Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

உஜ்ஜைன் மகா காளேச்வர் - மாகாளி அம்மன் - பரவசமூட்டும் புகைப்படங்கள் , சுவாரஸ்யமான தகவல்கள்

| Sep 2, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த மாதம் நல்ல விதமாக நம் அனைவருக்கும் தொடங்கட்டும். நேற்று , விநாயகர் சதுர்த்தியை நீங்கள் அனைவரும் நல்ல விதத்தில் கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்று , உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொள்ள விருக்கிறேன்.


 அம்மன் வழிபாடு செய்யும் அனைவரும் அறிந்து இருக்கும் ஒரு தெய்வம் . உஜ்ஜைனி மாகாளி அம்மன். வேலை விஷயமாக நான் அடிக்கடி இந்தூர் சென்று இருக்கிறேன். மிக நெருங்கிய நட்பு வட்டாரம் எனக்கு அங்கும் உண்டு. அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு இன்றும் எனக்கு அழைப்பு வரும். அங்கிருந்து உஜ்ஜைன் ஒரு மணி நேர பயண தூரம் தான். ஒவ்வொரு முறை இந்தூர் செல்லும்போதும் உஜ்ஜைன் செல்வது வழக்கம். அங்கு உள்ள ஒரு பிரபல தொழிலதிபர் எங்கள் கம்பெனியின் வாடிக்கையாளர். ஒரு காலத்தில் மிகப் பெரிய அரசுகளின் தலைநகரமாக இருந்த இடம் , இன்று ஒரு சிறிய நகரம், அவ்வளவே. அவரிடம், இங்கு காளி அம்மன் கோவில் எங்கு உள்ளது என்று கேட்க , அங்கு இருக்கும் யாருக்கும் அது பற்றி தெரியவில்லை. காளிதாசர் அங்கு இருந்தார், விக்கிரமாதித்தன் இருந்தார் என்று அவர்கள் நம்பினாலும், இங்கு எந்த  பிரபலமான காளி கோவிலும் இல்லை என்றே கூறினார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம். எங்கள் ஊரில் , இன்றும் உஜ்ஜைனி மாகாளியை வழிபாடும் பக்தர்களை நான் அறிவேன். காலப் போக்கில் , அந்த கோவில் மகத்துவம் அப்படியே குறைந்துவிட்டதா ? தெரியவில்லை.


நாங்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் , எங்கள் ஊரில் உள்ள பெரியவர்கள் - தினமும் இரவு நேரத்தில் , குழந்தைகளுக்கு கதைகள் சொல்வார்கள். ஒரு நாள் சாமி கதை , ஒரு நாள் முனி கதை , ஒரு நாள் பேய் கதை , ராஜா காலத்து கதை இப்படி ஒவ்வொரு நாளும் ஒன்னொன்னு. பத்து வயசுக்கு உள்ள குழந்தைகள் தூக்கம் வரும் வரைக்கும் கேட்டுக் கொண்டு அங்கேயே தூங்கியும் விடுவோம். அப்படி வந்த கதைகளில் , விக்கிரமாதித்தன் கதையும் உண்டு. காளிதாசனும் உண்டு.


இந்த காலத்தில் குழந்தைகளுக்கு கார்ட்டூன் சானல் மட்டும் தான் தெரிகிறது. கிராமங்களிலாவது பரவா இல்லை . பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் ஒன்று சேர்ந்து விளையாடவாவது செல்கிறார்கள். பெரிய நகரங்களில் அதுவும் இல்லை. ஒருவேளை , இதே போல் தான் உஜ்ஜைனும் இருந்து , இந்த கால சந்ததியினருக்கு எதுவுமே தெரியவில்லையோ என்னவோ?


