Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

" நம்பி ! பொறு "

| May 25, 2012
இன்னைக்கு காலையில் காலண்டர் பார்த்தால்... நம்பியாண்டார் நம்பி திரு நட்சத்திரம். பிள்ளையாரிடம் அவர் சாப்பிட வரவில்லையே என்கிற காரணத்தால் தன் தலையை அவர் மடியில் முட்டி, முட்டி - உயிரை விட எத்தனிக்கும் அந்த குழந்தை ஞாபகம் தான் உடனே வந்தது. தெய்வத்துக்கே தாங்க முடியாமல், " நம்பி ! பொறு " என்று அவரைத் தடுத்தார் விக்னேஸ்வரன்..! நல்ல விரிவான கட்டுரை நம்பியாண்டார் நம்பி பற்றி விரைவில் எழுதுகிறேன்.ஆயிரம் வருஷத்துக்கு முன்னாலே, இந்த நாளில் பிள்ளையார் ஒரு குழந்தைக்கு காட்சி கொடுத்து இருக்கிறார். ராஜ ராஜ சோழன் காலம் அது! கரூர் தேவரும் வாழ்ந்த காலம் அது. அப்போ எல்லாம் , காட்சி கொடுத்த பரம்பொருள், இப்போ மட்டும் இல்லவே இல்லைன்னு , ஏன் நாம நினைக்கணும்... ! நம்புங்கள்.. அவன் அருள் கிடைப்பது நிச்சயம்! 

நம்பி , பொறு என்பது - எனக்கென்னவோ , காலையில் இருந்து " நம்பிப் பொறு " என்று தான் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது! இங்கே வந்து பார்த்தால் , நமது வாசகர் ஒருவரும், எவ்வளவு நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்கிறார் என்பதை , ஒரு பின்னூட்டம் மூலம் மிக அழகாக எழுதி இருக்கிறார்....!

நமது சென்ற கட்டுரைக்கு வந்த ஒரு அருமையான பின்னூட்டம். சகோ. யவனிகை அவர்களிடமிருந்து. அவர்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இட முயற்சித்தால், நீ ரொம்ப பேசுற, பதிவு ரொம்ப பெரிசு, அதனால முடியாது ன்னு கூகுள் ஐயா சொல்லிட்டாரு. அதுவும் நல்லதுக்குத் தான். கமெண்ட்ஸ் ல போட்டா, எல்லோரும் பார்ப்பாங்களோ இல்லையோ? அதனாலே, தனி பதிவாவே போட்டுடலாம்னு - அவங்க பின்னூட்டமும், எனது ஒரு சுவாரஸ்யமான அனுபவமும்... கீழே கொடுத்துள்ளேன்...!
 ===============================================================
Blogger யவனிகை said...
பொதுவாக பெண்கள் சிவனை அதிகம் கும்பிடக்கூடாது, சின்ன தப்புனாலும் ரொம்ப கஷ்டபடுதிருவாரு அப்டினெல்லாம் சொல்வாங்க, ஆனா என்ன ஆட்கொண்டது எங்க அப்பாதாங்க, சின்ன சின்னதா எனக்கும் என் மூலமா என் நண்பர்களுக்கும் நடத்துன நடத்துற அதிசயத்த என்னன்னு சொல்ல, ஒண்ணுமில்ல வழக்கமா அபிஷேகத்துக்கு வாங்குற பொருட்களுக்கு பதிலா இந்த தடவ பிரதோஷத்துக்கு மாலை வாங்கிட்டு போவோம்ன்னு தோணும், போய் பாத்தா இருக்குற வெறும் பூவ மட்டும் வச்சு அலங்காரம் பண்ணிருப்பாங்க, நம்ம மாலை மட்டும்தான் அங்க பெரிய மாலையா அப்பாக்கு போடுவாங்க, இதெல்லாம் சத்தியமா கோஇன்சிடன்ஸ் இல்லன்னு உணர்ந்தவங்களுக்கு புரியும்,

