வைத்துக் கொள்ளலாம். நீங்கள் சொந்த வாகனம் வைத்து இருந்தால், அந்த எலுமிச்சம் பழத்தை வாகனத்திலேயே வைத்துக் கொள்ளலாம்.

ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :

த்ர்யம்பகம் யஜா மஹே ஸுகந்திம்  புஷ்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் - ம்ருத்யோர் முக்ஷி ய மாம்ருதாத்: 


இந்த மந்திரத்தை மனதுக்குள் 108 முறை ஜெபிக்கவேண்டும். 

இந்த மந்திரத்திற்குப் பெயர் மஹா ம்ருத்யுஞ்ஜெய  மந்திரம்.
வெற்றிலை வெறும் வெற்று இலை அல்ல. வெற்றியை நமக்கு அளிக்கும் இலை. சீதாப் பிராட்டியே அனுமனுக்கு அசோகவனத்தில் வெற்றிலை மாலையணிவித்து, வெற்றியுடன் காரியம் முடிய ஆசி பண்ணினாராம்.  வெற்றிலை அப்பேர்ப்பட்ட சக்தி கொண்ட மூலிகை. எலுமிச்சை - ராஜ கனி என்று , மந்திரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும் கனி. பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட விபூதி, எலுமிச்சை, வெற்றிலை மூன்றும் ஒரே இடத்தில் இணையும்போது - மந்திரங்களை ஈர்க்கும் மகத்துவம் அவற்றுக்கு கிடைக்கிறது. ஜெபித்த கையோடு - நீர் அருந்த, அந்த அதிர்வு அப்படியே ஜெபிப்பவர்களின் உடம்பில் தங்கி - மிகப் பெரும் கவசமாகி விடுகிறது.

வாகன பயணம் என்று இல்லை. எப்போதெல்லாம், நோய் , நொடி வேதனை என்று குடும்பத்தில் சூழல் நிலவுகிறதோ - அந்த நேரங்களில் மேற்கூறிய ஜெபத்தை பண்ணி விபூதி பூசலாம்.

சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த ஸ்லோகம் இது.  இதை தொடர்ந்து ஜெபிக்க, ஜெபிக்க உங்கள் உடம்பில் உள்ள எந்த நோயும் பஞ்சாய்ப் பறந்து விடுவது நிச்சயம். ஜெபிக்கும் காலங்களில் அசைவம் தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், இந்த கால கட்டத்தில், சிவனின் அருட்பார்வை உங்கள் மேல் விழத் தொடங்குகிறது. நம்மால் முடிந்த அளவுக்கு நாடி சுத்தியுடன் இருப்பது மிக முக்கியம். நோய் நொடியில்லாத, நீண்ட ஆயுள் நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்து , அந்த பரம சிவனின் மேலான அருளுக்குப் பாத்திரமாவோம்..!

நீங்கள் முதலில் இதை நடைமுறைப் படுத்திப் , பின் தகுதி உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கலாம்! 

மீண்டும் சந்திப்போம்! 

ஓம் சிவ சிவ ஓம் !
வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !ரகசியமாய் ஒரு ரகசியம்

| Sep 10, 2012
அன்பு உள்ளம் கொண்ட வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். டோனோக்ராப் என்றொரு கருவி இருக்கிறது. ஒலி வடிவத்தை வரி வடிவாக கொண்டு வரும். ஒரு குழாய் போன்ற கருவியில் நீங்கள் ஒரு வார்த்தை அல்லது எழுத்தை உச்சரித்தால், அதன் அதிர்வுக்கு ஏற்ப , மணல் போன்ற துகள்கள் அந்த அதிர்வை உள் வாங்கி அந்த எழுத்தை வரி வடிவமாக்கித் தரும். உலகின் தொன்மையான மொழிகளில் உள்ள எழுத்துக்களில் பல எழுத்துக்கள் அப்படியே வருகின்றதாம். நமது தமிழ், சமஸ்கிருதம் உட்பட.நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. அந்த கால மனிதர்களின் திறமையை நினைத்து , நாம் பெருமிதம் கொள்ளலாம்.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நமது ஓம் உச்சரிக்கும்போது , அது கிட்டத்தட்ட ஸ்ரீ சக்கரத்தை வரிவடிவமாக தருகிறது என்கிறார்கள். இது உண்மையோ , பொய்யோ தெரியாது. ஆனால், நிச்சயமாக நமது மந்திரங்களுக்கு மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் சக்தி இருப்பதை , நாம் மறுக்க முடியாது.

