Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கந்தன் கருணை! ஒரு வாசகரின் அன்புக் கடிதம் !

| Feb 8, 2012

 வந்தோமா, படிச்சோமா - போனோமான்னு இல்லாம, மெனக்கெட்டு ஒவ்வொரு நல்ல பதிவுக்கும்  தனது கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் தவறாமல் அனுப்பும் , அன்பு வாசக நண்பர் இவர். அவர் எழுதிய இந்த கடிதத்தை , நம் வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்....
இதைப் போன்ற நெக்குருகும் சம்பவங்கள், நம் அனைவருக்குமே எப்போதாவது ஏற்பட்டு இருக்க கூடும்.... அவன் அருள் நமக்கு கிடைப்பதை உணர்ந்து, நாம் நம் முயற்சிகளை தொடர்ந்து கொண்டு இருந்தாலே போதும். ! நிச்சயம் அவன் நிழல் என்றும் நம்மை தொடரும்!
கடிதத்தை படித்துப் பாருங்கள்...!
 
=========================================================
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

நான் இதற்க்கு முன்பு அனுப்பிய முருகப் பெருமான் குறித்த மெயில் ஒன்றையும், இன்று தைப்பூசத்தன்று எனக்கு ஏற்பட்ட ஒரு அற்புத அனுபவத்தையும் ஒரே பதிவாக இங்கே பகிர்ந்துகொண்டுள்ளேன். மிகப் பெரியதாக இது வந்துவிட்டது. எனவே கமெண்ட்டில் நிச்சயம் பதிய முடியாது.

தவிர்க்க இயலாத ஒரு தனிப்பட்ட காரணத்தால் அடுத்து மூன்று நாட்கள் என்னால் உங்களை இணையம் மூலம் தொடர்பு கொள்ள இயலாது. பின்னர் உங்களை சந்திக்கிறேன். 

எனக்காக பிரார்த்திக்கவும். 

நன்றி.
- கோடியில் ஒருவன் 

------------------------------------------------------------------------------------------

அனைவருக்கும் வணக்கம். உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளவிரும்பும் இரண்டு விஷயங்களை ஒன்று சேர்த்து இங்கு தந்திருக்கிறேன். நிச்சயம் உங்களை கவரும் என்று நம்புகிறேன். அனுதினமும்  நல்ல கட்டுரைகள் மூலம் ஆன்மீக விளக்கை நமது வாழ்வில் ஏற்றி வரும் ஆசிரியருக்கு நன்றி. 

1) கடவுளை நம்பினோர் கைவிடப்படார் 

முருகன் நிகழ்த்திய அற்புதமாக ஆசிரியர் சமீபத்தில் அளித்த திரு.செங்கோவி அவர்களின் "நிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம் "http://www.livingextra.com/2012/01/blog-post_3082.html  பதிவை படித்தபோது எனக்கு ஒரு கணம் சிலிர்த்தது. அவரின் வினைப் பயனால் மேற்படி நோய் அவருக்கு வந்திருக்கவேண்டும். முருகப் பெருமானின் கருணையால், ஊழின் கடுமை குறைக்கபப்ட்டு, அவருக்கு மறுவாழ்வு கிட்டியிருக்கவேண்டும். 

அவருக்கு ஏற்பட்ட சூழல், வேறு யாருக்காவது ஏற்பட்டிருக்குமானால், நிச்சயம் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், முருகப் பெருமானிடம் தன்னையே அவர் ஒப்படைத்த காரணத்தால், கந்தனின் கருணை கிட்டியதாக கூறலாம். அதுவும் ஆறு மாதங்களுக்கு மேல் அவர் அங்கேயே இருந்தாரே... அந்த நம்பிக்கையை பொறுமையை என்னவென்று சொல்ல? எனக்கெல்லாம் ஒரு சின்ன சோதனையை தாங்கிக்கொள்ளும் பக்குவம் கூட வரவில்லை.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இது நான் மறை தீர்ப்பு. என்பது மட்டும் புலனாகிறது.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (குறள் 269)

பொருள் : தவத்தால் வரு ஆற்றலை பெற்றவர்க்கு இறப்பையும் வெல்லும் ஆற்றல் கைவரப் பெரும்.

கீழ்கண்ட YOUTUBE வீடியோவை பாருங்க ஆசிரியர் கூறியதை வீடியோவில் பார்ப்பதை போல தத்ரூபமாக இருக்கும்.

