Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

திருவண்ணாமலை சித்தர்கள் - கார்த்திகை தீப ஸ்பெஷல் கட்டுரை..

| Dec 6, 2011

அருணை ஒரு காந்தம் .  இங்கு போய் வந்த பிறகு கிடைக்கும்  , மன ரீதியாக நாம் உணரும் இன்பத்தை, வார்த்தைகளால் சொல்ல முடியாது. அருணை என்று இல்லை, இப்போதெல்லாம் - முக்கியமான ஆலயங்கள் அனைத்திலும், விசேஷ தினங்கள் என்றாலே - கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டம் இல்லாத நாட்களில் செல்லும்போது , கிடைக்கும் மன நிம்மதி , இந்த விசேஷ தினங்களில் நமக்கு கிடைப்பது இல்லை. புறத்தில் நிலவும் சத்தமும், கூச்சலும், தள்ளு முள்ளுவும் , மொபைல் ரீங்காரங்களும் - அகத்தில் சலனம் ஏற்படுத்தி , நாம் எந்த காரியத்திற்காக இறைவனை நாடி சென்றோமோ, அதை தாண்டி ஒரு சலிப்பும், வெறுப்பும் ஏற்படுத்தி விடுவதை தவிர்க்க முடிவதில்லை.

சபரிமலை, பழனி , செந்தூர், திருப்பதி பாத யாத்திரை , சதுரகிரி , அருணை கிரிவலம்  - போன்ற உடல் ரீதியாக நம்மை வருத்திக் கொண்டு , அங்கு சென்று தொழுதால் தான் , இறைவன் நமக்கு அருபுரிவானா? எங்கும் நிறைந்து இருப்பவன், நம் வீட்டில் இருந்து கொண்டே தொழுதால் ஆகாதா? இட் லுக்ஸ் கிரேஸி.... என்று நினைப்பு தோன்றுகிறது.

நூறு கிலோ மீட்டர் நடையாய் நடந்து - பாலாஜியின் முன்னால் நின்றால் - இமைக்க மறந்து கூர்ந்து கவனித்தால் ஆச்சு , இல்லையென்றால் - ஜருகண்டி , ஜருகண்டி தான்... கண் குளிர பார்க்க கூட இயலவில்லையே,  கோவிந்தா.. ! என்று மனத்தில் ஒரு ஆயாச பெருமூச்சு வரத்தான் செய்கிறது.

48  நாட்கள் ஐயப்பனுக்கு மாலை இட்டு - அதிகாலை குளிரில் எழுந்து , காலையும், மாலையும் சரணகோஷம் சொல்லி , விரதமிருந்து - யாத்திரை கிளம்பி , பெரிய பாதையில் நடந்து - பம்பை நெருங்கியபிறகு, நம் உற்சாகம்  வடிந்து விடுகிறது... ! குளிக்க முடியாத அளவுக்கு மாசு படிந்து பம்பை, பல சமயங்களில் பங்கரையாகத் தான் இருக்கிறது...

கட்டுக் கடங்காத கூட்டம்..! வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், உடல் நலம் இல்லாதவர்கள் என்று பார பட்சம் பாராத , வேகம், வேகம் என்று அலைபாயும் கடல் என, ஆர்ப்பரிக்கும் கூட்டம்... நிர்வாகம் எத்தனை முயற்சி எடுத்தும் சுகாதாரக் குறைபாடுகள், உணவு வசதி குறைபாடுகள்.... பேருந்திலும், ரயிலிலும் ஏற்படும் கூட்ட நெரிசல்..... என - விரதம் இருந்த காலத்தில் இருந்த மன மகிழ்ச்சி, மலையை அடைந்தவுடன்  ... ஓடியே போய்விடுகிறது...

