Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அதிசயம் : ஆஞ்சநேய தரிசனம் !

| Apr 6, 2012
வாசக அன்பர்களுக்கு வணக்கம்... நம்பியவருக்கு இறை தரிசனம் உண்டு என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.. இந்த நிகழ்வு.

பெரியவர் ரமணி அண்ணா அவர்கள் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை. சக்தி விகடனில் வெளியானது என்று நினைக்கிறேன்.  எனது நண்பர் ஒருவர் - மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அதை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி அடைகிறேன்....


பெரியவங்க எல்லாம் - எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.. நாம் எந்த அளவு வேறுபடுகிறோம் என்பது  தோன்ற ஆரம்பிக்கலாம்.... இறைவனுக்கு நைவேத்தியம் ஏன் படைக்கிறோம் என்பதற்கு , மிக நல்ல விதத்தில் காரணம் விளங்கும்.  நம்பி ராம நாமம் சொல்ல , ஆஞ்சநேய தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு - இது ஒரு ஆணித்தரமான சான்று...!

இந்த எழுத்துநடை,  கொஞ்சம் ஐயர் ஆத்து பாஷை அங்கங்கே இருப்பது  சிரமமாக தெரிந்தாலும் , முழுவதும் படித்துப் பாருங்கள்....பிரமிப்பில் நீங்கள் அமிழப்போவது  உறுதி....... 

  

ஒரு வெள்ளிக்கிழமை, நண்பகல் வேளை. சிருங்கேரியில் ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைகளை முடித்துக் கொண்டு, பிட்சை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

சிருங்கேரியை குரு பீடமாகக் கொண்ட திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வேதபாடசாலைகளில் பயின்று வந்த மாணவர்கள் பலர் அப்போது, சாரதாம்பாளையும் ஜகத்குருவையும் தரிசிக்க அங்கு வந்திருந்தனர். அவர்களைச் சில நாட்கள் தங்கிப் போகும்படி, ஸ்வாமிகள் கட்டளை இட்டிருந்தார். அந்த மாணவர்களும் ஸ்வாமிகளது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.


அப்போது, பிரவசனம் (ஆன்மிக விளக்க உரை) பண்ணும் உபன்யாசகர்களைப் பற்றி பேச்சு வந்தது. மதுரை தல்லாகுளம் வேத பாட சாலையைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்ற மாணவன் எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்தான். பிறகு, ”இந்த பிரவசனம் பற்றி மனசுல உள்ள ஒரு விஷயத்தை, குருநாதர்கிட்ட விக்ஞாபனம் (வேண்டுகோள்) பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றான். அவனைச் சற்று ஏற இறங்கப் பார்த்த ஆச்சார்யாள், ”என்னது? சொல்லேன்!” எனப் பணித்தார்.

உடனே அவன் தாழ்ந்த குரலில், ”வேற ஒண்ணுமில்லே குருநாதா! இப்பல்லாம் கதா பிரவசனம் பண்ற சில உபன்யாசகர்கள், சாராம்சத்தை விட்டுட்டு, இதர விஷயங்களைத்தான் நிறைய பேசறா! இதனால… சாராம்சம் மறந்து போயிடறது. இதர விஷயங்கள் மட்டும் நன்னா ஞாபகத்தில் இருக்கு. ‘நல்ல பிரவசனம் கேட்டோம்’கிற திருப்தி ஏற்பட மாட்டேங்கறது! இது, பிரவசனம் பண்றவாளோட குறைபாடா அல்லது கேக்கறவாளோட குறைபாடா? மகா ஸ்வாமிகள்தான் தெளிவுபடுத்தி அனுக்கிரகிக்கணும்!” என்றான்.

இதைக் கேட்ட மற்றவர்களும், இந்த சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாகத் தெரிவித்தனர். ஜகத்குரு புன்னகைத்தார். கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தவர், ”மொதல்ல, நீங்கள்லாம் போஜனம் பண்ணியாச்சா?” என்று பரிவுடன் விசாரித்தார்.

அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி, ”பண்ணியாச்சு ஸ்வாமி” என்றனர்.
”சந்தோஷம்” என்று சிரித்த ஜகத்குரு தொடர்ந்தார்: ”எங்கே, எதைக் கேட்டாலும், அதுல இருக்கிற நல்ல சாராம்சத்தை மாத்திரம் நாம கிரகிச்சுண்டு, மத்ததை விட்டுடணும். இதுக்கு, நம்ம மனசை பரிபக்குவப்படுத் திக்கணும். அதுதான் ஒசத்தியான குணம். உபன்யாசம் பண்றவா, காலத்தையும் சபையையும் அனுசரிச்சுண்டு… அதே நேரம், ‘சப்ஜெக்ட்’டையும் விட்டுடாமத்தான் பூர்த்தி பண்றா! நாமதான் அன்னபட்சி மாதிரி அதுலேர்ந்து கிரகிச்சுக்கணும்… என்ன புரியறதா?” என்று கேட்டு விட்டு பலமாகச் சிரித்தார்.
அவரது பதில், சீடர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஜகத்குருவை பார்த்தபடி… அவர்கள், தங்களுக்குள் ஏதோ ரகசியமாக விவாதித்தனர்!

சூர்யநாராயணன் என்ற சிஷ்யன் எழுந்து, மஹா சந்நிதானத்தை நமஸ்கரித்தான். பிறகு, பய பக்தியுடன் கேட்டான்: ”ஜகத்குருவிடம் ஒரு பிரார்த்தனை! நாங்கள்லாம் மத் ராமாயணம் கேக்கணும்னு ஆசைப்படறோம். ஜகத்குருதான் கிருபை பண்ணி…” – அவன் முடிப்பதற்குள், ”அதுக்கென்ன… பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போறது. நன்னா வாசிச்ச பௌராணிகாளா (உபன்யாசகர்) மைசூர்லேர்ந்து வரவழைச்சு சொல்லச் சொல்றேன்” என்றார் ஸ்வாமிகள்.
இதைக் கேட்ட சிஷ்யர்கள், ஒருவரை யருவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டனர். யக்ஞநாராயணன் என்ற சிஷ்யன் தயங்கியபடியே எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்தான். பிறகு பணிவுடன், ”ஜகத்குருவின் அம்ருத வாக்கால மத் ராமாயணம் சிரவணம் (கேட்டல்) பண்ணணும்னு எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை. குருநாதர் அனுக்கிரகிக்கணும்!” என்று வேண்டினான்.

ஸ்வாமிகள் நெகிழ்ந்து போனார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கலகலவென சிரித்தவர், ”ஓஹோ… இதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?! பார்ப்போம்… பார்ப்போம்…” என்றபடி எழுந்து உள்ளே சென்று விட்டார். சிஷ்யர்களுக்கு ஏமாற்றம்!

நாட்கள் கடந்தன. அன்றும் வெள்ளிக்கிழமை; சந்தியாகால வேளை. சாரதாம்பாள் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திடீரென… அம்பாளைத் தரிசிக்க வந்தார் ஸ்வாமிகள். அவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது மணி எட்டு இருக்கும்! ஆலய வாசலில் தயாராகக் காத்திருந்த சிஷ்யர்கள், ஸ்வாமிகளைக் கண்டதும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தனர். ஆச்சார்யாள் அப்படியே நின்றார்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே, ”ஏதேது, விடமாட்டேள் போல இருக்கே. சரி… சரி… நீங்க ஆசைப்பட்டபடியே நடத்திடலாம்! ஒரு நல்ல நாள் பார்த்து ப்ராரம்பம் (ஆரம்பம்) பண்ணுவோம்” என்றபடி வேகமாகப் புறப்பட்டார்.
அந்த நல்ல நாளும் வந்தது. ஏழு நாட்கள் ஆச்சார்யாள் சுந்தரகாண்டம் சொல்வதென முடிவாயிற்று. ‘மஹா சந்நிதானமே பிரவசன அனுக்கிரகம் பண்ணப் போறார்’ என்ற செய்தி பரவ, ஏகக் கூட்டம். அன்று மழை வேறு தூறி ஓய்ந்திருந்தது!

