Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

தினம் தினம் தாயே தா தரிசனங்கள், உனைவிடத் துணையாமோ பிற ஜனங்கள்..!

| Oct 18, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். கொஞ்சம் வேலைப்பளு அதிகம். தவிர சொந்த வேலையாவும் அடிக்கடி பயணம் என்பதால், நினைக்கும் நேரத்தில் நெட்டில் உட்கார முடிவதில்லை. அனேகமாக , தீபாவளி முடியும் வரை இந்த நிலைமை தான் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்தவரை , கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பதிவுகளை இட முயற்சிக்கிறேன்...( ஒன்னும் அவசரம் இல்லை, மெதுவாப் போடுங்க போதும்ங்கிறீங்களா? )
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTvzoBg5vBwYrZaJWvze7KFoWUYPs-3MH_9-amkvOoDtKzExi4P
இன்னைக்கு பார்க்கப் போறது, ஒரு ரெண்டே ரெண்டு விஷயங்களைப் பற்றி மட்டும்தான். ஒன்னு, திருப்பதி கோவில்லே ஏன் கூட்டம் எப்போவும், அலைமோதுது..?  இன்னொன்னு - ரொம்ப சுலபமான நவகிரக வழிபாட்டு முறைகளைப் பற்றி. ரெண்டுமே மாலை மலர் ஆன்மீக பகுதில வந்தவை. நம் வாசகர்களும் தெரிந்து கொள்வது பல வகையில் பயனளிக்கும்.

கொஞ்சம் சுமாரா , நிம்மதியா வாழ்க்கை போயிட்டு இருக்கும். திடீர்னு , யாரோ புகுந்து ஆட்டையைக் கலைக்கிறது மாதிரி தோணும். சில , நுட்பமான ஜோதிட விதிகளை ஆராய்ந்தவன்ங்கிற முறையிலே சொல்றேன். அந்த குறிப்பிட்ட நேரத்தில, தசா அல்லது புக்தி மாற்றம் நடந்து இருக்கும். நம்மளை மாதிரி அப்பாவி ஜனங்க ,அதைப் பற்றி தெரிஞ்சுக்காம , பதிலுக்குப்   பதிலு மல்லுக் கட்டி , இன்னும் அடி வாங்கி சுருண்டு விழுந்து கிடப்போம்.

இது ஒரு துல்லியமாக ஆராய்ந்து , முடிவெடுக்க வேண்டிய விஷயம். ஆனா, சுருக்கமா கொஞ்சம் எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்ல முயற்சி செய்றேன். 

நம்  ஜோதிட பாடங்களைப் படிச்சவங்க எல்லாருக்கும் அனேகமா ஒரு விஷயம் தெரிஞ்சு இருக்கலாம். சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் பற்றி. குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் எல்லாம் சுப கிரகங்கள். தேய்பிறை சந்திரன் , சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது எல்லாமே தீய கிரகங்கள். லக்கினத்துக்கு எந்த வீட்டுக் குரியவர் , எந்த இடத்தில் இருந்து, யாரின் சாரம் பெற்று தசை நடத்துகிறாரோ , அந்த வகையில் தான் - உங்கள் வாழ்க்கையின் அத்துணை விஷயங்களும் , சந்தோசமும், துக்கமும் நடக்கின்றது. 

விஷயம் தெரிஞ்சவங்க, கொஞ்சம் மோசமான தசா , புக்தி வரும்போது - முழுக்க அடக்கி வாசிப்பாங்க. கடவுளை இறுக்க பிடிச்சுப்பாங்க. இப்போ , உங்களுக்கு நடக்கிற தசா , எந்த நட்சத்திரத்துல இருந்து நடத்துதுன்னு பாருங்க. அந்த கிரகங்களுக்கு - உரிய வழிபாடு, பரிகாரம், உரிய ஆலய தரிசனம் - உங்களுக்கு வரக்கூடிய தீய பலன்களை குறைக்கும். 