மனதுக்கு திடம் கொடுப்பவை - மன திறம் - மந்திரம் என்பது. சில மந்திரங்களை , நாம் குறிப்பிட்ட அதிர்வில் ஜெபிக்க, அந்த சக்தி நம் செயல்களை முறைப்படுத்தி, நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.

நம் எண்ணியது ஈடேற வேண்டுமெனில், தினமும் ஒரு அரை மணி நேரம், நம்மை - நம் மனதை உற்று நோக்க வேண்டும். மனம் முதலில் அலை பாயும், நாள் ஆக ஆக அது நம் வசப்படும். நம் சொல் பேச்சு கேட்கும். நாம் என்பது , நம் ஆத்மா. ஆத்மா இருப்பதையே நாம் உணராமல் இருந்தால், நம் வாழ்க்கையும் ஏனோ, தானோ வென்றுதான் இருக்கும்.

மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா? அந்த கயிறு போன்றதுதான் நம் ஆத்மா. முத்துக்கள், நம் எண்ணங்கள் போன்றவை. ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியில் நம் ஆத்மாவை நம்மால் உணர முடியும். அப்படி என்றால், என்ன அர்த்தம். ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி தேவை. அல்லது எண்ணங்களே இல்லாத நிலையை அதிகமாக்க வேண்டும். அந்த நிலைதான் - நம்மை பரவசப் படுத்தும் நிலை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் மூலாதாரத்தில் ஒரு மிகப் பெரும் சக்தி சுருண்டு கிடக்கிறது. முறையான மூச்சுப் பயிற்சியினாலும், மந்திர அதிர்வாலும், இந்த சக்தி தூண்டப்பட்டு மேல் நோக்கி எழும்பும். இந்த நிலையை அடைந்தவருக்கு அவர் எடுக்கும் முயற்சியில் தோல்வியே கிடையாது எனலாம். 

மனம் என்பது ஒளிக்கற்றை என்று எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒளிக் கற்றைக்கு ஒளியை சப்ளை செய்யும் டார்ச் லைட் போன்றது அந்த மூல ஆதாரமே. ஆத்ம ஒளி என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த அண்ட சராசரம் முழுவதும் வியாபித்து இருப்பதும், ஆலயங்களில் குவிக்கப்பட்டு இருப்பதும் இந்த ஒளி வெள்ளமே..! இந்த ஒலி / ஒளிக்கற்றையை நாம் ஈர்க்கவேண்டும் எனில், நம் உடம்பு ஒரு ஆன்ட்டெனாவாக மாற வேண்டும். அப்படி மாற்றத் தான் நமக்கு தியானமும், மந்திர ஜெபமும்...

நாம் இந்த பிறவியில் செய்யும் நன்மை,  தீமை எல்லாமே நம் மனதில் பதிவாகிறது இல்லையா? இதை யாரும் மறுக்க முடியாது. இறந்த பிறகும், இந்த நினைவடுக்குகள் அப்படியேதான் நம் ஆன்மாவில் இருக்கின்றன. நாம் அடுத்த பிறவி எடுக்கும்போது, நமது நல்ல கெட்ட பலன்களுக்கு ஏற்ப, நம் எண்ணங்களை, செயல்களை மனது தீர்மானித்து, நம்மை செயல்பட வைக்கிறது. நவ கிரகங்கள் நம் ஜாதக கட்டங்களில் உட்கார்வதும் அதற்க்கேற்ப்பத்தான். நம் தலைஎழுத்து அல்லது விதி எனப்படுவது , இவ்வாறாக எழுதப்படுகிறது.

