Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கண்டேன் கடவுளை !

| Nov 14, 2011

விஜயதசமி அன்று போரூர் சேது க்ஷத்திரத்தில் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் "கடவுளை நேரில் கண்டவர்கள்' என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். கருத்தாழமிக்க அச்சொற்பொழிவின் தொகுப்பு:





ழிபாட்டு முறைகள் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு என்று மூன்று வகைப்படும். தனக்குப்பிடித்த தெய்வத்தை, தனக்கு விருப்பமான வடிவத்தில் வழிபடுதலே உருவ வழிபாடாகும். கண்ணுக்குத் தெரியாத சக்தியாக, கடவுள் சக்தியை போற்றி வழிபடுவது அருவ வழிபாடு.

அருஉருவ வழிபாடு என்பது வடிவம் மட்டும் கொண்டு, கண், காது போன்றவைகளின்றி வழிபடுவது. சிவலிங்க வழிபாடு அருஉருவ வழிபாட்டு வகையைச் சேர்ந்தது. உயிர்கள் எல்லாவற்றிலும், இறைச்சக்தி உறைந்து இணைந்துள்ளது என்ற அடிப்படைத் தத்துவத்தை விளக்கும் நோக்கிலேயே, நவராத்திரி விழாவில் கடவுள் வடிவில் மட்டுமின்றி பிராணிகள் செடிகொடி மரங்கள், என எல்லா வடிவங்களிலும் பொம்மைகளை வைத்து நாம் வழிபடுகிறோம். 

இந்த யுகத்திலும் நம்மோடு வாழ்ந்த பல ஞானிகள், கடவுளை நேரில் கண்டுள்ளார்கள். அத்தகைய ஞானிகளை மக்கள் கடவுளாகவே பாவித்து, வழிபட்டு அவர்கள் காட்டிய நல்வழியில் நடக்கிறார்கள். அத்தகைய ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், தென்னிந்தியாவின் ராமலிங்க வள்ளலார், வடக்கில் பிறந்து வளர்ந்தாலும், தெற்கில் தன் ஆன்மீகப் பணியைச் செய்த அரவிந்தர். 

இவர்கள் மூவரின் வரலாற்றிலும், இவர்கள் கடவுளை நேரில் தரிசித்ததைத் தேதி வாரியாகப் பதிவு செய்துள்ளார்கள். அறுபத்து நாலுவித சாதனைகளில் தோய்ந்திருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், அனுமத் உபாசனைக்காக மரத்திலேயே பலகாலம் தவமிருந்து வாழ்ந்தார். குரங்குகள் போலவே மரத்திலேயே தேங்காய் உண்டார். உபாசனையை முடித்து, மரத்திலிருந்து கீழே வந்தபோது, அவருடைய முதுகுத் தண்டு வால்போல் தொங்கிவிட்டது. சில நாட்கள் கழித்தே முதுகுத் தண்டு சாதாரண நிலைக்குத் திரும்பியது. இவ்வாறு பக்தியில் பரிபூரணமாக ஒன்றிப்போகும் பக்குவ நிலையை அடைந்துவிடும் பரமஹம்சர், காளி கோயிலில் அர்ச்சனை செய்து வாழ்ந்து வந்தார். வெறும் கற்சிலையாக இல்லாமல், காளியை உயிர்த் துடிப்போடு கண்டவர் பரமஹம்சர். நிவேதனங்களைக் காளிக்கு அவர் ஊட்டிவிட, காளியும் உண்டு மகிழ்வாள். கங்கையில் குளித்த மகா காளி, கோவில் கோபுரத்தின் மேல், தன் கூந்தலை உலர்த்தி, முடியைச் சீவுவதை நேரில் கண்டார். வள்ளல் மதுர்பாபு என்பவர், பரமஹம்சர் நடந்து செல்லும்போது காளியாகவும், திரும்பி நடந்து வரும்போது பரமசிவனாகவும் காட்சியளித்ததைக் கண்டு நெகிழ்ந்து தன் வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்.

