Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்டுரை

| Nov 28, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நல்ல படியாக சென்ற வாரம் கடந்தது. உங்களில் நிறைய பேர் அண்ணாமலை வந்து இருந்தீர்கள் என நினைக்கிறேன். ஒரு சிலரை தவிர , மற்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மன்னிக்கவும். இறைவனை நம்பி வந்தவர்களை விட, ஒரு குறுகுறுப்பில் வந்தவர்களும் இருந்ததை அவர்கள் பேசிக் கொண்டு இருந்தபோது கவனிக்க முடிந்தது. இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தியும் கேள்விப் பட்டேன். அது தவிர  அரசியல் கூத்தும் நடந்து இருக்கிறது. அதை பகிர்ந்து கொள்தல் நாகரீகமாகாது. மிகப் பெரும் ரகசியமான இந்த நிகழ்வை, பட்டவர்த்தனமாக வெளியிட்டது தவறோ என்று கூட எண்ணுகிறேன். இந்த நாளை , சரியாக கணித்து , நம் வாசகர்கள் நீங்களே இனிமேல் வந்து கொள்தல் நலம் என நினைக்கிறேன். மிக நெருக்கமான, தகுதியான சுற்றம், நட்புக்கு மட்டும் தெரியப் படுத்தினால் போதும் என்பது என் கருத்து.

 மற்றபடி அருமையான அனுபவம். கூட்டத்தை எதிர் பார்த்து , முதல் நாளே சென்று விட்டதால் , காலையில் அண்ணாமலையாரின் அபிசேகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன். மொத்தத்தில் அங்கு இருந்த இரண்டு தினங்களும் ,  இன்னும் நிறைய சிந்தனைகளை தூண்டி விட்ட ஒரு இனிய ஆன்மீக அனுபவமாக இருந்தது. அடுத்து வரும் கட்டுரைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதை காண்போம். 

இன்று நாம் பார்க்க விருப்பது , கொஞ்சம் பழைய கட்டுரை. விஜய் டிவி யிலும், ஜு.வியிலும் - வந்த மகா அவதார் பாபா கட்டுரைகளை பற்றி. இதை நீங்கள் ஏற்கனவே படித்தும் இருக்கலாம். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். பாபாவை பற்றி இன்னும் பல அரிய தகவல்கள் , அடுத்து வரும் கட்டுரைகளில்.....

ரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்டுரை :
அடிக்கடி இமயமலைக்குப் போறீங்களே… அது ஏன்? சந்தோஷம், நிம்மதி எதுவும் இங்க இல்லையா? அதுக்கு இமயமலைக்குதான் போகணுமா?
இந்தக் கேள்வி  நிஜத்திலும் பலர் ரஜினியைப் பார்த்துக் கேட்பதுதான்.

அதற்கு ரஜினி அளிக்கும் பதில்: “நிரந்தரமான நிம்மதியை உணர இமயமலைக்குப் போகணும். அந்த உணர்வை, வைப்ரேஷனை சொல்லிப் புரிய வைக்க முடியாது… போய் அனுபவிச்சிதான் தெரிஞ்சிக்கணும்…”
இதோ அந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
ரஜினி இமயமலைக்கு ஏன் போகிறார்… எப்படிப் போகிறார்… அந்த பயணத்தின் தன்மை என்ன? இறுதியாக அந்தப் பயணத்தில் கிடைப்பதென்ன?

ஜூனியர் விகடனில் வெளியான ஒரு பழைய கட்டுரை , நம் வாசகர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு , இங்கே பகிரப்படுகிறது.

சினிமாவில் மட்டுமல்ல… செய்திகளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!
காரமாக ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லி, தமிழ்நாட்டை வாரக் கணக்கில் கிடுகிடுக்க வைப்பார். தமிழ்நாடே அவரைத் தேடிக் கொண்டிருக்கும்போது, மோனத் தவம் இருப்பார்! தன் அரசியல் ஆர்வம் பற்றி நிலையான ஒரு புதிரை உருவாக்கி வைத்திருந்தாலும், தன்னுடைய ஆன்மிக ஆர்வம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகத்தையும் ரஜினி வைத்ததில்லை!