இந்த வீடியோவை கடந்த காலங்களில் ஒருமுறை பார்த்த நினைவு இருக்கிறது. இந்த பதிவுக்கு பொருத்தமாக இருக்கும். உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று தேடியபோது கிடைக்கவில்லை. பாடலில் வருவது ஏ.வி.எம்.ராஜன் என்பதும்  முதல் வரி "கண்டு கொண்டேன்" என்பதும் நினைவில் இருந்தது. ஆனால் அதை வைத்து YOUTUBE இல் தேடியபோது வீடியோ கிடைக்கவில்லை. நானும் விடுவதாக இல்லை. YOUTUBE முழுவதும் சல்லடைபோட்டு தேடினேன். ம்.....ஹூம்...  கிடைக்கவில்லை. ஒரு முருகன் படம் விடாமல் தேடினேன். அப்போதும் கிடைக்கவில்லை. சரி... என்ன ஆனாலும் பரவாயில்லை... சம்பந்தப்பட்ட வீடியோவை எப்படியும் பிடிப்பது என்று உறுதி பூண்டேன்.

சென்ற வாரம் ஒரு நாள் பணி முடிந்து திரும்பும்பொது, வரும் வழியில் வடபழனி நூறடி சாலையில் உள்ள ' லக்ஷ்மன் ஸ்ருதி ம்யூசிக்கல்ஸ்' சென்றேன். ஒரிஜினல் டி.வி.டி.க்களை இங்கு தான் வாங்குவது வழக்கம்.  தரமாகவும், மலிவாகவும் இருக்கும். நான் ஏற்கனவே வாங்க நினைத்திருந்த நாகைய்யா அவர்கள் நடித்த 'சக்ரதாரி' உள்ளிட்ட சில அருமையான பக்தி படங்களும் (சக்ரதாரி - உங்கள் பக்தி தூய்மையாக இருந்தால் இறைவனே உங்களுக்கு வந்து தொண்டு செய்வான் என்பதை உணர்த்திய காவியம் - பக்த விஜயத்தில் வரும் ஒரு உண்மை சம்பவம்), சில தமிழ் படங்களும் வாங்கினேன். அப்படியே, சில முருகர் பட சி.டி.க்களை பார்த்தேன். அதில், நான் தேடும் அந்த குறிப்பிட்ட பாடலின் முதல் வரி மட்டும் இருக்கிறதா என்று பார்த்தேன். கடைசீயில், தேவரின் "திருவருள்" படத்தில் அந்த பாடல் இருப்பதை கண்டுபிடித்து, அதை வாங்கினேன். கூடவே, வேறு சில முருகர் படங்களும் என்னை ஈர்க்க அவற்றையும் வாங்கினேன். வீட்டுக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட வீடியோவை இந்த முறை YOUTUBEல் தேடிப் பிடித்தேன். இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு. ஆசிரியர் கூறிய இந்த சம்பவம் எந்தளவு இதனோடு ஒத்துப்போகிறது என்று பாருங்களேன்..... (மேற்படி வீடியோவை அப்லோட் செய்த அன்பர் இது சிவாஜியின் பாடல் என்று தவறாக கூறயிருக்கிறார்.)

படத்தில் ஏ.வி.எம்.ராஜன், கிட்டத்தட்ட ஒரு பரதேசியை போல, மலை மீதுள்ள முருகனது சிலை முன்பாக அவனது கடைக் கண் பார்வை வேண்டி சுற்றித் திரிவார். கடைசீயில் முருகனது நல்லருள் கிட்ட, கீழ்கண்ட இந்த பாடலை பாடுவார். அதை கேட்க நேரிடும் ஒரு இசைத்தட்டு நிறுவனத்தின் முதலாளி, பாடல் வந்த திசையில் பாடுபவரை தேடி இங்கே வர, அப்புறம் என்ன? பரதேசியாய் சுற்றித் திரிந்த ஏ.வி.எம்.ராஜன், அவர் மூலம் நாடு போற்றும் பாடகராகிவிடுவார். அவசியம் அனைவரும் காணவேண்டிய படம். (ஆன்லைனில் ஆர்டர் செய்து, ஒரிஜினல் சி.டி.யை வரவழைத்து பாருங்கள். பைரசி வேண்டாமே!).

ஆண்டவன் நினைத்தால் ஆண்டியும் அரசனாவான் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?

