Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

எனது அனுபவங்கள் : அருணாச்சலம் - கிரிவலம் - திருவண்ணாமலை

| Oct 26, 2010
தமிழ் நாட்டில் இருக்கிற எந்த ஒரு ஆன்மிகதேடல் இருப்பவரும், திருவண்ணாமலையை  அறியாமலோ, கேள்விபடாமலோ இருக்க முடியாது.ஒரு மலை - அது காந்த மலை என்று தான் சொல்ல வேண்டும். ஒருமுறை வந்தவர்களை , திரும்ப திரும்ப வர வைக்கும் ஆகர்ஷன சக்தி கொண்ட மலை. எத்தனையோ வலை பதிவுகள் , வலை பூக்களில் இதை பற்றிய செய்திகள் அதிகம். நான் அறிந்ததும் , அனுபவித்ததும் இந்த பதிவில் :

ஒரு பன்னிரண்டு வருடங்கள் இருக்கும், நான் முதன் முதலாக , அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்று இருந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  மனதுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால், சற்று கூட்டம் அதிகம். அந்த காலத்தில், சிவ ஆலயங்களில், அவ்வளவாக கூட்டம் இருப்பதில்லை. ஒரு மணி நேரத்தில், சாமி தரிசனம் முடித்துவிட்டு, அருகில் இருக்கும், சாத்தனூர் அணைக்கட்டு சென்று விட்டோம். பிரதோஷம், கிரிவலம் எல்லாம் அவ்வளவாக மக்களால் அறியப்படவில்லை. அதன் பிறகு, ஒரு ஐந்து வருடங்கள் கழித்து, ஒரு குளிர் கால பௌர்ணமி தினத்தில்,  கிரிவலம் சென்று இருந்தேன். யோகி ராம் சுரத் குமாரும், மற்றும் பல ஞானிகளும், இளையராஜாவும், ரஜினிகாந்தும், பாலகுமாரனும்,  எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று உணர முடிந்தது. அது வரை எனக்கு தெரிந்து கார்த்திகை தீபம் மட்டுமே, லட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்று நினைத்து இருந்தேன். எனது, அத்தனை எண்ணங்களும், அடித்து த்வம்சம் செய்து விட்டது, அங்கு கூடி இருந்த மக்கள் அலை.
சமீப காலமாகவே, சிவ வழிபாடு அதிகம் ஆகி இருந்ததை நானும் அறிவேன். பிரதோஷ வழிபாடு, மக்களிடையே  நன்றாக பிரபலமாகி இருந்தது.
அதன் பிறகு, இது வரை, எத்தனையோ தடவை கிரிவலம் சென்று வந்து உள்ளேன், அந்த அருணாச்சலத்தின் ஆசியினால். கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு தடவையும், அருணாச்சலம் என்னை, மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக் கொண்டது.
இது நிச்சயமாக , அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் தான். .


http://www.livechennai.com/images/Thiruvannamalai.jpg

ஆனால், கிரிவலம் செல்லும் பொது, மக்கள் ஆரம்பிக்கும் கொஞ்ச நேரத்தில் , மெல்ல மெல்ல , ஊர் கதை பேசிக் கொண்டும், குடும்ப கதைகள் பேசிக்கொண்டும், மொபைல் போனில் சினிமா பாட்டு போட்டு கொண்டும் , அடிக்கும் லூட்டி , கொஞ்ச நஞ்சம் அல்ல. மலை சுற்றும் முக்கியத்துவம் கொஞ்சம் கூட உணர்வதில்லை. மொபைல் போனில், சிவ மந்திரங்களோ, காயத்ரி மந்திரமோ, SPB யின் கணீர் நமசிவாய மந்திரம் கூட, மலை சுற்றும் நேரத்தில் சொல்ல வொண்ணா எரிச்சலும், ஆத்திரமும் வர வைப்பவைதான் . மனதில், அடி மனதில், ஓம் நமசிவாய மந்திரம் சொல்லிக் கொண்டு வரும், எத்தனையோ பேருக்கு, அது எவ்வளவு இடையூறாக இருக்கும் என்பதை, உணரக் கூட முடியாதவர்கள்.
நாம் வெறுமனே மலை சுற்றுகிறோம் என்று நினைத்து விட்ட பேதைகளின் கூட்டம்.
 மலையே, சிவம் என்று உணர்ந்து விட்டால் , நிச்சயமாக , நாம் வெட்டி பேச்சு பேசிக் கொண்டு செல்ல மாட்டோம். ஒரு சாதாரண சனி, ஞாயிற்று கிழமை சென்று வாருங்கள், நான் சொல்வது புரியும்.