சினிமா, பணம், புகழ் என பல சிகரங்களைத் தொட்டுப் பார்த்தபோதும் அவருக்கான தேடல் என்னவோ இமயமலை சிகரங்களில்தான்!
பல வருடங்களாகப் பனிமலைக்குப் பயணப்பட்டு அவர் தேடுவது எதை என்ற ரகசியத்தை ஓரளவு உடைத்தது ‘பாபா’ திரைப்படம்தான். யோகக் கலை களில் இறைவனைத் தேடலாம் என்ற தத்துவம் சொன்னார் மஹா அவதார் பாபா! அந்த மகானை, தமிழக சாமானியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ரஜினிதான். கிரியா யோகா முத்திரையை தமிழனுக்குக் காட்டியதும் அவர்தான். இமயமலை முகடுகளில் – அதுவும் இறைவனை பாபா கண்டுகொண்ட அதே குகையில் ரஜினி காணும் ஏகாந்தம் என்னவாக இருக்கும்?p42

இந்தத் தேடல்தான் நம்மை இமயமலை நோக்கிப் பயணிக்க வைத்தது.
ரஜினி பயணித்த அதே ரூட்டில் நாமும் பயணித்தோம். ‘விஜய் டி.வி.’ குழுவி னரும் நாமும் இணைந்த தேடல் இந்தப் பயணம்!

பயண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்கும்போதே நாம் ரஜினியின் நண்பர் நாகராஜன் ராஜாவிடம் கொஞ்சம் பேசிவிட்டுக் கிளம்பலாமா..?

”என்னோட அப்பா பெரிய வியாபார சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி வெச்சிருந்தார். அதையும் பார்க்க ஆரம்பிச்சு, சினிமா விநியோக வியாபாரத்தையும் பார்த்துக்கிட்டிருந்தேன். மூச்சு விடக்கூட நேரமில்லாத நேரத்துல அகஸ்தியர் மலைக்குப் போனேன். அங்க இருக்கற அருவியில் குளிச்சிட்டிருந்தப்போ அகத்திய முனிவர் எனக்குக் காட்சியளித்தார். இதை வெளியில சொன்னா உலகம் நம்பாது! ஆனா, எனக்குள்ள ஏதோ ஒரு சக்தி புகுந்துட்டது மட்டும் நல்லாத் தெரிஞ்சது.

இதை இசைஞானி இளையராஜாகிட்ட மட்டும் சொன்னேன். ‘நீ கொடுத்து வெச்சவன்யா… அது பெரும் பாக்கியம். ஆன்மிகத்தைப் பத்தி உன் அபிப்ராயம் என்னய்யா?’ன்னு அவர் கேட்டார்.

இளையராஜாவோட கேள்வி என்னை சிந்திக்க வெச்சது. வியாபாரத்தை அப்படியே விட்டுட்டு அமைதியைத் தேட ஆரம்பிச்சேன். இந்த சமயத்துலதான் பாபா பத்தின விவரங்களை ரஜினி சார் எனக்கு சொன் னார்.
அந்த ஆச்சர்யத்துல என் ஆசை, இமயமலை நோக்கிப் பயணிக்க வெச்சது. ரஜினியோட நண்பர் ஹரி மூலமா என்னோட இமயமலைப் பயணம் அமைஞ்சது. பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செஞ்சிட்டிருந்தப்போ பாபாவோட உருவம் எனக்குத் தெரிஞ்சது!

கிட்டத்தட்ட பாபாவை, ரஜினி வர்ணிச்ச அதே காட்சிகள். அந்த வைபரேஷன் கிடைச்சதும் அங்கிருந்தே ரஜினிக்குப் பேசினேன். அவரும், ‘குட்! உனக்கும் அந்த பாக்கியம் அமைஞ்சுதா?’னு வியந்து போனார்.
p44c
பாபா தரிசனத்துக்கும், பாபா குகைக்கும் நினைச்ச மாத்திரத்துல போயிட வாய்க்காது. சொத்துபத்து இருந் தாலும் சமுதாயத்துல ஓஹோ என்று இருந்தாலும் பாபா அனுக்ரஹம் இருந்தா மட்டும்தான் அந்தக் குகைக்குப் போக முடியும். அந்த அனுக்ரஹத்தை பாபா எனக்கும் வழங்கினார். நான் ஆன்மிக குருவா ரஜினியை ஏத்துக் கிட்டேன். குகைக்குப் போறது ரொம்ப சிரமமான காரியம். எதன் மீதும் பற்றில்லாமல் பயத்தை ஒதுக்கி வெச்சுட்டுத்தான் போகணும்..!” என்று நெகிழ்ச்சியுடன் நாகராஜன்ராஜா பரவசமாக சொல்லிக்கொண்டே போனார்.