முதலில் நான் இணையத்தில் தேடும்போது, இந்த வீடியோ கிடைக்காதது நல்லது தான் என்று பிற்பாடு தோன்றியது. அதனால் தானே, இப்போது என் கையில், 'சக்ரதாரி' உட்பட, பல்வேறு பக்தி படங்களின் சி.டி.க்கள் ஒரிஜினலாகவே உள்ளன.

நடப்பது எல்லாம் நன்மைக்கே!
YouTube video which resembling the above said incident:
http://www.youtube.com/watch?v=WCT-a1WHOK8&feature=related

2) இறைவனை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைப்பான்

நம் தளத்தை ரெகுலராக படிக்கும் பாதிப்போ என்னவோ தெரியவில்லை, இந்த ஆண்டு நான் மேற்கொண்ட முக்கிய முடிவுகளில் ஒன்று, விசேஷ நாட்களில் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஆலயங்களை சென்று கட்டாயம் இறைவனை சேவிக்க வேண்டும் என்பது தான். புத்தாண்டு அன்று பேரம்பாக்கம் நரசிம்மர் தொடங்கி வைகுண்ட ஏகாதசி அன்று பூவிருந்தவல்லி   பெருமாள் கோவிலுக்கு செல்வது என்று தவறாது சென்று வருகிறேன். 

தைப்பூசம் பற்றி ஆசிரியர் திங்களன்று கட்டுரை வெளியிட்டவுடன் நிச்சயம் இன்று முருகன் கோவில் ஏதாவது ஒன்றுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்து, அலுவலகத்துக்கு பெர்மிஷன் போட்டேன். ஒன்று, குன்றத்தூர் முருகன் கோவில், அல்லது வடபழனி முருகன் கோவில் - இரண்டில் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். 

ஆனால், இரண்டு கோவிலிலும் கூட்டம் அலைமோதும் என்பது மட்டும் தெரியும். என்ன செய்வது என்று யோசித்தபோது, வடபழனி சென்றால் தரிசனம் முடிந்து அலுவலகம் செல்ல வசதியாக இருக்கும் என்று முடிவு செய்து, வீட்டிலிருந்து வடபழனி புறப்பட்டேன். வளசரவாக்கத்தை கடந்து செல்லும்போது அங்குள்ள முருகர் கோவில் ஒன்று நினைவுக்கு வந்தது. வளசரவாக்கத்தில் வேங்கட சுப்பிரமணியர் கோவில் ஒன்று உள்ளது. எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக இந்த கோவிலில் முருகப் பெருமான் சங்கு சக்கரத்துடன் காட்சியளிப்பார். ஏதோ தோன்ற வண்டியை திருப்பி உடனே, மேற்படி கோவிலுக்கு சென்றுவிட்டேன். 

சங்கு சக்கரத்துடன் முருகன்

இந்த கோவிலின் மூலவரான முருகப் பெருமான், சங்கு சக்கரத்துடன் காட்சியளிப்பார். ஆகையால் தான் வெங்கட சுப்பிரமணியர் என்ற இந்த பெயர் ஏற்பட்டது. சுயம்புவாக பன்னெடுங்காலமாக இந்த பகுதியில் இருந்த விக்ரகத்தை சுற்றியிருந்த இடத்தை வங்கி, இக்கோவிலை எழுப்பியவர் ஒரு பெண்மணி. மிகவும் பரபரப்பான நகரத்தில் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வந்தாலே உங்களுக்கு மிகவும் பிடித்துவிடும். வடபழனி - போரூர் சாலையில் வளசரவாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள, முருகன் இட்லி கடையின் நேரெதிர் தெருவிற்குள் சென்றால், இக்கோவிலை அடையலாம்.

தைப்பூசம் என்பதால் இந்த கோவிலில்,  கூட்டமென்றால் கூட்டம் அப்படியொரு கூட்டம்! உள்ளே சென்று ஒரு நிமிடம் யோசித்தேன். "இந்த கூட்டத்தில் எங்கே நின்னு எப்போ அர்ச்சனை செய்றது... நடக்கிற காரியமா? பகவானை நின்னு சேவிக்க இடம் கிடைச்சாலே பெரிய விஷயம் தான்" என்று தோன்றியது. புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். நீங்களே பாருங்களேன்.

