Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

விஞ்ஞானம் திகைக்கும் நமது சமீப கால அமானுஷ்யங்கள் !! (Miracles?)

| Jun 25, 2011


ஐம்புலன்களுக்கு உட்பட்டு ஆராய்வது விஞ்ஞானம். புலனையும் கடந்து மெய்யை உணர்வது மெய்ஞானம். புலன்களை அடக்கி ஆள்கின்றபோது ஏராளமான வியத்தகும் சக்திகளை சித்தர்களும் யோகிகளும் அடைகின்றனர். அவர்கள் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் சாமானியர்அதிசயிக்கின்றனர். இதை நேருக்கு நேர் பார்க்கும் போது விஞ்ஞானமும் திகைக்கிறது.

வள்ளலாரின் மரணமிலாப் பெரு வாழ்வு

நமது காலத்திற்கு சற்று முன்னர் வாழ்ந்த வள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்) 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர் திரும்பி வரவில்லை. அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளி விட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதியாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.

வள்ளலார் பற்றி அறிய தென் ஆற்காடு கலெக்டர் ஒரு டாக்டருடன் சித்திவளாகம் விரைந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர் அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூர மணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ளலார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர், அவரது மாபெரும் ஆன்மீக உயர்வைப் போற்றியதோடு தன் பங்கிற்கு இருபது ரூபாயை அளித்தார்.

1878ல் சவுத் ஆர்காட் கெஜட்டில், அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டவர் திரும்பி காணப்படவில்லை என்று குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுவோர் அவர் கடவுளுடன் ஒன்றாகி விட்டார் என்று நம்புவதையும் குறிப்பிட்டார் ஜே.ஹெச் கார்ஸ்டின். 1906ல் டபிள்யூ. பிரான்ஸிஸ் ஐ.சி.எஸ் சவுத் ஆர்காட் கெஜட்டில் வள்ளலார் மறைந்ததை விளக்கி அதிசயப்படுகிறார்!

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்

'ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி' என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதிய பரமஹம்ஸ யோகானந்தர் (1893-1952) 1952ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி மஹா சமாதி அடைந்தார். அவரது உடல் இருபது நாட்கள் கழித்து மார்ச் 27ம் தேதி வெங்கல மூடியிட்ட பேழையில் வைக்கப்பட்டது. அதுவரை அந்த உடலில் எந்த வித மாற்றமும் இல்லை. லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கின் மார்ச்சுவரி டைரக்டர் ஹாரி டி ரோ, “பரமஹம்ஸ யோகானந்தரின் இறந்த உடலில் சிதைவுக்கான எந்த வித அறிகுறிகளும் தோன்றாதது எங்கள் அனுபவத்திலேயே மிகவும் அசாதாரணமான ஒன்றாக விளங்குகிறது. உடல் தோலிலோ அல்லது திசுக்களிலோ எந்த வித மாற்றமும் இல்லை! இது போன்று மாறாமல் இருக்கும் ஒரு உடல் எங்கள் சவக் கண்காணிப்பு வரலாறிலேயே இல்லாத இணையற்ற ஒரு சம்பவம்! நாளுக்கு நாள் எங்கள் வியப்பு கூடிக் கொண்டே போனது” என்று குறிப்பிடுகிறார்!

சூரிய ஒளியை உட்கொண்டு உயிர் வாழும் யோகி

ஹீரா ரதன் மனேக் (1937 செப்டம்பர் 12ம் தேதி பிறந்தவர்) என்ற யோகி சூரிய ஒளியை மட்டும் உண்டு உயிர் வாழ்வதாகக் கூறியதும் நாஸா விஞ்ஞானிகளே வியந்து அவரை தமது ஆராய்ச்சிக்காக அழைத்தனர். சூரிய ஆற்றலை பயன்படுத்துவது எப்படி என்று அறிவதே நாஸா விஞ்ஞானிகளின் நோக்கம்!

விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் கட்டுப்பாடான சோதனைக்கு உட்பட்ட இவர் 1995-96ல் 211 நாட்கள் கொல்கத்தாவில் எந்த வித உணவையும் உட்கொள்ளாமல் இருந்தார். அடுத்து 2000-2001ல் அஹமதாபாத்தில் 411 நாட்கள் 21 மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவின் கண்காணிப்பிலும் ஆய்விலும் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்! அடுத்து பென்ஸில்வேனியாவில் பிலடெல்பியாவில் தாமஸ் ஜெபர்ஸன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆன்ட்ரூ நியூபெர்க் மூளையை ஸ்கேன் செய்தவாறு இருக்க, 130 நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்.

65 ஆண்டுகள் எதுவும் உட்கொள்ளாத யோகி

பிரஹ்லாத்பாய் ஜானி என்ற 76 வயது ஆகும் யோகி குஜராத்தில் அம்பாஜி ஆலயத்திற்கு அருகே உள்ள குகை ஒன்றில் வசிக்கிறார்! கடந்த 65 ஆண்டுகளில் திரவ பதார்த்தத்தையோ எந்த வித உணவு வகைகளையுமோ தான் தொட்டதே இல்லை; உட்கொண்டதே இல்லை என்கிறார் அவர்! ஆன்மீக தாகம் மீதூற ஏழு வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவர்தான்! 11ம் வயதில் ஒரு தேவதை அவருக்கு அருள் பாலித்தது. அவரது வாயில் மேல் பகுதியிலிருந்து அமிர்தம் சொட்ட ஆரம்பித்தது. அன்றிலிருந்து சிறுநீர் மலம் எதையும் கழிக்கவில்லை! உயிர் காக்கும் அமிர்தம் சொட்ட ஆரம்பித்ததிலிருந்து எனக்கு உணவோ குடிநீரோ தேவை இல்லாமல் போய் விட்டது என்றார் அவர்!

இவரை விஞ்ஞான முறைப்படி ஆராய 2003ம் ஆண்டு நவம்பரில் டாக்டர் சுதிர் வி.ஷா தலைமையில் 21 ஸ்பெஷலிஸ்டுகள் ஒன்று சேர்ந்தனர். பத்து நாட்கள் 24 மணி நேர முழு சோதனை நடத்தப்பட்டது. கார்டியாலஜி, நியூராலஜி, யூராலஜி, கேஸ்ட்ரோ என்டிரோலொஜி, ஆப்தமாலஜி, ரீனல் பங்க்ஷன், பல்மனரி பங்க்ஷன், ஈ என் டி அனாலிஸிஸ், சைக்கியாட்ரி, பொது மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான துறை நிபுணர்கள் குழுவில் இருந்தனர். இந்த அனைத்துத் துறை நிபுணர்களும் தத்தம் துறையில் உள்ள தீவிர சோதனைகளை அவர் மேல் மேற்கொண்டனர். சோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னர் பிரஹலாதின் சொல்லுக்கு மறுப்பு ஏதும் அவர்களால் தெரிவிக்க இயலவில்லை. அவர்கள் திகைத்துப் போனார்கள். விளக்க முடியாத மர்மமாக அவர் விளங்கினார்.

எப்படி ஒருவரால் தண்ணீர், உணவு இன்றி வாழ முடியும்? சிறுநீர் மலம் கழிக்காமல் இருக்க முடியும்? அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை! சோதனையின் முதல் கட்டமாக அவரை இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் 24 மணி நேரம் வைத்தனர். அடுத்து ஒன்பது நாட்கள் ஒரு கண்ணாடி கதவு கொண்ட டாய்லட் வசதி பூட்டப்பட்ட ஒரு விசேஷமான அறையில் அவர் வைக்கப்பட்டார். அந்த அறையில் ஒரு வீடியோ கேமராவும் பொருத்தப்பட்டது. அத்தோடு விசேஷ பணியாளர்கள் சிலர் 24 மணி நேர டியூட்டியில் தொடர்ந்து அவரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர்! அவர் உணவு அருந்துகிறாரா, தண்ணீர் குடிக்கிறாரா, சிறுநீர், மலம் கழிக்கிறாரா என்று இவை அனைத்தும் கண்காணிக்கப்பட்டன!

