Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சனிப்பெயர்ச்சி ஸ்பெஷல் கட்டுரை : காரணம் இன்றி காரியம் இல்லை !

| Dec 20, 2011

தலைப்பை பார்த்ததும் எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்குதுன்னே யோசிக்கிறீங்களா? சின்னப் புள்ளைல படிச்ச நியூட்டனின் மூன்றாம் விதி தான் இது. முதல் விதி, இரண்டாம் விதி என்னென்னே மறந்து போச்சு. இது மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு... ஒருவேளை இது தான் நம்ம தலை விதியோ?


ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை உண்டு.  Every  action  has  it 's  equal and opposite  reaction  ------ yeah  , yeah  .. இதுதானா அது... yes  , I remember  it ...   இதை நியூட்டன் நிரூபித்து , விஞ்ஞானம் அதை ஒரு முக்கிய விதியாக ஒப்புக் கொண்டு விட்டது. நமக்கும் படிக்கிறதுக்கு ஈஸியா இருந்ததால , இந்த விதியை மட்டும் மறக்காம இருக்கிறோம்....


நம்ம இந்து மதத்திலேயும் இதைத்தாம்யா சொல்லி இருக்கிறாங்க. என்ன , இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கிறாங்க...


"தப்பு செஞ்சயோ, மவனே அதுக்கு அடி , செத்தாக் கூட விடாம , அடுத்த ஜென்மத்துலயாவது உண்டு டோய்...." னு அழுத்தமா சொல்றாங்க... "நல்லதுக்கும் அதே மாதிரி , நல்ல பலன்கள் உண்டு ராசா. அதுனால நல்லது பண்ணு"ன்னு தெளிவா சொல்லுறாங்க.


நல்லது எது ? கெட்டது எது ன்னு அடுத்த கேள்வி வரலாம். நாம கெட்டதுன்னு நினைக்கிற விஷயம், கெட்டதாத்தான் இருக்கும். அது நல்ல நேரமோ, கெட்ட நேரமோ.... இதுல மாற்றம் இருக்காது. 

ஆனா, நல்லது நமக்குன்னு நெனைக்கிற விஷயங்களும், நம்மளை கவுத்து விடுறதுதான் , கெட்ட நேரத்தோட விளைவு. நமக்கு நல்லதுன்னு தோணுற பல விஷயங்கள் கெட்டதா கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிக்கும்.  கெட்ட நேரம் முடியிறப்போ, அடச்சே.. இது கூட தெரியாம , நம்ம மதி மயங்கிப் போச்சேப்பான்னு அதுக்கு அப்புறம் தான் தோணும்.


இந்த மாதிரி நல்ல நேரம் , சுமாரான நேரம் , கெட்ட நேரம் - இது எல்லாம் எப்படி தெரிஞ்சுக்கிட....?


வேதத்தில் - மொத்தம் ஆறு அங்கங்கள்.


சிக்ஷை, வியாகரணம், நிருக்தம், கல்பம்,  சந்தஸ், ஜோதிடம் இவை ஆறும் வேதத்தின் அங்கங்கள். சார், புரியிறமாதிரி நல்லா சொல்லிக்கிட்டு இருக்கிறப்போ.. எதுக்கு, இப்படி....? Why  திஸ்...  ?  பொறுங்க பாஸூ..  இது காஞ்சி பெரியவா சொன்ன வார்த்தைகள்.


வேத புருஷனுக்கு - சிக்ஷை தான் மூக்கு. வியாகரணம் - முகம் / வாய் . நிருக்தம் - காது.  கல்பம் - கை .  சந்தஸ் - பாதம். ஜோதிடம் அவரது கண் என்கிறார். கண்ணு தெரியாதவங்க தடவிப் பார்த்துத் தான் ஒரு பொருளை உணர முடியும். பார்வை இருந்தா , அம்பது அடி தூரத்துல இருக்கிறதைக் கூட உணரமுடியும். ஜோதிடம் தெரிஞ்சவங்க , அதே மாதிரி பின்னாலே நடக்கப்போறதை , கிரகங்கள் எங்கே இருக்கும்ங்கிறதை வைச்சு தெளிவா கூற முடியும் என்று கூறுகிறார்.