உதாரணத்துக்கு உங்களுக்கு சந்திர தசை ஆரம்பிக்கப் போகுதுன்னு  வைச்சுப்போம். வளர்பிறை சந்திரனா, தேய்பிறை சந்திரனா பாருங்க. சரி, வளர்பிறைனு வைச்சுப்போம். நீங்க பிறந்த நட்சத்திரம் திருவாதிரைன்னு வைச்சுப்போம். மொத்தம் பத்து வருஷம் சந்திர தசை நடக்கும்.. ... இதுல சந்திர தசை , சுய புத்தி பத்து மாசம் நடக்கும்.

காலத்தோட - ரொம்ப சிம்பிளான ஒரு பார்முலா இருக்கு. இந்த சுய புத்தி உங்களுக்கு ஓகோனு இருந்துட்டா , மீதி இருக்கிற தசா காலம் முழுக்க பலன்கள் கெடுதலா இருக்கும். சுய புத்தி காலத்துல நீங்க கஷ்டப்பட்டுட்டா , மீதி காலம் பரவா இல்லாம இருக்கும். இதை வைச்சு , கொஞ்சம் உஷாரா இருந்துக்கலாம். அதுபோக இறை வழிபாடு எதுக்குன்னு கேட்டா, உங்களுக்கு கிடைக்கிற கெடுதல் பலன்களை குறைச்சு , கிடைக்க விருக்கும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கத்தான்.

மேலே சொன்னபடி - திருவாதிரையிலிருந்து சந்திர தசை நடந்தால் - சாரம் கொடுத்த நட்சத்திர நாதனான ராகுவின் பலனையும், சந்திரனின் பலனையும், சந்திரன் லக்கினத்திற்கு எந்த வீட்டுக்குரியவனோ அந்த பலனையும், சந்திரன் அமர்ந்து இருக்கும் வீட்டின் அமைப்பைப் பொருத்தும், சந்திரனுடன் இணைந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள் இவற்றைப் பொறுத்தும்  - பலன்கள் கிடைக்கும். இது தவிர கோச்சார ரீதியைப் பொறுத்தும் பலன்கள் கிடைக்கும். இது தான் ,பொதுவாக ஜோதிடர்கள் அனைவரும் , பலன் சொல்லும் முறை --- உங்கள் கடந்த காலம் எப்படி இருந்து இருக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று..!

புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனால் புரியலைனு சொல்றீங்களா?  விடுங்க , ஒரு சின்ன விஷயம் மட்டும் ஞாபகம் இருக்கட்டும். மேலே சொன்ன உதாரணம் படி பார்த்தா,  சந்திரனுக்கு - சிவ பெருமானையும், ராகுவுக்கு - துர்க்கை அம்மனையும் வழிபட்டால் - நலம் பயக்கும் . இதை மட்டும் நீங்க தெரிஞ்சுக்கிட்டா போதும். உங்க ஜாதகப்படி, இப்போ எந்த தசை நடக்குதுன்னு பாருங்க, அந்த தசா நாதனை , அவருக்கு உரிய அதி தேவதையை வணங்கினாலே - நீங்கள் வாழ்க்கையில் , ஒரு நல்ல நிலைக்கு வந்து விட முடியும்.

சந்திர தசை , சுய புத்தியில் - கிட்டத்தட்ட புத்தி பேதலிக்கும் நிலைக்கு தள்ளிவிடும். மனோ காரகன் அல்லவா? திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து, சிவனுக்கு பாலபிசேகம் செய்து வர - அந்த ஜாதகருக்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும்.