இவ்வளவு விஷயங்களையும் தாண்டி , சன்னிதானத்துக்கு செல்லும் போது கிடைக்கும் தரிசனம் - அதிக பட்சம் கால் நிமிடமோ, அரை நிமிடமோ... இவ்வளவு தூரம் கஷ்டப் பட்டு வந்து இருக்கோமே... சாமி பார்க்காமலும் செல்ல மனசு வராது... ஒரு நொடி பார்க்க முடிந்தால் கூட திருப்திப் பட்டுக் கொள்ளுங்கள்.. பார்க்க முடியவில்லை என்றாலும், உங்களுக்கு அய்யன் அருள் கிடைக்கும்...

மூல ஸ்தானத்தில் மட்டும் இருப்பவர் இறைவன் அல்ல... பல பக்தர்களுக்கு - அவர்கள் நடந்து வரும்போது , அவர்களுடனேயே இறைவனும் துணை வருகிறான்..! அவர்களுடன் உணவு உண்கிறான்.. அவர்களின் சரண கோஷத்தில் மகிழ்ச்சி அடைகிறான்...... சிலையாக அமர்ந்து இருக்கும் ஐயனை காண முடியவில்லையே என்கிற கலக்கமே வேண்டாம்.... மலையின் ஒவ்வொரு சதுர அடியிலும்  - அவன் அருள் பரிபூரணமாக ததும்பி கிடக்கும்...

இது ஒவ்வொரு ஆலயத்திற்கும் பொருந்தும்... கூட்டமா.. என்று மலைத்து நிற்க வேண்டாம். உங்களால் அங்கு போக முடிந்தால் அது பாக்கியம். போக முடியவில்லை என்றாலும், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சாதாரண நாளில் கூட போக முடிந்தால் சென்று வாருங்கள்..!

கூடுகின்ற கூட்டம் முழுவதுமே பழுத்த பக்தி ஞானம் ததும்பிய கூட்டம் என்று நான் கூறவில்லை. பத்தில் எட்டு பேர் , பக்தர்கள் என்றே நினைத்துப் பார்க்க முடியாதவர்களாக கூட இருக்க கூடும்.. என்ன செய்வது..? அவர்களை விட்டுத் தள்ளுங்கள்..!  அவன் அருளை உண்மையிலேயே வேண்டி செல்லும் பக்தர்களும் , அங்கு இருப்பர்... லட்சத்தில் ஒருவர், அவன் அருளை கண்கூடாக உணர்ந்தவர்களாகவும் இருப்பார்...


ஹா... எவ்வளவு கூட்டம்..!  அமர்நாத் யாத்திரை , கைலாய யாத்திரை போன்ற உயிரை பணயம் வைக்கும் இந்த மாதிரி யாத்திரைகள் எல்லாமே ஒரு பாண்டஸி மாதிரி ஆகிவிட்டது... நமக்கு தெரிந்த ஒருவர் அங்கு செல்கிறார் என்றால்... அய்யய்யோ.. அவருக்கு மட்டும் ஏதாவது நல்லது நடந்து , நமக்கு நடக்காவிட்டால்.. ? அவர் போகும்போது நம்மால் முடியாதா? நாமும்தான் போய் பார்ப்போமே...! கிடைச்சா பரவா இல்லை, கிடைக்கலைனா அதனாலே என்ன இருக்கு என்று நினைத்துத் தான், கூட்டம் பிச்சு உதறுகிறது என நினைக்கிறேன்..

 இதைப் போன்ற யாத்திரை அவசியம் தானா?

ஒரு விஷயம் சொல்லிக் கொள்ள பிரியப்படுகிறேன்..
பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால், நம் இந்திய தேசமே ஒரு கடுகு அளவுதான் இருக்கும், அதில் இந்த ஆலயங்கள், பேனாவில் ஒரு புள்ளி வைத்தால் போன்ற அளவு கூட இருக்காது....இதைப் போன்ற ஆலயங்கள் , பல சித்த புருஷர்களாலும் , மகான்களாலும் அடையாளம் காணப் பட்டு , உலக நன்மைக்காக தகுதி வாய்ந்த அன்பர்களுக்கு தெரிவிக்கப் பட்டு - அவை இன்று , நம்மைப் போன்ற அன்பர்களுக்கு தெரிய வந்து - ஒரு வரப் பிரசாதமாக திகழ்கிறது.. ஆனால் உலகின் அத்துணை நல்ல சக்திகளும் , கிரகங்களின் கதிர் வீச்சும், இந்த ஸ்தலங்களில் அபரிமிதமாக வெளிப்படுகின்றன...