சூரியன் , சந்திரன் நம்ம கண்ணுக்கு தெரியுது. மீதி உள்ள கிரகங்கள் எங்கேயோ இருக்குதுன்னு அறிவியல் சொல்லுது. அது எப்படி, மனுஷனை கட்டுப்படுத்த முடியும்? அருமையான கேள்வி....

எங்கேயோ கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் கிரகங்கள் இருந்தாலும், அவை எல்லாமே ஒரு நீள் வட்டப் பாதையில் தான் சுற்றுகின்றன. ஜோதிடம் இவற்றை ஒரு 360  டிகிரி வட்டப்பாதை என்று கூறுகிறது. இதுல ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் என்ன வென்றால்.. அசுவதி முதல் ரேவதி வரையான 27  நட்சத்திரங்கள் பாதையிலேயே எல்லா கிரகங்களும் சஞ்சாரிக்கின்றன.


சரி, இந்த கிரகங்கள் எங்கோ இருந்தாலும், நம் உடலிலேயே  தசை, ரத்தம் , எலும்பு போன்ற வஸ்துக்களாகவும், ஆன்மா , மனம் , புத்தி , காமம் போன்றவையும், நட்சத்திரங்களின், கிரகங்களின் அம்சங்களாக நம் உடலில் குடி கொண்டுள்ளன.


அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும், என்று இதைத் தான் கூறினார்களோ? 


பஞ்ச பூதங்களில் இருந்து எதை நாம் எடுத்தாலும், நவ கிரகங்களின் பிடியில்  வந்து விடுகிறோம். பூமியில் இருந்து விளையும் பொருட்களை நாம் சாப்பிடும்போதே, பஞ்ச பூதங்களின் கலவையை நாம் உள் இழுக்கிறோம். 
சாப்பிடாமல், தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையான விரதம் இருக்கும்போது - அந்த கிரகங்களின் பிடியில் நாம் சிறிது தப்பிக்கிறோம்... உடம்பில் உள்ள நாடி சீர் செய்யப்படுகிறது. நம் வேண்டுகோளை மூல ஸ்தானத்தில் உள்ள மூலவர் ஈர்த்து - கும்பம் வழியாக விண்ணிற்கு அனுப்பி, அங்கிருந்தே கதிர்கள் திருப்பி அனுப்பபடுகின்றன. விரதம் இருக்கும் உடம்பு , அதை ரிசீவ் பண்ண தயார் நிலையில் இருக்கிறது.  தீவினைகள் குறைய ஆரம்பிக்கின்றன. (அடேங்கப்பா இது தான் விஷயமா.....)


சரி, பூர்வ ஜென்ம பாவங்களுக்கு தண்டனையை நாம் அனுபவிக்கிறோம். சரி, குறைக்க முடியாதா? தப்ப முடியாதா?முடியும்...


16  வருட ஆயுள் தண்டனை கைதிகள் கூட - நன்னடத்தை காரணமாக , ஒரு நாலஞ்சு வருடங்கள் முன்பே விடுதலை ஆகிறார்கள் அல்லவா?  அந்த மாதிரி , இந்த ஜென்மத்தில் நம் நல் வினைகள் - நமக்கு பூர்வ ஜென்ம வினையையும் குறைக்கும். 


நல்ல வினைகள் என்றால் , நாம் நிஜமாகவே நல்லவனா மாறுவது. நல்லவன் மாதிரி வெளியுலகத்து தெரிவது மட்டும் அல்ல...