http://www.thiruvannamalai.in/tiruvannamalai-temple/images/tiruvannamalai_karthigai_deepam1.jpg

நான் முதல் தடவை சென்ற போதே, எனக்கு ஏற்பட்ட , மயிர் கூச்செறியும் சம்பவமும், என்னை அப்படியே தூக்கி வாரிப்போட்டது. ஈசான்ய லிங்கம் தாண்டி , ராஜ கோபுரம் செல்வதற்காக, பஸ் ஸ்டாண்ட் ஐ நெருங்கி வந்து கொண்டிருந்த வேளை. இரண்டு பேர் , அங்க பிரதஷணம், செய்து கொண்டு வந்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன்னே, இரண்டு , மூன்று பேர், விளக்குமாறு கொண்டு , ரோடை சுத்தம் செய்து கொண்டும் , அவர்களுக்கு, மண் சிறு சிறு கற்களை சுத்தம் செய்து கொண்டும், அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தனர். நடு மண்டையில் நச் என்று யாரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. எனது சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டன. நினைத்தே பார்க்க முடியவில்லை. 15 கிலோ மீட்டர் , நடபதற்கே சிரமம். இவர்கள் எப்படி என்று ? குறைந்த  பட்சம், குபேர லிங்கத்திலிருந்து வரவே, அசாத்திய துணிச்சல் வேண்டும். கண்டிப்பாக , இது மனிதர்கள் போலேவே தோன்ற வில்லை. எதோ ஒரு, சித்த புருஷர், தான் செய்த தவறுக்கு, பிராய சித்தம் செய்வது போல தோன்றியது. அந்த நொடியிலிருந்து, என் மனதின் பார்வை மலையை, அந்த மகேசனாகவே பார்க்கத் தொடங்கியது. அதன் பிறகு, இன்று வரை, கிரிவலதின்போது, என் மனதில் கூட சிறு சலனம் ஏற்படவில்லை. எத்தனையோ தேவ புருஷர்கள், சித்தர்கள், நம் கூட நாம் உணர முடியா வண்ணம் , வலம் வரலாம்.  நமது மன எண்ணங்கள் , எவ்வளவு அற்பமாக இருக்கும்.  என் மன மாற்றம், அடுத்த முறையிலிருந்து , அந்த சிவத்தை மெல்ல மெல்ல அருகில் நெருங்கியது. அந்த சிவமும், என்னை ஆக்கிரமிக்க தொடங்கியது. எல்லாம், என் பூர்வ புண்ணிய பலனாக இருக்க வேண்டும். நீங்களும், ஒரு முறை ஆத்மார்த்தமாக சுற்றி பாருங்கள். உணர்வீர்கள். அதன் பிறகு, நான் தேடி தேடி , அண்ணாமலை பற்றிய செய்திகளை சேகரிக்க தொடங்கினேன்.
அஷ்ட லிங்கம் என்பது, அஷ்ட திக் பாலகர்களால் நிறுவப்பட்ட லிங்கங்கள். இந்தவுலகில் நாம் செய்யும் பாவ , புண்ணியங்களை , எட்டு திசைகளில் இருந்து , பதிவு செய்து கொண்டு இருப்பவர்கள். நம் வீட்டின் எட்டு மூலைகளும், அவர்கள் ஆட்சி புரிகின்றனர். சிவம் பரமாத்வாக இருந்து கொண்டு, உங்களுக்கு தேவையானவை மட்டும் , தகுதியானவை மட்டும், தந்து கொண்டு இருக்கிறது.
நாம் ஒவ்வொரு முறை, கிரி வலம் சுற்றும்போதும் , நமது முந்தைய தலை முறை கர்மங்கள் நம்முடன் சுற்றி வருகின்றன.  வெறுமே சுற்றி வந்தால், எப்படி நம் பாவங்கள் கழியும் என்ற குதர்க்கத்தனமான எண்ணங்களை மூட்டை கட்டி விட்டு , அனுபவித்துப் பாருங்கள். அருணகிரி நாதர் முதல் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி வரை பலப்பல  மகான்கள் வாழ்ந்த ஸ்தலம்.