ஆசனத்தில் வந்து கம்பீரமாக அமர்ந்த ஜகத்குருவை அன்று தரிசித்தவர்கள், சாட்சாத் வேத வியாஸ பகவானே வந்து அமர்ந்திருப்பது போல் உணர்ந்தனர். கணீரென்ற குரலில் பிரவசனம் ஆரம்பமானது. அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென பிரவசனத்தை நிறுத்திய ஸ்வாமிகள், மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தார். அவரிடம், ”ஆரம்பத்திலேயே சொல்லணும்னு இருந்தேன்… மறந்துட்டேன்! நீ என்ன பண்றே… என் பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு மனைப் பலகையைக் கொண்டு வந்து போடு. அதுமேல பட்டு வஸ்திரத்தை விரி. அப்புறம், ஒரு வெள்ளித் தட்டுல ரெண்டு பெரிய கொய்யாப் பழத்தை கொண்டு வந்து வை… சீக்கிரம்!” என்று கட்டளையிட்டார். உத்தரவு பூர்த்தி செய்யப்பட்டு, உபன்யாசம் தொடர்ந்தது.

ஐந்தாம் நாள் உபன்யாசமும் பூர்த்தி அடைந்தது. அந்த மாணவர்களுக்கும் நன்கு புரிகிற மாதிரி விவரித்த ஸ்வாமிகள், இடையிடையே தர்மசாஸ்திர நுணுக்கங்களையும் விளக்கினார்.

திருநெல்வேலி வேத பாடசாலையைச் சேர்ந்த வேங்கடேசன் என்ற மாணவன் மெள்ள வந்து ஜகத்குருவை நமஸ்கரித்து, ”எனக்கு ஒரு சந்தேகம் குருதேவா” என்றான் தயங்கியபடி.

”என்ன சந்தேகம், கேள்!” என்றார் ஸ்வாமிகள்.
அவன் திக்கித் திணறியபடி கேட்டான்: ”குருநாதா! உபன்யாசம் ஆரம்பிச்ச நாள்லேர்ந்து… உங்க பக்கத்துல ஒரு பலகையைப் போட்டு, அதுக்கு முன்னால ஒரு தட்டுல கொய்யாப் பழத்தையும் வைக்கச் சொல்றேள்! அது எதுக்குனு புரியலை…”

இதைக் கேட்டு கலகலவென சிரித்த ஆச்சார்யாள், ”சொல்றேன் கேளு… ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்… தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்’னு… எங்கெல்லாம் ராமனின் பெருமை பேசப்படறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமி வந்துடுவார்னு ஒரு நம்பிக்கை. இங்கே நாம மத் ராமாயணம்னா சொல்றோம். அதனால நிச்சயம் ஸ்வாமி வருவாரில்லையா? அவரை நாம நிக்க வைக்கலாமோ? அவர் ‘நவ வ்யாகரண’ பண்டிதராச்சே! அவர் உட்காரத்தான் ஆசனப் பலகை! அப்புறம்… நம்ம வீட்டுக்கு யாராவது ‘கெஸ்ட்’ வந்தா பழம்- பட்சணம், காபியெல்லாம் குடுத்து உபசாரம் பண்ற மாதிரிதான் இது! ஸ்வாமிக்கு கொய்யாப் பழம்னா ரொம்பவும் புடிக்கும். இப்ப புரிஞ்சுண்டியா?” என்று கேட்டார்.

தலையாட்டினான் வேங்கடேசன். அந்த இளம்பிஞ்சு இன்னும் தெளிவடைய வில்லை என்பது அந்த தெய்வத்துக்கு தெரியாதா என்ன!
ஆறாம் நாளன்றும் நல்ல கூட்டம். அன்றைய உபன்யாசத்தை உருக்கமாகக் கூறி முடித்தார் ஜகத்குரு.

அனைவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துச் சென்ற பின்னர், பாடசாலை மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக நமஸ்கரித்து நகர்ந்தனர். கடைசியாக, முதல் நாள் சந்தேகம் கேட்ட திருநெல்வேலி பாடசாலை மாணவன் வேங்கடேசன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, கைகூப்பி நின்றான். புன்முறுவலுடன் அவனை ஏறிட்ட ஸ்வாமிகள், ”ஒம் முழுப் பேரென்ன?” என்று வினவினார்.

