Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஸ்ரீ நந்தன புத்தாண்டு ஸ்பெஷல் பதிவு : சதிகளை முறியடிக்க ஒரு ஆன்மீக ஆலோசனை .....!

| Apr 12, 2012
வாசக நண்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீ நந்தன ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த கட்டுரை - உங்கள் அனைவருக்கும் ஒரு புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்....    

கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்கிற கேள்வியை ஒதுக்கிவிட்டு - இறையை முழுவதும் நம்பிய ஒருவருக்கு - அவர் தரிசனம் கிடைத்த அனுபவம் ஒன்றை பார்க்க விருக்கிறோம்.
 
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.உடனே உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்த விஷயம். கொஞ்சம் தாமதமாக வந்து இருக்கிறது....


அது சரி, எது எது எப்போ , யாரை சென்றடையணும் என்பது அவன் கையில் அல்லவா இருக்கிறது.. சரி, ரொம்ப ஓவர் பில்ட் அப் கொடுக்காம மேட்டருக்கு வர்றேன்.

சில வாரங்களுக்கு முன்பு, அதிமுகவில் இருந்து தனது உற்ற தோழியாக இருந்த சசிகலாவை , முதல் அமைச்சர் ஜெயலலிதா நீக்கினார். அவர்கள் இருவருக்கும் இருந்த நட்பு  உலகம் அறிந்த விஷயம். என்ன நடந்ததோ, திடீரென்று நீக்கினார். அதன் பிறகு, சென்ற வாரம் இருவரும் மீண்டும் சந்தித்து இணைந்து கொண்டனர் என்பது புது நியூஸ். சரி, இந்த இடைப் பட்ட காலத்தில் - என்ன நடந்து இருக்கும்? சசிகலா எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டு இருக்கலாம். சில தவறுகளை திருத்தி இருக்கலாம். இதை எல்லாம் தவிர - இன்னொரு விஷயம் நான் கேள்விப் பட்டு இருந்தேன்.

ஒரு சாம்ராஜ்ய அதிபதியிடம் நட்பு கொள்வது என்பது - எவ்வளவு நல்லது, எவ்வளவு கெட்டது என்பது, அவரவர் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் தெரியும். குடும்ப நலன், சுய நலன்கள் எல்லாம் மறந்து - அரசன் ஒருவனையே நினைத்து , ராஜ விசுவாசம் காட்டியாக வேண்டும். இல்லையென்றால், அவனை வாரி விட , ஆயிரம் பேர் நேரம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

ஒரு பெரிய கம்பெனியில் உத்தியோகம் பார்க்கும் நிலையும் அப்படித்தான். கடை, இடைநிலையில் இருக்கும் வரை கவலை இல்லை. தலைமைப் பொறுப்பு என்று வந்து விட்டால் - அதற்க்கு கொடுக்கும் விலை ரொம்ப அதிகம். குடும்பத்தில் இருப்பவர்கள் அதை அனுசரித்துப் போகாவிட்டால் - வீட்டில் தினமும் யுத்தம், பின்பு உறவில் விரிசல் என்று எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடும். வீட்டில் உள்ள கோபம் - கம்பெனியில் தன் கீழே உள்ள ஊழியர்களிடம் வெளிப்பட , அங்கேயும் மனத்தாங்கல் ஏற்பட்டு விட - அங்கேயும் ஒரு சுமூகம் நிலவாது.

இது எல்லாத்தையும் விட - தெரிஞ்சே மோதுற ஆளுங்க மட்டும் இல்லாம சிரிச்சுக் கிட்டே , கழுத்தை அறுக்கிற கூட்டத்தையும் சமாளிக்கணும்..  எவ்வளவு வேகமாக உச்ச நிலைக்கு வந்தார்களோ , அங்கு வந்த பிறகு - ஏண்டா வந்தோம் என்கிற நிலைமைக்கு வந்து விடுவார்கள். இது மாறுவதுக்கு வழி இருக்கிறதா?