இதோ, தொடங்குகிறது முதல் கட்டப் பயணம் டெல்லியை நோக்கி…
டெல்லியிலிருந்து சாலை மார்க்கமாக இமயமலை நோக்கிய நமது பயணம் ஆரம்பமானது. கான்பூர் வழியாக இமயமலையை நோக்கி நாம் பயணித்த தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகத்தான் இருந்தது. 20 கிலோ மீட்டர்களுக்கு ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது. ஆனால், அத்தனை பாலங்களிலும் கால்வாசிப் பணியே முடிவடைந்திருந்தது. மத்திய – மாநில அரசுகளுக்குள் சுமுக உறவில்லை என்று வழியில் எதிர்ப்பட்டவர்கள் காரணம் சொன்னார்கள்.p44b
அந்த சாலையில் பயணித்த டிஸைனில் வாகனங் களை வேறு எங்குமே பார்க்க முடியாது! லோக்கலில் பம்ப்செட் மோட்டார்களைக் கொண்டு கையில் கிடைத்த உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள். அதில் ஓர் ஊரே குவியலாக அம்மிக் கொண்டு பயணம் செய்தது!

கொஞ்சம் அடர்த்தியான மரங்கள் தென்படத் துவங்க… பயணத்தில் சூழத் தொடங்கியது பசுமை. நம்மை வரவேற்றது ஹரித்துவார். விண்ணை முட்டும் சிவன் சிலை ஹரியின் வாசலாக (துவார்!) வரவேற்றது. சிவனை சுற்றி கங்கை ஏகாண்டமாக, அழுக்காக ஓடிக் கொண்டிருந்தது. ஹரித்துவாரில் எங்கிருந்து நோக்கினாலும் சிவனை தவிர்க்க முடியவில்லை. தென்னிந்திய ஸ்தபதியான ஸ்ரீதர்தான் அச்சிலையை வடிவமைத்தவர்.

இங்கிருந்து சில மைல்களில் வருவது ரிஷிகேஷ்!

இமயமலையின் அடிவாரம் என்று சொல்லலாம். எங்கு திரும்பினும் பச்சைப் போர்வை போர்த்தி, இமயம் தனது கம்பீரத்துக்கு டிரெய்லர் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது. ரிஷிகேஷ் தேசாந்திரிகளின் தேசம். இதன் ஒவ்வொரு தெருவுக்கும் சரித்திரப் பின்னணி உண்டு. சந்நியாசிகள் காவியில் தங்கள் சொந்த வாழ்க்கையை மூழ்கடித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை நெருங்கி முகத்தை உற்று நோக்கினால் ஒவ்வொருவரின் முகத்திலும் புதிய தேடலோடு சேர்ந்து பழைய குடும்ப வாழ்க்கையின் பதிவுகளும் மிச்சமிருப்பதைக் காண முடியும்.

வீதிக்கு இரண்டு அல்லது மூன்று அன்னதான சத்திரங்கள்… காலை – மாலை – இரவுகளில் அங்கு தயாராகும் உணவுக்காக சந்நியாசிகளைத் தேடிப் போக, சத்திரங்களிலேயே வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் வெறுங்கையான காவித் துறவிகளே தென்பட்டாலும் பொங்கி வைத்த சோற்றைத் திங்க சொற்பமாகவே வந்து போகிறார்கள். வேத கோஷத்துடன் ஒரு கூட்டம் கங்கை நதிக் கரையில்!

இங்கே பிரவாக மெடுத்து, பால் போல் பெருகுகிறது கங்கை. அங்கே பார்த்ததை வார்த்தைகளில் விவரிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இனம் புரியாத இருட்டு தேசமான ரிஷிகேஷில் சந்நியாசிகளுக்கு அடுத்து அதிகம் வந்து போவது வெளிநாட்டினர்தான். ஏதோ ஒரு வீதியில் எந்த ஈகோவும் இல்லாமல் தரையில் உட்கார்ந்து வானத்தை நோக்கி முணுமுணுத்தபடி இருக்கிறார்கள் இந்த வெளிநாட்டு ஆன்மிக விருந்தினர்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ரிஷிகேஷில்தான் சூடானபொங்கலும், ஆவி பறந்த இட்லியும் பார்க்க முடிந்தது. ரஜினி இங்கே வரும்போதெல்லாம் தங்குவது தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமக் கிளையில்தான். ஆஸ்ரமத்தின் பின்பக்கப் படிகள் நேராகப் போய் முடிவதே கங்கை நதியில்தான். அங்கே பக்தர்கள் கங்கையை லயித்தபடியே தங்கியிருக்க, அழகாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளன அறைகள்.