ள்ளலார், திருவொற்றியூரில் குடிகொண்டுள்ள வடிவுடை அம்மனை நேரில் காணத் தவமிருந்தார். மிகச் சிறுவயதிலேயே இறை நாட்டம் கொண்ட வள்ளலார், ஒருநாள், இரவெல்லாம் ஆலயத்தில் அம்மன் சந்நிதியில் தியானத்தில் இருந்து, நடு இரவுக்குப் பின் வீட்டுக்குவந்து, அன்னை ஸ்தானத்தில் தன்னை வளர்க்கும் அன்பு அண்ணியை தொந்தரவு செய்யலாகாது என்று வாசல் திண்ணையிலேயே பசியோடு படுத்துறங்கினார். அந்த நடுநிசியில் ஜொலிக்கும் முகத்தோடு, அன்பு நிறைந்து, அண்ணியின் உருவில் வடிவுடை அம்மன் வந்து, வள்ளலாரை எழுப்பி, தாயாகவே மாறி பசியைப் போக்கினாள். மறுநாள் தனக்கு காட்சியளித்தது அண்ணியல்ல, அம்பிகை எனத் தெரிந்து கொள்கிறார் வள்ளலார். 

ரவிந்தர், நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டபோது, சிறையிலடைக்கப்பட்டார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட அரவிந்தர் சிறையிலிருந்த ஓராண்டு காலமும், கிருஷ்ண பகவானைத் தியானம் செய்தவாறே இருந்தார். சிறையில் கைதிகளுக்குத் தலையில் தடவிக் கொள்ளத் தேங்காய் எண்ணெய் கொடுக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் அரவிந்தரின் தலைமுடிகள் எண்ணெய் தடவி பளபளவென்றிருக்கும். இதுபற்றி அரவிந்தரிடம் கேட்டபோது, தனது தியான சக்தியின் பலனாய், இயற்கையிலேயே, காற்றிலிருந்து தேவையானவற்றை தன் உடல் பெற்றுக்கொண்டுவிடும் எனக் கூறினார். இந்த அரிய செய்தியை அவருடனிருந்த பண்டித உபேந்திர நாத் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

சிறையில் தியானத்திலிருந்த அரவிந்தருக்கு, கண்ணன் புல்லாங்குழலோடு காட்சியளித்தார். தரிசனம் தந்ததோடு மட்டுமில்லாமல், சிறையிலேயே அரவிந்தருக்கு கீதையும் போதித்தார். பகவான் கிருஷ்ணர் போர்முனையில் அர்ச்சுனனுக்குக் கீதையை விளக்கிய கண்ணன், சிறையில் அரவிந்தருக்கு கீதையை போதித்தார். இந்தச் செய்தியை, அரவிந்தர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். 

இதைச் செய்தித்தாள்களில் கண்ட மகாகவி பாரதியார், தன்னுடைய "இந்தியா' பத்திரிகை நிருபர் ஒருவரைக் கல்கத்தாவுக்கு அனுப்பி, அரவிந்தரிடம் கிருஷ்ணரை நேரில் பார்த்த விவரங்களைக் கேட்டறிந்து வரச்சொன்னார். அரவிந்தர், தான் சூட்சும ரூபத்தில் புல்லாங்குழல் ஊதும் கண்ணனைத் தரிசித்தது உண்மை என்றும், பகவானைத் தொட்டு பேசிய அனுபவத்தையும் விளக்கினார். திரும்பி வந்த நிருபர், பாரதியாரிடம் தன் அனுபவங்களைச் சொன்னபோது அரவிந்தரின் முகம் எப்படி இருந்ததெனக் கேட்டார். அதற்கு நிருபர், நெகிழ்ச்சியுடன் பேசிய அரவிந்தரின் முகம் பரிபூரண அடக்கத்துடன் அமைதியாக இருந்ததெனச் சொன்னார்.