மக்களை ஒரு வெத்து விஷயத்தை வைத்துக்கொண்டு , நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது.  அவன் அருள் பெற்ற சிலர்,  அவரது நெருங்கிய சுற்றம் , நட்பிடம் சொல்லி, அவர்கள் இன்னும் சிலரிடம் சொல்லி , மீடியா வெளிச்சம் பட்டு - இப்படி பல வருடங்களாக புகழ் பெற்ற ஆலயங்கள் அவை. 

அவன் அருள் நமக்கும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. நல்லதொரு தாய், தந்தையை , சகோதர பாசத்தை அவரவர் தகுதிக் கேற்ப கொடுத்து இருக்கிறான். கோடீஸ்வர வீட்டில் பிறக்கவில்லையே என்று ஏக்கம் இருக்கும்போது , நம் ஊருக்கு அருக்கில் இருக்கும் அநாதை இல்லங்களிலும் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் இருப்பதையும் நினைத்துப் பாருங்கள்.. ! அலுவலகத்தில் செய்யும் வேலைக்கு கூலி கிடைக்கவில்லை என்கிற நினைப்பு வரும்போது , கொளுத்தும் வெயிலில் , காலில் சாக்கை சுற்றிக்கொண்டு - சாலையில் தார் ஊற்றிக்கொண்டு வேலை செய்பவர்களை யோசித்துப் பாருங்கள்... இறைவன் அவ்வளவு கொடூரமாக நம்மிடம் நடந்து கொள்ளவில்லை.

பிறப்பு நம் கையில் இல்லை. அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தாலும், அனைத்தையும் மீறிய சக்தி ஒன்று நம்மை ஆரம்பம் முதலே வளர்ந்ததை வந்ததை உணர்ந்து கொள்ளுங்கள்.....எத்தனையோ வசதி உள்ள வீட்டில் பிறந்த குழந்தைகள் , ஏதோ ஒரு நோயால் தாக்கப்பட்டு , கோடி கோடியாக செலவழித்தும் பயன் இல்லாமல் , மரித்தும் போயிருக்கின்றன...எத்தனையோ ரூபங்களில் இறைவன் நம்மை காப்பாற்றியிருக்கிறான் என்பதை, நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும்.

ஆரோக்கியமான உணவு மட்டும் கிடைத்ததால் நாம் வளர்ந்துவிடவில்லை. நம்மை சுற்றியுள்ள சமூகமும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம்...  உங்கள் வீட்டில் நல்ல சாப்பாடு கொடுக்கும் அளவுக்கு வசதி இருந்தால் மட்டும் போதாது.. ! சுற்றியுள்ள வீடுகளில் ஓரளவுக்காவது வசதியும், நாகரிகமும் பரவி இருக்க வேண்டும்...!  நம் ஊரில் பிறந்ததற்குப் பதிலாக சோமாலியா போன்ற தேசத்தில் நம் பிறப்பு நிகழ்ந்து இருந்தால்..? ஏன், நம் ஊரிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு இருக்கும் பழங்குடி இனத்தில் பிறந்து இருந்தால்...? நம் பிறப்பை எது தீர்மானிக்கிறது?

சரி, பிறந்தாச்சு.... எத்தனை வியாதிகள், விபத்துக்கள் , இத்தனையையும் தாக்குப் பிடித்து , சமாளிக்க நம் சுய முயற்சி மட்டும் போதும் என நினைக்கிறீர்களா?