முறையான தியானம் மூலம், நம் மனதை விழிப்படையச் செய்வதன் மூலம், நமது இதற்க்கு முந்தைய பிறவியின் நிலையைக் கூட நம்மால் உணர முடியும். நாம் எவ்வளவோ புண்ணியங்கள் செய்து இருக்க கூடும் அல்லவா? அதற்குரிய பலன்களை நாம் அனுபவிக்க வேண்டும் அல்லவா? எதோ, வந்தோம் வாழ்ந்தோம் என்று இருக்கவா நாம் பிறந்தோம்...? I want to be the best என்று தேடுகிறோம் அல்லவா? நம்மைத் தேடும் அந்த மகத்தான முயற்சி ஆரம்பிப்பது - அந்த தியானப் பயிற்சியில் தான்.

தினமும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து - நம்மை முதலில் கவனிப்போம். மனது என்ன எண்ணுகிறது என்று அதன் பின்னாலேயே சென்று , அந்த எண்ணங்களை கவனிப்போம்... அந்த எண்ணங்கள் எங்கு இருந்து பிறக்கிறது என்று அதன் பிறப்பிடத்தை கூர்ந்து நோக்குவோம்... அங்கு நம்மைத் திருத்த ஆரம்பிப்போம்..

இந்த தியானம் தான், நீங்கள் உங்களுக்கு இந்த பிறவியில் சேர்க்க விருக்கும், உங்களுக்காக சேர்க்க விருக்கும் மிகப் பெரிய பொக்கிஷம்....!

அதிகாலை எழுந்து, தியானம் முடித்து - ஒரு அரை மணிநேரம், தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்...! விழிப்படைந்த மனம் உங்களுடன் பேச ஆரம்பிக்கும். அதன் பிறகு, உங்கள் வாழ்க்கையை நீங்கள் புரட்டிப் போட முடியும். நீங்கள் நினைத்த எந்த செயலையும், வெற்றிகரமாக முடிக்க முடியும்....

நம்மை முதலில் அறிவோம்..! உலகெங்கும் வியாபித்து இருக்கும் அந்த இறையை, நம் உள்ளே கண்டு கொள்ள முடியும்...

இதன்பிறகு, நம் செயல்களில் கிடைக்கவிருக்கும் நேர்த்திக்கு , இந்த உலகமே நம் அடி பணியும்..!
========================================
என் நண்பர் ஒருவர் சென்ற மாதம் மெடிக்கல் செக் செய்து வந்தார். அவருக்கு வயது நாற்பது தான் இருக்கும். உடம்பில் சுகர் அதிகமாகிவிட்டது. இனி வாழ்க்கை முழுவதும் மருந்து, மாத்திரை, ஊசி, உணவுக் கட்டுப்பாடு எல்லாம் கடை பிடித்தே ஆக வேண்டுமாம். சுகர் வரவே கூடாது என்றால், தினமும் 45 நிமிடம் வாக்கிங் போனால் போதும். வாழ்க்கை முழுவதும் சுகர் பிரச்னை நம் பக்கமே வராது என்கிறார்கள் டாக்டர்கள்...  நாம் தான், இதை தீர்மானிக்க வேண்டும். தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டுமா...? இல்லை மாதம் பத்தாயிரம் மருந்துக்கு அழவேண்டுமா..? 