”பிரசன்ன வேங்கடேசன் குருநாதா!”
”பூர்வீகம் எது?” என்று கேட்டார்.
”திருநெல்வேலி- கடையநல்லூர் பக்கம் ஒரு குக்கிராமம் குருநாதா”
”தகப்பனார் என்ன பண்றார்?”
”உபாத்தியாயம் (வைதீகத் தொழில்) குருநாதா!”
உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ்” என்று கூறிவிட்டு, அன்றைய தினம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கொய்யாப் பழங்களை தன் தங்கக் கைகளால் எடுத்து, அவனிடம் தந்தார். பிறகு, ”வேங்கடேசா! இவை ஆஞ்சநேயர் சாப்பிட்ட உச்சிஷ்ட (மீதி) பிரசாதம். நறுக்கி நீயும் வாயில போட்டுண்டு, எல்லாருக்கும் கொடு!” என்று விடைகொடுத்தார்.

ஆனால், பிரசன்ன வேங்கடேசன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆச்சார்யாள் அளித்த இரு கொய்யாப் பழங்களையும் கைகளால் உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்!

அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள் தனக்குள் சிரித்தபடி, ”என்ன பிரசன்ன வேங்கடேசா! பழங்களைக் கையில் வெச்சுண்டு அப்டி என்ன யோசனை? கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்!” என்றார். அவன் தயங்கினான்.

”சொல்லு”- தைரியப்படுத்தினார் ஜகத்குரு.
”வேற ஒண்ணுமில்லே குருநாதா! அந்த ஆசனத்துல ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்து மத் ராமாயணம் கேட்டுட்டு, அவருக்கு அர்ப்பணிச்ச கொய்யாப் பழங்களையும் சாப்டுட்டுப் போறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.

”இத நான் சொல்லலே! பரம்பரை பரம்பரையா நம்ம தேசத்துல மத் ராமாயண பிரவசனம் பண்ணிண்டு வர பெரியவாள்லாம் பூர்ண நம்பிக்கையோட கடைப் பிடிக்கிற வழக்கம். இது சத்தியமும் கூட! இதுல, உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஞானகுரு.

அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது பிரசன்ன வேங்கடேசனுக்கு. பேசத் தயங்கினான். அவனை அருகில் இன்னும் நெருங்கி வரச் சொன்ன ஆச்சார்யாள், ”எதுவா இருந்தாலும்… மனசுல பட்டதை தைரியமா சொல்லு!” என்று உற்சாகப்படுத்தினார்.

உடனே அவன், ”நானும் பிரவசனம் கேக்கறச்சே அந்தப் பலகையையே அடிக்கடி பார்த்துண்டிருந்தேன்… என் கண்ணுக்கு ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்ததா தெரியவே இல்லியே! பக்கத்துல இருந்த சகாக்களையும் கேட்டேன். அவாளும் ‘தெரியலே’னுட்டா. அதான்…” என மென்று விழுங்கினான் வேங்கடேசன்.
உடனே ஆச்சாரியாள், ”சரி… சரி. இது உன்னோட முதல் சந்தேகம்! ‘ரெண்டு கொய்யாப் பழமும் வெச்சது வெச்சபடி அப்படியே இருக்கே! ஆஞ்சநேய ஸ்வாமி சாப்பிட்டிருந்தா, குறைஞ்சிருக்கணுமே’ங்கறதுதானே ரெண்டாவது சந்தேகம்?” என்று கேட்டார்.

பிறகு, ”ஆத்மார்த்தமான பக்தியும், சிரத்தையும் இருந்தா ஆஞ்சநேய ஸ்வாமி பவ்யமா, பக்தியோடு அமர்ந்து மத் ராமாயண சிரவணம் பண்றத நாமும் தரிசிக்கலாம்! ஆஞ்சநேயர் விஸ்வரூபியா வந்து உட்கார்ந்துட்டார்னா அத பார்த்துட்டு, தாங்கிக்கிற சக்தி எல்லோருக்கும் இருக்குமா? அதனால அவர், சூட்சுமமா வந்து கேட்டுட்டுப் போவார்!” என்று விளக்கம் அளித்தார். அத்துடன், ”உனக்கு கிரந்த எழுத்து வாசிக்கத் தெரியுமா?” என்று வேங்கடேசனிடம் கேட்டார்.

