Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? கடவுளை யாரேனும் பார்த்து இருக்கிறார்களா? கடவுளை எனக்கு காட்ட முடியுமா?

| Dec 7, 2010
கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்று குழம்பிக்கொண்டிருக்கும் அனைவரும், ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் இருப்பதை நீங்கள் எளிதில் உணர முடியும். உங்கள் கஷ்டங்களை போக்குவது அந்த இறையருள் மட்டுமே. உங்கள் முயற்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் , கடைசி நம்பிக்கை அளிப்பது அந்த இறைவன் மட்டுமே. அவரை துதிப்பவர்கள் மட்டும் தொல்லைகளில் இருந்து தப்புவார்களா? துதிக்கு மயங்கும் அளவுக்கா கடவுள் அற்பமானவர்? நாங்க எல்லாம் நேர்ல பார்த்த மட்டும் தான் நம்புவோமே.. என்று குதர்க்கமாக பேசும் அனைவருக்கும்...
நம் இந்த நூற்றாண்டின் , சென்ற நூற்றாண்டின் மகான்கள் - வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் , ஓஷோ - அவர்களின் வாழ்க்கையும், போதனைகளும் ஒரு நல்லதொரு படிப்பினையாகவும், வழி காட்டியாகவும் அமையும்.

சுவாமி விவேகானந்தர் - பற்றிய இந்த கட்டுரை - கடவுள் இருக்கிறாரா? இல்லையா? கடவுளை யாரேனும் பார்த்து இருக்கிறார்களா? கடவுளை எனக்கு காட்ட முடியுமா? என்கிற உங்கள் பல கேள்விகளுக்கு - விடை அளிக்கும் .

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களை "எழுமின் விழிமின்' என்று வீறு கொண்டு எழுச்சியுற அறை கூவல் விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

ஒரு துறவி ஆன்மிகப் பணி மட்டுமின்றி தேச உணர்வையும் மக்களுக்கு ஊட்ட முடியும் என்று தனது வாழ்நாளின் கடைசி மூச்சுவரை இந்திய இளைஞர்களை எழுச்சியுறச் செய்தது அவரது ஒப்பற்ற செயலாகும்.இந்திய நாடு என்றால் ஒரு இருண்ட நாடு, நாகரீகம் அற்ற மனிதர்கள் வாழும் இடம். அவர்களுக்குக் கல்வி அறிவு கிடையாது என்று நினைத்துக் கொண்டு இருந்த ஐரோப்பிய மக்களைத் தனது பேச்சாற்றல் மூலமும், தூய்மையான ஆன்மிக வாழ்க்கை மூலமும் இந்திய நாடு ரிஷிகளும், சித்தர்களும், அவதரித்த புண்ணிய பூமி, அனைத்துக் கலைகளும் தழைத்து ஓங்கி நிற்கும் ஒரு பல்கலைக் கழகம், உலக நாகரீகத்தின் முன்னோடியான நாடு என்று அனைவரையும் அறியச் செய்த பெருமை விவேகானந்தரையே சேரும்.

இந்தியாவை அன்று ஆட்சி புரிந்த ஆங்கிலேயருக்கு இதயப் பகுதியாக விளங்கிய கொல்கத்தாவில் விசுவநாத தத்தர் புவனேஸ்வரி தேவி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். விசுவநாத தத்தர் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற வக்கீல்களில் ஒருவர் ஆவார். இவர்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஆன்மிகத்தையே தங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒரு அங்கமாக வைத்து வந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள்.

Swami Vivekananda - My Ideal & Role Modelwww.livingextra.com
தனது குடும்பத்துக்கு ஆண் வாரிசு இல்லாமல் சென்று விடுமோ என்று மிகுந்த கவலையுடன் கோவில் கோவிலாகத் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்தார்கள்.இந்த நிலையில் புவனேசுவரி தேவி கர்ப்பமானார். 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் நாள் இந்துக்கள் மிகப்புனிதமாகக் கொண்டாடும் மகா சங்கராந்தியை (பொங்கல்) நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.