ஓஷோ ஒரு இடத்தில் கூறுகிறார். மனம் சில சமயங்களில் ரொம்ப அல்பத்தனமா இருக்கும். ஒரு ரெண்டு பேர் கைகலப்புலே ஈடுபடுறாங்க. கூட்டமா எல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பாங்க... நீங்க எங்கேயோ இருந்து அந்த இடத்துக்கு அப்போத்தான் வருவீங்க . சண்டை முடிஞ்சு , எல்லாம் கலைய ஆரம்பிச்சுக்கிட்டு இருப்பாங்க.. அடடா... நாம சண்டையை பார்க்கலையேன்னு , ஒரு செகண்டாவது உங்க மனசு பீல் பண்ணும்..
இது , நிஜமா ஒரு அல்பமான ஒரு விஷயம் இல்லையா? இந்த நிலைலே இருந்து வெளியே வர நாம கத்துக்கிடனும்... நமக்கு தெரிந்து ஒரு துன்பம் நடக்குது என்றால், அதை நீக்கிட நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்தல் நல்லது. செய்கைகளால் , வாக்கால் , மனத்தால் ஒருவருக்கும் தீங்கு இழைக்காத ஒரு வாழ்க்கை வாழ முயற்சி செய்ய வேண்டும்...


கஷ்டம் தான், முயற்சி செய்வோம்....!


சரி, தவறுகளுக்கு தண்டனை எந்த வடிவில் ?


நம்மளை அறியாமல் , செய்யும் தவறு தவிர்க்க முடியாதது. தெரிஞ்சே செய்யும் தவறான செயல்கள் - அடி மனதில் , ஊறிப் பதிந்து விடுகிறது. மனம் மிகச் சரியாக , அது அடுத்த ஜென்மமாக இருந்தால் கூட - அதற்க்கேற்ப நம் செயல்களை தீர்மானிக்கிறது. நாம் , நம் மனதை உணராதவரை அதை அறியப் போவது இல்லை.


ஒருவர் ஏழை, ஒருவர் பணக்காரன். ஒருவர் அறிவாளி , ஒருவர் முட்டாள். ஒருவர் - கருப்பு. இன்னொருவர்  சிவப்பு. ஒருவர் ஆண் - ஒருவர் பெண். ஒருவர் பிறக்கும்போதே அநாதை , அற்ப ஆயுள் , உடல் அங்கஹீனம் -  இப்படி எத்தனையோ முரண்பாடுகளை தீர்மானிப்பதில் - பூர்வ ஜென்ம வினை முக்கிய பங்கு வகிக்கிறது.


நம்மோட நல்லது , கெட்டதை - ஒரு தராசுல வைச்சு அளந்து - நல்லது அதிகமாகும்போது - நல்ல வாழ்க்கையும், கெட்டது அதிகமாகும்போது சோகமான வாழ்க்கையையும் விதி - நமக்கு வழங்குகிறது.


நல்ல லக்கினம், நல்ல நட்சத்திரம் , நல்ல நிலைமையில் கிரகங்கள் என்று அமைய , ஒரு குழந்தை ஜனிப்பது , அவரது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் தான் என்று அடித்துக் கூறுகிறது ஜோதிடம்.


கோள்களின் நட்சத்திர பெயர்ச்சிக்கு ஏற்ப , நடக்கும் தசா , புக்திக்கு ஏற்ப  - ஒவ்வொரு ஜாதகருக்கும் , பலன்கள் உரிய நேரத்தில் , தக்க விதத்தில் கிடைக்கின்றன.


அந்த வகையில் குருப் பெயர்ச்சி - தோராயமாக ஒரு ஆண்டுக்கு ஒருமுறையும், ராகு - கேது - ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறையும், சனிப் பெயர்ச்சி - இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறையும் நடக்கிறது. இவை பெரும்பாலான ஜாதகர்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நல்ல ஜோதிடர் - மிகத் தெளிவாக கிடைக்கும் பலாபலன்களை கூறி விட இயலும்.


சரி, நாளை  21 -12 -2011 காலையில் சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.


கும்பம், சிம்ம ராசிக்காரர்கள் எல்லாம் உய்ய் யின்னு ...  உற்சாக விசில் அடிக்கலாம். வகை , தொகை இல்லாம, பார பட்சம் காட்டாம , அடிச்சு துவைச்சு காயப் போட்டு இருந்து இருப்பாரு... எது எது எல்லாம் முக்கியம் னு நினைச்சு இருந்த எல்லாமே இந்த ஏழரை சனி , அஷ்டம சனி கால கட்டத்துல - அது எவ்வளவு தூரம் முக்கியம்னு புரிஞ்சு இருப்பீங்க... கஷ்டங்கள் கொடுத்தது - உங்களை பக்குவப்படுத்தன்னு கூலா சனி பகவான் சொல்லி இருப்பார்...


