Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

படித்ததில் பிடித்தது - அரவிந்தரின் ஆத்ம சமர்ப்பணம் ( நிறைவுப் பகுதி )

| Feb 15, 2011
அரவிந்தரின் - ஆத்ம சமர்ப்பணம் ( தொடர்ச்சி )
==========================

‘பெண்ணிற்குத் திருமணம் செய்தபிறகு, பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், வீட்டில் உள்ள மகனின் வாழ்வு கெட்டுப் போகும்’ என்று நம்பும் வழக்கம் நம்மிடம் இருக்கின்றது. அந்த மரபுப்படியும், உளவியல் தத்துவப்படியும், வேறு எந்த வகையில் பார்த்தாலும் இது தவறுதான். உற்றோரும் மற்றோரும் கூறியதை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தத் தவற்றைச் செய்தார் ஒரு தொழில் அதிபர். 15 ஆண்டுகளுக்குப்பிறகு அவருடைய மகன் திடீரென்று மரணம் அடைந்தார். மாப்பிள்ளை திவால் ஆனார். அதற்குப்பிறகே அவர் தம் மாப்பிள்ளையைத் தனியாக அனுப்பினார். வசதி உள்ளவர்கள் பெண்ணின் மீதுள்ள பாசத்தால் இதைச் செய்கின்றார்கள்.

பல ஆண்டுகளுக்குமுன் 700 ரூபாய் வருமானம் உள்ள ஒரு கல்லூரி ஆசிரியர், ரூபாய் 30,000 கடன் வாங்கினார். அவருக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. சிறிய குடும்பம்தான். ஆனாலும் ஆடம்பரக் குடையை விரித்துப் பழகிவிட்டார். அதனால் கடன். நாளாக நாளாக கடன் சுமை அவரை அழுத்தத் தொடங்கிவிட்டது. கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவருடைய உடல் நலம் ஒரேடியாகக் கெட்டது. அவர் அன்னையின் பக்தர். அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். நாளெல்லாம் அவர் செய்து கொண்ட பிரார்த்தனையால் கடன் குறைந்தது. மூச்சு முட்டும் அளவுக்கு இருந்த கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சுமக்கக் கூடிய அளவுக்கு இறங்கிவிட்டது. ‘இனிமேல் வருமானத்திற்கு மேல் செலவு செய்வதில்லை’ என்று அவர் முடிவு செய்து கொண்டார். இந்த முடிவே அவருடைய பிரச்சினைக்கு ஏற்பட்ட முடிவாகவும் அமைந்தது.

ஒருவன் வாயைத் திறந்தால் நீதியும், நேர்மையும் கரை புரண்டோடி வரும். ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் தன் மனைவியைக் கண்கலங்க வைத்துவிட்டு ஒழுங்கீனமான வழியில் உல்லாசமாய் வாழ்கின்றான். பிரச்சினை பூதாகாரமாகிறது. அப்பொழுது தன் பிரச்சினையை உருவாக்கியவர்கள் தன் மனைவியும், ஊராரும் என்றுதான் நினைக்கின்றானே தவிர, பிரச்சினைக்குக் காரணமானவனே தான்தான் என்பது அவனுக்குப் புரிவதில்லை. அதாவது, ஊர் அறிந்ததை அவன் அறியவில்லை.
மன்னிக்க முடியாத குணக் கேடுகளால் ஒருத்தியை ஒருவன் விலக்கிவிடுகின்றான். எல்லோருக்கும் அவளுடைய குணக்கேடுதான் அதற்குக் காரணம் என்பது புரிகின்றது. ஆனால், அவளுக்கு மட்டும் அது புரியாமல் போகின்றது!

இன்னோர் சாரார் இருக்கின்றார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொண்டிருப்பதற்கு எதிர்மாறாகப் புரிந்து கொள்வார்கள். வாய் ஓயாமல் பேசும் ஒரு வியாபாரி, “நான் அளந்துதான் பேசுவேன். அவசியம் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன்” என்பார். ‘பிறர் பொருளுக்கு நான் ஆசைப்பட மாட்டேன்’ என்று தம்மைப் பற்றி உண்மையிலேயே நினைக்கக் கூடிய ஒருவர், தம் வியாபார நண்பர்களை அணுகி, “உங்கள் வியாபாரத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள்” என்கின்றார். திறமை சிறிதும் இல்லாத, ஆனால், இனிமையாகப் பழகக் கூடிய ஒருவர், தம்மைச் சிறந்த திறமைசாலி என்று நம்புகின்றார்.

