Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா?

| May 4, 2012
உலகமே ஒரு TV பெட்டிக்குள் , அல்லது கம்ப்யூட்டருக்குள் அடங்கிவிட்டது இப்போதெல்லாம். எவ்வளவோ நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. Discovery ,  NGC சானல்களில் எல்லாம் வரும் நிகழ்ச்சிகள் சில சமயம் கொஞ்சம் கூட போரடிப்பதில்லை. ஆனால், இதில் ஒரு ஆபத்தும் ஒளிந்து இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு, நான் NGC யில் நைல் நதி பற்றிய ஒரு டாக்குமெண்டரி பார்த்தபோது, எத்தியோப்பியாவில் ஒரு ரெஸ்டாரன்ட். காண்பித்தார்கள். ஆட்டம் , பாட்டம் - குடி , கூத்து... இப்படியே உற்சாகமாக இருந்தது. நான்-வெஜ் - ஸ்லைஸ் ஸ்லைஸ் ஆக ஒரு இடத்தில் அடுக்கி இருந்தது. அத்தனையும் வேக வைக்காத மாட்டு இறைச்சி. ஆடிக்கொண்டே , மது அருந்திக்கொண்டே - ஆலிவ் ஆயில் தடவிய அந்த இறைச்சியை , அப்படியே பச்சையாக மென்று கொண்டு இருந்தனர். பார்த்து , அப்படியே மிரண்டுவிட்டேன்.

ஆள் ஒவ்வொருத்தரும் , கர்லாக் கட்டை மாதிரி உடம்பு வைத்துக்கொண்டு நெடு நெடு என்று இருந்தனர். ஒருவேளை அவர்கள் உடம்புக்கு செரிக்குமோ என்று எண்ணம் தோன்றியது. மனதுக்குள் உடனேயே - எதியோப்பியாவில் இருப்பவர்கள் எல்லாம் பச்சையாவே கறி சாப்பிடுறாங்கப்பா.. ன்னு ஒரு எண்ணம் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.

ரொம்ப நாளைக்கு அப்புறம், ஆப்பிரிக்காவில் இருந்த நண்பர் ஒருவரை கேட்டபோது, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஏதாவது ஒன்னு, ரெண்டு பேர் அப்படி இருக்கலாம். நான் பார்க்க யாரும் அப்படி இல்லைன்னு சொன்னார். அப்பாடான்னு இருந்தது. அந்த நிம்மதி கூட கொஞ்ச நாளைக்குத்தான் இருந்தது - இன்னொரு விஷயம் கேள்விப்படும்வரை . எங்க ஊர்ல ஒரு பொண்ணு. பார்க்கிறதுக்கு நல்லா , அழகா அம்சமா இருக்கும். காலேஜ் படிச்ச பொண்ணு. அவங்க வீட்டுல மட்டன் சமைச்சா கிளீன் பண்றப்போ, ஒன்னு ரெண்டு கறித்துண்டு அப்படியே பச்சையா சாப்பிடுமாம். 'ஹா , என்ன கருமம்டா இது ' ன்னு ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணை பார்த்தாக்கூட - அந்த அழகைத் தாண்டி , கொஞ்சம் அருவருப்பு - மிரட்சி தான் இருந்தது. ஒரு நாள் , நேரடியாவே கேட்டுட்டேன். பச்சையா கறி சாப்பிடுவியா..? ஒரு மாதிரியா இல்லை.. நாம என்ன மனுஷனா.. இல்லை மிருகமான்னு..!

ரொம்ப கூலா சொல்லுச்சு. "ஏன் , வேகவைச்சு சாப்பிட்டா மட்டும் நாம மனுஷங்க ஆயிடுவோமா? "  - அதே வேதம் புதிது படத்துல வர்ற கை, படார் , படார்னு அடிச்சது. (தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? )
  
என்ன வார்த்தைடா சாமி..?  அதானே பச்சையா கறி சாப்பிடுற மிருகத்துக்கும், வேகவைச்சு , மசாலா போட்டு சமைச்சு சாப்பிடுற நமக்கும், ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லையே...? ஐயர் ஊட்டு ஆளுங்க எல்லாம் , கறி சாப்பிடுற ஆளுங்களை ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாங்கன்னு அப்போதான் தோண ஆரம்பித்தது.

அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அந்த பொண்ணு பக்கா வெஜிடேரியனாம். பாப்பா பார்க்கிறதுக்கு அழகா இருக்குதுன்னு, அது கூட இருந்த பொண்ணே - இந்த மாதிரி செய்தியை கெளப்பிவிட்டு இருக்கு.   ஆரும் பாக்கப்படாது, ஆரும் பேசப்படாது, ஆரும் தண்ணி கொடுக்கப்படாதுன்னு அதுவே நாட்டாமை மாதிரி முடிவு எடுத்திருக்கு. 

இது எதுக்கு சொல்ல வர்றேன்னா, எந்த ஒரு விஷயம் படிச்சாலும், கேட்டாலும், ஏன் டிவில பார்த்தாலும் படக் படக்குன்னு நம்பிடாதீங்க...

டிஸ்கவரி சானல்ல - பழைய இந்தியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி , ஹரித்வார் கும்பமேளா நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறப்போ - கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் , பரவச உற்சாகத்தில் - மேனியெல்லாம் விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு , காவி வேஷ்டி அணிந்த சாமியார்களை காட்டுவார்கள். பாம்பாட்டி, குரங்காட்டி என்று ஒரு ஸ்லாட்டாவது வரும்.

இதையெல்லாம் பார்க்கும் வெளி நாட்டுக்காரர்கள் மனதில்  - ஓ.. இந்தியாவில் இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மனோபாவம் வந்துவிடுகிறது. சமீபத்திய IT புரட்சி நடந்து, இந்தியர்கள் உலகம் முழுவதும் இன்னும் அதிகமாக வசிக்கத் தொடங்கியபின், கொஞ்சம் மனோபாவம் மாறி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். இப்போதும், வெளி நாட்டில் இருந்து இங்கு வரும் நண்பர்கள், யாராவது காவி வேட்டியைக் கண்டால்  கொஞ்சம் மிரளத் தான் செய்கிறார்கள். மந்திரம் போட்டு விடுவார்களாம். நமக்குத் தானே தெரியும், இங்கு காவி கட்டி  பிச்சை எடுக்கும் பெரும்பாலோர் பிழைக்க வழியில்லாமல் / வேலை செய்ய பிடிக்காத சோம்பேறிகள் என்று.

ஆனால், மேலை நாட்டு தத்துவம் படிப்பவர்கள் - நமது இந்தியாவை ஒரு ஞான பூமியாகத் தான் பார்க்கின்றனர். விஞ்ஞானம் விளங்க முடியாத பல விஷயங்கள் , இங்கு இருக்கும் சில துறவிகள் அனாயசமாக செய்வது, அவர்கள் வியக்கும் ஒன்று.

பால் பிரண்டன் என்பவர் - ஒரு அறுபது , எழுபது வருடத்துக்கு முன்பு இந்தியா வந்தவர். உலகம் முழுவதும் - எகிப்திய பிரமிடு, இஸ்லாம் , இந்தியா , மந்திரவாதிகள், சித்தர்கள் என்று ஒரு விஷயம் கூட விடவில்லை. பிரித்து மேய்ந்து இருக்கிறார். அவரது புத்தகங்களை படித்த வெளிநாட்டவர்கள் - கூட்டம் கூட்டமாக இந்தியா வரத் தொடங்கினார்கள். இந்தியாவில் உள்ள ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதை அவர் தன் அனுபவக் கட்டுரைகளாக விவரித்து இருந்த விதம் அருமை. 

உலகம் முழுவதும் தேடிக்கொண்டு இருந்த விஷயத்துக்கு , அவருக்கு விடை கிடைத்த இடம் எது தெரியுமா? எத்தனையோ மத குருமார்களுடன் ,  இந்தியாவிலும் மந்திரவாதிகள், சித்தர் புருஷர்கள் என அவருக்கு அனுபவம் இருந்தபோதிலும், கடைசியில் அவர் மனம் ஒடுங்கிய இடம், ரமண மகரிஷியிடம். அண்ணாமலையின் அடிவாரத்தில், அற்புதமான அருள் அலைகளுடன் - ஒரு மகான் அமர்ந்து இருப்பதை அவர் விவரித்து இருப்பதைப் படித்துப் பாருங்கள்.