அதே வேளையில் புவனேசுவரி தேவியின் மகனாக சுவாமி விவேகானந்தர் பிறந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்குச் சிவனின் அருளால் ஆண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் அந்தக் குழந்தைக்கு ""நரேந்திரன்'' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்குப் பொருத்தமாகக் குழந்தைப் பருவத்தில் நரேந்திரன் துருதுருவென்று மிகவும் துடிப்பாக இருந்தார்.நரேந்திரன் தனது வீட்டில் அக்காள்மாரிடம் செய்யும் சேட்டைகளுக்கும், சுட்டித் தனங்களுக்கும் அளவே கிடையாது. இதனால் வீட்டில் உள்ளவர்களும், அவர்களது வீட்டைச் சுற்றி உள்ளவர்களும் நரேந்திரனைப் "பிலே' என்று செல்லமாக அழைத்தனர்.

"பிலே'வின் சுட்டித்தனத்தைக் கட்டுப்படுத்த நினைத்த அவரது தந்தை விசுவநாத தத்தர் அவரைத் தனியாக கவனிப்பதற்குத் தாதிப் பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார். அந்தப் பெண் பிலேயுக்குப் புராணக் கதைகளைக் கூறினாள். மேலும் தனது அம்மா பூஜைகள், பஜனைகள் செய்யும் போது பிலேவும் அதில் ஈடுபடத் தொடங்கினான். இவ்வாறு அவனை அறியாது ஆன்மிகத்தில் இறங்க ஆரம்பித்தான்.நரேந்திரனுக்கு முதலில் வீட்டில் வந்து ஒரு ஆசிரியர் பாடம் கற்பித்தார். இதன் பின்னர் வித்யாசாகரின் மெட்ரோ பாலிடன் பள்ளியில் படித்தான். நரேந்திரன் பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஒரு முறை கவனித்தால் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்று இருந்தான்.நரேந்திரன் பள்ளிப் படிப்போடு குஸ்தி. உடற்பயிற்சி, விளையாட்டுக்கள், சிலம்பம் ஆகியவற்றையும் சேர்த்துப் படித்தான்.

நரேந்திரன் 1880ம் ஆண்டு தனது 17ம் வயதில் பி.ஏ. படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். இங்கு படிக்கும்போது தான் அவர் பிரம்ம சமாஜ அங்கத்தினராகச் சேர்ந்தார். அந்தச் சமயம் பிரம்ம சமாஜத்தின் தலைவராக ஸ்ரீகேசவசந்திர சேனர் இருந்தார். அவர் தமது பத்திரிகையின் மூலம் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரின் புகழைப் பரப்பி வந்தார்.அதே நேரத்தில் நரேந்திரன் கிரேக்க, ஜெர்மனிய, ஆங்கில, அறிஞர்களின் பல புத்தகங்களைக் கற்றார். இதன் விளைவாகக் கடவுளை நேரில் காண முடியுமா? என்ற சந்தேகம் மனதில் ஏற்படத் தொடங்கியது.இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு மிகுந்த மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கொல் கத்தாவில் உள்ள எல்லா மதப் பெரியவர்களிடமும் சென்று விளக்கம் கேட்டார். ஆனால் அவரின் கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர் ஆழ்ந்த தியானங்களில் ஈடுபடத் தொடங்கினார். பிரம்ம சமாஜத்தின் ஒரு தலைவரான தேவேந்திரநாத் தாகூரை அணுகியும் அதேகேள்வியைக் கேட்டார். அவர் அதற்கு நரேந்திரனைக் கூர்ந்து நோக்கி ""உனக்கு யோகியின் கண்கள் இருக்கின்றன. நீ ஆழ்ந்து தியானம் செய்தால் அதனுடைய பலனை விரைவில் அனுபவிப்பாய்'' என்று கூறினார். ஆனால் இந்த பதிலால் அவர் சமாதானம் அடையவில்லை.ஒரு நாள் நரேந்திரன் கல்லூரியில் ஆங்கிலப் பாட வகுப்பில் இருந்து கொண்டு இருந்தார். அவருக்குக் கல்லூரி முதல்வர் வில்லியம் வேட்ஸ் வொர்த்தின் கவிதையிலுள்ள "பரவச நிலை' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டால் பரவசநிலை என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுத்தார்.