”தெரியும் குருநாதா” என்றான் அவன்.
உடனே, உள்ளேயிருந்து உபநிஷத் சம்பந்தமான ஒரு கிரந்த புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார் ஆச்சார்யாள். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு சிறு பகுதியை சுட்டிக் காண்பித்து, ”இதை, ஐந்து நிமிஷத்தில் மனப்பாடம் செய்து அப்டியே என்னிடம் ஒப்புவிக்க வேண்டும். முடியுமா பார்” என்றார் சிரித்தபடி!
புத்தகத்துடன் சற்றுத் தள்ளிப் போனான் பிரசன்ன வேங்கடேசன். சரியாக ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆச்சார்யாளிடம் வந்தவன், அவர் குறிப்பிட்ட பகுதியை அட்சர பிசகின்றி ஒப்பித்தான்.

ஆச்சார்யாள் முகத்தில் பரம சந்தோஷம். புத்தகத்தைக் கையில் எடுத்தார். தான் உருப்போடச் சொன்ன அந்தப் பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, ”வேங்கடேசா, நான் சொன்னபடி அஞ்சே நிமிஷத்துல படிச்சு ஒப்பிச்சுட்டே! நீ அந்த புஸ்தகத்திலேர்ந்து குறிப்பிட்ட அட்சரங்களை கிரகிச்சுட்டதால… அவை, அந்த இடத்திலேருந்து மறைஞ்சு போயிடலையே! கிரந்த எழுத்துக்கள்லாம் இருந்த இடத்துல அப்படியே இருக்கோல்லியோ? அதுமாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம எதை அர்ப்பணிச்சாலும், அதுல இருக்கிற பக்தி சிரத்தையுடன் கூடின ருசியை மாத்திரம் ஸ்வீகரிச்சுண்டு, பதார்த்தங்களைப் பரம கருணையோடு நமக்கே விட்டுடுறார். வெச்ச கொய்யா ரெண்டும் வாடாம- வதங்காம, முழுசா அப்படியே இருக்கிற ரகசியம் இப்ப புரியறதா உனக்கு?” என்று கேட்டுவிட்டு, கலகலவென்று சிரித்தார்.

பிரசன்ன வேங்கடேசன் பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். அங்கு, சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.
பிரவசன பூர்த்தி நாள்! மதியம் மூன்று மணிக்கே மேடைக்கு ஆச்சார்யாள் வந்து விட்டார். உபன்யாசம், மிக உருக்கமாகப் போய்க் கொண்டிருந்தது. பூர்த்தி கட்டம். அனைவரும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

பெரிய வானரம் ஒன்று தாவித் தாவி அந்த உபன்யாச கூடத்துக்கு வந்தது. ஒருவரையும் லட்சியம் பண்ணாமல் மேடையில் பாய்ந்து ஏறி, ஆஞ்சநேய ஸ்வாமிக்காக போடப்பட்டிருந்த பலகையில், ஆச்சார்யாளைப் பார்த்தபடி- சாதுவாக அமர்ந்து கொண்டது! ஜகத்குரு சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த கொய்யாப் பழங்களை ‘அது’ ஏறெடுத்தும் பார்க்கவில்லை! கூட்டம் இதைப் பார்த்து வியந்தது!

மாலை ஐந்து மணி. அதுவரை, அந்த வானரம் அப்படி இப்படி அசையவே இல்லை! பழங்களையும் தொடவில்லை. ஆச்சார்யாள் உபன்யாசத்தைப் பூர்த்தி செய்து, ‘பலசுருதி’ (பலன்) சொல்லி முடித்தார். பிறகு வலப் புறம் திரும்பி வானரத்தைப் பார்த்து, ”ஆஞ்சநேய ஸ்வாமி! மத் ராமாயணம் கேக்கறதுக்காக நீங்க வந்து உக்காந்திருக்கறதுல ரொம்ப சந்தோஷம்! அந்த ரெண்டு கொய்யாப் பழங்களும் உங்களுக்குத்தான்… ஸ்வீகரிச்சுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்ட வானரம், பழங்களை எடுத்துக் கொண்டு, ஆச்சார்யாளையே வாஞ்சையுடன் சற்று நேரம் உற்றுப் பார்த்தது.