பாரதியார், "இந்தியா' இதழில், அரவிந்தரை "கடவுளை நேரில் கண்ட சித்தபுருஷன்' என்று குறிப்பிட்டார்.'' சொற்பொழிவின் முடிவில், திருப்பூர் கிருஷ்ணன், "கடவுள் நமக்குத் தாய் போல, கேட்டதெல்லாம் தருபவள்' என்று சொல்லி, பாண்டிச்சேரியில் வாழ்ந்த ஸ்ரீ அன்னை, மணக்குள விநாயகரிடம், பக்தியோடு மனமுருகி தன் அன்பர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிட, அயல் நாட்டார் ஒருவர் அளித்த நன்கொடையில் உடனே அவர்கள் குறைகள் தீர்க்கப்பட்ட நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்தார்.

நன்றி : தினமணி 

2 comments:

arul said...

superb post (www.astrologicalscience.blogspot.com)

YourFriend said...

எனக்கு எப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம் அம்மன் பதிப்பகத்தின் ஸ்ரீ ராகவேந்திர மகிமை நூலை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். ஏதோ கொஞ்சம் ஆறுதல் வரும். (ஆனா, ரொம்ப கஷ்டப்படுறவங்களுக்கு கூட ராகவேந்திரர் லேட்டா அருள் பாலிக்கிறதை படிக்கும்போது மனசு கொஞ்சம் கலங்கும். அவர் மேல வருத்தம் கூட வரும்).

அந்நூலின் முதல் பாகத்தில் (இது வெளியானது இருபது ஆண்டுகளுக்கு முன்பு) ஆங்கிலேயே துரையான சர் தாமஸ் மன்றோ அவர்கள் (இவருக்கு சென்னையில் சிலை இருக்கிறது) ஸ்ரீ ராகவேந்திர சுவாமியை நேரில் கண்ட அந்த மகா அனுபவத்தை பற்றி விளக்கப்பட்டிருக்கும். தவிர, அது அப்போதைய அரசிதழில் (சுதந்திர காலகட்டத்திற்கு முன்பு) கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாமஸ் மன்றோ தாம் மந்திராலய மகானை சந்தித்த அனுபவத்தை விளக்கி கையெழுத்திட்டிருக்கிறார்.

(இது நடந்து முடிந்தவுடன், மந்த்ராலய ஊழியர்கள் சுவாமி மீது கோபம் கொண்டு, நாங்கள் பல ஆண்டுகளாம் உங்களுக்கு தொண்டு செய்துவருகிறோம். அப்படியிருக்க, எங்களுக்கு தரிசனம் கொடுக்காது, ஒரு மிலேச்சனுக்கு தரிசனம் தருவதா? என்று வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். அன்றிரவு, ராகவேந்திர சுவாமிகள் தலைமை அர்ச்சகரின் கனவில் தோன்றி, "அவன் பூர்வ ஜென்மத்தில் என் பரம பக்தன். போங்கள் வேலைநிறுத்தத்தை விடுத்து அவரவர் பணியை பாருங்கள்" என்று அறிவுரை கூறியது தனிக்கதை.

அடுத்து, நான் பெரிதும் மதிக்கும், வணங்கும் வீரத் துறவி, விவேகானந்தர் கூட கடவுளை நேரில் கண்டிருக்கிறார். ஸ்ரீ ராமரை அவர் நேரில் தரிசித்தது பற்றி படித்திருக்கிறேன்.

ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேங்க... கடவுள் எனக்கு கண் திறக்கிறாரோ இல்லையோ... அவர் இருக்கிறது உண்மையா இருந்தா அது போதும் எனக்கு. ஏன்னா, இன்னைக்கு ரொம்ப பேர் "ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்யா. அவன் பார்த்துக்குவான்" என்று பாரத்தை இறைவன் மீது போட்டுவிட்டு தத்தங்கள் பணியை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். செய்யாத தவறுக்கு பழி சுமத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோது, "உங்களுக்கு எல்லாம் அந்த ஆண்டவன் பதில் சொல்வான்யா" என்று தங்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டு கதறியிருக்கின்றனர். அவர்களைப் போன்றவர்களுக்காகவாவது அவன் இருக்கவேண்டும்.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com