Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அகத்தியர் நிகழ்த்திய அற்புதம் ! அதிசயமான உண்மை சம்பவம் !

| Jul 2, 2011

 

 இது  தினத்தந்தியில் , மதிப்பிற்குரிய ஹனுமத்தாசன் ஐயா அவர்கள்  ஜீவ நாடி தொடரில் எழுதியிருந்த கட்டுரை. உங்களிடம் எதற்கு பகிர்ந்து கொள்கிறேன் என்றால், ஒரு மிக முக்கியமான விஷயம் இருக்கிறது. 
இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்று நினைக்கும் இந்த கலியுகத்தில் - செய்யப்படும் அக்கிரமங்கள், அநியாயங்கள் ஏராளம். ஆனால் , இறை தனது அற்புதங்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. 

அது மட்டும் அல்ல, நீங்கள் மனமுவந்து இறைவனுக்கு செய்யும்  அபிஷேக , ஆராதனைகள் - உங்களுக்கு ஜென்ம ஜென்மத்திற்கும் ஒரு பாதுகாப்பு கவசம். இனி, இந்த உண்மை சம்பவத்தை படித்துப் பாருங்கள். !!

======================================================================
அகத்தியர் தினமும் எத்தனையோ ஆச்சரியங்களை நிகழ்த்துவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்குமா? என்பது முதல் கேள்வி.

டாக்டர்களிடம் போய்க் கேட்டால் வயது நாற்பத்தி மூன்றாகிவிட்டதால் இனிமேல் புத்திர பாக்கியம் கிடைப்பது கஷ்டம் என்று அடித்துச் சொல்கிறார்கள். அது உண்மையா என்பது எனது இரண்டாவது கேள்வி.

அகத்தியர் நாடி பார்த்து எனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? என்றார் அந்த நடுத்தர வயது பெண்மணி. தேங்காய் உடைத்தாற்போல் நறுக்கென்று கேட்டு விட்டு அமைதியாகிவிட்டார்.

அருகிலிருந்த அவரது கணவரோ மெல்லவும்  முடியாமல் விழுங்கவும் முடியாமல் தர்ம சங்கடத்தில் நெளிவது என் கண்ணில் தென்பட்டது.
உண்மையில் நாற்பது வயதைத் தாண்டிவிட்டால் பெண்கள் கர்ப்பம் தரிப்பது அரிது. இன்னும் சொல்லப் போனால் நாற்பத்தி மூன்றைத் தாண்டி விட்டால் கண்டிப்பாக குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்பது மருத்துவர்களது கணிப்பு. இது அனுபவப்பூர்வமான பொதுவான உண்மையும் கூட.
எல்லாவிதமான பரிகாரங்கள், பிரார்த்தனைகளைச் செய்து இருபத்தி மூன்று வருடங்களாக அலுத்துப் போன பின்பு, கடைசியாக அகத்தியர் ஜீவநாடியை நம்பி அந்த அம்மணி வந்திருக்கிறார் என்பது தெரிந்தது.

இந்த வயதில் குழந்தை தேவையா? என்றுதான் எல்லோருக்கும் எண்ணம் வரும். ஆனால் சென்னை அடையாறு பகுதியில் பிரம்மாண்டமான பங்களா. திருச்சி நகரில் ஏராளமான வாழைத்தோப்பு, நன்செய், புன்செய் நிலங்கள் என்று பல கோடிகளுக்கு அதிபதி அந்த அம்மணியின் கணவருக்கு. கூடவே நல்ல படிப்பு. ஓர் தனியார் கம்பெனியில் மிக உயர்ந்த உத்தியோகமும் இருந்தது.
இவர்களுக்கு வாரிசு பாக்கியம் இல்லாமல் போனால் அவர்களுடைய சொத்துக்களை நாகரீகமான முறையில் மிரட்டிக் கொள்ளையடிக்க அம்மணியின் உறவுக்காரர்களும் இருந்தனர். அவளது கணவரின் உடன்பிறப்புகளும் காத்திருந்தனர்.