இதே நிலைமைதான், உத்தியோக நிமித்தம் - குடும்பம் , குட்டி என்று எல்லாவற்றையும் பிரிந்து , தொலை தூரம் வசிப்பவர்கள் நிலைமையும்.

எதோ ஒரு காரணத்தால் , அந்த சூழ் நிலைக்கேற்ப  முடிவு எடுக்கப்பட்டு  இருந்தாலும்,  கொஞ்ச காலத்தில் எவ்வளவு சம்பாதித்து என்ன புண்ணியம்.. என்கிற மனப் புழுக்கம் ஏற்பட்டு விடும். உடனே ஊர்ப் பக்கம் போனால் போனால், இந்த அளவு சம்பாதிக்கவும் முடியாது. குடும்பத்தை உடன் கூட்டி வரவும் முடியாது... அட என்னைய்யா வாழ்க்கை, எதைக் கிழிக்கப் போறோம்? இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போறோம்..? ஏதாவது வழி கிடைக்காதா?  அப்படிங்கிற எண்ணம் தவிர்க்க இயலாது.. சரி, நிஜமாகவே இதற்க்கு வழி இருக்கா? இருக்குது பாஸ்... இருக்குது... மேலே படிங்க..!

இப்போ சசிகலா மேடம் விஷயத்துக்கு வருவோம்...
எந்த ஒரு இக்கட்டான நிலைமையிலும், தன்னாலான முயற்சிகளை செய்து விட்டு - அவன் வசம் பொறுப்பை விட்டு விட்டு - அவன் முடிவுக்கு தலை வணங்கி விடுவது, உத்தமம்.

மேடம் நல்லவங்களா , கெட்டவங்களா என்று எல்லாம் ஆராய்ச்சி செய்வது , நம்மளை மாதிரி சாமான்யர்களுக்கு தேவையே இல்லாத விஷயம். ஆனா, இந்த பிரிஞ்சு இருந்த கால கட்டத்துல, அவங்க ஒரு சாமி கும்பிட்டு வந்ததா - செய்தி படித்தேன். பொதுவில் பார்த்தால் - அது ஒரு சாதாரணமான செய்தி. ஆனால், எனக்கு படித்தவுடன் பயங்கர ஆச்சர்யம். அட, சரியான இடத்துக்குத் தான் வந்து இருக்கிறாங்க... யாரோ, நம்மளை மாதிரி ஒரு நல்ல மனுஷன் ஆலோசனை சொல்லி இருப்பார் போலன்னு நினைச்சேன்....

சரி, பார்ப்போம்.. அவங்க நினைத்தது  நடந்தா - கண்டிப்பா நம்ம இணைய தளத்திலும்  இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அப்போதே எண்ணினேன்.
இதோ இருவரும் இணைந்து விட்டார்கள் என்று செய்தி வந்து விட்டது.  
அப்படி என்ன அந்த கோவில்? அவர்கள் போய் வணங்கிய இடம் ஒரு ஜீவ சமாதி. திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில். ஜீவ சமாதிகளில் இருந்து  வெளிப்படும் அபரிமித சக்தி பற்றியும், பாம்பன் சுவாமிகள் பற்றியும், நாம் ஏற்கனவே நமது பழைய கட்டுரைகளில் சொல்லி இருக்கிறோம். நேரம் கிடைக்கும்போது, படித்துப் பாருங்கள்.

இதைப் பற்றிய செய்தி குறிப்பு படிக்க கீழே க்ளிக் செய்யவும்.
Source  : http://thinamalar.net/News_Detail.asp?Id=408394


வி.ஐ.பி.க்கள் பலர் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.அவங்க வாழ்க்கையிலே எவ்வளவோ, நல்லது , கெட்டது  இருந்தாலும், அவங்களுக்கே - கேட்டதும் உடனே பலன் கிடைக்குதுன்னா,  நம்மளை மாதிரி ஓரளவுக்காவது நல்லவங்களுக்கு உடனுக்குடன் பலன் கிடைப்பது உறுதி.

அடுத்த முறை சென்னை வருவதாக இருந்தால் - அவசியம் திருவான்மியூர் சென்று - மருந்தீஸ்வர தரிசனமும், பாம்பன் சுவாமிகள் ஆசியும் பெற்று வாருங்கள்...