சரி, அந்த அளவுக்கு கஷ்டப்படாம , வர்ற கஷ்டங்களை கொஞ்சம் குறைச்சுக்கிட - எல்லா ராசிக்காரர்களும் என்ன செய்யலாம் னு பார்க்கலாம்....


சனிபகவான் -இவரது குரு பைரவர்.


ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்கள்  தனது ஆராய்ச்சியில் சொல்லி இருந்த ஒரு விஷயம் ரொம்ப முக்கியமானது. ஏழரை சனி , அஷ்டம சனி தொல்லையால் அவதிப்படுபவர்கள் - பைரவரை வணங்கினால் ஒழிய அவர்களுக்கு விடிவு கிடைப்பது அரிது என்கிறார்.


சனி பகவானும் நல்லவர் தான். என்ன.. ரொம்ப நல்லவர்... சரிக் கட்ட முடியாத தலைமை நீதிபதி. இருந்தாலும் மனசு அறிந்து செய்த ஒரு சில தவறுகளுக்கு ,  பரிகாரம் செய்வதன் மூலம் பலன் கிடைக்கும். பரிகாரம் செய்த பிறகு, மறந்தும் அந்த தவறை திரும்ப செய்யக் கூடாது என்று சத்தியப் பிரமாணமே எடுக்க வேண்டும். 

தண்டனை உடனுக்குடன் அளிப்பதில் சனி பகவான் வல்லவர். அதனால், பரிகாரம் பண்ணுவதை வெறுமனே ஒரு சடங்காக கருதாமல் , மனப்பூர்வமாக பண்ணுங்கள். நான் தான் பெரிய பிஸ்தான்னு ஆட்டம் போட்டா பட்டு பட்டுன்னு அடி உண்டு...


கீழே ஒரு சில பரிகார முறைகள், வழிபாட்டு முறைகளை கூறியுள்ளேன். அது என்ன - சனிக்கிழமை , அது என்ன பிரதோஷம் மட்டும் என்று குதர்க்கமான கேள்விகள் மனதில் எழலாம். எல்லா நாளும் செய்யலாம். உங்களுக்கு நேரம், வசதி இருந்தால் எல்லா நாளுமே செய்யலாம்.


தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு இல்லாம... தலைப்பாகையையும் கொஞ்சம் உதறி , திரும்ப கட்டிக்கிட்ட மாதிரி - சந்தோசமான ஒரு வாழ்வு அமையும். 

மீனம் , துலாம்,  விருச்சிகம், கன்னி , கடகம் , மேஷம் , தனுசு ராசிக்காரர்கள் - அவசியம் சனி பகவானை உரிய முறையில் வழிபாடு  செய்யவும். மீதி இன்னும் அஞ்சு தானே சார்? அவங்களை எதுக்கு விட்டுட்டீங்க...ன்னு கேட்கிறீங்களா? 
ஒன்னு - அவருக்கு , இல்லை மனைவி - மக்கள் என்று யாராவது ஒருவர் இந்த ராசியில் வந்து விடுவார்கள்... ஆக... எல்லோருமே - பொறுப்பை உணர்ந்து , ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லபடியாக யோசித்து முடிவெடுங்கள்... 
அவசரம், பதட்டம் எப்போதும் வேண்டாம். 
முறைகேடான உறவுகள் வலிய வந்தாலும் தவிர்த்து விடுவது முக்கியம். 


சரி, என்ன செய்யலாம்னு பார்ப்போம்....?


பைரவரை சரணடைய - கஷ்டங்கள் குறையும். நாம் ஏற்கனவே பைரவ வழிபாட்டு முறை பற்றி , நிறைய எழுதி இருக்கிறோம். refer  செய்து கொள்ளவும்.   


சனிக்கிழமை தோறும் காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும். 
எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.

முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்) யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர். இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம்.
இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். 

சனியின் தாக்கத்தை நிவர்த்தி செய்ய சனிக்கு பிடித்தமான எள், கருப்பு நீள கலர் துணியால் எட்டு பொட்டலம்  தயார் செய்து தலையனை அடியில் வைத்துக் கொண்டு நாள்தோறும் உறங்கி வரவும். ஒவ்வொரு சனிக்கிழமையன்று ஒரு எள் பொட்டலம், அகல், நல்லெண்ணை மூன்றையும் குறிப்பிட்ட ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அகல் விளக்கை நன்றாக எரியும் நிலையில் ஏற்றி எட்டுமுறை வலம் வரவேண்டும். 

உடல் ஊனமுற்றவர்களுக்கு அல்லது அதை சார்ந்த பள்ளிகளுக்கு உதவி செய்தல்.

சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல்.

அருகில் உள்ள சிவ ஆலயங்களில் சிவ வழிபாடு செய்தல்.

சங்கடஹர சதுர்த்தி அன்று மோதகம் வைத்து அருகம்புல் சாற்றி வழிபடுதல்.

ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மலை சாற்றி வழிபடுதல்.

இந்த காலத்தில்  பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும். 
உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு.

 வீட்டிலும் தினசரி சமைத்த உணவை உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து அது உண்ட பின்பு உண்பது நலம். ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை நடத்தினால் நல்லது. 


வன்னி மரத்தடி  விநாயகருக்கு - பச்சரிசி அல்லது பச்சரிசி மாவு , கல்கண்டு போன்றவற்றை , அங்கு சுற்றி திரியும் எறும்புகளுக்காக உணவிடுங்கள். அற்புதமான ஒரு பரிகாரம் இது. 


அநாதை பிணங்களை, வசதி இல்லாதவர்களின் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இது சனி பகவானுக்கு மிகப் பெரிய பரிகாரம் ஆகும்..


கால் நடக்கமுடியாத ஏழைகளுக்கு அவர்கள் நடக்க உதவும் வகையில் பொருள் உதவி செய்யலாம்... இது அவருக்கே நேரடியாக செய்யும் உதவியாக கருதப் படுகிறது.....


சனியின் தாக்கத்தால் ஏற்படும் உடல் நல கோளாறுகள் :

குடல் வாதநோய் இவரால் ஏற்படும். மேலும் ஹிரண்யா, வி.டி., முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம் யானைக்கால், பேய்தொல்லை, மூலநோய், மனதளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பிடித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும். 
ஜாதகத்தில் சனி பகவான் பலம் குன்றியவர்களுக்கு நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட வியாதிகளான வாயு, கை- கால் தொடர் நடுக்கம் என்கிற  வியாதி, சிறுநீரகக் கோளாறு அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் போன்றவை உண்டாகின்றன. ஒருவருக்கு ஏழரைச்   சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். 
இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்ட மச்சனி, சனி தசைக்கும் பொருந்தும், அது போன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடந்து செல்ல பழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம்.சனியின் ஆதிக்கத்திற்கு  உட்படும் போது நடை பயணம் செய்வதன் மூலமே சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும். 
=========================================================
நம் அனைவருக்கும் அந்த பரம்பொருள் அருள் தங்கு தடையின்றி கிடைத்து - சனி பகவானின் இன்னல்களில் இருந்து தப்பிக்க கீழ் காணும் மந்திரங்களை ஜெபம் செய்யலாம்...

சனி மந்திரம் :

ஸந்நோ  தேவீரபிஷ்டாய 
ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ரவந்து   ந:

சனி காயத்ரி :

ஓம் ரவிசுதாய வித்மஹே 
மந்தக்ரஹாய  தீமஹி 
தந்நோ சனிஹ்  ப்ரசோதயாத்

==================================================================

மீண்டும் சந்திப்போம்.... நாளை சனிப் பெயர்ச்சி ......  போய் ஒரு எட்டு அவரைப் பார்த்திட்டு வந்திடுங்க.....

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com