Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

குழந்தை வரம் பெற உதவும் மகத்தான ஆலயங்களும் , வழிபாட்டு முறைகளும்..

| Sep 13, 2011

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQY8czgxCzQSzsj4FXmxMAv0onXy5ctA9QlT96Q2GuC9GPAYl8f

வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரையுடன் - கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள மகத்தான , மேன்மை பொருந்திய ஆலயங்கள் பற்றிய கட்டுரை , இப்போதைக்கு நிறைவடைகிறது. பின்னொரு சமயத்தில் , வாய்ப்பு கிடைக்கும்போது - இன்னும் விரிவாக தொடர இறையருள் துணை புரியும் என்று நம்புகிறேன்.. 

இனி , நம் வருங்கால சமுதாயத் தூண்களான - குழந்தைகள், மேன்மை  பொருந்திமேதைகளாக பிறக்க எந்த ஆலயத்திற்கு சென்று எப்படி வழிபடுவது என்பது பற்றி பார்ப்போம்..


சிவபுரம் என்றழைக்கப்படும் " திருச்சிவபுரம் "

திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத் தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். சிவபுரத்தில் வீற்றிருந்து அருளும், " சிங்காரவல்லி, ஆர்யாம்பாள், பெரியநாயகி " என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால் இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம், புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத் தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம். இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது

ஆதி கும்பேஸ்வரர் திருக் கோயில் " நவநீத கணபதி" 


காமதேனு தன் சாபம் நீங்க, இத் தலத்தில் விநாயகருக்கு வெண்ணெய் பூசி வழிபட்டதால் இவர் " வெண்ணெய் கணபதி " ஆனார். காமதேனு தன் கால் குளம்பால் உருவாக்கிய " குர " தீர்த்தத்தில் நீராடி, இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய் சார்த்தி வழிபட்டு, பின்னர் " மந்திர பீடேஸ்வரியாய் " அமர்ந்திருக்கும் மங்களநாயகியையும், கிராத மூர்த்தியையும் (கிராத மூர்தி சந்நதி அருகிலேயே உள்ளது). வணங்கினால் புத்திர பக்கியம் கிடைக்கும். சகல பாவங்களும் நீங்கும். கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்றான, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இத் திருக்கோயில், நகரின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் " நவ கன்னியர் வழிபாடு "

நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மலர்கள் , எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத  பெண்கள் பூப்பெய்துவர்.

பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை, கிராத உரு கொண்டு முக்கண்ணன் அம்பெய்ததால், கும்பத்திலிருந்த பல மங்கள பொருட்கள் சுயம்பு லிங்கங்களாக உருவெடுத்து, பல சிவ தலங்கள் தோன்றின. கயிலை நாதன், அம்பெய்யும் பொருட்டு நின்ற இடம் பாணதுறையானது. தல நாயகன் " பாணபுரீஸ்வரரானார் ". இத் தலத்தில், சோமகமலாம்பாள் சமேதராய் வீற்றிருக்கும் நாதனை வழிபட்டால் புத்திர பேறு கிட்டும். கடும் வியாதிகள் நீங்கும். சூரசேனன் எனும் வங்க தேச மன்னன் ஒருவன், தன் மனைவி  காந்திமதியுடன் இத் தல ஈஸ்வரனை வழிபட்ட்தால், தீராத தன் " குஷ்ட நோய் " நீங்கி, புத்திரப் பேறும் பெற்றான்.  இத் தலம், நகருக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய தீர்த்தமாம், மகாமகக் குளக் கரையில் அமைந்துள்ளது 

ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள " குழந்தை கிருஷ்ணன் ".

3 வது திவ்ய தேசமாக விளங்கும் சாரங்கபாணி  கோயிலின் கருவறையில், ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப் பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப் பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு. 

கரு வளர்க்கும் " கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி "

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக் கோயில், கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் மருதாநல்லூர் என்ற கிராமத்தை அடுத்து உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாக புற்று மண்ணிலிருந்து தோன்றியதால், சாம்பிராணித் தைலமும், புணுகும் மட்டுமே சார்த்தப்படுகிறது. பல வருடங்களாக குழந்தை இல்லாதோர், இங்கு வந்து, அம்மனின் முன் உள்ள வாசற்படியை நெய் கொண்டு மெழுகி வழிபடவேண்டும். பிரசாதமாக தரப்படும் மஞ்சளை, பெண்கள் தினந்தோறும் பூசி குளித்திட மகப் பேறு கிடைக்கும். கல்யாண வைபவங்கள் நடைபெறவும், இத் தல நாயகி அருளுகிறாள். 