ஆனால் தனக்கு நிச்சயம் வாரிசு உண்டு என்ற நம்பிக்கையில் அந்த அம்மணி இருந்தார். டாக்டர்கள் கைவிட்டு விட்டதால் இப்போது அகத்தியர் ஜீவநாடியை நோக்கி அரைகுறை நம்பிக்கையோடு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்வதின் மூலம் அறிந்தேன்.

கடைசி நிமிஷத்தில் வந்து இப்படி கேட்கிறார்களே; அகத்தியர் இதற்கு என்ன பதில் தரப்போகிறாரோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. ஒரு வேளை புத்திர பாக்கியம் இல்லை என்று சொன்னால், அவர்கள் மனம் உடைந்து போகலாம். ஆன்மிகத்தின் மீது வெறுப்பு கொள்ளலாம். அகத்தியரை நம்பி வந்தது வீண் என்று கூட ஆத்திரத்தில் திட்டலாம்.

இதையும் தாண்டி மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் குழந்தை பிறந்தால் அது விஞ்ஞான உலகத்திற்கு இன்ப அதிர்ச்சியைத் தரும். நமக்கும் சந்தோஷம் வரும். இதற்கு அந்த தம்பதிகளுக்கும் பாக்கியம் இருக்க வேண்டும். என்ன சொல்கிறாரோ பார்ப்போம் என்று அகத்தியர் ஜீவநாடியைப் பிரித்தேன்.

 முன் ஜென்மத்தில் இதே நாள் இதே நட்சத்திரத்தில் பொதிகை மலையில் அகத்தியன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து குளிர வைத்ததை அகத்தியன் இன்று நினைவு கூர்வேன். இவளே குழந்தைகள் சிலவற்றை கருவிலே கொன்ற குற்றமும் உண்டு. அது மிகப் பெரிய பிரம்மஹத்தி தோஷமாக மாறியதால் அதற்காக இத்தனை ஆண்டு பிள்ளை வரத்திற்காக காத்து நிற்க வேண்டியதாயிற்று என்று சொன்ன அகத்தியர், இதுவரை செய்திட்ட பரிகாரங்களிலும், பிரார்த்தனைகளிலும் தீட்டு கலந்து இருந்ததால் அத்தனையும் பொய்த்துப் போயிற்று. இனி செய்யும் பிரார்த்தனை ஒன்றுண்டு. பின்னால் நாகச்சிலையை ஆகம விதிப்படி நாற்பத்தைந்து நாட்கள் பூஜித்து, அதனைக் குல தெய்வ சன்னதிக்கு அருகே வடகிழக்கு திசை நோக்கி நிறுவிய ஆறு அமாவாசைக்குள் இன்னவள் கர்ப்பம் தரிப்பாள் என்று ஓர் மங்கள வார்த்தையை அகத்தியர் அருள் வாக்காக உதித்தார்.

இதைப் படிக்கும் பொழுது எனக்கே சந்தோஷம் ஏற்பட்டது. அப்படியென்றால் இதைக்கேட்ட அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டிருக்கும் என எண்ணினேன்.

ஆனால் -   ஜீவ நாடி

அவர்கள் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷக் களையே ஏற்படவில்லை. இது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

இதைப்போல பல தடவை செய்தாயிற்று. எந்த பலனும் இல்லை. இதைத் தவிர வேறு பிரார்த்தனை ஏதேனும் உண்டா? கேட்டுப் பாருங்கள் என்றார் அந்த அம்மணி.

அகத்தியர் என்ன காய்கறிக் கடையா நடத்துகிறார். இந்தக் காய் வேண்டாம்; வேறு கறிகாய் கொடுங்கள் என்பதற்கு? என்று ஆவேசமாக கேட்கத் தோன்றிற்று.

ஒரு சித்த புருஷரிடம் எப்படி பேசுவது என்றே பெண்மணிக்குத் தெரியவில்லையே? என்ற கோபமும் ஏற்பட்டது. இருந்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டேன்.

நீங்கள் பிரதிஷ்டை செய்தது ஜீவ கல்லா? என்றேன்.

