Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென சங்கே முழங்கு.!

| Nov 30, 2011

சமயங்களில் நம்மில் பலருக்கும், சில கேள்விகள் எழலாம். எனக்கு தோன்றிய சில எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். உங்களுக்கு அவற்றுள் சில உபயோகப்படலாம்.

சின்ன வயசுல இருந்தே , என்னோட நட்பு வட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லா சேட்டையும் செய்வோம். அதே நேரம், ஒரு குழுவா திரட்டி கோவில் குளம் சுத்தம் செய்யறது, மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் போய் அங்கு பஜன் பாடுறது, அவங்க கிட்ட ஆதரவா பேசுறது  மாதிரி  கொஞ்சம் நல்ல காரியமும் செய்வோம். வித்தியாசமா சிந்திக்கவும் செய்வோம். அந்த குழுவில் மூன்று நல்ல , நெருங்கிய நண்பர்கள் எனக்கு உண்டு - இருபது வருடங்களை கடந்தும் ஆழமாக வேர் விட்டு ஓடும் நட்பு அது. பேர் ராசியோ , என்னவோ - ஆரம்பத்தில இருந்தே நம்மளை குரு ஸ்தானத்துல வைச்சிட்டாங்க.


இன்று பார்க்க விருப்பவை , என் நட்பு வட்டாரத்தில் இருந்து என்னிடம் கேட்கப் பட்ட கேள்விகள். பகுத்தறிவு சிந்தனை தூண்டுவது போல இருந்தாலும், வெட்டிப் பேச்சாக இல்லாமல் , விஷய ஞானம் வேண்டி கேட்கப்பட்ட கேள்விகள் ஆதலால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை , அவர்களுக்கு நான் பதில் கூறி இருக்கிறேன். 

நம் வாசகர்கள் பலருக்கும் இதைப் போன்ற சிந்தனைகள் எழுந்து இருக்கக் கூடும். நான் ஒரு கத்துக் குட்டி. உங்களில் சிலருக்கு இன்னும் தெளிவான சிந்தனைகள் எழலாம். இந்த கட்டுரை படிக்கும் ஒவ்வொருவரும், சிரமம் பார்க்காது - உங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் , நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.நமது வாசகர்களுக்கும் பயன் கிடைக்கும். சரி, இனி சப்ஜெக்ட்க்கு வருவோம்..

கடவுள் நம்பிக்கை என்கிற எண்ணம், நம் மனதில் வித்திட்டது யார்? நம் தந்தை, தாய், முன்னோர்கள் என்று வைத்துக் கொண்டால், முதன் முதலில் அந்த எண்ணம் நம் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கு எப்படி வந்து இருக்க கூடும்? 

காலம் காலமாக , விஷ்ணு இப்படித் தான் இருப்பார், சிவலிங்கம் இப்படித் தான் இருக்க வேண்டும், சிவபெருமான் இப்படித் தான் இருப்பார். முருகர், விநாயகர் , அம்மன் , சரஸ்வதி எல்லாம் இப்படி இருப்பார்கள் என்று - புராணங்கள் , வேதங்கள் கூறிய அடிப்படையில் நாம் அப்படியே படங்களிலும், கோவில் சிலைகளிலும் உள்ளவற்றை பார்க்கிறோம். நம்புகிறோம். இதை இப்படியே நாம் ஏற்றுக் கொள்ளவேண்டுமா? 

இறைவன் எங்கும் இருப்பான் எனில் , அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ளவர்களுக்கு சிவனைப் பற்றி தெரிந்து இருக்க நியாயமில்லையே. அவர்கள் வேறு தெய்வத்தை அல்லவா வணங்குகிறார்கள். அப்படியானால் சிவன் அவர்களை கவனிப்பது இல்லையா? நாங்கள் வணங்கும் முனியாண்டியைப் பற்றி , எங்கள் பக்கத்து வீட்டுக் காரனுக்கு கூட தெரியாது...... யாரு அவரு? அவரை ஏன் நாங்க கும்பிடனும்? நம்ம மதத்தில மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்..? 

கோவிலுக்கு போனா , ஏன் வலம் வர்றோம்..? நீ கிரிவலம் இத்தனை தடவை போறயே..? அது எதுக்கு..? சாமி மட்டும் கும்பிட்டு வந்தா போதாதா? ஏன், இங்கே இருந்தே கும்பிட்டுக் கிட்டா போதாதா? 

நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா?

ஜோதிடம் - மேல் நாட்டில் பிறந்த யார் ஜாதகத்தை ஆராய்கிறார்கள்? அவர்களுக்கு யார் , இந்த பரிகாரத்தை செய் என்று அறிவுறுத்துகிறார்கள்? அவர்கள் நன்றாகத் தானே இருக்கிறார்கள்....

இது மாதிரி இன்னும் பல கேள்விகள் இருக்கு... இப்போதைக்கு இந்த கேள்விகளை மட்டும் பார்க்கலாம்... 


இந்து மதத்தை யார் தோற்றுவித்தார்கள் என்றே நமக்கு இன்னும் தெரியாது. மார் தட்டிக் கொள்ளலாம். உலகின் பழமையான ஒரு மதம். அவ்வளவு புராதனம். பல பல ஆயிரம் வருடங்களாக , சில நம்பிக்கை - பரம்பரை பரம்பரையாக நமக்கு சொல்லப் பட்டு வந்து இருக்கிறது. அந்த நம்பிக்கையில் இன்னும் போகிறோம். புராணங்கள் வெறும் கதைகள் என்று நினைத்தால் அது கதை தான். ஆனால், அவை உண்மை என்று நினைத்தால்..... (அட.. சூப்பரா இருக்குமே ?


சொர்க்கம் , நரகம் என்று இருப்பது உண்மை என்று நம்மில் சிலர் சொல்லிக் கொண்டாலும், மனதளவில் நம்புவதே இல்லை. நம்பினால் , நாம் தவறு செய்யத் துணிய மாட்டோமே...


தேவர்கள் சொர்க்கத்தில் இருக்கின்றனர். தேவர்களும் தொழும் மும்மூர்த்திகள்  இருக்கின்றனர். ரிஷிகள், சித்தர்கள் அவர்களை எல்லாம் , தரிசித்து இருப்பதாக புராணங்கள், செவி வழிச் செய்திகள் , காலம் காலமாக நமக்கு போதிக்கப் பட்டு வரும் நம்பிக்கைகள் கூறுகின்றன...


அவை எல்லாம் , உண்மையாக இருக்குமா? என்கிற கேள்வி , இந்த விஞ்ஞான உலகில் வருவது இயல்பு தான். நமக்கு இவை எல்லாம் , ஒரு பக்காவான டுபாக்கூர் மேட்டராத்தான் தெரியும். நாம் தான் இதை எல்லாம் நம்புவதே இல்லையே... 


அடி மனதில், ஆழ் மனதில் நமக்கு இந்த எண்ணம் தான் வருகிறது. எதையும் நாம் அனுபவித்து உணர்ந்து கொண்டால் ஒழிய, நம் மனது நம்புவதே இல்லை.


சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும். குடித்தால் - லிவர் , கிட்னி போயிடும் என்று படித்து படித்து கூறினாலும், அதை நாம் அவ்வளவு எளிதில் விட்டு விடுவதில்லை. (நம்புவதில்லையோ?)


எவ்வளவு பிரார்த்தனை பண்ணினாலும் நமக்கு கடவுள் கண் திறப்பது இல்லை என்று ஒரே ஒரு முறை தோன்றினாலும், உடனே கடவுளை நம்புவதை நிறுத்தி விடுகிறோம்..... இது நியாயமா?   


நம் தமிழ் மொழி எவ்வளவு புராதனமானது என்று , இதுவரை உறுதியாக கூற முடியவில்லை. எத்தனை மகான்கள், புண்ணிய புருஷர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எத்தனையோ பேர் இறைவனை தரிசித்து, அந்த ஆவணங்கள் நமக்கு கிடைத்தும், இன்னும் இறைவன் இருக்கிறானா என்கிற ஊசல் ஆட்டத்தில் தான் நமது மனது இருக்கிறது.


பாம்பன் சுவாமிகளோ, ராமலிங்க அடிகளாரோ , ராமகிருஷ்ண பரமஹம்சரோ - முருக தரிசனம் பெற்றதோ, காளி தரிசனம் பெற்றதையோ   பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல. நம் முன்னோர்களில் யாரோ ஒருவருக்கு, அந்த கால கட்டத்தில் பலருக்கு இறைவன் சிவனாகவோ, விஷ்ணுவாகவோ , முருகனாகவோ, விநாயகராகவோ - பல ரூபங்களில் காட்சி அளித்து இருக்க கூடும். அந்த நம்பிக்கை வாழையடி வாழையாக  அந்த சந்ததிகளுக்கு தொடர்ந்து இருக்க கூடும்.


(இந்த கட்டுரையின் முடிவில் - கீழே ஒரு சுவாரஸ்யமான உண்மை தகவல் ஒன்றை இணைத்துள்ளேன்.... ஒரு முறை அதையும் படித்து விட்டு , மனதில் அசை போடுங்கள்.... என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்....)


எத்தனையோ வருடங்களாக , கோடிக் கணக்கில் மகான்களின் மந்திர அதிர்வுகளை உள்ளடக்கிய - ஆலயங்கள் நம் தமிழ் நாட்டிலும் , இந்தியாவிலும் எவ்வளவோ இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயமும், ஒவ்வொரு சூட்சுமத்தை உள்ளடக்கி , பலன்களை உள்ளடக்கியது. நமக்கு ஆனால், இன்னும் 50 :50  நம்பிக்கையும், ஒரு வித க்யூரியாசிட்டியும் தான் இருக்கிறது.நான் சொல்வது தீவிர நம்பிக்கை உள்ளவர்களாக காட்டிக் கொள்பவர்களுக்கே.