எங்கிருந்தோ வருபவர்களுக்கு உள்ள தேடல், நாம் இன்னும் தொடங்கக் கூட இல்லாத ஒரு விஷயமாக இருப்பதை உணரமுடியும். சரி,  வாருங்கள் பால் பிரண்டன் நம்மிடம் எதையோ சொல்லக் காத்திருக்கிறார்...

"ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

 "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"


"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட    எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள்.

அட, ஒருவேளை இந்த மாதிரி வர்ற திருடர்கள் கூட ஏமாந்து போகக்கூடாதுன்னு நினைச்சித்தான் , இந்த கால (ஆ) சாமிகள் நிறைய பணத்தை சேர்த்து வைக்கிறாங்களோ..  (# டவுட்டு) 

 ரமண மகரிஷி  அந்த கொள்ளையர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."

எப்பேர்ப்பட்ட மகான் பிறந்த பூமியில் நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா? உடனே இப்போ இருக்கிற ஆளுங்களை நினைச்சு கோபப்படாதீங்க. சாதாரண வேங்கட ரமணன் என்னும் சிறுவன், ரமண மகரிஷியாக மாறும்போது, நம்மால் அந்த அளவு முடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் நாம் யார் என்பதாவது உணர முற்படுவோமே..!

நாம், நம்ம வீடு, நம்ம ஊர், நம்ம நாடு, பூமி, சூரிய மண்டலம், பால்  வெளி, அண்ட பேரண்டம் - பற்றியெல்லாம் பார்க்கிறப்போ - அட போய்யா... இதுல கடவுளாவது ஒன்னாவது ... ... இதுல கடவுள் எங்கே இருக்க முடியும்? அப்படி ஒருத்தர் இருந்தா, நம்மளை பார்க்கிறது தான் வேலையா அவருக்குன்னு ஒரு கேள்வி வரலாம்....

உங்களுக்கு வருதோ , இல்லையோ - எனக்கு வருது....
இதோ , நாளைக்கு சித்ரா பௌர்ணமி. சித்திர குப்தன் பிறந்த நாள்னு ஒரு சிலர் சொல்றாங்க. அதுக்கு ஒரு கதை வேற.நம்ம செய்ற பாவ புண்ணியம் எல்லாம், அவர் கணக்கு வைப்பாராம். பயங்கர காமெடியா இருக்கு ... என்று தான் தோன்றுகிறது இல்லையா..?

ஆனா, சத்தமே இல்லாம சில மந்திர ஜெபங்கள் ஜெபித்து , நினைத்ததும் அகத்தியர் போன்ற சித்தர்களை தரிசனம் செய்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்களே..! தீராத சில பிரச்சினைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வும் பெறுகிறார்களே.. சித்தர் இருப்பது உண்மையெனில், அந்த இறைவன் ஒருவர் இருப்பது நிஜம் தானோ..?  வள்ளலாருக்கும், ரமணருக்கும், ராமக்ருஷ்ணருக்கும் கடவுள் காட்சி கொடுத்தது உண்மையென்றால், நமக்கும் அந்த பாக்கியம் ஏன் கிடைக்காது , முழுமையாக நம்பி, அவன் இடத்தில் நம் தீர்வு தேடுவோம்... வெற்றி நிச்சயம். 

இறைவனுக்குக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல குரு ஒருவர் இருந்தால் நம் வேலையும் எளிது. தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை.. ஆனால் என்னதான் இருந்தாலும், ரமண மகரிஷி கூறியது போல அவரவர் தனிப்பட்ட அனுபவம் வேண்டும். அது கிடைக்க நாம் நம்முள்ளே தேடுவோம்...

.......................... தேடுவோமா?

14 comments:

vivekanandan.p said...

pona piraviyil paavam seithavan
intha piraviyil panathai thedukiran--pona piraviyil punniyam seithavan intha piraviyil kadavulai kaankiran

Nanjil Kannan said...