இதைக் கேட்ட நரேந்திரனுக்கு ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக ஏற்பட்டது.இந்த நிலையில் நரேந்திரன் வீட்டு அருகே உள்ள சுரேந்திர பாபுவின் வீட்டுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக வந்தார். அங்கு நரேந்திரனைப் பாடுமாறு அந்த வீட்டுக்காரர் அழைத்தார். அவரும் சென்று ""ஓ மனமே உனது சொந்த இடத்தை அடைவாயாக'' என்ற கருத்து அடங்கிய பாடலைத் தனது தேனிலும் இனிய குரலில் பாடினார். இதைக் கேட்ட ராமகிருஷ்ணர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.இதன் பின்னர் ராமகிருஷ்ணர் நரேந்திரனிடம் ""ஒரு முறை தட்சிணேசுவரம் வா'' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு 1881&ம் ஆண்டு நரேந்திரனும் அங்கு சென்றார். அங்கு அவரை பக்திப் பாடல்களைப் பாடும்படி ராமகிருஷ்ணர் கூறினார். அதனை ஏற்று அவரும் பாடினார்.

இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணர் நரேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் இவ்வளவு காலம் கழித்து வந்து இருக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காகத்தானே காத்து இருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா? என்றும் உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய் விட்டன என்றும் தேம்பித் தேம்பி அழுதபடி ராமகிருஷ்ணர் பேசி னார்.இதைக் கேட்ட நரேந்திரன் அவருக்குப் பைத்தியம் எதுவும் பிடித்து விட்டதோ என்று நினைத்தார்.

ஆனால் அந்த அறையை விட்டு வெளியே வந்த பின்னர் ராமகிருஷ்ணரின் ஆன்மிகப் பேச்சினையும், ஆனந்தப் பரவச நிலையையும் பார்த்து அவர் உண்மையான துறவி என்பதை உணர்ந்தார்.அடுத்த 4 ஆண்டுகளில் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சரின் தலைசிறந்த முக்கிய சீடர் ஆனார்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 1885&ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டார். அவர் சமாதி அடைவதற்கு 3 நாட்களுக்கு முன் தனது சீடர் நரேந்திரனுக்குத் தனது சக்தி அனைத்தையும் வழங்கினார்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகஸ்டு மாதம் 16&ம்நாள் அதிகாலை 1 மணிக்கு மகாசமாதி அடைந்தார்.ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் நரேந்திரன் தனது சகோதர சீடர்களை ஒன்று கூட்டி வராக நகரின் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்தனர். இதன் பின்னர் அனைவரும் துறவறம் பூண்டுயாசகம் எடுத்து வாழத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்ல தொடங்கினார்கள்.ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஞூயத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தனது அரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக் கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர்.

உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில் துப்புவதற்கு மறுக்கிறீர்கள்? காரணம் இது உங்கள் மகாராஜாவின் உருவம், அதனால் மரியாதை கொடுக்கிறீர்கள். அது போலவே மக்கள் கடவுளை உருவத்தில் பார்க்கின்றார்கள். யாரும் கல்லே, மண்ணே செம்பே என்று கடவுள் வடிவத்தின் முன் நின்று வேண்டுவதில்லை என்று கூறினார்.இதைக் கேட்ட ராஜா நான் திருந்தினேன் எனக்கூறி நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டார்.

இதனைத் தொடர்ந்து நரேந்திரன் பிருந்தாவனம், அயோத்யா, ஆக்ரா, இமயம், மீரட், ராமேசுவரம் ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டுக் கடைசியாக பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியை 1892&ம் ஆண்டு வந்து அடைந்தார்.அங்கு தேவியை வணங்கி வெளியே வந்த அவரது கண்ணுக்கு நடுக்கடலில் அமைந்து இருக்கும் பாறை ஒன்று தென்பட்டது. உடனே அந்தப் பாறைக்கு நீந்திச் சென்றார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.

அப்போதுதான் அவருக்கு பண்டைய பாரதப் பண்பாடு, இன்றைய வறுமை, தாழ்வு, மீண்டும் உலகின் முதல் நாடாக பாரதம் திகழப் போவதையும் உணர்ந்தார். அதில், தனது பணி என்ன என்பதை உணர்ந்தார்.இந்த நிலையில் கேத்ரி ராஜா தங்கள் அருளால் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் முதல் பிறந்த நாள் விழாவில் கண்டிப்பாக நீங்கள் கலந்து கொண்டு ஆசி வழங்க வேண்டும் என்று நரேந்திரனுக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நரேந்திரன் தனது பெயரை சச்சிதானந்தா என்றும் விவிதிஷானந்தா என்றும் மாற்றிக் கொண்டு சென்றார்.