பயணங்கள் இந்த உலகில் தவிர்க்க முடியாதது.. எத்தனையோ நெடுஞ்சாலைகளில் இரவு பயணம் மேற்கொள்கிறோம்..வருடத்திற்கு ஒரு முறையாவது செல்கிறோம்.. மாதத்திற்கு ஒருமுறை எங்கேயோ , எப்போதோ விபத்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது..... இரவுப்பொழுதுகளில் பயணிகள் தூங்குவது போல , டிரைவர் தூங்கிவிட்டால்..?
கவலைப் படாதீர்கள்... ! நாம் உயிருடன் தான் இருக்கிறோம்...

நாம் உயிர்ப்புடன் இயங்குவதற்கும் அவன் அருள் தேவை...

பிறப்பும் நம் வசம் இல்லை. இருப்பும் அவன் அருளுடன்தான் நடக்கிறது. இறப்பு மட்டும் நம் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளலாம்.. , நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ அவன் அளிக்கும் கருணை.

அவன் அளித்த உடலுடன், நாம் நம்மை வருத்தி பாத யாத்திரை செல்வது ஒரு நன்றிக் கடன் செலுத்துவதற்கு சமம். நமக்கு வருங்காலம் அவன் பேரருளுடன் பொற்காலமாக அமைய நீங்கள் செய்யும் ஒரு உருப்படியான காரியம்..

இந்த பிரபஞ்சத்தில் , லட்சம் மடங்கு உருப்பெருக்கி காட்டும் பூத கண்ணாடிகொண்டு பார்த்தால், நாம் ஒரு பேனாவின் முனைப் புள்ளி அளவு இருப்போமா தெரியாது.. ஆனால் என்ன என்ன ஆட்டம் எல்லாம் போடுகிறோம்...?  இறைவன் இந்த பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டு இருக்கும் மகா சக்தி... அவனை, அவன் சக்தியை  உணர நமக்கு கொடுப்பினை இருப்பதே போதும்... 

நம்மைப் போல மனிதர்களாக பிறந்து , சித்தர்களான மகான்கள் பற்றிய இந்த கட்டுரை , நமது நண்பர் - கோடியில் ஒருவன் - எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்... கீழே உள்ள படத்தை க்ளிக் செய்தால் , பெரியதாக தெரியும்...

என்னுடைய பழைய்ய்ய்ய கட்டுரையில் அங்க பிரதட்சிணம் பண்ணிக்கொண்டு கிரிவலம் வந்த இரண்டு பேரை பற்றி எழுதி இருந்தேன்... என் முதல் அனுபவத்தில் அவர்களைப் பார்த்த சிலிர்ப்பு , இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு முறை கிரிவலம் செல்லும்போதும் , தேவையில்லாத எண்ணங்கள் மனதில் அலை மோதும்போது , ஒரு முறை அந்த காட்சியை நினைத்தால் , மனது ஒடுங்கிவிடும்... இங்கு ஒரு சித்தர் 1008  முறை  அங்க பிரதட்சிண கிரிவலம்  செய்து இருந்திருக்கிறார்.... படித்துப் பாருங்கள்.... !

வழக்கம் போல , உங்கள் மனது ... ஹா... இதெல்லாம் சுத்த பேத்தல், யாராவது இப்படி இருக்க முடியுமா? நல்ல கதையா இருக்கே என்று கூச்சலிடும்.. அடக்குங்கள்...... எல்லா விஷயங்களுமே கட்டுக்கதை அல்ல...! சில விஷயங்கள் சாத்தியம் தான்...

வரும் வியாழன் - அண்ணாமலையில் தீபம் - இரண்டு வருடங்களுக்கு முன்பு 45  லட்சம் பக்தர்கள்... சென்ற வருடம் கொஞ்சம் கம்மி தான்... சுமார் 30  லட்சம் என நினைக்கிறேன்..இவ்வளவு கூட்டத்தில் மனதை அலை பாயாமல் , வேறு எண்ணங்கள் உட்புகாமல் , வசதி குறைவுகளை பொருட்படுத்தாமல் -- முழுக்க கட்டுப் படுத்தி , சிவநாமம் சொல்லுவதற்கும் உங்களுக்கு அசாத்திய பொறுமை, சகிப்புத் தன்மை , மனக் கட்டுப்பாடு வேண்டும்..

