Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஆண்டவன் அறிய நெஞ்சில் , ஒரு துளி வஞ்சமில்லை - அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

| Mar 26, 2012
மனிதனம்மா மயங்குகிறேன். தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே... தவறியும் வானம் மண்ணில் வீழ்வதில்லையே...

நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு. ஒன்று மன சாட்சி. ஒன்று தெய்வத்தின் சாட்சி யம்மா.. ! தெய்வத்தின் சாட்சி யம்மா.. !

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் , தெய்வத்தின் காட்சியம்மா , அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா , அது தான் உண்மையின் காட்சியம்மா!

மனதை மயக்கும் இந்த வைரவரிகள்  காலையில் இருந்து மனதில் வட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறது....

வாழ்க்கையில் நடைபெறும் சில சம்பவங்கள் இயல்பாக நடப்பது போல தோன்றும். நம் மனது , ஒரு சில அபூர்வங்களை தக்க வைத்துக்கொள்ளும். சிலவற்றை கண்டு கொள்ளாது...  மிகுந்த மன உளைச்சல் ஏற்படும்போது , ஏதோ ஒரு கோவிலுக்கு செல்லுவதாக வைத்துக்கொள்வோம்...  கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு, அந்த அர்ச்சகர் இறைவனுக்கு அளிவித்த ஒரு மாலையை உங்களுக்கு அணிவித்து, தலையில் வைத்து உங்களை ஆசீர்வதித்தால் எப்படி உணர்வோம்.... அட அடா... இறைவன் நமக்கு ஆசீர்வாதம் அளித்து விட்டார். நமது இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும், என்கிற ஒரு ஆணித்தரமான எண்ணம் கண்டிப்பாகத் தோன்றும் இல்லையா...?

அப்படி இருக்க, மிகுந்த பிரயாசையோடு நீங்கள் ஒரு கோவிலுக்குச் செல்லும்போது , அந்த ஆலயம் ஏதோ ஒரு காரணத்தால் , பூட்டி இருந்தால்...? சந்தேகமே இல்லாமல், நம் மனது ஓங்கி குரல் எழுப்பும்... அடடா, இறைவன் கூட முகம் திருப்பிக் கொண்டானோ... ? நமக்கு யார் துணையாக இருக்கப் போகிறார்கள்..?

ஆனால், நம்பி அருபவர்களுக்கு இறைவன் என்றும் துணை நிற்ப்பான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவத்தை இன்று பார்க்க விருக்கிறோம்... நமது வாசகர்களில் , மிக முக்கியமான நண்பர் , ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, தனக்கே உரிய சுவாரஸ்யமான எழுத்து நடையில் , சுவைபட எழுதி அனுப்பி இருக்கிறார்.... கொள்ளை அழகுடன் கூடிய புகைப் படங்களுடன்... அடுத்த ஒரு ஆன்மீக எழுத்தாளர் ரெடி ஆகிக் கொண்டு இருக்கிறார்...! அவருக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்..!
கடந்த சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் அண்ணாமலையில் இருக்கக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது... விரைவில் அது பற்றிய ஒரு ஸ்பெஷல் கட்டுரையுடன் சந்திக்கிறேன்... ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு சில அனுபவங்கள் கிடைத்தது.... நடக்கும் எந்த ஒரு நிகழ்வும், அவரது திட்டமிடலுடன் தான் நடக்கிறது என்பதை மீண்டும் எனக்கு உணர்த்திய சம்பவம்..... இந்த கட்டுரையின் முக்கியத்துவத்தை கெடுக்கா வண்ணம், அதைத் தனிப் பதிவாக எழுத திட்டமிட்டு இருக்கிறேன்....

நிஜ வாழ்க்கையில் ஒத்திகை என்பது இல்லை. ஒவ்வொரு நாளும் ரியல் ஷோ தான்...அவ்வளவு முக்கியம் நமக்கு ஒவ்வொரு நாளும். ஆனால் நிஜம் நம் கண் முன்னே அறைகிறது..!

நடக்கும் ஒவ்வொரு அடியும், ஒரு மழலை பேசும் குழந்தையாக, தளிர் நடை தான் நடக்க வேண்டி இருக்கிறது... கை பிடித்து அழைத்துச் செல்ல அந்த பரம்பொருளே தந்தையாக இருந்தால்...? ஆசைப் படுங்கள்.. நிச்சயம் நடக்கும்... அவனை நோக்கி நாம் நடக்கும் ஒவ்வொரு தப்படியையும், அவனும் தந்தையின் உவகையுடன் நோக்கிக் கொண்டு தான் இருக்கிறான். நமக்குத் தான் புரிவதில்லை...

கீழே விழுந்து விடுவோமே என்கிற கவலை வேண்டாம்...... நடப்பது மட்டுமே முக்கியம்...!

வேலைப் பளு, சொந்த அலுவல் காரணமாக முன்பு போல், தினமும் தொடர்ந்து எழுத முடியவில்லை... ஆனால், நிச்சயம் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் பதிவுகளை தொடர்ந்து இடமுயற்சிக்கிறேன்....

தொடர்ந்து படியுங்கள்...! உங்களுக்கும் இதைப் போல அனுபவம் ஏற்பட்டு இருந்தால், தயவு செய்து, சிரமம் பாராது எழுதி அனுப்பவும்... தகுந்த கட்டுரைகள் நிச்சயம் பிரசுரிக்கப் படும்..!

இனி நண்பரின் அந்த அனுபவம் ...!

==================================================
அனைவருக்கும் வணக்கம். சில முக்கியப் பணிகளில் எம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தபடியால் இடையில் சில காலம் இங்கு வரமுடியவில்லை. கமெண்ட்டும் அளிக்க முடியவில்லை. அனைவரும் மன்னிக்கவும். குறிப்பாக ஆசிரியர்.


இந்த இடைப்பட்ட காலத்தில் என்  வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துமுடிந்துவிட்டது. சாதனைகளுக்கும் குறைவில்லை. சோதனைகளுக்கும் குறைவில்லை. (ஒருவேளை சோதனையும் சாதனையும் ஒண்ணா தான் வருமா?)


ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்பு சனிப் பெயர்ச்சிப் பலனில் கூறியபடி எனது ராசிக்கு (சிம்மம்) இனி நல்ல காலம் என்று நம்பிக்கையில் உள்ளேன்.


இருப்பினும், சனிப் பெயர்ச்சி முடிந்தபின்பும், அண்மையில் சாதனைகளை நிகழ்த்தும் ஒரு சபையில் எனது எதிரிகளால் ஒரு பெரிய அவமானத்தை சந்திக்க நேர்ந்தது. (வேற யாரவது என் இடத்துல இருந்திருந்தால், அன்னைக்கே தூக்கு மாட்டிகிட்டு செத்திருப்பான்.).


