Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஒரு உண்மை சம்பவம் - நிஜங்கள் கற்பனையை விட அழகானவை

| Jan 17, 2011
சுவாமி விவேகானந்தர்  - துறவிகளின் நடுவில் ஒரு புரட்சியாளர். புரட்சியாளர்களின் நடுவில் ஒரு துறவி.

"எனக்கு உருவம் இல்லை. நான் உருவம் இல்லாத ஒலி!" என்று துணிந்து கூறியவர். நம் கண்ணுக்குப் புலப்படக் கூடிய உருவத்தில் அவர் இருந்தும், தனக்கு ஓர் உடல் இல்லை என்ற எண்ணத்திலேயே வாழ்ந்த சித்தர்.

வேத மந்திரமான "மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ!ஆச்சார்ய தேவோ பவ!அதிதி தேவோ பவ!" என்பவற்றுடன்,"த‌ரித்ர தேவோ பவ!மூர்கதேவோ பவ!"என்பதயும் நம்மைச் சேர்த்து வாசிக்கச் சொன்ன இளைய முதியவர்.

"இந்த இகலோகத்தில் ஒரு கவளம் சோற்றுக்கு அலைய விட்டுவிட்டு, வேறு ஏதோ சொர்க்கத்தில் எனக்கு நிரந்தர ஆனந்தம் அளிக்கிறேன் என்று ஒரு கடவுள் சொன்னால், அந்தக் கடவுள் எனக்குத் தேவையில்லை" என்று நாத்திகம் பேசிய‌ ஆன்மீக வாதி!

அந்த அபூர்வ ஆத்மாவை மஹாகவி பாரதி "விவேகானந்தப் பரமஹம்சர்" என்று அழைத்தார். அவருடைய குருநாதரை "ஸ்ரீராம‌கிருஷ்ண பரப் பிரம்மம்" என்றார்.

சுவாமிஜியின் வரலாற்றையும்,அமுத மொழிகளையும் உங்க‌ளில் பலர் படித்து இருக்கக்கூடும். நான் கீழே மொழியாக்கம் செய்து கொடுத்திருக்கும் கடிதம் பலரும் படித்திருக்க வாய்ப்புக் குறைவு. சுவாமிஜிக்கு ஏற்பட்ட‌ ஒரு ப்ரஸ்ன சோதிட அனுபவத்தைத் தந்துள்ளேன்.

ராஜஸ்தானத்தில் உள்ள கேத்ரி என்ற ஊரின் மஹாராஜாவிற்கு 15 பிப்ரவரி 1893 அன்று ஒரு கடிதம் எழுதியுள் ளார்.அப்போது சுவாமிஜி பரிவ்ராஜகராக பாரதம் முழுவதும் திக்விஜயம் செய்து வரும் வேளையில் நமது தமிழ்நாட்டில் கும்பகோண‌மும் வந்துள்ளார். அப்போது வலங்கைமானில் வைத்து அவருக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை,கேத்ரி அரசர் அஜித் சிங்கிற்கு எழுதிய கடிதத்தினை, மொழி பெயர்த்துத் தந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களைக் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.

"மதராஸ்
15 பிப்ரவரி (1893)

மேன்மையானவரே!

இர‌ண்டு செய்திகளைத் தங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.ஒன்று கும்பகோணம் என்ற கிராமத்தில் நான் கண்ட ஓர் அதிசயக்கத் தக்க நிகழ்வு. மற்றொன்று என்னைப் பற்றியது.

நான் குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் செட்டி சாதியைச் சேர்ந்த ஒருவர் வாழ்கிறார்.அவர் வெளிப்பார்வைக்கு 'ஒரு சோதிடர்' என்று ஒதுக்கும்படியாகவே உள்ளார்.அவரைப் பார்ப்பதற்கு இரு இளைஞர்களுடன் சென்றேன்.