ஒரு அல்ட்ரா சவுண்ட் கருவி அவரது சிறுநீரகத்தைப் பரிசோதித்தது. அந்தக் கருவியின் கண்டுபிடிப்பின்படி அவரது சிறுநீரகத்தில் சிறுநீர் சேர்ந்தது. ஆனால் அது சிறுநீரக சுவரில் உறிஞ்சப்பட்டு விட்டது. இது எப்படி நேரிடுகிறது என்பதை குழுவால் விளக்க இயலவில்லை.  பத்து நாட்கள் சோதனைக்குப் பின்னர் ஆய்வுக் குழு அவர் திரவ பதார்த்தத்தையோ திட உணவையோ உட்கொள்ளவில்லை என அறிவித்தது. சாதாரணமாக, குடி நீர் இன்றி நான்கு நாட்களுக்கு மேல் ஒருவரால் உயிர் வாழ முடியாது. ஆய்வின் போது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததையும் குழு உறுதிப்படுத்தியது. மருத்துவமனையின் டெபுடி சூபரின்டெண்டெண்ட் டாக்டர் தினேஷ் தேசாய் தனது அறிக்கையில் தொடர் சோதனைகள் அவர் மீது நிகழ்த்தப்பட்ட போதிலும் அவரது உடல் இயங்கிய விதம் ஒரு சகஜமாகவே இருந்தது என்று உறுதிப்படுத்திக் கூறினார்!

கண்களைக் கட்டிப் படிப்பவர்

காஷ்மீரில் பிறந்த குடா பக்ஸ் தன் கண்களை இறுகக் கட்டிய பின்னர் ஊசியில் நூல் கோர்ப்பார். பார்வையாளரில் ஒருவரை வரவழைத்து அவர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ஏதேனுமொரு பக்கத்தை எடுக்கச் சொல்லுவார். அதை அப்படியே வரிக்கு வரி படிப்பார். அயல் நாட்டு மொழிகளில் வார்த்தைகளை எழுதச் சொல்லி அதை அப்படியே திருப்பி எழுதுவார். லண்டன் பல்கலைக்கழக அதீத உளவியல் விஞ்ஞானிகள் 1935ல் ஒரு சோதனைக்கு இவரை அழைத்தனர். அதை ஏற்ற இவர் சோதனைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தீ மீது நடந்தார். தீயின் மேற்பரப்பு உஷ்ணம் 806 டிகிரி பாரன்ஹீட் என அளக்கப்பட்டது. தீயின் உக்கிரமான உஷ்ணமோ 2552 டிகிரி பாரன்ஹீட். இரும்பையும் உருக்கும் உஷ்ண நிலை! புகைப்படக்காரல் இதனைப் படம் பிடிக்கத் தவறி விட்டதால் மீண்டும் ஒரு முறை குடா பக்ஸை நடக்கச் சொல்லி வேண்டினார். குடா பக்ஸும் நடந்தார். உலகமே வியந்தது!

கண்களை மூடிய பின்னர் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்ற ரகசியத்தை ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது அவர் வெளிப்படுத்தினார். இரு புருவ மத்தியில் கண்களை வைத்து இருபத்தி நான்கு வருடங்கள் தியானம் செய்தால் அகக் காட்சி வந்து விடுமாம்! புறக் கண்களின் உதவி பிறகு தேவை இல்லையாம்!! 1906ல் பிறந்த இவர் 1981 பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார்.

மெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல் நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம் என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்! பிரமிக்கிறது விஞ்ஞானம்!!

1 comments:

Anonymous said...

really amazing news rishi.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com