Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி - A powerful worshipping place !

| Nov 16, 2011
உங்களுக்கு கேட்டை நட்சத்திரமா? நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய ஆலயம் இது. ஏன் , எதற்கு என்று போட்டு மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல், உடனடியாக ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் மன சஞ்சலம், நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும் அற்புதத்தை உணரப் போகிறீர்கள். 

கேட்டை நட்சத்திரம் மட்டும் அல்ல , ஒவ்வொரு ஆன்மீக தேடல் இருப்பவருக்கும் , பலப் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் இந்த நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் .  

நமது நீண்ட நாள் வாசகர் அபிராம் , மெய் சிலிர்த்து எழுதிய ஒரு கடிதத்தில் - இவரை ஒருதரம் மனத்தால் நினைத்ததற்க்கே தனது ஒரு பெரிய பிரச்சினை சில மணி நேரங்களிலேயே தீர்ந்ததைக் குறிப்பிட்டு இருந்தார். 

இந்த கால கட்டத்தில், நம்பக்கூட முடியாத அளவுக்கு சில அற்புதங்களை சர்வ சாதாரணமாக நிகழ்த்திய மகான் இவர். 

மகான்களின் / ஜீவ சமாதிகளின் ஆற்றல் பற்றி சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒன்று உள்ளது.   

   
சில மாதங்களுக்கு முன்பு, எனது வட இந்திய நண்பர் ஒருவருடன் - ரமண மகரிஷி சமாதிக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவர், ஏற்கனவே ஸ்ரீ ரவி சங்கரின் வாழும் கலைப் பயிற்சி மாணவர். தியானம் எளிதில் கைகூடும் அளவுக்கு பயிற்சி தினம் மேற்கொள்பவர்.  இருவரும் சற்று நேரம் அங்கு இருந்த தியான மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தோம். ஒரு பத்து நிமிடத்திற்க்குள்ளாகவே , அங்கு இருந்த அதிர்வலைகளை அவர் உணர்ந்து கொண்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எப்படி இருந்தது என்று கேட்டேன். " Astonishing.... மே தோ ஹில் கயா" என்று பரவசப் பட்டு அவர் கூறினார். அதன் பிறகு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பொதுவாக கிரிவலம் செல்லும்போது , வழியில் எதுவும் பேசிக்கொள்ளாமல் செல்வதுதான் வழக்கம்.

திருவண்ணாமலை அவருக்கு முதல் அனுபவம். தொடர்ந்து கிரிவலம் சென்றோம். ஆதி அருணாசலம் செல்லும் வரை எதுவும்  பேசவில்லை.  அந்த ஆதி அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள அம்மன் சந்நிதியில் விளக்கு ஏற்றிவிட்டு அம்மனை பார்த்தபடி நின்று இருந்தோம்... அதுவரை அமைதியாக இருந்த நண்பர், மெதுவாக பேச்சுக் கொடுத்தார்... குருஜி , நான் இந்த இடங்களுக்கு எல்லாம் பலமுறை வந்து இருக்கிற மாதிரி எனக்கு தோணுது... இந்த கோவிலுக்கும் எனக்கும் எதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி உணர்கிறேன்... இதுக்கு முன்னேயும், நீங்க தான் எனக்கு எதோ புதுசா சில விஷயங்கள் கத்துக் கொடுத்து இருக்கிறீங்க... உள்ளே இருக்கும் சிவனுக்கு , இந்த கோவில் கட்டும்போது எல்லாம் நான் நிறைய வேலை செய்து இருக்கிறேன்... நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து நிறைய பூஜை செய்து இருக்கிறோம்... 
புன்முறுவலுடன் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் ... " ஷஷாங்க், திருவண்ணாமலை ஒரு பேரதிசயம்.... இன்னும் போகப் போக நிறைய புதிர்கள் விடுபடும். சலோ, மேலே தொடர்வோம்" என்று கிரிவலத்தை தொடர்ந்தோம்...
அவர் இப்படிக் கூறியதில் எனக்கு ஒன்றும் வியப்பு ஏற்படவில்லை.... ஒரு உளறலாக தெரியவில்லை.... ஏன் என்றால், பல வருடங்களுக்கு முன்பு, முதன் முறையாக இந்த ஆதி அருணாச்சலத்தை தரிசிக்கும்போது , நானும் இதை ஒட்டிய உணர்வுகளை அடைந்தேன்..