அவரைப் பற்றிக் கூறப்பட்டது என்னவெனில், ஒரு மனிதன் மனதில் நினைப்பதை அப்படியே கூறக் கூடியவர் என்பதே ஆகும். ஆகவே அவரை சோத‌னை செய்து பார்க்க விரும்பினேன்.இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் ஒரு கனவு கண்டேன். அதில் என் தாயார் இறந்துவிட்டதாகத் தோன்றியது. எனவே என் தாயாரைப் பற்றிய தகவலை அறிந்து கொள்ளும் கவலையில் இருந்தேன். எனது இர‌ண்டாவது எண்ணம் என்னவெனில் என் குருநாதர் என்னிடம் கூறியதெல்லாம் உண்மைதானா என்பது ஆகும். மூன்றாவ‌தாக ஒரு சோதனைக் கேள்வி‍---- திபேத்திய மொழியில் உள்ள ஒரு புத்த மத மந்திரம்! இந்த கோவிந்த செட்டியிடம் போவத‌ற்கு இர‌ண்டு நாட்களுக்கு முன்னரே அந்த மூன்று கேள்விகளையும் மனதில் நன்கு உறுதி செய்து பதித்துக் கொண்டேன். கூட வந்த இளஞனின் மைத்துனிக்கு யாரோ விஷம் வைத்துவிட்டார்கள். மைத்துனி பிழைத்துக் கொண்டாலும், விஷம் வைத்தது  யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கு இருந்தது
.
நாங்கள் முதல் முதலாக அந்த ஆசாமியைச் சந்தித்த போது, அவ‌ர் மிகுந்த கோபத்தில் இருந்தார்.மைசூர் திவான் அழைத்து வந்த இரண்டு ஆங்கிலேயர் களால் ஏற்பட்ட கண் திருஷ்டியால் சுரத்தில் அவதியுறுவதாகவும் வாக்குச் சொல்ல முடியாது என்றும் கூறி அனுப்பப் பார்த்தார். பின்னர் ரூபாய் பத்து அளித்தால் பிரஸ்னம் சொல்ல ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.என் கூட வந்த இளைஞர்கள் கேட்ட தொகையைக் கொடுக்கத் தயாராக இருந்தனர்.
ஆனால் தன் அந்தரங்க அறைக்குள் சட்டென நுழைந்து உடனே வெளியில் வந்து என்னிடம் கூறினார்: "என் இந்த சுரத்தை சுவஸ்தம் செய்ய உங்கள் கையால் திருநீறு கொடுத்தால் வாக்குச் சொல்ல ஒப்புக் கொள்கிறேன்"

"எனக்கு நோய் குணமாக்கும் சக்தி ஒன்றும் கை வரப் பெறவில்லையே" என்று திட்ட வட்டமாகக் கூறினேன்.  "அதனால் ஒன்றும் இல்லை.எனக்கு வேண்டியது விபூதி மட்டுமே!' என்றார்.நான் சரி என்று ஒப்புக் கொண்டதும் எங்களை தன் அந்தரங்க அறைக்குள் அனுமதித்தார். உடனே ஒரு தாளை எடுத்து ஏதோ எழுதினார்.அதன் மீது என் கையெழுத்தை வாங்கி என்னிடம் கொடுத்து கூட வந்தவரின் சட்டைப் பையில் வைக்கச் சொன்னார்.

அதன் பின்னர் முகத்தில் அறைந்தார் போல என்னிடம் கூறினார்: "நீங்களோ சன்னியாசி! ஆனால் ஏன் உங்கள் தாயாரைப் பற்றி நினைக்கிறீர்கள்?"

நான் கூறினேன், "மதிப்பு வாய்ந்த ஆதி சங்க‌ராச்சாரியாரே தன் தாயாரை கவனித்துக்கொண்டாரே!"

"உங்க‌ள் தாயார் நலமாக உள்ளார்.அவருடைய பெயரை தங்கள் நண்பரின் சட்டைப் பையில் உள்ள தாளில் எழுதி விட்டேன்" என்றார். மேலும் கூறினார்:

"உங்கள் குரு இறந்து விட்டார்.அவர் கூறியதையெல்லாம் நீங்கள் நம்பவேண்டும். ஏனேனில் அவர் மிகமிகப்பெரிய மனிதர்" மேலும் ஆச்சரியப்படத்த‌க்க வகையில் என் குருவைப்பற்றி பல தகவல்களைக் கூறினார். "வேறு என்ன உங்கள் குருவைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பு கிறீர்கள்?" என்று கேட்டார். "என் குருவின் பெயரைக் கூறினால் திருப்தி அடைவேன்" என்றேன்."எந்தப்பெயர்? ஒரு சன்யாசிக்குப் பல பெயர்கள் கிடைக்குமே!?" என்று கேட்டார். எந்தப் பெயரால் பொது மக்களுக்கு அவர் அறிமுகம் ஆகி உள்ளாரோ அந்தப்பெயர்!" என்றேன். "ஒ!அந்த அற்புதப் பெயரா? அதை ஏற்கன்வே அந்தத் தாளில் எழுதியாயிற்று" என்றார்.