நா குருவா நினைக்கிறது என் மகாவதார் பாபாஜி, என்னோட கோவில்னு சொன்னா திருவண்ணாமலைதான், அதோட சிறப்புபத்தி ரிஷி சாரே எவ்வளவோ சொல்லி இருக்காரு, 2 வருஷமா மனைவிகூட சேர முடியாம எல்லா கோவிலுக்கும் போய் எல்லா பரிகாரமும் பண்ண என் நண்பர ஒரு தடவ என்மூலமா கிரிவலம் கூட்டிட்டு வர வச்சாரு, எண்ணி 2 நாள், அந்த பொண்ணு போன்கால் அட்டென்ட் பண்ணி கோபமாவாவது பேசுச்சு, அவருக்கு அதுவே பெரிய விஷயம், 2 மாசம், இப்போ ஒன்னு சேர்ந்து சந்தோஷமா இருக்காங்க, என் விஷயத்தையே எடுத்துகிட்டாலும் 3 வருஷமா போராடுறேன் விடிஞ்சிரும் விடிஞ்சிரும்ன்னு, எல்லா கோவிலும் போறேன், எல்லா பரிகாரமும் பண்றேன், நா சில சமயம் வெறுத்து நேரம் நல்லா இருந்தாதான் சாமிகூட உதவும், நேரம் நல்லா இல்லைனா சாமிகூட கை விரிச்சிரும்னு அழுது புலம்பி இருக்கேன்,

ஆனா அப்பவும் நா விட்டாலும் அவர் என்ன விடாம புடிச்சு இழுத்துகிட்டு வருவாரு, நா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா சரணடைங்க, சந்தேகமில்லாத முழுமையான சரணாகதினால மட்டும்தான் அவர அடைய முடியும், நல்லவங்கள நெறைய சோதிப்பார் சாவோட விளிம்புக்குகூட கூட்டிட்டு போவார் ஆனா கைவிட மாட்டார்.அவர் ரஜினி மாதிரி கரெக்டா வரவேண்டிய நேரத்துக்கு கண்டிப்பா வருவார், சிவன கும்பிடுங்க செல்வாக்கு உயரும்,

அப்புறம் ஒன்னு பிரிஞ்சவங்க ஒன்னு சேரணும்னா ஸ்ரீ சரபேஸ்வரர் பிரத்யங்கரா தேவி அம்மாக்கு விளக்கு போட்டு அமாவாசை யாகத்ல கலந்துக்கோங்க, இதவிட இதுக்கு சரியான பரிகாரம் இருக்க முடியாது, ரிஷி சார் சரிதானே,

நீங்க கும்புடுற கோயில் உடனே எனக்கு பலிக்காது, நா கும்புடுற கோவிலும் உடனே உங்களுக்கு பலன் குடுக்காது, ஆனா அவரே உங்களுக்கு உணர்த்துவார் யார் மூலமாவது எது மூலமாவது, ஆண்டவன கேளுங்க, அவர் உங்க குருவ காட்டுவர், அவர் மூலமா உங்க நியாயமான கோரிக்கை நிறைவேறும், ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்னைக்காவது நானும் என் கோரிக்கைய நிறைவேத்துன அதிசயத்த எழுதுவேன் அப்டிங்கற தைரியத்ல - ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்
May 24, 2012

====================================================================
சகோதரி யவனிகை அற்புதமாக தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.  அண்ணாமலையாரின் பக்தை நீங்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும், நமது வாசகர்களுக்கும் நான் இன்னொரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

கிரிவலம் செல்லும்போது, வழக்கமான பாதையில் தான் பெரும்பாலோர் சென்று இருப்பார்கள். அஷ்ட லிங்க தரிசனம் செய்தபடி, தார் ரோட்டில் நடந்து செல்லும் பாதை. அதற்கே சிலருக்கு நடப்பது கடினம். ஆனால் சதுரகிரி, பர்வதமலை மாதிரி நடந்து பழக்கப் பட்டவர்களுக்கு - " என்னடா, இது , தார் ரோட்டில் நடந்து செல்கிறோம், மலை உள்ளே தூரத்தில் இருக்கிறதே" என்று யோசித்து இருக்கலாம். இன்னொரு கிரிவலப் பாதை இருக்கிறது. மலையை ஒட்டி உள்ளே சுற்றவேண்டி இருக்கும்.

பாதை நடந்து செல்ல ஏதுவாக இருந்தாலும், கொஞ்சம் கடினமானது. சுற்றிலும் புதர்கள், முட்காடுகள், காட்டு விருட்சங்கள் என்று - அது ஒரு அலாதியான அனுபவம். வெளியில் இருந்து நடப்பவர்களுக்கு - முழுக்க முழுக்க சிவ நாமம் ஜெபித்தபடி செல்வது எளிது. ஆனால், உள்ளே சுற்றினால், நீங்கள் மலையை கண்குளிர தரிசித்தாலும், பாதையில் கவனம் வைத்தே தீர வேண்டும். காலில் செருப்போ, ஷூவோ இல்லாமல் செல்ல முடியாது. ஆனால், மிக பிரமாதமான, மனதுக்கு திருப்தி அளிக்கும் கிரிவல அனுபவம் கிடைக்கும். பகலில் மட்டுமே செல்ல முடியும்.