ஏழுமணி வரை தூங்கிவிட்டு , காலை டிபன் கூட சாப்பிடாமல் , அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் பழக்கம் இருப்பவர்கள் அனைவரும், உடனடியாக மாறத் துவங்குங்கள்... சுவர் இருந்தால்தான் படம் ஓட்ட முடியும்..!
==========================================


சில தினங்களுக்கு முன்பு ஒரு வயதான பெரியவர் , நம் வாசகர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். மிகுந்த சிரத்தையுடன் அகத்திய லிகித ஜெபம் எழுதி வருகிறார். எழுத ஆரம்பித்த இரண்டே நாளில் ஒரு அதிசயம் நடந்ததாம். வரவே வராது என்று நினைத்த ஒரு பழைய கடன் வசூல் ஆனது. இது அந்த அகத்தியரின் திருவிளையாடல் தான் என்று மிக்க மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார். படித்த எனக்கே சந்தோசமாக இருந்தது. நமது வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமே..! பிரச்னைகளுக்கா பஞ்சம் நமக்கு?  
===========================================================
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு அருமையான கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நம் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால், இனி வாழ் நாளில் மறந்தும் தொட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.... அந்த கட்டுரையைப் படிக்க கீழே உள்ள 'லின்க்'கை க்ளிக்  செய்யுங்கள்...

நான் விட்ட பிறகும் அது விடவில்லையே” – பாலகுமாரன்

===========================================================

பிரணவ மந்திரத்தின் மகிமை பற்றி , தினமலர் நாளிதழில் வெளியான ஒரு அருமையான கட்டுரையை , நம் வாசகர்களுக்காக கீழே பகிர்ந்துள்ளேன்.... படித்துப் பாருங்கள்!
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம். வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.

கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.

வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

இப்போதைக்கு விடை பெறுகிறேன்... மீண்டும் சந்திப்போம்..! ஜீவ ஆத்மப் பேரொளியுடன் நாம் இணைய அந்தப் பரம்பொருள் நம் அனைவருக்கும் கருணை செய்ய , அந்த இறைவனை மனதாரப் பிரார்த்திக்கிறேன்..! 

நம்பிக்கை நெஞ்சில் வை!

| Sep 3, 2012
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அப்பழுக்கற்ற இறை நம்பிக்கையுடன், நம் இடைவிடா முயற்சிகளும் இணைந்து இருந்தால், எந்த ஒரு காரியத்திலும் வெற்றி நிச்சயம்.

நமது வாசகர் ஒருவர் அகத்தியரின் லிகித நாம ஜெபம் எழுதியதால், அவருக்கு கிடைத்த பலன் பற்றி, நெக்குருகி மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். மிகுந்த மன உளைச்சலில் , இனி வாழ்ந்தே பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு விதி அவரைத் தள்ளி விட, உரிய நேரத்தில் அவருக்கு இந்த தகவல் கிடைக்க, மிகுந்த நம்பிக்கையுடன் எழுதி வந்த அவருக்கு, மிக அற்புதமான பலன்கள் கிடைக்கத் துவங்கி இருக்கின்றன. இறையருள் தொடர்ந்து கிடைத்து, அவரது இன்னல்கள் முற்றிலும் தீர , அகத்திய மகரிஷியின் வழி காட்டுதல் அவருக்குத் தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறேன்.

ரொம்ப பெர்சனலாக சில விஷயங்கள் எழுதி இருப்பதால், அந்த கடிதத்தை இங்கே அப்படியே தர இயலாத நிலைமையில் உள்ளேன். அவர் அடைந்து இருக்கும் வேதனைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவ்வளவு அவமானமும், துடைத்து எறியப் பட்டது போல, இப்போது அவருக்கு நடக்கும் ஆச்சரியங்கள் , சாதாரண மனித முயற்சிகளுக்கு அப்பாற்ப்பட்டது.

நமது பதிவைப் படித்த வாசகர்களிலும், நிறைய பேர் எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்து இருப்பீர்கள். அப்புறம், வழக்கம் போல் இருக்கும் பிரச்னைகளில் உழன்று கொண்டு , நேரம் கிடைக்காமல் ... மனதுக்குள்ளேயே அகத்தியரை துதித்து விட்டு , கடவுள் நம் மேலும், கருணை பார்வை பார்க்க மாட்டாரா என்று 'கம்'மென்று இருப்பீர்கள். அத்தனை பேருக்கும் ஒரு வேண்டுகோள்...! ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்...!
நிச்சயம் அந்த அருமையான தாக்கத்தை உணர்வீர்கள்.