கண்ணுக்கு முன்னால் காட்சியாக இருக்கும் விளக்கத்தைப் பார்க்க மறுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புகின்றவர்கள் இன்னொரு வகையினர். தம்முடைய திருட்டுக் கணக்குப் பிள்ளையை விசுவாசத்தோடு வேலை செய்வதாக நினைக்கும் முதலாளி, அடுத்துக் கெடுக்கும் ஒருவரைத் தம் சிறந்த நண்பராகக் கருதும் அப்பாவி, மேலதிகாரியிடம் பொய்ப் புகார்களைக் கூறி வேலைக்கு வேட்டு வைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை ‘ஆபத்பாந்தவர்’ என்று நம்பும் ஏமாளி போன்றவர்கள், இந்த வகையில் வருவார்கள். ‘நேர்மையாக இருந்ததாலேயே என் வேலை போய்விட்டது’ என்று ஒப்பாரி வைப்பவர்களையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

நேர்மையே உயர்ந்தது. இதில் கொஞ்சம்கூடச் சந்தேகம் இல்லை. ஆனால், ‘அது ஆபத்தானது’ என்பதையும் மறுப்பதற்கில்லை. காந்திஜியைவிட நேர்மையானவர் இந்த உலகில் உண்டா? அவருடைய முடிவு ஆபத்தில்தான் முடிந்தது. நேர்மையோடு விழிப்பும் வேண்டும். இல்லாவிட்டால், அது பார்வையற்ற விழிகளுக்குச் சமானம்.
இவர்களைப் போன்றவர்கட்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், பிரச்சினையின் மூல காரணத்தை அவர்களால் அறிய முடியாது. அப்பொழுது அன்னையிடம் பிரச்சினையின் வரலாற்றைச் சொன்னால், அவர் காரணத்தைத் தெளிவுபடுத்துவார். அல்லது பிரச்சினையை விலக்குவார்.

இத்தகையோர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கொண்டால், உண்மையான காரணத்தைப் புரிய வைக்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். அநேக ஆண்டுகளுக்குமுன் அரசுப் பணியை விட்டுவிட்டு, மாமனார் சொத்துக் கொடுப்பார் என்ற எண்ணத்தால் மாமனார் வீட்டில் போய்த் தங்கி, மாமனாரின் சொத்துகளைப் பன்மடங்காகப் பெருக்கி, பின்னர் அதில் ஒரு பங்கைப் பெற்று, மைத்துனரிடமிருந்து பிரிந்து வந்து, பிற்காலத்தில் வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாக இருப்பதைப் பார்த்த ஒருவர், தாம் அடிப்படையில் செய்த செயல் சரி இல்லாதது என்பதைத் தெரிந்து கொள்ள இயலாதவராக இருக்கின்றார். இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர்! ‘பிரார்த்தனை எல்லா விஷயங்களிலும் பலிக்கின்றது. ஆனால், அடிப்படையான பிரச்சினையில் மட்டும் வழிவிடவில்லை’ எனக் குறைப்படுகின்றார் அவர்.