ஒரு குழுவாக கண்டிப்பாக செல்ல வேண்டி இருக்கும். இடையில் , காட்டு சிவா குளம் என்று ஒரு குளம் இருக்கிறது. ஸ்படிக சுத்தமான தண்ணீர். களைப்பு தீர குளித்து செல்லலாம். ஆங்காங்கே இன்றும் சில முனிவர்கள் தவம் இயற்றும் குகைகள் இருக்கின்றன. இன்னும் ஆச்சர்யமாக சில அயல் நாட்டுப் பக்தர்கள் தீவிர தியானத்தில் இருப்பதையும் காணலாம். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த மாதிரி தியானத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது, நமக்கே கொஞ்சம் குற்ற உணர்ச்சி வரும். இவர்களே இப்படி இருக்கும்போது, பிறந்தது முதல் நம் பழக்க வழக்கங்களில் ஊறிய நாம் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த வில்லையே என்று தோன்றும்... 

வெயிலில் நடந்து வந்த களைப்பு தீர , குளத்தில் ஒரு ஜில் குளியல் குளித்துவிட்டு , அருகில் ஒரு சித்தர் குகை ஒன்று சிறிய லிங்கத்துடன் இருக்கும், அவரை வணங்கிவிட்டு மேலே பயணத்தை தொடரலாம். இந்த சித்தரைப் படம் பிடித்து விஜய் டி.வி.யில் கூட சில மாதங்கள் முன்பு ஒளி பரப்பினார்கள். ஒளி ரூபத்தில் அவர் உள்ளே நுழைந்ததையும், வெளியேறியதையும். மொத்த கிரிவலமும் ஐந்து மணிநேரத்தில் முடியும். நடக்கும் தூரம் என்று பார்த்தால் , வெளியே நடப்பதைவிட கம்மிதான்.

நான் சென்றமுறை சென்றபோது - காலில் செருப்பு இல்லாமல் சென்று, கொதிக்கும் வெயிலிலும் , முள்ளிலும் மாட்டிக்கொண்டு, சிரமப்பட்டேன். என்னடா, அவரது செல்லப்பிள்ளை என்று நினைத்துக் கொண்டு இருந்தோமே, இவ்வளவு கஷ்டப்படுத்துகிறாரே என்று கூட நினைத்தேன். இலை, தழை எல்லாம் கூட கட்டிப் பார்த்தேன்.. ஓடி, ஓடி நடக்க வேண்டி இருந்தது.. கூட வந்த நண்பர்கள் கொஞ்ச தூரம் செருப்பை மாற்றி, மாற்றி கொடுத்து உதவினார்கள். ஆனால், அவர்கள் படும் கஷ்டம் பார்த்து எனக்கு மனது ஒப்பவில்லை. அதனால், நம் பாவத்தை நாமே சுமப்போம் என்று தொடர்ந்தேன்...

இடையில் காட்டு சிவா குளம் வந்ததும், அந்த குளிர்ந்த நீரின் சில்லிப்பும், மீன்கள் காலை செல்லமாக கடிக்கும்போது கொடுத்த இன்பமும், "வாவ்... இதற்கே காலில் செருப்பு இல்லாமல் வந்து இருக்கலாமோ" என்று தோன்றியது... சொர்க்கம். அடித்த வெயிலுக்கு ஒரு அரை மணி நேரம் குளித்த அனுபவத்தில், மீதி பாதி தூரத்தை ஓட்டி விடலாம் என்று தோன்றியது. ஆனாலும், உள்ளுக்குள் ஒரு கிலி. என்னதான் வெயில் தாழ ஆரம்பித்தாலும், பாதை ஒரு எரியும் அடுப்பைப் போலத் தான் கனன்று
கொண்டு  இருந்தது. ஏற்கனவே கந்தக பூமி, சொல்ல வேண்டுமா? நீங்க வேணும்னா முன்னே போங்க. நான் மெதுவா பின்னால் வருகிறேன் என்று நண்பர்களுக்குச் சொன்னாலும், அவர்களுக்கும் என்னைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லை.