மிக அற்புதமான பதிவு அண்ணா .. என்னை போன்று விளிம்பில் நின்று வேடிக்கை பார்பவர்களுக்கு சாட்டை ஆடி போன்ற எழுத்துக்கள் . உங்களுக்கும் ரமண மகரிஷிக்கும் மனமார்ந்த நன்றிகள் ..

என்றென்றும் உங்கள் தம்பி

கண்ணன்

sugantha said...

sir i want to know the manthras and pooja methods and opt timings for chithra pournami.please reply---sugantha

valli said...

Excellent article. valli.

Anonymous said...

அருமையான பதிவு,

Anonymous said...

very nice rishi pala naal irunda ennodaiya athangam ithu bbc la eppa india va pathi kattinalum india voda slum ,pambu aati,pinnar haridwar irukira aakorigal ivangala katti nambala saga adikuranga inga irukavangalukku namba evlo tan eduthu solliyum nambala intha news ellam pakurappa orum elanma tan pakuranga .

suresh said...

"நான்" என்பது என்ன .அறிய முயற்சி செய்கிறேன் உங்கள் பணி தொடரட்டும்

Balasubramanian Pulicat said...

wonderful article. I have seen and have tasted raw meat also, when I used to take non veg. It is not in effect raw. It is soaked like pickle as a part of lebanese receipe. ONce it is soaked like pickle, it loosses its rough and raw form. Only thing is it is not boiled. I just took one small piece for the sake of company. Now for many years I have stopped non veg in search of sprituality, still living in saudi arabia.

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவு சிறிது பெரிதாக இருந்தாலும் கருத்துக்கள் அனைத்தும் அருமை ! நன்றி ! வாழ்த்துக்கள் !

Muthukumar said...

மதிப்பிற்குறிய ஆசிரியருக்கு,
"ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...." - நமக்கு நினைக்கவே மிகவும் பெருமையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் பேசும் பெரும்பாலானவர்கள் ”நான் - என்னால்” என்ற தற்பெருமை இல்லாமல் பேசுவோர் மிகவும் குறைவு. மகரிஷியின் கொள்கையின்படி நாம் நடக்க நினைத்தால் எதைப்பற்றியும் கவலையில்லாமல் - எவருடைய போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளாகாமல் வாழமுடியும் என்பதில் ஐயமில்லை...

கோடியில் ஒருவன் said...

நல்லதொரு பதிவை தந்து சிந்திக்க மற்றுமொரு தூண்டியிருக்கும் ஆசிரியருக்கு நன்றி.

ஒரு துறவி எப்படி இருக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ரமண மகரிஷி. ஆனால், தற்போது துறவிகளுக்கான இலக்கணமே மாறிவிட்டது.

//////////////////// எங்க ஊர்ல ஒரு பொண்ணு. பார்க்கிறதுக்கு நல்லா , அழகா அம்சமா இருக்கும். காலேஜ் படிச்ச பொண்ணு. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணை பார்த்தாக்கூட - அந்த அழகைத் தாண்டி , கொஞ்சம் அருவருப்பு - மிரட்சி தான் இருந்தது. ////////////////////

அழகான பெண்களின் குறைகளை பெரிதுபடுத்தவேண்டாம் என்று ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன். (ஹி...ஹி...!)

////////////////////இறைவனுக்குக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல குரு ஒருவர் இருந்தால் நம் வேலையும் எளிது. தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார்.////////////////////

ஆன்மீகத்தில் மேலே செல்ல விரும்புகிறவர்களுக்கு, குரு மிகவும் அவசியம். குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தையே ஜெபித்து வரவேண்டும். குருவருளின்றி திருவருளில்லை.

எனக்கு தெரிஞ்சி ஒருத்தரு இருக்காரு. அவரை தான் குருவா ஏத்துக்கலாமான்னு யோசிச்சிகிட்ட்ருக்கேன். அதுக்கான சகல தகுதியும் அவர் கிட்டே இருக்கு. என்ன, ஒத்துக்குவாரா என்னன்னு தான் தெரியலே. நேர்ல பார்க்கும்போது கைல கால்ல விழுந்தாவது அவர் கிட்டே உபதேசம் வாங்கிடணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.