p44a
”ரஜினி இங்கே தங்குகையில் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஆழ்ந்து, அகன்று ஓடும் நதிப் பெருக்கையே மணிக் கணக்கில் உற்றுப் பார்த்திருப்பார்…” என்று சொல்லும் ஆஸ்ரமத்தின் இளம்துறவி குகாத்மானந்தா தொடர்ந்து,
”கங்கையை ரஜினி பார்க்கத் துவங்குகிற ஒரு சில நிமிடங்கள் வரைதான் அவரிடம் அசைவு இருக்கும். அதுக்கப்புறம் அப்படியே பல மணி நேரம் இருப்பாரு. உதாரணத்துக்கு, நின்னுக்கிட்டுப் பார்த்தார்னா நின்னபடியேதான் இருப்பாரு. உட்கார்ந்து இருந்தால் எழுந்திருக்கவே மாட்டாரு. தன்னோட அறைக்கு போனாலும் அங்கே தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேணாம்னு சொல்லி கண்மூடி தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாரு. அவராக வந்து பேசினாத்தான் உண்டு. அமைதியைத் தேடி வர்ற பலரில்… அதை சரியா கண்டுபிடிக்கிற அபூர்வமான மிகச் சிலரில் உங்க ரஜினியும் ஒருத்தர்!” என்றார்.ganga-haridwar
ரஜினிக்கு ஆஸ்ரமத்தில் உதவியாக இருப்பவர் சுப்பிரமணியம். இவரது சொந்த மாநிலம் கேரளா. பல வருடங்களுக்கு முன்பு இந்த ஆஸ்ரமத்துக்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார். இப்போது நிறைய பாஷைகள் இவருக்கு அத்துப்படி. ரஜினி இவரிடம் தமிழில், இந்தியில்…. அல்லது மராத்தியில் பேசுவாராம்.
”ஒரே ஒரு துணிப்பை மட்டும்தான் கொண்டு வருவாரு. அதுல பழைய சட்டை ரெண்டு, லேசா தையல் விட்ட பனியன் ரெண்டு, ஒரு தொப்பி, ரெண்டு மூணு கறுப்புக் கண்ணாடி இருக்கும். ஆஸ்ரமத்துல என்ன சாப்பாடு இருக்கோ அதைத்தான் சாப்பிடுவாரு. கொண்டு வந்த சட்டை பனியன்களையே மாறி மாறி போட்டுக்கிட்டு ரிஷிகேஷ் வீதிகள்லயும் நடமாடுவாரு. டீக்கடைகள்ல நின்னு டீ குடிப்பாரு. ஒரு தடவை அவரை ஜனங்க கண்டுபிடிச்சு சூழ்ந்துட்டாங்க. ஆனா துளிகூட டென்ஷன் இல்லாம லாகவமா சமாளிச்சு அவங்ககிட்ட இருந்து தனியா போயி கங்கைக் கரையோரம் நடக்க ஆரம்பிச்சுட்டார்!” என்கிறார் சுப்பிரமணியம்.

ரிஷிகேஷிலிருந்து மேற்கே நம் பயணம் தொடர்கிறது. செங்குத்தாக இமயம் ஓங்கி உயர்ந்து தன் பிரமாண்டத்தைக் காட்டுகிறது. கைநீட்டி நம்மை அழைக்கிறது. அதில் அழகுடன் நிறைய நிறைய ஆபத்தும் காத்திருக்கிறது. மெள்ளவே முன்னேறினோம். ஜப்பான் சாமியார், சஞ்சீவி மலை, பாபாஜி குகை, ரஜினியின் மின்சாரக் கணங்கள் என்று அடுத்தடுத்து ஆச்சர்யங்கள் அங்கே காத்திருக்கின்றன…