யோசித்துக்கொண்டிருந்தபோதே, எனக்கு மிகவும் தெரிந்த நண்பர் ஒருவர் (அந்த பகுதியில் அவர் ஒரு முக்கியப் புள்ளி!) அங்கே என்னை பார்த்துவிட்டார். "என்ன சார் எப்படி இருக்கீங்க?" என்றார் அன்போடு. முருகப் பெருமானை தரிசிக்க வந்திருக்கும் விபரத்தை கூறினேன். "அர்ச்சனை தட்டை வாங்கிட்டு வந்துடுறேன் சார்" என்று கூறினேன்... அவரே என்னுடன் அங்குள்ள கடைக்கு வந்து "சார் நமக்கு வேண்டியவர்... பார்த்து கொடுங்க" என்று கூறவே, கடைக்காரர் எக்ஸ்ட்ரா புஷ்பங்களுடன் சற்று வெயிட்டான அர்ச்சனை தட்டை தந்தார். "என் கூட வாங்க" என்று கூறி என்னை விடுவிடுவென அழைத்து சென்றார். 

கோவிலின் பணியாள் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்தி, "சாரை உள்ளே கூட்டிகிட்டு போய் நல்லா தரிசனம் பண்ண வைங்க" என்று கூற, அவர் அத்துணை கூட்டத்தையும் விளக்கி, நம்மை உள்ளே அழைத்து சென்று, முருகனுக்கு வெகு அருகில், மூலஸ்தானத்துக்கு முன்பு, நம்மை நிற்க வைத்தார். "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்... அர்ச்சனை பண்ணுவாங்க" என்றார். 

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பைகளை பக்தர்களிடம் வாங்கி வந்து கூட்டு அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்கள். முருகனுக்கு நடக்கும் அர்ச்சனை மற்றும் இதர சமாச்சாரங்களை கண்ணார ரசித்துக்கொண்டிருந்தேன். மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தம் மிகப் பெரிய மூர்த்தம். ஒரு ஆளுயரம் கொண்ட ஒரு சுயம்பு மூர்த்தம் இது. இதற்கு முன்பு நான் ஒரு முறை இந்த கோவிலுக்கு வந்திருந்தாலும் இத்துனை அருகில் முருகனை அப்போது தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. தற்போது அந்த பெரும் பாக்கியம் கிடைத்தது. 

"உன்னை இன்று கண்குளிர தரிசிப்பது சிரமம் என்றல்லவா நினைத்தேன் முருகா... ஆனால் நீயோ சிறப்பு தரிசனமே கொடுத்து அசத்திவிட்டாய்.. என்னே உன் கருணை..." என்று முருகனை வியந்து அவனது கருணையை வியந்து நன்றி கூறினேன். கண்களில் நீர் துளிர்த்தது.

தொடர்ந்து அங்கு நடக்கும் அர்ச்சனை மற்றும் பூஜைகளை பார்த்த வண்ணமிருந்தேன். இப்படியே சுமார் 20 நிமிடம்  கழிந்தது. பின்னர் என்னிடம் குருக்கள் வந்து என் அர்ச்சனை பையை வாங்கிக்கொள்ள, என் பெயர் ராசி நட்சத்திரம் ஆகியவற்றை சொல்லி சங்கல்பம் செய்தார். என்னுடைய விசிட்டிங் கார்ட் பாக்ஸையும் கொடுத்து முருகப் பெருமானின் காலடியில் வைத்து தருமாறு கேட்டுக்கொண்டேன். (முக்கிய கோவில்களுக்கு செல்லும்போதெல்லாம் எனது விசிட்டிங் கார்டை சுவாமியின் பாதங்களில் வைத்து வாங்கிக் கொள்வேன். ஆகையால் தான் எத்தனையோ சூழ்ச்சிகள், பொறாமைகள் மற்றும் இன்னல்களுக்கு இடையிலும் நான் நேசிக்கும் ஒரு பணியை என்னால் செய்யமுடிகிறது என்று நான் கருதுகிறேன்!). 

பின்னர் அர்ச்சனை நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டது. இறுதியில் பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பான சேவைக்கு அர்ச்சகரிடம் நன்றி கூறி விடைபெற்றேன். வெளியே பிரகாரத்தில் இருந்த நண்பரை தேடிப் பிடித்து கைகளை பற்றி, "உங்களால் இன்று எனக்கு மிக மிக சிறப்பான தரிசனம் கிடைத்தது சார். ரொம்ப தேங்க்ஸ்" கூறினேன். "பரவாயில்லே சார்.. எல்லாம் அவன் கருணை" என்றார். 