மலேசியாவை சேர்ந்த முனைவர் JB அவர்கள் , உஜ்ஜைனி மாகாளி பற்றி எழுதிய கட்டுரையை கீழே படித்துப் பாருங்கள். சரி, இன்றைய உஜ்ஜைனில் என்ன நிலவரம் என்று கேட்கிறீர்களா?
அமிர்தம் சிந்திய ஒரு இடமாக இன்றும் கருதப்படும் உஜ்ஜைனில் - கும்ப மேளா விமரிசையாக கொண்டாடப் படுகிறது. ஜோதிர் லிங்கங்களில் ஒருவரான - மகா காளேச்வர் - ஆலயம் இருக்கிறது. என்னுடைய ஊகம் , இந்த ஆலயத்தில் தான் அந்த மாகளியும் இருக்க வேண்டும். அடுத்த முறை செல்லும்போது , கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நம் வாசகர்களில் யாருக்காவது தெளிவான தகவல் தெரிந்தால் , சொல்லுங்கள்.


கட்டுரை முடிவில் - மகா காளேஷ்வர் படங்களை நம் வாசர்களுக்காக கொடுத்துள்ளேன். வட இந்தியாவில் , லிங்கத்தை நீங்களே தொட்டு , வணங்கலாம்.  நமது தெற்கத்தி கோவில் போல பிரமாண்டம் இல்லையெனினும், பரவச உணர்வு வருவது நிச்சயம்...


சரி, இனி .. JB அவர்கள் :     
உஜ்ஜயினி என்னும் நகரம் மத்திய பிரதேசத்தில் இருக்கிறது. இது மிகவும் புராதனமான நகரம். விக்கிரமாதித்தனின் தலைநகரம் என்று இதனைச் சொல்வார்கள். பின்னர் சாலீவாகனன் என்பவன் இதனைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சொல்வார்கள். அதன்பின்னர் போஜ மன்னனும் காளிதாசன் முதலிய பல புலவர்களுடன் அங்கிருந்ததாகச் சொல்வார்கள்.


வரலாற்றில் அது மகதப்பேரரசு, சாதாவகனப்பேரரசு, குப்தப்பேரரசு ஆகியவற்றின் முக்கிய நகரமாகவும் மாளவம் என்னும் நாட்டின் தலைநகரமாகவும் இருந்தது. பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்களில் மாளவமும் ஒன்று. Ujjain என்ற பெயரில் மத்தியப்பிரதேசத்தில் இந்த நகரம் இன்றும் இருக்கிறது. 

உஜ்ஜயினிக்கு இன்னும் சில சிறப்புகளும் உண்டு. அது காளிமாதாவின் இருப்பிடங்களில் ஒன்று. அங்குள்ள காளியை உச்சினி மாகாளி என்று தமிழில் சொல்லுவார்கள். மாந்திரீகத்தில் அழைக்கப்படும் முக்கிய தேவியாக உச்சினி மாகாளி விளங்குகிறாள். உச்சினி மாகாளியின் அருளைப் பெற்றவர்களை வெல்லமுடியாது என்பது ஐதீகம்.
விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள்
 
காளி மூர்த்தங்களில் ஆத்யகாளி, மகாகாளி, மகாகாளி தசமுகி போன்ற வடிவங்கள் இருக்கின்றன. பத்ரகாளி என்னும் காளி, மங்கலகரமான காளி; மங்கலத்தைச் செய்பவள். 'பத்ர' என்றாலே 'சாந்தம்', 'அமைதி', 'மங்கலம்' என்று பொருள். பத்ரகாளிகளில் மிகவும் புராதனமாக  விளங்குபவள் உஜ்ஜைனி என்னும் நகரில் இருக்கும் உஜ்ஜைனி மாகாளி. 


கவிஞர்கள், புலவர்கள், உபாசகர்கள், ஆற்றல்மிக்கவர்கள், சக்கரவர்த்திகள், மந்திரவாதிகள் போன்றவர்கள் மிகவும் விரும்பிவழிபட்ட தெய்வம் உச்சினி மாகாளி. அவர்களுக்கு அவள் கவித்துவம், புலமை, ஏகச்சக்ராதிபத்தியம், மந்திர ஆற்றல் போன்றவற்றை அளித்திருக்கிறாள். உஜ்ஜைனி தமிழகத்தின் நேர் வடக்கில் அமைந்துள்ள புராதன நகரம். மிகவும் புகழ் வாய்ந்தது.