சரி, பாம்பன் சுவாமிகள் ஆசீர்வாதம் - குறிப்பாக என்னென்ன பலன்கள் பெற்றுத் தரும் தெரியுமா?

சதி, கோர்ட்டு வழக்கு , பொய் வழக்கு , சம்பந்தமே இல்லாமல் - திடீரென்று ஒருவர் மேல் அபாண்டமாக பழி விழுவது , திட்டமிட்டே பெரிய சதிக்கூட்டம் ஒருவரை ஒழித்துக் கட்ட முயல்வது ,  தகுதி இருந்தும் முன்னேற்றம் அடையாமல், கிடைக்க வேண்டிய பேர் , புகழ் கிடைக்காமல்  - சுற்றி இருப்பவர்களால் தொல்லை அடைவது,  போன்ற சந்தர்ப்பங்களில் - ஒருவர் அவசியம் சென்று வணங்க வேண்டியது - சுவாமிகளைத்தான். நம்பியோருக்கு , இன்றும் தனது சுய ரூபத்தில் பலமுறை காட்சி கொடுத்து அருள்கிறார் சுவாமிகள்...

வாழ்வில் செவ்வாய் தசை நடப்பவர்கள், அடிக்கடி வாகன விபத்துகளை சந்திப்பவர்கள் அவசியம் சென்று வரவும்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஷண்முக கவசம் - பாராயணம் செய்பவர்களுக்கு  பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி அகலும். உள்ளம் உறுதி பெறும். காரிய சித்தி உண்டாகும்.

இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே - "VIP " க்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவதன் ரகசியம்....!


 சரி, யார் இந்த பாம்பன் சுவாமிகள்..?

 தனது வாழ்வில் ஒரு முறை அல்ல இருமுறை அல்ல - பலமுறை முருகப் பெருமானை தரிசித்தவர். முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்த ஏதோ ஒரு ஆதி காலத்தில் அல்ல.. நம்ம அப்பா , தாத்தா - காலத்தில் தான்.

 டிசம்பர் 23  - 1927  ஆம் நாள் - ஒரு குதிரை வண்டியின் சக்கரம் ஏறி - அவர் கால் எலும்பு முறிந்து - சென்னையில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நேரத்தில் - முருகப் பெருமானே வந்து குணப் படுத்தி இருக்கிறார். இது ஆவணப்படுத்தப் பட்டும் இருக்கிறது. உடன் இருந்த ஆங்கில மருத்துவர் - இந்த அதிசயத்தை "Miracle " என்று எழுதி , அந்த குறிப்பை பாதுகாத்தும் வருகின்றனர். சுவாமிகள் தங்கி இருந்த அறையை - பூஜை அறை போன்று இன்றும் வைத்துள்ளனர்.

இதைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு : கீழே உள்ள "லிங்க்" கை பார்க்கவும்.

http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=3338.0

மதிப்பிற்குரிய பி.எஸ்.பி. ஐயா அவர்கள் எழுதியுள்ள சித்தர்கள் மகிமை புத்தகத்திலும் - சுவாமிகள் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை எழுதி இருக்கிறார்.
சுவாமிகள் இயற்றிய - கீழே உள்ள இந்த கவசத்தை - நம்பிக்கையுடன் பாடிவர, நிம்மதியான வாழ்வு நிச்சயம் அமையும்.

                           ஸ்ரீ ஷண்முக கவசம்

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்

தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி

எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன

திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. (1)


ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க

தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க

சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க

நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. (2)


இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை

முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க

துரிசுஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க

திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. (3)


ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க

தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க

ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்

ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. (4)


உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க

தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க

புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்

பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. (5)


ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்

தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய

நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ

ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. (6)


எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க

அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க

விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க

செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. (7)


ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க

சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க

நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க

சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. (8)


ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க

பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க

மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க

தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. (9)


ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்

பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்

கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்

வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. (10)


ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்

தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி

பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,

தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. (11)


ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்

தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்

தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்

கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. (12)


கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை

கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு

நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்

சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. (13)


ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்

சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி

நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி

உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. (14)


சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்

நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள

குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை

பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. (15)


ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க

சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,

திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்

எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. (16)


டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை

குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,

நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்

எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. (17)


இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்

முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்

சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த

பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. (18)


தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்

சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,

அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை

எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. (19)


நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்

அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்

இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி

இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. (20)


பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்

கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி

எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை

ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. (21)


மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்

தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்

விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை

நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. (22)


யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க

அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க

சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க

சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. (23)


ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்

செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி

விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்

எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. (24)


லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று

தகர மர்த்தனமே செய்த சங்கா¢ மருகன் கைவேல்,

நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்

இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர் காக்க. (25)


வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க

விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க

நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்

கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. (26)


இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,

வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்

பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்

செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. (27)


இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்

வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க

ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க

தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. (28)


இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க

திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க

நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க

மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. (29)


இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க

தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க

நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்

கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. (30)

அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...! பரம்பொருள் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க இறையை இறைஞ்சுகிறேன்..!

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்..!

13 comments:

Anonymous said...

nanri rishi .iniya puthandu nal vazthukkal.

arul said...

superb

Surya said...

excellant keep up the good work.

siva said...

very nice to read this. god bless you all.

krishnappan said...

can you please give me the address of the temple,in chennai where it is?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நன்றி !

Kamalnath Balakrishnan said...

உங்களிடம் இருந்து தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை எதிர் பார்க்கிறேன்

ஸ்ரீகாந்த் said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த பதிவு உண்மையில் மிகவும் உபயோகமானது

Anonymous said...

அய்யா !
பாம்பன் சுவாமிகள் உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது உண்மை .... மிக அழகாக அதை பதிவு செய்துள்ளீர்கள் ....

ஆனால் அதை சசிகலா உடன் உதாரண படுத்த வேண்டாம் .... ஜெயலலிதா / சசிகலா இடையே உள்ள உறவு மோசமானது .இயற்கைக்கு முரணானது . மேலும் கடந்த சில மாதங்களாக நடந்தது முற்றிலும் நாடகமே ... இதில் வெளி வராத பல ரகசியங்கள் உள்ளது ... இவர்கள் பல உன்னதமான தெய்வ சக்திகள் / சடங்குகளை சில வியாபார நோக்கமுள்ள ஜோதிடர்கள் மூலம் தங்களுக்கு தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள் ... இது அவர்களின் கர்ம வினைகளை அதிகபடுத்தும் பாவ செயல்களாகும் ... வேதங்களின் படி ஒருவரின் விதி பயன்கலையோ / தான் செய்யும் செயல்களின் ( பாவங்களின்) வினைகளையோ மாற்ற இயலாது... அதை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் ... முற்றிலும் மனம் இறைவனிடம் சரணடைந்து , உலக அனைத்து உயிர்களையும் தனக்கு சமமாக பாவித்து இது போன்ற சக்திகளை வணங்கும் போதுதான் பலன்கள் ஏற்படும் . இவர்கள் எல்லாம் அகம்பாவம் / சுயநலம் பிடித்த கலியுக நாயகர்கள் ...

தயவு செய்து இவர்களை ஒருபோதும் பாம்பன் சுவாமிகள் அல்லது மற்ற தெய்வ சக்திகளுடன் தொடர்பு படுத்த வேண்டாம் .... நன்றி அய்யா ...

Balaji said...

Sir, I had a great pleasure on reading your article. Since a long time I've a thought of opening blog. I've opened today and posted a article based on your blog. I've added my knowledge too. I thought that you should not mistake that I'm stealing your content. so just thought of telling you. Here is my link. Thavarirundaal Mannikkavum.
http://sathyamdharmam.blogspot.in

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் Sreemath Pamban Swamigal -- chaarvi said...