ஆனால், அதன் பிறகு நடந்ததுதான் அதிசயம்.... நடந்து செல்லும்போது ஒரு சிறிய பாதை உள்ளே பிரிந்து சென்றது..  ஒரு கோவில் உள்ளே இருப்பது மாதிரி தெரிந்தது. அந்த பாதையில் சென்றோம். உள்ளே கண்ணப்ப நாயனாருக்காக அருமையான ஒரு சிறிய கோவில். அவனை அடைய எதற்கு சாஸ்திரம்? சம்பிரதாயம்.. உண்மையான அன்பு இருந்தால் போதாதா என்று உலகத்துக்கே தெரிய வைத்தவர் அல்லவா..? அவரையும் கும்பிட்டு , வெளியே வந்தால், ஒரு மரத்துக்கு கீழே ஒரு ஜோடி செருப்பு. எப்போதோ, யாரோ விட்டுச் சென்றிருக்க வேண்டும். மழையில் நனைந்து மண் திப்பிகளுடன், யாரும் பார்த்தாலும் எடுத்துச் செல்ல தோன்றாது. ஆனால், நமக்கு..? எடுத்து மண்ணைத் துடைத்து, ஜம்மென்று - பீடு நடை நடந்து கிரிவலம் முடித்தேன்..... உண்மையிலே நான் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை... எதோ நம்ம செஞ்ச பாவம் எல்லாம் மன்னிக்கப் பட்டு, நல்லா இரு என்று அண்ணாமலையாரே வரம் அளித்தது போல் இருந்தது. செல்லப் பிள்ளைக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு இப்போதான் தோணிருந்திருக்கு அவர்க்கு..!

வாசகர்கள் யாராவது, இந்த பாதையில் போவதாக இருந்தால், செருப்பு அணிந்தே செல்லுங்கள்..! ரிஸ்க் வேண்டாம். No formalities please!

உள்ளே கிரிவலம் செல்லும்போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் சில நண்பர்கள் இணைத்துள்ளார்கள்... நம் வாசகர்களின் பார்வைக்கு அவற்றின் லிங்குகளை கீழே கொடுத்துள்ளேன்.. என்ஜாய்!


மற்றபடி சகோதரிக்கு : உங்கள் நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். சோதனை நீண்ட நாள் தொடராது. மிக அருமையான ஒரு நிலைக்கு, உங்களை அவர் வைக்கப் போவது உறுதி! மன நிறைவான வாழ்க்கை உங்களுக்கு தொடர்ந்து நிலைக்க, அண்ணாமலையாரிடம் நானும் பிரார்த்திக்கிறேன்..!

வாசகர்களுக்கு :  சென்ற பதிவின் இறுதியில் Comments / பின்னூட்டங்கள் உள்ளன. அவற்றையும் பாருங்கள், பல சுவாரஸ்யமான ஆலய தகவல்களை நம் நண்பர்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்..!

http://richardarunachala.wordpress.com/2011/06/18/best-of-arunachala-part-one/

http://richardarunachala.wordpress.com/2011/06/24/best-of-arunachala-part-two/

http://richardarunachala.wordpress.com/2011/06/27/best-of-arunachala-part-three/http://sadhanandaswamigal.blogspot.in/2011/10/inner-girivalam.html

http://richardarunachala.wordpress.com/2011/10/25/arunachala-guide/

8 comments:

யவனிகை said...

மிக்க நன்றி அண்ணா, என்ன சொல்வதென்றே தெரியவில்லை, என் அண்ணாமலையாரே உங்கள் மூலமாக ஆறுதல் சொல்வதாகவே நினைக்கிறேன், மிக்க நன்றி அண்ணா, தொடர்ந்து இச்சேவையை எல்லோரும்க்கும் புரியும் வகையில் இதே போல் எல்லா அருளையும் நிரந்தரமாய் உங்களுக்கு கொடுக்க நானும் நம் வாசகர்கள் சார்பாகவும் உங்களுக்காக அந்த ஆதிசிவனை வேண்டுகிறேன், ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

Rishi said...

நன்றி சகோதரி! இறை அருளால் நலமும் வளமும் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்! வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!

கோடியில் ஒருவன் said...

யவனிகா அவர்களே... பக்கம் பக்கமாக பக்தி நூல்களும், இலக்கியங்களும், ஆன்மீக இதழ்களும் ஆண்டாண்டு காலங்களாக சொன்னதை மிக அழகாக உணர்வுப் பூர்வமாக JUST LIKE THAT சொல்லிவிட்டீர்கள்.