கிரி வலம் செல்லும் பாதையில்,உங்களால் முடிந்தவரை அன்ன தானம் செய்யலாம். பசுவிற்கு அகத்தி கீரை, வாழைப்பழம், கொடுக்கலாம். நிறைய துறவிகள், அன்னதானம் பெற்றுக் கொள்வதில்லை. ஆகவே, நாங்கள் செல்லும்போது, ராஜகோபுரம் அருகிலேயே ஒரு 200 ரூபாய்க்கு,  பழங்கள் வாங்கி கொள்வோம்.  நிறைய towels ( துண்டுகள்) வாங்கிக்கொள்வோம் . கண்ணில் தென்படும் துறவிகளுக்கும், பசுக்களுக்கும் பழங்கள் கொடுப்பது வழக்கம். சற்று வயதான துறவிகளுக்கு துண்டு கொடுப்போம். நம் ஜாதகத்தில் உள்ள கடுமையான தோஷங்களுக்கு , நாம் செய்யும் அன்ன தானமும் ,   வஸ்திர தானமும், நல்ல பரிகாரங்கள் ஆகும். பாத்திரம் அறிந்து போட வேண்டும். அது முக்கியம்.   பசிக்கும் உள்ளங்களுக்கு, வசதி இல்லாத முதியவர்களுக்கு, துறவிகளுக்கு தானம் செய்தாலே அது நல்லது.
இனி, அஷ்ட லிங்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ராஜகோபுரம் தரிசித்து, வெளியே வந்ததும், முதலாக வருபவர்  இந்திர லிங்கம். தேவர்களின் தலைவன் இந்திரனால் நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் உரிய லிங்கம். நீண்ட ஆயுள், கீர்த்தி வழங்குபவர். கிழக்கு திசைக்கு அதிபதி.இரண்டாவதாக வருபவர், அக்னி லிங்கம். அக்னி பகவானால், நிறுவப்பட்ட லிங்கம். பக்தர்களுக்கு, நோய் நொடிகளையும், பயத்தையும் போக்குபவர். சந்திரனுக்குரிய லிங்கம். அக்னிலிங்கத்துக்கு முன் வரும் அக்னி குளத்தில் நீரில் கால்கள் நனைய, எதிரில் இருக்கும் மலையை ஒரு பௌர்ணமி இரவில் பாருங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு still ஆக இருக்கும். அனுபவித்து பாருங்கள். தென்கிழக்கு திசைக்கு அதிபதி.மூன்றாவதாக  எம லிங்கம். எமதர்மரால், நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், செவ்வாய்க்குரிய லிங்கம். தேடி வரும் பக்தர்களுக்கு, நீண்ட ஆயுள் வழங்குபவர். தெற்கு திசைக்கு அதிபதி.அடுத்து வருபவர் நிருதி லிங்கம். தென்மேற்கு திசைக்கு அதிபதி. கருவறை அருகில், நல்லதொரு ஆன்மிக அதிர்வை உணர முடியும். மற்ற தேவர்களை எல்லாம் நாம் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாலும், நிருதி இதற்கு முன் நான் கேள்விப்படாதவர். சீரிய தவத்தினாலே, அவருக்கு இந்த பதவி. உலகில் உள்ள, அத்தனை பூதங்களுக்கும், தலைவர் நிருதி. நவ கிரகங்களில், ராகுவுக்கு உரிய லிங்கம். அண்டி வரும் பக்தர்களுக்கு, ஆரோக்கியம், புகழ், சொத்துக்களை அள்ளி வழங்குபவர். குழந்தை பேறு வேண்டுபவர்கள், இங்கே மனமுருகி வேண்ட, அவர்கள் பலன் அடைவது திண்ணம். அடுத்து வருபவர், வருண லிங்கம். வருண பகவானால், நிறுவப்பட்டு வழிபடும் லிங்கம். நீதிதேவனான சனி பகவானுக்கு உரிய லிங்கம்.இந்த உண்மை தெரிய வந்தால், பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அலைமோதும். . ஆனால், நடந்து செல்லும் பக்தர்களின் ஒரு அவசர கதி 'சல்யூட்' ஐ ஏற்றுக்கொண்டு  அமைதியாக அருள் பாலிக்கிறார். வேண்டி வரும் பக்தர்களை நோய் களிலிருந்து விடுவிக்கிறார். குறிப்பாக நீரினால் ஏற்படும், அனைத்து வியாதிகளும் சொஸ்தமாகிவிடும்.  மேற்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். ஆறாவதாக , வடமேற்கு திசைக்கு அதிபதியாக அருள்பாலிப்பவர் வாயு பகவானால் நிறுவப்பட்ட வாயு லிங்கம். நவ கிரகங்களில் 'கேது' வுக்குரிய லிங்கம். ஆத்மார்த்தமான வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இதயம், நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை நீக்குகிறார்.