"நீங்கள் ஏதோ ஒரு திபேத்திய மந்திரத்தை எண்ணியுள்ளீர்கள்.அதையும் அந்தத் தாளில் எழுதியாயிற்று". பின்னர் "எந்த‌ மொழியிலேனும்  ஏதாவது கூறுங்கள்" என்றார்.நான் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய!" என்றேன். "சரி! இதையும் உங்கள் நண்பரின் சட்டைப்பையில் உள்ள தாளில் எழுதியாயிற்று.

“இப்போது அந்தத் தாளை எடுத்துப் படித்துப் பாருங்கள்."என்றார்.

ஆஹா!என்ன அதிசயம்! அவர் கூறிய எல்லாம் அதில் இருந்தது! என் தாயாரின் பெயரும் கூட  இருந்தது. இவ்வாறு அதில் கண்டிருந்தது: இந்தப் பெயருடைய உங்கள் தாயார் நன்றாக உள்ளார்கள்.அவர்கள் மிகவும் புனிதமானவர்கள்; நல்லவர்கள்

அவர்கள் உங்கள் பிரிவினை மரணத்துக்கு ஒப்பாக நினைத்து உணர்ச்சி வயத்தில் உள்ளார்கள்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவார்கள். எனவே அவர்களைச் சந்திக்க விரும்பினால் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திக்க வேண்டும்.

அடுத்து எழுதப் பட்டிருந்தது: உங்கள் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்துவிட்டார்; ஆனால் அவர் சூட்சுமத்தில் வாழ்கிறார் அதாவது உருவமில்லா உடலில் வாழ்கிறார்; உங்களைக் கண்காணித்து வருகிறார்.

அப்புறம் திபெத்திய மொழியில் "லாமாலா கேப்சுசுவா" என்று நான் நினைத்து இருந்த மந்திரம் எழுதப்பட்டு இருந்தது. இதுவரை எழுதியதெல்லாம் உறுதி செய்யும் பொருட்டு,  ஒருமணி நேரம் முன்னர் நீங்கள் சொல்லிய மந்திரம் இங்கே கொடுக்கப்படுகிறது. "ஓம் நமோ பகவதே வாசுதேவாய."

என்னுட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் வெற்றிக‌ர‌மாக‌ச் சொன்னார். அப்போது தொலைவில் உள்ள‌ கிராம‌ங்க‌ளில் இருந்தெல்லாம் ம‌க்க‌ள் அவ‌ரிட‌ம் வ‌ந்து கொண்டு இருந்தார்க‌ள்.அவர்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய பெய‌ர் இன்னதென்றும் அவ்ர்களுடைய கிராமம் இன்னதென்றும், அவர்கள் வந்துள்ள காரணம் இன்னதென்றும் த‌வ‌றின்றிக் கூறினார். என‌க்கு பிர‌ஸ்ன‌ம் சொல்லி வ‌ரும்போதே சிறிது சிறிதாக‌ அமைதி அடைந்து விட்டார். அவ‌ர் கூறினார்:

"உங்க‌ளிட‌மிருந்து ப‌ண‌ம் வாங்கிக்கொள்ள‌ மாட்டேன்.மாறாக‌த் தாங்கள் தான் என்னிட‌மிருந்து ஏதாவ‌து சேவை யைப் பெற்றுக்கொள்ள‌‌ வேண்டும்."

Swami Vivekananda - My Ideal & Role Model

அவ‌ர்க‌ள் இல்ல‌த்தில் அளித்த‌ பாலைச் சா‌ப்பிட்டேன். த‌ன் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரையும் அழைத்துவ‌ந்து என்னை வ‌ண‌ங்க‌ச் செய்தார். அவ‌ர் கொண்டு வ‌ந்த‌ விபூதியைத் தொட்டு அவ‌ர்க‌ளிட‌ம் அளித்தேன். அத‌ன் பின்ன‌ர் அவ‌ருக்கு சித்தியாகியுள்ள‌ இந்த‌ ச‌க்தியின் மூலாதார‌ம் என்ன‌ என்று அவ‌ரிட‌மே கேட்டேன். முத‌லில் சொல்ல‌ ம‌றுத்து வில‌கி விட்டார். சிறிது நேர‌ம் க‌ழித்துத்தானாக‌ வ‌ந்து என்னிட‌ம் சொன்னார்: "துற‌வி வேந்த‌ரே!இதெல்லாம் ம‌ந்திர‌ சித்திதேவியின் துணையால் கிடைத்த‌து!"

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com