நம்மில் உள்ள ஒரே குறை என்ன தெரியுமா? பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய புராதனமும், பெருமையும் இருப்பதால் - மிகுந்த மெத்தனமும், அஜாக்கிரதையுமாக இருந்து விடுகிறோம்....    


சரி, வெளி நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் எப்படி? அவர்களுக்கு ஜோதிடம், ஜாதகம் - கடவுள் நம்பிக்கை எதுவும் இருப்பதாக தெரியவில்லையே...


அங்கும் பல வருடங்களுக்கு முன்பு , பல கலாச்சாரங்களுக்கு முன்பு - நம் வழிபாடு முறை போன்றே இருந்து இருக்க கூடும்... ஜப்பானிலும், இந்தோனேசியா விலும், இந்தோ சீனா பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான புராதன சிலைகள் நம் இந்து மத கடவுள்களின் உருவத்தை ஒத்து இருப்பதை நாம் கேள்விப் படுகிறோம்.


நமது மதம் பெரியதா, உலக முழுவதும் பரவி இருந்த ஒன்றா என்பது இங்கு கேள்வி இல்லை. நமக்கு தேவை இல்லாத விஷயம். ஏதோ ஒரு காரணத்தால், நான் எத்தியோப்பியாவில் பிறந்து இருந்தால், இஸ்லாமையோ அல்லது வேறு எதோ ஒரு மதத்தையோ தழுவி இருந்து இருப்பேன். இந்து மதம் என்ற ஒன்று இருப்பது கூட தெரிந்து இருக்காது.


உலகத்தில் பிறந்த எந்த ஒரு ஜீவனும், அவர்கள் வெளி நாட்டவராக இருந்தாலும், அவர்களும் கிரக பலன்களால் ஆட்படுவர் என்பது ஜோதிட விதி. யார் , யாருக்கு என்ன தலை எழுத்து என்பது பிறக்கும்போதே விதிக்கப் பட்டு விட்ட ஒன்று தான். நமது உடலில் உள்ள நவ சக்கரங்களின் மூலம் நவ கிரகங்களும் நம்மை இயக்கி - நம் பூர்வ புண்ணிய பலன்களை கிடைக்க செய்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரம்.


அதது அப்போதே அளக்கப்பட்டு விட்டது என்று இருக்கும்போது , வழிபாடும், பரிகாரமும் - இயற்கைக்கு முரணா என்று நினைக்கவும் தோன்றுகிறது. வழிபாடும் , பரிகாரங்களும் - நமக்கு பாதகமான நேரங்களில் தீய பலன்களால் நமக்கு பாதிப்பு குறைவாக ஏற்படவும், நல்ல நேரங்களில் நமக்கு கிடைக்க விருக்கும் நற்பலன்களை உரிய நேரத்தில் கிடைக்க செய்யவும் தான். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் கூறியபடி - ஜாதகம் மூன்றில் ஒரு பங்கு, நம் சுய எண்ணம் செயல்கள் ஒரு பங்கு , வாழும் வீடு, சூழல் - ஒரு பங்கு - இவை மூன்றும் தான் ஒருவரின் வாழ்க்கையின் வெற்றி , தோல்வியை தீர்மானிக்கின்றன.


நம் பூர்வ புண்ணிய கர்மாக்கள் நம் பிறப்பை தீர்மானித்தாலும், நாம் இப்போது செய்யும் நற்செயல்கள் - நமக்கும், நம் சந்ததிக்கும் நல் வழி காட்டும்.
அயல் நாடுகளில் பிறப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். கஷ்டப்பட்டு உழைச்சு , IIT  , IIM னு நல்ல படிப்பு படிச்சு - கை நிறைய சம்பளம் வாங்கி , இல்லை நல்ல பிசினஸ் பண்ணி - நல்ல நிலைக்கு , சொத்து , தோட்டம் தொறவுனு - நீங்கபண்ற எல்லாமே  - கிரகங்களாவது , கட்டமாவது.... உங்க சுய முயற்ச்சின்னு வைச்சுப்போமே, ஒரு பேச்சுக்கு...  

அந்த மாதிரி ஒரு நல்ல படிப்பு, வசதி , நற்பண்பு உள்ள ஒருவருக்கு - ஒரு குழந்தை பிறக்குதுன்னு வைச்சுப்போம்..... இவர் அடிச்ச குட்டிக் கரணம் எதுவும் இல்லாம straight ஆ - அதுக்கு எல்லா வசதியும் கிடைக்குதா, அது பூர்வ ஜென்ம புண்ணியம்...

நம்மளை விடுங்க, நம்ம புள்ளைகளுக்கு - பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைய இருக்கணுமா? வேண்டாமா? நாமளும் நம்ம திறமைய வளர்க்கணும் இல்லையா? நல்ல செயல்கள் செய்ய, நல்ல சம்பாதிக்கணும் இல்லையா? நம்ம பசங்களுக்கு பெஸ்ட் எஜுகேசன் , வசதிகள் செஞ்சு கொடுக்கணும் இல்லையா? முயற்சி செய்வோம்... நம்ம கர்ம வினை இடம் கொடுத்தா, நம்ம புள்ளைய ஒழுங்கா வளர்த்தா...  அவனுக்கே புள்ளையா , நாம கூட திரும்ப பொறக்கலாம்... நாமே திரும்ப , நம்ம வசதிகளை அனுபவிக்கலாம்... நம்மை குழந்தைகளாக வளர்த்த , நம் பெற்றோர்களை நாம் குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம்... எந்த அளவுக்கு நம்மை அவர்கள் கவனித்து இருக்க கூடும்...


நெஞ்சைக் கீறும் இளைய ராஜாவின் இந்த பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றன...
பொன்னைப் போல ஆத்தா , என்னைப் பெத்துப் போட்டா...
என்னைப் பெத்தா ஆத்தா , கண்ணீரைத் தான் பார்த்தா.....!

ஒரு குழந்தையாய் நம் கடமையை , குடும்பத் தலைவனாய் நம் கடமையையும் செய்தால் போதும்... குடும்பம் என்கிற அமைப்பு கட்டுக் கோப்பாக இருக்கும்...

சரி, வெளிநாட்டுக் காரங்க - நம்ம அளவுக்கு கடவுள் என்னும் நம்பிக்கை இல்லாதவங்க, எல்லாரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்...?

இது எனக்கு கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது.
நம்மில் பக்குவமடைந்த யாரையேனும் கேட்டுப் பாருங்கள். அவருக்கு எது முக்கியம்? மனசாட்சியுள்ள எவரும் சொல்வது, என் குழந்தைகள்... என் குடும்பம்... அவங்க நலனுக்கு அப்புறம் என் நலம். அதன் பிறகு சமூகம்.


மேலை நாடுகளில் அப்படியா? குடும்பம் என்கிற அமைப்பு சீர் குலைந்து இருக்கிறது.

நன்றாக இருப்பது என்றால்.... நினைத்த நேரத்தில் குடி, புகை, கறி, மீன்.... நினைத்த பெண்களோடு சுற்றுவது,நோ பாமிலி பாண்டிங் ,  கை நிறைய கிரெடிட் கார்ட் .... இது தான் அவர்கள் வாழ்க்கை. அவர்கள் அனைவரும் நம் தேசத்தின் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைப் படுகிறார்கள். ஒரு சாதாரண குடும்பம் (என நம் பார்வையில் உள்ள)  சேமிக்கும் திறனை பார்த்து வியந்து நிற்கிறார்கள். நமது கோவில்களையும், யோகா தியான முறைகளையும் பார்த்து , நாம் இங்கு பிறக்க வில்லையே என ஏங்குகிறார்கள். 


மிக கேவலமான சுகாதார வசதிகள் இருந்தும், நம் உடம்புக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பார்த்து மிரள்கிறார்கள்.
இரண்டு விஷயங்களில் தான் நாம் பின் தங்கி இருக்கிறோம். ஒன்று சுத்தம், சுகாதாரம். இரண்டு - அரசியல் ஊழல். பெயருக்கு மட்டுமே ஜனநாயகம். சரி, அதை விடுங்கள்...


ஆனால் , நாம் அவர்களை பார்த்து அவர்கள் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். மியாமி பீச்ல பொண்ணுங்க எல்லாம் துணியே இல்லாம இருக்கிறதை, ஆட்டம் போடுறதை, பார்க்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். நம்ம தங்கச்சி, வீட்டுக்கார அம்மணி அந்த மாதிரி ஆட்டம் போட்டு , மத்தவங்க பார்த்தா - தாங்க முடியும்னு நினைக்கிறீங்க..?

அவர்கள் பெண்களுடன் சல்லாபிப்பது நமக்கு உள்ளூர அவர்கள் மேல் பொறாமைப் பட வைக்கிறது. சரி, நாமளும் பண்ணுவோம்... நாம நல்ல இருக்கிறதா ஆகிடுமா? வெளியில் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் நமக்கு வீட்டுல மனைவி, அம்மா, குழந்தைகளும் இருக்கணும்.. நாம அதிகாரம் பண்ணனும் இல்லை. அவங்க பாசம் நமக்கு வேணும் இல்லை? ஐயா.. சரி... ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமானு வீட்டுக்கார அம்மணியும் நினைச்சுட்டா.. நினைக்கவே சகிக்கலை இல்லையா... இது தான் அங்கே நடக்குது... சர்வ சாதாரணமா .... மூணு , நாலு டிவோர்ஸ் .  


Honey, See there.... How Sweet....!
My children and your children are playing with our children....


அர்த்தம் புரியுதா... " ஏ கண்ணு அங்கே பாரேன் .. உன் புள்ளைகளும், என் புள்ளைகளும் நம்ம புள்ளைகளோட விளையாடுராக...ஒரே மஜாவா கீது இல்லே? " அவரோட இப்போதைய மனைவி கூட பேசுறாரு..