என்னுடன் இருந்த நண்பர்களும் எனக்கு நிகழ்ந்த அவமரியாதையை எண்ணி கண் கலங்கி, "விடுங்கண்ணா... இத்தோட எல்லாம் முடிஞ்சிடிச்சுன்னு நினைச்சுக்கோங்க. எதையும் கண்டுக்காதீங்க. நாம பாட்டுக்கு நம்ம லட்சியத்தை நோக்கி போவோம். சாதிச்சி காட்டுவோம். அவங்க நிச்சயம் இதுக்கு வருத்தப்படுவாங்க" என்று என் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, என் மனதை தேற்றினார்கள்.


ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. "COUNT YOUR BLESSINGS; NOT TROUBLES" என்று. அதன்படி, எனக்கு என் விதி தந்த இந்த அவமானங்களுக்கு இடையே இறைவன் என் வாழ்வில் சமீபத்தில் நிகழ்த்திய ஒரு அற்புதத்தை பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். (ஆசிரியர் அனுமதித்தால்).


நான் ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு இங்கு கமென்ட் செக்ஷனில் கூறியிருந்தேன். நம்பிக்கை துரோகத்தை தாங்கும் சக்தி உலகில் எந்த மனிதனுக்கும் கிடையாது. சென்ற வருடம் என்னை என் நண்பர்கள் (?!) நடுத் தெருவில் துகிலுரித்துவிட, அவமானத்தால் நிலைகுலைந்த நான், அழுதபடியே ஒரு முழு நாளை கழித்தேன். நியாயம் கேட்டு பேரம்பாக்கம் (திருவள்ளூர்) நரசிம்மரிடம் ஓடினேன்.


சன்னிதானத்தில் அனைவருக்கும் முன்பாக கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போல அழுதேன். உடன் வந்த நண்பர் ஆறுதல் கூறி அழைத்து வந்தார்.


என் எதிரிகளையும் துரோகிகளையும் நான் மன்னிப்பது இருக்கட்டும். அவர்கள் என் எதிரிகள் என்பதால் மட்டும் நான் சொல்லவில்லை. மனிதர்கள் போர்வையில் உலவும் அந்த கேவலமான மிருகங்களை அவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.


இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதை போல அன்று உணர்ந்தேன். இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கொஞ்ச கொஞ்சமாக நான் சார்ந்த துறையில், சாதனைகளை (என் அளவில் அது பெரிய சாதனை தான்!) படைக்க துவங்கினேன். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்தது. மாதங்கள் உருண்டோடின.


இந்த மாதத்தின் இறுதியில் மிகப் பெரிய சாதனைகளை அடுத்தடுத்து செய்யும் வாய்ப்பை எனக்கு இறைவன் வழங்கினான். சாதனைகளை படைக்கும்போது, கூடவே அவமானமும் சோதனைகளும் வந்தன. ஆகவே அந்த சாதனைகளின் சந்தோஷத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியாது போனது.


இந்த வருடம் டிசம்பர் 25, அன்று சென்ற ஆண்டு கோவிலுக்கு என்னுடன் வந்த நண்பர் ஃபோன்  செய்தார். "அண்ணா ஞாபகமிருக்கா? போன வருஷம் இதே நாள் நரசிம்மர் கோவிலுக்கு போனோம். இன்னைக்கு பார்த்தீங்களா? நம்ம நிலைமை எந்தளவு உயர்ந்திருக்கு" என்றார். அப்போது தான் எனக்கு சென்ற ஆண்டு நாம் நரசிம்மர் கோவிலுக்கு இதே நாள் சென்றது நினைவுக்கு வந்தது.


இதை என் வேறு சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். அதில் ஒருவர், "அவசியம் நீங்க இன்னைக்கு அந்த கோவிலுக்கு போய் நரசிம்மரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரணும். போன வருஷம் பிரச்னையை கம்பேர் பண்ணும்போது இந்த வருஷத்துல நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்றனர்.


எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியே சிந்தித்து வந்தபடியால், எனக்கு கூட அது பற்றி தோன்றவில்லை. நண்பர் கூறியபடி இன்றைக்கு நாம் நிச்சயம் நரசிம்மரை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று தோன்றவே உடனே ஏற்பாடுகளில் இறங்கினேன்.


இது நடக்கும்போது மணி மாலை 5.00 PM.


உடனே, நண்பர்களிடம் பேசி, வருவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்டு,   தயங்கி பின்னர் ஒருவர் ஒப்புக்கொண்டார். (இந்த காலத்துல கோவிலுக்கு கூப்பிட்டா வர தயாரா இருக்குறவங்க நண்பர்களா கிடைக்கிறதே பெரிய விஷயம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி தான்!)


நண்பரை வரச் சொல்லி நானும், சுத்தமாக தயாராகி, புறப்படும்போது மணி 6.10 ஆகிவிட்டது. எங்கள் பகுதியிலிருந்து எப்படியும் கோவில் இருக்கும் தூரம் 45 கி.மீ. இருக்கும். நான் ஏற்கனவே ஒரு முறை போயிருக்கிறேன். சரி எப்படியும் வண்டியை வேகமாக ஓட்டி ஒரு மணிநேரத்துக்குள் போய்விடலாம் என்று (தப்பு) கணக்கிட்டு, டூ-வீலரை வேகமாக ஓட்டினேன்.


சென்னை-பெங்களூர் சாலையில் QUEENSLAND தாண்டும்போதே மணி 7 ஆகிவிட்டது. 7.30 மணிக்குள் கோவிலுக்கு போய்விடவேண்டும். நேரமாகிவிட்டபடியால், அந்த நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. (இன்றைக்கு எப்படியும் தரிசித்துவிடவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்). இருப்பினும், எப்படியும் அரைமணிநேரத்தில் போய்விடலாம் என்றெண்ணி, பேரம்பாக்கம் செல்லும் சாலையில் வண்டியை திருப்பினேன்.


சாலை சில இடங்களில் மிக மிக மோசமாக இருந்தது. நன்கு இருட்டியும் விட்டது. எதிரே வந்த ஒரு சில வாகனங்களின் ஹெட்லைட் கண்களை கூசச் செய்தது. வண்டியை ஓட்ட அது இன்னமும் சிரமத்தை தந்தது. இன்னும் 28 கி.மீ. போகவேண்டும். மணி அப்போது 7.10 pm.


நம்பிக்கை கொஞ்சகொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது. இருப்பினும், இப்படி இரண்டு பாவப்பட்ட ஜீவன்கள் தன்னை தரிசிக்க வருவது நரசிம்மருக்கு தெரியாமல் இருக்குமா? எனவே நரசிம்மர் எப்படியும் கைவிடமாட்டார் என்று மனதில் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.