லிகித ஜெபம் பற்றிய பழைய பதிவைப் படிக்காதவர்கள், முழு விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

எனது வழக்கமான சாதகப் பயிற்சிகளுடன், நானும் இந்த லிகித ஜெபம் எழுதுவதாலும், தொடர்ந்து விஷ /
மலமாதமாக வந்து கொண்டு இருப்பதால், ஜோதிட  பரிகாரங்கள் பற்றி அலசுவது , ஜோதிடர்களுக்கு கொஞ்சம் விபரீதமான பலன்களை தரும் என்பதை உணர முடிவதாலும், பதிவுகளுக்காக நேரம் செலவிடுவதைக் குறைத்துள்ளேன். கூடிய சீக்கிரம், நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து கட்டுரைகளும், வர விருக்கின்றன. விஜயதசமிக்குப் பிறகு, ஒரு நாளைக்கு ஒரு பதிவு நிச்சயம் வரவிருக்கிறது. தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி..!

========================================================================


தவறான பாதையில் நம்மைத் தள்ளிவிட, விதிக்கு ஒரு நொடி போதும். ஆனாலும், இந்த புள்ளை நல்லா வரணும் என்று எண்ணி, அந்த இறைவன் கருணை நம் அனைவருக்கும், என்றும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இறைவன் இருக்கிறாரோ, இல்லையோ - ஆனால் நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்ச்சித்தால் - இறைவன் கருணையும் நமக்கு கிடைக்கும் .  அப்படி சாதித்துக் காட்டிய ஒரு ஹீரோ - திரு. நந்தகுமார், IRS அவர்களின் கதையை , நம் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தேன். அவருடன் நிகழ்ந்த ஒரு விரிவான நேர்முகப் பேட்டியை நண்பர் சுந்தர் , தனது தளத்தில் பதிவிட்டு இருந்தார். படிக்கும் ஒவ்வொருவருக்கும், அதன் மூலம் பல செய்திகள் அடங்கி இருக்கின்றன.

அட, என்ன சார், வாழ்க்கை - எல்லா முயற்சியும் ஊத்திக்குது... என்ன தான் பண்றது, என்று விரக்தியின் விளிம்பில் இருக்கும் அனைவரும், நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது. குறிப்பாக, வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் நம் வாசகர்கள் அனைவரும், தவறாமல், படிக்க வேண்டிய கட்டுரை இது. படித்து, உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
 

 http://onlysuperstar.com/?p=15220

http://onlysuperstar.com/?p=15376
=======================================================================
என்னதான் நம் பூர்வ ஜென்ம கர்மாப் படிதான் வாழ்க்கை என்றாலும், எந்த வித தீய பலன்களையும் உடைக்கும் சக்தி இறை வழிபாட்டிற்கு உண்டு.  அதிலும், பிரதோஷ வழிபாட்டிற்கு கிடைக்கும் பலன்கள் அளப்பரியது.
நம் வாசக நண்பர் திரு. மகேஷ்  இணையத்தில் இருந்து கீழ்க் கண்ட, பிரதோஷ வழிபாட்டு முறை பற்றி அனுப்பி இருந்தார். நீங்களும் படித்துப் பாருங்கள். அவருக்கும் , இணையத்தில் இதைப் பிரசுரித்த அன்பு நெஞ்சத்துக்கும், என் மனமார்ந்த நன்றி. 


பிரதோஷ வரலாறும், மகிமையும் : 

அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு, அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை பரிசாக தர, கன்னிகையோ அதனை எதிரில் வந்து கொண்டிருந்த துர்வாச முனிவரிடம் கொடுத்து சென்றாள். தேவலோகம் சென்ற துர்வாசர், அம் மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க, மாலையின் மகிமையை அறியாத இந்திரன், அம் மாலையை தனது யானையிடம் ர, யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர். இந்திரனையும், தேவர்ளையும் ஒரு சேர சபித்தார். சாப விமோச்சனம் பெற வேண்டி, தேவரும், இந்திரனும் பரந்தாமனை வேண்டினர். மன்ம் இளகிய பரந்தாமனும், திருப்பாற்கடலை கடைந்து, அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார்.