உருகி உருகி அன்பு பொழிஞ்சு குடும்பம் நடத்திப் புட்டு - பிரிஞ்சுடுவோம்னு சொன்னா , நல்லாவா இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நமக்கும் இந்த தொற்று வியாதி வந்து தொலைச்சு இருக்கு. 

கடைசியா இளநீர், பதநீர், பனை நுங்கு  எப்ப சாப்பிட்டு இருப்போம்? குடும்பத்தோட ஒரு ரெண்டு நாள் ஒரு பிக்னிக் - கடற்கரை, கன்னியாகுமரி , குற்றாலம் எப்போ போயிருப்போம்..  யோசிச்சுப் பாருங்க..! ஆனா, ஒரு நாள் கையில காசு கம்மி,  சரக்கு அடிக்கலைன்னா... ரொம்பவே பீல் பண்ண ஆரம்பிக்கும் மனசு...! மறுநாள் எப்படியாவது காசு ரெடி பண்ணி, ஒரு கட்டிங் உள்ளே போனாத்தான் நிம்மதி அடையும்...  


ஆனா, "இந்த மாசம் சீட்டுக்கு காசு கட்டவே என்ன பாடு பட்டோம்னு தெரியும்ல ... இந்த லீவுக்கு நாம எங்கேயும் போகப் போறது இல்லை.. சும்மா கிடங்கடா" ன்னு பசங்களுக்கு , ஊட்டு அம்மணிக்கு  ஈசியா சமாதானம் சொல்ல மனசு உடனே தயாராகுது.. ...

சரி, நான் வுட்டா பேசிக்கிட்டேத் தான் போவேன்...  மேட்டருக்கு  வாரேன்..
உலகத்துல உள்ள எல்லாரையும் விட, நிம்மதியா - உயிர் பயம் இல்லாம , தலை தலைமுறையா , சோத்தோட  பாசத்தையும் தின்னு வளர்ற நம்மளை விட --- வேற எல்லாப் பயலுகளும் ஏழைகள் தான்...பாவம் தான்...!

அடுத்து....


குரு, கோவிலுக்கு போனா சாமியை ஏன் சுத்திக் கும்பிடுறோம்னு என் நண்பர் கேட்டார். அப்போ எனக்கு உடனே தோணுனது இது தான்.  


நீ இங்கே வாயேன், இப்படியே நில்லுன்னு , அவரை ஒரு சுத்து சுத்தினேன்..  அவனுக்கு சிரிப்பு அடக்க முடியலை.. என்னடா? எப்படி பீல் பண்றேன்னு கேட்டேன்.. இப்போ தெரியுதா.. நான் உன்னை சுத்துறப்போ , நீ வேற எல்லாத்தையும் விட்டுட்டு , எந்த நினைப்பும் இல்லாம , என்னை மட்டும் தானே பார்த்தே...  அந்த மாதிரி, அந்த இறைவனோட கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சி, அவரை வலம் வருவது. அவர் நம்மளை பார்த்தாப் போதுமே, அடுத்து நாம பேசுறது எல்லாம் அவருக்கு கேட்கும். நமக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும்... இல்லையா? 


நாம் இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை கும்பிடலாம், தவறில்லை. கோவிலுக்கு போகணுமா அவசியம்? அண்ணாமலை கிரிவலம் , குல தெய்வம் -  ஆகியவை பற்றி நான் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறேன். பழைய கட்டுரைகளை ரெபர் செய்து கொண்டால் தன்யனாவேன். கட்டுரையும் ஏற்கனவே நீண்டுக் கிட்டே  போகுது.. திரும்பவும் பிளேடு போடணுமா? 


கதிர்களை ஈர்த்து , கும்பம் வழியாக கருவறை சேர்த்து , நீங்கள் மூலவரை  வணங்கும்போது உங்கள் நாடி சக்கரங்களின் சுழற்சியை சரி செய்ய ஆலயங்கள் நம் முன்னோர்கள் அளித்த பெரிய வரப் பிரசாதம்.. 


உங்க வீட்டுக்கு பால்காரர் பால் கொண்டு வர்றாருன்னு வைச்சுப்போம். அவர் வர்ற நேரத்தில தான் வருவாரு. எனக்கு உடனே வேணும் கொஞ்சம் அவசரம் ... ஐயா, வீட்டுல திடீர்னு கொஞ்சம் விருந்தாளிக வந்துட்டாக, பால் காரர் கம்மியாத் தான் தருவாரு, வழக்கம்போல தான் எடுத்து வருவாரு... என்ன பண்றோம்..? உடனே ஓடுறோம்ல பால் பூத்துக்கு... இல்லை பால் பண்ணைக்கு...  


அந்த மாதிரி , நமக்கு சில விஷயங்கள் சீக்கிரம் வேணும்னா, நாம கோவில்களுக்கு போய் தான் ஆகணும்.. உங்களோட மன பாரம் இறங்க , மன நிம்மதி கிடைக்க ஆலயங்கள் , நமக்கு கிடைத்து இருக்கும் அருட் கொடைகள்..


சரி, இன்னைக்கு இவ்வளோ போதும்... நிச்சயமா குட்டையை குழப்பி விட்டு இருப்பேன் என நம்புகிறேன். தெளிவான விளக்கங்கள் இல்லை எனினும் , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்து இருக்கும்.. நான் சொன்னா கேட்கவா போறீக..  நீங்களே யோசிச்சு உங்க மனசு என்ன சொல்லுதுன்னு கேட்டு பாருங்க... அது சொல்றதை , நீங்க நிச்சயம் நம்புவீங்க...! அப்புறம் கீழே ஒரு குட்டிக் கட்டுரை, படிச்சுப் பாருங்க... 
அவசியம் மறக்காமல் , உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் இடுங்கள்....
போதும் முடிச்சுக்கலாம்... என்னது ... இன்னொரு கேள்வி இருக்கா? அட ஆமா இல்லை... ரொம்ப உஷாரா இருக்கிறீங்க....


நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா? அந்த கேள்வி தானே....!


'அன்பே சிவம்' கமல் மாதிரி சொல்லப் போறது இல்லை.. ரொம்ப கிரிஸ்டல் கிளியரா சொல்றேன் ...... YES . ஆனா, இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.. நீங்களே தரிசிக்கும் வரை , நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை... ஆனாலும், உண்மையான தேடல் ஒரு நாள் உங்களை பக்குவப் படுத்தும்...



அதனால் தான் அப்பழுக்கற்ற நம்பிக்கையில் சொல்கிறேன்... உங்கள் அனைவரின் துக்கங்களும் கரைய, லட்சியங்கள் நிறைவேற , இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்... அவனைப் பற்றிக் கொள்ளுங்கள்...  


இன்னும் சிந்திப்போம்.....!


வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்...!

===============================================
முனைவர் S .ஜெயபாரதி  ஐயா அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை கீழே தந்து இருக்கிறேன். வேடிக்கையான அதே சமயம் சுவாரஸ்யமான கட்டுரை.



தென் பஸி·பிக் மாக்கடலிலுள்ள தீவொன்றின் ஆதிவாசிகள்
ஜான்·ப்ரம் தேவனின் படத்துடன்
 

தெற்கு பசிபிக் மாக்கடலின் ஒரு கோடியில் ஒரு சிறிய தீவு இருக்கிறது.     அந்தத் தீவு எந்தவொரு கப்பல்பாதையையும் விட்டு விலகியே இருக்கிறது. விமானங்கள் அந்தப் பக்கத்தில்கூட பறப்பது கிடையாது. அங்கு அந்தத் தீவின் ஆதிவாசிகளான மெலனீசியர்கள் இருக்கின்றனர்.1930-ஆம் ஆண்டு அந்தத் தீவுக்கு ஒரு அமெரிக்கர்  தனியாக விமானமொன்றை இயக்கிக்கொண்டு வந்தார்.

அவருடைய பெயர் ஜான் ·ப்ரம். அந்தத் தீவின் பழங்குடியினரை ஆராய்வதற்காகத்தான் அவர் அங்கு வர நேரிட்டது.சில காலம் அவர்களோடு இருந்தார். மிகவும் அன்பாக இருந்தார்; மருந்துகள்கொடுத்து பிணிகளைப் போக்கினார்; புதியவகைத் தின்பண்டங்களைக் கொடுத்தார்.திரும்பிச் செல்லும்போது அவருடைய புகைப் படத்தையும் கொடுத்து பல பொருள்களைஅவர்களுடன் அங்கேயே விட்டுச் சென்றார்.

அவரை ஒரு தேவனாக அந்த ஆதிவாசிகள் கருதினர்.1942 ஆண்டில் இரண்டாம் உலக யுத்தத்தின் உச்ச கட்டத்தில் ஜப்பானிய சாம்ராஜ்யம் பசிபிக் தீவுகளிலும் பரவியது. அங்கிருந்து ஜப்பானியர் அமெரிக்காவை எட்டிப் பிடித்து விடக்கூடாது என்பதற்காக பசிபிக் மாக்கடலின் பல தீவுகளில் இராணுவத் தளங்களை அமெரிக்கர்கள் ஏற்படுத்தினர்.அந்தக் குட்டித்தீவுக்கும் இராணுவம் வந்திறங்கியது. அந்தப் போர்வீரர்களிடமிருந்த பலவகையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் ரேடியோவையும் ஜீப்பு வண்டியையும் கண்டு ஆதிவாசிகள் வியந்தனர்.

விமானங்கள் ஆகாயத்திலிருந்து  இறங்கிவந்தன. பெரும்பெரும் கப்பல்கள்  வந்து அணைந்தன. அவற்றின் உள்ளிருந்து உணவும், மருந்தும், மனிதர்களும்,  ஜீப்புகளும்,   ஆயுதங்களும் வருவதைக் கண்டார்கள். இவற்றையெல்லாம் தேவலோகத்திலிருந்து  ஜான் ·ப்ரம் தேவனே  அனுப்பியிருப்பதாக அவர்கள் மனப்பூர்வமாக நம்பினர்.