இதற்குள் கூட்டத்திலிருந்து உரத்த குரலொன்று, ”ஆஞ்சநேயா… ராமா… ராமா!” என்று முழங்கியது. அனைவரும் குரல் வந்த திசையை ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கே பிரசன்ன வேங்கடேசன், கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தான்! இந்த நேரத்தில், மெள்ள மேடையை விட்டுக் கீழிறங்கிய வானரம், ராஜநடை போட்டபடி நடந்து சென்று மறைந்தது.

கண்களில் நீர் முட்ட ஜகத்குருவிடம் வந்த பிரசன்ன வேங்கடேசன், ”குருதேவா! ஒங்க பக்கத்துல பலகையில வந்து ஒக்காந்துட்டுப் போனது, என் கண்ணுக்கு வானரமா தெரியலே. சாட்சாத் ஆஞ்சநேய ஸ்வாமி, ஆஜானுபாகுவான சரீரத்தோட கம்பீரமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்! ஆச்சார்யாளோடு ஸ்வாமி ஏதோ பேசியதையும் பார்த்தேன்! நீங்க சொன்ன தாத்பர்யம் இப்ப எனக்குப் புரிஞ்சுடுத்து குருநாதா!” என்று ஜகத்குருவின் பாதார விந்தங்களில் விழுந்தான். எத்தனையோ பேர் தேற்றியும் அவனது கண்ணீரை மட்டும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த பரப்பிரம்மம் கரம் உயர்த்தி வேங்கடேசனை ஆசீர்வதித்தது!

நன்றி : பால ஹனுமான் வலைப்பூ .

13 comments:

anna said...

amazing!i got goosebumps!

சிவனடிமை said...

_/\_ ஓம் சிவசிவ ஓம் _/\_

நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் நாம் எப்போதும் இறைவனை காணலாம் என்பதற்கு நல் உதாரண கதை.
படிக்கிற எனக்கே கண்ணிர் வரும்போல் இருக்கும் போது, அனுபவித்த வேங்கடேசனின் கண்களில் கடலை விட அதிகமாக கண்ணீர் வந்து இருக்கும்.
எல்லாம் அவன் செயல்.

கோடியில் ஒருவன் said...

அருமையான பதிவு! அற்புதமான கட்டுரை!!

ராமாவதாரம் முடிந்து பரம்பொருள் வைகுண்டம் செல்லும்போது அவருடன் மற்றவர்கள் கிளம்ப, ஆனால் அனுமன் வர மறுத்துவிட்டார். "அதென்ன வைகுண்டம்? என் ராமனை அங்கு காண முடியுமா? அவனது கோதண்டத்தை அங்கு காண முடியுமா? அவனது நாமத்தை அங்கு எவராவது உச்சரிப்பார்களா? அதை நான் காதுகுளிர கேட்க முடியுமா?" இப்படை பலவாறாக கேட்டு, வைகுண்டம் செல்ல மறுத்துவிட்டார்.

"என் ராமனின் திருவடிகள் பட்ட இந்த பூமியே எனக்கு வைகுண்டம்" என்று இங்கேயே தங்கிவிட்டார். பகவானும், "கலியுகம் முடியும் வரையில், நீ பூமியிலேயே இருந்துவிட்டு பின்னர் வரலாம்" என்று திருவாய் மலரந்தருளிவிட்டு சென்றார்.

ராம நாமம் எங்கெல்லாம் உச்சரிக்கப்படுகிறதோ, ராமனின் புகழ் எங்கெல்லாம் பாடப்படுகிறதோ அங்கெல்லாம் அஞ்சனை மைந்தன் அனுமன் கண்ணீர் மல்க நின்று கேட்டுக்கொண்டிருப்பான் என்பது ஐதீகமோ நமபிக்கையோ அல்ல. அனுபவப் பூர்வமான உண்மை.

