Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கோளறு திருப்பதிகம் : நவகிரகங்களின் பாதிப்பிலிருந்து நம்மை காக்க

| Dec 14, 2011

திருஞான சம்பந்தர் அருளிய பதிகங்களில் , நமது இன்றைய வாழ்க்கை சூழலில் மிக மிக பயனுள்ள ஒரு பதிகம் - இந்த கோளறு பதிகம். ஈசனை மனதில் தியானித்து , அனுதினமும் இதைப் பாடி வர , நமது ஜாதகங்களில் உள்ள குறைபாடுகளும், கோசார ரீதியாக நவ கிரகங்களால் எந்த தீய பலன்கள் நிகழாமலும்  , நம்மை பாதுகாக்கும் கவசம் - இந்த பதிகம்.
ஆளுடைய பிள்ளையாரான திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் புண்ணியத் தலங்களை வழிபட்டபடி பயணம் சென்று கொண்டிருந்த நேரம்...

மதுரை மாநகரில் அப்போது கூன் பாண்டியனின் ஆட்சி. அவன் சமண மதத்தை தழுவியிருந்ததால் அங்கே சமணர்களின் அட்டகாசம் அளவு கடந்திருந்தது. "சைவத்தை ஒழித்துக் கட்டினால்தான் தங்களுடைய அதிகாரம் நிலைக்கும்' என்று கணக்குப் போட்டு அவர்கள் காய் நகர்த்திக் கொண்டிருந்தனர்.

ஆனால் மன்னனின் துணைவியாரான மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையும் சிவபெருமானிடம் நீங்காத பேரன்பு உடையவர்கள். "திருஞான சம்பந்தர் மதுரைக்கு ஒருமுறை வந்துவிட்டால் போதும்! சமண இருள் அகலும்; சைவ ஒளி துலங்கும்' என்று அவர்கள் எண்ணினார்கள். இதை சம்பந்தரிடம் தெரியப்படுத்த தூதுவர்களை அனுப்பினார்கள்.

சம்பந்தரும் மதுரைக்கு புறப்பட சம்மதித்தார். ஆனால் சமணர்களின் கொடுமைகளை ஏற்கனவே கண்டிருக்கும் திருநாவுக்கரசருக்கு, சம்பந்தர் அங்கே செல்வதில் விருப்பமில்லை. ""நீங்களோ வயதில் இளையவர்; சமணர்களோ சூழ்ச்சிகளே வடிவானவர்கள். போதாக்குறைக்கு நாளும், கோளும் கூட இப்போது சாதகமாக இல்லை'' என்று ஆளுடைய பிள்ளையாரிடம் அப்பர் பெருமானாகிய நாவுக்கரசர் மன்றாடினார்.

சம்பந்தர் அவரை சமாதானப்படுத்தி, ""நாளும், கோளும் நாயகனாகிய சிவபெருமானின் அடியார்களைத் துன்புறுத்தாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். மதுரையம்பதியில் சைவக் கொடி பறக்க வைப்பேன்'' என்று உறுதியளித்து, "கோளறு திருப்பதிகம்' பாடினார்; சொன்னபடியே வென்று காட்டினார்.

கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் தினம்தோறும் இந்தப் பதிகத்தை, ஒருமுறையாவது பாராயணம் செய்வது அவசியம்.

பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்தப் பதிகத்தைப் போதித்து, தினசரி இதைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அதீதமான காமம், லஞ்சம், ஊழல் போன்ற தீமைகள் மலிந்து இருள் சூழ்ந்திருக்கும் இன்றைய வாழ்வில், "கோளறு திருப்பதிகம்' என்னும் தீப்பந்தத்தை தங்களுடைய வாரிசுகளின் கையில் ஒப்படைப்பது பெற்றோர்களின் முக்கியக் கடமை. இந்தப் பதிகத்தைப் பாடுவோரை கிரஹங்கள் தாக்காது. இதை நாம் சொல்லவில்லை; ஞானசம்பந்தரே சொல்லியிருக்கிறார். பாக்கியம் இருப்பவர்கள் படித்துப் பயன் பெறலாம்.

கோளறு திருப்பதிகம்

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிக நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்-
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
உடன்ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளைவிடைமேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
திருமகள், கலைஅது ஊர்தி, செயமாது, பூமி,
திசை தெய்வம்ஆன பலவும்,
அரு நெதி நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு, வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
கொதிஉறு காலன், அங்கி, நமனோடு தூதர்,
கொடுநோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள்- வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து-என்
உளமே புகுந்தஅதனால்-
வெஞ்சின அவுணரோடும், உரும்-இடியும், மின்னும்,
மிகைஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரிஅதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள்தனோடும் உடன்ஆய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்-
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்லநல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
வெப்பொடு, குளிரும், வாதம், மிகைஆன பித்தும்,
வினைஆன, வந்து நலியா;
அப்படி நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

வேள் பட வழிசெய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள்தனோடும் உடன்ஆய்,
வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்-
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்
தனோடும்
இடர்ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்லநல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

பலபல வேடம் ஆகும் பரன், நாரிபாகன்,
பசு ஏறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம்ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம்ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

தேன் அமர் பொழில் கொள் ஆலை
விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.


2 comments:

redfort said...

Ayya Vanakkam,

Devaiyanathai devaiyana nerathil devaiyanavarukku pathivettrirukkirirgal.

Nanrigal pala pala.

Thanks
Sengo

Arunsiva said...

வணக்கம்,
இந்த பாடலுக்குரிய விளக்கத்துடன் 5 ஆம் வகுப்பிலே சொல்லிகொடுத்திருந்தால்
எப்போதோ மனனம் ஆகியிருக்கும். அறிவியலை கற்றுதந்தவர்கள் ஆன்மிகத்தை மறந்துவிட்டனர்.வளரும் தலைமுறையாவது படித்து அறிவியலை மட்டுமல்ல ஆன்மிகத்தையும் நம் தமிழ் மண்ணில் செழிக்கச செய்யட்டும்.
தங்கள் மூலம் இப்போதாவது நான் தெரிந்துகொண்டதற்கு நன்றி.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com