அமெரிக்காவை தேவலோகமென்று எண்ணினர். அந்தத் தீவினரின் ஆதரவைப் பெறவேண்டி, அமெரிக்க இராணுவத்தினர்  அவர்களின் அந்த நம்பிக்கைகளை ஆழமாக வலுப்படுத்தினர்.விரைவில் யுத்தம் முடிந்தது.  "வாராது வந்த தேவன் விண்ணிலிருந்து வந்தான் காண்; வந்ததுபோல் போயினான் காண்", என்று எங்கோ எப்போதோ புதுமைப் பித்தன் எழுதியதுபோல இராணுவம் அந்தத் தீவை விட்டு நீங்கிச் சென்றது.

ஜான் ·ப்ரம் தேவன் மீண்டும் வருவார் என்று பழங்குடியினர் முழுமையாக நம்பினர்.அதன் பின்னர் தோன்றிய இரண்டு தலைமுறைகளில் அவர்களின் அந்த நம்பிக்கை மேலும் ஆழமாகியது.ஜான் ·ப்ரமைக் கடவுளாகவே கருத ஆரம்பித்துவிட்டார்கள். 

ஒவ்வொருஆண்டும் திருவிழாக்களைக் கொண்டாடினர். அப்போது விமானத்தைப் போன்றும் கப்பலைப் போன்றும் மூங்கிலாலும் இலை தழைகளாலும் செய்து வைத்துக் கொண்டு பூஜை செய்து சாமியாடுவார்கள். ஜான் ·ப்ரம் மீண்டும் வரும்போது மலைகளெல்லாம் இடிந்து, பொடிப்பொடியாகி நதிகளில் வீழ்ந்துவிடுமாம். நிலமெல்லாம் பசுமையாகிவிடுமாம். மக்களெல்லாம் சுபிட்சமாகயிருப்பார்களாம். இப்படியாக அந்தப் பழங்குடி மக்கள் நம்பி வருகின்றனர்.

இவ்வாறு  வேறு சில இடங்களிலும் நடந்திருக்கிறது. பாப்புவா/நியூ கினீ தீவின் சில  ஆதிவாசிகளிடையேயும் இதே போன்ற காரணங்களால் இதே போன்ற நம்பிக்கைகளும் வழிபாடுகளும் காணப்படுகின்றன. இந்த மாதிரியான நம்பிக்கை/வழிபாட்டை "Cargo Cults" என்று கூறுவார்கள். ஜான் ·ப்ரமின் புகைப்படத்தை அந்தத் தீவின் ஆதிவாசிகள் பயபக்தியுடனும் அன்புடனும் பார்த்துக்கொண்டிருப்பதை மேலே காணும் படம் காட்டுகிறது.'கார்கோ கல்ட்' பற்றிய சித்தாந்தம் ஒன்று இருக்கிறது.

இவற்றின் அடிப்படையில் நம் சிந்தனையைத் திருப்பிப்பார்க்க வேண்டும்.நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கிற சில வர்ணனைகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது நமக்கே பல விஷயங்களை "ஏன் அப்படியெல்லாம் இருக்க கூடாது?" என்று ஆய்ந்து பார்க்கத்தோன்றும்.

நன்றி. டாக்டர். ஜெய பாரதி 

ரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்டுரை

| Nov 28, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நல்ல படியாக சென்ற வாரம் கடந்தது. உங்களில் நிறைய பேர் அண்ணாமலை வந்து இருந்தீர்கள் என நினைக்கிறேன். ஒரு சிலரை தவிர , மற்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மன்னிக்கவும். இறைவனை நம்பி வந்தவர்களை விட, ஒரு குறுகுறுப்பில் வந்தவர்களும் இருந்ததை அவர்கள் பேசிக் கொண்டு இருந்தபோது கவனிக்க முடிந்தது. இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தியும் கேள்விப் பட்டேன். அது தவிர  அரசியல் கூத்தும் நடந்து இருக்கிறது. அதை பகிர்ந்து கொள்தல் நாகரீகமாகாது. மிகப் பெரும் ரகசியமான இந்த நிகழ்வை, பட்டவர்த்தனமாக வெளியிட்டது தவறோ என்று கூட எண்ணுகிறேன். இந்த நாளை , சரியாக கணித்து , நம் வாசகர்கள் நீங்களே இனிமேல் வந்து கொள்தல் நலம் என நினைக்கிறேன். மிக நெருக்கமான, தகுதியான சுற்றம், நட்புக்கு மட்டும் தெரியப் படுத்தினால் போதும் என்பது என் கருத்து.

 மற்றபடி அருமையான அனுபவம். கூட்டத்தை எதிர் பார்த்து , முதல் நாளே சென்று விட்டதால் , காலையில் அண்ணாமலையாரின் அபிசேகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன். மொத்தத்தில் அங்கு இருந்த இரண்டு தினங்களும் ,  இன்னும் நிறைய சிந்தனைகளை தூண்டி விட்ட ஒரு இனிய ஆன்மீக அனுபவமாக இருந்தது. அடுத்து வரும் கட்டுரைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதை காண்போம். 

இன்று நாம் பார்க்க விருப்பது , கொஞ்சம் பழைய கட்டுரை. விஜய் டிவி யிலும், ஜு.வியிலும் - வந்த மகா அவதார் பாபா கட்டுரைகளை பற்றி. இதை நீங்கள் ஏற்கனவே படித்தும் இருக்கலாம். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பாபாவை பற்றி இன்னும் பல அரிய தகவல்கள் , அடுத்து வரும் கட்டுரைகளில்.....

ரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்டுரை :
அடிக்கடி இமயமலைக்குப் போறீங்களே… அது ஏன்? சந்தோஷம், நிம்மதி எதுவும் இங்க இல்லையா? அதுக்கு இமயமலைக்குதான் போகணுமா?
இந்தக் கேள்வி  நிஜத்திலும் பலர் ரஜினியைப் பார்த்துக் கேட்பதுதான்.

அதற்கு ரஜினி அளிக்கும் பதில்: “நிரந்தரமான நிம்மதியை உணர இமயமலைக்குப் போகணும். அந்த உணர்வை, வைப்ரேஷனை சொல்லிப் புரிய வைக்க முடியாது… போய் அனுபவிச்சிதான் தெரிஞ்சிக்கணும்…”
இதோ அந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
ரஜினி இமயமலைக்கு ஏன் போகிறார்… எப்படிப் போகிறார்… அந்த பயணத்தின் தன்மை என்ன? இறுதியாக அந்தப் பயணத்தில் கிடைப்பதென்ன?

ஜூனியர் விகடனில் வெளியான ஒரு பழைய கட்டுரை , நம் வாசகர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு , இங்கே பகிரப்படுகிறது.

சினிமாவில் மட்டுமல்ல… செய்திகளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!
காரமாக ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லி, தமிழ்நாட்டை வாரக் கணக்கில் கிடுகிடுக்க வைப்பார். தமிழ்நாடே அவரைத் தேடிக் கொண்டிருக்கும்போது, மோனத் தவம் இருப்பார்! தன் அரசியல் ஆர்வம் பற்றி நிலையான ஒரு புதிரை உருவாக்கி வைத்திருந்தாலும், தன்னுடைய ஆன்மிக ஆர்வம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகத்தையும் ரஜினி வைத்ததில்லை!

சினிமா, பணம், புகழ் என பல சிகரங்களைத் தொட்டுப் பார்த்தபோதும் அவருக்கான தேடல் என்னவோ இமயமலை சிகரங்களில்தான்!
பல வருடங்களாகப் பனிமலைக்குப் பயணப்பட்டு அவர் தேடுவது எதை என்ற ரகசியத்தை ஓரளவு உடைத்தது ‘பாபா’ திரைப்படம்தான். யோகக் கலை களில் இறைவனைத் தேடலாம் என்ற தத்துவம் சொன்னார் மஹா அவதார் பாபா! அந்த மகானை, தமிழக சாமானியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ரஜினிதான். கிரியா யோகா முத்திரையை தமிழனுக்குக் காட்டியதும் அவர்தான். இமயமலை முகடுகளில் – அதுவும் இறைவனை பாபா கண்டுகொண்ட அதே குகையில் ரஜினி காணும் ஏகாந்தம் என்னவாக இருக்கும்?p42

இந்தத் தேடல்தான் நம்மை இமயமலை நோக்கிப் பயணிக்க வைத்தது.
ரஜினி பயணித்த அதே ரூட்டில் நாமும் பயணித்தோம். ‘விஜய் டி.வி.’ குழுவி னரும் நாமும் இணைந்த தேடல் இந்தப் பயணம்!

பயண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்கும்போதே நாம் ரஜினியின் நண்பர் நாகராஜன் ராஜாவிடம் கொஞ்சம் பேசிவிட்டுக் கிளம்பலாமா..?

”என்னோட அப்பா பெரிய வியாபார சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி வெச்சிருந்தார். அதையும் பார்க்க ஆரம்பிச்சு, சினிமா விநியோக வியாபாரத்தையும் பார்த்துக்கிட்டிருந்தேன். மூச்சு விடக்கூட நேரமில்லாத நேரத்துல அகஸ்தியர் மலைக்குப் போனேன். அங்க இருக்கற அருவியில் குளிச்சிட்டிருந்தப்போ அகத்திய முனிவர் எனக்குக் காட்சியளித்தார். இதை வெளியில சொன்னா உலகம் நம்பாது! ஆனா, எனக்குள்ள ஏதோ ஒரு சக்தி புகுந்துட்டது மட்டும் நல்லாத் தெரிஞ்சது.

இதை இசைஞானி இளையராஜாகிட்ட மட்டும் சொன்னேன். ‘நீ கொடுத்து வெச்சவன்யா… அது பெரும் பாக்கியம். ஆன்மிகத்தைப் பத்தி உன் அபிப்ராயம் என்னய்யா?’ன்னு அவர் கேட்டார்.