யார் கண்டா. ஏதோ ஒரு கல். ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்தாயிற்று.
அது ஜல வாசம், பால் வாசம், தான்ய வாசம் செய்து வைக்கப்பட்டதா? என்றாவது தெரியுமா?

‘தெரியாது’ என்று அலட்சியமாக பதில் வந்தது.
வேறு எங்கேயாவது சென்று நாடி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். இனி பரிகாரம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லி நாடியை இழுத்துக் கட்டினேன்.

என் செயலைக் கண்டு பதறிப் போன அந்தப் பெண்ணின் கணவர் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். விரக்தியின் விளிம்பில் இருக்கிறாள்  அவள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சொல்லுங்கள். உங்கள் சொற்படியே நான் செய்கிறேன் என்று கெஞ்சினார். சிலமணி நேரம் வாய் பேசவில்லை.

மனதை இலவம் பஞ்சாக மாற்றிக் கொண்டு அகத்தியர் நாடியை மீண்டும் பிரித்துப் படித்தேன்.

இன்னதென்று அறிகிலார். இவர் தம் பிழையை மன்னிப்போம் என்று குறுநகையுடன் கூறிய அகத்தியர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மரித்துப்போன இந்த பெண்மணியின் தந்தை முருகவேல் மறுபிறவியாக இன்னவள் கருவில் வந்து பிறப்பான். பின்னரும் ஓர் பெண்மகவு இவளுக்கு உண்டு. இந்த இருவருமே பங்குனி மூல நட்சத்திரத்தில் புதன் அன்று காலையில் ஜனிப்பார்கள். அந்த இரு குழந்தைகளுக்கு இடைவெளி இரண்டு ஆண்டுகள் இருக்கும் என்று வியத்தகு செய்தியை அருளினார் அகத்தியர். இந்த செய்தியைக் கேட்ட பிறகுதான் அந்த அம்மணி முகத்தில் லேசாக சந்தோஷம் மலர்ந்தது.

ஐந்து மாதம் கழிந்திருக்கும்.

ஒரு நாள் காலையில் அந்த தம்பதியர் இருவரும் நிறைய பழங்கள், பூ, வெற்றிலை, பாக்கு நிறைந்த தட்டுடன் என்னைத் தேடி வந்தனர். முகத்தில் ஏராளமான சந்தோஷம் பூத்துக் குலுங்கியது.

‘ஐயா, அகத்தியப் பெருமான் சொன்னபடி மறுபடியும் முறைப்படி தீட்டு கலக்காமல் ஜீவ கல் பின்னால் நாகத்தை பூஜித்து எங்கள் குலதெய்வக் கோவிலில் நிறுவி விட்டோம். இப்பொழுது இறைவன் புண்ணியத்தால், அகத்தியர் அருள் வாக்கினால் கருவுற்று இருக்கிறாள். குழந்தை நல்லபடியாகப் பிறக்க அகத்தியர் ஆசீர்வாதம் வேண்டும் என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
‘டாக்டர்கள் என்ன சொன்னாங்க’ என்று கேட்டேன்.
இது தெய்வச் செயல் என்றார்கள். இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் என்றவர், ஏன் சார் குழந்தை நல்லபடியாகப் பிறக்கும் இல்லையா? என்று பயத்தில் ஒரு கேள்வி கேட்டார்.
கொஞ்சம் பொறுங்கள் அகத்தியரிடமே இதைப்பற்றி நேரிடையாகக் கேட்டு விடலாமே என்று நாடியைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.
நம்பிக்கையோடு செய்கின்ற காரியங்கள் அத்தனையும் வெற்றி பெறும். தீட்டு கலந்த பக்தி, தெய்வ நம்பிக்கை இல்லாத பக்தி, முழுமையான மனதோடு அன்னதானம் செய்யாமை: நடந்ததற்கும், நடந்து கொண்டிருப்பதற்கும், இனி நடக்கப்போவதற்கும் எல்லாமே இறைவன் என்ற எண்ணம் இல்லாமல் பேசுவது, செயல்படுவது போன்ற எண்ணங்களை, செயல்பாடுகளை எவனொருவன் விட்டு விடுகிறானோ அன்று முதல் அவன் அதிர்ஷ்டசாலியாகிறான்.