கூட்டத்தோடு கோவிந்தா போடாமல், உங்கள் தனித்துவத்தை உணருங்கள்...! இன்னும் பல அரிய ஞானங்களை அளித்து , உங்கள் உள்ளே இருக்கும் அகந்தையை தூள் தூளாக்குவது - இந்த கார்த்திகை தீப தரிசனம்..!

வாழ்க்கை உறியடி திருவிழாவில்  உள்ள சறுக்கு மரம் மாதிரி இருந்தால் கூட பரவாஇல்லை. மேலே போகுறோம், வழுக்குறோம் ... திரும்ப மேல வர முயற்சிப்போம்... கடைசி தரையிலாவது இறங்குவோம்..  கால் வைச்ச உடனே, புதைகுழி மாதிரி உள்ள இழுத்து, ஐநூறு அடி ஆழத்துல விழுந்துட்டா? மேலே ஏற , ஏற சறுக்கி சறுக்கி விழுந்தா...?  மேலே , அதாவது தரைக்காவது எப்போ வருவோம்னே தெரியாம ஒரு நிலைமை இருந்தா, என்ன செய்றது?

வாழ்வின் பல தருணங்களில் , ஸ்லிப் ஆகி சிதறி , உருக்குலைந்து போகாமல் - பட்ட அடியெல்லாம் தாங்கி, புடம் போடப்பட்ட பீனிக்ஸ் பறவை போன்று சிலிர்த்து எழ வைக்க , உள்ளுக்குள் இருக்கும் நம்பிக்கை கருகாமல் , நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை , தொடர்ந்து நீடிக்க - இறைவன் கருணை என்றும் நமக்கு தேவை. அவன் அருள் அளவில்லாமல் வெளிப்படும் , அற்புதமான நாள் , இந்த தீபத் திருநாள். வானில் உள்ள தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் இந்த நாளில் , நம்மைப் போல மனித உரு கொண்டும், சூட்சும தேகத்திலும் தீப தரிசனம் செய்கின்றனர். கிரிவலம் வருகின்றனர்.

உங்களில் யாராவது போக நினைத்தால்,  வசதி இருந்தால் - சொந்த வண்டியிலோ, இல்லை வாடகை காரிலோ வருவது உத்தமம். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை நம்பினால் , வெள்ளிக்கிழமையும் சேர்த்து லீவ் எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த ஒரு நாள் இங்கு வந்துவிட்டு , அதன் பிறகு ஒரு சாதாரண சனி , ஞாயிறு இங்கு வந்து பாருங்கள். திருவண்ணாமலை உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும்...!

மறுநாள் , பௌர்ணமியும் - சந்திர கிரகணமும்.... நமது வாசகர்களுக்கு அது எப்பேர்பட்ட விசேஷமான நாள் என்று சொல்லாமலே தெரிந்து இருக்கும்....
பயன்படுத்திக் கொள்ளுங்கள்... !

மனதில் ஒரே ஒரு கோரிக்கை, நியாயமானதாக இருக்கட்டும். இந்த இரண்டு நாட்களில் , அண்ணாமலையோ, சதுரகிரியோ, அன்னை ஸ்ரீவி. பத்திர காளியிடமோ, அல்லது உங்கள் அருகில் இருக்கும் ஆலயங்களிலோ சென்று , கோரிக்கையை வைத்து விட்டு வாருங்கள். அன்றைய தினத்தில் இருந்து , முழு நம்பிக்கையுடன் இறைவனை நினைத்து - ஓம் சிவ சிவ ஓம் மந்திர ஜெபத்தை, தினமும் ஒரு கால் மணி நேரம் செய்து வாருங்கள்......  உங்கள் கோரிக்கை நிறைவேற அத்தனை வழிகளும் திறக்கப்படும் ஆச்சர்யத்தை , உணர்வீர்கள்...!