இறை யருளும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் குருவருளும் துணை நிற்க எங்களது பிரார்த்தனைகள்,
வாழ்த்துக்களுடன்
என்றென்றும் அன்புடன்
எம் எஸ் சேர்வராயர்
கலியுக கடவுளாம் முருகனைப் போற்றுவோமே

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் முக்கிய பாடல்களும்,முருகனைத் துதிக்கும் பல பாடல்களின் தொகுப்பும்கீழே தரப்பட்டுள்ள வலைப்பூவில் காணலாம்.தங்களின் மேலான விமர்சனங்களைப் பதிவதோடுமற்ற அன்பர்களுக்கும் தெரிவிக்கவும்
http://mscherweroyar.blogspot.com/

umaganesh said...

thamil new year wishes RISHI sir. i'm great fan of your articles and often share it on facebook. this one also very nice. thanks for sharing with us.

கோடியில் ஒருவன் said...

பிரச்னைக் கடலில் சிக்கித் தவிப்போருக்கு 'கலங்கரை விளக்கம்' போன்ற அருமையான பதிவு.

இங்கு கமென்ட் பகுதியில் ANONYMOUS நண்பர் சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். "இவரைப் போன்றவர்களுக்கே திருவருள் கிட்டும்போது சாமான்யர்களுக்கு கிட்டாதா?" என்று காட்டவே மேற்படி சசிகலா தொடர்பான விஷயத்தை ஆசிரியர் இங்கு கூறியிருக்கவேண்டும்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...

சில சமயம் என் பிரச்னைகளை - கஷ்டத்தை - தீர்க்க நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னை புதுப் பிரச்னையில் சிக்க வைத்துவிடும். இது எனக்கு பழகிப் போன ஒன்று தான். எலிப்பொறிக்குள்ளே மாட்டிக்கிற எலி பார்த்தீங்கன்னா உள்ளே இருக்குற வடையை சாப்பிடத் தான் போகும். ஆனா ஒன்ஸ் பொறியில மாட்டிக்கிச்சுன்னு வெச்சிக்கோங்க எதை ஆசையா சாப்பிடப் போச்சோ அதை சட்டை கூட செய்யாம கம்பி வழியா 'எப்போடா வெளியே வருவோம்'னு. தான் பார்த்துக்கிட்டுருக்கும். அது மாதிரி பிரச்சனைகள்ல மாட்டும்போது நமக்கு எந்த வேலையும் ஓடாது.

பிரச்னைகளை எல்லாரும் சந்திப்பாங்கன்னா நான் அதை போர்வை மாதிரி போர்த்திகிட்டு தூங்குறவன். நம்பினா நம்புங்க... கடந்த சில நாட்களா எனக்கு ஒரு பெரிய பிரச்னை. என்ன பண்றது, எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலே. அதனால் விடுமுறை நாளா இருந்தும் எந்த வேலையும் ஓடலை. மனசும் ஒரே பாரமா இருந்திச்சு. ஒரு வகையில் விரக்தியாகவும் கூட இருந்திச்சு.

இப்படிப் பட்ட சூழ்நிலைல, வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆசிரியரோட இந்த பதிவை படிச்சேன். உடனே பாம்பன் சுவாமிகளை தரிசிக்கனும்னு தோணிச்சி. முதல் முறையா பாம்பன் சுவாமிகள் திருச்சமாதிக்கு போறேன். .