 இந்திய வான சாஸ்திரத்தில் அந்த நகரத்தையே பூமியின் நடுவாகவும் பரதகண்டத்தின் நடுவாகவும் வைத்து பண்டைகாலத்தில் வகுத்திருந்தார்கள். அதன் அட்சரேகை, தீர்க்க ரேகைகளை வைத்தே இன்றும் பல பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகின்றன.அந்த நகரத்தின் இன்னொரு பதிப்பாக தமிழகத்தில் உஞ்சேனை மாகாளம் என்றொரு ஊரை ஏற்படுத்தினார்கள். பட்டினத்தார் , பத்திரகிரியார் - ஞாபகம் வருதா , இந்த ஊர் பெயரைக் கேட்டவுடன். ? அங்கு மகாகாளேசுவரர், மகாகாளி ஆகியோர் முக்கிய தெய்வங்கள். இது தேவாரப் பாடல் பெற்ற பழம்பெரும் தலம்.
உச்சினி மாகாளி என்னும் காளியை வடபத்ரகாளி என்று குறிப்பிடுவதுண்டு.       உஜ்ஜைனி மாகாளி என்னும் மாகாளி வழிபாடு மிகவும் புராதனமானது.
 
 காளிதேவியின் அருளை தனது குருவின்மூலம் கேட்டு அறிந்த விக்கிரமாதித்தன் - சர்வ வல்லமையும் பெற நினைத்து தன்னையே பலி கொடுக்க தீர்மானித்தான். அவன் தலை ஈட்டிமுனையில் படும்போது மாகாளி தோன்றினாள். ஒரு பேரரசைத் தோற்றுவிப்பதற்குக் காளி வரம் தந்தாள். அவளுடைய அருட்சக்தியால் அங்கு ஒரு மாபெரும் நகரம் ஏற்பட்டது. அந்த நகரத்தில்  மாகாளியும் கோயில் கொண்டாள்.  ஏற்படுத்தபட்ட நகரத்திற்கு 'உஜ்ஜைனி' என்று பெயரிட்டனர். உஜ்ஜையினிலிருந்துகொண்டு சிறப்பாக ஆட்சிபுரிந்தான். மற்ர நாடுகளைக் கைப்பற்றி ஏகச்சக்கரவர்த்தியாக  விளங்கினான்.வேதாளம் சொல்லும் கதைகளில் , விக்கிரமன் சொன்ன தீர்ப்பு நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தானே. நீதியிலும் சிறந்துவிளங்கினான்.
இந்திரலோகத்துக்கு இந்திரனால் அழைக்கப்பட்டு,  மற்றவர்களால் தீர்ப்பே சொல்லமுடியாத போட்டி ஒன்றுக்கு மிகவும் திறமையாக தீர்ப்புசொன்னதால் ஆயிரம் ஆண்டுகள் வீற்றிருந்து ஆளக்கூடிய சிம்மாசனம் ஒன்றை இந்திரன் அவனுக்கு அளித்தான்.

 உஜ்ஜைனிக்குத் திரும்பியதும் பட்டி நடந்த விபரங்களை அறிந்தான். தானும் ஆயிரம் ஆண்டுகள் விக்கிரமாதித்தனுக்கு மந்திரியாக இருக்கவேண்டுமென்று விரும்பி, உஜ்ஜைனி மாகாளியிடம் சென்று தியானத்தில் இருந்தான். அவனுக்கு முன்னால் தோன்றிய மாகாளி, சக்கரவர்த்தி ஒருவனைப் பலிகொடுத்தால் ஈராயிரம் ஆண்டுகள் ஆயுள் தருவதாகச் சொன்னாள்.