இது எல்லாமே , வித்தை நல்லா தெரிஞ்ச ஒருத்தர் - ஆட்டத்திலே புகுந்து கலக்குற மாதிரி. டெஸ்ட் மாட்ச்சுல டிராவிட் ஆடுவார் இல்லை... பத்து பால் ஸ்டம்புக்கு சம்பந்தமே இல்லாம போகும்போது, பேட்டை தலைக்கு மேலே தூக்குவாரு .... அட , என்னைய்யா னு பார்க்கிற நாம டென்சன் ஆவோம்.. அடிக்க வேண்டிய பந்தை , லாவகமா ஆடி - பவுண்டரிக்கு அனுப்புவாரு. கடைசிலே பார்த்தா, மேன்  ஆப் தி மேட்ச் அவரா தான் இருக்கும். உங்களுக்கும் இந்த நவ கிரகங்களோட விதிமுறை , ரூல்ஸ் தெரிஞ்சா - நீங்களும் அடி தூள் கிளப்பலாம், நல்ல நேரம் இருந்தா , நீங்களும் சேவாக் , கிறிஸ் கெய்ல் மாதிரி பட்டையை கிளப்பலாம்...

மொத்தத்தில வாழ்க்கைங்கிற விளையாட்டை ஆடுறதுன்னு முடிவாகிப் போச்சு. நாமளும் விதிமுறைகளை , டெக்னிக்குகளை (அதாங்க வழிபாட்டு முறைகளை) தெரிஞ்சுக்கிட்டு விளையாட ஆரம்பிப்போம். பவுன்சர் உங்க முகத்துக்கு நேர வரும்போது - நீங்க அடி வாங்க போறீங்களா, அதனால முகத்துக்கு ஹெல்மட் போடணுமா , இல்லை கீழே குனியனுமா, இல்லை சிக்ஸ்க்கு தூக்கலாமா - இது எல்லாம் தெளிவா சொல்றதுதான் உங்க ஜாதகம். இது எல்லாம், கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா , ஆட்டம் நிச்சயமா களை கட்டும். இல்லையா , ரிட்டயர்ட் ஹர்ட் , இல்லை ஓவர் முடிஞ்சு போச்சு கதைதான்.     

எது எப்படியோ, விளையாட விதி நமக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கு. குறைந்த பட்சம் ஒரு substitute பிளேயரா கூட இருந்திட்டு , வாய்ப்புக்காக எதிர் பார்த்து காத்து இருக்கலாம். பரவா இல்லை. ஆனா, வெறுமனே பார்வையாளர் மாதிரி ஒதுங்கி நின்னு , யாரும் ஆடிக்கிட்டுப் போங்க, நாங்கல்லாம் வேடிக்கை பார்க்கிறதுல கிங்குனு இருந்துடுவீங்க..

தோல்விகளை நினைச்சு துவண்டு போகாம , கடவுளை துணைக்கு வைச்சுக்கிட்டு , ஆட்டத்தை கலக்குங்க. நமக்கு கிடைச்சது எல்லாம் தோல்விகளே இல்லை. அதுக்குப் பேரு தோல்வினு யாரு சொன்னா.. ! நாம நினைச்சதை அடைய, நாம ஏறிக்கிட்டு இருக்கிற படிக்கட்டு.. அவ்வளவுதான். ... ஒரு குழந்தை நடக்கப் படிக்கிறப்போ, கீழே எத்தனையோ தடவை விழுந்து , விழுந்து தான் நடக்கும். அது எல்லாம் தோல்வியா.. சிரிக்க மாட்டீங்க... !

கீழே விழுந்த குழந்தையை , இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, கம் ஆன் செல்லம், கம் ஆன் னு உற்சாகப் படுத்துவோம் இல்லையா, அந்த மாதிரி நமக்கு உற்சாகம் கொடுக்க தான் , நம் அனைவருக்கும் தந்தையான ஆண்டவன் இருக்கிறான்... அடிபட்டாக் கூட ஓடி வந்து தாங்கிப் பிடிக்க , அந்த தந்தை நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறான்... கவலையே வேண்டாம்... எழுந்து நிற்போம் , நடப்போம்.. கூடிய விரைவில் ஓடி , வாகை சூடுவோம்...!

சரி, நான் விட்டா பேசிக்கிட்டே தான் இருப்பேன்... இந்த விஷயங்களைப் படிச்சுப் பாருங்க... உங்களுக்கே சில விஷயங்கள் புரிபட ஆரம்பிக்கும்.. உங்க ஜாதகத்தை எடுத்து வைச்சு உட்கார்ந்து பாருங்க, நீங்களும் ஜெயிச்சுக் காட்டலாம்.... கூட நானும் துணைக்கு இருப்பேன், சந்தேகம் இருந்தா கேளுங்க....