  அடுத்து வருபவர், வடக்கு திசைக்கு அதிபதியாக வரும் குபேரனால், நிறுவப்பட்டு வழிபட்டு வரும் குபேர லிங்கம். நவக் கிரகங்களில் 'குரு' பகவானுக்குரிய லிங்கம். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு , வாழ்வில் முன்னேற்றங்களைத் தந்து , பொருளாதார நிறைவை ஏற்படுத்தித் தருபவர்.   கிரி வலப் பாதையில், கடைசியாக வருபவர் ஈசான்ய லிங்கம். வட கிழக்கு திசைக்கு அதிபதியான ஈசன்யானால் நிறுவப்பட்ட லிங்கம். நவக் கிரகங்களில் புதனுக்குரிய லிங்கம். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குபவர்.
   மேற்கூறிய அஷ்ட லிங்கங்கள் தவிர மலை சுற்றும் பாதையில் ஏராளமான இறை சந்நிதிகள் உள்ளன. வலம் வரும்போது அடி அண்ணாமலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள  அம்மனின் அழகு முகத்தை அருகில் இருந்து தரிசித்துப் பாருங்கள். ஆதி அண்ணாமலை கோவிலுள் சென்று தரிசித்து வர நீங்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். உள்ளே இருக்கும்போது நீங்கள் நிச்சயமாக ஒரு அதிர்வை உணர முடியும்.

  அஷ்ட லிங்கங்களை நிறுவிய தேவர்கள் பலமுறை நேரில் வந்து சூட்சமமாக வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள்.
  கலி முற்றி வரும் இந்த காலத்தில், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது எதோ ஒரு தேவை இல்லாத செயல் போல தோன்றுகிறது நிறைய மக்களுக்கு. ஆனால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளேயே உழன்று கொண்டு , எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடும் அன்பர்களுக்கு , அண்ணாமலை ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
  ஒரு முறை கார்த்திகை தீப தரிசனம், உங்கள் தலை முறைக்கே வழி காட்டும். சென்ற கார்த்திகை தீபத்திற்கு, கிட்டத் தட்ட 45 லட்சம் பக்தர்கள் கூடினர். தமிழ் நாட்டில் இது ஒரு அபூர்வ  நிகழ்வு.
  வாஸ்து சாஸ்திரப்படி , அற்புதமாக அமைந்த இரண்டு ஸ்தலங்கள் : திருவண்ணாமலையும்  , திருப்பதியும் ஆகும். உங்கள் வாழ்வில் நீங்கள் மென்மேலும் உயர , உங்களால் முடிந்தவரை இந்த ஸ்தலங்களுக்கு சென்று இறை வழிபாடு மேற்கொள்ளுங்கள். இயலாதவர்களுக்கு  உதவி செய்யுங்கள். பரம்பொருளின் துணை உங்களுக்கு தேவையான நேரத்தில் கச்சிதமாக கிடைப்பது உறுதி.

  அண்ணாமலையாருக்கு அரோகரா!

  1 comments:

  NAHARANI said...

  மீண்டும் இன்று அண்ணாமலை பற்றி இந்த கட்டுரைஐ படிக்க வாய்ப்பு. ரிஷியால் அற்புதமலையை அழகாக மட்டுமல்லாது ஆன்மீகமாகவும் மிக நன்றாக விவரிக்க இயலும் என்பதற்கு மேலும் உதாரணம் . இவ்விதம் இனிய தமிழில் ( சுந்தர் சாரை அறிமுகபடுதியமைக்கு ம் நன்றி - rightmantra) என்னை கருத்து தெரிவிக்க வைத்தமைக்கும் மிக்க நன்றி ( அப்படா நீண்ட நாள் முயற்சிக்கு பலன் கிடைத்து உள்ளது )

  ShareThis

  Do Join hands to make a bright and better world

  Your comments and queries can be addressed to editor@livingextra.com

  Disclaimer & Privacy Policy

  Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com