ஒரு சிலர் குரு உபதேசம் பெரும் விதம் மிகவும் விசித்திரமாக இருக்கும். சுகப்பிரம்ம மகரிஷி, பூவுலகில் பக்தியை பரப்ப கபீர் தாசராக அவதரித்திருந்தார். அப்போது, குரு உபதேசம் பெறவேண்டி, குருவை தேடி அலைந்தார். ஆனால், பிறப்பில் இஸ்லாமியரான இவரை எவரும் இவரை சீடனாக ஏற்றுக்கொண்டு மந்திரோபதேசம் செய்ய விரும்பவில்லை. அப்போது காசியில் இருந்த ராமானந்தரிடம் சென்று தமக்கு மந்திரோபதேசம் செய்துவைக்கும்படி கேட்க, அவரோ இவரை திட்டி அனுப்பிவிட்டார். இருப்பினும் கபீர் மணம் தளரவில்லை. கடைசீயில் ஒரு உபாயம் கண்டார். பெரியவர்கள் தங்களை அறியாமல் ஏதாவது தவறு செய்திவிட்டால் உடனே இறைவன் நாமாவை கூறுவார்கள். எனவே அதையே நாம் மந்திரோபதேசமாக கொள்ளலாம் என்று கருதி, ராமானந்தர் காசியில் நீராட வரும் வழியில் முன்தினம் இரவே சென்று நதி தீரத்தில் படித்துறையில் உள்ள படியில் ஒடுங்கி படுத்துக்கொண்டார். அதே போல, அதிகாலையில், நீராட வந்த ராமானந்தர் தெரியாமல் இவரை மிதித்துவிட, 'ராம்... ராம்' என்றார். அதையே தமக்கு உபதேசமாக ஏற்றுக்கொண்ட கபீர் அதற்க்கு பிறகு, பரம சந்நியாசி ஆகி, பக்தியை பரப்பி சாட் சாத் அந்த ராமனையே தர்சித்தாராம். திருமால் அடியார்களின் வரலாற்றை கொண்டாடும் 'மகா பக்த விஜயம்' நூலில் இவரது வரலாறு தனிசிரப்புடன் போற்றப்படுகிறது.

எனவே, ஆன்மீகத்தில் கரை காணவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முதலில் DETERMINATION இருக்கவேண்டும். பின்னர் அனைத்து சுலபத்தில் சாத்தியமாகும்.

- கோடியில் ஒருவன்

World Views said...

http://improvementyou.blogspot.in/

Chitti said...

நம் நாட்டை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆன்மிகத்தில் தலை சிறந்த நாடாக நாம் விளங்குகின்றோம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால், இன்றைய உலக சூழல் நம்மை எங்கோ கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. துரித உணவு (நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட்டு கூட முடியாத மென்பொருள் தொழில்நுட்ப வாழ்க்கையில் வாழ்கிறோம்), பகட்டு ஆடம்பரம், இன்னொருவரின் உழைப்பை திருடி அந்த புகழை தாம் பயன்படுதிக்கொள்வது, ...இன்னும் பல. இதற்க்கான அறிகுறி தான் நூற்றில் எண்பது சதவிதம் பேர் நம் நாட்டில், ஒரு ஐந்து நிமிஷம் கூட உட்கார்ந்து தியானம் பண்ண முடியாது இருக்கின்றார்கள்.(நானும் தாங்க. ஆனால், முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். விடாமல் தொடர்ந்து பண்ணுவதற்கு. முடியவில்லை. எனது முயற்சி மட்டும் தொடர்கிறது). தியானம் எதற்கு தேவை??? நம்மை உணர.
one who knows self who knows all. தன்னை அறிந்தவன் எல்லாம் அறிவான். அதற்கு தான் தியானம்.
நாம் நம்மை உணர முயற்சிப்போம். இந்த பதிவை அளித்த திரு. ரிஷி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
சரியான நேரத்தில், மிக சரியான பதிவு (எனக்கு).
மிக்க, மிக்க நன்றி.

**சிட்டி**.

Anonymous said...

guruve saranam.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com