ரிஷிகேஷில் இருந்து இமயமலையில் பகல் நேரம் ஏறிச் செல்வதுதான் பாதுகாப்பு’ என்று ரஜினி யின் நண்பர் ஹரி சொல்லிக்கொண்டேதான் இருந்தார். ஆனால், ரிஷிகேஷின் அழகில் மயங்கிப்போய் அதிலி ருந்து மீள இரவாகிவிட்டது. போகவேண்டிய தூரம் அதிகமிருந்ததால், அசட்டு தைரியத்தில் இரவிலேயே நம் வண்டி இமயமலையில் ஏறத் துவங்கிவிட்டது.
p43வளைந்து நெளிந்து நம் வாகனத்தை வழி நடத்திக்கொண்டிருந்த அந்த சாலையில், எதிர் பக்கத்திலிருந்து வாகனங்களே வரவில்லை. அவசரம் மற்றும் கட்டாயத்தின் அடிப்படையில்தான் இந்த சாலைகளில் இரவு நேரப் பயணம் இருக்குமாம். இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்ட போதுதான் இந்தி நடிகை மந்திரா பேடியின் அம்மா புரோத்திமா பேடி நிலச்சரிவில் சிக்கி அண்மையில் இறந்தார் என்பதை, எங்கள் வண்டிக்குள்ளிருந்த யாரோ மெதுவாகச் சொல்ல… ஜிலீரிட்டது முதுகுத்தண்டு! அந்த கும்மிருட்டில் நம் வாகனம் துப்பிய வெளிச்சம் மட்டுமே வளைந்தோடிய ரோட்டைக் காட்டியது!
திடீரென்று பார்த்தால்… ரோட்டை அடைத்துக் கொண்டு ஒரு பாறாங்கல். உருண்டுவந்த ஜோரில் அது சின்னதும் பெரிசுமான இன்னும் பல கற்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்க… அந்த மலைப்பாதை மூடிக்கிடந்தது. பயணக்குழுவினர் அனைவரின் முதுகுத்தண்டும் சில்லிட்டது. இரவை அந்த இடத்திலேயே கழித்தோம். காலையில் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் வரத் துவங்கவும், ஆட்கள் வந்து பாறாங்கற்களை அகற்றி வழி ஏற்படுத்தினார்கள்.
பகல் பயணம் வேறு மாதிரி சவால்! பல இடங்களில் வாகனத்தைக் கொஞ்சம் வேகமாகச் செலுத்தினாலும், அதிர்வில் அது லேசாகக் குதித்து சாலையோரத்துக்கு வந்தது. எட்டிப் பார்த்தால் கிடுகிடு பள்ளம். உயிர் மேல் பயம் வர, இறங்கி நடந்தோம். ஆளில்லா வாகனத்தை ஊர்ந்து ஊர்ந்து ஓட்டிப் பின்தொடர்ந்தார் டிரைவர்!
இதோ வந்துவிட்டது ருத்ரப் பிரயாகை! ‘ஓவென’ கங்கை ரவுத்திரம் கொப்பளிக்கப் பாய்கிறது இங்கே! சின்னச் சின்னதாக பல நதிகள் இந்த இடத்திலேயே வந்து கங்கையோடு கைகோத்துக் கொள்ளத் தொடங்கி விடுகின்றன. நிமிர்ந்து பார்த்தால் நூறு, இருநூறு அல்ல… ஆயிரக் கணக்கில் மலைக்குன்றுகள், மதம்கொண்ட யானைகளாகத் திமிறிக் கொண்டிருந்தன. இமயத்தில் இப்படி லட்சத்துக்கும் அதிகமான மலைக்குன்றுகள் உண்டாம்! இயற்கையின் கம்பீரத்தை பயபக்தியோடு ரசித்துக்கொண்டே சென்ற நம்மை அடுத்து அழைத்தது கர்ணப் பிரயாகை! கங்கைக் கரையை ஒட்டியே ஓங்கி நிற்கிறது ஒரு நடுத்தர ஹோட்டல். இங்கு ரஜினி வரும்போதெல்லாம் அறை எடுத்துத் தங்குகிறார். மிடில் க்ளாஸ் மனிதர்கள் வாசம் செய்யும் சர்வசாதரண ரூம்கள்தான் இங்கே.