இளையராஜாவோட கேள்வி என்னை சிந்திக்க வெச்சது. வியாபாரத்தை அப்படியே விட்டுட்டு அமைதியைத் தேட ஆரம்பிச்சேன். இந்த சமயத்துலதான் பாபா பத்தின விவரங்களை ரஜினி சார் எனக்கு சொன் னார்.
அந்த ஆச்சர்யத்துல என் ஆசை, இமயமலை நோக்கிப் பயணிக்க வெச்சது. ரஜினியோட நண்பர் ஹரி மூலமா என்னோட இமயமலைப் பயணம் அமைஞ்சது. பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செஞ்சிட்டிருந்தப்போ பாபாவோட உருவம் எனக்குத் தெரிஞ்சது!

கிட்டத்தட்ட பாபாவை, ரஜினி வர்ணிச்ச அதே காட்சிகள். அந்த வைபரேஷன் கிடைச்சதும் அங்கிருந்தே ரஜினிக்குப் பேசினேன். அவரும், ‘குட்! உனக்கும் அந்த பாக்கியம் அமைஞ்சுதா?’னு வியந்து போனார்.
p44c
பாபா தரிசனத்துக்கும், பாபா குகைக்கும் நினைச்ச மாத்திரத்துல போயிட வாய்க்காது. சொத்துபத்து இருந் தாலும் சமுதாயத்துல ஓஹோ என்று இருந்தாலும் பாபா அனுக்ரஹம் இருந்தா மட்டும்தான் அந்தக் குகைக்குப் போக முடியும். அந்த அனுக்ரஹத்தை பாபா எனக்கும் வழங்கினார். நான் ஆன்மிக குருவா ரஜினியை ஏத்துக் கிட்டேன். குகைக்குப் போறது ரொம்ப சிரமமான காரியம். எதன் மீதும் பற்றில்லாமல் பயத்தை ஒதுக்கி வெச்சுட்டுத்தான் போகணும்..!” என்று நெகிழ்ச்சியுடன் நாகராஜன்ராஜா பரவசமாக சொல்லிக்கொண்டே போனார்.

இதோ, தொடங்குகிறது முதல் கட்டப் பயணம் டெல்லியை நோக்கி…
டெல்லியிலிருந்து சாலை மார்க்கமாக இமயமலை நோக்கிய நமது பயணம் ஆரம்பமானது. கான்பூர் வழியாக இமயமலையை நோக்கி நாம் பயணித்த தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகத்தான் இருந்தது. 20 கிலோ மீட்டர்களுக்கு ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது. ஆனால், அத்தனை பாலங்களிலும் கால்வாசிப் பணியே முடிவடைந்திருந்தது. மத்திய – மாநில அரசுகளுக்குள் சுமுக உறவில்லை என்று வழியில் எதிர்ப்பட்டவர்கள் காரணம் சொன்னார்கள்.p44b
அந்த சாலையில் பயணித்த டிஸைனில் வாகனங் களை வேறு எங்குமே பார்க்க முடியாது! லோக்கலில் பம்ப்செட் மோட்டார்களைக் கொண்டு கையில் கிடைத்த உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள். அதில் ஓர் ஊரே குவியலாக அம்மிக் கொண்டு பயணம் செய்தது!

கொஞ்சம் அடர்த்தியான மரங்கள் தென்படத் துவங்க… பயணத்தில் சூழத் தொடங்கியது பசுமை. நம்மை வரவேற்றது ஹரித்துவார். விண்ணை முட்டும் சிவன் சிலை ஹரியின் வாசலாக (துவார்!) வரவேற்றது. சிவனை சுற்றி கங்கை ஏகாண்டமாக, அழுக்காக ஓடிக் கொண்டிருந்தது. ஹரித்துவாரில் எங்கிருந்து நோக்கினாலும் சிவனை தவிர்க்க முடியவில்லை. தென்னிந்திய ஸ்தபதியான ஸ்ரீதர்தான் அச்சிலையை வடிவமைத்தவர்.

இங்கிருந்து சில மைல்களில் வருவது ரிஷிகேஷ்!

இமயமலையின் அடிவாரம் என்று சொல்லலாம். எங்கு திரும்பினும் பச்சைப் போர்வை போர்த்தி, இமயம் தனது கம்பீரத்துக்கு டிரெய்லர் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது. ரிஷிகேஷ் தேசாந்திரிகளின் தேசம். இதன் ஒவ்வொரு தெருவுக்கும் சரித்திரப் பின்னணி உண்டு. சந்நியாசிகள் காவியில் தங்கள் சொந்த வாழ்க்கையை மூழ்கடித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை நெருங்கி முகத்தை உற்று நோக்கினால் ஒவ்வொருவரின் முகத்திலும் புதிய தேடலோடு சேர்ந்து பழைய குடும்ப வாழ்க்கையின் பதிவுகளும் மிச்சமிருப்பதைக் காண முடியும்.

வீதிக்கு இரண்டு அல்லது மூன்று அன்னதான சத்திரங்கள்… காலை – மாலை – இரவுகளில் அங்கு தயாராகும் உணவுக்காக சந்நியாசிகளைத் தேடிப் போக, சத்திரங்களிலேயே வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் வெறுங்கையான காவித் துறவிகளே தென்பட்டாலும் பொங்கி வைத்த சோற்றைத் திங்க சொற்பமாகவே வந்து போகிறார்கள். வேத கோஷத்துடன் ஒரு கூட்டம் கங்கை நதிக் கரையில்!

இங்கே பிரவாக மெடுத்து, பால் போல் பெருகுகிறது கங்கை. அங்கே பார்த்ததை வார்த்தைகளில் விவரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இனம் புரியாத இருட்டு தேசமான ரிஷிகேஷில் சந்நியாசிகளுக்கு அடுத்து அதிகம் வந்து போவது வெளிநாட்டினர்தான். ஏதோ ஒரு வீதியில் எந்த ஈகோவும் இல்லாமல் தரையில் உட்கார்ந்து வானத்தை நோக்கி முணுமுணுத்தபடி இருக்கிறார்கள் இந்த வெளிநாட்டு ஆன்மிக விருந்தினர்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷில்தான் சூடானபொங்கலும், ஆவி பறந்த இட்லியும் பார்க்க முடிந்தது. ரஜினி இங்கே வரும்போதெல்லாம் தங்குவது தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமக் கிளையில்தான். ஆஸ்ரமத்தின் பின்பக்கப் படிகள் நேராகப் போய் முடிவதே கங்கை நதியில்தான். அங்கே பக்தர்கள் கங்கையை லயித்தபடியே தங்கியிருக்க, அழகாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளன அறைகள்.

p44a
”ரஜினி இங்கே தங்குகையில் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஆழ்ந்து, அகன்று ஓடும் நதிப் பெருக்கையே மணிக் கணக்கில் உற்றுப் பார்த்திருப்பார்…” என்று சொல்லும் ஆஸ்ரமத்தின் இளம்துறவி குகாத்மானந்தா தொடர்ந்து,
”கங்கையை ரஜினி பார்க்கத் துவங்குகிற ஒரு சில நிமிடங்கள் வரைதான் அவரிடம் அசைவு இருக்கும். அதுக்கப்புறம் அப்படியே பல மணி நேரம் இருப்பாரு. உதாரணத்துக்கு, நின்னுக்கிட்டுப் பார்த்தார்னா நின்னபடியேதான் இருப்பாரு. உட்கார்ந்து இருந்தால் எழுந்திருக்கவே மாட்டாரு. தன்னோட அறைக்கு போனாலும் அங்கே தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேணாம்னு சொல்லி கண்மூடி தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாரு. அவராக வந்து பேசினாத்தான் உண்டு. அமைதியைத் தேடி வர்ற பலரில்… அதை சரியா கண்டுபிடிக்கிற அபூர்வமான மிகச் சிலரில் உங்க ரஜினியும் ஒருத்தர்!” என்றார்.ganga-haridwar
ரஜினிக்கு ஆஸ்ரமத்தில் உதவியாக இருப்பவர் சுப்பிரமணியம். இவரது சொந்த மாநிலம் கேரளா. பல வருடங்களுக்கு முன்பு இந்த ஆஸ்ரமத்துக்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார். இப்போது நிறைய பாஷைகள் இவருக்கு அத்துப்படி. ரஜினி இவரிடம் தமிழில், இந்தியில்…. அல்லது மராத்தியில் பேசுவாராம்.
”ஒரே ஒரு துணிப்பை மட்டும்தான் கொண்டு வருவாரு. அதுல பழைய சட்டை ரெண்டு, லேசா தையல் விட்ட பனியன் ரெண்டு, ஒரு தொப்பி, ரெண்டு மூணு கறுப்புக் கண்ணாடி இருக்கும். ஆஸ்ரமத்துல என்ன சாப்பாடு இருக்கோ அதைத்தான் சாப்பிடுவாரு. கொண்டு வந்த சட்டை பனியன்களையே மாறி மாறி போட்டுக்கிட்டு ரிஷிகேஷ் வீதிகள்லயும் நடமாடுவாரு. டீக்கடைகள்ல நின்னு டீ குடிப்பாரு. ஒரு தடவை அவரை ஜனங்க கண்டுபிடிச்சு சூழ்ந்துட்டாங்க. ஆனா துளிகூட டென்ஷன் இல்லாம லாகவமா சமாளிச்சு அவங்ககிட்ட இருந்து தனியா போயி கங்கைக் கரையோரம் நடக்க ஆரம்பிச்சுட்டார்!” என்கிறார் சுப்பிரமணியம்.