வழியில் எங்கும் நிறுத்தாமல், கரடு முரடான அந்த சாலையில் இருட்டில் வண்டியை விரட்டி ஒரு வழியாக சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு பேரம்பாக்கத்தில் நுழைந்தோம். டூ-வீலரில் செல்வதாக இருந்தால் பேரம்பாக்கம் ஊருக்கு வெளியே மெயின்ரோட்டில் இருந்து பிரியும் 'கூவம்' என்ற ஒரு சிறிய கிராமத்துக்குள் நுழைந்து, கோவிலுக்கு சீக்கிரம் சென்றுவிடலாம். (கோவிலுக்கு போகணும்னா கூவத்தை தாண்டி தான் ஆகணுமோ? இது எதையோ உணர்த்துவது போலில்லை?)அப்படித் தான் அனைவரும் போவார்கள். பஸ்ஸில் போகிறவர்கள் தான் பேரம்பாக்கம் ஊர் வழியாக செல்லவேண்டும்.


அடித்து பிடித்து நாங்கள் கூவம் என்ற கிராமத்தை தாண்டி அட்சம் வயல்வெளிகளுக்குள் நுழைந்து கோவிலுக்கு செல்லும்போது அந்த ஊரே அடங்கிப் போயிருந்தது.


மணி 7.55 .... அங்கே போனால் சன்னதி.... மூடியிருந்தது. விரக்தியின் உச்சிக்கே சென்றோம்.


"என்னப்பா இப்படி கவுத்திட்டியே... உன்னை நம்பி தானே வந்தோம். அட்லீஸ்ட் நடை சாத்தும் சமயத்தில் வந்தாலாவது உன்னை ஜஸ்ட் ஒரு சில நொடிகளாவது பார்த்திருப்போமே. எங்களுக்காக உன் கதவை திறந்து வைக்ககூடாதா?" என்றெல்லாம் மனதில் ஓடியது.


(இதற்கு முன்பு நான் ஒரு முறை சென்ற போது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்! பகலிலேயே இந்த ஊர் எப்படி இருக்கு பாருங்க.)


ஒரே ஒரு மனிதர் தூரத்தில் தட்டுபட்டார்.... அவரை நோக்கி ஓடினோம். சென்னையில் இருந்து வந்த விஷயத்தை சொன்னோம். "அடடா... கோவில் ஏழு மணிக்கெல்லாம் சாத்திட்டாங்களேப்பா... இது மார்கழி மாசம் இல்லையா... காலைல சீக்கிரம் திறப்பாங்க. அதுனால, சாயந்திரம் ஏழு மணிக்கெல்லாம் மூடிடுவாங்க." என்றார்.


"நாங்க போன வருஷம் வந்தப்போ, கோவில் 7.45 வரைக்கும் திறந்திருச்சு. கொஞ்சம் முன்னே பின்னா ஆனாகூட எப்படியும் தரிசனம் பண்ணிடலாமேன்னு வந்தோம் சார்" என்றேன்.


அவர், "நேற்றைக்கு கூட சாயந்திரம் 8.30 வரைக்கும் திறந்திருந்துச்சு. யாரோ பெரிய ஆளுங்க கார்ல வந்துக்கிட்டுருக்கோம். வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. அவங்க வர லேட்டாயிடுச்சு. அர்ச்சகர்களும் வேற வழியில்லாம் வெயிட் பண்ணாங்க. மற்றபடி கோவில் சாத்தும் நேரம் மாலை 7.30 pm" என்றார்.


அந்த அர்ச்சகர்களின் வீடு இங்கே எங்காவது பக்கத்துல இருக்கா? அவங்களை போய் கூட்டிகிட்டு வந்தா கோவிலை திறந்துவிட்டமாடாங்க?" ஒரு நப்பாசையில் கேட்டோம்.


"அவங்க இந்நேரம் அவங்க ஊருக்கு போயிருப்பாங்க. வாய்ப்பேயில்லை" என்றார் அந்த பெரியவர்.


ஒரு பக்கம் நான் சென்டிமென்ட்டாக மிகவும் ஃபீல் செய்தேன். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்து கோவிலுக்கு போகும்போது கோவில் சாத்தியிருந்தா அது எப்படி இருக்கும்னு அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும். தவிர ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா, ஒன்னு எங்களை வர்ற வழியிலேயே தடுத்திருக்கணும். இவ்ளோ தூரம் நாங்க வரவெச்சு தரிசனம் கொடுக்காம திருப்பி அனுப்புவானா? ஒரு வேலை கடவுள் இருக்கிறது இதெல்லாம் பொய்யோ" அப்படியெல்லாம் மனசுக்கு தோணிச்சு. கடவுள் நம்பிக்கை கிட்டத்தட்ட எனக்கு போயே போச்சுன்னு சொல்லலாம்.


என் நண்பரை நினைச்சு வருத்தப்பட்டேன். நானாவது பரவாயில்லே. நான் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக என்னோட வந்த அவர் முகத்தை கூட என்னால் பார்க்கமுடியலே. "சரி.. நாளைக்கு வேணா மறுபடியும் வரலாம் பாஸ்" அப்படின்னு சொன்னேன். "இல்லேயில்லே... நியூ இயர் அன்னைக்கு வரலாமே"ன்னு சொன்னார். சரின்னு திரும்ப சென்னைக்கு கிளம்பினோம். மனசு முழுக்க ஒரே பாரம்.


அது ரொம்ப சின்ன ஊருங்க. ஆள் அரவமே இல்லே. மார்கழி மாச குளிர் வேற. கோவிலுக்கு அடுத்து ரெண்டு மூன்று தெரு தள்ளி, ஊர் எல்லைக்கு வெளியே வரும்போது, ஒரே ஒரு சின்ன கோவில் மட்டும் கண்ணுல எங்களோட இடது பக்கம் தட்டுபட்டது. வரும்போது அந்த வழியாத்தான் வந்தோம். வந்த அவசரத்துல அந்த கோவிலை கவனிக்கலை. அந்த கோவிலை வெளியே இருந்து பார்த்தா ஒரு சின்ன பிள்ளையார் கோவில் போல இருந்துச்சு. ஊர் அம்மனோட கோவிலா கூட இருக்கலாம்னு நினைச்சு, வண்டியை அங்கே நிறுத்தினோம். கோவிலுக்குள்ள ஒரு ஆறேழு பிராம்மண இளைஞர்கள் உட்கார்ந்திருந்தாங்க.