நின்ற நிலையில் வீற்றிருக்கும் " திருமணஞ்சேரி ராகு பகவான் "

கும்பகோணத்தை அடுத்துள்ள மாயவரத்தை அடுத்துள்ளது " மணவரம் அருளும் திருமணஞ்சேரி ". கல்யாணப் பேறு அளிப்பது " கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரர் " என்றால், இத் தலத்தில் மகப் பேறு அளிப்பது, தனி சந்நதி கொண்டு, நின்ற நிலயில், அருள்பாலிக்கும் " ராகு பகவான் ". அமாவாசை தோறும் இங்கு, குழந்தைப் பேறு வேண்டி பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப தரப்படும். பிரசாதமாக தரப்படும், பாயாசத்தையும், திரும்ப தரப்படும் தேங்காயையும் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்கரை சேர்த்து உட்கொண்டால் மகப் பேறு நிச்சயம். வழிபாட்டை  மூன்று அல்லது ஐந்து அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.

மகப்பேறு தரும் " தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர் "

திருக்
டையூரிலிருந்து சும்மர் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சங்கு வடிவில் உள்ள " தலைச்சங்காடு ". சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருளும் தலம் இது. திருமாலுக்கு சங்கு கொடுத்ததால் இந்த ஈசன் " சங்கரான்யேஸ்வரர் " ஆனார் . அம்பிகை " சௌந்தரநாயகி அம்மன் ". பௌர்ணமி தோறும், இந்த அம்மனுக்கு, குழந்தை வரம் வேண்டி. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சார்த்தப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தான பிரசாதத்தை சிறிது உண்ண குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், வழிபாட்டின்போது, பௌர்ணமி விரதம் இருப்பது நல்ல பயன் அளிக்கும். 

கரு தந்து காத்திடும் " திருக்கருகாவூர் கர்பரட்சாம்பிகை "

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். 

கதிராமங்கலம் " வனதுர்க்கை "

கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் குத்தாலம் என்ற சிற்றூரின் அருகில் உள்ளது, கம்பரும் அகத்தியரும் வழிபட்ட வனதுர்க்கை குடிகொண்டுள்ள " கதிராமங்கலம் ". ராகு கால வேளை என்பது, ராகு பகவான் துர்க்கையை வழிபடும் நேரம், எனவே ராகு திசை வழிபாட்டிற்க்கான சிறந்த நேரம் ராகு காலமே. இந்த துர்க்கையை எலுமிச்சம்பழத் தோலில் நெய் விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலை சார்த்தி 9,11 அல்லது 21 வாரங்கள் வழிபட " புத்திர பாக்கியம் " கிட்டும் என்பது நிச்சயம். 

தஞ்சாவூர் மேல வீதி " சங்கர நாராயணன் "

கரிகால் சோழனின் வழி வந்த, பீம சோழ மன்னனால் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்துவது. வலப்புறம் பார்வதியையும், இடப் பக்கம் லஷ்மியையும் கொண்டு 5 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இத் தல மூர்த்தியின் சிலை சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே கொண்டது. இத் தலம் " குழந்தைப் பேறு அருளும் " புண்ணிய ஷேத்திரமாக விளங்குகிறது.

குழந்தை செல்வம் பெற " திருவெண்காடு"


நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத தம்பதியர் இத் தலத்தில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் குழந்தைச் செல்வம் பெறுவர். இத் திருத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அச்சுதகளப்பாளர் என்னும் சிவனடியாருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. 
ஒரு நாள் அவர், திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு பதிகத்தை படிக்க, அதில் கூறியுள்ளாவாறு திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள சூரிய, சோம மற்றும் அக்னி என்ற மூன்று குளங்களிலும் நீராடி பரம்பொருளை வழிபட, அவர் வேண்டுதளுக்கிணங்க பெருமானும் குழந்தைச் செல்வத்தை அளித்தார். அக் குழந்தைதான், "சிவஞானபோதம்" எனும் பன்னிரு சூத்திரத்தை தந்த "மெய்க்கண்டார்" என்ற சிவஞான சித்தர். குழந்தை செல்வம் பெற விரும்புபவர்கள், திருவெண்காடு சென்று அங்குள்ள முக் குளங்களிலும் நீராடி சிவ பெருமானை வழிபட வேண்டும். தினமும் காலை வேளைகளில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளிப்பது மேலும் சிறப்பு.0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com