வாழ்க அறமுடன், வளர்க அருளுடன் !

திருப்பதியின் மகோன்னதம் !

சாளக்கிராமம் என்னும் கல் கிடைப்பது மிக அரிதானது, இந்தக்கல்லில் சக்கரம் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட கற்களை  கோவில்களில் பூஜையில் வைத்து வணங்குவார்கள்.
இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்கி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்கி ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.
நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக் கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக ஐதீகம். திருப்பதியின் ஏழு மலைகளும் ராட்சத சாளக்கிராமக் கற்களே. இம்மலையில் எந்த இடத்தை வெட்டிப்பார்த்தாலும் வெட்டப்பட்ட இடங்களில் சக்கர அமைப்பு இருப்பதைக்காண முடியும்.சிலா தோரணம் பற்றி, நமது பழைய கட்டுரை , ஞாபத்திற்கு வருகிறதா?
 
சாளக்கிராமம் கல்லை வெட்டிப் பார்த்தால், அதன் உள்ளும் சக்கர அமைப்பு இருப்பதைக் காணலாம். திருப்பதி மலையேறும் போது, சாலை போடுவதற்கு ஆங்காங்கே மலை வெட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த வெட்டுகளில் எல்லாம் சக்கரம் அமைப்பு அமைந்திருப்பதையும் காணலாம்.
ஆக, திருமலையே ஒரு சாளகிராமக்கல் வடிவமாக அமைந்து இருப்பதால் மிகவும் சக்தி படைத்தாக அது  கருதப்படுகிறது.அதன் காரணமாகவே அது  உலக  மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு  புண்ணிய ஸ்தலமாக அது இருப்பதால், மக்கள்  மீண்டும், மீண்டும் இந்த மலையை நாடி வந்து ஆனந்தம் அடைக்கிறார்கள். 
திருமலையானது ஒரு சாளகிராமக்கல் என்பதால் தான் இதன் புனிதம் கருதி ஸ்ரீராமானுஜர் மலைமேல் தன் பாதம் பதித்துச் செல்ல விரும்பவில்லை. அதனாலேயே அவர் மலையேறி வெங்கடாசலபதியைத் தரிசிக்காமலேயே இருந்தார். பின் இறுதியில் தன் முழங்கால்களைப் பதித்து ஊர்ந்து ஊர்ந்தே திருமலை ஏறி வெங்கடாசலதியைத் தரிசித்தார். 
நலம் தரும் நவக்கிரக வழிபாடு :
 