கடவுள் மீது நீங்கள் வைத்துள்ள அந்த நம்பிக்கையும், ஒரு வித பாசத்தையும் என்னால் உணர முடிகிறது. இன்னொன்னு தெரியுமா? அவர் உங்களுக்கு அப்பான்னா எனக்கு குளோஸ் ப்ரெண்ட்.

பாற்கடலை கடையும்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை கண்டு அனைவரும் பயந்து நடுங்கியபோது, மற்றவர்களது நன்மைக்காக தன்னைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் விஷத்தை எடுத்து மடக்குன்னு குடிச்சவன் என் நண்பன்.

அவன் ஒருத்தனை சோதிப்பான் தான். இல்லேன்னு சொல்லலே. ஆனா, அப்படி அவன் சோதனை பண்றதுக்கு நாம தேர்ந்தேடுக்கப்படுறதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

சோதனையோ வேதனையோ எதையோ நீ பண்ணிட்டுபோ. ஆனா, என்னை கொஞ்சம் பார்த்தா அதுவே எனக்கு போதும். உனக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கலாம். நான் கோடியில ஒருத்தனா இருக்கலாம். ஆனா எனக்கு நீ ஒருத்தன் தானே பா இருக்கே. உன்கிட்டே இல்லாம நான் வேற யார் கிட்டே என் கஷ்டத்தை சொல்லி அழுவேன்?

யவனிகை அவர்களின் இந்தப் கருத்துக்களை தனிப் பதிவாக அளிக்கக் முடிவு செய்த ஆசிரியருக்கு நன்றி. (பதிவோட டைட்டில் சூப்பர் சார்!)

- கோடியில் ஒருவன்

சரவணன் said...

அருமையான பயண அனுபவம்! படிக்கும் பொழுதே தங்களுடன் நடந்து செல்லும் அனுபவம் ஏற்பட்டது...அடுத்த பௌர்ணமி எப்பொழுது வரும் எவ்வளவு சீக்கரம் ஐயனை தரிசிக்கலாம் என்று மனது உவகை அடைகிறது! தாங்கள் குடுத்த லிங்க்'யை பார்த்தேன், மேலும் தங்கள் கட்டுரை படி ஐயனை வலம் வர உள்ளே மாற்று பாதை இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். வரும் முழு நிலவு தினத்தன்ன்று உள்ள வலம் வர எண்ணுகிறேன். எங்கு துவங்கி எந்த வழியாக உள் பாதை செல்ல வேண்டும் என்பதை அறிய வேண்டுகிறேன். மேலும் குழுவுடன் செல்ல யாரை எங்கு அணுக வேண்டும்? - சரவணன்

Chitti said...

சகோதரி யவனிகை அவர்களுக்கு, கண்டிப்பாக நாம் நினைக்கும் எந்த தெய்வமாக இருந்தாலும், நமக்கு காலம் வரும் போது அருள் புரியும். (நம் ஒவ்வொருவரின் முற்பிறவி பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப). அதனால், கவலைப்படாதிங்க.

நீங்க சொன்ன அந்த கடைசி வார்த்தைகளுக்கு எனது பதில். நாம் எந்த இறைவனை கும்பிட்டாலும் நமக்கு கண்டிப்பாக நாம் விரும்பியது கிடைக்கும். இந்த பதிவு (அதாவது இதற்கு முந்தைய பதிவு - "அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்")
எதற்கு எனில், நாம் ஒரு பிரச்சனையில் இருக்கும் போது நம் தெய்வத்தை கும்பிட்டு கொண்டு இருப்போம். நமக்கு தெரிந்தவர் ஒரு தெய்வத்தை பற்றி கூறி, அதன் சக்தியை பற்றி கூறும் போது, சரி நாமும் ஒரு தடவை அந்த தெய்வத்தை நேரில் கண்டு, கும்பிட்டு வரலாமே என்று தோன்றும். கும்பிட்டபின், நமக்கு நாம் நினைத்தது, நாம் வேண்டியது நமக்கு நடந்தும் விடலாம்.
***
அதற்கு காரணம் இரண்டு வகையில் கூறலாம்:
***
ஒன்று. அதாவது, நமக்குள் மங்கி கொண்டு இருக்கின்ற தன்னம்பிக்கை ஒளி கீற்று, சிறிதாக மறுபடியும் மற்றவர் தன்னம்பிக்கையுடன் கூறும் போது வளர தொடங்கும். அந்த (தன்னையே அவனிடம் ஒப்படைக்கும்) தன்னம்பிக்கை வைக்கும் போது அவன் (நாம் வேண்டிய அந்த புது கடவுள் (அ) நம் கடவுள்) நமக்கு வேண்டியதை கொடுத்து விடுவான்.
***
இரண்டு. நாம் அந்த இரண்டாவது தெய்வத்தை வணங்கும் காலத்திற்குள், நம்முடைய பாவம் குறைந்து, காலம் கனிந்து வரவே, நம்முடைய இறைவனே நமக்கு, நாம் வேண்டியதை, குடுத்து விடலாம்.
***
அதனால் தான், நம் நாட்டில் இத்தனை தெய்வங்கள். நம் நம்பிக்கையை வளர்க்கவே என்று எனது எண்ணம். இந்த பதிவும் அதற்கு தான். புது, புது தெய்வங்களை பற்றி நாம் அறியும் போது, நமக்குள் அந்த தன்னம்பிக்கை வளரும்.
***
faith is what important more than whatever god we pray for. believe and surrender yourself to the god whomever you pray. If not immediately, but definitely, one day, he will give whatever you want, provided if your desire is reasonable.