விழா முடிந்த பின்னர் கேத்ரி ராஜா அஜித்சிங் சச்சிதானந்தாவிடம் இனி தங்கள் பெயரை அடிக்கடி மாற்றி கொள்ள வேண்டாம் "விவேகானந்தர்' என்ற பெயரையே நிலையாகச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பெயரைச் சூட்டினார்.

விவேகானந்தர் 1893 ம் ஆண்டு மே 31&ந் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரான சிக்காகோவுக்குப் புறப்பட்டார். ஜ?ை மாதம் 31&ந் தேதி விவேகானந்தர் சிக்காகோவைச் சென்று அடைந்தார். விவேகானந்தர் அங்கு சென்ற உடன் சர்வ சமய மாநாட்டினைப் பற்றி விசாரித்தார். அதுசெப்டம்பர் முதல் வாரத்துக்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதையும் அதில் கலந்து கொள்வதற்கு ஏதாவது ஒரு மதத்தின் நற்சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அவ்வளவு நாட்கள் அங்கு தங்குவதற்குக் கையில் பணமும் இல்லை. அவர்கள் கேட்கும் நற்சான்றிதழும் இல்லை. ஒரு சில நாட்களில் அவர் கையில் இருந்த பணம் கரைந்து போனது. இதனால் சாப்பிடுவதற்கு உணவுகூட இல்லாமல் சில நாட்களை நகர்த்தி வந்தார்.

இதன் பின்னர் சிக்கா கோவில் இருந்து பாஸ்டனுக்குப் புறப்பட்டார். அங்கு அவருக்கு ரைட் என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் விவேகானந் தரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து உபசரித்தார். பின்னர் ஹார்வாட் பல்கலைக் கழகத்தின் கிரேக்க மொழிப் பேராசிரியர் ஜே.டபிள்யூ.ரைட் என்பவரிடம் விவேகானந்தரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் விவேகானந் தருக்குப் புனித நற்சான்றிதழ் கிடைக்கச் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிக்காகோ நகருக்கு விவேகானந்தர் புறப்பட்டு வந்தார்.சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்துக் காத்து இருந்த அந்த செப்டம்பர் 11&ந் தேதியும் வந்தது. சர்வ சமய மாநாடும் தொடங்கியது. உலகில் உள்ள எல்லா மதத்தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது மதத்தினைப் பற்றிப் பேசிச் சென்றனர். அன்றைய நாளின் கடைசி ஆளாக சுவாமி விவேகானந்தர் பேசுவதற்கு அழைக்கப் பட்டார்.

சுவாமி விவேகானந்தர் தனதுபேச்சினை ""அமெரிக்கசகோதர! சகோதரி களே'' என்று பேச ஆரம்பித்ததும் அங்கு கூடி இருந்த 6 ஆயிரம் மக்களின் இதயங்களை ஒரு நொடிப் பொழுதில் கொள்ளை கொண்டார். அவர் தொடர்ந்து தனது பேச்சில் எல்லா மதங்களுக்கும் தாய் மதம் இந்து மதம். சகிப்புத் தன்மையை உலகிற்குக் கூறிய மதம் இந்து மதம். நதிகள் அனைத்தும் கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல சமயங்கள் பலவாகத் தோன்றினாலும், அனைத்தும் கடவுளைத்தான் சென்று அடை கின்றன என்று பேசினார்.அந்த மாநாட்டைப் பற்றி அடுத்த நாள் செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளின் முதல் பக்கத்தை சுவாமி விவேகானந்தர் அலங்கரித்துக் கொண்டு இருந்தார்.

அவரது பெருமையைக் கேட்ட மக்கள் மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தரின் பேச்சைக் கேட்பதற்கு என்று வரத் தொடங்கினார்கள்.இதனால் மாநாட்டில் மற்ற மத போதகர்கள் பேச்சு அலுப்புத் தட்டும்போது சுவாமி விவேகானந்தரைப் பேச அழைத்தனர். இதனால் அவரது புகழ் நாடுதாண்டிப் பரவத் தொடங்கியது.

சுவாமி விவேகானந்தர் 3 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது சொற்பொழிவை முடித்துக் கொண்டு 1896&ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.3 ஆண்டு காலமாக ஓய்வு இன்றி உழைத்ததின் காரணமாக அவரது உடல் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தது. 1897ம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி ராமேசுவரம் வந்த அவரை நாடு முழுவதும் ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடி வரவேற்றது

1 comments:

Chitti said...

Thanks so much for sharing such a great man's history.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com