தமிழ் வருடப் பிறப்பு என்பதால், நல்ல கூட்டம். அர்ச்சனை டிக்கட் வாங்கி முருகனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு சுவாமிகளோட திருச்சமாதி வந்தேன். தீபாராதனை நடந்துச்சு. அங்கேயே சுவாமிகளோட படம் முன்னாடி உட்கார்ந்து பிரார்த்தனை செய்தேன். எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் பிரார்த்தனை பண்ணினேன். என்னோட பிரச்னையை நினைச்சு என்னையறியாம அழுதேன். சாதாரணமா, எதிரியாவே இருந்தாலும், நம் முன்னாடி அவன் கண்ணீர் விட்டு அழுதால் மனுஷங்களுக்கே கொஞ்சம் இரக்கம் பிறக்கும். மனுஷங்களுக்கே இப்படினா ஆண்டவனுக்கு? தவிர, கண்ணீரால் கழுவ முடியாத பாவங்களே இந்த உலகத்தில் இல்லை. என்னோட கோரிக்கைகளை சுவாமிகளிடம் உணர்வுப் பூர்வமாக சொல்லி அழுதுவிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்தேன். பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஆனா மனசுக்கு ஒரு அமைதி ஏற்பட்டிச்சு. அது எப்படின்னா, பாரத்தை தூக்க முடியாம தூக்கும்போது, அதை யாராவது வாங்கி அவங்க சுமந்தா எப்படி இருக்கும்? அப்படி இருந்திச்சு.

மனசு அமைதியாயிருந்தாலும் மறுநாள் காலைல கூட என்னோட பிரச்னையோட தீர்வுல எந்த முன்னேற்றமும் இல்லை. விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டேன். ஒவ்வொரு மணி நேரத்தையும் கழிப்பது ஒரு யுகத்தை கழிப்பது போலிருந்தது. வெளியே போயிட்டு சாயந்திரம் தான் வீட்டுக்கு வந்தேன். என்ன செய்றது.... ஒன்னுமே புரியலே. அப்போ தாங்க அந்த அதிசயம் நடந்துச்சு. எந்த வேலை நடக்காதுன்னு நினைச்சேனோ அது நடந்ததா தகவல் வந்துச்சு. தவிர பிரச்னை தீருவதற்கான வழிகள் ஒன்றல்ல மூன்று வழிகள் தென்பட்டிச்சி. ஒரு கணம் பாம்பன் சுவாமிகளோட கருணையை நினைச்சு சிலிர்த்துப் போனேன். 24 HRS ல் தலைகீழ் மாற்றம். நிச்சயமா இது ஆண்டவன் ஒருத்தனால் தான் சாத்தியப்படும். (தெய்வானாம் மானுஷ ரூபாம் - அதாவது இறைவன் நம் பிரச்னைகளை தீர்க்க மனித வடிவம் எடுப்பார். சில சமயம் மனிதர்களை கருவியாகவும் பயன்படுத்திக்கொள்வார்.)

வெள்ளிக்கிழமை பாம்பன் சுவாமிகளை தரிசித்துவிட்டு ஆலயத்திலிருந்து வெளியே வரும்போது அங்கு கோவில் ARCH இல் நான் கண்ட வாசகம் எத்துனை பொருத்தம் என்று பிற்பாடு நினைத்து பார்த்தேன். அப்படி என்ன வாசகத்தை பார்த்தேன்னு நினைக்கிறீங்களா?

கீழ் காணும் லின்க்கை க்ளிக் செய்து பாருங்க....

https://picasaweb.google.com/113224035328885309297/PambanSwamigalShrineArch#5731349139223041618

சுவாமிகள் முருகப் பெருமான் கிட்டே கேட்டு வாங்கின வரம் தான் நீங்க மேலே பாக்குற படத்துல இருக்குற வாசகம்.

நம் ஆசிரியர் சொல்வது போல, பிரச்னைகளில் சிக்கி திசை தெரியாது தவிப்பவர்கள் உடனே பாம்பன் சுவாமிகளை தரிசிக்க புறப்படுங்கள்.

முகவரி : Arulmighu Pamban Kumaragurudasar Thirukoil, Mayurapuram, (Next to Kalashetra Academy),Thiruvanmiyur, Chennai – 41. Ph: 24911866.

பாம்பன் சுவாமிகள் பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் இன்று நான் அங்கு சென்று அவரருளை பெற்றதற்கு நம் தளமும் ஆசிரியருமே காரணம்.

போனஸ் தகவல் : சென்ற வருடம் உடல் நலிவுற்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள், சிங்கப்பூர் சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு (இசபெல்லாவில் இருந்தபோது) ஒரு நாள் இங்கு வந்து வழிபட்டுவிட்டு சென்றாராம்.

- கோடியில் ஒருவன் c

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com