நவக்கிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள். நவகிரகங்களை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
சூரியன்:
சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து வணங்க வேண்டும். இதனை ஆதிவிரதமென்றும் கூறுவார்கள். சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சன்னதியை வலம் வந்து சூரிய பகவானை நோக்கி வழிபட வேண்டும். 
"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை
நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய்
வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி"
என்று தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். ஜாதகத்தில் கிரக தோஷமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல் வேண்டும். 
செவ்வாய்:
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குறைபாடுகள் நீங்கும். காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம் வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று வழிபட வேண்டும். 
``வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோஷநிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும். வெற்றி கிட்டும். குறிப்பாக இந்த விரதத்தை அனுசரிக்கும் கன்னிப் பெண்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
சனீஸ்வரன்:
அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச்சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்வதால் தொல்லைகள் குறைவதோடு நன்மை உண்டாகும். பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியிலே நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 
"முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலினார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்குதல் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும்.  இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்க வேண்டும். 
சுக்கிரன்:
இவ்விரதத்தை சுக்கிரவார விரதமென்றும் கூறுவார்கள். அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். சிலர் அவர்களது இஷ்டதெய்வங்களை வணங்கி மேற்கொள்வதுமுண்டு. நவக்கிரக சந்நிதியை வலம் வந்து சுக்கிர பகவானை வணங்க வேண்டும். 
அப்போது
"மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்
வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம்
ஈவோன் தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி! ''
என்ற தோத்திரத்தைப் பாடி வணங்குவதனால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார். 
கேது பகவான்:
கேது விரதம் அனுசரிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்க வேண்டும்.
"பொன்னையின் னுரத்திற் கொண்டேன் புலவர்தம்  பொருட்டால்
ஆழி, தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய் என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும். 
சந்திரன்:
சந்திரதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுசரித்தால் தோஷம் நீங்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று வழிபட வேண்டும். 
"அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளா திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலை முதல் உமையாள பங்கன் செஞ்சடைப் பிறையாருமேரு
மலைவல மாதவந்த மதியமே போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள். 
புதன்:
புதன் விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரும் அனுசரிக்கலாம். புதன்கிழமை அன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி புதன் பகவான் முன் வழிபட வேண்டும்.
"மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன்
திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல் கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி''
என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருந்தி வரும் என்று கூறப்படுகிறது. 
குரு:
குரு தோஷமுள்ளவர்கள் மட்டுமின்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நவக்கிரகங்களை வலம் வந்து வியாழ பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"மறைமிகு கலைநூல் வல்லோன் வானவாக் கரசன்
மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இரமலாப்பாதம் போற்றி''
என்னும் தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்வதன் பலனாக நல்வாழ்க்கை, குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
ராகு பகவான்:
ராகு தோஷமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரதத்தை அனுசரிக்கலாம். காளி கோவிலுக்குச் சென்று வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் ராகு பகவானை வழிபட வேண்டும்.
"வாகுசேர் நெடுமான் முன்னம் வானவருக்கு அமுதம்
ஈயப்போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே
அற்றுப்பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும்
பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!''
என்ற தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

நன்றி : மாலைமலர் - ஆன்மிகம்  


2 comments:

THEIVAM said...

thank you sir adikadi namalayum kavaninga sir

YourFriend said...

>>>>>>>>>>தீபாவளி முடியும் வரை இந்த நிலைமை தான் இருக்கும் என்று நினைக்கிறேன்<<<<<<<<<<<<<

தல, தீபாவளி போனஸ் வெயிட்டா வாங்கியிருப்பீங்க போல. வாழ்த்துக்கள். ஹூம்....

சாளக்கிராம கற்கள் கண்டகி நதியில் மட்டும் கிடைப்பதன் காரணம் ஒன்று உள்ளது. மகா விஷ்ணு நிகழ்த்திய கஜேந்திர மோட்சம் இந்த நதி தீரத்தில் தான் நடைபெற்றது. விஷ்ணு பூஜைக்கு மலர் கொய்ய வந்த கஜேந்திரன் என்ற யானையை, நதியில் இருக்கும் பெரும் முதலை ஒன்று காலைப் பற்றி இழுக்க, அது அலறி இறைவனை அழைக்க, அப்போது கருடன் மீது பறந்து வந்த எம்பெருமான், தனது சக்ராயுதத்தை எடுத்து முதலை மீது வீச, முதலை மோட்சம் பெற்றது. (இறைவன் கையால் உயிர் துறப்பதற்கு அந்த முதலை என்ன புண்ணியம் பண்ணியிருக்குமோ!). அப்போது சக்ராயுதத்திளிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு, அந்த நதியில் இருந்த கூழாங்கற்கள் மீது படிந்ததாம். அது தான் பின்னாளில் சாலக்கிராமாக மாறியது.

நவக்கிரகங்கள் ஒ.கே. அவரவர் கர்மாவின்படி தங்கள் கடமைகளை செய்பவர்கள் தீயவர்களை தண்டிப்பதில் மட்டும் சற்று மெத்தனம் காட்டுகிறார்களோ என்று எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. (சொந்தக் கதை சோகக் கதைங்க!)

மற்றபடி பதிவு சூப்பர்!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com