Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

போதைப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட - ஒரு ஆன்மீக ஆலோசனை

| Sep 3, 2011
நாளை பொழுது நமக்கு உண்டா என்று தெரியாமல் , அன்னன்னிக்கு வேலை செய்தால் தான் சாப்பாடு , என்று இருக்கும் அடித்தட்டு மக்களிலிருந்து , கோடிகளில் புரளும் உயர் மட்ட மக்கள் வரை - உலக சமூகமே ஒரு விஷயத்தில் ஒன்று கூடி - பெரும்பான்மையை நிரூபிப்பது - குடிப் பழக்கத்தில் தான்.


சர்வ சாதாரணமாக , கெத்து காட்டுவதில் ஆரம்பிக்கும் பழக்கம் -   ஏன் என்று தெரியாமலே ஆரம்பிக்கும் பழக்கம்,   எப்போதாவது பார்ட்டியில் என்று ஆரம்பிக்கும் பழக்கம் , மெல்ல மெல்ல - விட முடியாத பழக்கமாகி விடுகிறது. ஒரு சிலருக்கு சூரியன் மறைந்தாலே , லேசான கை நடுக்கம் ஆரம்பித்து  விடுகிறது. அது கூட பரவா இல்லை. கடை எப்போ திறப்பார்கள் , என்று காத்து இருக்கும் அளவுக்கு , ஒரு பெரிய கூட்டமே உள்ளது. 


 குடிக்கிறவங்க எல்லோருமே கெட்டவங்க இல்லை, ஆமா , நானும் சொல்றேன் கெட்டவங்க இல்லை. உள்ளே போனதுக்கு அப்புறம் , நல்லவங்க ஆகிறவங்கதான் அதிகம். ஆனா, எந்த குடிகாரனும் - குடிச்சதுக்கு அப்புறம் எடுத்த எதோ ஒரு முடிவால , எதையுமே இழக்கலைன்னு சொல்ல முடியுமா? 
 கவலையை மறக்க குடிக்க ஆரம்பிச்ச ஒருத்தர் , நாளைக்கு  அதனாலேயே கவலைக்கிடமா ஆகிறதுதான் வேதனை.
 
அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நல்லதுக்கல்ல. குடிப்பழக்கத்தால் , நிதானம் இழந்து எடுக்கும் முடிவுகளால் - கோடிகளில் இருந்து தெருக்கோடிக்கு வந்தவர்கள் எத்தனையோ பேர். உயிரை இழந்து , இந்த ஜென்மத்தையே தொலைத்தவர்கள் எத்தனையோ பேர். 


 இவர்களை யார் சொல்லி , யார் திருத்த முடியும்? அவர்களே திருந்தினால் தான் உண்டு. உங்களுக்கோ , உங்களை சார்ந்தவர்களுக்கு , இதே பிரச்னை இருந்தால் - இதற்கு தெய்வ பலம் உங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றால் , கீழே நாம் காண விருக்கிற , திருப்பாம்புரம் ஆலயத்திற்கு சென்று - இறைவனுக்கு அபிசேகம் செய்து , புது வஸ்திரம் எடுத்துக் கொடுங்கள். மனதார வேண்டுங்கள். ஒரு மிகப் பெரிய ஆச்சர்யமாக , நீங்கள் நியாயமாய் இழந்த சொத்து, செல்வம் உங்களுக்கு திரும்பவும் கிடைக்கும்.


இதைத் தவிர , வெகு உக்கிரமான ஒரு கருப்பர் ஆலயம் உள்ளது. சேலம்  அருகே , ரொம்பவே உக்கிரமான சந்நிதி. சாமி முன்பு , சத்தியம் செய்து - உங்களால் எவ்வளவு நாளைக்கு விட முடியுமோ, அவ்வளவு நாளைக்கு - ஒரு மாதம் , மூன்று மாதம் , ஆறு மாதம் , இல்லை ஒரு வருடம்  என்று - உறுதி மொழி எடுத்துக் கொண்டு - காப்பு கட்டிக் கொள்கிறார்கள். ஆயுள் முழுவதும் என்று சொல்லும் , உணர்ச்சி வசப்பட்டு பேசும் அன்பர்களை , பூசாரியே வேண்டாம் தம்பி , ஒரு வருஷம் முதல்லே விடுங்க, வேணும்னா , அதுக்கு அப்புறம் ஒருக்கா வாங்க. உங்களுக்கு ஒரு சுயக்கட்டுப்பாடு வந்தா , போதும். கருப்பன் உங்களைக் காப்பாத்துவான் என்கிறார். அந்த அளவுக்கு , வேறு வழியே இல்லை என்பவர்கள் மட்டும் - மேலும் விவரம் வேண்டுவோர் , மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 


வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் : இந்த கட்டுரையை , உங்களால் முடிந்தவரை , உங்கள் சுற்றம் , நட்பு வட்டாரத்தில் தெரியப்படுத்தினால் சந்தோசப்படுவேன். இது ஒரு சமுதாய கடமை. . .மிக்க நன்றி !

சரி, எம்பெருமான் அருள் பாலிக்கும் - திருப்பாம்புரம் - ஆலய மகிமைகளை இனி காண்போம்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்


விநாயகர் கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார்.

பின்னர் அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களையும் தண்டிக்கலாகாது என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும்படியும் சிவனை வேண்டினர்.

மகாசிவராத்திரியன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வேண்டி சாபவிமோசனம் பெறலாம் என சிவன் அருளினார்.

இது தவிர இன்னொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. இதனால் வாயுபகவான் தன் வலிமையால் மலைகளை புரட்டி போட, ஆதிசேஷன் தன் வலிமையால் அதனை தடுத்தி நிறுத்தியது.

இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை தடுத்து நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கியது. பின்னர் திருப்பாம்புரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மன்னிப்பு கேட்டது.
 

சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர். இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.
இந்த கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பபெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.

ராகு, கேது சன்னதி: பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.


துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான் நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே.

-திருஞானசம்பந்தர்


போதை பழக்கம் உள்ளவர்கள்  ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்- 612 203. திருவாரூர் மாவட்டம்.   Tel : +91- 94439 43665, +91- 94430 47302.
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் நமச்சிவாயம் !

1 comments:

Navanee said...
This comment has been removed by the author.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com