மூலவருக்கு முன்பாக ஸ்க்ரீன் போட்டிருந்தார்கள்.அதாவது கோவிலை அன்னைக்கு மூடிவிட்டு இவங்க கிளம்புவதற்கு ஆயத்தமாக இருந்தார்கள்.


அவங்ககிட்டே நாங்கள் சென்னையில் இருந்து வந்த விஷயத்தை சொல்லி, நரசிம்மரை தரிசிக்க முடியாத எங்க சோகத்தை சொல்லி, இந்த கோவிலையாவது தரிசிக்கலாமேன்னு வந்தோம்னு சொன்னேன்.


உடனே அதுல ஒருத்தரு, (அவர் தான் அர்ச்சகர்) எழுந்திருச்சு போய், ஸ்க்ரீனை விலக்கினார். அங்கே பார்த்தால்... சாட்சாத் நம்ம நரசிம்மர். அதுவும் யோக நரசிம்மர். என்ன ஒரு அற்புதமான காட்சி தெரியுமா அது. காண கோடி கண்கள் வேண்டும். நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அத்துணை அழகு. அதே சமயம் உக்கிரம்.


எனக்கு ஒரு கணம் சிலிர்த்துவிட்டது. கண்களில் கண்ணீர் மட்டும் தான் வரவில்லை. மற்றபடி நெகிழ்ச்சிய்ல் அழுதுகொண்டிருந்தேன். என்னுடன் வந்த நண்பரும், சிரித்தபடி என்னை பார்த்தார். "பார்த்தீயா... என்னென்னோவோ சொன்னே... நம்ம நரசிம்மர் நம்மளை கைவிடலை" அப்படின்னு அவர் பார்வை சொல்லிச்சு.


நான் ஒரு கணம் அர்ச்சகர் கிட்டே புல்லரிச்சி போய், நாங்க கிளம்பி வந்த கதையை சொல்லிக்கிட்டு இருந்தேன்.


மந்திரம் சொல்லி தீபாராதனை காமிச்சார். கண்குளிர தரிசித்தேன். "இது போதும் இறைவா... அங்கு மூடிய உன் கதவை இங்கு எங்களுக்காக திறந்தாய் பார்த்தாயா... இந்த ஒன்று போதும். உன் அருள் பார்வை என் மீது இருக்கிறது. இனி எந்த துன்பமும்  என்னை ஒன்றும் செய்யாது. மலையை கூட நான் இனி புரட்டுவேன்" என்று அவனிடம் கண்கலங்கியபடி பிரார்த்தனை செய்தேன்.


ஒரு நிமிஷம் இருங்கன்னு சொல்லி எங்களை ஓரமா கீழே உட்கார வெச்சவர், திடீர்னு, சன்னதியின் உள்ளே இருந்த ஒரு பாத்திரத்தில் இருந்து, ஆளுக்கு ஒரு பிடி கேசரி எடுத்து கொடுத்தார். பசியில் வாடியிருந்த எங்களுக்கு கேசரியே கிடைத்தது. அதுவும் என் நரசிம்மனிடம் இருந்து. அப்புறம் ஒரு சின்ன சீதாப் பழத்தை எடுத்து ஆளுக்கு கொஞ்சம் பிட்டு கொடுத்தார். ஒரு கணம் நடப்பது கனவா அல்லது நனவா என்றெண்ணியபடி கேசரியும் சீதாப் பழமும் சாப்பிட்டோம். (ஒரு வேளை அங்கே கோவில் திறந்து இருந்தால் கூட எங்களுக்கு இது போல சாப்பிட இனிப்பும் பழமும் கிடைத்திருக்காது!)


கைகளை கழுவதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொடுத்தார்கள்.


அப்புறம் உட்கார்ந்த படி இந்த கோவில் பற்றி விசாரித்தோம். ஆக்சுவலா இது ஒரு வைணவ பஜனை மேடம் & கோவில். இங்கு இருந்து பஜனை செய்தபடி சோளிங்கரில் உள்ள நரசிம்மரை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வார்களாம். இவர்களும் அது போல காலை செல்லவிருக்கிறார்களாம். மேலும், அந்த கோவில், உற்சவங்களின்போது சாத்தியிருக்கும்போது, இங்கு பூஜைகள் நடைபெறுமாம். இந்த கோவில் அதற்கு நேரடி தொடர்புடையது அல்ல. இருப்பினும், இங்கு பூஜை புனஸ்காரங்கள், பஜனை, தியானம் முதலியவை செய்யப்படுகிறது.


அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம்.


இரவு நேரமாகிவிட்டபடியால், கோவிலை வெளியே இருந்து கூட புகைப்படமெடுக்க முடியவில்லை. புத்தாண்டுக்கு செல்லும்போது, புகைப்படங்களை எடுத்து வருகிறேன். இங்கு உங்களுக்கு தருகிறேன்.


வெளியே வந்து, பைக்கை ஸ்டார்ட் செய்து, சிறிது தூரம் வந்தவுடன், "மூலவருக்கு பக்கத்துல இருந்த அந்த குட்டி விக்ரகத்தை பத்தி என்ன நினைக்குறீங்க? அலங்காரம் நல்ல இருந்துச்சு இல்லே?" அப்படின்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. "அதுவும் நரசிம்மர் தான். உலோகத்தால் செஞ்சிருந்தாங்க. ஆபரணங்கள் எல்லாம போட்டு அலங்காரம் பண்ணியிருந்தாங்க" என்றார் நண்பர்.


"என்னப்பா சொல்றே நீ? நான் பரவசத்துல எதையும் சரியா கவனிக்கலை. அங்கே ஏதோ ஒரு விக்ரகத்தை பார்த்த மாதிரி தெரிஞ்சுது. நரசிம்மரை பார்த்த உற்சாகத்துல நான் அதை கவனிக்கலை" என்றேன்.


இப்படியே பேசிக்கொண்டே வந்தோம்.


என்னைப் பொறுத்தவரை இந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய அற்புதமாக கருதுகிறேன். ஒருவேளை நரசிம்மரை தரிசிக்காமல் நான் சென்றிருந்தால், அது என்னை மிகவும் பாதித்திருக்கும். மன ரீதியாக.


நரசிம்மர் இந்தளவு என் மீது கருணை மழை பொழிய, நான் அருகதை உள்ளவனா என்பதில் எனக்கே சந்தேகம் உண்டு. ஆகையால், நான் இந்த அற்புதத்தை அவன் நிகழ்த்த காரணமாக நான் நம்புவது என்னுடன் வந்த அந்த நண்பரைத் தான். மிகச் சிறந்த பக்திமானாகிய அவர், நல்ல பண்பாளர். நல்ல சிந்தனையுடையவர். மிக சிறிய வயதுக் காரர். ஆனால் பக்குவமானவர். அவரைப் போன்ற ஒருவர் தன்னை தரிசிக்க வெகு தூரத்திலிருந்து வந்து இப்படி மன வருத்ததோடு செல்லலாகாது என்று பகவான் கருதியாதாலேய "போனாப் போகுது போங்கடா" என்ற எண்ணத்தில் இந்த அதிசயத்தை அவன் நிகழ்த்தினான் என்றே நான் கருதுகிறேன்.