இவர்களுக்கெல்லாம் உகந்த முறை சமர்ப்பணமாகும். ‘சமர்ப்பணம்’ என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கமாகக் கீழே தருகின்றேன்.
 1. ‘கடந்தகால நிகழ்ச்சிகள் முடிந்து போனவை. நடந்தது நடந்ததுதான். இனி அது பற்றிச் செய்வதற்கு ஒன்றும் இல்லை’ என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம். ‘இறையருளுக்கு அந்த உண்மையும் உட்பட்டது’ என்று நினைக்கப் பழகிக் கொண்டால் நல்லது. நம்பிக்கை அளவற்ற பலனைக் கொடுக்கக் கூடியது. ‘கடந்த நிகழ்ச்சிகளை மாற்ற முடியாது’ என நினைத்தால் நம்பிக்கைக்கு இயற்கையாகவுண்டான பெரும்பலன் குறையும். ‘அருள் கடந்ததையும் மாற்றும்’ என உணர்ந்தால், நம்பிக்கையின் திறம் வரையறையற்றதாக இருக்கும்.
 2. மனிதன் காலத்தால் கட்டுண்டவன். அதனால் கடந்தகால நிகழ்ச்சிகள் அவனுக்குக் கட்டுப்படா. அன்னையின் ஒளி காலத்தைக் கடந்தது. அதனால் கடந்தகால நிகழ்ச்சிகளும் அன்னையின் ஒளியைப் பெற்று, இப்பொழுது பலனாக விளைய முடியும். சமர்ப்பணத்தின் மூலம் கடந்தகால நிகழ்ச்சிகளை அன்னையின் ஒளிக்கு உட்படுத்த முடியும்.
 3. கடந்தகால நிகழ்ச்சிகளின் சுவடுகள் நம் இன்றையச் செயல்களில் படிந்திருக்கின்றன. அந்தச் சுவடுகளைப் புரிந்து கொண்டுவிட்டால் அந்தப் பழைய செயல்களையும், அவற்றின் பாதிப்புகளான இன்றையப் பலன்களையும் மாற்றலாம்.
 4. மனிதனுடைய வாழ்க்கையில் செயல்பட இறைவன் மனிதனுடைய புத்தியைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான். புத்தியின் செயல் அதன் குணங்களால் நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் மனிதனுடைய குண விசேடங்களுக்குப் புத்தியின் செயலைச் சிறப்பாக்கும் ஆற்றல் உண்டு. உயர்ந்த குணங்களின் மூலம் இறைவன் மனித வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுகின்றான்.
 5. செயல்களின் கூறுகளும், குணத்தின் தன்மைகளும் பிரித்துப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு இருக்கின்றன.
 6. கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவற்றை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், கடந்தகால நிகழ்ச்சிகளின் பாதகமான பலன்கள் நீங்கும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமான குண விசேடங்கள் அழியாமல் அப்படியே இருக்கும்.
 7. அந்தக் கடந்தகால மிச்சம் இன்றைய குணச் சிறப்புகளாக நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
 8. இன்றுள்ள இந்தக் குணச் சிறப்புகளிலிருந்து விடுபட முயன்றால், ஜீவன் கடந்தகால நிகழ்ச்சிகளின் இன்றையப் பலனிலிருந்து விடுதலை அடையும்.
 9. கடந்தகால நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் சமர்ப்பணத்திற்காக நினைவு கூர்ந்தால், அவற்றின் வேகம் ஒரு கட்டத்தில் அதிகரிக்கும். அதன்பின் நிகழ்ச்சிகளின் சுவடுகளான குண விசேடங்கள் மனோவேகத்தில் மனக் கண்ணில் தோன்றும்.
 10. மரணத்திற்குமுன் ஆத்மா வெளிவந்து இப்பிறவியின் செயல்களைக் கண நேரம் விமர்சனம் செய்து, அடுத்த பிறவிக்குரிய இடத்தைத் தீர்மானிக்க முயல்கின்றது. புனர்ஜன்மம் எடுப்பதற்கு இந்த மதிப்பீடு அடிப்படையாக இருப்பதைப் போல், நாம் அன்னைக்குச் செய்யும் சமர்ப்பணம் ஒரு சிறு அளவிலான புனர்ஜன்மமாகும். எந்தச் செயலைச் சமர்ப்பணம் செய்கின்றோமோ, அந்தச் செயலின் (கர்மத்தின்) பலன்களிலிருந்து விடுதலை அடைந்து, அதைப் பொறுத்த வரையில் புனர்ஜன்மம் எடுத்த பலன் உண்டு.
 11. கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், அவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாகக் கரையும். ஆனால், நிதானமாகக் கரையும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்கு அஸ்திவாரமான உணர்ச்சிகளை (குணங்களை) நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், பிரச்சினைகள் உடனடியாகவும் முழுமையாகவும் கரைந்து போகும்.
 12. ‘ஒரு பிரச்சினையை அழிக்க வேண்டும்’ என்ற தீவிரமான எண்ணத்துடன் முயன்றால், அதற்குச் சமர்ப்பணம் ஒன்றே உரிய கருவி. அவ்வெண்ணம் பூரணமாகச் செயல் படும்பொழுது, மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இருக்க முடியாது.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com