என்னதான் இயற்கையோடும், ஆன்மிகத் தேடலிலும் ரஜினி ஒன்றி விட்டாலும், அவரை இங்கும்கூட புகழ்வெளிச்சம் விட்டபாடில்லை! இங்கும் ரஜினியை அடையாளம் கண்டு நூற்றுக்கணக்கானவர்கள் சூழ்ந்துவிடுவார்களாம். இந்த ஹோட்டலுக்குப் பெயரெல்லாம் இல்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் ஒரு சூப்பர் துறவியாக இங்கே வந்து போவதாலேயே உள்ளூரில் இதற்கு ‘ரஜினி தாபா’ என்று பெயர் வந்துவிட்டது. மலைசஞ்சாரத்தின்போது இங்குதான் ரஜினி வயிறார சாப்பிடுவார். சப்பாத்திக்கு மாவை பிசைபவரில் துவங்கி, கல்லாவில் கணக்குப் பார்ப்பவர் வரை ரஜினியோடு பல விஷயங்களும் ஜாலியாகக் கதைப்பார்களாம் இங்கே.
ரஜினி வந்து விட்டால் அவரோடு எல்லோருமே ஒரே பந்தியில் அமர்ந்து பசியாறுவார்களாம். அவர் தங்கும் அறைக் கதவைத் திறந்தால், கங்கை சூப்பர் ஸ்பீடில் புகை கிளப்பிக்கொண்டு பாய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் கரையில் ஒரு சிவன் கோயில். அதற்கு எதிர்க் கரையோரம் பிணங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பாதி எரிந்த நிலையில் மனிதனின் கருகிய மிச்சங்களை கங்கைத் தாய் தன் சுழல்கரம் நீட்டி தன்னுள் வாங்கிக் கொள்கிறாள்!
p42a
மழைத் தூறல், பனி மூட்டம் என இமயம் நிமிடத்துக் கொரு ஜாலம் காட்டிக் கொண்டிருக்க… கர்ணப் பிரயாகையைத் தாண்டி ஆதிபத்ரி அடைந்தோம்! ‘இதுதான் பழைய பத்ரிநாத்’ என்பவர்களும் உண்டு. இமயத்தில் ஆதிபத்ரி என்பது நம்மூர் விழுப்புரம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள்போல. இங்கிருந்து மிக முக்கியமான யாத்திரை ஸ்தலங்களுக்கு சாலைகள் பிரிகின்றன. வந்த சாலையிலேயே ஆதிபத்ரியைத் தாண்டி நேராகப் போனால் பத்ரிநாத், வலது பக்கம் போனால் அமர்நாத், வைஷ்ணவிதேவி கோயில், கைலாசம், மானஸரோவர் போகலாம்.
நாம் பயணித்தது – ஆதிபத்ரியில் இருந்து இடது பக்கம் திரும்பி! எதிரில் கூப்பிடு தொலைவில் வருபவரைக் காண முடியாத பனிமூட்டம். அதன் அடர்த்தியும் குளிர்ச்சியும் சொல்லவோ, எழுதவோ முடியாத பிரமிப்பின் உச்சம்!
p42c”ராணிகேட் வந்தாச்சு…” என்றும், ”இதுதான் துரோணகிரி” என்றும் சொல்லிச் சொல்லி அடுத்த பாயின்ட்களைக் கடந்தது நம் குழு. ”துரோணகிரிதான் இலங்கை யுத்தத்தின்போது அனுமன் சுமந்து சென்ற சஞ்சீவி மலை!” என்று அண்மையில் சில ஆய்வுகள் கூறுவதாக விளக்கினார், ரஜினியின் நண்பர் ஹரி. இந்தப் பாதையில் ஊர்ந்து செல்வதற்காகவே ஒரு ஜீப்! அதில் ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்டிருப்பது போன்ற ஹாரன்! இந்த ஒலியில்தான் காட்டு விலங்குகள் விலகி ஜீப்புக்கு வழிவிடும் என்பது அந்த டிரைவர் கம் ஓனரின் நம்பிக்கை. ஜீப் பயணம், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் நடந்தது. சேரவேண்டிய இடத்தை உயிரோடு அடைந்த பின்பு பயணக் குழுவினர் அனைவருமே அந்த டிரைவருக்கு உலகின் மிகச் சிறந்த ஓட்டுநர் என்ற பட்டத்தை, நீண்ட பெருமூச்சோடு வழங்கினோம்..