எப்படியோ நெல்லுக்கிறைத்த நீர் இந்த வாய்க்காலுக்கும் ஓடி வந்து விட்டது. அந்த வகையில் சந்தோஷமே.


இந்த அற்புதத்தை பற்றி வரும்போது வழிநெடுக இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.இதுக்கு அப்புறமும் எனக்கு சோதனைகள் வராமலில்லை. வந்துகொண்டு தானிருக்கிறது. ஆனால் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.


"எஸ்... ஆண்டவன் இருக்கான். நல்லவங்க வாழ்வாங்க.... என்ன கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோதான்"


- (பக்த) கோடியில் ஒருவன் சிந்திக்கச் சில அமுத மொழிகள் ..!

| Mar 21, 2012
சில வருடங்களுக்கு முன்னே ஒரு நாள். திருவானைக்கா, ரங்கன், தாயுமானவர், உச்சிப் பிள்ளையார், சமயபுரம் என்று ஒரு இரண்டு நாட்களுக்கு புரோகிராம் போட்டு திருச்சியில் இருந்த நண்பர் வீட்டில் போய் இறங்கியாச்சு... நண்பருக்கு ஒரு நான்கு வயது குழந்தை. ரொம்ப சமர்த்து.   , "அங்கிள் ஒரு கதை சொல்லுங்களேன்" என்று , கொஞ்சி கெஞ்சிக் கேட்க ---- ரொம்ப சுவாரஸ்யமாக (?)  - பகவான் ராமகிருஷ்ணர் கதையை சொல்லிக் கொண்டு இருந்தேன்......

குழந்தைக்கு ரொம்ப போர் அடிக்குமென்று நானாகவே நினைத்துக் கொண்டு - நீட்டி , முழக்கி -
" காளி கோயில் பூசாரியாக இருந்தார் குருநாதர் - ரொம்ப நாளா பூஜை பண்ணிவிட்டு - ஒருநாள் சாமி வரலையேன்னு உயிரையே விடப் போனவருக்கு , முதன் முறையா - சாமி தரிசனம் கிடைத்து , அதன் பிறகு - தட்சிணேஸ்வரத்தில் இருந்த காளியை அனுதினமும் தரிசித்தவர்.அதுக்கு அப்புறம் சுவாமி விவேகானந்தருக்கும் - அம்மன் தரிசனம் கிடைக்க செய்தாராம்".

 " சாமி நேர்ல வந்துச்சு. அதை அவர் இன்னொருத்தருக்கும் காட்டி இருந்து இருக்காரு, எப்பேர் பட்ட மகான்  " னு ரெண்டு , மூணு தடவை சொன்னேன். அப்படியே , சும்மா டிஜிட்டல் எபக்ட்ல சீன் போட்டுக் கிட்டு பேசிக்கிட்டு போக .... ஊம் , ஊம் ன்னு கேட்டுக் கிட்டு இருந்த குழந்தை டக்குன்னு குறுக்கிட்டான்..

"அங்கிள் - ஏன் இதை ரொம்ப ஓவரா பில்ட் அப் கொடுத்து சொல்றீங்க..?"
(இந்த காலத்துப் பசங்க - பயங்கர ஷார்ப். )

"இல்லை , அவருக்கு சாமி நேர்ல வந்து தரிசனம் கொடுத்தது - நிஜம். அதை நீ நம்பணும் இல்லே ... அதான் "

" அது நிஜம் தானே.. . நான் நம்புறேனே ..."

அதானே , அவன் நம்ப மாட்டான்னு நாமளே எப்படி முடிவு பண்ணலாம்? - இது மனக்குரல்.

"இல்லைடா , சாமி வந்துச்சுன்னு - உங்க அப்பா கிட்ட சொல்லிப் பாரு.... ஹ்ம்ம். .. சரி அப்புறம் . அதுக்கு என்னன்னு கேட்பான். அப்படியான்னு . உன்னை மாதிரி இயல்பா, முழுசா நம்பி ஊம் சொல்ல மாட்டான்.. புரியுதா?" 

"ஏன், நம்புவாரே! போன மாசம் கூட - அப்பா , என்னை ஸ்ரீரங்கம்  கூட்டிப் போனாரே... சாமி , நாங்க போகும்போது தூங்கிக் கிட்டு இருந்தாரு. நான் டிஸ்டர்ப் பண்ணலை. சத்தமே போடலை. ஆனா, கோவில்ல இருந்த நிறைய அங்கிள் , தாத்தா எல்லாம் - ரங்கா, ரங்கா னு சத்தம் போட்டு கூப்பிட்டுக் கிட்டு இருந்தாங்க சாமியைப் பார்த்து ...   " ன்னு சொன்னான். 

நானும் குழந்தையாகவே இருந்து இருக்க கூடாதான்னு ஏங்கினேன் , அந்த நிமிஷம்...  கண்ணில தண்ணி எட்டிப் பார்த்திடுச்சு.... 

நாயக்கர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா ன்னு - வேதம் புதிது படத்துல - சத்தியராஜை , ஆத்துல  இருந்து ஒரு கை , படார் படார்னு  அடிக்குமே - அந்த ஞாபகம் தான் வந்தது... யாருப்பா சொன்னது , குழந்தைகள்னா விவரம் பத்தாதுன்னு.... விவரம் தெரியிறதுன்னா என்ன - சாமியை கல்லா பார்க்கிறதா..?   

எவ்வளவு , அப்பழுக்கற்ற நம்பிக்கை....! 

அதன் பிறகு, நான் கோவிலுக்குச் செல்லும்போது - எப்படி உணர்ந்து இருப்பேன் என்பதை , சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

நமக்கு எப்படி சொல்லிக் கொடுத்து இருப்பாங்களோ , அப்படித்தான் நாம நம்பத் தொடங்குவோம்..! இது சம்பந்தமா, கீழே ஒரு குட்டிக் கதை இருக்கு. படித்துப் பாருங்கள்..! 

கோவிலுக்குப் போனா, சாமி எல்லாம் பாத்துக்கிடுவாருன்னு சின்ன வயசுல நல்ல விதையைத்தான் போடுறோம்...  ஆனா, அந்த நம்பிக்கையை நாமே வைச்சுக்கிடுறது இல்லை... நமக்கே நம்பிக்கை இல்லாம போன பிறகு, குழந்தைகள் வளர்ந்த பிறகு, அவங்களும் - கல்லா பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்... இப்போ, நாம இருக்கிற மாதிரி...