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரரும் வால் பகுதியை தேவரும் பிடித்து கடைய தொடங்கினர். மலை சாய்ந்தது. உடனே, மஹாவிஷ்ணு "கூர்ம அவதாரம் " எடுத்து மலையை தாங்கி பிடித்தார். அன்று 10 வது திதியான தசமி திதியாகும். மெலும் கடையும் பொழுது, வாசுகி வலி தாங்காமல் விஷம் கக்க, அப்பொழுது கடலிலும் நஞ்சு தோன்ற இரண்டும் சேர்ந்து "ஆலகாலம் " என்ற கடுமையான விஷமானது.

 
இதைக் கண்ட வானவர் அஞ்சி நடுங்க, திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடன் தஞ்சமடையுமாறு சொன்னார்கள். வானவரும் அவ்வாறே செய்ய, கயிலை நாதன், தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்து வரச் சொன்னார். யாராலும் அணுக முடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல் பழம் போல் உருட்டி எடுத்து வர, முக்கண்ணன் அதனை, எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட, பரமன் உண்டால் பெரும் கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கை கொண்டு தடுக்க, விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீல நிறமானது. பெருமானும் "நீலகண்டரானார்". இது நடந்தது ஏகாதசி அன்று மாலை பொழுதில். பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர். மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகா வரத்தை திரும்ப பெற்றனர்.

ஆனால், சிவனை மறந்தனர். பின்னர், பிரம்ம தேவர், தேவர்களின் குற்றத்தை உணர்த்த, தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலை நாதனை அடைந்து மன்னித்தருள வேண்டினர். சிவ பெருமானும், மனம் கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷப வாகனத்தின் இரு கொம்புகளுக்கு இடையில், அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை வணங்கினர். இது நடந்தது திரயோதசி திதியன்று மாலை வேளையில். இதுவே பிரதோஷ காலம் என வழிபடப்படுகிறது. ( ஒவ்வொரு திரயோதசி திதியன்றும் மாலை வேளை 4:30 முதல் 06:00 வரை ) பிரதோஷ வேளையாகக் கொண்டு சிவ பெருமானுக்கான சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு சிவாலயங்களிலும் நடைபெறும்.

பிரதோஷ பூஜை சிவ பெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை. சிவ பெருமனை விஷ்ணு, பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம். எனவே, இக் காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் அல்லது திரையிடப்பட்டிருக்கும். 

 Navagraha Temples Kumbakonam

பிரதோஷ காலங்களும், விரத மகிமைகளும்

ஐந்து வகையான பிரதோஷ காலங்கள் உண்டு. அவையாவன
1. நித்திய பிரதோஷம் 2. பஷ பிரதோஷம் 3. மாத பிரதோஷம் 4. மஹா பிரதோஷம் மற்றும் 5. பிரளயப் பிரதோஷம். தினமும் வரும் மாலை வேலைகள் நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறை பிரதோஷங்கள் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், தேய்பிறை சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வரும் பிரதோஷங்கள் பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

பிரதோஷ காலங்களில் உபவாசம் இருந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். எனவே இக் காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும். " சிவாய நம " என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும். சிவ புராண பாடல்களை பாடியும் எம் பெருமானை வழிபடலாம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிய நேரம் " கார்த்திகை மாத சனிக் கிழமை " தினம். பிரதோஷ தினம், மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று சேர்ந்து உபவாசம் இருந்த திருநாளாகும்.
கார்த்திகை மாத சனிப் பிரதோஷம் மிகச் சிறப்பு.


நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும். தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம். தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம். மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.

மீண்டும் சந்திப்போம்!
ஓம் சிவ சிவ ஓம்!

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்! 
========================================================================

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com