p42bஅந்தப் பிரதேசம் எங்கும் கஞ்சா செடிகள் கேட்பாரின்றி தலையாட்டிக் கொண்டிருந்தன. எங்கும் சுத்தமான ஆக்சிஜன். அதை சுவாசித்தபடியே பாபாவின் குகை நோக்கி நடக்கத் துவங்கினோம். சுமார் நான்கு மணி நேரம் ஆபத்தான மலைப்பாதையில் செங்குத்தாக ஏறவேண்டும். ‘பாபா குகை போகும் வழி’ என்று சின்னச் சின்ன அறிவிப்புகள் புதர்களுக்குள் மறைந்திருக்கின்றன. ஓர் இடத்தில் சின்னதாக அருவி. அது தண்ணீராகக் கொட்டும் ஐஸ்கட்டி! அந்தச் சிற்றருவியில் தலைகொடுத்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் எந்த சலனமும் இல்லாமல் ரஜினி உட்கார்ந்திருப்பார் என்று ஹரி சொன்னார். ”நாமளும் குளிக்கலாம். இந்த ஒரு குளியல் ஒரு வருஷத்துக்கு உங்ககிட்ட எந்த நோயையும் அண்ட விடாது… வர்றீங்களா?” என்று ஹரி முதல் ஆளாக நடக்கத் துவங்கிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து நாமும், ‘விஜய் டி.வி.’ குழுவினரும் போனோம். அருவியில் தலை மீது ஐஸ் மழை இறங்கி, உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ச்சுகிறது. உடம்பெல்லாம் நனைந்தவுடன் பார்த்தால், ஆவி பறக்காத குறையாக உடம்பு சூடாவது ஒரு அதிசயம். அந்தச் சூட்டோடு அனுபவித்துவிட்டு வெளியே வந்தால் சிலுசிலு  வென்ற ஈரம் தோய்ந்த பனி மீண்டும் நம்மைத் தாலாட்டுகிறது. பாபா குகையைப் பராமரிக்கும் ‘யோகதா சத்சங்க’த்தினர் பொதுவில் இந்த இடம் வரையில் யாரையும் அனுமதிப்பதில்லை. யோகக் கலை மீதான ஆர்வம் கொண்டவர்களா என்று இந்த சங்கத்தினர் சில கேள்விகள் கேட்டு திருப்தியான பிறகே அனுமதிக்கிறார்கள். கைத்தடிகள் இல்லாமல் ஒரு அடிகூட முன்னேற முடியாது.
p421
நம்மிடம் இருந்த லக்கேஜ்களை சுமக்க வன வேடர்கள் உதவிக்கு வந்தார்கள். இவர்கள் எல்லோருமே சாட்சாத் ரஜினியின் நண்பர்கள்! ஹரியின் தலையைப் பார்த்ததுமே, ‘ஓ ரஜினிக்குத் தெரிந்தவர்களா……’ என்று உரிமையோடு வந்து உதவினார்கள்.
‘சாரோட அடுத்த படம் ரிலீஸ் ஆயிடுச்சா?’ என்று ஒருவர் கேட்க… அதற்கு பதிலாக, ‘இன்னும் வந்திருக்காது. வந்திருந்தா… சார், நம்மகூட இங்கல்லவா இருப்பார்…’ என்றார் இன்னொருத்தர். ஆம், இவர்களுக்கும் ரஜினி பட ரிலீஸ் முக்கியம்தான். காரணம், படம் ரிலீஸ் ஆகும் சமயம், இங்கே , ரஜினியே நேரடி ரிலீஸ் அல்லவா!
சட்டென்று நின்று விடுகிறார் ஹரி. அவர் உடல் லேசாக சிலிர்க்கிறது. கைநீட்டிக் காட்டுகிறார். கண்ணெதிரில் ஒரு குகை தெரியத் துவங்குகிறது. இமயத்தின் ஒரு சிகரத்தின் உச்சியில் நடுநாயக மாக இருக்கிறது அந்த குகை. அதற்குப் பின்னால் இருக்கிறது மற்றொரு சிறிய குகை. அதுதான் பாபாவின் மந்திர குகை!
கஷ்டப்பட்டு ஒருவர் ஊர்ந்து செல்லும்படி 23 அடிக்கு துவாரம்… இதைக் கடந்தால் உள்ளே சின்னதாக மண்டபம். ‘இங்குதான் காலங்களைக் கடந்த பாபா யோகத்தில் ஆழ்ந் திருக்கிறார். இந்த குகைக்குள்தான் ரஜினியும் சென்று வருகிறார். ”உள்ளே சென்றால் ‘விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்’ என்ற பரவச நிலைதான்!” என்று ஹரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வன வேடர்கள் புலி மாதிரி ஒலி எழுப்பினார்கள். புரியாமல் நாம் பார்க்க…”எப்போதாவது மட்டுமே மனிதர்கள் சஞ்சாரம் செய்யும் இடமில்லையா… பல சமயம் குகையினுள் புலி இருக்கும். ஓசை எழுப்பினால் உள்ளிருந்து அதுவாக வெளியேறி எதிரே இருக்கும் பள்ளத்தாக்கில் குதித்து ஓடிவிடும்…” என்றார்கள்.
ரஜினி வந்த பல சந்தர்ப்பங்களில் இப்படி பலவிதமாக நடக்குமாம். ஒருமுறை கண்ணெதிரில் புலி வெளியேறி ஓடிப்போனபின்தான் ரஜினி உள்ளே போனதாக வன வேடர்கள் சொன்னார்கள்.
p44b1இந்த குகையைப் பராமரிக்கும் யோகதா சத்சங்கத்துக்கு சென்றோம். துரோணகிரியில் ஒரு சிகரத்தின் முகட்டில் இருக்கிறது ஆஸ்ரமம். அதன் வாசலில் 20 அடியில் சாலை, அதைக் கடந்து பிரமாண்ட பள்ளத்தாக்கு… எட்டிப்பார்த்தால், பைன் மரங்களின் உச்சிகள் மட்டுமே கண்ணுக்குத் p44a1தெரிகின்றன. இதை நிர்வகிக்கும் ‘ஜப்பான் சாமியார்’ நிர்மலானந்தாவை சந்தித்தோம். அவருக்கு 86 வயது என்பதை நம்ப முடியவில்லை. 35 வருடங்களுக்கு முன்பு அவர் இங்கு வந்திருக்கிறார். அதன் பின் யோகக் கலையில் இறைவனைத் தேடும் பணியில் இங்கேயே தங்கிவிட்டார். ”ரஜினி இங்கே வருவார். யோகக் கலைகள் பற்றி திரும்பத் திரும்ப கேட்டுத் தெரிந்து கொள்வார்.” என்றவர், யோகக் கலை பற்றி சிம்பிளாக ஒரு வகுப்பும் எடுத்தார் நம் குழுவுக்கு.
”இந்தக் குகைக்குள் உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை அப்படியே மனதுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் பகிர்ந்து கொள்ளக்கூடியதல்ல, இந்த வைபரேஷன். அதேசமயம், ரஜினி உள்பட அடிக்கடி இங்கே வருபவர்களுக்கு ஏற்படும் ஒருசில அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளக் கூடியவை. மலையிலிருந்து இறங்கியதும் அதுபற்றிப் பேசலாம்…” என்றார் ஹரி. உயிரைப் பணயம் வைத்து, இயற்கையின் எல்லையில்லாத பரவசத்தையும் அனுபவித்து வந்த நாம், குகையிடமிருந்து விடைபெற்று திரும்பத் துவங்கினோம்.
மலை ஏறும்போது பயணக் குழுவினருக்குள் எழுந்த கலகலப்பான பேச்சு இப்போது இல்லை. எல்லோரிடமும் ஏதோ ஒரு மௌனம். சமவெளிக்கு மீண்டும்வந்தடைந்து, உத்தரப் பிரதேசத்தின் புழுதியையும் வெயிலையும் தொட்டதும், மெதுவாக ஒவ்வொருத்தரின் செல்போனும் சிணுங்கத் தொடங்க… அப்போதுதான் மாமூல் மனிதர்களானோம்.
சென்ற இடமும், அங்கே எழுந்த கேள்விகளும் நமக்குள் சுழன்று கொண்டே இருந்தன.
நன்றி: ஜூனியர் விகடன்