கடவுளைப் பார்த்து இருக்கிறார்னு - இப்போ யாரு , நம்ம முன்னே வந்து சொன்னாலும் - அடக்க மாட்டாம சிரிப்பே வந்துடும். யாரை ஏமாத்த..? 
நான்லாம் பார்க்கலை - நீ பார்த்து இருப்பியோ? அம்புட்டுப் பேரும் - சாமி பேர்ல ஏமாத்துற ஆளுங்க தான்பா... இதுல ராமகிருஷ்ணர் - காளியைப் பாத்ததா சொன்னா - அது ஒரு கதை மாதிரி தான் தெரியும்.. 

இப்போ என்ன, அவர் இருக்காரா என்ன ?  யாரும் விசாரிக்க? அளந்து விடு.. ஹ்ம்ம் .. அப்புறம்..! மனசு நம்ப தயாரா இல்லை. நான் கடவுள் இருப்பதை நம்பத் தயாராக இல்லை. ஒரு வேளை , கடவுள் இருக்கிறது நம்ம மனசுக்கு புடிக்கலையோ? இப்படியே இருந்தும் , இல்லாம இருக்கிறது தான் நல்லதுன்னு நினைக்குதோ?

ஆனாலும், கோவிலுக்குப் போவோம்... எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்போம்... கொடுக்கிறாரோ, இல்லையோ - வேண்டுதல் தொடரும் , அதே அரை குறை நம்பிக்கையில்... 
சரி, இன்னைக்கு - சில சிந்தனைத் துளிகள் பார்க்கப் போறோம்.... வழக்கம்போல, படிச்சதும் கொஞ்ச நாள்ல மறந்து விடாமல், கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்....

பொறுமையாகப் படியுங்கள்..! ஏதாவது ஒரு கருத்து - நிச்சயம் உங்கள் மனதில் தங்கி - உங்களை நிச்சயம் நல்வழிப்படுத்தும் என்று நினைக்கிறேன்..!

முதல்ல ஒரு சின்ன கதை....
 
அந்தப் பூனை நாயிடம் சொல்லிக் கொண்டிருந்தது.
“நம்பிக்கையைக் கைவிடாமல் கடவுளைத் தொடர்ந்து வழிபடு. நிச்சயம் அவர் உனக்கு ஒருநாள் அருளுவார். அவரது கருணைப் பார்வை உன் மேல் பட்டுவிட்டால் வானத்திலிருந்து எலிகளாகப் பொழியும். நீ வேண்டிய அளவு சாப்பிட்டு மகிழலாம்”

இதைக்கேட்ட நாய் புரண்டு புரண்டு சிரித்தது.

“அட முட்டாளே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டாயா? என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் முன்னோர்களும் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பெய்யாது. எலும்பு மழைதான் பெய்யும். எடுத்து ஆசை தீரக் கடித்து மகிழலாம்.” திரு.சொக்கன் அவர்கள் எழுதிய அவரவர் மழை கதை. (மிட்டாய்க் கதைகள் புத்தகத்திலிருந்து )

கடவுளை சுத்த சைவராக மதித்து சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், புளியோதரை நைவேத்யம் செய்கிறவர்களும் இருக்கிறார்கள், கடா வெட்டி, சாராயம் சுருட்டு படைக்கிறவர்களும் இருக்கிறார்கள். கடவுளை அவரவர் எப்படி எந்த கண்ணோட்டத்தில் உணர்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் இருக்கிறது.

=========================================================
மூதறிஞர் ராஜாஜி 

* குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குளத்திற்குப் போனால், தெளிந்த நீரை மேலாக எடுத்துவருவது தான் சிறந்தது. அதை விடுத்து, குளத்துக்குள் இறங்கி கலக்கினால் சேறு மேலே வந்து விடும். அதுபோல பக்தியிலும் மிதமான நிலையே போதுமானது.

* மிதமிஞ்சிய சமய அறிவு, மற்றவருடன் வாதங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதால் மூளையைக் குழப்பிக் கொள்ள நேரிடும். நம்முடைய அறிவு சிற்றறிவு. கடவுளோ பேரறிவாளராக இருக்கிறார். அதனால், நம்முடைய அறிவைக் கொண்டு அவரை அளக்க முடியாது.

* தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் போன்று கடவுள் மறைந்து விளங்குகிறார். அவரைக் காண வேண்டுமென்று விரும்பினால் உள்ளத்தைப் பக்தியால் கடைய வேண்டும். தத்துவ ஞானத்தை வளர்த்துக் கொண்டால் புலமை தான் வளருமே ஒழிய, ஞானம் உண்டாகாது.

* பக்தியில் உறுதியாக நில்லுங்கள். எளியதியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மனம் ஒன்றி இறைவனை வழிபடுங்கள். கடவுளின் பூரண அருளை நிச்சயம் பெற்று மகிழ்வீர்கள்.

ரமண மகரிஷி :

* அருளின் உயர்ந்தவடிவம் மவுனமாக இருப்பதாகும். வலிமையற்ற மனம் படைத்தவர்களுக்கு மவுனமாக இருக்க முடியாது.

* நான் யார் என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே.

* குப்பையை ஆராய்வதால் பயன் விளைவதில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்வதாலும் பயன் இருக்கப் போவதில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள்.

* இறைவன் நமக்குள் இருக்கிறான் என்று தெளிவாக உணர்ந்தவர்கள் தவறு செய்வதில்லை. செய்தாலும் வருந்தி தங்களைத் திருத்திக் கொள்வார்கள்.

* அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டான். "நான்' "எனது' என்று எண்ணிக்கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தகாலத்திலும் ஆண்டவனை அடையவே முடியாது.

* ரயில் ஓடும் போது சுமையை நாம் தூக்க வேண்டியதில்லை. அதுபோல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்தபின் உலகியல் பிரச்னைகள் நம்மைத் தீண்டுவதில்லை.

* அரைகுறையாக ஆண்டவனை நம்புவதால் ஒருபயனும் இல்லை. முழுமையான சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.

 ===============================================================

காஞ்சிப் பெரியவர் :

* குழந்தையாக இரு என்று உபநிடதம் நமக்கு உபதேசம் செய்கிறது. பிள்ளை மனதில் கள்ளம் கபடம் சிறிதும் இருப்பதில்லை.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது.

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்கவேண்டும்.

* எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே அதிக சக்திவாய்ந்தது.

* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுளே குடிகொண்டிருக்கிறார். ஒருவரை வணங்கும்போது அவருக் குள் இருக்கும் கடவுளையே வழிபாடு செய்கிறோம்.