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்குகிறோம். வீட்டிலோ, அலுவலகத்திலோ , ஊரிலோ - "ஏ, அப்பா.. ! அவர் ரொம்ப நல்ல மனுஷன்யா.. ! நல்ல புத்திசாலிப்பா.. ! நல்ல கெட்டிக்கார புள்ளை ப்பா ! நல்ல சொத்து சேத்து இருக்காருப்பா..! நல்லா சந்தோசமா குடும்பம் நடத்துறாருப்பா..! இந்த ஆள் கிட்ட நம்பி , இந்த வேலையை கொடுத்தா , சொன்ன நேரத்தில முடிச்சுக் கொடுத்திடுவாருப்பா" ...... இப்படி ஏதாவது ஒரு விஷயமாக இருக்கலாம்...


ஆனால், நடைமுறையில், நமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? எவ்வளவோ திறமை இருந்தும், கடின உழைப்பு உழைத்தும்  நல்ல பேர், ப்ரோமோஷன் வாங்குறது மட்டும் வேற ஆளா இருக்கும்.. ? நாயா உழைச்சாலும், வீட்டுலே மதிக்க மாட்டாங்க... இந்த நிலைமை மாற என்ன செய்யலாம்...?

நம்மால் ஆன சகல முயற்சிகளும் எடுத்தும், முடிந்தவரை கவனத்தோடு இருந்தும், சில விஷயங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலே , சொதப்பலாக இருக்கும்.

இதை மாற்ற என்ன செய்யலாம்?
குலதெய்வ வழிபாடு மற்றும் , உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு , ஒருமுறை பாத யாத்திரை சென்று வாருங்கள்... நிலைமை கண்டிப்பாக மாறும்...!
முடிந்தால் வாய்ப்பு கிடைக்கும்போது கார்த்திகை தீப தரிசனம் செய்யுங்கள்...

கடவுளை நாம் காண்போமோ , இல்லையோ - கடவுள் நம்மை கவனிப்பதை , தீப தரிசனத்திற்கு பிறகு தெளிவாக உணர முடியும்..!


வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்..!

படத்தை பெரியதாக பார்க்க , கீழே க்ளிக் செய்யுங்கள். படம் தெரியும். மவுசில் ரைட் க்ளிக் செய்து வியூ இமேஜ் செலக்ட் செய்யுங்கள். படத்தில் லென்ஸ்  போல தெரியும், அதை அழுத்துங்கள்... படிக்கும் வகையில் பெரியதாக பார்க்க இயலும்...

நன்றி : தினகரன் & Our  friend ( பக்த ) கோடியில் ஒருவன்

4 comments:

திருமாறன் said...

நல்ல பதிவு! பகிர்தலுக்கு நன்றி! அது சரி, தங்கள் வண்ணப்படத்தை வெளியிடலாமே! குபேர கிரிவலத்தன்று தங்களைச் சந்திக்க நினைத்தேன். அடையாளம் காண இயலவில்லை. வீரமுனி அவர்களுக்கு ஒரு 'வணக்கம்' மட்டும் சொல்ல முடிந்தது. Please Publish your photo.

ISMAIL said...

அருமையான பதிவு. தலைப்பிற்க்குரிய விஷயத்தை விட அதற்க்கு தாங்கள் கொடுத்துள்ள முன்னோட்ட கருத்துக்கள் கண்டிப்பாக கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி அலைகிறார் ஞானத்தங்கமே என்ற பாடலின் அர்த்தம புரியாமல் எல்லோரும் போகும் இடம், எல்லோரும் கூடும் நேரத்தில் கூட்டத்தோடு சென்று வருவதை விட நல்ல ஆலயம், அமைதியான உள்மனமே. தொடரட்டும் இத்தகைய பதிவுகள்.

redfort said...

Dear Sir,

Good Evening.

Eppadithan eluthukirirgalo theriyavillai. Avvalavum sathiyamana unmaigal.

Nanri

Kalai said...

Dear Sir,

Thanks for sharing all good info. Karthigai Dheepam live coverage is provided by the following website (http://www.thiruvannamalai.in/tiruvannamalai-temple/tiruvannamalai-karthigai-deepam.html) and also by Jaya TV.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com