 பட்டி திரும்பிப்போய் தம் அரசனிடம் சொன்னான். விக்கிரமாதித்தன் தன் தலையைத் தந்தான். காளிக்கு அவனை பலி கொடுக்கவும் உஜ்ஜனி மாகாளி பட்டிக்கு தரிசனம் கொடுத்து ஈராயிரம் ஆண்டுகள் ஆயுளைத் தந்தாள்.
                

அதைக் கேட்டு பட்டி ஒருமாதிரியாகச் சிரித்தான். மாகாளியைக் கேட்டான்,         "இந்த வரம் வேலை செய்யுமா?" "அதிலென்ன சந்தேகம்?" "சிலநாட்களுக்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோக சிம்மாசனத்தில் இருந்துகொண்டு ஆளும் வரத்தைப் பெற்றார், மாமன்னர் விக்கிரமாதித்தர். ஆனால் இதோ அவருடைய தலை. இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் கொடுத்த வரமே இப்படி ஆகிவிட்டதே? இந்த நிலையில் உன்னுடைய வரத்தை நினைத்துச் சிரித்தேன்", என்றான். 

பட்டியின் சாதுர்யத்தால் காளிக்குச் சந்தோஷம். பெரிதாகச் சிரித்துவிட்டு விக்கிரமாதித்தனுக்கு உயிர் கொடுத்து எழுப்பிவிட்டாள். விக்கிரமாதித்தன் இந்திர லோக சிம்மாசனத்தில் பட்டியின் யோசனைப்படி காடாறு மாதம் நாடாறு மாதம் என்று ஆட்சி செய்து இருவருமாக ஈராயிரம் ஆண்டுகள் சிறப்புடன் வாழ்ந்தனர்.


காளிதாசனுக்கு கவித்துவத்தைக் கொடுத்தவள் வடபத்ரகாளிதான். காளிதாசன் எழுதப் படிக்கத்தெரியாத ஆட்டிடையன். அவன் மிகவும் மேதையாக விளங்கிய ஓர் இளவரசியை மணந்தான். படிப்பறிவு இல்லாத மூடன் என்று தெரிந்ததும் எப்படியாவது காளியை வழிபட்டு கல்வியறிவு பெற்றுவருமாறு அவனை அனுப்பிவிட்டாள். அவனும் உச்சினி மாகாளியை அண்டி வேண்டிக்கொண்டதற்கிணங்க அவனுக்கு அவள் சியாமளாவாகவும் ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அவனுக்கு ஈடுஇணையற்ற கவித்துவத்தை அளித்தாள். அதனை காளிதாசனுடைய சியாமளா தண்டகத்திலிருந்து அறியலாம்.

 
அதுபோலவே ஒட்டக்கூத்தர் தம்முடைய சிறந்த நூலாகிய தக்கயாகப் பரணியை எழுதுவதற்கு வெளிச்சம் காட்டுவதற்காகப் பந்தம் பிடித்தவள் திருவொற்றியூர் காளி. 

காளியின் தோற்றத்தைக் கண்டு பயப்படாமல் காளியை மங்கல சொரூபினியாகவும் சாந்தையாகவும் வழிபடுவதே நல்லது. அதுதான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகாநந்தர் ஆகியோர் கண்ட வழிபாடு. பத்ரகாளி என்றாலே 'மங்கலகரமான சாந்தமான காளி' என்றுதான் அர்த்தம்.

2 comments:

Anonymous said...

Dear Editor in this message I can see photos of Sri Maha kaleswar only.Please add photos of Maha kali.I Want to inform you ,there is a temple near Bada Ganpathi temple ,in this temple there is a Kali Devi who gave Her blessings to King Vikramadhithan.,your's sincierly,R.Vaithinathan.

சிவன் அருள் said...

here is my blog
http://sivanarul-sivamayam.blogspot.com/

ujjain mahakaleshwar temple and full information and surronding temple information including ujjain mahakali ammam photo and other so many photos are published in my blog myself only.

standing nandhi devar that temple also there in Ujjain.

if anyone interested just have a look of my blog.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com