* சுவரில் எறிந்த பந்து திரும்பிவருவதைப் போல, நிறைவேறாத ஆசைகள் கோபமாகத் திரும்பி நம்மை வந்து தாக்கிவிடும்.

* ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள்தேடி அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.


* பொம்மலாட்டப் பொம்மை போல சகல உயிர்களுக்கும் உள்ளிருந்து கடவுளே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.

* வழியில் கிடக்கும் முள்ளையோ, கண்ணாடியையோ அப்புறப்படுத்த பணம் ஏதும் தேவையில்லை. சிறு அளவிலான உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.
 ===========================================================

வேதாத்திரி மகரிஷி :

* எல்லாருக்கும் நன்மை உண்டாகவேண்டும் என்று எண்ணுவதே நல்லவர்களின் குணமாகும். உள்ளதைச் சொல்லுங்கள். நல்லதை எண்ணுங்கள். நல்லதைச் செய்யுங்கள். நல்லவனாகவே வாழுங்கள்.

* மனிதன் முழுமை பெறவேண்டுமானால் பரம்பொருளோடு ஒன்றுவது தான் ஒரே வழி.

* படிப்படியாக மட்டுமே நல்ல பண்புகளைப் பழகிக் கொள்ள முடியும். ஒரேநாளில் எந்த விஷயத்தையும் கற்றுவிட முடியாது.

* மனத்தூய்மை, சத்துள்ள உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு நல்வாழ்க்கைக்கு  அடிப்படை விஷயங்கள்.

* துன்பம் என்பது அறவே இல்லாத மகிழ்ச்சியான அனுபவங்களையே நாம் பெற எண்ணுகிறோம். ஆனால், அதற்கான வழிமுறைகளைத் தான் அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

* கோபமின்றி வாழ்வதே உயர் வாழ்வின் அடிப்படை குணம். சினமில்லாதவன் ஞானப்பாதையில் பயணம் செய்யத் துவங்குவான்.
====================================================

குரு மகராஜ் - ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் :

* இறைவனே உலகம் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டானால் எல்லா பிரச்னைகளும் ஒழிந்து தீர்வு பெற்று விடுவீர்கள்.

* எவன் இறைவனைக் காண வேண்டும் என்று ஏங்கி அழுகிறானோ அவன் மீது இறைவனின் கருணை விழத் தொடங்கும்.

* உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்த பிறவியில் மட்டுமல்ல, எந்தப் பிறவியிலும் இறைவனை அடைய முடியாது.

* பணத்தின் மீது கொள்ளும் மோகம் மனிதனைப் பைத்தியமாக்கிவிடும். காமம் மனிதனை இறைவனிடமிருந்து பிரித்து விடும் தன்மை கொண்டது.

* படிப்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் மிகவும் உயர்ந்தது. கேட்பதைக் காட்டிலும் நேரில் காண்பது அதைவிடச் சிறந்தது.

* இறைக்காட்சி கிடைத்த பின்பே மனிதனிடம் இருக்கும் அறியாமை முற்றிலும் அகலும். மன வலிமை படைத்தவர்களால் மட்டுமே உலக ஆசைகளைத் துறக்க முடியும்.

* கடவுள் நமக்கு முதலாளியாக இருக்கிறார். நாம் அவரது வேலைக்காரர்கள். அவனுக்கு பணிவிடை செய்வது தான் பிறவிப்பயன்.

* மனிதவாழ்வின் சாரமே பக்தியாக இருப்பது தான். பக்தி கொள்ளாதவர்கள் வாழும் வாழ்வில் அர்த்தமில்லை.

* நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். அதே நேரத்தில் மனதை ஆண்டவனிடம் வைத்திருங்கள். 
==========================================

என்ன நண்பர்களே.... ஏதாவது ஒரு கருத்தாவது - மனதில் ஆழமாக விழுந்து இருக்கிறதா?


கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

| Mar 14, 2012
கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்கிற கேள்விக்கு நடுவே - கடவுள் இப்போது நேரில் வந்தால் , எப்படி இருக்கும் என்கிற பார்வையில் - அந்தக் கால சிறுகதை மன்னன் - புதுமைப் பித்தன் அவர்கள் எழுதிய படைப்பு இது. பொறுமையாக படித்துப் பாருங்கள்... கிட்டத் தட்ட எழுபது வருடங்களுக்கு முன்னே எழுதிய படைப்பு இது.

பரபரப்பா ஓடிக்கொண்டு இருப்பதாக நாம் நினைக்கும் நம் வாழ்விலும், ஒருவேளை கடவுள் எதிரில் வந்தால், நாமும் இப்படித்தான் நடந்து கொள்வோமோ என்னவோ....

ஒரு சுவாரஸ்யமான வாசிப்புக்குத் தயாரா? மேலே படியுங்கள்...!

===========================================
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். 'டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் 'கப்' காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...'

'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.'
'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.'
இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.
திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.

"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.
"டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே" என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.
"நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி?" என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

சாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.
மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம்.

வழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.
தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.

"ரொம்பத் தாகமாக இருக்கிறது" என்றார் கடவுள்.
"இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. "வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்" என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.

"சரி, வாருங்கள் போவோம்" என்றார். 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்?' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.

இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.

இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், "சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!" என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்" என்றார் கடவுள்.

"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்" என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.

முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். "நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது" என்றார்.

"பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ? கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்" என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.
கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.
"அப்படி என்றால்...?" என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. "சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும்?" என்று கேட்டார் கடவுள்.
"ஓ! அதுவா? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.

கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.

"இதோ இருக்கிறதே!" என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

"என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்" என்றார் பிள்ளை.
"ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்" என்று முனகிக் கொண்டார் கடவுள்.

பையன் இரண்டு 'கப்' காப்பி கொண்டுவந்து வைத்தான்.


கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.
"நம்முடைய லீலை" என்றார் கடவுள்.

"உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே" என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.

"சிக்கரிப் பவுடர் என்றால்...?" என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.

"சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.

"சில்லறை கேட்டால் தரமாட்டேனா? அதற்காக மூன்றணா பில் எதற்கு? கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா?" என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.

"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்" என்றார் கடவுள்.

"அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே?" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். "தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!"

"நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது" என்றார் கடவுள்.

ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.

வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.

கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.

"கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்" என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.

"என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு வந்திருப்பேனே!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன்" என்றார் கடவுள்.

வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.

"திருவல்லிக்கேணிக்குத்தானே? வாருங்கள் டிராமில் ஏறுவோம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே" என்றார் கடவுள்.

"ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே" என்றார் கந்தசாமிப் பிள்ளை. 'நாம்தாம் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன?' என்பதுதான் அவருடைய கட்சி.

"நர வாகனமா? அதுதான் சிலாக்கியமானது" என்றார் கடவுள்.

இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். "சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்" என்றான் ரிக்ஷாக்காரன்.

பொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.

"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்..."

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. "நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்" என்றார் அவர்.

கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

"சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"இல்லை" என்றார் கடவுள்.

"அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"பரிச்சயம் உண்டு" என்றார் கடவுள்.

'இதென்னடா சங்கடமாக இருக்கிறது?' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. "உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்..."

'பதினேழு வருஷ இதழ்களா? பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.' கடவுளின் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.

"தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்" என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.

'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, "யாருடைய ஜீவியம்?" என்று கேட்டார் கடவுள்.

"உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.

வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.

"என்னடா திரும்பிப் பார்க்கிறே? மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா? வண்டியிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு" என்றான் ரிக்ஷாக்காரன்.

"வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு" என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.

'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே' என்று நினைத்தார் கடவுள். "தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர்?" என்று கேட்டார்.

"பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.

"இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்" என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா?" என்று சிரித்தார் கடவுள்.

"அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். "பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டோ ?" என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.

"நீ கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு" என்று சிரித்தார் கடவுள்.

"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து" என்றார் கடவுள்.

"அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?"

"கந்தசாமிப் பிள்ளையை!"

"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி."

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். "எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது" என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

"என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்.

"அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண் பாக்கணும்" என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

"மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்" என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.

கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.

"இதுதான் பூலோகம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இவ்வளவுதானா!" என்றார் கடவுள்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.

கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடநயும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

கந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். "சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா?" என்றார்.

"பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்."

"அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை" என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.

"அப்படி உங்கள் சொத்து என்னவோ?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்" என்றார் கடவுள்.

"பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை" என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே நுழைந்தார்.

"அப்பா!" என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்டது. அண்ணாந்து பார்த்து, "எனக்கு என்னா கொண்டாந்தே?" என்று கேட்டது.

"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?" என்று சிணுங்கியது குழந்தை.

"பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இதுதான் உம்முடைய குழந்தையோ?" என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

"சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்று சிரித்தார் கடவுள்.

"ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.

மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.

"வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே?" என்று கைகளை நீட்டினார் கடவுள்.

ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.

"எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா?" என்று கேட்டது.

அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறு தென்பட்டது.


"அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

"கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

"ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா? எனக்கும் இந்தா பாரு" என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.

"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லியா?" என்று கேட்டார் கடவுள்.

"வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா?" என்று கூப்பிட்டது.

குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

"தாத்தா, தோத்துப் போனியே" என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.

"ஏன்?" என்று கேட்டார் கடவுள்.

கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

"முந்தியே சொல்லப்படாதா?" என்றார் கடவுள்.

"ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?" என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.

"இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா? வாருங்க மாமா, சேவிக்கிறேன்" என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.

"பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.

"வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா?" என்று ஞாபகமூட்டினார் கடவுள்.

"இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னுதான் பார்க்கணும்" என்றாள் காந்திமதி அம்மாள்.


"பாத்துக்கிட்டுத்தான் நிக்காறே" என்றார் கடவுள் கிராமியமாக.

"பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்" என்றாள் அம்மையார்.

கடவுள் சிரித்தார்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.

"இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே" என்றார் பிள்ளை காதோடு காதாக.

"இனிமேல் இல்லை" என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.

"நல்ல இளவட்டம்!" என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்.

"நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே!" என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.

"நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ?" என்றார் கடவுள்.

"இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க" என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.

கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.

"இனிமேல் என்ன யோசனை?" என்றார் கடவுள்.

"தூங்கத்தான்" என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.

"தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்" என்று ஓடிவந்தது குழந்தை.

"நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?" என்று கேட்டார் கடவுள்.

"மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.

"ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)..." என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, "இன்றைக்கு பத்திரிகை போகாது" என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம்.


"தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம்" என்று துள்ளியது குழந்தை.

"எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ?" என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.

"அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்" என்று கையை நீட்டினார் பிள்ளை.

"இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?" என்று சிரித்தார் கடவுள்.

"தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா?" என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.

"அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா? அல்லது கருடப்பிச்சுதானா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா? நான் என்னத்தைக் கண்டேன்? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா?" என்று வாயை மடக்கினார் கடவுள்.

"நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, "ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு" என்று கடவுளை அழைத்தது.

குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, "பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு!" என்றார் கடவுள்.

குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.

"தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா?" என்று கேட்டது குழந்தை.

கடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். "அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்" என்றார்.

"அவ்வளவுமா! எனக்கா!" என்று கேட்டது குழந்தை.

"ஆமாம். உனக்கே உனக்கு" என்றார் கடவுள்.

"அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம் குடுப்பாங்களே!" என்று கவலைப்பட்டது குழந்தை.

"பசிக்கும்; பயப்படாதே!" என்றார் கடவுள்.


"பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்" என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான் பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.

"உட்காருங்கள், உட்காருங்கள்" என்றார் திவான் பகதூர்.

கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, "பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி வைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு "உம்", "உம்" என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

"இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்" என்று உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா?" என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் "நாங்கள் ஆடாத இடம் இல்லை" என்றாள் தேவி.

"என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்" என்றார் வர்ணபேத திவான் பகதூர்.

"பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ?" என்று கேட்டாள் தேவி.

"அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும்."

"உம்ம மண்டலியுமாச்சு, சுண்டெலியுமாச்சு!" என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.

"இப்படி கோவிச்சுக்கப்படாது" என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.

"இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு முறை தான் சற்றுப் பாருங்களேன்" என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.

"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்?" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். "சரி, நடக்கட்டும்!" என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.

"எங்கே இடம் விசாலமாக இருக்கும்?" என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

"அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே" என்றார் கடவுள்.

"சரி" என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

மயான ருத்திரனாம் - இவன்
மயான ருத்திரனாம்!

கதவுகள் திறந்தன.

கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்."

"சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு" என்று அதட்டினார் திவான் பகதூர்.

ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.

"ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை!" என்றார் திவான் பகதூர்.

ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. "கந்தசாமிப் பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம்?"

கால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். "தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே!" என்றார் கடவுள்.

"நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே!"

கடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!"

"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.

"கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து" என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

"தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.


 நன்றி - கலைமகள், அக்டோ பர், நவம்பர் 1943 ,விக்கி பீடியா

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com