ஆலயத்தினுள் முருகப் பெருமானின் பக்தி பாடல்களை சிலர் இசைத்துக்கொண்டிருன்தனர். அவர்களுக்கு முன்பு சிறிது நேரம் உட்கார்ந்து பாடல்களை மெய்மறந்து கேட்டேன். சிறிய தொகை ஒன்றை அந்த அரும்பணியை செய்துகொண்டிருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு தொடர்ந்து நவக்கிரம், சந்தோஷிமாதா, கணபதி (இவரை முதல்லயே பார்த்திருக்கணும்) உள்ளிட்ட மூர்த்தங்களை தரிசித்துவிட்டு கோவிலை மும்முறை வலம் வந்து பின்னர் கிளம்பினேன்

"நாம் இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைப்பான்" - என்பதை அனுபவப்பூர்வமாக எனக்கு  உணர்த்திய சம்பவம் இது.  யோசித்துப் பாருங்கள்.... இல்லையெனில் தைப்பூசம் அன்று இப்படி ஒரு சிறப்பு தரிசனம் கிட்டுமா? 

- கோடியில் ஒருவன் 

========================================================8 comments:

redfort said...

Ayya Vannakkam,

Nanbarukku earpatta anupavangal kanthanin karunai allva. kanthan anaivarukkum arul purivaraguga...

ithu phonra anupavam enakkum earpattiruppathai ungalidam kiri valatthin pothu pakirthu irukkiren.

arul said...

nice sharing

அ.அபிராம் said...

முருகனின் அதிசயங்கள் மெய்சிலிர்க்கவைப்பவையாக உள்ளது.இன்றும் சிவன்மலை முருகன்
பல அதிசயங்களை பக்தர்களுக்கு நிகழ்த்தி வருகிறார்.கடந்த 300 வருடங்களில் அருணகிரிநாதர்,ரத்தினகிரி பாலமுருகனடிமை,சாண்டோ சின்னப்பா தேவர்,கிருபானந்த வாரியார்,பாம்பன் சுவாமிகள் என இக்கலிகாலத்திலும் காட்சி கொடுத்தவர் கந்தகடவுள் மட்டுமே
சமீபத்தில் முருகப்பெருமானை பற்றி ஒரு புத்தகம் படித்தேன் அதை எழுதியவர் வக்கீல் ஞானவேல் என்பவர் ஆவார் தெய்வீக ஆன்மாக்களிடம் ஆட்டோ ரைட்டிங் முறையில் பேசுவதில் நிபுணத்துவம் பெற்றவர்.இவர் தமிழ்க்கடவுள் முருகனிடம் பேசி பல அற்புதமான‌
விஷயங்களை வெளியே கொண்டு வந்தவர்.20,21ம் நூற்றாண்டில் முருகப்பெருமானின் திருவிளையாடல்களை இந்த புத்தகத்தில் அறியலாம் படிக்க படிக்க ஆச்சரியத்தின் எல்லைக்கு
நீங்கள் செல்லப்போவது மட்டும் 100சதவீதம் உறுதி

அந்த புத்தகத்தின் பெயர்கள்:ஆறுமுகக்கடவுளுடன் ஒரு அட்வக்கேட்டின் அனுபவங்கள்,,முருகப்பெருமான் உரைக்கும் பூர்வஜென்மங்கள்[வெளியீடு;நர்மதா பதிப்பகம்] இந்த புத்தகங்களை வாங்கி
படித்தால் கடவுள் மேல் அரைகுறை நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும் என்பது உறுதி .இதைப்பற்றிய ஒரு சின்ன ரெஃபெரன்ஸ்க்காக எனது ப்ளாக்கில் வந்த சில தகவல்களை தருகிறேன்
http://ramadevarblogspotcom.blogspot.in/2011/11/blog-post.html
http://ramadevarblogspotcom.blogspot.in/2011/11/blog-post_29.html

http://ramadevarblogspotcom.blogspot.in/2011/11/blog-post_13.html

குறிப்பு;இந்த புத்தகங்களை அனைவரும் வாங்கி படிக்கவேண்டும் என்பதே என் ஆசை

Lakshmanan said...