இந்த சம்பவத்துக்கு அடிப்படையாக இருந்தது, மனத்தை ஒரு லயத்தில் கொண்டு வந்தது - ரமண மகரிஷி சமாதிக்கு முன்பு நடந்த அந்த தியானம்.
ஒவ்வொரு ஜீவ சமாதியும், அந்த மகான்களின் பேரருள் வீச்சை தன்னகத்தே  உள்ளடக்கியே இருக்கிறது. உங்கள் மன அதிர்வை நீங்கள் கவனிக்க முடிந்தாலே, இதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். அந்த வகையில், இந்த நெரூர் மகான் ஜீவ சமாதி நமக்கு கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம்... நம் வாசகர்களுக்காக இதோ :


மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார்.  அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா? ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை. வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை!  ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!

வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது.

சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ஓ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது!  சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!

கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம். 

சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல  நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். 

இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல் அவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும் சித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!

9 comments:

அ.அபிராம் said...

சமீபத்தில் ஒரு நீண்டநாள் கோரிக்கைக்காக இவருடைய ஜீவசமாதியில் வணங்கசென்றிருந்தேன் .ஒரு கோரிக்கையை நினைத்துக்கொண்டே தியானத்தில் உட்கார்ந்தேன்
நான் கோரிக்கையை நினைத்த மாத்திரத்திலேயே சொல்லிவைத்தது போல் அடுத்தவினாடியே
கெவுளி என்று கிராமத்தில் அழைக்கும் பல்லியின் சத்தம் நல்லசகுனமாக‌ எனக்குகேட்டது அந்த சதாசிவபிரம்மேந்திரரே நேரில் வந்து நல்வாக்கு சொல்லியது போல் உணர்ந்தேன்

அ.அபிராம்

நன்றி

geethalakshmisuresh said...

I'm very much excited to read about this siddar SADASIVA PREMAINDAR thanks to know about all this article

nallendra said...

சிறந்த தகவல்கள்!! எனது ஊர் (திண்டுக்கல்) அருகில் கரூர் வட்டத்தில் உள்ள சீவசமாதி பற்றி தகவல் கொடுத்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன் !!

VCTALAR said...

கேள்விப்பட்டிருக்கிறேன் மகானைப் பற்றி. உங்கள் வருணனை மிக அருமை.நான் தற்சமயம் லண்டனில் உள்ளேன். தமிழகம் திரும்பியவுடன் நெரூர் சென்று அருள் பெற வேண்டுகிறேன்.தங்களுக்கு மிக நன்றி.

அருணாசலம்

sekar said...

ஒரு நல்ல தகவல் . நன்றி

arul said...

please post more information about jeeva samthi's in india (www.astrologicalscience.blogspot.com)

THEIVAM said...

நான் கரூர்தான் வெகுதொலைவில் இருந்து வரும் லிவிங் எக்ஸ்ட்ரா வாசகர்கள் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் எனது என் : 8428431600 அப்புறம் வாங்கல் பஸ் நெரூர் போகாது திருமுக்கூடலூர் பஸ் ஏற வேண்டும் இன்னொரு முக்கியமான விசயம் கரூர் ல் புகழ் பெற்ற சிவ ஆலயம் உள்ளது இங்குதான் சித்தர் கரூரார் சமாதி உள்ளது. கரூர் எறிபத்த நாயனார், புகழ்ச்சோழ நாயனார் வாழ்ந்த புண்ணிய சேத்திரம் இறை பணியில் எங்களை வழிநடத்தும் LIVINGEXTRA க்கு நன்றி

ஸ்ரீகாந்த் said...

Sir
Your way of writings took us to the living period of swami sadasiva brumendirar and i just think him immediately....you really deserve to be a saint

Saravanakumar.B said...

கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய http://spiritualcbe.blogspot.in

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com