இதுவரை உன் மனைவி இப்படிப்பட்ட எண்ணத்தோடு செயல்பட்டாள். பலன் கிட்டவில்லை. அகத்தியன் சொற்படி நடந்தாள். இதன் காரணமாக அவள் தலைவிதியும் மாறியது. மருத்துவ உலகமே வியக்கும் வண்ணம், இந்த வயதிலும் இரு குழந்தைக்கு தாயாவாள். இருப்பினும் அவ்வப்போது சிறு தடங்கலும் உண்டு. அந்தத் தடையை மீற இன்று முதல் நீங்கள் இருவரும் ஒரு யாகம் செய்து காப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறி, ஒரு ரகசியமான யாகத்தை விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய உத்தரவிட்டார் அகத்தியர்.

சாதாரணமாக இதைச் சொன்னால், எதற்கு? ஏன்? என்று  கேள்வி கேட்கும் அந்தப் பெண்மணி, அகத்தியர் சொன்னபடி அந்த யாகத்தையும் செய்தாள். அதோடு மட்டுமின்றி, பிள்ளை பெறும் வரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற அகத்தியர் இட்ட உத்தரவையும் ஏற்று, யாருக்கும் தெரியாமல் மறைவான ஓர் இடத்தில் தங்கவும் செய்தாள்.

அகத்தியர் சொன்னபடி அவர்களுக்கு இந்த நாற்பத்தி நான்கு வயதில் யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் ஏன் பிரசவம் வைத்துக் கொள்ளச் சொன்னார் என்ற கேள்விக்கு அகத்தியர் விடை சொல்லவில்லை?.

குழந்தை நல்லபடியாகப் பிறந்தால் சரி என்று நானும் விட்டு விட்டேன். அவர்களும் அப்போது இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அதற்கான விடையை அகத்தியரே சொன்னார்.

சொத்து ஆசையில் அவர்களுடைய உறவினர்களில் சிலர்,  அந்த அம்மணிக்கு கர்ப்பத்தைக் கலைக்க, பிறக்கின்ற குழந்தையைக் கொல்ல பல்வேறு வகையில் திட்டமிட்டிருந்தனர். உணவில், மருந்தில் இதையும் தாண்டி குழந்தை பிறந்தால் மருத்துவமனையில் அந்த வாரிசைக் கொன்று விட்டால் தங்களுக்கு அவர்களின் சொத்து கிடைக்கும் என்று திட்டமிட்டிருந்தனர். இதைத் தடுக்கவே அகத்தியர் அந்த தம்பதிகளை வெளி நகரத்திற்கு அனுப்பி காப்பாற்ற வழி சொல்லுகிறார் என்று தெரிந்தது.

இதை செய்து விட்டால், இனி உங்கள் வாரிசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அருள்வாக்கு தந்தார் அகத்தியர். அதன்படியே செய்தனர். அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

இதற்குப் பின்புதான் அந்த தம்பதிகளுக்கு மூச்சு வந்தது.

இந்த தம்பதிகளை எனக்கே நன்றாக தெரியும். இது வெறும், கற்பனை சம்பவம் அல்ல. !

இந்த கட்டுரை எழுதிய திரு. ஹனுமத்தாசன் அவர்கள் , இப்போது இறைவனின் திருவடி அடைந்து விட்டார். எனினும், நீங்கள் மனமுருக வேண்டினால் ,அகத்தியரின் அருள் நிழல் உங்களுக்கு என்றும் கிடைக்கும். !!

4 comments:

LOGANATHAN said...

It's true

Trans Technicals said...

First post in July! Wish you and all the readers Happy July!!

xxx said...

agathiya naadi paarpathu epadi

Agathiya Maharisi Spritual Center said...

அகத்தியர் ஜீவநாடி தற்போது மேட்டுப்பாளையம் புகளூரில் உள்ளது.முகரி இறைசித்தன் செந்தில் ஐயா 7373835583

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com