ரிஷிகேஷிலிருந்து மேற்கே நம் பயணம் தொடர்கிறது. செங்குத்தாக இமயம் ஓங்கி உயர்ந்து தன் பிரமாண்டத்தைக் காட்டுகிறது. கைநீட்டி நம்மை அழைக்கிறது. அதில் அழகுடன் நிறைய நிறைய ஆபத்தும் காத்திருக்கிறது. மெள்ளவே முன்னேறினோம். ஜப்பான் சாமியார், சஞ்சீவி மலை, பாபாஜி குகை, ரஜினியின் மின்சாரக் கணங்கள் என்று அடுத்தடுத்து ஆச்சர்யங்கள் அங்கே காத்திருக்கின்றன…


ரிஷிகேஷில் இருந்து இமயமலையில் பகல் நேரம் ஏறிச் செல்வதுதான் பாதுகாப்பு’ என்று ரஜினி யின் நண்பர் ஹரி சொல்லிக்கொண்டேதான் இருந்தார். ஆனால், ரிஷிகேஷின் அழகில் மயங்கிப்போய் அதிலி ருந்து மீள இரவாகிவிட்டது. போகவேண்டிய தூரம் அதிகமிருந்ததால், அசட்டு தைரியத்தில் இரவிலேயே நம் வண்டி இமயமலையில் ஏறத் துவங்கிவிட்டது.
p43வளைந்து நெளிந்து நம் வாகனத்தை வழி நடத்திக்கொண்டிருந்த அந்த சாலையில், எதிர் பக்கத்திலிருந்து வாகனங்களே வரவில்லை. அவசரம் மற்றும் கட்டாயத்தின் அடிப்படையில்தான் இந்த சாலைகளில் இரவு நேரப் பயணம் இருக்குமாம். இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்ட போதுதான் இந்தி நடிகை மந்திரா பேடியின் அம்மா புரோத்திமா பேடி நிலச்சரிவில் சிக்கி அண்மையில் இறந்தார் என்பதை, எங்கள் வண்டிக்குள்ளிருந்த யாரோ மெதுவாகச் சொல்ல… ஜிலீரிட்டது முதுகுத்தண்டு! அந்த கும்மிருட்டில் நம் வாகனம் துப்பிய வெளிச்சம் மட்டுமே வளைந்தோடிய ரோட்டைக் காட்டியது!
திடீரென்று பார்த்தால்… ரோட்டை அடைத்துக் கொண்டு ஒரு பாறாங்கல். உருண்டுவந்த ஜோரில் அது சின்னதும் பெரிசுமான இன்னும் பல கற்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்க… அந்த மலைப்பாதை மூடிக்கிடந்தது. பயணக்குழுவினர் அனைவரின் முதுகுத்தண்டும் சில்லிட்டது. இரவை அந்த இடத்திலேயே கழித்தோம். காலையில் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் வரத் துவங்கவும், ஆட்கள் வந்து பாறாங்கற்களை அகற்றி வழி ஏற்படுத்தினார்கள்.
பகல் பயணம் வேறு மாதிரி சவால்! பல இடங்களில் வாகனத்தைக் கொஞ்சம் வேகமாகச் செலுத்தினாலும், அதிர்வில் அது லேசாகக் குதித்து சாலையோரத்துக்கு வந்தது. எட்டிப் பார்த்தால் கிடுகிடு பள்ளம். உயிர் மேல் பயம் வர, இறங்கி நடந்தோம். ஆளில்லா வாகனத்தை ஊர்ந்து ஊர்ந்து ஓட்டிப் பின்தொடர்ந்தார் டிரைவர்!
இதோ வந்துவிட்டது ருத்ரப் பிரயாகை! ‘ஓவென’ கங்கை ரவுத்திரம் கொப்பளிக்கப் பாய்கிறது இங்கே! சின்னச் சின்னதாக பல நதிகள் இந்த இடத்திலேயே வந்து கங்கையோடு கைகோத்துக் கொள்ளத் தொடங்கி விடுகின்றன. நிமிர்ந்து பார்த்தால் நூறு, இருநூறு அல்ல… ஆயிரக் கணக்கில் மலைக்குன்றுகள், மதம்கொண்ட யானைகளாகத் திமிறிக் கொண்டிருந்தன. இமயத்தில் இப்படி லட்சத்துக்கும் அதிகமான மலைக்குன்றுகள் உண்டாம்! இயற்கையின் கம்பீரத்தை பயபக்தியோடு ரசித்துக்கொண்டே சென்ற நம்மை அடுத்து அழைத்தது கர்ணப் பிரயாகை! கங்கைக் கரையை ஒட்டியே ஓங்கி நிற்கிறது ஒரு நடுத்தர ஹோட்டல். இங்கு ரஜினி வரும்போதெல்லாம் அறை எடுத்துத் தங்குகிறார். மிடில் க்ளாஸ் மனிதர்கள் வாசம் செய்யும் சர்வசாதரண ரூம்கள்தான் இங்கே.
என்னதான் இயற்கையோடும், ஆன்மிகத் தேடலிலும் ரஜினி ஒன்றி விட்டாலும், அவரை இங்கும்கூட புகழ்வெளிச்சம் விட்டபாடில்லை! இங்கும் ரஜினியை அடையாளம் கண்டு நூற்றுக்கணக்கானவர்கள் சூழ்ந்துவிடுவார்களாம். இந்த ஹோட்டலுக்குப் பெயரெல்லாம் இல்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் ஒரு சூப்பர் துறவியாக இங்கே வந்து போவதாலேயே உள்ளூரில் இதற்கு ‘ரஜினி தாபா’ என்று பெயர் வந்துவிட்டது. மலைசஞ்சாரத்தின்போது இங்குதான் ரஜினி வயிறார சாப்பிடுவார். சப்பாத்திக்கு மாவை பிசைபவரில் துவங்கி, கல்லாவில் கணக்குப் பார்ப்பவர் வரை ரஜினியோடு பல விஷயங்களும் ஜாலியாகக் கதைப்பார்களாம் இங்கே.
ரஜினி வந்து விட்டால் அவரோடு எல்லோருமே ஒரே பந்தியில் அமர்ந்து பசியாறுவார்களாம். அவர் தங்கும் அறைக் கதவைத் திறந்தால், கங்கை சூப்பர் ஸ்பீடில் புகை கிளப்பிக்கொண்டு பாய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் கரையில் ஒரு சிவன் கோயில். அதற்கு எதிர்க் கரையோரம் பிணங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பாதி எரிந்த நிலையில் மனிதனின் கருகிய மிச்சங்களை கங்கைத் தாய் தன் சுழல்கரம் நீட்டி தன்னுள் வாங்கிக் கொள்கிறாள்!
p42a
மழைத் தூறல், பனி மூட்டம் என இமயம் நிமிடத்துக் கொரு ஜாலம் காட்டிக் கொண்டிருக்க… கர்ணப் பிரயாகையைத் தாண்டி ஆதிபத்ரி அடைந்தோம்! ‘இதுதான் பழைய பத்ரிநாத்’ என்பவர்களும் உண்டு. இமயத்தில் ஆதிபத்ரி என்பது நம்மூர் விழுப்புரம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள்போல. இங்கிருந்து மிக முக்கியமான யாத்திரை ஸ்தலங்களுக்கு சாலைகள் பிரிகின்றன. வந்த சாலையிலேயே ஆதிபத்ரியைத் தாண்டி நேராகப் போனால் பத்ரிநாத், வலது பக்கம் போனால் அமர்நாத், வைஷ்ணவிதேவி கோயில், கைலாசம், மானஸரோவர் போகலாம்.
நாம் பயணித்தது – ஆதிபத்ரியில் இருந்து இடது பக்கம் திரும்பி! எதிரில் கூப்பிடு தொலைவில் வருபவரைக் காண முடியாத பனிமூட்டம். அதன் அடர்த்தியும் குளிர்ச்சியும் சொல்லவோ, எழுதவோ முடியாத பிரமிப்பின் உச்சம்!
p42c”ராணிகேட் வந்தாச்சு…” என்றும், ”இதுதான் துரோணகிரி” என்றும் சொல்லிச் சொல்லி அடுத்த பாயின்ட்களைக் கடந்தது நம் குழு. ”துரோணகிரிதான் இலங்கை யுத்தத்தின்போது அனுமன் சுமந்து சென்ற சஞ்சீவி மலை!” என்று அண்மையில் சில ஆய்வுகள் கூறுவதாக விளக்கினார், ரஜினியின் நண்பர் ஹரி. இந்தப் பாதையில் ஊர்ந்து செல்வதற்காகவே ஒரு ஜீப்! அதில் ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்டிருப்பது போன்ற ஹாரன்! இந்த ஒலியில்தான் காட்டு விலங்குகள் விலகி ஜீப்புக்கு வழிவிடும் என்பது அந்த டிரைவர் கம் ஓனரின் நம்பிக்கை. ஜீப் பயணம், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் நடந்தது. சேரவேண்டிய இடத்தை உயிரோடு அடைந்த பின்பு பயணக் குழுவினர் அனைவருமே அந்த டிரைவருக்கு உலகின் மிகச் சிறந்த ஓட்டுநர் என்ற பட்டத்தை, நீண்ட பெருமூச்சோடு வழங்கினோம்..