ஐயா

எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் முருகன் தான். வாரியார் எப்போதும் கலியுக கடவுள் கந்தன் என்றுதான் சொல்வார். இணைய இணைப்பு உள்ளவர்கள் ”திருவருள்” என்ற பக்தி படத்தை கீழ்கண்ட இணைப்பில் பார்த்து மகிழலாம்.

http://www.bigflix.com/home/movies/thiruvarul/1125

நன்றி
தி. லெட்சுமணன்

R.Purushothaman said...

Thank you very much For sharing.

Purushothaman.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு சார் ! வாழ்த்துக்கள் ! நன்றி !

கோடியில் ஒருவன் said...

என் கருத்துக்களை பதிவாக பிரசுரித்த ஆசிரியருக்கும் கருத்து கூறிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இறைவன் திருவருளை பெற தகுதியற்ற மகா பாபி நான். இருப்பினும் என் மீதே அவனுக்கு இத்துனை கருணை என்றால், புண்ணியாத்மாக்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அவன் எத்துனை திருவிளையாடல்களை நிறைவேற்றியிருப்பான். சற்று யோசித்து பாருங்கள்.

'தெய்வானாம் மானுஷ ரூபாம்' என்பார்கள். கிருதய, த்ரேதா, துவாபர யுகங்களில் வேள்விகளினாலும், யாகங்களினாலும், தவத்தினானாலும், நேரில் தோன்றிய இறைவன், கலியுகத்தில் பக்தர்களுக்கு உதவும் பொருட்டு மனிதர்களை தன் கருவியாக பயன்படுத்திக்கொள்கிறான். அல்லது அவனே மனித உருவில் தனது அடியார்களுக்கு உதவிட வருகிறான்.

அஞ்ஞானத்தால் நாம் தான் அதை உணருவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு ஒரு உடல் உபாதை காரணமாக நாம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டது. ஏழை எனக்கு உதவிகரம் நீட்டிய என் நண்பரின் பெயர் தெரியுமா? பாலமுருகன். என்ன பொருத்தம் பார்த்தீர்களா?

சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டாலும் வீட்டில் சில நாட்கள் மருத்துவ ஒய்வு எடுக்கும் கட்டாயத்தில் உள்ளேன். நான் முன்பே கூறிய படி, சென்ற வாரம் நான் வாங்கி வந்த சில முருகனின் திரைப்பட டி.வி.டி.க்களை பார்க்க விரும்பி, இன்று டி.எம்.எஸ். அவர்கள் நடித்த, ராமண்ணா அவர்கள் இயக்கிய அற்புத காவியமான 'அருணகிரிநாதர்' படத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன். எப்பேர்ப்பட்ட இழிந்த நிலைக்கு ஒருவர் சென்றிருந்தாலும், தன் தவறை உணர்ந்து திருந்தினால், இறைவன் தடுத்தாட்கொள்வான் என்பதை பறைசாற்றிய மகா காவியம் இது. படத்தை பார்க்கும்போது பல இடங்களில் நமக்கு கண்ணீர் அரும்பியதை மறுக்க முடியாது. (நீங்க வேண்ணா பார்த்துட்டு சொல்லுங்களேன்).

இப்படியெல்லாம் பேசுவதால் லௌகீக சுகங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அவன் பெயரை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும் என்பதில்லை. 24 மணிநேரத்தில் ஒரு சில மணித் துளிகள் அவன் முன் மண்டியிட்டு நமது குறைகளை சொல்லி, அவனது புகழை பாட நமக்கு நேரமிருக்காதா என்ன?இல்லறமல்லது நல்லறமில்லை என்ற ஒவ்வையின் வாக்குக்கு ஏற்ப, சராசரி வாழ்விலும், நல்லவற்றை கடைப்பிடித்து நியாயமான சுகங்களை எவரும் துய்க்கலாம்.

முருகப் பெருமான் அனைவருக்கும் அருள் புரிவானாக.

- கோடியில் ஒருவன்

Suresh said...

வணக்கம்,
/*வந்தோமா, படிச்சோமா - போனோமான்னு இல்லாம,*/ - இந்த வகையறாவை சேர்ந்த ஒரு வாசகன்.
நிறைய பயனுள்ள கருத்துக்களை நான் உங்களுடைய பதிவுகளில் தெரிந்து கொண்டுள்ளேன்.
உங்களுடுய எழுத்துபனிக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கங்கள். இறைவனுடைய ஆசிகள் உங்களுக்கு கிட்ட பிரார்த்திக்கிறேன்.
நன்றி

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com