9 comments:

arul said...

hi, i had been a regular reader of this website and friends of mine who are selected and informed personally by me came to thiruannamalai. unfortunately due to some circumstances it is not possible for me to come there or any other temple
fate wins here.


(www.astrologicalscience.blogspot.com)

Saravanan said...

ஆமா, அது என்னங்க பூசாரி, பக்தர்கள் சாமி கும்பிட்டு இருக்கும் போதே கோயில் நடைய சாத்திட்டு போயிட்டாரு. கேட்டா, கூட்டத்துல யாரோ ரெண்டு பேரு அடிதடில இறங்கிட்டாங்கன்னு சொன்னாங்க. கோயில்ல ஒழுங்கா ஏற்பாடு செஞ்சிருக்கலாம். அந்த பெரிய அருணாச்சல கோயில்ல மட்டும் தான் தரிசனம் செய்ய வரிசை கட்டி இருந்தாங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவல். பகிர்விற்கு நன்றி. நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

KANNAN said...

குபேர லிங்கத்தில் சரியான முன்னேற்பாடு இனியாவது செய்ய வேண்டும் ஐயா

ரமேஷ் வெங்கடபதி said...

நானும் அங்கு மாலை4.50க்கு வந்தேன்! தள்ளுமுள்ளுவைப் பார்த்து அசந்துவிட்டு, அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளிக்கப் பெற்றுக் கொண்டு, குபேரலிங்க வாசலுக்கு அருகில் வெண்பொங்கல் வாங்கிக் கொண்டு, நாங்கள் கொண்டு சென்ற அன்னப்பொட்டலங்களை அன்பர்களுக்கு விநியோகித்துவிட்டு,சரியாக 6மணிக்கு ராஜ கோபுரத்ஹ்டில் இருந்து மலைச்சுற்று ஆரம்பித்தோம்! பிறகு இரவு 10 மணியளவில் குபேரலிங்கனாரை வரிசையில் நின்று தரிசித்தோம்!

ரமேஷ் வெங்கடபதி said...

இந்த நிகழ்வை விளம்பரப் படுத்த வேண்டாம் என்று ஏன் தாங்கள் கேட்டுக் கொண்டீர் என்று நன்கு உணர்ந்தேன்! மலைச்சுற்றுப் பாதையில், மின் தடையால், நட்சத்திர வெளிச்சத்தில் நடந்தது, புது அனுபவம்!

ரமேஷ் வெங்கடபதி said...

அடுத்த நாள் காலையில்தான் அம்மை அப்பனை தரிசிக்க முடிந்தது! திரும்பும்போது வக்ர காளியை தரிசித்துவிட்டு,சமயபுரம் மாரியாத்தாளையும், அரங்கனையும், தாயாரையும் கண்டுகுளிர்ந்து வீடு திரும்பினோம்! நல்லதொரு ஆன்மீக பயணத்திற்கு தூண்டுகோலாக விளங்கியமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

ரமேஷ் வெங்கடபதி said...

இது போன்று முக்கிய நிகழ்வுகளை தங்களைப் பின் தொடர்வோருக்கு மட்டுமாவது, மின்னஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

ஆன்மீக உலகம் said...

இமயமலை பயணக் கட்டுரை மனதை ஏங்க வைக்கிறது... எப்பொழுது அங்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைக்குமோ.. பகிர்வுக்கு தலைவணங்குகிறேன்.. நன்றி ஐயா!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com