god bless you and soon you will come out of your problems.
--
By,

Urs Ever Loving/Grateful Friend,

**Chitti**

- Thoughts Becomes Things.

யவனிகை said...

சிட்டி அண்ணா, நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை, மீனக்ஷியம்மனையே கும்பிட்டுகொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் சொன்னார்கள் என கோரரூபத்தில் சாந்த்தமாக காட்சியளிக்கும் அந்த வாராஹியை, பிரத்யங்கிராவை கும்பிடுவதும் மனதிற்கு பெரும் நிம்மதி அளிக்கிறதுதான், போக முடிகிறதோ இல்லையோ நம் பதிவுகளில் வரும் தெய்வங்களை மனதார நினைத்துகொள்கிறேனே, நான் சொல்லவந்தது நம்முடைய இஷ்ட தெய்வம் அதுவே நம்மை தேர்ந்தெடுக்கும் என்பதுதான்,
படத்தின் பெயர் தெரியவில்லை, v .s .ராகவன் அய்யா அதில் காளியின் பக்தர், காளியைப் பார்த்து சொல்வார் "எனக்கு என்ன ஆணவம் பாத்தியாம்மா, நீ குடுத்த மூளைய வச்சு உன்னையே எடை போடுறேனே". நம்புகிறேன் என்று சொன்னால்கூட ஏதோ ஒரு வகையில் அவனை சோதித்துக் கொண்டுதானே இருக்கிறேன்( ம் ). சோதனையின் முடிவில் இழந்ததைவிட பெற போவது பெரியது என்பதையும்தான் மறந்துவிடுகிறேன்,
ஆனால் இதையெல்லாம் மீறி சிட்டி அண்ணா, கோடியில் ஒருவன் சார், ரிஷி அண்ணா போன்ற நல்ல இதயம்கொண்ட உறவுகளையும், அவர்களின் நல்லாசிகளையும், அன்பையும் கொடுப்பதற்காகவும், நல்ல பழக்கங்களை கற்க்கவும்தான் (இந்த வலைப்பதிவை படிக்க ஆரம்பித்ததில் இருந்து அசைவத்தைவிட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது) இந்த சோதனைகளும் என நினைத்துக்கொள்கிறேன்,
ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

யவனிகை said...

//அவன் ஒருத்தனை சோதிப்பான் தான். இல்லேன்னு சொல்லலே. ஆனா, அப்படி அவன் சோதனை பண்றதுக்கு நாம தேர்ந்தேடுக்கப்படுறதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

சோதனையோ வேதனையோ எதையோ நீ பண்ணிட்டுபோ. ஆனா, என்னை கொஞ்சம் பார்த்தா அதுவே எனக்கு போதும். உனக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கலாம். நான் கோடியில ஒருத்தனா இருக்கலாம். ஆனா எனக்கு நீ ஒருத்தன் தானே பா இருக்கே. உன்கிட்டே இல்லாம நான் வேற யார் கிட்டே என் கஷ்டத்தை சொல்லி அழுவேன்?// கோடியில் ஒருவன் சார், இந்த வைர வரிகளை திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கிறேன்,ஓம் நமச்சிவாய ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்

Chitti said...

உங்களின் கருத்தை ஏற்று கொள்கிறேன் யவனிகை சகோதரி. மிக்க நன்றி!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com