p42bஅந்தப் பிரதேசம் எங்கும் கஞ்சா செடிகள் கேட்பாரின்றி தலையாட்டிக் கொண்டிருந்தன. எங்கும் சுத்தமான ஆக்சிஜன். அதை சுவாசித்தபடியே பாபாவின் குகை நோக்கி நடக்கத் துவங்கினோம். சுமார் நான்கு மணி நேரம் ஆபத்தான மலைப்பாதையில் செங்குத்தாக ஏறவேண்டும். ‘பாபா குகை போகும் வழி’ என்று சின்னச் சின்ன அறிவிப்புகள் புதர்களுக்குள் மறைந்திருக்கின்றன. ஓர் இடத்தில் சின்னதாக அருவி. அது தண்ணீராகக் கொட்டும் ஐஸ்கட்டி! அந்தச் சிற்றருவியில் தலைகொடுத்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் எந்த சலனமும் இல்லாமல் ரஜினி உட்கார்ந்திருப்பார் என்று ஹரி சொன்னார். ”நாமளும் குளிக்கலாம். இந்த ஒரு குளியல் ஒரு வருஷத்துக்கு உங்ககிட்ட எந்த நோயையும் அண்ட விடாது… வர்றீங்களா?” என்று ஹரி முதல் ஆளாக நடக்கத் துவங்கிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து நாமும், ‘விஜய் டி.வி.’ குழுவினரும் போனோம். அருவியில் தலை மீது ஐஸ் மழை இறங்கி, உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ச்சுகிறது. உடம்பெல்லாம் நனைந்தவுடன் பார்த்தால், ஆவி பறக்காத குறையாக உடம்பு சூடாவது ஒரு அதிசயம். அந்தச் சூட்டோடு அனுபவித்துவிட்டு வெளியே வந்தால் சிலுசிலு  வென்ற ஈரம் தோய்ந்த பனி மீண்டும் நம்மைத் தாலாட்டுகிறது. பாபா குகையைப் பராமரிக்கும் ‘யோகதா சத்சங்க’த்தினர் பொதுவில் இந்த இடம் வரையில் யாரையும் அனுமதிப்பதில்லை. யோகக் கலை மீதான ஆர்வம் கொண்டவர்களா என்று இந்த சங்கத்தினர் சில கேள்விகள் கேட்டு திருப்தியான பிறகே அனுமதிக்கிறார்கள். கைத்தடிகள் இல்லாமல் ஒரு அடிகூட முன்னேற முடியாது.
p421
நம்மிடம் இருந்த லக்கேஜ்களை சுமக்க வன வேடர்கள் உதவிக்கு வந்தார்கள். இவர்கள் எல்லோருமே சாட்சாத் ரஜினியின் நண்பர்கள்! ஹரியின் தலையைப் பார்த்ததுமே, ‘ஓ ரஜினிக்குத் தெரிந்தவர்களா……’ என்று உரிமையோடு வந்து உதவினார்கள்.
‘சாரோட அடுத்த படம் ரிலீஸ் ஆயிடுச்சா?’ என்று ஒருவர் கேட்க… அதற்கு பதிலாக, ‘இன்னும் வந்திருக்காது. வந்திருந்தா… சார், நம்மகூட இங்கல்லவா இருப்பார்…’ என்றார் இன்னொருத்தர். ஆம், இவர்களுக்கும் ரஜினி பட ரிலீஸ் முக்கியம்தான். காரணம், படம் ரிலீஸ் ஆகும் சமயம், இங்கே , ரஜினியே நேரடி ரிலீஸ் அல்லவா!
சட்டென்று நின்று விடுகிறார் ஹரி. அவர் உடல் லேசாக சிலிர்க்கிறது. கைநீட்டிக் காட்டுகிறார். கண்ணெதிரில் ஒரு குகை தெரியத் துவங்குகிறது. இமயத்தின் ஒரு சிகரத்தின் உச்சியில் நடுநாயக மாக இருக்கிறது அந்த குகை. அதற்குப் பின்னால் இருக்கிறது மற்றொரு சிறிய குகை. அதுதான் பாபாவின் மந்திர குகை!
கஷ்டப்பட்டு ஒருவர் ஊர்ந்து செல்லும்படி 23 அடிக்கு துவாரம்… இதைக் கடந்தால் உள்ளே சின்னதாக மண்டபம். ‘இங்குதான் காலங்களைக் கடந்த பாபா யோகத்தில் ஆழ்ந் திருக்கிறார். இந்த குகைக்குள்தான் ரஜினியும் சென்று வருகிறார். ”உள்ளே சென்றால் ‘விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்’ என்ற பரவச நிலைதான்!” என்று ஹரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வன வேடர்கள் புலி மாதிரி ஒலி எழுப்பினார்கள். புரியாமல் நாம் பார்க்க…”எப்போதாவது மட்டுமே மனிதர்கள் சஞ்சாரம் செய்யும் இடமில்லையா… பல சமயம் குகையினுள் புலி இருக்கும். ஓசை எழுப்பினால் உள்ளிருந்து அதுவாக வெளியேறி எதிரே இருக்கும் பள்ளத்தாக்கில் குதித்து ஓடிவிடும்…” என்றார்கள்.
ரஜினி வந்த பல சந்தர்ப்பங்களில் இப்படி பலவிதமாக நடக்குமாம். ஒருமுறை கண்ணெதிரில் புலி வெளியேறி ஓடிப்போனபின்தான் ரஜினி உள்ளே போனதாக வன வேடர்கள் சொன்னார்கள்.
p44b1இந்த குகையைப் பராமரிக்கும் யோகதா சத்சங்கத்துக்கு சென்றோம். துரோணகிரியில் ஒரு சிகரத்தின் முகட்டில் இருக்கிறது ஆஸ்ரமம். அதன் வாசலில் 20 அடியில் சாலை, அதைக் கடந்து பிரமாண்ட பள்ளத்தாக்கு… எட்டிப்பார்த்தால், பைன் மரங்களின் உச்சிகள் மட்டுமே கண்ணுக்குத் p44a1தெரிகின்றன. இதை நிர்வகிக்கும் ‘ஜப்பான் சாமியார்’ நிர்மலானந்தாவை சந்தித்தோம். அவருக்கு 86 வயது என்பதை நம்ப முடியவில்லை. 35 வருடங்களுக்கு முன்பு அவர் இங்கு வந்திருக்கிறார். அதன் பின் யோகக் கலையில் இறைவனைத் தேடும் பணியில் இங்கேயே தங்கிவிட்டார். ”ரஜினி இங்கே வருவார். யோகக் கலைகள் பற்றி திரும்பத் திரும்ப கேட்டுத் தெரிந்து கொள்வார்.” என்றவர், யோகக் கலை பற்றி சிம்பிளாக ஒரு வகுப்பும் எடுத்தார் நம் குழுவுக்கு.
”இந்தக் குகைக்குள் உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை அப்படியே மனதுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் பகிர்ந்து கொள்ளக்கூடியதல்ல, இந்த வைபரேஷன். அதேசமயம், ரஜினி உள்பட அடிக்கடி இங்கே வருபவர்களுக்கு ஏற்படும் ஒருசில அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளக் கூடியவை. மலையிலிருந்து இறங்கியதும் அதுபற்றிப் பேசலாம்…” என்றார் ஹரி. உயிரைப் பணயம் வைத்து, இயற்கையின் எல்லையில்லாத பரவசத்தையும் அனுபவித்து வந்த நாம், குகையிடமிருந்து விடைபெற்று திரும்பத் துவங்கினோம்.
மலை ஏறும்போது பயணக் குழுவினருக்குள் எழுந்த கலகலப்பான பேச்சு இப்போது இல்லை. எல்லோரிடமும் ஏதோ ஒரு மௌனம். சமவெளிக்கு மீண்டும்வந்தடைந்து, உத்தரப் பிரதேசத்தின் புழுதியையும் வெயிலையும் தொட்டதும், மெதுவாக ஒவ்வொருத்தரின் செல்போனும் சிணுங்கத் தொடங்க… அப்போதுதான் மாமூல் மனிதர்களானோம்.
சென்ற இடமும், அங்கே எழுந்த கேள்விகளும் நமக்குள் சுழன்று கொண்டே இருந்தன.
நன்றி: ஜூனியர் விகடன்

மகான்களின் அற்புதம் : குகை நமசிவாயர்

| Nov 19, 2011

 

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் - அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பது மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமசிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம்.
மாபெரும் சித்த புருஷரான குகை நமச்சிவாயர் அருணகிரிநாதருக்கும் முற்பட்டவர் என்று கூறப்படுகிறது. குகை நமசிவாயரின் வாரிசுதாரர்கள் தற்போது இந்த ஜீவ சமாதி ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். சைலத்தில் இருந்து தெற்கே வந்த கன்னட தேசத்து வீர சைவ மரபைச் சேர்ந்தவர் குகை நமசிவாயர். கன்னட தேசத்தில் திருப்பருப்பதம் (தற்போதைய ஸ்ரீசைலம்) என்கிற புண்ணிய க்ஷேத்திரத்தில் அவதரித்தார் நமசிவாயர்

தாய்மொழி - கன்னடம். லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள். ஆண், பெண் என்று லிங்காயத்து பிரிவில் உள்ள அனைவருமே கழுத்தில் சைவச் சின்னமான லிங்கத்தை ஒரு கயிற்றில் கோர்த்து அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்குத்தான் முதல் வழிபாடு நடத்துவார்கள். நமசிவாயர் பக்திப் பாரம்பரியத்துடன் வளர்ந்தார். இவர் குழந்தையாக இருக்கும் காலத்தில் இருந்தே ஈசன் ஆட்கொண்டு விட்டார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். உரிய பருவம் வரும்போது திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஞான குருவாக நீ விளங்குவதற்கு இங்கேயே தங்கி இருத்தல் கூடாது. உடனே திருவண்ணாமலை புறப்படு. தாமதிக்காதே என்று ஒரு நாள் நமசிவாயரின் கனவில் தோன்றி அவருக்கு உத்தரவிட்டார் அண்ணாமலையார். கனவில் இருந்து விழித்தெழுந்தார். ஆனந்தம் கொண்டார். தன்னை வழிநடத்தும் ஈசனை வணங்கினார். திருவண்ணாமலை க்ஷேத்திரத்தைத் தான் தரிசிக்கும் நாள் எந்நாளோ என்று ஆவலுடன் இருந்தார்.