//////////////////////////////// நம்பியவருக்கு இறை தரிசனம் உண்டு என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.. இந்த நிகழ்வு. ////////////////////////////////

ஆனா இந்த நிகழ்வை பொறுத்தவரை, நம்பாமல் சந்தேகம் கொண்டு இருந்த பிரசன்னா வெங்கடேசனுக்கு அல்லவா அனுமன் காட்சிகொடுத்திருக்கிறார்?

அதற்க்கு காரணம் என்னவாக இருக்கமுடியும் என்றால், இறைவன் எப்போதுமே அற்புதங்களை நிகழ்த்துவதற்கு எவரையாவது கருவியாக பயன்படுத்திக்கொள்வான். இதுபோன்ற ஒரு அற்புதத்தை பிரசன்னா வெங்கடேசன் மூலம் அன்று நிறைவேற்ற அவன் திருவுள்ளம் கொண்டதால் பிரசன்னா வெங்கடேசனுக்கு இப்படி ஓர் ஐயத்தை ஏற்படுத்தி, அது தொடர்பாக அவனை கேள்வி கேட்க்க வைத்திருக்கிறார்.

இறைவன் ஆட்கொள்வது என்பது இது தானோ?

ரமணி அண்ணா அவர்களுக்கும், இந்த கட்டுரையை ஆசிரியருக்கு அனுப்பிய அவரது நண்பருக்கும், ஆசிரியருக்கும் நன்றி. நன்றி.நன்றி.

- கோடியில் ஒருவன்

R.Purushothaman said...

After I read this, I too cry. Jay Sri Ram

R.Purushothaman said...

Jay Sri Ram. After I read this me too cry. Thanks to all.

suresh said...

ஐயா,
நான் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் . சுமார் ஆறு வருடங்களாக ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு கோவிலாக செல்கிறேன்
என் வாழ்வில் நடந்தவை பல . நான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் திருப்பதிக்கு மலைப்பாதை வழியாக நடந்து சென்றேன் .எனது உடல் எடை அதிகம் . அப்போது என்னால் களைப்புனால் நடக்க முடியவில்லை .வழியில் ஒரு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலை பார்த்தேன் . அங்கு வழிபட்டுவிட்டு ஒவ்வொரு படியிலும் கால் வைத்து ஏறும் போதும் ஸ்ரீ ராம ஜெயம் சொல்ல தொடங்கினேன் .அதன் பிறகு சிறிதுகூட களைப்பு கிடையாது என்னால் எவ்வளவு நேரமும் களைப்பு இல்லாமல் நடக்க முடிந்தது பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் ஒவ்வொரு நொடியும் அதிசயமே .ஜெய் ஸ்ரீ ராம ஜெயம்.

Nanjil Kannan said...

படிக்க படிக்க உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது . இறுதியில் கண்களில் கண்ணீரும் வந்தே விட்டது . ஆத்மார்தமான பக்திக்கும் , நம்பிக்கைக்கும் என்றுமே பலன் நிச்சயம் உண்டு என்பதை உங்கள் கட்டுரைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன , நம்பினோர் கைவிட படார் .. இது நான்கு மறை தீர்ப்பு .. நன்றி ரிஷி அண்ணா :))) கட்டுரை அனுப்பிய அண்ணா/அக்கா விற்கும் நன்றி :))

கண்ணன்

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதம் ! சிறந்த பதிவு !

shiva said...

http://nutriliteamwayindia.blogspot.in/

shiva said...

Super up

shiva said...

Really super

http://nutriliteamwayindia.blogspot.in/

Anonymous said...

this is kaliyugam...that is y god sent his VAHANA to prove that he is exists....hahahhahahahah

ena kodumai !!!!!சிவசிவ..

இந்த சீன்/பிட் எத்தனை நாளைக்கு ஒட்டி கொட்ன்டு இருப்பார்கள்......
நாய் வந்தா பைரவ்,,,குரங்கு வந்தால் ஹனுமான்,பசு வந்தா லக்ஷ்மி...பாம்பு,கிளி வந்தா???......அய்யோ போதும் டா சாமி... சிவசிவ!!!!

Gobi Selvaraj said...

Arumai, Jai anjaneyaa..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com