ஈசன் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அடுத்த நாளே திருவண்ணாமலை நோக்கித் தன் யாத்திரையைத் தொடங்கினார் நமசிவாயர்.  ( அந்த காலத்தில யாத்திரை செல்வது ரொம்ப கடினமான வேலை. இந்த காலத்தில நமக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தாலும், நம்மில் எத்தனை பேர் இன்னும் அண்ணாமலை செல்லாமல் இருக்கிறோம், பாருங்கள்... ரொம்ப நாளா போகணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கிற எவ்வளவு ஆலயங்கள் , நம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது ? )

சிவனருள் பெற்ற இந்த சீலரின் மகத்துவம் புரிந்த சில அடியார்களும், திருவண்ணாமலை என்கிற சித்தர் பூமியில் தவம் இருந்து சிவன் அருள் பெறுவோம் என்கிற வைராக்கியத்துடன் நமசிவாயரைத் தொடர்ந்து சென்றனர். பல கிராமங்களைக் கடந்து பயணித்த அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். நமசிவாயரின் சித்து திறமைகளை வெளிக்கொணர ஈசன் விரும்பினான் போலும். அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முகப்பில் வாழைமரம், தோரணம் கட்டப்பட்டு மங்கலகரமாக இருந்தது.

நமசிவாயருடன் சென்ற அடியார்கள் ஆர்வத்துடன் விசாரித்தபோது அந்த வீட்டில் திருமணம் அப்போதுதான் முடிந்ததாகத் தகவல் சொன்னார்கள். முகம் நிறைய தேஜஸோடு, நெற்றியிலும் உடலிலும் திருநீறு பூசிக் கொண்டு, சிவப் பழமாக ஒரு தவசீலர் தன் அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார் என்கிற தகவலை அறிந்த திருமண வீட்டுக்குச் சொந்தக்காரர், வீதிக்கு வந்து நமசிவாயரின் திருப்பாதங்களில் விழுந்து பணிந்தார். புன்னகைத்த நமசிவாயர் அவரை ஆசிர்வதித்து, திருநீறு கொடுத்தார். விபூதியைத் தன் நெற்றியில் அணிந்து கொண்ட அந்த வீட்டுத் தலைவர், நமசிவாயரைப் பார்த்து, சிவனருட் செல்வரே.... இப்போதுதான் என் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தருளி, எல்லோருக்கும் திருநீறு தந்து ஆசிர்வதிக்க வேண்டும். மணமக்கள் வாழ்வாங்கு வாழ உங்களின் ஆசி வேண்டும் என்று கெஞ்சும் முகத்துடன் வேண்டுகோள் வைத்தார்.

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த நமசிவாயரும், அவரது வேண்டுகோள்படி, திருமண வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு இருந்த அனைவருக்கும் திருநீறு கொடுத்து விட்டு, சிவ நாமம் முழங்கிக் கொண்டு வெளியே வந்தார். அடுத்த கணம் நடந்த செயல், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

திருமண வீடு திடுமெனத் தீப்பற்றி எரிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை! வீட்டுக்குள் இருந்த மணமக்கள் உட்பட அனைவரும் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தனர். அவர்களில் ஒருவன், இதோ... இந்த சாமியார் கொடுத்த திருநீறினால்தான் வீடு தீப்பற்றி எரிந்தது என்று கூற ஒட்டுமொத்த கூட்டமும் சேர்ந்து, நமசிவாயரைத் திட்டித் தீர்த்தது. மனம் நொந்த நமசிவாயர், அதே இடத்தில் அமர்ந்து சிவ தியானத்தில் ஈடுபட்டார்.

கயிலைவாசனே... நான் என்ன தவறு செய்தேன்? ஏன் எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வாங்கித் தருகிறாய்? இவர்கள் என்னை மட்டுமா அவமதிக்கிறார்கள்? உன்னையும் சேர்த்து அல்லவா அவமதிக்கிறார்கள்? இந்த பழியும் பாவமும் உனக்கும்தானே வந்து சேரும்? ஈசா... கருணைக் கடலே... கண் திறந்து பார்க்க மாட்டாயா? என்று கண்ணீர் மல்க பிரார்த்திக்க... அடுத்த விநாடியே - எரிந்து போன வீடு, பழைய நிலைமையை அடைந்தது. சற்று நேரத்துக்கு முன் அந்த வீடு, தீயினால் பாதிக்கப்பட்டதற்கு உண்டான எந்த ஒரு சுவடும் இல்லை. திருமண வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் கலகலப்பானார்கள். சுற்றிலும் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திக்பிரமை அடைந்தனர். 

ஆஹா.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை. சிவபெருமானே இவரது உருவில் வந்திருக்கிறார். நம்மை எல்லாம் ஆசிர்வதித்திருக்கிறார். இவரை எல்லோரும் நமஸ்கரியுங்கள் என்று ஊர்க்காரர்கள் பரவசம் மேலிடச் சொல்லி, விழுந்து வணங்கினார்கள். கூனிக் குறுகி வெளியே நடந்தார் நமசிவாயர். தன்னை ஈசனோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. இனி நான் எவர் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டேன் என்று ஆக்ரோஷமாக ஒரு சபதம் செய்து விட்டு, யாத்திரையைத் தொடங்கினார்.

திருவண்ணாமலை நோக்கி வந்த அவர் வழியெங்கும் தென்பட்ட பக்தர்களை ஆசிர்வதித்தார். பலரது பிணிகளைத் தீர்த்தார். எண்ணற்ற ஸித்து விளையாடல்களை நிகழ்த்திக் கொண்டே வந்தார். பூந்தமல்லியை அடைந்த அவர்கள் நமசிவாயரிடம் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்காக அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று மணம் வீசும் மலர்களைப் பறிக்க ஆரம்பித்தனர். இந்த நிகழ்வு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள ஆலய இறைவனுக்கு கொஞ்சம் கூட பூக்களை வைக்காமல் அனைத்தையும் பறித்து விட்ட சிவனடியார்களைப் பற்றி ஊர்த் தலைவரிடம் சென்று முறையிட்டனர். அவரும் நமசிவாயர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தார்.

நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தை துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா... ஒரு நிமிடம்... என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார். ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள்... என்ன உமது கேள்வி? என்றார். கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்து பூச்செடிகளில் இருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார்.

அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர். எல்லாம் சிவனே... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன. எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக. உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக் கொள்ள மாட்டான்.

நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர். எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக் கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால் - அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், உமது செயலை நான் ஏற்றுக் கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த் தலைவர்.

அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நமசிவாயர். இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழ வேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் பெரும் குரல் எழுப்பி இதை ஆமோதித்தனர்.

குருநாதரின் பதில் இதற்கு என்னவோ? என்கிற குழப்பத்துடன் அடியார்கள் நமசிவாயரைப் பார்க்க, அந்த மகானும் இதற்கு ஒப்புக் கொண்டார். அப்படியே ஆகட்டும். எம் கூற்றும் செயலும் உண்மை என்பதை இதோ, இந்த இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், நீர் சொன்னது அப்படியே நடக்கும் என்று கண்களை மூடி சிவ தியானம் செய்யலானார் நமசிவாயர். இந்த நேரம் பார்த்து ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர், இறைவன் திருமேனியில் இருந்த மலர்மாலையில் ஒரு உறுதியான கயிற்றைப் பிணைத்து, அதன் மறுமுனையை ஒருவரிடம் கொடுத்து, இறுக்கிப் பிடித்திருக்கச் சொன்னார்கள்.

சிவன் கழுத்தில் இருக்கும் மாலை எப்படி நமசிவாயர் கழுத்தில் போய் விழும்? அதையும்தான் பார்த்து விடுவோம் என்று கிண்டலாகப் பேசியபடி நடக்கின்ற நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காகத் தயாரானார்கள் ஊர்க்காரர்கள். அடியார்கள் அனைவரும் மனதுக்குள் சிவ நாமம் துதித்தபடி அமைதியாக இருந்தனர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. குகை நமசிவாயர் ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தை மனமுருக ஜபித்தபடி லிங்கத் திருமேனியின் முன் கரம் கூப்பியபடி நின்றிருந்தார்.

தன்னையே கதி என்று நம்பி வந்தவர்களை அந்த சிவபெருமான் ஒரு போதும் ஏமாற்ற மாட்டார். அதுதான் நமசிவாயரின் வாழ்க்கையிலும் நடந்தது. ஒரு சில நொடிகளில் இறைவனின் கழுத்தில் இருந்த மாலையைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் பிடி தளர்ந்து கயிறு அறுபட்டு, மலர்மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது. நமசிவாயரின் கண்கள் கலங்கி விட்டன. கைகளை உயர்த்தி ஈசனுக்கு நன்றி சொன்னார்.

உடன் இருந்த அடியார்கள் அனைவரும், சிவகோஷம் எழுப்பினார்கள். ஊர்த்தலைவர் நமசிவாயரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு, அங்கிருந்து யாத்திரையைத் துவக்கினார். திருவண்ணாமலையை அடைந்த நமசிவாயாருக்கு தமிழ்ப் புலமையைத் தந்து அருளினான் ஈசன். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் வழங்கினான். அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகள். இவ்வாறு ஈசனுக்குப் பணிவிடைகள் செய்து வந்த நமசிவாயர் மலை அடிவார குகைக்குள் சென்று தங்கினார். அன்று முதல் குகை நமசிவாயர் என அழைக்கப்படுகிறார். இவருடைய சீடர்களுள் விருபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.

இவ்வாறு அண்ணாமலையாரின் அற்புதங்களை அனுதினமும் பருகியபடி எண்ணற்ற சித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள்புரிந்து வந்த குகை நமசிவாயர் ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார்.

அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா..... எல்லாம் சரி தான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா?  திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு பிறகு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே!

எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையாரின் மேல் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார் குகை நமசிவாயர். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. 

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் குருபூஜை நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் குகை நமசிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை நமசிவாயரையும் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் குகை நமசிவாயர் கூறுவது;

அண்ணாமலையாரின் பாதத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி... நீ புனிதம் அடைந்து விடுவாய். 

திருவண்ணாமலைக்குச் சென்றால் அண்ணாமலையாரின் திருவருளையும், குகை நமசிவாயரின் குருவருளையும் பெறுங்கள். ஆனந்த வாழ்வு பெற இவர்கள் இருவரும் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.

நன்றி : தினமலர் - ஆன்மீகம் 

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com